கண்டவர் விண்டிலர், விண்டவர் ஸ்கான் எடுத்திலர் !

கடவுளைத் தரிசிப்பது என்றால் என்ன என்பது பற்றி நம்மில் பலருக்குப் பல அபிப்பிராயங்கள் இருக்கலாம். ஏறக் குறைய மனித உருவம், எக்ஸ்ட்ரா கை கால்களுடன் வேஷ்டியைப் பஞ்ச கச்சமாக இழுத்துச் செருகிக் கொண்டு, சங்கு சக்கரத்துடன் ஓர் உருவம் எதிரில் வந்து நின்றால்தான் கடவுளைப் பார்த்ததாக சிலர் ஒப்புக் கொள்வார்கள். வேறு சிலர் குழந்தை அல்லது காந்தித் தாத்தாவின் பொக்கைச் சிரிப்பில் கடவுளைக் காணலாம். மற்றவர்கள் ‘அது நம்மை மீறிய ஏதோ ஒரு சக்தி’ என்று சிந்தனை ஆழமே இல்லாத ஜெனரிக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்ளலாம்.

நன்கு வளர்ச்சியடைந்த மதங்கள் கூடப் பல வித வாசனைகளில் வருகின்றன என்கிறார் அல்டஸ் ஹக்ஸ்லி (http://csp.org/practices/entheogens/docs/huxley-drugs.html). கிடா வெட்டுவதில் ஆரம்பித்து மொட்டை போட்டு சந்தனம் தடவிக் கொள்வது, பஜனை மண்டலியில் உறுப்பினர் கார்டு வாங்குவது என்பது ஒரு வகை ஆன்மீகம்.

இன்னும் கொஞ்சம் சீரியஸான தளத்தில் மற்றொரு ஆன்மீகக் கருத்து இருகிறது : ஹிந்து மதம் இதை ரத்தினச் சுருக்கமாக ‘தத்வமஸி’ என்கிறது. ‘நீதான் அது, அதுதான் நீ’ என்று பொருள் கொள்ளலாம். கடவுளின் படைப்பில் உயிருள்ளவைகளும் உயிரற்றவைகளும் எல்லாம் ஒன்றே என்ற இந்த ஐடியா எல்லா மதங்களிலும் திரும்பத் திரும்ப வருகிறது.

தன்னை மறந்து அல்லது தன்னைத் துறந்து, எங்கும் நிறைந்திருக்கும் பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்துவிடும் நிலையை அடைய முடிந்தால், அதுதான் மனிதனுக்குக் கிடைக்கக் கூடிய உச்சபட்ச ஆன்மீக அனுபவம். அப்படி ஒரு நிலையை எய்துவதற்காகத்தான் முனிவர்கள் இமய மலையின் ஐஸ் குகைகளில் ரூம் ஹீட்டர் கூட இல்லாமல் வருடக் கணக்காக வசித்துப் பார்த்தார்கள்.

இந்த மாதிரி ஒரு மானுட அனுபவம் ஏற்படுவதை அறிவியலும் ஒத்துக் கொள்கிறது. விஞ்ஞானிகள் இதை self transcendence – சுருக்கமாக ST என்கிறார்கள். எஸ்.டி.யை நாம் தமிழில் ‘கடநிலை’ என்று வைத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் கடந்த நிலை, கடநிலை.

ஆனால் இந்த விஞ்ஞானிகள் தாய்ப்பாசத்தையே வெறும் ஆக்ஸிடோசின் சுரப்புதான் என்று விவரித்தவர்கள் ஆயிற்றே? தத்வமஸிக்கும் ஒரு உணர்ச்சியற்ற விளக்கம் வைத்திருப்பார்களே?

மனவியலாளர்கள் எஸ்.டி.யையும் ஒரு பர்சனாலிட்டி – குணாதிசயம்தான் என்கிறார்கள். நம்மில் சில பேர்தான் முன் கோபம் நிறைந்தவர்களாக இருக்கிறோம்; சிலர்தான் பயந்த சுபாவம். அது போல சில பேருக்கு இயல்பிலேயே ஆன்மீக உணர்வு அதிகமாக இருக்கிறது. இதற்கு மூளையின் ஃப்ரண்டல் லோப்களின் நரம்புப் பின்னல் அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகித்தார்கள். மூளையின் இடது, வலது பக்கங்களில் உள்ள பரைடல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு மூளை வழண்டு விட்டால் அந்த நோயாளிகளுக்குக் கடநிலை (ST) ஏற்படுகிறது. ‘தான்’ என்ற தன்னுணர்வு சற்றே விலகிக் கொள்கிறது. ஆன்மீக உணர்வுகள் மேலெழும்புகின்றன. இதுதான் பக்தி பரவசத்துக்கு நியூராலஜிஸ்ட் சொல்லும் விளக்கம்.

இத்தாலியின் உடைன் பல்கலைக் கழகத்தில் டாக்டர் அர்கேஸி, டாக்டர் ஃபாப்ரோ ஆகியோர் செய்த பரிசோதனை ஒன்று இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. (http://www.rifters.com/real/articles/Urgesi_et_al_Neuron-SelectiveCorticalLesionsModulateHumanSelf-Transcendence.pdf). அவர்கள் மூளைக் கட்டிக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட பல நோயாளிகளின் சி.டி. ஸ்கானை எடுத்து வைத்துக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் ஆன்மீகவாதி அல்லது நாத்திகவாதி என்பதற்கு எஸ்.டி. ஸ்கோர் என்ற அளவீட்டு எண்ணைக் கணக்கிட்டார்கள். ஆபரேஷனுக்கு முன்னும் பின்னும் அவர்களின் எஸ்.டி மதிப்பெண்களை மூளையின் சேதப்பட்ட பிரதேசங்களுடன் பொருத்திப் பார்த்தார்கள்.

அந்தோ! மூளையின் இடது-வலது பரைடல் பகுதிகளில் காயம் ஏற்பட்டபோது மனிதனின் ஆன்மீக உணர்வு அதிகரித்து விடுகிறது என்று கண்டு பிடித்தார்கள்.

நம் ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் இயல்பிலேயே எஸ்.டி. ஸ்கோர் அதிகமாக இருந்திருக்க வேண்டும். அவர்களின் எம்.ஆர்.ஐ. ஸ்கான் ரிப்போர்ட் மட்டும் ஏதாவது கல்வெட்டில் கிடைத்தால், அவற்றின் பரைடல் பகுதிகளை ஒப்பிட்டுப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்.

எஸ்.டி. போன்ற அடிப்படையான பர்சனாலிட்டி இயல்புகள் மூளையில் ஏற்படும் சேதங்களால் மாற்றி அமைக்கப்படுகின்றன என்றால், அதே கண்டுபிடிப்பை வைத்துக்கொண்டு சில வகை மன நோய்களையும் குணப்படுத்த முடியும் என்கிறார்கள்.

கடநிலை ஏற்படுவதற்கு, மூளையின் அக்ரூட் கொட்டை மடிப்புகளில் எங்கோ அடிபட்டிருக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை. தீவிரமான முறையில் அதிர்ச்சி அல்லது சோகமான சம்பவம் ஏதாவது நடந்துவிடும்போதும் பெரும்பாலோருக்கு ஒவ்வொரு அளவில் எஸ்.டி. நிகழ்கிறது. மூளையின் நிரந்தரமான ஹவுஸ் ஒயரிங்கில் ஆன்மீகம் இருந்தால், தனிப்பட்ட முறையில் கஷ்ட நஷ்டங்கள் வரும்போது அது நம்மை பக்திமானாக ஆக்கிவிடும் !

எங்கள் சுந்தரம் பெரியப்பா இப்படித்தான் – பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் படித்துவிட்டு அறிவு ஜீவித்தனமாக சாமி இல்லை, பூதம் இல்லை என்று எல்லாவற்றையும் கிண்டல் செய்துகொண்டு திரிந்தாராம். அவருடைய மனைவி ஒரு நாள் என்னவோ ஸ்க்லெராஸிஸ் என்று ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக ஆனவுடன் பெரியப்பா பரம பக்த சிகாமணியாக மாறி, வீட்டில் தினம் மூன்று வேளை பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டாராம். நாலாவதோ என்னவோ படித்துக் கொண்டிருந்த எனக்கு, அவர் கொடுத்த சீனாக் கல்கண்டு பிரசாதம் மட்டும்தான் ஞாபகம் இருக்கிறது.

சில சைக்கடெலிக் மருந்துகளும் ஆன்மீக அனுபவத்தைக் கொண்டு வருகின்றன என்பது பல காலமாகவே தெரிந்த விஷயம்  (http://ajp.psychiatryonline.org/cgi/content/full/160/11/1965). வில்லியம் ஜேம்ஸ், நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவை முகர்ந்து பார்த்துப் பல பரிசோதனைகள் செய்திருக்கிறார். மூளையின் ஸெரோடோனின் சிஸ்டம் ஆன்மீகத்துக்கு உதவி புரிகிறது என்று ஒரு கண்டுபிடிப்பு இருக்கிறது.

அறுபது-எழுபதுகளில் அமெரிக்க இளைஞர்கள் பலர் குளிக்க மறுத்து முடியை வளர்த்து ‘ஹிப்பி’ என்று அலைந்தார்கள். எல்.எஸ்.டி போன்ற போதை மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டு இருபது சதவீதம் சொர்க்கம் தெரிகிறது என்றார்கள். இது வெறும் மப்பு அல்ல, முற்றிலும் ஆன்மீக அனுபவம் என்றார்கள். பனியனைக் கழற்றித் திருப்புவது போல் பார்வையை உள் பக்கமாகத் திருப்பும்போது அங்கே பிரபஞ்சமே தெரிந்ததாம். (ஹிப்பிகளுக்கெல்லாம் இப்போது ஐம்பதுக்கு மேல் வயதாகியிருக்குமே, பாவம் சாப்பாட்டுக்கு என்ன செய்கிறார்கள் ?)

நூற்றுக் கணக்கான வருடங்களுக்கு முன்பேயே மத போதகர்கள் மன நிலை மாற்றும் மருந்துகளை உபயோகித்து வந்ததுண்டு. ஒரு வித கள்ளிச் செடியிலிருந்து எடுத்த மெஸ்கலைன் என்ற மருந்தை அருந்திப் பார்த்த போது ஒவ்வொருவருக்கும் பக்கத்தில் பஜனை செய்துகொண்டிருந்த பக்தர்களின்பால் ஒரு சகோதர உணர்ச்சி ஏற்பட்டதாம். எல்.எஸ்.டி, மெஸ்கலைன் போன்ற மருந்துகள் சரியான விகிதத்தில் செலுத்தப்பட்டவர்கள் ‘அன்பே தெய்வம்’, ‘அதுவே நான்’ போன்ற மதக் கருத்துக்களை முழுவதுமாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள். அறிவு பூர்வமாக இல்லாமல் உணர்வு பூர்வமாக, தனிப்பட்ட அனுபவமாக !

இந்த மாதிரி சற்று நேரமே வந்து போகும் ஆன்மீக அனுபவங்கள், நிரந்தரமான ஞானம் என்றோ, மோட்சத்துக்கு வழி வகுக்கும் என்றோ சொல்வதற்கில்லை. பங்கி அடித்தவன் தெளிந்த பிறகு நல்ல மனிதனாக வாழ்வான் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை.

மாத்திரை போட்டுக்கொண்டு நிகழ்வதெல்லாம் நிஜமான ஆன்மீக அனுபவமா என்று கேள்வி எழலாம். ஆனால் கடும் பட்டினியால் செல்கள் சோர்ந்து சுருங்கிப் போகும்போதும் வேறு வழியில்லாமல் மனிதனின் ஆன்மீக உணர்வு மேலே வருவது உண்டு. கொலைப் பட்டினி கிடந்து ஹைபோ க்ளைஸீமியா என்று ரத்தத்தில் க்ளூக்கோஸ் அளவு குறைவது, நாள் கணக்கில் தூங்காமல் விழித்திருப்பது போன்ற விசுவாமித்திரர் வேலைகள் எல்லாமே மனித உடம்பின் பயோ கெமிஸ்ட்ரியை மாற்றி அமைக்கும் முயற்சிகள்தான்.

‘வாசியைக் கும்பகத்தால் வலியக் கட்டி..’ என்று சித்தரோ யாரோ சொன்னது போல மூச்சை நீண்ட நேரம் அடக்கினால், ரத்தத்தில் கார்பன் டை ஆக்ஸைடின் அடர்த்தி அதிகரித்துவிடும். அதன் மனோதத்துவ விளைவாக, ‘தான்’ என்ற தன்னுணர்வு மங்குகிறது. எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தன்னுடைய பகுதிகளைக் காண ஆரம்பிக்கிறோம்.

குகைக்குப் போய்க் கல்லால் அடைத்துக்கொண்டு மாதக் கணக்கில் தனியாக உட்கார்ந்திருந்தால், புற உலகத்தின் எல்லாக் காட்சிகளும் செய்திகளும் – பற்பசை விளம்பரங்கள் உட்பட – ரத்தாகி, மனத்திற்கு அதிக பட்ச சலிப்பு (boredom) ஏற்படுகிறது. அந்த நிலையில் க்ளூக்கோஸ்-ஆக்ஸிஜன் பற்றாக் குறையும் சேர்ந்துகொண்டு மனம் கெக்கரே பிக்கரே என்று கற்பனை செய்து கொள்ள, கண் எதிரே சங்கு சக்கர உருவங்கள் தெரிந்தாலும், அசரீரிக் குரல்கள் கேட்டாலும் ஆச்சரியமில்லை.

நான் கூட ரிட்டையர் ஆன பிறகு சீரியஸாக பரப்பிரம்மத்தைத் தேடிப் பயணம் கிளம்பலாம் என்றிருந்தேன். அதற்கு முன் இன்னும் கொஞ்சம்  நியூரோ டாக்ஸிகாலஜி புத்தகங்களைப் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வருவது நல்லது என்று தோன்றுகிறது.