மறுபடி

”ஜோஸஃபீன் விக்டோரியா தாம்ப்ஸன்!”

பாட்டி முழுப்பெயரும் சொல்லி அவளை அழைத்தால் கோபமாக இருக்கிறாள் என்று தெரிந்த ஜோஸஃபீன் சுவர் மறைவிலிருந்து எட்டிப்பார்த்தாள்.

”இங்கே வா,” என்று ஆங்கிலத்தில் உறுமினாள் ஸ்டெல்லா.

கையை பின்னுக்குக் கட்டிக்கொண்டு ஜோஸஃபீன் உள்ளே வந்தாள். மேஜை மீதுபிள்ளையார் சிலை இருந்தது.

”என்ன இது?”

”என் நண்பன் எனக்கு பரிசாகக் கொடுத்தான்.” என்றாள் ஜோஸஃபீன்

“இது நம் வழக்கமல்ல. இதுவெல்லாம் வீட்டுக்குள் வரக்கூடாது. தெரிகிறதா?”என்றாள்  ஸ்டெல்லா.

“என் நண்பன் எனக்கு பரிசாகக் கொடுத்தான். அதில் என்ன பிரச்னை? நான் கூட அவனுக்கு சாண்டா கிளாஸ் தந்தேன்.”

“அவர்கள் சாண்டா கிளாஸ் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இதை நாம் வைத்துக்கொள்ளக்கூடாது,” என்றாள் ஸ்டெல்லா.

“யார் அந்த நண்பன்?”

“ம்ம். அது நேதன். என்னுடைய வகுப்பில் இருக்கிறான்,” ஜோஸஃபீன் மென்று விழுங்கினாள்.

”ஓ.. இனி அவனோடு சேராதே..” என்றாள் பாட்டி

“சரி.” என்றவாறு ஜோஸஃபீன் வெளியே ஓடினாள்.

ஸ்டெல்லா அப்படியே நின்று அவளை பார்த்துக்கொண்டிருந்தாள். பிள்ளையார் சிலையை எடுத்துக்கொண்டு தன் அறைக்குப் போனாள். அதன தன் மேஜை மீது வைத்துவிட்டு தன் மகளைக் கூப்பிட்டாள்.

“ஹலோ கிளாரா!”

“சொல்லும்மா,” என்று தமிழில் கேட்டது.

”எங்கே இருக்க?” என்று தமிழில் கேட்டாள் ஸ்டெல்லா

“இப்பத்தாம்மா ஆபீஸிலிருந்து வந்தேன். பெங்களூர் டிராபிக் ரொம்ப மோசமாயிடுச்சி. கொஞ்சம் குளிச்சிட்டு வந்து கூப்பிடவா?” என்றாள் கிளாரா அந்தப்பக்கம்.

”ம்ம்.. சரி.” என்று போனை வைத்துவிட்டு பின்புறமாக வெளியே வந்தாள்.

முன்பெல்லாம் இப்படி நினைத்த நேரத்துக்கு இந்தியாவை கூப்பிடமுடியாது. எப்போதாவது கிளாரா கடிதம் எழுதுவாள். உள்ளே நிறைய புகைப்படங்களுடன். இப்போது காலையிலும் மாலையிலும் தொடர்ந்து பேசினாலும் பில் ஏறுவதில்லை. கடிதம் எழுதுவது நின்றுபோய் விட்டது. சிட்னியின் பளீர் நீல வானத்தில் பறவைகள் மேற்கு நோக்கி பறந்துகொண்டிருந்தன. ஜோஸஃபீன் புல்தரையில் பக்கத்து வீட்டுப் பெண்ணை துரத்துக்கொண்டு வெகு வேகமாக ஓடிக்கொண்டிருந்தாள். ஆஸ்திரேலியா வந்து வெகு காலமாகிவிட்டது. சுமார் 30 வருடங்கள் இருக்கும்.

கப்பலில் வந்தது நினைவில் இருந்தது. இங்கே படித்து வளர்ந்த மக்கள் இன்று உலகெங்கும் போய்விட்டிருக்கிறார்கள். கிளாரா மீண்டும் இந்தியாவுக்குப் போயிருக்கிறாள். வேலை என்று சொல்கிறாள். கிளாராவின் அண்ணன் கப்பலில் வேலையாய் இருக்கிறான். திருச்சியில் ரயில்வே குவாட்டர்ஸில் ராணி மாதிரி இருந்ததும், பின்னால், கணவர் போனதும் அங்கங்கு சிதிலமாகிவிட தொடங்கியிருந்த குடும்பத்தை இழுத்து பிடித்து ஆஸ்திரேலியா வந்ததும் பழைய கதை. அண்ணன் இப்போது எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. பெரும் குடிகாரன். ரயில்வேயில் முன்னுரிமையில் கொடுக்கப்பட்ட வேலையைக் கூட பிடித்து வைத்துகொள்ளத் தெரியாமல், பொன்மலையிலும், கிராப்பட்டியிலும் குடித்து விழுந்து கிடந்தான். அப்பா மனமுடைந்து இறந்தாரா அல்லது அவருக்கும் குடிப்பழக்கம் இருந்ததா என்று  ஸ்டெல்லாவுக்கு தெரியாது. தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. எல்லாம் விட்டுப் போயிற்று.

-o00o-

ஜோஸஃபீனின் பந்தை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுப் பெண் ஓடிவிட்டாள்.

ஜோஸஃபீன் முறைத்துக்கொண்டே வீடு நோக்கித் திரும்பி நடந்தாள்.

உள்ளிருந்து போன் அடித்தது. எழுந்து உள்ளே சென்றாள் ஸ்டெல்லா.

“கிராம்மா,” என்றவாறு உள்ளே வந்தாள் ஜோஸஃபீன். ஆனால் ஏற்கெனவே ஸ்டெல்லா போனை எடுத்துப் பேச ஆரம்பித்திருந்தாள்.

“கிளாரா. உன் பெண் சம்பந்தமாக நான் சந்தோஷமாக இல்லை,” என்று ஆங்கிலத்தில் தொடர்ந்தாள் ஸ்டெல்லா. ”அவள் கருப்பாக இருக்கிறாள். நம் வீட்டுப் பெண் மாதிரியா அவள் இருக்கிறாள்?”

கிளாரா தானாக தன் கணவனை தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அவனும் ஆங்கிலோ இந்தியப் பையன் தான். இருந்தாலும், ஸ்டெல்லாவுக்கு பிடிக்கவில்லை. கிளாரா பொன்னிற நிறத்தை உடையவள். கிளாராவின் கணவன் ஜோ அசப்பில் ஒரு இந்தியனைப் போன்றுதான் இருந்தான்.மற்ற  ஆங்கிலோ இந்தியர்களை விட சற்று மாநிறமாக இருந்தான்.

”நம் வீட்டு குழந்தைகளுக்கு வரவே வராத பழக்கங்கள் எல்லாம் அவளுக்கு எப்படியோ ஒட்டிக்கொள்கின்றன.”

ஜோஸஃபீன் அதனை கேட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு அழுகை தொண்டையை அடைத்தது.

”ஜோஸஃபீன் எப்போதுமே வீட்டில்தான் இருக்கிறாள். அவளை வெளியே போ என்று நான் சொல்லவேண்டியதிருக்கிறது. கெட்ட பழக்கங்கள் எல்லாம் அவளிடம்.”

கிளாரா ஏதோ சொல்லியிருப்பாள் போல.

“ம்ம். அதுவா.. பிள்ளையார் சிலையை அவள் மேஜை மீது வைத்திருக்கிறாள்..என்ன சொல்வது?” என்றாள் ஸ்டெல்லா.

கிளாரா சொன்னது ஜோஸஃபீனுக்கு கேட்கவில்லை. சப்தமில்லாமல் தன் அறைக்குச் சென்று பிள்ளையார் சிலையை எடுத்து, எங்காவது ஒளித்துவிடத் தேடினாள்.அது அங்கே இல்லை. பாட்டி எடுத்திருப்பாள்.

-o00o-

ஜோஸஃபீனின் அக்கா செலஸ்டி சிவப்பாக இருந்தாள். உயரமாக இருந்தாள். அணிந்திருந்த ஆடையைக் கழட்டிவிட்டு உள்ளாடை, பெட்டிக்கோட்டுடன் பாத்ரூமுக்குப் போனாள். ஸ்டெல்லா கத்தினாள். “இது மாதிரி செய்யாதே என்று எவ்வளவு முறை சொல்லியிருக்கிறேன்.”

செலஸ்டி பதில் சொல்லாமல் முனகிக்கொண்டே பாத்ரூமுக்குள் நுழைந்து அறைந்து கதவைச் சாத்தினாள்.

“உங்கள் இரண்டு பேரையும் இங்கே விட்டுவிட்டு போய்விட்டிருக்கிறாள் உங்கள் அம்மா,” என்றவாறு ரொட்டிகளை வெட்டி சாப்பாட்டு மேஜையில் வைத்தாள். அதன் மீது விரிக்கப்பட்டிருந்த லேஸ் மேஜை விரிப்பை ஒழுங்கு செய்தாள்.

செலஸ்டி வைத்துவிட்டுப் போயிருந்த அவளுடைய கைப்பையை திறந்து ஆராய்ந்தாள் ஸ்டெல்லா.

பாத்ரூம் கதவைத் திறந்து பாய்ந்து வந்து அந்த கைப்பையை பிடுங்கிய செலஸ்டி, “ நீ ஒரு இந்தியன் மாதிரி நடந்துகொள்கிறாய்,” என்று ஆங்கிலத்தில் கத்தினாள்.

ஸ்டெல்லா கோபத்துடன் எழுந்து வெளியே சென்றாள். முகம் சிவப்பாக ஆகியிருந்தது. ”இந்தியர்கள் என்ன இந்தியர்கள்? எல்லா பாட்டிகளும், அம்மாக்களும் பண்ணுவதுதான்.” என்றாள் ஸ்டெல்லா. கோபமெல்லாம் அரை வினாடிதான். ஸ்டெல்லாவால் செலஸ்டியிடம் கோபித்துக்கொள்ளவே முடியாது. அவளுடைய முதல் பேத்தி அவள்.

-o00o-

“பாட்டி சொன்னாள்,” என்றாள் செலஸ்டி.

“என்ன சொன்னாள்?” என்றாள் ஜோஸஃபீன்

“உன் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருந்துகொள். அவர்களது மத பழக்க வழக்கங்களில் கலந்துகொள்ளாதே.”

“நான் ஒன்றும் கலந்துகொள்ளவில்லை. அந்த சிலை அழகாக இருந்தது. எனக்குப் பிடித்திருந்தது. எனக்குக் கொடு என்று கேட்டேன். அவனது அம்மா கொடுத்தாள். எல்லா நல்ல காரியத்திலும், சொந்தக்காரர்களுக்கும், நண்பர்களுக்கும் அந்த சிலையை கொடுப்பார்களாம்.”

”எங்காவது இந்துவாக மாறித் தொலைத்துவிடாதே. நாமெல்லாம் ஆங்கிலோ இந்தியர்கள். ஆங்கிலோ இந்தியர்கள் என்றால் கிறிஸ்துவர்கள் தான்.” என்றாள் செலஸ்டி

“ஏன்?” என்றாள் ஜோஸஃபீன்.

”உன்னை மாதிரி முட்டாள்களிடம் பேசமுடியாது. எதெற்கெடுத்தாலும் ஏன் எப்படி?”

பள்ளிக்கூட பஸ்ஸில் பொதுவாக செலஸ்டி இவளது அருகில் உட்காரவே மாட்டாள். எப்போதும் தனியாக அவளது தோழிகளுடன் தான் உட்கார்ந்து பேசிக்கொண்டு வருவாள். அவ்வப்போது இவளை பார்ப்பாள். இன்று அருகே உட்கார்ந்து மெல்ல
பேசிக்கொண்டு வந்திருந்தாள். ஆக, பாட்டி இவளிடம் நேற்று சொல்லியிருக்கிறாள்.

“அந்த பையன் தான் நேதனா?” என்றாள் செலஸ்டி.

“ஆமாம்” என்றாள் ஜோஸஃபீன்.

அவனைக் கண்டுபிடிப்பது ஒன்றும் கஷ்டமில்லை. அவன் ஒருவன் மட்டுமே அந்த பஸ்ஸிலேயே இந்தியன்.

“இவ்வளவு நண்பர்களில் அவனோடு மட்டும்தான் நீ பேசுவாயா?”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.” என்றாள் ஜோஸஃபீன்

-o00o-

ஸிட்னியில் மாரிக்காலம் என்பது இப்படியா இருக்கும் என்று அவ்வப்போது ஸ்டெல்லாவுக்கு சந்தேகம் வரும். இன்றென்னவோ இருட்டிக் கொண்டு வந்து பின் சிறு தூறல். பிறகு நின்றுவிட்டது. கிளாராவிடமிருந்து போன் வந்தது.

“அம்மா ஆச்சரியமான விஷயம்”

“சொல்லு”

“மாமாவைப் பார்த்தேன்.”

“என்னது? மாத்யூவா?”

“ஆமாம். மாத்யூ அங்கிள்தான். ரொம்ப வயசாயிடிச்சி. ஆனா அதே மாத்யூ அங்கிள்தான். அவரோட பையனோட வந்திருந்தார்.”

“எங்கே உன்னை பார்க்கவா? நீ இருக்குமிடம் எப்படி அவனுக்கு தெரியும்?”

“இல்லை. என்னை பார்க்க வரவில்லை. இங்கே சர்ச்சுக்கு நானும் இவரும் போயிருந்தோம். அங்கே தன் மகனுடன் வந்திருந்தார். மகன் ஒரு இந்திய பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறான். அங்கிள்தான். நானே போய் கேட்டேன். என்னை அடையாளம் தெரியவில்லை அவருக்கு. ஆனால், அவரைத்தான் எனக்கு நன்றாகத் தெரியுமே. திருச்சியில் இல்லையாம். கண்டோன்மெண்ட் வீட்டை விற்றுவிட்டார்கள். அவர் அங்கேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து தங்கிவிட்டாராம்.”

“அந்த பெண்ணைப் பார்த்தாயா?”

”இல்லை. அவர்கள் இறந்துவிட்டார்களாம். பத்து வருடங்களுக்கு முன்னால்”

“ஓ!”
“அவரது பையனுக்கு பெங்களுரில் வேலை. அதனால் பெங்களூருக்கு வந்துவிட்டார்களாம்.”

“இன்னும் குடிக்கிறானாமா?”

“நான் கேட்கவில்லை. ஆனால் குடிப்பதில்லை போலத்தான் தெரிகிறது.”

ஸ்டெல்லாவுக்கு தன் அண்ணனோடு கண்டோண்ட்மெண்டில் துரத்தி ஓடிப்பிடித்து விளையாடித் தலைகுப்புறத் தார்ச்சாலையில் விழுந்து, நடு மண்டையில் ரத்தம் பெருக்கெடுத்து, ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போனது நினைவுக்கு வந்தது. ஏனோ திருச்சி என்றால் உடனே நினைவுக்கு வருவது அதுதான். ஆஸ்பத்திரி மாடியிலிருந்து பார்த்தால் உச்சிப்பிள்ளையார் கோவில் தெரியும்.

-o00o-

பள்ளிக்கூடத்திலிருந்து ஸ்டெல்லாவுக்கு காலையில் ஒரு கடிதம் வந்தது. கவுன்ஸிலரை சந்திக்க வரவேண்டும் என்று கோடிட்டிருந்தது. ஆஸ்திரேலியாவின் பள்ளிக்கூடங்களில் ஒரு மாதிரியான அந்நியத்தனத்தை உணர்ந்திருந்தாள் ஸ்டெல்லா. அவள் காலத்து இந்திய பள்ளிக்கூடங்கள் போல ஒட்டடையே அடிக்காத, குப்பை எங்கும் வெளியில் கிடக்க, அழுக்கும் அசிங்கமுமாய் இருக்கவில்லை. அதனால்தானோ என்னவோ ஒரு அன்னியத்தன்மை வந்ததாக ஸ்டெல்லா உணர்ந்திருந்தாள். இது எங்களுடைய பள்ளிக்கூடம் என்ற உணர்வு அவளுக்கு வருவதில்லை. அதனாலேயே அந்தக் கடிதத்தை பார்த்ததும் ஒரு பயங்கலந்த உணர்வு தோன்றிவிட்டிருந்தது. போகாமலிருக்க முடியுமா?

”ஜோஸஃபீன். இந்த கடித்தைப் பார்” என்றாள் ஸ்டெல்லா.

அதனை படித்து பார்த்த ஜோஸஃபீன், ’ஆமாம், உன்னை வரசொல்கிறார்கள், கிராம்மா,’ என்றாள்.

”தெரிகிறது. ஏன்” என்றாள் ஸ்டெல்லா

”எனக்கென்ன தெரியும்? நீயே போய் கேட்டுக்கொள்.” என்றாள் ஜோஸஃபீன்

“நீ ஏதும் குறும்பு காரியம் பண்ணினாயா?”

“இல்லை. நானொன்றும் செய்யவில்லை.”

-o00o-

கிளாரா கவலையடைந்தாள். ”ஏன் என்று தெரியவில்லையே,” என்று ஸ்டெல்லா சொன்னாள்.

”ஒன்றும் இருக்காது.. போய்ப் பார் அம்மா. ஆஸ்திரேலியர்கள் கொஞ்சம் இனவாதிகள். அவள் கொஞ்சம் மாநிறமாக இருக்கிறாள் என்று ஏதேனும் செய்யப்போகிறார்கள்.” என்று கிளாரா சொன்னாள்.

”நான் அப்போதே சொன்னேன். நீதான் உன் கணவனையே கல்யாணம் பண்ணிக்கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தாய்.”
கொஞ்சம் அமைதியாக கிளாரா இருந்தாள்.

”வேறேதாவது பேச மாட்டியா?” என்று சொல்லிவிட்டு படக்கென்று போனை வைத்துவிட்டாள்.

-o00o-

கவுன்ஸிலராக இருந்த பெண் பொன்னிற முடியும், காதுகளெல்லாம் சிவந்து பழுத்தும் இருந்தாள். அவளது பூனை முடிகள் கழுத்தெல்லாம் பொன்னிற செம்பட்டையாக இருக்க, தோளெல்லாம் புள்ளிபுள்ளியாக இருந்தது. வெயில் அறையில் சாய்ந்திருந்தது. “உட்காருங்கள். வந்துவிடுகிறேன்,” என்று சொல்லிவிட்டு வெளியே போனாள்.

பையை மடியில் வைத்துகொண்டு அசௌகரியமாக ஸ்டெல்லா உட்கார்ந்தாள். நீண்ட ஐந்து நிமிட காலத்துக்குப் பின்னர் கவுன்ஸிலர் பெண் திரும்பி வந்தாள்.

“மன்னிக்க வேண்டும். ஒரு சின்ன அவசர வேலை.” என்று சொல்லிவிட்டு தன் இருக்கையில் உட்கார்ந்து, குனிந்து மேஜை அறையில், உள்ளேயிருந்த ஒரு கோப்பை எடுத்தாள்.

“உங்கள் பேத்தி ரொம்ப நன்றாக படிக்கிறாள். அவளது வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்களை விட தரம் அதிகம். நல்ல மெசூரிடியும் இருக்கிறது. அவளை ஒரு வகுப்பு ப்ரமோஷன் செய்து மேல் வகுப்பில் போடலாம் என்று சிபாரிசு செய்கிறோம். நீங்கள் வேண்டாம் என்றால், இதே வகுப்பில் இருக்கலாம். இதே வகுப்பில் இருப்பதும் அவள் வயதொத்த மாணவர்களுடம் இருப்பதும் நல்லதுதான். தவறொன்றுமில்லை. ஆனால், அவள் சிறப்பாக படிப்பதால், அவளது உள்வாங்கும் சக்திக்கு ஏற்ப இந்த வகுப்பில் பாடம் இல்லை. ஆகவே ஒரு வகுப்பு உயர்த்திப் புரமோஷன் கொடுப்பது நல்லது என்று எங்கள் கருத்து. சிந்தித்துப் பாருங்கள். ஒரு வாரத்துக்குள் சிந்தித்து உங்கள் பதிலை கூறுங்கள்.”

குப்பென்று உஷ்ணமாகச் சந்தோஷம் பரவியது ஸ்டெல்லாவின் உடலில்.

அவளை அறியாமலேயே ஸ்டெல்லாவின் முகம் பூத்து.. ”உங்கள் கரிசனத்துக்கு நன்றி,” என்றாள்
”இந்த படிவத்தை வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய விருப்பத்தைத் தெரிவித்து நிரப்பி, இதை ஒரு வாரத்துக்குள் அலுவலகத்தில் கொடுத்துவிடுங்கள்.” என்று சொன்னாள் கவுன்ஸிலர் பெண்.

-o00o-

மாலையில் ஸ்டெல்லா ஜோஸஃபீனைக்காகக் காத்து, எதிர்பார்த்து நின்றாள். ஜோஸஃபீன் வந்ததும் அவளை கட்டிக்கொண்டு முத்தமிட்டாள். ”உனக்கு ப்ரமோஷன் கொடுக்கப்போறாங்களாம்.” என்றாள்.

‘அப்படியென்றால்?’ என்று கேட்டாள் ஜோஸஃபீன்.

“பிறகு சொல்கிறேன்,” என்று உள்ளே கூட்டிக்கொண்டு போனாள் ஸ்டெல்லா.

கிளாராவுக்கு போன் அடித்து “நான் சொன்னேனே. இதோ ஜோஸஃபீன் வந்துவிட்டாள். அவளிடமே உன் வாழ்த்தை சொல்லு.” என்று போனை கொடுத்தாள். “அம்மா!” என்றாள் ஜோஸஃபீன், உற்சாகமாக.

-o00o-

அன்றிரவு கிளாராவிடம் பேசிய ஸ்டெல்லா, “நான் இந்தியாவுக்கு இந்த லீவில் வரேன்.” என்றாள்.

“அப்பாடி.. ஒரு வழியா சம்மதிச்சியே,” என்றாள் கிளாரா.

“அப்படியே திருச்சிக்கும் ஒரு தடவை போயிட்டு வந்திடலாம். பழைய வீடு தெரு எல்லாம் சும்மா வேடிக்கைக்குப் பார்த்திட்டு வரலாம்,” என்றாள் ஸ்டெல்லா.

“ஆனா ஒரு நிபந்தனை. இப்ப இங்கே யாரும் கவுன் போடறதில்லை. நீ புடவைதான் கட்டணும்.” என்றாள் கிளாரா

“நீ சொல்லிக்குடு.” என்று ஸ்டெல்லா சொன்னாள்.