மகரந்தம்

டெகார்த்தின் கடிதங்கள்

கல்வெட்டையே அழித்துப் பெயிண்ட் அடித்து நாசம் செய்யும் இந்திய பழம்பொருள் இலாகாவும், மாநில அரசுகளும் வரலாற்றைத் தாம் அழிக்கிறோம் என்று தெரிந்தே அழிக்கிறார்.  நம்பத் தக்க தகவல்களைத் தெரியாது அடித்து விட்டால்,  ஏற்கனவே கதையாய்க் கட்டி இருக்கும் வரலாறு, முந்நாள் ஆட்சியாளர்களான பிரிட்டிஷார் காலத்திருந்தே நம்மவரின் கற்பனையிலும் ஊறியிருக்கும் காலனியப்  புனைகதைகளே வரலாறு என நீடிக்கும் என்று நம்புவதால் இந்த நடைமுறை உருவாகி இருக்கும்.  அல்லது அவைதான் வரலாறாக இருக்க வேண்டும் என்று கருதும்,  கடந்த 40 வருடங்களாக நம்மை ஆள்வோரின், அரசியல் நிர்ப்பந்தத்தால் இப்படி செய்கிறார்கள் எனவும் நாம் ஊகிக்கலாம்.  நம் வரலாற்றை, பாரம்பரியத்தை இழித்து, அழித்துப் போக பெருமுயற்சி செய்த அதே மேற்கு, அச்சமுகங்களை நாம் என்ன கரித்துக் கொட்டினாலும், தம் வரலாற்றை எப்படி எல்லாமோ பாதுகாக்க அவர்கள் முயல்கிறார் என்னும் தகவல் நாம் அடிக்கடி, ஆங்காங்கே காணக் கிடைப்பது; அப்போக்கு  போற்றத் தக்கதே.  இந்தச் செய்தியில் ஃப்ரெஞ்சு கணிதவியலாளர், மதச் சிந்தனையாளர், அறிவியலாளர், தத்துவவியலாளர் டெகார்த்தின் கடிதங்கள் பல பத்தாண்டுகள் முன்பு களவு போனதும், அவற்றைத் தொடர்ந்த முயற்சியால் ஃப்ரான்ஸுடைய அரசும் கல்லூரிகளும் பாதிக்கு மேல் மீட்டு விட்ட கதையும் சொல்லப் படுகின்றன. பண்டை அல்லது நடுக்கால இந்திய சிந்தனையாளர்களின் ஆவணங்களில் எதையாவது இந்திய அரசு இத்தனை அக்கறையோடு பாதுகாக்குமா?  இந்தக் கேள்வியே நம்மில் பலரைச் சிரிக்க வைக்கும்.  வேதனைதான் சிரிப்பாக வெளிவருகிறது, தெரியும்.  இதுவே ஏதாவது இந்திய ஆவணமாக இருந்தால் இந்த அமெரிக்கக் கல்லூரி இத்தனை மரியாதையாக அந்த ஆவணத்தைத் திருப்பிக் கொடுத்திருக்குமா, இந்திய அரசுதான் அது ஒரு இந்து சமய ஆவணமாக இருந்தால் அந்த ஆவணத்தைத் திரும்பப் பெற ஏதும் முயற்சி எடுத்திருக்குமா?

நம் பதில் – இருக்காது.

ஆனால் இந்துக்கள் பெரும் கொலைவெறியர் என்று நிறுவுவதாக ஒரு ஆவணம் கோடி காட்டுகிறது என்று தெரிந்தால்?  நம் பல்கலை ஆய்வாளர்கள் அங்கே படை எடுத்து ’ஆய்வு’ எல்லாம் செய்து, தம் கண்டு பிடிப்புகளை ஒரு நூறு கட்டுரைகளாக உடனே பிரசுரிக்கப் பெரு முயற்சி செய்வர் என்பது உறுதி.  அத்தனை நம் பாரம்பரியத்தின் மீது நம் அறிவுஜீவிகளுக்குப் பரிவு, அன்பு, பெருமை.  காலனியம் என்பது சும்மாவா,  நின்று கொல்லும் புற்று நோய்.

40 ஆயிரம் வருடத்து எழுத்தறிவு

மனிதர் எப்போது எழுதப் படிக்கத் துவங்கினார்?  இந்தக் கேள்வியே அபத்தம், கடவுள் நம்மைப் படிக்கத் தெரிந்தவர்களாகவே படைத்தார் எனவும், மனிதர் பரிணாம ரீதியாக வளர்ந்து மேலெழுந்தார் என்பதைப் பொய் எனவும் கருதும் மனிதர் மேற்கில் ஏராளம்.  அவர்கள் விவிலிய நூல் சொல்வதுதான் இறுதி வரலாறும், ஒரே வரலாறும் என்று நம்பும் மக்கள்.  அவர்களுடைய கடும் எதிர்ப்புகளை மீறித் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகெங்கும்  மேலும் மேலும் நுட்பமான பொறி எந்திரங்களையும், இருப்பதில் மிகப் பழமையான மண் தோண்டிக் கருவிகளை நம்பியும் தம் ஆய்வுகளைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  சில சமயம் ஏற்கனவே பல பத்து வருடங்களாகப் பதிவில் இருக்கும் சில விஷயங்கள் புதுப் பார்வையில் மிக வித்தியாசமான முடிவுகளுக்கு நம்மைக் கொண்டு செல்லும், அப்படிக் கள ஆய்வோடு, ஆவணத் தோண்டலிலும் ஆய்வாளர்கள் மும்முரம்.  முன்பே தெரிந்த குகை ஓவியங்கள்,  அவற்றில் இருந்த குறியீடுகள் ஆகியன வேறு இடங்களில் கிட்டிய ஒத்த சான்றுகளோடு இணைத்துப் பார்க்கையில் சமீபத்து ஆய்வாளர்கள் வந்திருக்கும் முடிவு: மனிதர் 40 ஆயிரம் வருடங்களாகவே எழுதப் படித்து வந்திருக்கிறார்.  இந்த மாதிரி ஆய்வுகள் நம் புராணங்களில் சொல்லப்படும் கதைகளை அல்லவா ஒத்திருக்கின்றன என்று கேட்காதீர்கள்.  இவை யூரோப்பியக் குகைகளில் கிட்டும் தகவல்கள்.  நம் நாட்டில்தான் அகழ்வாராய்ச்சி என்பதைச் செய்யவே இந்திய அரசு பயப்படுகிறதே? ஒரு வேளை இந்திய நாகரிகம் என்பது ஆகப் பழம் நாகரீகம் என்று தெரிந்து விட்டால் என்ன செய்வது.  ஆட்சியில் இருக்கும் இழிவுக் கருத்தியல் ஒழிந்து விட்டால் எப்படி மக்களைச் சமாளிப்பது?

இந்தியாவில் இந்துப் பண்பாடு என்று ஒன்று இருந்ததே கிடையாது என்று ஆணித்தரமாக எழுதிய  கல்வெட்டு ஏதும் இருக்கிறதா சொல்லுங்கள்.  அது பூமிக்கடியில் எரிமலை நடுவில் இருந்தாலும் உடனே போய் வெட்டி எடுத்து வந்து விடும் இந்திய அரசு.  அப்படி ஏதும் இல்லாததால் தற்போதைக்கு எதையும் வெட்டி எடுத்து ஆராய்வதெல்லாம் வெட்டி வேலை என்று மூடி வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.  யூதத் தீர்க்கதரிசிகள் இந்தியாவில்தான் தோன்றினார் என்று புருடா விடும் ஓலைச் சுவடி ஏதும் பரங்கிமலையில் சுரங்கத்தில் கிட்டினாலும் உடனே தெரிவியுங்கள், இந்திய அரசு காத்திருக்கிறது உங்களுக்குப் பரிசு வழங்கிக் கௌரவிக்க! அத்தோடு பல யூரோப்பிய அரசுகளும், அமைப்புகளும் விருதுகளெல்லாம் கொடுத்து கௌரவிக்கும்.  ஆவணம் தயாரிக்கக் கிளம்பியாயிற்றா?

வட கொரியாவின் கொடூர அரசு

வட கொரியாவின் கொடூர அரசு. இதில் எத்தனை ஒரு தனிமனித வக்கிரம், எத்தனை குறுங்குழுப் பார்வையின் கோணல் நடத்தை? எத்தனை பாகம் மார்க்சிய லெனினியத்தின் கொடூரங்கள்? எத்தனை பாகம் ஒரு பண்பாட்டின் மரபு? எப்படிப் பிரித்து உணர? ஆனால் இச்செய்தியில் கால் பங்கு உண்மையாக இருந்தால் கூட உலக நாடுகளில் படு மோசமான நிலையில் வாழும் மக்களில் வட கொரியர் கணிசமானவர் என்பது தெளிவு.       21ஆம் நூற்றாண்டில் ஒரு நாட்டு மக்களைக் கற்காலத்து மனிதர் போல வாழக் கட்டாயப்படுத்தும் ஒரு ஆட்சியிடம் அணு ஆயுதங்களும் பெரும் படையும் இருப்பதுதான் என்ன ஒரு முரண்.  அந்த முரணின் சில பரிமாணங்கள் புலனாக  இதைப் படியுங்கள்.


விடாத பனியிலும் மூடாத பள்ளிகள்

சமீபத்தில் அமெரிக்காவில் பல மாநிலங்களில் கடும் பனிப் பொழிவில் வாழ்வு ஸ்தம்பித்திருந்தது. வருடம் 10 அங்குலம் பனிப் பொழிவுக்கு மேல் பார்த்திராத இடங்களில் எல்லாம் 50 அங்குலம், அதாவது 4 அடிக்கு மேல் பனிப் பொழிவு. ஒரு அடி பொழிவிலேயே சாலைகளில் எளிதில் பயணம் மேற்கொள்ள முடியாது. வழக்கமாகப் பனி வருடாவருடம் பெய்யும் வட மாநிலங்களில், குறிப்பாக வடகிழக்கு, மத்திய வடக்கு மாநிலங்களில் பனியை எப்படிக் கையாள்வது என்பது பாரம்பரிய அறிவாலும், வரலாற்று அனுபவங்களாலும் நன்கு பயிலப்பட்ட பாடம். இந்தப் பகுதி மக்கள் ஜீரோ டிகிரி (ஃபாரன்ஹைட்) குளிரில் சகஜமாக உலாவிக் கொண்டிருப்பார். இந்த வட பகுதிகளில் பனிப்பொழிவைச் சாலைகளில் இருந்து ஓரம் தள்ளவும், இருப்பிடங்களில் குளிர் அதிகம் பாதிக்காமல் இருக்கும்படி உஷ்ணப்படுத்திக் கொள்ளவும் போதுமான பொறியியல் தொழில் நுட்பம் இவர்களுக்கு இருக்கிறது. ஆனால், அத்தகைய பாரம்பரியம் இல்லாத பகுதிகளில் இந்த வருடம் பனி பொழிந்த போது, அல்லது பாரம்பரியம் இருந்தாலும் வழக்கத்துக்கு மாறாக பன்மடங்கு அதிகமாகப் பனி பொழிந்த போது நிறைய அலுவலகங்கள் விடுப்பில் இருந்தன, பள்ளிகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா. ஆனால், நாடு தழுவிய பரீட்சைகளை ஒரு மாநிலம், இரண்டு மாநிலம் துன்பப்படுவதால் நிறுத்த மாட்டார்கள். அதே நேரம் பாடங்கள் நடத்தப்படாவிட்டால் மாணவர்கள் இப்பரீட்சைகளில் நன்கு தேறுவது கடினம். நன்கு தேறாவிட்டால் அடுத்த வருடம் கல்லூரி நுழைவு அதோகதி. எனவே இந்தக் கட்டாய விடுமுறையில் பள்ளிகள் ஒரு புதுமுறையில் பாடங்களை நடத்தினர். அது என்ன புதுமுறை? இண்டர்- நெட் வழியே வகுப்புகள் நடந்தன. அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று இக்கட்டுரை சொல்கிறது.