“மூணுமணிக்கே நாளை முழிக்கறதா இருக்கேன்.” என்று மணிவாசகம் சொன்னதை சாமி தமாஷாக எடுத்துக்கொண்டான்.
வேண்டுமென்றே ‘ஹாஹ்ஹா’ என்று சிரித்துவிட்டு, “பசிஃபிக் நேரத்துக்கா?” என்றான் கிண்டலாக. அப்போது நார்த் கரோலைனாவில் அவருக்குக் காலைஆறுமணி.
அவரும் விட்டுக்கொடுக்காமல், “நீ தெனம் நாலுமணிக்கே எழுந்திருக்கிற மிதப்பு, அதுதான் கேலிசெய்யறே,” என்றார்.
“நாளைக்கு எழுந்து காட்டறேன், பார்!”
அன்று ‘தாங்க்ஸ்-கிவிங்’ விடுமுறை. மாலைவிருந்தெல்லாம் முடிந்தபிறகு மணிவாசகம் சாமியை அழைத்துப்பேசினார். மறுநாள் வெள்ளிக்கிழமை கிறிஸ்மஸ் விற்பனையின் தொடக்கநாள் என்பது நினைவுக்குவர சாமி, “உனக்கு ‘சேல்’லே என்ன வாங்கணும்?” என்றான்.
“வாஷர்-ட்ரையர். ஒரு வாரத்துக்குள்ளே சொல்லிவச்சமாதிரி ரெண்டும் பணால். டிஷ்-வாஷர் இல்லாட்டி நாமே பாத்திரங்களை கழுவிக்கலாம். துணிகளை எப்படித் தோய்க்கிறது?”
“வாங்கறதுதான் வாங்கறே, முன்னாடி திறக்கற மெஷினா வாங்கு! தண்ணி குறைச்சலாத்தான் எடுத்துக்கும்னு சொல்றாங்க. நாங்ககூட ஆறுமாசத்துக்கு முன்னாடி ரெண்டும் புதுசா வாங்கினோம்.”
“நீ சொல்றமாதிரி மெஷினும், ட்ரையரும் ‘சீயர்ஸ்’லே ஆயிரத்திநூறு டாலர். நாளைகாலைலே மட்டும் அறுநூறு.”
“அந்த விலைக்குக் கடைலே இருக்கறது சீக்கிரமே வித்துப்போயிடும். நீ தீபாவளிமாதிரி எழுந்துபோனாத்தான் உண்டு.”
பேச்சின் திசையை மாற்றும் சிறுஇடைவெளி.
“செந்தில் வந்திருக்கான்.” என்றார் மணி.
“எப்போ வந்தான்?”
“போன சனியே வந்திட்டான்.”
கல்லூரியில் அவனுக்கு இரண்டாவது ஆண்டு. ‘தாங்க்ஸ்-கிவிங்’கின்போது வீட்டுக்கு வருகைதர வேண்டியதுதான். ஆனால் நான்குநாள் முன்னதாகவே எதற்கு வரவேண்டுமென்று சாமி கேட்க நினைத்தான்.
மணியே பதில் தந்தார். “இந்த ஆகஸ்ட்லே பாங்க் கணக்கு, க்ரெடிட் கார்ட் எல்லாம் அவன் பேருக்கே மாத்திட்டேன். டிக்கெட்டும் அவனே வாங்கிடறான். நான் எதிலியும் தலையிடறதில்லை.”
சாமி அவன் பங்குக்கு, “சூரனை அக்டோபர்லே நாங்களே போய்ப்பாத்தோம். கிறிஸ்மஸுக்குத்தான் வர்றதா இருக்கான்.” என்றான்.
விசாரிப்பில் அடுத்தது பெரியபையன். “ஆனந்த் எப்படி இருக்கான்?”
ஆனந்த் இந்தியாவில் பிறந்தவன். அவனுக்கு பத்துவயதானபோது மணிவாசகம் சென்னையிலிருந்து குடும்பத்தோடு குடிபெயர்ந்தார். ‘ஒரு குலம், ஒரு வாரிசு’ என்கிற கொள்கை இந்தியாவுக்குத்தான், யு.எஸ்.ஸுக்கல்ல என்பதை நிரூபிக்க இரண்டாண்டுகள் கழித்துப் பிறந்தவன் செந்தில். ஆனந்த் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் கம்ப்யுட்டர் சையன்ஸ் படித்தான். பாதியில் அவனுக்கு மனம் மாறிவிட்டது. நான்காண்டுகளில் பட்டப்படிப்பை முடிக்கவில்லை. உயிரியல் சம்பந்தப்பட்ட வகுப்புகள் எடுத்தான், ‘எம்காட்’டுக்குத் தயார்செய்தான். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்தில் சேர்ந்தான். நோயைத்தீர்க்கும் நல்லதொழில் என்று மணிவாசகம் மகிழ்ந்தார். எட்டாண்டுகளில் எம்.டி., பிஎச்.டி. முடித்தபிறகு ஷிகாகோவின் ‘வீட்டன் நினைவு மருந்தக’த்தில் பயிற்சி.
“அவனை வேலைலே ‘பிசி’யா வச்சுக்கிறாங்க. அதுதான் ‘தாங்க்ஸ்-கிவிங்’குக்குக்கூட வரலை.” என்றார்.
கடைசியில் விஜயாவைப்பற்றி ஒருவார்த்தை கேட்டுவிட்டு, “சரி, நீ போய்த் தூங்கு! நாளைக்கு சீக்கிரம் எழுந்திருக்கணும்.” என்று சாமி அவரைக் கிளப்பினான்.
மணிவாசகத்துடன் அவன் பேசியதை அறிந்த சரவணப்ரியா, “சத்யாவைப்பத்தி எதாவது சொன்னாரா?” என்றாள்.
“அவரா சொல்லலை, நானும் கேக்கலை.”
இரண்டு மாதங்களுக்குமுன் பேச்சுவாக்கில், “நாங்க பாக்கற பெண்களெல்லாம் ஆனந்துக்கு ஒத்துவரலைப்பா. உனக்கு யாரையாவது தெரிஞ்சா சொல்லேன்!” என்றார் மணிவாசகம்.
சாமி யோசித்தான். சரவணப்ரியாவின் தோழி தங்கமணியின் பெண்தான் ஆனந்துக்குப் பொருத்தமெனத் தோன்றியது.
“சத்யாவுக்கு ஆனந்தை அறிமுகம் செய்யலாமா? அவளும் இப்போ ஷிகாகோலேதானே இருக்கா.” என்றான்.
அவர்களைச் சேர்த்துவைப்பதில் சரவணப்ரியா சிறிதும் ஆர்வம் காட்டவில்லை.
“ஏன் மாட்டேன்னு சொல்றே?”
“சத்யாவை எனக்கு சின்னவயசிலிருந்தே தெரியும். அந்த அளவுக்கு ஆனந்தைத் தெரியாது. தெரிஞ்சதும் என் மதிப்புக்கு ஏத்ததா இல்லை.”
“நம்ம தலைமுறை வேறே, அவங்க தலைமுறை வேறே. எதிர்பார்ப்புகளும் ஒரேமாதிரி இருக்காது.”
“போனவருஷம் ‘ப்ரோ-லைன் பெய்ன்ட்டர்ஸ்’ நம்ம வீட்டை சரியா பெய்ன்ட் அடிக்கலை. அவங்க எப்படின்னு யாராவது விசாரிச்சா திருப்தியில்லைன்னுதானே சொல்லணும்?”
நியாயம்தான், இருந்தாலும் மணி கேட்டதற்காக எதாவதுசெய்ய சாமிக்கு ஆசை.
“நாம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணலியே. ஆனந்தை சத்யாவுக்கு அறிமுகம்செய்யப்போறோம், அவ்வளவுதான். அப்புறம் அவங்க பாடு,” என்று சாமி அவளை வற்புறுத்தினான்.
அரை, இல்லை அதற்கும் மிகக்குறைவான மனதுடன் சரவணப்ரியா ஒருவருக்கு இன்னொருவரின் விவரங்களை அனுப்பச் சம்மதித்தாள்.
சாமியிடம் வீராப்பாகப் பேசியதை மணியின் உள்மனம் மறக்கவில்லை. மூன்றுக்குப் பதினைந்து நிமிடங்கள் இருந்தபோதே விழிப்பு வந்துவிட்டது. கையை நீட்டி அலாரம் பாடாதபடி செய்தார். பொதுவாக நவம்பர் கடைசியில் நார்த் கரோலைனாவின் நடுப்பகுதியில் குளிர் அவ்வளவாக இராது. இந்தமுறை இரவு வெப்பநிலை இருபதுகளில். இப்படிப்பட்ட குளிரில் வெளியே செல்லத்தான்வேண்டுமா என்று முனகிய மனதை, ‘சும்மாகிட!’ என்று அதட்டிவிட்டு எழுந்தார். அவர் அசைந்ததில் விஜயாவுக்கும் தூக்கம் கலைந்தது.
கண்ணைத்திறக்காமலே, “பரவாயில்லை, தூங்குங்க! முழுவிலை குடுத்து வாங்கிட்டா போவுது. இப்போ போனாலும் கிடைக்கும்னு நிச்சயமில்லை. சிலபேர் நடுராத்ரிலேர்ந்து காத்திட்டிருப்பாங்க.” என்றாள்.
மணி மசியவில்லை. “நீ பாட்டுக்கு தூங்கு!” என்று தடிப்போர்வையை அவள்மேல் ஒதுக்கிவிட்டு எழுந்தார்.
சத்தமிடாமல் அடுத்த அறைக்குச்சென்று முதல்நாளே எடுத்துவைத்திருந்த உடைக்கு மாற்றிக்கொண்டு கீழிறங்கிவந்தார். காபி தயாரிக்க ஐந்து நிமிடம். அதை ஒருபெரிய கோப்பையில் எடுத்துக்கொண்டு கிளம்பினார். குடித்துமுடிக்கவும் ‘சௌத்பாய்ன்ட் மால்’ கண்ணில் படவும் சரியாக இருந்தது. கார்நிறுத்துமிடம் இவ்வளவு காலியாகப் பார்த்ததில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக உயரத்தில் எரிந்த விளக்குகளின் ஒளி தரையில் நீலவட்டங்களை விரித்தது. ‘சீயர்ஸ்’ அருகில் சென்றபோதுதான், நாலைந்துபேர் இருந்தால் அதிசயம் என்ற அலட்சியத்தோடு வந்தவருக்கு அதிர்ச்சி. ஐம்பது பேராவது வரிசையில். அதன் தொடக்கத்தில் சிலர் தரையில் தடிக்கம்பளம் விரித்து உட்கார்ந்திருந்தார்கள். ஒருவன் வயலினை மீட்டிப் பாடியதும் காதில் விழுந்தது. நம்பிக்கையிழந்து தலையை அசைத்தார்.
திரும்பிவிடலாமா?
‘தோல்வியை படுக்கையிலேயே ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். இவ்வளவுதூரம் வந்தாகிவிட்டது, போய்த்தான் பார்க்கலாம்.’ என்று காரிலிருந்து இறங்கினார்.
அவருக்கு சற்றுமுன் வந்துநின்ற காரில் கும்பல். அதில் வந்தவர்கள் ஒவ்வொருவராக இறங்கி ஒன்றுசேர்வதற்குள் கிடுகிடுவென நடந்து அவர்களைத்தாண்டி வரிசையின் முடிவுக்குச் சென்றார். கடைசியில் நின்றவன், “வா! வா! கூட்டமே கொண்டாட்டம்!” என்று ஏதோவிருந்துக்கு அழைப்பதுபோல் மணியைக் கைநீட்டி உற்சாகத்துடன் வரவேற்றான். அவன் குல்லாவிலிருந்து காலணிவரை எல்லாவற்றிலும் நார்த் கரோலைனா பல்கலைக்கழகத்தின் அடையாளம்.
“குட் மார்னிங்! மிஸ்டர் டார்ஹீல்!” என்றார். அவன் புன்னகைத்தான்.
மணி நின்ற சில நிமிடங்களுக்குள் வரிசை வேகமாக வளர்ந்ததில் அவருக்கொரு அல்பதிருப்தி.
முன்னாலிருந்தவன் முன்னேற்ற அரசியல் கொள்கைக்காரன் போல. “இன்று நாம் எல்லோருமே வீடற்ற தெருவாசிகள்.” என்றான்.
“முற்றிலும் உண்மை. அப்படி நினைத்தால் குளிரில்நிற்கும் கஷ்டம் தெரியாது.” என்று பலர் ஒத்துப்பாடினார்கள்.
மணியின் பின்னால் கும்பலாக வந்தவர்களில் ‘கிறிஸ்மஸ் கிறிஸ்த்துவுக்காக’ என்ற வாசகம் அச்சிட்ட சட்டைபோட்ட ஒருவன். “சாரா பாலினின் புத்தகம் பிரமாதம். ஒவ்வொரு இடதுசாரிக்காரனையும் படிக்கச்சொல்ல வேண்டும். அப்போதுதான் அவனுக்கு புத்திவரும்.” என்று சத்தமாகச் சொன்னான்.
முன்னாலிருந்தவன் ரகசியமாக மணியிடம், “முதலில் சாரா பாலினே படிக்கட்டும். அவள் கொள்ளைப் பணத்தை வாங்கிக்கொண்டு புத்தகத்தில் தன் பெயரைப்போட்டாலும் அதை எழுதியது வேறு யாரோதானே.” என்றான். பதிலுக்கு மணி சத்தமெழாமல் சிரித்தார்.
அரைமணி போனதும் மணிக்குக் குளிர் உறைத்தது. காற்றுவேறு லேசாக வீசியது. இடுப்புக்குமேல் நின்ற ஜாக்கெட் போதவில்லை. இன்னும் கொஞ்சம் நீண்ட தடியான கோட் அணிந்துவந்திருக்க வேண்டும். குளிரை மறக்க மற்றவர்களின் உரையாடல்களில் கவனம்செலுத்தினார்.
முன்னாலிருந்தவன் அவனுக்கும் முன்னால் நின்றவனிடம் பேச்சுக்கொடுத்தான்.
“என்ன வாங்கக் காத்திருக்கிறாய்?”
“லாப்டாப். ‘ப்ளு-ரே’ வைத்த சோனி நானூறு டாலர்தான். சாதாரணமாக இரண்டுமடங்காவது இருக்கும். நீ?”
“சாம்சங் நாப்பத்தியிரண்டு அங்குல எல்சிடி டிவி. இங்கே ஐநூறு டாலர். வேறொரிடத்தில் அந்தவிலைக்கு முப்பத்தேழுதான்.”
“முன்பெல்லாம் இந்தமாதிரி மின்-சாமான்கள் சீக்கிரம் விற்றுவிடும். இப்போது பொருளாதாரம் சரியில்லை. சென்ற ஆண்டு ஆறுமணிக்குமேல் நிதானமாகப் போனேன். கம்மிவிலைக்கே ஒரு நல்ல டிவி கிடைத்தது.” என்று ஒருவன் பழங்கதை பேசினான்.
முன்னவன் திரும்பி மணியைப் பார்த்தான்.
“முன்னால் திறக்கும் வாஷ்ரும் ட்ரையரும் எதிர்பார்த்து வந்தேன்.”
“வீட்டில் இரண்டுமூன்று டிவி இருந்தாலும் விலையின் சரிவைப் பார்த்து இன்னொன்று வாங்க ஆசை வரும். வாஷர் அப்படியில்லை. கெட்டுப்போனபிறகுதான் அடுத்ததை வாங்கத்தோன்றும். இந்த நேரம்பார்த்து எத்தனை பேருக்கு கைவிடும்? உனக்கு நிச்சயம் கிடைக்கும்.” என்று அவன் நம்பிக்கை கொடுத்தான்.
மூன்றாவதாக நின்றவனும், “ஒவ்வொரு கடையிலும் தள்ளுபடிவிலைக்கு ஆறுஜோடி இருக்குமென்று பேப்பரில் படித்தேன்.” என்று ஆதரவாக மொழிந்தான்.
அந்தவழியாக அவர்களைத் தாண்டி முன்னால்சென்ற இருவரை முன்னவன் பிடித்துக்கொண்டான்.
“நீங்கள் எப்போதிலிருந்து காத்திருக்கிறீர்கள்?”
“நான் நடுஇரவில் வந்தேன். இவன் அதற்கும் முன்னால்.” என்று ஒருவன் அடுத்தவனைக் காட்டினான்.
“எப்படி இந்தக்குளிரில் இத்தனை நேரம் நிற்க முடிந்தது?”
“இரண்டுபேராக வந்தோம். ஒருவர் அரைமணி இங்கே நிற்க, இன்னொரு ஆள் சூடான காரில். இப்படி மாற்றிமாற்றி. நாங்கள் போய் எங்கள் கூட்டாளிகளை காருக்கு அனுப்ப வேண்டும்.” என்று நகர்ந்தார்கள்.
ஏதோவொரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டுத்தான் வரிசை உருவாகியிருக்கிறது என்பதில் மணிக்கு ஒருமகிழ்ச்சி.
மணி நான்கு:முப்பது. இன்னும் அரைமணிதான்.
“என் பெண் விமானத்தைத் தவறவிட்டுவிட்டாள். நேற்றுகாலைதான் வந்தாள்.” என்று முன்னவன் உரையாடலை மறுபடி ஆரம்பித்தான்.
“என்ன செய்கிறாள்?”
“டென்வர் யுனிவெர்சிடியில் சீனியர்.”
“என் இரண்டாவது பையன் பாஸ்டனில். ஞாயிறு திரும்பிப்போகிறான்.”
“என்ன படிக்கிறான்?”
“அவன் கணக்கில் புலி. அவனுக்கு அபார ஞாபகசக்தி,” என்றார் மணி பெருமையாக. செந்திலைப்பற்றிப் பேசினால் அவர் குரல் மாறிவிடும். “கேம் தியரியில் பட்டம்வாங்குவானென எதிர்பார்க்கிறேன்.”
“என் பெண்ணின் தோழனும் கிட்டத்தட்ட அப்படித்தான். மூன்றுமாதம் முழுவேலையாக ‘ப்ளாக் ஜாக்’ விளையாடி அறுநூறு டாலர் சேர்த்துவிட்டான். அதைவைத்து கிறிஸ்மஸுக்கு இருவரும் கோஸ்டாரிகா போவதாக திட்டம்.”
‘கி.கி.க்காக’ காதில் செய்தி விழுந்துவிட்டது.
“இந்தத் தலைமுறைக்கு எதுசரி, எதுதப்பு என்று தெரிவதில்லை. சூதாட்டத்தில் ஜெயித்த பணத்தைவைத்து கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள்,” என்று ஆரம்பித்து, “கொலைபாதகமான கருச்சிதைவைக்கூட மிகச்சாதாரணமாக நினைக்கிறார்கள்.” என்பதில் முடித்தான்.
“இரண்டிற்கும் என்ன சம்பந்தம்? தீர்ப்பு வழங்குமுன் தப்பு எந்த சூழலில் நடந்ததென யோசிக்க வேண்டும். எல்லா தவறுகளும் குற்றங்களல்ல.” என்றான் மிஸ்டர் டார்ஹீல்.
“ரிலேடிவிடி ஃபிசிக்ஸில்தான். ஒழுக்கத்துக்குக் கிடையாது. வெட்டு ஒண்ணு, துண்டுரெண்டு. நல்லது வலதுபக்கம், கெட்டது இடதுபக்கம்.” என்று ‘கி.கி.க்காக’ கையை வீசி ஒன்றையொன்று தொடாதபடி அவற்றைக் கற்பனையாகப் பிரித்தான். அத்துடன் அவன் நிற்கவில்லை. “அரசாங்கப் பள்ளியிலிருந்து ப்ரார்த்தனையை எடுத்தது முதல் எல்லாம் குட்டிச்சுவர். பத்துக்கட்டளைகளை கண்ணில்படும் இடங்களில் கொட்டையாக எழுதிவைக்க வேண்டும். இந்த நாட்டில் ‘காமி’கள் (கம்யுனிஸ்ட்டை இழிவுபடுத்தும் சொல்) சுதந்திரமாக நடமாடும்வரை அது எங்கே நடக்கப்போகிறது?”
முன்னவனுக்குத் தன்னைக் ‘காமி’ என்று பின்னவன் குறிப்பிட்டதில் மகா எரிச்சல். “ ‘சோரம் போகாதீர்கள்!’ என்ற கட்டளையுடன் ’எதிராளியின் கன்னிப்பெண்களைப் போகத்துக்கு தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள்!’ என்பதையும் சேர்த்து எழுதச்சொல்!” என்று கத்திச்சொன்னான்.
சாதாரணமாகத் தொடங்கிய விவாதம் தவறான திசையில் திரும்பி தகராறு உருவாகும் நிலை. இருவருக்கும் நடுவில் மணி. அவரைப்பொறுத்தவரை இரண்டு பக்கத்திலும் நியாயமிருந்தது. பள்ளியில் மற்றவர்கள் கடனுக்காக திருக்குறள் படித்தபோது, மணி அதன் பொருளை நன்கறிந்து கற்றார். பல குறள்கள் இன்னும் மறக்காதது மட்டுமல்ல, அவற்றை வாழ்க்கையில் பின்பற்றுவதும் அவர் குறிக்கோள். அதனால், அவருடைய ஒழுக்க வரையறையிலும் பின்னவனைப்போல கறுப்பும் வெள்ளையும்தான், சாம்பல்நிறத்துக்கு இடமில்லை. அதே சமயத்தில், ஒழுக்கத்தை சாரா பாலின் போன்ற அரசியல்வாதிகளின் கைகளில் ஒப்படைக்க விரும்பாத முன்னவனின் கட்சியை ஆதரிப்பவர். இருவருக்கும் சமரசமாக என்னசொல்வதென்று தெரியவில்லை. நல்லவேளை, கடையின் கதவு திறந்து வெளிச்சத்தை சிந்தியபோது எழுந்த கரகோஷம் எல்லாவற்றையும் அமுக்கிவிட்டது.
ஐந்துமணிக்குப் பத்து நிமிடங்கள். ‘சீயர்ஸி’ன் சீருடையில் இருவர் வெளியே வந்தார்கள். ஒவ்வொருவருக்கும், ‘எது தேவை?’ என்று ஒருவன் கேட்க, இன்னொருவன் கையிலிருந்த கட்டிலிருந்து ஒரு அட்டையை எடுத்துக் கொடுக்க, வேலை துரிதமாக நடந்தது.
“42 அங்குல சாம்சங் டிவி.”
“ஆறும் கொடுத்தாகிவிட்டது. யாராவது மனம் மாறினால்தான் உனக்குக்கிடைக்கும்.” என்று ஒருமஞ்சள் அட்டையை நீட்டினார்கள். முன்னவன் மறுக்காமல் வாங்கிவைத்தான்.
“யார் வேண்டாமென்று சொல்லப்போகிறார்கள்? கடவுளைப் பழித்த உனக்கு நன்றாக வேண்டும்.” என்று மணிக்குப் பின்னால் ‘கி.கி.க்காக’வின் முணுமுணுப்பு.
அடுத்தது மணி. “உனக்கு?”
“வாஷர் அன் ட்ரையர்.”
“இதுதான் கடைசி.” பச்சை அட்டையை மணி வாங்கிக்கொண்டார். டபில்யு-6 என்று பெரிய எழுத்துக்கள் என்ன அழகு! அப்பாடா! மூன்றுமணிக்கு எழுந்துவந்து குளிரில் நின்றது வீணாகிவிடவில்லை.
பிறகு நடந்தது ஒருகதையின் ஆன்டி-க்ளைமாக்ஸ் போல. குளிரில் மரத்துப்போன கால்களை அசைத்து வரிசை நகர்ந்து உள்ளே சூடான கடைக்குள் நுழைந்து சிதறியது. மணி வீட்டு இயந்திரங்கள் பக்கம் சென்றார். அவர்முறை வந்ததும் சிவப்புக்குல்லா அணிந்த பணியாள் அவருடைய பச்சை அட்டையையும் கடனட்டையையும் எடுத்துக்கொண்டு மானிடரில் எதையோ தேடினான்.
“முகவரி, 9 ஐவி சர்க்கில், சரியா?”
“அதுதான்.”
“அடுத்த புதன்தான் வீட்டுக்குக் கொண்டுதர முடியும்.”
“பரவாயில்லை.” அதுவரை சமாளிக்கலாம். தேவைப்பட்டால் அடுத்த வீட்டில் உதவிகேட்கிறது.
“காலை எட்டிலிருந்து பன்னிரண்டுமணிக்குள் எப்போது வேண்டுமானாலும் வருவார்கள். வருவதற்கு அரைமணி முன்னதாக இந்த எண்ணில் கூப்பிடுவார்கள்.”
“செல்பேசி எப்போதும் என்னிடம்.”
சந்தோஷத்தில் மணிக்கு உடனே வீடுதிரும்ப மனமில்லை. திறந்திருந்த மற்ற கடைகளுக்குள் புகுந்து வெளிப்பட்டார். எங்கும் தூக்கம் முழுவதும் கலையாத கும்பல். எல்லா வயதிலும் தேசிகள். காலை பத்துமணிக்கு முன்னால் உலகத்தைப் பார்த்திராத, பெற்றோருக்குப் பக்கத்தில் நடப்பது அவமானமெனக் கருதிய ‘டீன்’கள்கூட அவசர ஒப்பனையோடு திரிந்தார்கள். எல்லாக் கைகளிலும் பைகள். முகத்தில் ஒரேமகிழ்ச்சி. கிறிஸ்மஸ் விற்பனையென்ற பெயரே தவிர யாரும் அவரை நினைத்ததாகத் தெரியவில்லை. ‘கிறிஸ்மஸ் க்றிஸ்த்துவுக்காக’ என்று நினைவூட்டுவது அவசியம்தான்.
‘ஜேசிபென்னி’ கடையில் ஆயிரம் டாலர் மதிப்புள்ள இரட்டைச்சர பவழமாலை அப்போதுமட்டும் நானூற்றிப்பத்தொன்பது டாலர், தொண்ணூற்றி ஒன்பது சென்ட். விஜயா விளம்பரத்தில் அதைப்பார்த்து ஆசைப்பட்டதாக நினைவு, எடுத்துக்கொண்டார். செந்திலுக்கு என்ன வாங்கலாம்? சமீபத்தில் அவன் எதுவும் கேட்கவில்லை. இருந்தாலும், அவனுக்குப் பயன்படுமென இருநூறு டாலரில் ஒரு ஐ-பாட் டாகிங் ஸ்டேஷன்.
சாமியைக் கூப்பிட்டார். அவனும் அவர்கள் வீட்டுக்கருகில் ஒரு ‘மாலி’ல்.
“நீ சொன்னமாதிரி வாஷிங் மெஷின் வாங்கிட்டேன்.” என்றார் பெருமையாக.
“வெரிகுட். ‘சீயர்ஸ்’லேதானே!”
“ஆமா, அங்கே இருந்ததிலே எனக்குத்தான் கடைசி.”
“அதிருஷ்டம்தான். இன்னிக்கு நீ விஜயா முகத்திலேதான் முழிச்சிருக்கணும்.” என்று பதிய கண்டுபிடிப்புபோல் சாமி சொன்னான்.
மணி மனம்விட்டுச் சிரித்தார். “நீ என்ன வாங்கினே?”
“எங்கே வாங்கறது? ப்ரியா நிறைய பைகளை பாத்துக்கோன்னு குடுத்துட்டுப் போயிருக்கா. அதுகளுக்கு நான்தான் காவல்.”
விஜயா குளித்தபோது வெளிப்பட்ட சத்தத்தில் செந்தில் எழுந்தான். அவன் சமையலறைக்கு வந்தபோது மணி மதிய சாப்பாட்டிற்குத் திட்டமிடும் நேரம்.
“என்ன சாப்பிடறே?”
“நேற்று டேவிடுடன் ரெண்டுமணி வரை அரட்டை. அதனால் தலைவலி.” என்று தலையைக் கையில்தாங்கி சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தான்.
“முதல்லே காபி குடிக்கிறியா?”
“சரி, கொடு!”
மணி பால்குறைவான காபி கலந்து அவன்முன் வைத்தார். அவன் எதையோ யோசித்துக்கொண்டு ஒவ்வொரு வாயாகக் குடித்தபோது பக்கத்தில் அமர்ந்தார். அவனிடம் எதை எப்படிக் கேட்பதென்று தெரியவில்லை.
“உனக்கு ஒன்பதுமணி முன்னதாகவே இன்றுநான் எழுந்துவிட்டேன்.”
“என்ன விசேஷம்?”
வாஷர் ட்ரையர் வாங்கச் சென்றதைச் சொன்னார்.
“உனக்கொரு ஐ-பாட் டாக்கிங் ஸ்டேஷன் வாங்கினேன். திரும்பிப்போகும்போது எடுத்துச்செல்!”
“தாங்க்ஸ், டாட்!”
சிறிதுநேர மௌனம். காபி குடித்துமுடித்ததும் செந்தில், “வாஷர்-ட்ரையர் எவ்வளவு?” என்றான்.
“அறுநூறு டாலர்.”
“அவ்வளவுதானா?”
“பொதுவாக இரண்டும் சேர்த்து ஆயிரத்திநூறு. ‘ப்ளாக் ஃப்ரைடே’க்காக முதலில் வருகிற ஆறுபேருக்கு மட்டும் ஐநூறு டாலர் குறைவு. நான் ஆறாவது ஆள்.”
“உனக்கு அதிருஷ்ட தினம்தான்.”
“அப்படியே அம்மாவுக்கு ஒருமாலை வாங்கினேன். கிறிஸ்மஸுக்காக.”
“வாஷர்-ட்ரையர், மாலை இரண்டுக்கும் பணம் கொடுக்கிறேன். நான் வாங்கியதாக இருக்கட்டும்.”
“நீ ஏன்?”
“அம்மாவும் நீயும் எனக்காக எவ்வளவோ செலவு செய்கிறீர்கள். நான் திருப்பிச்செய்ய வேண்டாமா?”
“உன்னிடம் ஏது அவ்வளவு பணம்? நீ கல்லூரி மாணவன் தானே.”
விஜயா வரும் சத்தம்கேட்டதும் பேச்சு நின்றது.
“அப்பாக்கும் புள்ளைக்கும் நடுவிலே என்ன ரகசியம்?” என்று அவள் அவர்களைச் சந்தேகமாகப் பார்த்தாள்.
முந்தையநாள் சீக்கிரம் எழுந்ததாலோ என்னவோ சனிகாலையும் மணிவாசகம் மூன்றுமணிக்கெல்லாம் விழித்துக்கொண்டார். மறுபடி தூக்கம்பிடிக்கவில்லை. காரணம் உடனே தெரியவந்தது. செந்திலைப்பற்றிய கவலை. வீட்டிற்கு வந்ததிலிருந்து அவனுடைய அறையிலே அடைந்துகிடக்கிறான். முகத்தில் தீவிரமான சிந்தனையின் கோடுகள். அவனை ஏதோ அரிக்கிறது. அதை அவரிடம் அவன் சொல்ல விரும்புவதாகவும் தோன்றியது. ஆனந்த் அம்மாவின் பிள்ளை. இப்போது எப்படியோ தெரியாது, சிறுவயதில் எதாவது காரியம் ஆகவேண்டுமென்றால் அவளிடம்தான் நைசாகக் கேட்பான். அதுபோல செந்திலும் அப்பாவுடன்தான் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்வான். அதில் அம்மாவுக்கு இடமில்லை. ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை பார்க்க மிக அழகாக இருக்கிறாள் என்று மணியிடம்தான் ரகசியமாகத் தெரிவித்தான். இங்கே பிறந்ததால் அவனை வளர்த்ததில் மணிக்கு நிறைய பங்குண்டு. சனிக்கிழமைகளில் விஜயா வேலைக்குச் செல்ல நேரிட்டபோதெல்லாம் அவனுடன் நேரம் செலவழித்திருக்கிறார். அதனால் வந்த நெருக்கம்.
செந்தில் சொல்லப்போவது எதுவாக இருக்கும்? அவனுக்கு பெண்தோழி இருப்பது ஏற்கனவே தெரிந்ததுதான். அவன் எல்லாப்பாடங்களையும் நன்றாகச் செய்கிறான். ஆடம்பரச்செலவு அவன் அகராதியில் இருந்ததில்லை. விவாதிக்க வேறென்ன இருக்கிறது? எதுவானாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவன் எழுந்ததும் விஜயா இல்லாத சமயத்தில் அவனை வாட்டும் பிரச்சினை எதுவென்று கேட்கத் தீர்மானித்தார். பிறகு, அரைமணித் தூக்கம் கிடைத்தது.
ஆனந்துக்கு பெண் தேடி விஜயா சலித்துவிட்டாள். அவனுக்குப் பிடித்த மாதிரி பெண் இனிமேல் பிறந்தால்தான் உண்டு. இங்கேயே பிறந்து வளர்ந்த பையன்களாட்டம் இந்த ஊர்ப்பெண்களை அவனாகத் தேடிக்கொண்டாலும் தேவலை. (அருணின் வெள்ளை மனைவி எவ்வளவு சமர்த்து!) அதையும் செய்ய அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை. சரவணப்ரியா காட்டிக்கொடுத்த இடமாவது தகையவேண்டுமென்ற ஆசை. எல்லாம் ராஜப்பொருத்தம். பெண்ணுக்கு முப்பதாகவில்லை. சராசரிக்கும் அதிகமான அழகு, தெளிவான முகம். பரதநாட்டியம் கற்றிருக்கிறாள். சரவணப்ரியா சொன்னதிலிருந்து பழகுவதற்கு மிக இனியவளெனத் தெரிகிறது. எம்.டி. படித்து குழந்தைகள் மருத்துவத்தில் ‘ரெஸிடென்ஸி’ முடிக்கப்போகிறாள். இருவருக்கும் ஒரேதொழில், ஒத்துப்போய்விடும். சத்யாவைக் கூப்பிட்டாயா, அவள் எப்படி என்று கேட்டபோதெல்லாம் ஆனந்த் பிடிகொடுத்துப் பேசவில்லை. அம்மாவிடம் சொல்ல கூச்சமாக இருக்கலாம். சத்யாவையே அழைத்துக் கேட்டால் போகிறது. ஒத்துவரவில்லையென்றால் நேரடியாகச் சொல்லிவிட்டுப் போகிறாள்.
காலை பத்துமணிக்குமேல் சத்யாவை அழைத்தாள்.
“ஹாய், சத்யா! நான் விஜயா, ஆனந்தின் அம்மா.”
“ஹாய், மிசஸ் வாசகம்!”
“தாங்க்ஸ்-கிவிங் எப்படிச் சென்றது?
“மிக நன்றாக. இந்தவாரம் முழுவதும் என் அக்கா வீட்டில். அவள் குழந்தைகளோடு ஒரே கும்மாளம்.”
“ஐ’ம் சாரி. உன்னால் இப்போது பேசமுடியுமா?”
“தாராளமாக. நான் தனியாகத்தான் இருக்கிறேன். மற்றவர்கள் கடைக்குப் போயிருக்கிறார்கள்.”
எப்படி பேச்சைத் தொடர்வதென்று விஜயா யோசித்தபோதே,
“ஆனந்துக்கும் எனக்கும் ஒத்துப்போகும்னு தோணலை.” என்றாள் சத்யா. அவளுக்குக் கொஞ்சம் தமிழ் பேசத்தெரியும் போல. ஆங்கிலத்துக்கு நடுவில் கொச்சைத்தமிழையும் புகுத்தினாள்.
ஏமாற்றத்தை மறைத்து, “ஏம்மா அப்படி சொல்றே?” என்றாள் விஜயா.
“ஆனந்த் நிரந்தர உறவுக்குத் தயாராக இருப்பதாக நான் நினைக்கவில்லை.”
அவன் என்ன சின்னக்குழந்தையா, ஜனவரி வந்தால் முப்பத்திமூன்று. இப்போது தயாராக இல்லையென்றால் வேறெப்போது? இன்னும் பத்துவருஷம் கழித்தா?
“ரெண்டு மாசத்துக்கு முன்னாலே, ப்ரியா ஆன்ட்டி ‘ரெகமன்ட்’ செஞ்சாங்களேன்னு ஆனந்த்தைக் கூப்பிட்டு ஒரு மெசேஜ் வச்சேன். அவன் திருப்பிக்கூப்பிடலை.”
“அவன் வேலைலே ரொம்ப பிஸியா இருந்திருப்பான்.” ஒருடாக்டருக்கு இன்னொரு டாக்டரைத் தெரியாதா என்ன?
“அப்புறம், அவன் இருக்குற ‘வீட்டன் மெமோரியல் ஹாஸ்பிடல்’லே எனக்கு ஒருமாசம் ரொடேஷன் வந்தது.”
“அங்கே அவனோட நேர்லே பழகினியா?” என்ற குரலில் ஏகப்பட்ட ஆவல். “அவன் ரொம்ப புத்திசாலி. மூளை சம்பந்தப்பட்ட வியாதிகளை எப்படி கண்டுபிடிக்கறதுன்னு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் எழுதிட்டிருக்கான். முடிஞ்சதும் அதை விக்கறதுக்கு சொந்தமா ஒருகம்பெனி தொடங்கப்போறான்.” என்றாள் பெருமையாக.
சத்யா அந்த விவரங்களில் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. நீண்டநேரம் யோசித்துவிட்டு, “உங்கள் உணர்ச்சிகளை நோகடிக்க வேண்டாமென்று பார்க்கிறேன்.” என்றாள் சாதுர்யமாக.
“பரவாயில்லை, சொல்லுமா!”
“நிச்சயமாவா?”
எதற்கிந்த பீடிகை என்று விஜயாவுக்குப் புரியவில்லை. ‘ஆனந்தைப் பிடிக்கவில்லையென்று சொல்லிவிட்டுப்போயேன்! உலகத்தில் என் பையனுக்கு வேறு பெண்ணா இல்லை?’
“ஆனந்த் ‘உமனைசர்’னு யாரோ சொன்னாங்க.” என்றாள் நிதானமாக.
விஜயாவுக்கு அது புதியசெய்தி. மேலே பேசத்தோன்றவில்லை. சத்யா ‘பை’ சொல்லிவைத்துவிடுவாளென நினைத்தபோது அவள் தொடர்ந்தாள்.
“பழக ஆரம்பிச்ச ஒருமாசத்திலே தெரிஞ்சிடிச்சி. கூட வேலைசெய்யற பெண்களைத்தவிர ‘சிங்கிள்ஸ்-லைன்’லே கேர்ல்ஸ் பிடிக்கிறான்.”
அதிர்ச்சியை மறைத்து, ‘உனக்குப் புண்ணியமா போகும். நீ கல்யாணம் செஞ்சுட்டு அவனைத் திருத்தேன்.’ என்று விஜயா சொல்லவந்தது அவசியமில்லாமல் போய்விட்டது.
“இங்கே ஹியுஸ்டனில் என் அக்கா ஒருவனை அறிமுகம் செய்துவைத்தாள். அவனுடன் வெளியேபோக ஆரம்பித்திருக்கிறேன்.”
“குட்லக்!”
“தாங்க்ஸ். நான் ரொம்பப் பேசிட்டேன், இல்லை? சாரி, மிசஸ் வாசகம்!” என்றாள் சத்யா பாடுவதுபோல். அந்தக்குரலின் இனிமை விஜயாவை என்னவோ செய்தது.
“நான் உன்கிட்டேர்ந்து நிறைய தெரிஞ்சுகிட்டேன், சத்யா! நான்தான் தாங்க்ஸ் சொல்லணும்.”
செந்தில் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான். முந்தைய இரவு டேவிடுடன் சினிமா பார்த்துவிட்டு எப்போது வீடு திரும்பினானென்று தெரியாது. அவன் எழுந்துவருவதற்குமுன், விஜயா கணவனிடம் விஷயத்தை உடைத்துவிடத் துடித்தாள். அவனுக்கெதற்கு அண்ணனின் வண்டவாளம் தெரிய வேண்டும்? சங்கடமான விஷயத்தை எப்படிச் சொல்வதென்று யோசித்தாள். பார்க்க என்ன இருக்கிறதென தொலைக்காட்சியில் சான்னல்களை மாற்றிக்கொண்டிருந்த மணியிடம், “ம்ம். நம்ம தப்புகள் மட்டுமில்லை, நம்ம குழந்தைகள் தப்பும் மத்தவங்க சொல்லித்தான் நமக்குத் தெரியுது.” என்று ஆரம்பித்தாள்.
“என்ன, திடீர்னு இந்த ஞானோதயம்!” என்று அவள் பக்கம் திரும்பினார்.
“ஆனந்த் பள்ளிக்கூடத்தை முடிக்கறதுக்கு முன்னாடி எல்லாருமா இந்தியாவுக்குப் போனோமே, ஞாபகமிருக்கா? அப்போ அவனுக்குப் பதினேழுவயசு.”
“அதுக்கென்ன இப்போ?”
“அங்கே, உங்க உறவுக்கார பெண்கள், ஆனந்த் ரொம்ப ‘க்ளோஸா’ பழகறான்னு சொன்னாங்களே.” என்று அவர் நினைவுகளைக் கிளறினாள்.
“நீ கூட, இந்த நவீனயுகத்திலே இத்தனை கட்டுப்பெட்டியா இருக்காங்களேன்னு அவங்களைப் பழிச்சியே.” என்று மணி அவளை வம்புக்கு இழுத்தார். தொலைக்காட்சி பார்ப்பதைவிட அது சுவாரசியமாக இருந்தது.
“உங்க வீட்டுக்காரங்களோட நல்ல குணங்களை நான் சொன்னது மறந்துடும். இதுமட்டும் நல்லா ஞாபகமிருக்கு.” என்று விஜயா தலையைமட்டும் ஆட்டினாள்.
சமாதானமாகப் போக, “சின்ன வயசிலே கல்மிஷமில்லாம ‘ஃப்ரீ’யா பழகறது தப்பான்னு நீ கேட்டதா ஞாபகம்.” என்றார் மணி.
அவரெதிரில் வந்து அமர்ந்த விஜயா, “நான் கவனிக்காதது அந்தப்பெண்கள் கண்ணுலே பட்டிருக்கு.” என்றாள்.
“புரியும்படி சொல்லேன்.”
“அங்கே ஒருத்தி, ‘ஆனந்த் என் இடுப்பை தொட்டுத்தொட்டுப் பேசறது எனக்குப் பிடிக்கலை.’ன்னு சொன்னா. கூடத்திலே கும்பலா படுக்கறப்போ தூக்கத்திலே என்பெண் மேலே வேணும்னே உன்பையன் கைபோடறான்னு இன்னொருத்தி கம்ப்ளெயின்ட்.”
மணிக்கு அவள் என்ன சொல்லவருகிறாள் என்பதில் சிறிதளவு புரிந்தது. மிச்சத்தை சத்யாவின் வார்த்தைகளால் விஜயா நிரப்பினாள்.
“நீங்க ஆரம்பத்திலியே அவனைக் கவனிச்சிருக்கணும்.” என்று கடைசியில் பழி மணியின் தலைமேல் விழுந்தது.
“நானா?”
“ஆமா, நீங்கதான் சொல்லியிருக்கணும். என்னாலே இந்த விஷயத்தைப் பையனோட பேசமுடியுமா? நான் எத்தனைவாட்டி அவன்கிட்டே பெண்களைப்பத்திப் பேசுங்கன்னு சொன்னேன். நீங்க காதிலியே போட்டுக்கலை. எல்லாம் ‘ஸ்கூல் செக்ஸ் எஜுகேஷன்’லே விவரமா கத்துத்தராங்கன்னு தட்டிக்கழிச்சிட்டீங்க. இப்போ அவஸ்தைப்படறோம்.”
பொதுவாக விஜயாவின் குறைசொல்லும் குரலின் தொனி மணிக்கு எரிச்சலை உண்டாக்கும். ஆனால், இப்போது அவருக்கு நிஜமாகவே குற்ற உணர்வு. மௌனம் சாதித்தார். தந்தைக்குரிய கடமையில் அவர் தவறிவிட்டார். வரைவிலாத மகளிர் (promiscuous women) நரகத்துக்கு அழைத்துச்செல்வார்கள் என்பதை அறிவுறுத்த மறந்தார்.
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
அன்பு கலவாத உடலுறவு விபசாரமென ஆனந்த் உணரவில்லையென்றால் அதற்கு அவரும் பொறுப்பு.
“ப்ரியா காட்டின பொண்ணும் ஆனந்தை வேண்டாம்னு சொல்லிட்டா. அவன் எப்போ கல்யாணம் செஞ்சுப்பான்னு தெரியலை.” என்று மணி சாமியிடம் முறையிட்டார்.
அவருடைய வருத்தத்தின் காரணத்தை சாமி சரியாகப் புரிந்துகொள்ளாமல், “இந்த வயசிலே மத்தவங்கமாதிரி பேரக்குழந்தையைக் கொஞ்சலியேன்னு இருக்கா? எங்களைப்பார்! நாங்களும் அதுக்கு இன்னும் நாலைஞ்சு வருஷமாவது காத்திருக்கணும்.” என்றான்.
“அதை விட்டுத்தள்ளு, சாமி! அதைவிட சீரியஸான விஷயம்.”
ஆனந்தைப்பற்றி அவர் சொன்னதைக் கேட்டபோது சாமிக்கு, ‘பால் சும்மா கிடைக்கும்போது மாடு எதற்கு வைத்துக்கொள்ள வேண்டும்?’ என்ற புதுமொழி நினைவுக்கு வந்தது. பால் என்பதற்கு செக்ஸ் என்று அர்த்தம்செய்தால் இன்னும் பொருத்தம்.
“அமெரிக்காவில் இப்போ பலபேர் இப்படித்தான் இருக்காங்க. காலத்தின் கோலம்.” என்று சாமி சமாதானம்சொன்னான்.
அவர் கேட்கவில்லை. “காலத்துமேலே ஏன் பழியைப் போடறே? எல்லாக்காலத்திலியும் காமத்துக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாதவங்க இருந்திருக்காங்க. இப்பவும் ஒழுங்கா வாழ்க்கை நடத்தறவங்க இருக்காங்க. நமக்குத் தெரிஞ்சு அம்பி இல்லையா? இந்தியாலே போய் அம்மாவும் பாட்டியும் பாத்த பெண்ணைக் கட்டியிருக்கான். என்ன குறைஞ்சுபோயிட்டான்? அருணை எடுத்துக்கோ! அவனுக்கும் ஆனந்த் வயசுதான், அவனுமொரு டாக்டர்தான். நல்லபடியா அமெரிக்க பெண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டு ரெண்டு குழந்தைகளோட சந்தோஷமாத்தானே இருக்கான்? அவங்க மாதிரி ஆனந்த் இருக்கக்கூடாதா?”
சாமி பதில்சொல்லமுடியாமல் திணறினான்.
“கல்யாணம் செய்ய இஷ்டமில்லைன்னா தனியா இருந்துக்கறது. பெண்களையே பிடிக்கலையா, ஒரு ஆணுடன் விசுவாசமான வாழ்க்கை நடத்து! ஆனா, இந்தமாதிரி கன்னாபின்னான்னு பலபெண்களோட பழகறது எந்த நியாயத்திலும் சேர்த்தி இல்லை.”
“அந்தப்பெண்களும் ஒண்ணும் கண்ணகி இல்லை. ‘செக்ஸ் அன் சிட்டி’லே வர்றமாதிரி இன்னைக்கு இவன், நாளைக்கு இன்னொருத்தன்னு போறவங்க.”
“அப்படியே அந்தப்பெண்களுக்குத்தான் விவஸ்தை இல்லேன்னா இவனுக்கு புத்தி எங்கே போச்சு?” என்று மணி சத்தமிட்டார்.
அரைநிமிட மௌனத்தில் கோபம் சிறிது ஆறியதும், ஆனந்த் இந்தியாவில் நடந்துகொண்டதைச் சொன்னார்.
“நான் அப்பவே அறிவுரை குடுத்திருக்கணும்.”
“அதுக்கு பலன் கிடைச்சிருக்கும்னு நிச்சயமில்லை. நாம சொல்றதைவிட மீடியாசொல்றதைத்தான் குழந்தைகள் அதிகமா நம்பறாங்க. தமிழ் சினிமாலே கதாநாயகன் ஊர்சுத்துவான், வில்லன்களோட சண்டைபோடுவான், பரீட்சைக்குப் படிக்கமாட்டான். ஆனா ரிசல்ட் வரும்போது முதலாவதா பாஸ் பண்ணுவான். அதுபோல, இங்கே டிவியாகட்டும், ஹாலிவுட் ஆகட்டும், ஆண்களும் பெண்களும் பாதுகாப்பு இல்லாம சகட்டுமேனிக்கு நடந்துப்பாங்க. சந்தோஷப்படுவாங்க. ஆனா யாருக்கும் எய்ட்ஸ் தொத்திக்காது. எந்த பெண்ணுக்கும் அபார்ஷன் அவசியமிருக்காது. பொறுப்பில்லாம இப்போதைக்கு சந்தோஷமா நடந்துக்கோன்னு அதுகள் சொல்றதுதான் அவங்களுக்கு வேதவாக்கு.”
“சரி, பழசெல்லாம் தொலையட்டும். இப்போ நான் என்ன செய்யணும்னு சொல்றே?” என்று மணி இறங்கிவந்தார்.
“ஒண்ணுமில்லை.”
“அப்படின்னா…”
“ப்ரியா அப்பவே மறைமுகமா சொன்னா. நான்தான் கேக்கலை. நீங்களா அவனுக்குப் பெண் தேடாதீங்க! பழகற பெண்கள்லே ஒருத்தியை அவனுக்குப் பிடிச்சிடும். ரெண்டுபேரும் ஏதோவொரு விதத்திலே ஒத்துப்போயிடுவாங்க. கதை முடிஞ்சுது.”
“அவ்வளவுதானா?”
“அதுக்குமேலே நீ கவலைப்பட்டு ஒண்ணும் நடக்கப்போறதில்லை.”
“செந்தில்! எப்போ உனக்கு ஃப்ளைட்?”
“பன்னிரண்டு மணிக்கு. போகும்வழியில் டேவிடைப் பார்த்துவிட்டுப் போகவேண்டும். அரைமணி முன்னதாகக் கிளம்பமுடியுமா?”
விஜயா, “அவ்வளவு சீக்கிரம் என்னாலே ‘ரெடி’யாகமுடியாது. நீங்க போயிட்டுவாங்க!” என்றாள் மணியிடம்.
ஞாயிறு காலை ஒன்பதரைமணிக்கே மணிவாசகம் செந்திலுடன் கிளம்பினார். “இங்கே தேவைப்படாது, ஆனா பாஸ்டனில் இறங்கினதும் குளிரும்.” என்று அவனுடைய தடிகோட்டை ஞாபகமாக எடுத்துக்கொடுத்தார்.
வீட்டிலிருந்து சிறிதுதூரம் சென்றதும் செந்தில், “உன்னுடன் கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும், டாட்!” என்றான். ஒருநாளாக ஆனந்தைப்பற்றிய கவலையில் அவர் செந்திலை மறந்திருந்தார். இப்போது சின்னவனின் பிரச்சினையைக் கவனிக்க வேண்டும்.
மணி ஆர்டியு விமானநிலையத்தில் காரை நிறுத்தினார். செந்தில் டெல்டாவில் பெட்டியைக் கொடுத்து விமானத்தின் நுழைவுஅட்டையை வாங்கிக்கொண்டான். ஞாயிறுகாலை என்பதால் காலியான பெஞ்ச்சுகள் பல. நடமாட்டமில்லாத இடத்திலிருந்த ஒன்றில் அமர்ந்தார்கள். அவனே பேச்சை ஆரம்பிக்கட்டுமென மணி காத்திருந்தார்.
“டாட்! நான் சொல்லப்போவது அதிர்ச்சி தரலாம். நிதானமாக யோசித்தால் நான் செய்வது சரியென்று தெரியும்.”
எப்படிப்பட்ட முன்னுரை! அதுவும், இருபது வயதைத்தாண்டாத சிறுவனிடமிருந்து. செந்திலை மணி உற்றுப்பார்த்தார். இந்தியாவில் இருபதுவயதின்போது அவருக்கிருந்த சிறுவனின் தோற்றம் அவனிடமில்லை. விமானப்பயணத்திற்காக சவரம்செய்து, நன்றாகக் குளித்துவிட்டு, தலையைப் படியவாரி, சீரான உடையிலிருந்தான். முகத்தில் முதிர்ச்சியையும், உடலில் முழுவளர்ச்சியையும் கண்டார். அவர் பிஎச்.டி. வரை வீட்டிலிருந்து படித்தார். பள்ளிப்படிப்பை முடித்ததுமே அவன் கல்லூரியில் தங்கச் சென்றுவிட்டான். அவனுடைய தோற்றம் அதனால் வந்ததாக இருக்குமோ?
“எதிர்காலத்தில் என்னசெய்வதென்று யோசிக்கத்தான் சென்றவாரமே வந்தேன். நன்றாக சிந்தித்தபிறகுதான் ஒருமுடிவெடுத்தேன்” என்று நிறுத்தினான். பிறகு, வேகமாக, “இந்த செமிஸ்டரோடு படிப்பை நிறுத்தப்போகிறேன்.” என்றான்.
“ஒரேயடியாக இல்லை, கொஞ்சகாலத்திற்கு.” என்பதையும் சேர்த்தான்.
இரண்டுநாட்களில் மணிக்கு இது இரண்டாவது அதிர்ச்சிதரும் செய்தி, அதனால் கலவரப்படவில்லை. “வேறென்ன செய்யப்போகிறாய்?” என்றார் நிதானமாக.
“வாஷர்-ட்ரையர், அம்மாவின் மாலை இரண்டுக்கும் நான் பணம் தந்தேனே. எப்படியென்று நீ ஆச்சரியப்பட்டிருக்கலாம்.”
“ஸ்டாக் மார்க்கெட்டில் பணம்பண்ணினாயா?”
“இப்போதிருக்கும் பொருளாதார நிலமையில் எங்கே முடியும்? போக்கர் (Poker) விளையாட்டில் வந்தது.” என்றான் செந்தில்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் இன்டெர்நெட் போக்கர் பிரபலமானது மணிவாசகத்திற்குத் தெரியும். அதிலும், கல்லூரி மாணவர்கள் அல்கஹாலுக்கு அடுத்ததாக அதற்கு அடிமையாகிறார்கள் என்பதையும் அறிவார். ஆனந்தைத்தான் சரியான சமயத்தில் கவனியாது தவறவிட்டுவிட்டார். செந்திலையாவது காப்பாற்ற முடிகிறதா பார்க்கலாம்.
“உன் படிப்பிற்கு நான்தான் பணம்தருகிறேனே. சந்தோஷத்துக்காக மட்டும் ஆடேன்!” என்றார்.
“அப்படித்தான் பழக்கம் ஆரம்பித்தது. அதில் என்ன த்ரில்? குழந்தைகள் பொம்மைக்காரைத் தள்ளிவிளையாடுவதுபோல். ஜெயிக்கும் டாலர் வெறும்பொருள் மட்டுமல்ல, திறமையான விளையாட்டின் வெற்றிக்குக்கிடைக்கும் பரிசு. இந்த செப்டம்பரிலிருந்து நிஜமான பணத்திற்கு ஆடத்தொடங்கினேன். முன்பே உன்னிடம் சொல்லியிருக்கலாம். கனமான விஷயத்தை நேரில் பார்த்துப்பேசுவதுதான் சரியெனத் தோன்றியது.”
அதை அவர் ஜீரணிக்க நேரம் தந்துவிட்டு, “ஜனவரியில் லாஸ்வேகாஸ் போவது நல்லதென நினைக்கிறேன். அங்கேதான் ‘வோர்ல்ட் சீரீஸ் ஆஃப் போக்கர்’. அதற்குப் போட்டியிட இன்னும் பணம் சேர்க்கப்போகிறேன்.”
“மூன்றாவது செமிஸ்டர் முடியப்போகிறது. இன்னும் ஐந்துதான் பாக்கி. படித்துக்கொண்டே ஒவ்வொருநாளும் இரண்டுமணி போகருக்கு வைத்துக்கொள்ளேன்!” என்று மணி சொல்லிப்பார்த்தார். அவருக்கே அந்த அறிவுரை திருப்திதரவில்லை.
“அப்படி விளையாடினால் பணம்தான் கைவிட்டுப்போகும். எந்த முயற்சியிலும் முழுமனதையும் ஈடுபடுத்த வேண்டும். வெறும் காலைமட்டும் குளத்தில் நனைத்தால் நீந்தமுடியாது,” என்று தந்தைக்கே உபதேசம் செய்தான்.
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில்பொன் மீன்விழுங்கி அற்று.
என்கிற குறளின் பொருளை, “சூதாட்டத்தின் ஆரம்பத்தில் ஜெயிக்கிறமாதிரி தோன்றும். ‘பிகினர்ஸ் லக்’ என்பார்களே அது. ஆனால் அந்தப்பணம் மீனைப்பிடிக்கற தூண்டில் மாதிரி உன்னையே இழுத்துக்கொண்டுவிடும்.” என்றார்.
அவர் அறிவுரையை நன்கு யோசித்துவிட்டு செந்தில் பதிலளித்தான்.
“சூதாட்டம் என்று இந்தக்காலத்தில் தனியாக எதுவுமில்லை. ஆனந்த் ஒருகம்பெனி ஆரம்பிக்கப்போகிறான். அதில் வெற்றி நிச்சயமா? இல்லையே. வெள்ளிக்கிழமை காலையில் நீ தூக்கத்தைக்கெடுத்து, குளிரில் இரண்டுமணிநேரம் நின்றாய். குறைந்த விலைக்கு வாஷர்-ட்ரையர் கிடைக்காமல் போயிருந்தால்… இழப்பைத் தவிர்க்க நினைத்தால் எந்த முயற்சியிலும் இறங்கமுடியாது.”
செந்திலின் கவனிப்பு மணியைப் பிரமிக்கவைத்தது.
“உண்மைதான். வாழ்க்கையில் எதைச்செய்தாலும் அதில் அதிருஷ்டம், திறமை இரண்டும் வெவ்வேறு அளவுகளில் கலந்தே இருக்கும், ஒப்புக்கொள்கிறேன். ஆனால், போக்கரில் திறமை எங்கே?”
“ரூலெட்டும், ஸ்லாட் மெஷினும் வெற்று அதிருஷ்டம்தான், போக்கர் அப்படியில்லை. அதிருஷ்டத்தில் கிடைத்த சீட்டுகளை மதிப்பிட்டு பந்தயம் கட்டுவதில்தான் சாமர்த்தியம். நான் ஏற்கனவே காட்டப்பட்ட சீட்டுகளை ஞாபகம்வைத்து ப்ராபப்லிடியின்படி பந்தயம் கட்டுகிறேன். உணர்ச்சி வசப்படுவதில்லை. சிலரைப்போல் சாப்பாட்டையும், தூக்கத்தையும் மறந்து தொடர்ந்து ஆடுவதில்லை. ஆடாதபோது அதையே நினைப்பதில்லை. வகுப்புப் பாடங்களை அலட்சியம் செய்யவில்லை.”
“நீ பொறுப்புள்ளவன். ஆனால், எத்தனையோ கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை போக்கர் விளையாட்டில் பாழாகியிருக்கிறது. மற்றவர்கள் வயிறெரிந்து தோற்கும் பணத்தை எடுத்துக்கொள்ள கூச்சமாக இல்லையா?”
“அவர்களை ஆடவேண்டுமென நான் கட்டாயப்படுத்தவில்லையே. திறமையின்றி ஆடித்தோற்கும் பணத்தை நான் ஏன் வேண்டாமென்று மறுக்க வேண்டும்? அத்துடன், ஆடும்போது அவர்களுக்கும் சந்தோஷம்தானே. பரபரப்பு, துடிப்பு, சந்தேகம், நம்பிக்கை – இவற்றுக்கு அவர்கள் கொடுக்கும் விலை.”
செந்தில் பிரச்சினையை எல்லாக் கோணங்களிலிருந்தும் யோசித்திருக்கிறான். இந்த ஒருவாரம் அதைத்தான் செய்தான் போலிருக்கிறது. அவருக்கு ஒன்றும் மிச்சம்வைக்கவில்லை.
“போகட்டும், இந்த சமயத்தில் உன்னை இன்னொரு விஷயம் கேட்கவேண்டும். உனக்கு ஆனந்தின் ‘செக்ஸ் லைஃப்’ பற்றி என்ன தெரியும்?”
“பாவாடைகளைத் துரத்துகிறானென்று மட்டும் தெரியும். விவரங்களில் எனக்கு அக்கறையில்லை.”
“நேற்றுதான் எனக்கு சுற்றிவளைத்து அது தெரியவந்தது. என்னிடம் நீ ஏன் முன்பே சொல்லவில்லை?” என்றார் குற்றம்சுமத்துவதுபோல்.
“அது அவனுடைய அந்தரங்கம். அவசியமென்று நினைத்திருந்தால் அவன் உன்னிடம் சொல்லியிருக்க வேண்டும்.”
குறைகாணமுடியாத பதில்.
“சரி, நீ எப்படி?” என்ற கேள்வியை மணி சாமர்த்தியமாகப் புகுத்தினார்.
“நீதான் என்னுடன் படிக்கும் சமீராவைப் பார்த்திருக்கிறாயே. அவள் ஒருத்திதான் எனக்கு. நான் லாஸ்வேகஸ் போக விரும்புவது அவளுக்குத் தெரியும்.”
“ஆனந்தின் பழக்கத்தைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”
“ஆபத்து நிறைந்தது.”
“போகர் விளையாடுவதைவிடவா?” என்று மணி மகனை மடக்கினார்.
அவன் அசந்துவிடவில்லை. “ஆபத்துக்கேற்ற சன்மானம் இதில் இருக்கிறது. அங்கே இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. போகரில் நான் ஜெயித்ததெல்லாம் ஒரே ஆட்டத்தில் போய்விடலாம். ஆனால், என் சுதந்திரம், ஆரோக்கியம், கட்டுப்பாடு என்னிடம்தான். அது அப்படியில்லை. அங்கே இழப்பு மிகப்பெரிது. போகர் விளையாடுவதை எப்போது வேண்டுமானாலும் என்னால் நிறுத்தமுடியும். ஆனந்துக்கு அவ்வளவு சுலபமில்லை.”
அந்த பதில் மணியைப் பெருமைப்பட வைத்தது. அண்ணனுக்கு அறிவுரை தரமுடியுமா என்று செந்திலைக் கேட்க நினைத்தார். பிறகு, ஆனந்த் அறிவுரைகேட்டு நடக்கும் கட்டத்தையெல்லாம் எப்போதோ தாண்டிவிட்டானென்று அந்த எண்ணத்தை வருத்தத்துடன் கைவிட்டார்.
‘களவும் கற்றுமற!’ என்ற முதுமொழிக்கேற்ப சில மாதங்களில் செந்தில் போக்கரை விட்டுவிடுவானென்று மணிக்குத்தோன்றியது. ஒரு கோடைவிடுமுறை முழுவதும் ‘தர்ட் ஐ’ என்கிற விடியோ-விளையாட்டில் பைத்தியமாக இருந்துவிட்டு, பிறகு அதை அவன் அறவே மறந்ததும் நினைவுக்குவந்தது. அவனுடன் ஒத்துப்போவதைத் தவிர வேறுவழியில்லை என்றாலும் அதை மனமுவந்து செய்யத் தீர்மானித்தார்.
“இதுவரை எவ்வளவு பணம் சேர்த்திருக்கிறாய்?”
“சென்ற கோடையில் சம்பாதித்த ஆறாயிரத்தில் ஆரம்பித்தேன். அது இப்போது இருபத்தெட்டாயிரமாக வளர்ந்திருக்கிறது.”
சாமர்த்தியசாலிதான்! ஆனால், தந்தையின் கடன் எப்போதும் முடிவதில்லை. “உனக்கு அறிவுரை தரவும், வெற்றியில் பங்குகேட்கவும் பலர் காத்திருப்பார்கள். யாருடைய பேச்சையும் கேட்காதே! உன் மனதுக்கு எதுசரியென்று தோன்றுகிறதோ, அதைச்செய்! நாங்கள் உனக்கு ‘சேஃப்டி நெட்’ என்பதை மறக்காதே! எந்த நிலையிலும் பந்தயம் கட்ட கடன் வாங்காதே! எல்லாப்பணமும் இழந்துவிட்டால் குடிமுழுகிவிடாது. வீட்டுக்குத் திரும்பிவா! நான் எதுவும் கேட்கமாட்டேன். உன் மிச்சப்படிப்பு என் பொறுப்பு.”
“அதை மில்லியனாக மாற்றினால்…” என்றான் தன்னம்பிக்கையுடன்.
“உன் சாதனை.” இருபதுவயதில் உலகத்தையே ஜெயிக்கமுடியும் என்கிற நம்பிக்கை. இது எவ்வளவு நாளென்று பார்க்கலாம்.
பதினோருமணி, விடைபெற வேண்டிய நேரம். மணி எழுந்து மகனை இறுக்கக் கட்டிக்கொண்டார்.
“நீ நல்லபடியாகப்போ! இப்போதே என் வாழ்த்துக்கள்!”
“தாங்க்ஸ், டாட்! நீ புரிந்துகொள்வாயென்று எனக்குத் தெரியும். அம்மாவிடம் விவரமாகச் சொல்லிவிடு! அனாவசியமாகக் கவலைப்படப் போகிறாள். பை!”
செந்திலை வழியனுப்பிய பிறகு மணி எழுந்திருக்க மனமில்லாமல் அங்கேயே உட்கார்ந்தார். சாமியை அழைத்தார்.
“செந்தில் செஞ்ச முடிவு பிடிக்காட்டியும் அவன் சொன்னதுக்கு நான் ஒத்துப்போயிட்டேன்.” என்று கதையை முடித்தார்.
“நீ பண்ணினதுதான் சரி. செந்தில் புத்திசாலி. முழுநேர போகர் அவனுக்கு சீக்கிரமே அலுத்துப்போயிடும். திரும்பிவந்து படிப்பை முடிப்பான்.” என்று நம்பிக்கை கொடுத்தான். மணி இன்னும் பேசவிரும்புவதாக சாமிக்குப்பட்டது. உரையாடலை முடிக்காமல் காத்திருந்தான்.
திடுக்கிடும் இரண்டுநாள் அனுபவம் அவரைத் திரும்பிப்பார்க்க வைத்தது. தன்வாழ்க்கையையே அலசினார்.
“நான் லாட்டரி டிக்கெட் வாங்கினதில்லை, லாஸ்வேகாஸ் போனதில்லை, அட்லாண்டிக் சிடியும் பாத்ததில்லை. விஜயாவை எனக்கு சின்னவயசிலியே கட்டிவச்சிட்டாங்க. நான் வேற எந்தப்பெண்ணையும் தொட்டதுகூட கிடையாது. என் ரெண்டு பையன்களும் இப்படி செஞ்சுட்டாங்களே!” என்று வருந்தினார்.
“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்”
என்பதையும் சேர்த்துக்கொண்டார்.
அவரை சமாதானப்படுத்த சாமி சரியான பதிலைத் தேடினான். ‘மணி! ஒண்ணு நீ ஞாபகம் வச்சுக்கணும். எச்சம் என்கிற வார்த்தைக்கு பிள்ளைகள்னு அர்த்தம் சொல்வாங்க. அதைவிட ‘லெகசி’ன்னு சொல்றதுதான் சரி. நீ நிறைய பேப்பர் எழுதியிருக்கே. யாருக்கும் தீங்கு நினைச்சதில்லை. தெரிஞ்சவங்க எல்லோருக்கும் உதவியா இருந்திருக்கே. கோவிலுக்கு எவ்வளவோ வேலை பண்ணறே. அதையெல்லாம் பாத்தா நீ தக்கார்தான்.’ என்று அவன் உருக்கமாகச் சொல்ல வருவதற்குள் மணிவாசகம் சுயதரிசனத்தைத் தொடர்ந்தார்.
“ஒருவேளை… வாஷரையும் ட்ரையரையும் ஐநூறு டாலர் குறைச்சலா வாங்கினது தப்போ? நிசான் மாக்சிமா வாங்கறப்போ புள்ளைகுட்டிக்கார சேல்ஸ்மன், டீலர்விலைக்கு முன்னூறு டாலர் அதிகமா குடுன்னு வருந்திக்கேட்டான். நான் நூறுக்குமேலே ஒருசென்ட்கூடத் தரமுடியாதுன்னு கண்டிப்பா மறுத்திட்டேன், அது தவறோ? விஜயாவோட தம்பி சொன்னதுக்காக ‘இன்ஃபா-சாஃப்ட்’ ஸ்டாக் வாங்கி பத்துவருஷம் கழிச்சு வித்ததுலே பத்தாயிரம் டாலர் பணம் பண்ணினேன், அது குற்றமாக இருக்குமோ? அப்படி என்னதான் இருக்குதுன்னு தெரிஞ்சுக்க ‘காமசூத்ரா சைட்’டுக்கு எப்பவாவது போறதுண்டு, அது பாவமோ? போன வருஷம், சூபர்மார்கெட் வாசல்லே ஒரு ஏழை வெடரன் (இராணுவத்தில் சேவைசெய்தவன்). கிழிஞ்சுபோன ‘காமோஃப்ளாஜ்’ உடைலே நொண்டிநடந்தான். ‘கோல்ட்ஸ்பரோலேர்ந்து வந்தேன். வேலைதேடி அலைந்ததில் கார்லே காஸ் தீர்ந்திடுத்து, என்கிட்டே க்ரெடிட் கார்டெல்லாம் இல்லை. ஊருக்குத் திரும்பிப்போக ஒரு பத்துடாலர் குடுத்தா உதவியா இருக்கும்’னு ரொம்பக் கெஞ்சினான். நான் கொஞ்சம்கூட இரக்கம் காட்டலை.” கடைசி வாக்கியத்தில் கண்கள் நனைந்து தொண்டையை அடைத்து குரல் நடுங்கியது. “இன்னும்…”