டாக்டர் ஜோ. நிக்கல்ஸின் ஞானோதயம்

உலகிலேயே அதிக நிலப்பரப்பைக் கொண்ட நாடு அமெரிக்கா என்பதை நாமறிவோம். அமெரிக்க விவசாயத்திற்கு வளமான வரலாறு கிடையாது. 15-ம் நூற்றாண்டில் கொலம்பஸ் பயணத்தின் உதவியால் இதர கண்டங்களுக்குத் தெரிய வந்த புதிய கண்டத்தில், தென்னமெரிக்காவில் பெரு-ஆண்டீஸ்-அமேசான் பள்ளத்தாக்கில் நிலவிய விவசாய நாகரிகம் மிஸ்ஸிபி-மிசெளரியில் ஏற்படவில்லை. இங்கு நாம் அமெரிக்கா என்று பொதுவாகக் குறிப்பிடுவது யு.எஸ்.ஏ வை மட்டுமே. ஐரோப்பியக் குடியேற்றம், கெளபாய் துப்பாக்கிக் கலாச்சாரம், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் – விடுதலை – உள்நாட்டுப் போர் மத்தியில் நிகழ்ந்த விவசாயம் நாடோடி விவசாயமே. டாக்டர் ஜோ. நிக்கல்ஸின் ஐந்து தலைமுறைகளை அவதானித்தால் ”நாடோடி விவசாயத்தின்” பொருள் புரியும்.

முதலாவது நிக்கல்ஸ் ஆங்கிலப் பாரம்பர்யமுள்ளவர். நிக்கல்ஸின் முன்னோர் ஏன் இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா வந்தார் என்று தெரியவில்லை. 19-ம் நூற்றாண்டுத் தொடக்கம் – அல்லது 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உள்ள அமெரிக்கச் சூழ்நிலையில் நிக்கல்ஸ் தெற்குக் கரோலினா மாநிலத்தில் நல்ல வளமான கன்னிநிலம் 500 ஏக்கர் வாங்கி பருத்தி, புகையிலை, மக்காச்சோளம் சாகுபடி செய்தார். எல்லாமே நன்கு விளைந்தது. வீடு வாசல் வாங்கி மனைவி மக்களைப் பெற்றுச் செல்வந்தர் ஆனார். ஆனால் செல்வ வளம் நீடிக்கவில்லை. நிலத்தில் படிப்படியாக விளைச்சல் குறைந்தது. வறுமையுற்றார். நிக்கோலஸ் மகன் நிக்கோலஸ் II வளர்ந்து பெரியவனானார்.

தெற்குக் கரோலினாவை விட்டு டென்னசியில் 2000 ஏக்கர் நிலம் வாங்கி அப்பாவைப்போல் இவரும் பருத்தி, புகையிலை, மக்காச்சோளம் பயிர் செய்து பணம் சம்பாதித்தார். இவரும் வீடு வாசல் வாங்கினார். பிள்ளைகளைப் படிக்க வைத்தார். இவருக்கும் செல்வம் நீடிக்கவில்லை. விவசாயத்தில் நஷ்டம் வந்தது. படிப்படியாக விளைச்சல் குறைந்தது. மூன்றாவது நிக்கல்ஸ் தலையெடுத்தான். நிக்கல்ஸ் III டென்னசி நிலத்தால் ஒரு பயனும் இல்லை என்று அலபாமா மாநிலத்திற்குக் குடியேறினார். மாரங்கோ நகர் அருகில் ஹார்ஸ் கிரீக்கில் 2000 ஏக்கர் வாங்கினார். நிக்கலஸ் II என்ன செய்தாரோ அதையும் இவரும் செய்தார். முதலில் லாபம் வந்தது. பின்னர் இருவருக்கும் நஷ்டமே. நிக்கல்ஸ் IV பெரியவனான். இவர் ஹார்ஸ்கிரீக்கை விட்ட கன்று ஆர்க்கன்ஸா வந்தார். பார்க்டேல் என்ற ஊரில் பேவா என்ற இடத்தைத் தேர்வு செய்து 2000 ஏக்கர் வாங்கினார். அப்போது முதல் உலகப்போர் காலகட்டம். பேவாவில் நிக்கல்ஸ் நல்ல லாபகரமாக விவசாயம் செய்தார். கிடைத்த லாபத்தில் வீடு வாசலுடன் மக்காச்சோள மாவு அரைவை ஆலை, மரம் அறுவை ஆலை, பெரிய மளிகைக்கடை என்று ஏக தடபுடல். அந்தக் கால கட்டத்தில் ரசாயன உரம் அறிமுகமானது. கேட்க வேண்டுமா? ஏகபோக விளைச்சல்தான். நிக்கல்ஸ் IV வாழ்விடமே நிக்கல்ஸ் வில்லா என்ற பெயர் பெற்றது.

நிக்கல்ஸ்கள் தலைமுறை தலைமுறையாக ஊர்விட்டு ஊர் மாறிவந்த சூழ்நிலை ஏன்? அவர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு மண்ணைச்சுரண்டி லாபம் பார்த்தனரே தவிர மண்ணுக்கு வழங்கவேண்டிய இயற்கை வளப்பொருள் எதையுமே வழங்கவில்லை. இதனால் ஆண்டுக்கு ஆண்டு குறையும் மகசூல் விதி அல்லது Law of Diminishing Returns ஏற்பட்டாலும் அமெரிக்காவில் அதை ஈடுசெய்ய புதிய நிலம் வாங்கி வருமானத்தை உயர்த்தும் அணுகுமுறை செயல்படுவதற்கேற்ப நடந்து கொண்டனர்.  பரந்த நாடான அமெரிக்காவில் புதிது புதிதாக விளைநிலம் கிடைத்தது. மண்ணுக்கு எதையும் வழங்காமல் மண்விழுதுகளான ஹூமசை 20,30 ஆண்டுகள் வரை தொடர்ந்து சுரண்டி எடுத்தபிறகு வேறு இடம் தேடி புதிய ஊரில் விவசாயம் செய்து வாழும் ஒரு ”நாடோடி விவசாய மரபை” ஒரு நிக்கல்ஸ் குடும்பம் மட்டும் செய்யவிலலை. 19-ம் நூற்றாண்டு அமெரிக்காவில் இப்படி ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் கதைகளும் நிக்கல்ஸ் குடும்பம் போலவே ஒரு விதமான நாடோடி விவசாயம் செய்தன. ஆக, அமெரிக்க விவசாய வரலாறு அவ்வளவு சிறப்பானது அல்ல.

ரசாயன உரம் அதாவது என்.பி.கே. பேக்கேஜை கடைப்பிடிக்க அமெரிக்கா உத்தரவிட்டது. நாலாவது நிக்கல்ஸைப் போல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நல்ல பலன் பெற்றார்கள். இனி இந்த நாடோடி விவசாயம் வேண்டாம். ஒரே ஊரில் தங்கி உருப்படியாக வாழலாம் என்றும் கனவு கண்டார்கள். எல்லாம் கனவுதான். நாலாவது நிக்கல்ஸ் ஏகமாகக் கொழித்தார். உயர்நிலையை அடைந்தார். எல்லாம் சில ஆண்டுகளுக்குத்தான்.

ரசாயன உரமிட்டதால் இவரது பயிர்கள் நல்ல கரும்பச்சை தட்டியது. அவ்வளவுதான். பூச்சித்தாக்குதல் தொடங்கின. பயிர்களுக்கு ஏராளமான நோய்கள் வந்தன. மளமளவென்று மேலே ஏறி விண்ணைத் தொட எண்ணியவர் நிற்கமுடியாமல் நிலை குலைந்து மண்ணில் சாய்ந்தார். அந்த அளவுக்கு நஷ்டம். நாலாவது நிக்கலஸின் புதல்வர்தான் நமது கதாநாயகர். அவர்தான் டாக்டர் ஜோ.நிக்கல்ஸ். இவரும் தனது பங்குக்கு டெக்சஸ் மாநிலத்தில்  1000 ஏக்கர் நிலம் வாங்கினார். ஆனால் விவசாயம் செய்யவில்லை. மருத்துவம் படிக்க விரும்பி ஒரு புகழ்பெற்ற மருத்துவராக டெக்சஸ் நகரில் தொழில் புரிந்தார். எனினும் 35 வயதில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதய நோயாளி ஆனார். மருத்துவத் தொழிலைச் சரியாகச் செய்ய முடியாமல் வருந்தினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜோ தனது மேஜை மீது கிடந்த சில பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டு அவற்றில் ஒன்றை எடுத்துப்படித்த போது ஒரு வித்தியாசமான செய்தி அவர் கவனத்தை கவர்ந்தது. அச்செய்தி இதுவே ”இயற்கை விவசாயத்தில் விளைந்த உணவு நல்ல வளமான நஞ்சில்லாத மண்ணிலிருந்து பெறப்படுவதால் அத்தகைய உணவை உண்டால் இதய நோய் மனிதனை அணுகாது”. அப்போது அவருக்கிருந்த மன நிலையில் இது ஒரு நகைச்சுவையாகப் பட்டது. ‘எனக்குத் தெரியாத இயற்கை உணவா. நான் நாலுபேருக்கு யோசனை சொல்வேனே’’ என்று எண்ணினார். இதய நோயாளிகளுக்கு வெள்ளை ரொட்டி, பீன்ஸ், பட்டாணி, ஹேம், பார்பக்யு இறைச்சி (சுட்ட அப்பளாம் மாதிரி சுட்ட இறைச்சி) போன்றவற்றை ஜோ சிபாரிசு செய்வதுடன் அவரே அதை உண்பார். ஒரு முறை இந்த ஹேம் (சுட்ட பன்றிக்காய்?) உணவை உட்கொண்ட சில நிமிடங்களில் மயங்கிவிழுந்துவிட்டார். அருகில் இருந்தவர்களின் உதவியால் உயிர் பிழைத்தார் மெள்ள மெள்ள எழுந்து நடமாடினார். இவரைப் பரிசோதித்த இதய மருத்துவர்கள், எந்த நிமிஷமும் மரணம் நிகழலாம். அதுவரை உயிரைக் காப்பாற்ற ‘நைட்ரோகிளிசரின்’ தான் மருந்து என்று கைவிரித்துவிட்டனர். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று அப்பழைய விவசாயப் பத்திரிகை நினைவுக்கு வந்தது.

அது என்ன பத்திரிகை? என்ன விலாசம்? என்று  அப்பத்திரிகையை மீண்டும் தேடினார்.

‘எப்படியும் சாகத்தான் போகிறோம். இவர்கள் கூறும் இயற்கை உணவு உற்பத்திக்கு வழி உள்ளதா என்று முயற்சி செய்யலாமே,’என்ற சிந்தனையுடன் தேடியதில்,  அப்பத்திரிகையின் பெயர் ”இயற்கைத் தோட்டம் மற்றும் பண்ணை” (Organic Gardening and Farming) என்பதும், அதை வெளியிட்டவர் ஜே.ஐ.ரோடேல் என்றும் புரிந்து கொண்டார். அமெரிக்காவுக்கு இயற்கை விவசாயத்தை அறிமுகம் செய்தவர் ஜே.ஐ.ரோடேல் என்றும், பென்ஸில்வேனியா மாநிலத்தில் உள்ள எம்மாஸ் நகரிலிருந்து ரோடேல் பிரஸ் முலம் அப்பத்திரிகை வெளிவந்துள்ளது என்றும் விவரம் கிட்டின.  இவர் அங்கு நேரில் சென்று அவர்களுடைய எல்லா வெளியீடுகளையும் வாங்கிப் பயின்றபோது அவரை மிகவும் கவர்ந்த நூல், ஆல்பர்ட் ஹாவர்டின் ‘வேளாண்மை உயில்’, ஹாவர்டின் ஆலோசனைப்படி டெக்சஸில் உள்ள தனது 1000 ஏக்கர் பண்ணையை இயற்கை விவசாயத்துக்கு மாற்றினார். ஹாவர்டு முன்மொழிந்த ”இந்தூர் கம்போஸ்டிங்” முறையைப் பின்பற்றினார். இந்தியாவில் ஹாவர்டுக்கு ஏற்பட்ட சோதனை, ரசாயனங்களை மண்ணில் இடுவதற்கு அவர் எழுப்பிய கண்டனக்குரல் காரணமாக, புசாவில் பணிபுரிந்த ஹாவர்டு ஒருங்கிணைந்த வடக்கு ராஜதானியிலிருந்து (United Provinces) 1920 காலகட்டத்தில் வெளியேறி, மத்திய ராஜதானியில் (Central Provinces) இந்தூர் சமஸ்தானம் வழங்கிய 100 ஏக்கர் நிலத்தில் தனது ஹூமஸ் ஆய்வைத் தொடர்ந்து உருவாக்கிய ஒரு தொழில்நுட்பம் ”இந்தூர் கம்போஸ்டிங்.”

ஹாவர்டு மேற்கொண்ட இந்தூர் கம்போஸ்டிங் அணுகுமுறையையும், கருத்தையும் கவனித்தால் 10-ம் நூற்றாண்டில் சுரபாலர் எழுதிய விருட்ச ஆயுர்வேதம் வெண்பாப் பாட்டுக்கு இவர் உரை எழுதியதைப் போல் தோன்றும். மிகவும் ஆரோக்கியமான மண் விழுதாகிய ஹூமஸ் பெற குறிப்பிட்ட சதவீதம் தாவரக்கழிவுடன் ஹூமஸ் பெற குறிப்பிட்ட சதவீதம் தாவரக்கழிவுடன் குறிப்பிட்ட அளவு மிருகங்களின் கழிவும் கலந்த கம்போஸ்ட்தான் இந்தூர் கம்போஸ்டிங். சுரபாலரின் விருட்சாயுர் வேதத்தில் இதுவே குணபரசம்.

இந்தூர் சமஸ்தான மாட்டுப் பண்ணையில் கீழே தரையில் சிமெண்ட்டுப் பூச்சு இல்லை. மண் தரையில் மாடுகளைக் கட்டுவதற்கு முன் மாடுகளுக்குப் படுக்கை போடச் சொல்கிறார். அறுவடைக் கழிவுகள் – உலர்ந்தவை வைக்கோல் – தட்டைப்புல் – துவரைச்செடி என்று எதையும் பரப்பி அதன் மீது மரத்தூளைக் கொட்டச் சொல்கிறார். இரவில் மாடு கழிக்கும் சாணம், முத்திரம் எல்லாம் கலந்து கார்பன்: நைட்ரஜன் விகிதம் 33:1 என்பது கம்போஸ்டிங் முறையில் மக்கியவுடன் 10:1 என்று குறைந்த நல்ல மண் விழுதாக மாறும் என்கிறார். இந்தூர் கம்போஸ்டிங் முறையை ஹாவர்டு பக்கம் பக்கமாக விவரித்துள்ளதை நான் இங்கு சில வாக்கியங்களில் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் ஜோ.நிக்கல்ஸுக்கு ஹாவர்டு எழுதிய ”வேளாண்மை உயில்”- உயிர் மூச்சானது.

ஹாவர்டின் புத்தகத்தை முழுமையாகக் கற்று அதன்படி தன்னுடைய 1000 ஏக்கர் பண்ணையையும் இயற்கைக்கு மாற்றியதுடன் அங்கு விளைந்த ஆரோக்கியமான உணவை உண்டு நிஜமாகவே தனது இதயநோய் உபாதைகளிலிருந்து மீண்டார். புத்தருக்கு ஞானோதயம் போதிமரத்தின் கீழ் அமர்ந்து ஏற்பட்டதைப் போல் டாக்டர் ஜோ. நிக்கல்ஸுக்கு ”ரோடேல் பிரஸ்” வழங்கிய இயற்கை விவசாய நூல்கைளப் படித்து ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் மிகையில்லை. அத்துடன் ஜோ. நிக்கல்ஸ் சும்மாவிடவில்லை. ரசாயன விஷங்கள் மண்ணில் தொடங்கி மனிதர்களுக்கு உணவாக வாயில் வந்து விழும் ரொட்டிவரை தொடர்வதைக் கண்டு, அதனால் பாதிப்புறும் மனித அவயங்களில் ஏற்படும் நோய்களைப் பற்றிய அவருடைய பார்வையில் கிட்டியவற்றை அடுத்த இதழில் கவனிக்கலாம். ஜோ. நிக்கலஸ் செய்ததை நாம் செய்தால் என்ன?

-o00o-

நல்லுணவும் நலவாழ்வும் பெற இயற்கை விவசாயத்தில் ஒரு பயிற்சியைக் கட்டுரை ஆசிரியர் – இயற்கை வேளாண்மை வல்லுனர் ஆர்.எஸ். நாராயணன் வழங்குகிறார்.

இந்தூர் கம்போஸ்டிங், மண்புழு வளர்ப்பு, மரம்வளர்ப்பு, பஞ்சகவ்யம், குணபரசம், உயிர்மூடாக்கு, உலர் மூடாக்கு – பல்லூயிர்ப்பெருக்க வேளாண்மை (Bio Diverse Agriculture) விருட்சாயுர்வேதம் மாடித்தோட்டம் – எல்லாம் கற்றுத்தரப்படும்.

இடம்: ஆதிலட்சுமி புரம். இயற்கைப் பண்ணை
நாள்: மாதங்களில் 2வது, 4வது ஞாயிற்றுக்கிழமை தோறும்.
நேரம்: காலை 10.30முதல் 4.00 வரை
வழி: திண்டுக்கல் – வத்தலக்குண்டு சாலை – திண்டுக்கல்லிருந்து 12 கி.மீ
தூரத்தில் ஆதிலட்சுமிபுரம் உள்ளது.

பயிற்சி பெற விரும்புவோர் ரூ.150 கட்டணத்தை நேரில் கலந்து கொள்ளும் போது செலுத்தலாம். அதற்கு முன் தொலைபேசி/கை பேசியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மதிய உணவு, மாலை தேனீர், ஆதிலட்சுமிபுரம் – அம்பாத்துரை. 5கி.மீ. ஆட்டோ செலவு கவனிக்கப்படும்.

முகவரி
ஆர்.எஸ். நாராயணன்
5இ 47B சவுந்தரம் நகர்
அம்பாத்துறை
காந்திகிராமம் (வழி)
திண்டுக்கல் – 624302

தொலைபேசி 0451-2452365
கைபேசி 9442113588