செயற்கை இரட்டைகளும், இயற்கைப் பன்மையும்: வெங்கட் சாமிநாதன் கட்டுரையை முன்வைத்து

வெங்கட் சாமிநாதனின் “தொடரும் பயணம்” இரண்டாம் பாகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் இருக்கும் “சிறு தெய்வ வழிபாடும் அதன் கலை விகாசங்களும்” என்பது ஒரு முக்கியமான கட்டுரை. அதை ஒட்டிய சில கருத்துகள் இங்கே கொடுக்கப் பட்டிருக்கின்றன.

பொதுவாக, இந்து சமுதாயம் இரண்டு நீரோட்டங்கள் கொண்டதாக இந்தியவியல் ஆய்வாளர்களால் வடிவமைக்கப்படுகிறது. ஒன்று வெளியிலிருந்து வந்த “ஆரிய”ப் பெரு மரபு. மற்றொன்று, இங்கே தொன்று தொட்டு இருந்து வந்த ஒரு மரபு.

ஆய்வாளர்களிடம் பரவலாக உள்ள ஒரு கருத்துப்படி, அது ஆரியத்துக்குள் உள்வாங்கப்பட்டு சிறு மரபாகிவிட்டது. இந்த இரண்டாலும் அமைக்கப்பட்டிருப்பதே இன்று நாம் இந்து சமயம் என்பதும் இந்திய பண்பாடு என்று சொல்வதன் அடித்தளமும் எனவும் அவர்கள் கருதுகிறார்கள். இந்தப் பார்வையின் பொதுத்தளத் திரிபுகளில், அல்லது பயன்பாடுகளில், இதன் வெளிப்பாடு பயன்படுத்துபவரின் எண்ண ஓட்டத்துக்கேற்பத் திரியும். உதாரணமாக, ஒரு அரசியல் பார்வையானது இதை நோக்குகையில், திராவிடத் தாய்தெய்வ வழிபாடே இன்றைக்கு தலித்துகளிடம் இருக்கிறது என்றாக்கும்; பெருந்தெய்வ வழிபாட்டை மேல்சாதியினருடையதாக்கும்; அதில் ஏதாவது நல்ல தன்மைகள் இருந்தால் அதெல்லாம் பண்டைத் திராவிடக் கூறுகளாக்கும்.

இந்த மாதிரித் தடாலடி அரசியல் பேச்சுக்கள் பிடிக்காத, அவற்றிலிருந்து விலகிக் கலை ஆர்வத்துடன், கலையை அதன் சரித்திர, சமுதாய, ஆன்மிக அம்சங்களுடன் சேர்த்து முழுமையான பார்வையோடு அணுக விரும்பும் வெங்கட் சாமிநாதன் போன்ற கலை விமர்சகர்களுக்கோ, ஆரியமும் திராவிடமும் இரண்டற கலந்துவிட்டன என்றாலும் நம்மூர் பங்களிப்பாக, தாய்தெய்வ வழிபாட்டையும் சிறுதெய்வ மரபுகளையும் பிரித்துப் பார்க்கத்தான் தோன்றுகிறது.

ஆனால் வெங்கட் சாமிநாதனும் இந்த இருமைப் பிழையில் விழத்தான் செய்கிறார். அதுதான் இந்த கட்டுரையின் தூண்டுமுகமும்.  வெ.சா. சொல்கிறார், “மதுரை மீனாட்சியும் சரி, காஞ்சி காமாட்சியும் சரி, கன்னியாகுமரி அம்மனும் சரி, இந்த ஸ்தலங்களின் ஸ்தல புராணங்கள் சொல்வது என்னவானாலும் சரி, திராவிட இனத்தின், திராவிட இனத்துக்கே உரிய தாய்த் தெய்வங்களே, ஆரியர் அளித்தவை அல்ல. வடநாட்டு பௌராணிகர்கள் அறியாத தெய்வங்கள் இவை. …சிவனும் லிங்க வழிபாடும் சைவ மதமும் முருகனும் திராவிட இனம் இந்து மதத்துக்கு அளித்த கொடைகள். லிங்க வழிபாடு ஒருவித Shamanism, primitive religion ஐச் சார்ந்தது இது போன்றே நாக வழிபாடும்.”

உண்மையில் இந்த பாகுபாடுகள் அனைத்துமே, இந்த சிறு தெய்வ-பெருந்தெய்வ dichotomy, ஆரிய ஆண் தெய்வம்- திராவிடப் பெண் தெய்வம் போன்ற கருத்துகள் எல்லாமே போலியான எதிரிடைகள் என்பதுதான் உண்மை. இது வலிய நம் கழுத்தில் நாமே கட்டிக்கொண்ட பாறாங்கல். திராவிடத் தாய்தெய்வ வழிபாடும் அவ்வாறே. உதாரணமாக ஒன்றை எடுத்துக் கொள்வோம். பெண் தெய்வ வழிபாடுகளின் மிக ஆழமான புராதனத் தன்மை கொண்ட ஒரு பிரதிமை – நிலவுடன் இணைந்த பெண்தெய்வம்.  தொன்மையான கற்காலத்தைச் சேர்ந்த நிலவோடிணைந்த பெண் தெய்வத்தின் முதல் இலக்கிய சித்திரமென்னவோ, ரிக் வேதங்களில்தான் கிடைக்கிறது. வேதப் பாடல்களில் மூன்று விதமான பெண் தெய்வங்களை நாம் காண முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

1. அன்பான, மன்னிக்கக் கூடிய, அருள் பாலிக்கும் அன்னை தெய்வங்கள் [பிரஷ்ணி, பிருத்வி (पृथ्वी), அதிதி (अदिति) ]

2. கன்னித் தாய் தெய்வங்கள்- அழகும் போராவேசமும் கொண்ட பெண் தெய்வம் – உஷஸ்.

3. மக்கட் கணங்களின் காவல் தெய்வங்கள் – சரஸ்வதி.

இந்த மூன்றுவிதப் பெண் தெய்வங்களையும் நம் கிராம-தேவதை/குல தெய்வ பெண் வடிவங்களில் நாம் காணலாம். பிரச்சனை என்னவென்றால் துவக்கப் புள்ளியே, அதாவது கோட்பாட்டு அடிப்படையே (axiom) நமக்குத் தவறாக அமைகிறது.

ஆரியர் என்கிற தந்தை-வழி சமுதாயத்தின் ஆண் தெய்வங்கள் கொண்ட வேதங்கள், அதன் அடிப்படையிலான பண்பாடு எனும் கருத்து ஒரு புறம்; திராவிடத் தாய் வழி சமூகம்- தாய் தெய்வ வழிபாடு மறுபுறம் என்ற கருத்து மறுபுறம். இப்படி ஒரு இரு துருவத்தில்,  binary இல்தான் நம் பார்வை தொடங்கி, பிறகு ஒரு ஒருமையைத் தேடுகிறது.  எனவே எந்த இந்து மரபிலும் இந்த இரட்டையைத் தேடப் பழக்கப்பட்டுவிட்டோம்.

ஆனால் அரவிந்தர், அம்பேத்கர், விவேகானந்தர் எல்லோருமே அப்போதே இந்த இரட்டை சரியாக இருக்காது என்று சொல்லத்தான் செய்தார்கள். அகழ்வாராய்ச்சியாளர்களுக்கும், மேற்கத்திய மொழியியலாளர்களுக்கும் ஊடே இப்படிக் கோட்பாடுகளை நிறுவிக் கொண்டு அணுகுவதில் இன்னும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கும் இந்தியப் பண்பாட்டுக்குத் தம் வழிகளின் பொருந்தாமை குறித்து உள்ளுக்குள்ளே குறுகுறுத்துக்கொண்டுதான் இருக்கிறது. உதாரணமாக அண்மையில் (பிப்ரவரி 1, 2010) காலமான மேற்கத்திய இந்தியவியலாளர் மேட்லின் பியர்ட்யு (Madeleine Biardeau) ஆரிய- திராவிட இரட்டையை ஏற்றுக் கொள்கிறவர்தாம். ஆனால் அவர் சொல்லியிருக்கிறதைப் பாருங்கள்:

இப்படி வரலாற்று வழி அமைப்பு போலத் தோன்றுவது, நம் மனதில் மட்டும்தான் இருக்கிறது, அதிலும் ஒருவேளை நம்முடைய சமீபத்து வரலாற்றைத்தான் முன் மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது என்றிருந்தால் என்ன செய்ய?  இனக்குழுக்களாகவும், பண்பாட்டாலும் வேறுவேறான மக்கள் பல நூறாண்டுகளில் சேர்ந்து வாழ நிச்சயமாகக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று சாதிப்பதற்கும், அப்படி அருகருகே வாழ்ந்தமைதான் இன்றைய ஹிந்து இந்தியாவின் சமூக-மதக் கட்டமைப்பை விளக்குகிறது என்ற இன்னொரு சாதிப்பதற்கும் இடையே ஒரு நீண்ட இடைவெளி உள்ளதே,  நாம் தீர ஆராயாமல் அதைக் கடக்க முடியாது.’ [குறிப்பு-1]
(பக்.6; from her  ‘Hinduism, the anthropology of a civilization‘, Oxford University Press, 1989)

எப்படியோ தாய் தெய்வ வழிபாட்டை வேதப் பண்பாட்டுடன் எவ்விதத்திலும் இணைப்பது இதன்விளைவாக நம் அறிவியக்கத்தினர் அனைவருக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. எத்தனை நாளாக வேறுவிதமாக உருப்போட்டிருக்கிறார்கள் யூரோப்பியர் சொல்லிக் கொடுத்த வரலாற்றை.  அதை இன்று கைவிட்டு, சுயமாக யோசி என்று சொன்னால் எப்படித் திடீரென்று துவங்க?

பெண் தெய்வ வழிபாட்டைச் சமணத்துடனோ அல்லது பௌத்தத்துடனோ இணைப்பது மற்றொரு வழி. கோசாம்பியின், தோற்கடிக்கப்பட்ட தாய் தெய்வங்கள் என்ற கருத்தாக்கம் இப்படி ஒன்று. எளிமையான வரலாற்று விளக்கம் மட்டுமல்ல, அருமையான  கற்பனை வரலாறுகளுக்கு விளைநிலமாகவும் அது விளங்கும்.

ஆனால் சாஞ்சியின் பெண் படிமங்களே கூட வேத இலக்கியத்தினை பிரதி எடுப்பதாக அமைந்துள்ளன என்கிறார் ஸ்டெல்லா க்ராம்ரிஷ் (Stella Kramrisch). அங்கிருந்து தொடங்கி லஜ்ஜா கௌரி (लज्जा गौरी) என்கிற பெண் தெய்வத்தை எடுத்துக் கொள்ளலாம். வளமைத் தெய்வமாக (fertility goddess) கருதப்படும் அனைத்து தன்மைகளும் கொண்ட தெய்வம் இது. இதன் மிகப் பழமையான வடிவத்தை ஹரப்பா பண்பாட்டுக் காலங்கள் கொண்டே காணலாம். அதே தன்மை கொண்ட படிமம் சந்திரகேதுதுர்க்கத்தில் கிமு இரண்டாம் நூற்றாண்டு சுதையிலும் கிடைக்கிறது. லஜ்ஜா கௌரி என அறியப்படுபவள் தலையற்ற பெண் தெய்வம். பத்மத்தை தலையாகக் கொண்டு குத்த வைத்திருக்கும் பெண் தெய்வம். இவளது மிகத்தொன்மையான கவிப்படிமமும் ரிக்வேதத்தில் கிடைக்கிறது. அவள் களங்கமற்றவள்; புவியைத் தன் மடியில் கொண்டவள்; அனைத்து வளங்களையும் அள்ள அள்ள குறையாமல் தருபவள்; புவியின் மையம்; அனைத்து தேவர்களின் அன்னை. ஆனால் பின்னாட்களில் லஜ்ஜா கௌரி என்கிற தெய்வத்தின் தேசிய விஸ்தீகரணத்தின் போது அவள் பல பழமையான பெயர்களுடன் பிராந்தியங்கள் தோறும் வழிபடப் பட்ட போது அதன் அடிப்படையாக விளங்கிய அதிதியின் (अदिति-aditi) பெயர் மங்கி மறைந்துவிட்டது வேதங்களிலிருந்ததைத் தவிர.  (பார்க்க Carol R. BolonForms of the goddess Lajja Gauri in Indian art பக்.65.) [குறிப்பு-2]

இதில் எது ஆரியர் கொண்டு வந்தது? எது திராவிடச் சிறு தெய்வம்? எது கோசாம்பியின் தோற்கடிக்கப்பட்ட தாய் தெய்வம்?

சரி இந்த ஆரிய-திராவிட இரட்டையை தூக்கிவிட்டு நம் வழிபாட்டு-பண்பாட்டு- பலதெய்வக் கலை-ஆன்மிகச் செழுமையை, அதன் பல பரிமாண அமைப்பை ஆராய்ந்தால் எப்படி இருக்கும்?
மிகப்பெரிய மன எழுச்சியைத் தரக்கூடிய, மிகக் கடுமையான உழைப்பை ஆய்வாளர்களிடம் கோரக்கூடிய கேள்வியாக இது அமையலாம்.  ஆனால் இது எழுப்பபடும் சூழலா இன்று இருப்பது?  இத்தகைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டு அதற்கு விடை தேடத் தேவையான பெரும் முயற்சியைச் செய்யத் துணியும் ஆய்வாளரை நாம் எங்கே போய்த் தேட?  அவரைப் பராமரிக்கத்தான் எந்த நிறுவனம் அல்லது அமைப்பு தயாராக இருக்கும்? இந்தக் கேள்விகள் கேட்கப்படுவது முக்கியம், இவற்றுக்கு நாம் விடை காண்பதும் அவசியம் என்று அறிந்த நபர்கள் கூட இருக்கலாம், ஆனால் அவர்களுக்குத் துணை நிற்கும் நிறுவனங்களை இன்று நாம் எங்குமே காணவியலாது.  அவ்வளவு தூரம் சொந்த வரலாற்று மீது எதிர்ப்புப் போக்கில் நாம் முங்கிக் கிடக்கிறோம்.

இந்திய பண்பாட்டில் இருக்கும் அனைத்து அம்சங்களும் வேதங்களிலிருந்து வந்தவையா என ஒருவர் கேட்கலாம்.

இந்த  ’தோற்றுவாய் வேதமா?’ என்கிற கேள்வியே தவறானது. வேதத்தை ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் ஞான நூல் என கருதுவதால் ஏற்படுவது. இந்திய பண்பாடு எனப்படுவது பல்வேறுபட்ட மக்கள் கூட்டங்களின் மெய்-ஞானத்தேடல்களின் தொகுப்பு என்றுதான் நாம் கருத வேண்டியுள்ளது. இன்றைக்கு நாம் காணும் “சிறுதெய்வம்” என அழைக்கப்படும் வழிபாட்டு அமைப்புகள் பலவற்றின்- பல நூறு அல்லது ஆயிரம் வகைகள், ஒருவேளை தொன்மை-கற்காலம் தொட்டே வந்தவை-  பல இழைகளிலிருந்து தொகுத்து உருவாக்கப்பட்டதாகவே வேதத்தையும், அதிலிருந்து மேலாகவும் கீழாகவும் முளைத்தெழும் விருட்சத்தின் கிளைகளையும் வேர்களையும் காண வேண்டி உள்ளது.
யார் தொகுத்தார் என்ற கேள்வி எழுமாயின் அதுவும் அரசியல் நோக்கோடு கேட்கப்படாமல் இருந்தால் தெளிவு கிட்டலாம்.  எல்லாச் சமூகங்களும், அவ்வப்போது தமக்கு முந்தைய காலத்தவரின் அறிவுத் தேட்டையில் கிட்டிய கருத்துகளில் தமக்குக் கிட்டுவனவற்றைப் புரிந்த வரையில் தொகுப்பது என்பது உலகில் எங்கும் நடப்பதே.  அப்படி காலம் காலமாகத் தலைமுறைகளால் தொகுக்கப்பட்ட ஒரு நீண்ட பாரம்பரியமே இந்துப் பண்பாடு என நமக்குக் கிட்டுகிறது.

ஒரு இனம் – ஒருவித வழிபாட்டு முறை என்கிற விதத்தில் குறுங்குழு மையம் கொண்டே எக் கருத்தையும், வாழ்வையும் வரையறை செய்யும் மனதுக்கு, மேற்கத்திய ஆபிரகாமிய ஆய்வு முறைகளிலேயே ஊறிய மனதுக்கு, இதைப் போலக் குழப்பமளிக்கும் சமூக நிகழ்வு வேறில்லை. பிரிட்டிஷார் காலத்துப் பழைய சென்ஸஸ் அதிகாரிகள் இதனைச் சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார்கள். 1891 இன் சென்ஸஸ் கமிஷனர் பெய்ன்ஸ்  வனவாசி சமுதாயங்களுக்கும் ஹிந்து மதத்தைச் சார்ந்தவருக்குமான வேறுபாட்டை வரையறை செய்வது முடியாத காரியம் என்கிறார். (ஏன் செய்ய வேண்டும்?)

1901 ஆம் ஆண்டு சென்ஸஸ் சூப்பிரண்டன்ட் எந்தோவன் என்பவர், ஹிந்துக்களுக்கும் வனவாசிகளுக்குமிடையேயான வேறுபாடுகளை பகுப்பு செய்வது செயல்முறையில் மிகக்கடினமானதெனக் குறிப்பிடுகிறார் (ஏன் பகுக்க வேண்டும்?) ரிஸ்லே ஒரு மதமே எத்தனை வனவாசி சமுதாயங்கள் இருக்கின்றனவோ அத்தனை விதங்களில் வெளிப்படுவதாகக் குழப்பத்துடன் குறிப்பிடுகிறார். 1911 ஆம் ஆண்டு சென்ஸஸ் கமிஷனர் ஒரு வனவாசி எப்போது ஹிந்துவாக மாறுகிறான் என்று சொல்வதே கடினம் என்கிறார் (நீங்கள் அதைப்பற்றி ஏன் கவலைப் பட வேண்டும்?)
அவன் ஹிந்துவாக மாறுவது என்பதே மதமாற்றமே உலகின் வழி என நினைக்கும் ஒரு மனதின் பார்வை என்பது அவருக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை.

ஒட்டு மொத்தமாக வனவாசி சமுதாயம் ஹிந்து சமுதாயமல்ல என்று முடிவெடுத்தால்,  சமுகவியல் ரீதியாக அத்தகைய பிளவினைப் புரிந்து கொள்ளவே பல கஷ்டங்கள் எழுகின்றன. இதையேதான் “பெரிய தெய்வங்கள்” “சிறிய தெய்வங்கள்” என்று பிரிவு செய்து பார்ப்பதிலும் நாம் காண்கிறோம்.

குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள் ஆகியன இதர ஹிந்து தெய்வங்களுடன் கொண்டுள்ள உறவுகளை அறிந்து கொள்ள பண்பாடு, ஆன்மிகம், வரலாறு, சமூக உளவியல் ஆகிய பல பரிமாணங்களை உள்ளடக்கிய முழுமைப்பார்வை வேண்டும். உடைந்து போன, விரிசல் கொண்ட, பழைய காலனிய சட்டகங்களைக் கொண்டும், இந்துப் பண்பாட்டை எதிர்க்கும் மனநிலையில் மட்டுமேயும் இருந்து  கொண்டு,   ’அப்படி ஒரு இணைப்பு இருப்பதை ஏற்க மாட்டேன், எதிரில் கிட்டும்  தரவுகள் தம் முன்முடிவுகள்  மீது சம்மட்டி அடி அடித்தாலும் விடமாட்டேன்,’ என்று பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தால் ரொம்ப சங்கடமான நிலைகளை அது ஏற்படுத்தும். ஆபத்தான விளைவுகளையும்.
சரி, இவ்வாறு நம் தாய் தெய்வங்களை, நம் ஆன்மிகக் கலைப் பரப்பை ஆராய நமக்கு காலனியமற்ற வேறொரு சட்டகம் (frame of reference) இருக்கிறதா?

இருக்கிறது. அது இந்தியராகிய நமக்கு மட்டுமல்ல; நிறுவனமாகி, காலனிய வயப்பட்டு, ஆபிரகாமிய சிந்தனை வயப்பட்டு,  மக்களின் ஒற்றுமையைப் பிளக்கும் நோக்கோடு பிற பண்பாடுகளை அணுகாத  ஒரு பார்வையிலிருந்து, பரஸ்பர நம்பிக்கை மரியாதை ஆகியவற்றுடன் மற்றொரு பண்பாட்டை அணுகும் முறையிலிருந்து ஊன்றி  நோக்கும் எந்த மனதுக்கும் இயல்பாகவே வாய்க்கிறது. வெ.சா. அதையும் சுட்டிக்காட்டுகிறார். மிகவும் எழுச்சியூட்டும் அந்த வரிகள் இதோ:

’என் மலைப்பு இன்னும் நீடித்து வருகிறது. அவனது மாரா மாரா மூச்சிக்கும் நமது அகிலாண்டேஸ்வரிக்கும் என்ன வித்தியாசம்? அத்வைதிகளின் பரமாத்மாவுக்குமோ மற்றையோரின் Universal Spiritக்குமோ இவனது மாரா மாரா மூச்சிக்கும்தான் என்ன வித்தியாசம்? பெயர்கள் வேறுபடுகின்றன என்பதைத் தவிர?’

வேதத்தின் அதிதிக்கும், அங்காள பரமேஸ்வரிக்கும், வடலிவிளை வண்டி மலைச்சி அம்மனுக்கும், ஒரிஸாவின் லஜ்ஜா கௌரிக்கும், கொற்றவைக்கும் என்ன வித்தியாசம்? காலமும் வெளியும் பகுத்துப் போடும் பெரும் மானுட அகவெளி ஓடையில் அவை அனைத்தும் ஒன்றே.

இந்த ஒருமையை அறிந்து, அதன் மூலம் பன்மையைப் பேணும் பாரத தரிசனம், இன்று நேரிடும் தாக்குதல்களை எதிர்கொள்ள, அந்த தரிசனத்திலிருந்தே ஆய்வுக்கருவிகளை சிருஷ்டித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த தேவையினை நாமும் உணர்ந்தால் வெங்கட் சாமிநாதனின் இந்த கட்டுரை அப்படி ஒரு சிருஷ்டிப்பை நோக்கிச் செல்ல நமக்கு மிக, மிக முக்கியமான ஒரு தூண்டுதலாக அமையும்.

குறிப்புகள்:

[1] From Madeline Biardieu’s book, p.6. : ’But what if this seemingly historical structuring only existed in our minds; and perhaps even implicitly took its model from our most recent history? Between the assertion that ethnically and culturally different people must have learnt over the centuries to coexist, and the assertion that their cohabitation explains the present-day socio-religious structure of Hindu India, there is a gulf which cannot be crossed without examination.’

[2] லஜ்ஜா கௌரி என்னும் பெண் தெய்வத்தின் பல வடிவங்களை, வரையப்பட்டவையும், புராதனக் கோவில் சிற்பங்களாகவும் படங்களை இந்த வ்லைத் தளத்தில் பார்க்கலாம்.
http://www.shaktisadhana.org/Newhomepage/shakti/lajjahGauri.html