சீனாவில் நிலவும் கொடும் தணிக்கை
தணிக்கை முறை என்பது இல்லையெனில் ‘மக்கள் குடியரசான’ சீன (கம்யூனிஸ்டு) அரசு உடைந்து நொறுங்கி விடும் என்பது சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் பிரச்சாரம். கேட்க ஆளில்லை என்பதால் அவர்கள் மேலும் மேலும் தணிக்கை முறைகளை இறுக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சீனாவில் பயணம் செய்யும் பலர் அப்படி ஏதும் சீன்ர்கள் தணிக்கையால் சிரமப்படுவதாகத் தெரியவில்லை என்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் குறுகிய காலப் பயணிகள், அல்லது வியாபாரத்துக்காக அங்கு போகிறவர்கள், அல்லது உடன்பயணிகள் (சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் வால் பிடிகள்). சிலர் சீன மொழியில் தணிக்கை குறைவு, வெளி உலகுக்குச் செல்லும் தகவல்கள் கட்டுப்படுத்தப் படுகின்றன என்கிறார்கள். எது சரி என்று சீனாவில் சில காலம் வாழ்ந்தவர்களோ அல்லது சீனர்களில் தைரியசாலிகளோதான் சொல்ல வேண்டும். அவ்வப்போது சில சான்றுகள் வெளியே வருகின்றன. இதோ ஒரு ஆவணப் படம், சீன அரசால் தடை செய்யப்பட்டாலும் வெளி உலகுக்குக் கிட்டி இருக்கிறது. அது குறித்த தகவல் இங்கே.
வலை – ஒரு புதிய மதம்?!
வலை என்ற சொல்லே இன்று சிலந்தி வலை, மீன் பிடிக்கும் வலை போன்ற முன்னாள் பயன்பாடுகளில் இருந்து பிரிந்து நேரடியாக தகவல் பரப்பலோடு சம்பந்தப்பட்ட சொல்லாகி விட்டது. வலை ஒரு கருவியாக மட்டுமில்லாமல் கிட்டத் தட்ட காமதேனு போலப் பார்க்கப் படுகிறது. சில நிறுவனங்களுக்கு அது காமதேனுதான். பலருக்கு பிழைப்பே இதில்தான் கிட்டுகிறது. சிலருக்கு உலகைக் கலக்கவும், அதிரடி நடவடிக்கைகளுக்கும், அதிகாரச் சண்டைகளுக்கும் களமாகவும் இது இருக்கிறது. ‘ஐ ஆம் த வே’ என்று சில பிதாமக/மார்க்க தரிசிகள் சொன்னதாகவும் அதனால் அவர்களே சரணாகதி எனவும் பெரும் மக்கள் கூட்டங்கள் உலகில் அடிபணிந்து வாழ்கின்றன. அதனால் அவர்களுக்கு சல்லிக் காசுக்குப் பயன் உண்டா என்றால் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அப்படி எல்லாம் பிரகடனம் செய்யாமல் வாரி வழங்கவோ, அல்லது குறைந்த பட்சம் ஏராளமான மனிதர்களிடம் தொடர்பு கொள்ளவோ இந்த வலை செயல்படுகிறது. நான் தான் வழி என்றோ ஒரே வழி என்றோ இது சொல்வதில்லை, எந்த வன்முறையையும் நம் மீது செலுத்துவதில்லை, ஆனால் ஒரு மதம் போல இதைப் பின்பற்றும் மனிதர் இருக்கவே செய்கிறார். இங்கு வலை என்று நான் சொன்னது தகவல் வலை, இண்டர் நெட் பற்றி. ஆனால் இந்தத் தகவல் வலை உலகில் சாதாரணமாகப் பரவிய பின், வலைகளாலேயே மனித உலகே பின்னப் பட்டிருக்கிறது என்ற ஒரு உருவகம் சமூகவியலிலும், பண்பாட்டு ஆய்வுகளிலும், நிர்வாகத் துறை ஆய்வுகளிலும் பரவி விட்டது. இதனால் இயற்கையில் என்ன விதமான வலைகள் உண்டு என்று பார்த்து அதில் எவை திறம்பட இயங்குகின்றன என்று கணித்து அந்த வடிவில் தகவல் வலையையும், மனித உறவு அமைப்புகளையும் நிர்மாணிக்கலாமா என்று இவர்கள் யோசிக்கிறார்கள். அப்படி ஒரு சிந்தனையை இக்கட்டுரை சுட்டுகிறது.
காமிக்ஸ் பிரியர்களுக்காக…
மேற்கு உலகுக்குக் கொடுத்த எத்தனையோ கொடைகளில் – காலனியம், இனவெறி, கிருஸ்தவத் தீவிர வாதம் இதையெல்லாம் விட்டு விடுவோம்- நல்லவையும் சில உண்டு. ஒன்று மின்சாரம், ரயில்கள், பஸ்கள், இரும்புக் கப்பல்கள், ப்ளாஸ்டிக் [ + மற்றும் – ], ஆன்டி பயாடிக்ஸ் இத்தியாதி. இவை எல்லாம் சிறுவருக்குக் கூட பட்டியலிட முடியும். பொதுவாக எளிதில் கவனம் பெறாத இன்னொன்று, படக் கதைப் புத்தகங்கள். குறிப்பாக காமிக்ஸ் என்று சமீப காலம் வரை சிறிது இளக்காரமாகவும் இன்று ஓரளவு மரியாதையுடன் ‘க்ராஃபிக்ஸ் நாவல்’ என்றும் அழைக்கப் படும் படக் கதைப் புத்தகங்கள். இவை துவக்கத்தில் இளஞ்சிறாருக்கு எனத் தயாராயின. பின் இளைஞருக்கு. பின் இன்று எல்லா வயதினருக்கும் பல வகைகளாகத் தயாரிக்கப் படுகின்றன. வெறும் விக்கிரமாதித்தன் கதைகளை, வேதாளக் கதைகளை (இந்திய வேதாளம், அமெரிக்க வேதாளம்- ஃபாண்டம், இரண்டையும் சொல்கிறேன்) கொடுத்துக் கொண்டிருந்த இப்புத்தகங்கள் இன்று உலகில் பெரும் பணம் ஈட்டும் பொக்கிஷக் குவியலாக, தொடர்ந்து அரித்துக் கொட்டும் பண அருவியாக மாறி இருக்கின்றன. ஹாலிவுடிலும், ஜப்பானிலும் தயாராகும் படங்களில் கணிசமான தொகை இத்தகைய நாவல்களின் கதைகளில் இருந்து எழுபவை. இவற்றில் அனிமேஷன் படங்கள் எனப்படும் வரையப்பட்ட படங்களையே வைத்துத் தயாராகும் படங்களும் உண்டு, பட நாவல்களை நடிகர்கள் நடிக்க எடுக்கும் படங்களும் உண்டு. சமீபத்தில் ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட (சிறந்த) படங்களில் குறைந்தது மூன்று இத்தகைய முழு அனிமேஷன் அல்லது பகுதி அனிமேஷன் படங்கள். க்ராஃபிக்ஸ் நாவல்களுக்கு உலகில் பல நாடுகளில் வேறு வகை செயல்பாடும் உண்டு. சமூக விமர்சனம், அரசியல் கண்டனம் அல்லது எதிர்ப்பு போன்றனவும் அவற்றில் உண்டு. கீழே சில வகை புத்தகங்களில் இருந்து மாதிரிப் பக்கங்களைத் தரும் ஒரு பக்கம், வொர்ட்ஸ்விதவுட்பார்டர்ஸ் (Words without borders) என்கிற பத்திரிகையின அளிப்பு இங்கே
கூகிள் பஸ்(Buzz) – ஏன்? எதற்கு? எப்படி?
இணையத்தின் தற்போதைய காய்ச்சல் Google Buzz. நட்சத்திர நடிகர்களின் புதுப்படங்களை போல “நல்ல ஓப்பனிங்”. ஆனால் இது நீண்ட வெற்றியை பெறுமா? காலம் தான் பதில் சொல்லவேண்டும். ஒன்று கவனித்தீர்களா, கூகிள் நிறுவனத்தின் பல தயாரிப்புகளும் செயல்முறையில் ஒருபோல இருக்கும்! கூகிள் நிறுவனத்தின் Talk, Buzz, Wave போன்றவை ஒரே குடும்பத்தில் அடங்கிவிடும். ஓர்குட், Google Profiles. Google Latitude, Dodgeball. இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இயங்குதள முயற்சியிலும் கூகிள் நிறுவனம் ஒரே சமயத்தில் இரண்டு தயாரிப்புகளில் ஈடுப்பட்டுள்ளது, Android மற்றும் Chrome. ஏன் கூகிள் இத்தகைய முயற்சியில் ஈடுபடுகிறது. ஒரே சேவையை அளிக்க அது ஏன் இத்தனை தயாரிப்புகளை வெளியிடுகிறது? இத்தகைய நடவடிக்கையின் மூலம் கூகிள் என்ன அடைய முயற்சிக்கிறது. இந்த முயற்சிகளை சாத்தியப்படுத்தும் அனைத்து விதமான வளங்களும் கூகிளுக்கு எப்படி கிட்டுகின்றன? பல கேள்விகள். ஆனால் விடை இங்கே