நார்பாட்டனும், நம்ம பாட்டனும் !

தினம் பொழுது விடிந்தால் கத்தரிக்காய்தான் பேப்பரில் தலைப்புச் செய்தியாகவும் ஜோக்காகவும் திகில் கதையாகவும் இருக்கிறது. ஒன்று, அதன் விலை. அல்லது அதனுடைய பி.டி. ஜீன்களின் வம்சாவழி அபாயங்கள் என்று கத்தரிக்காய் செய்தியில் அடிபடாத நாளே இல்லை. இதையெல்லாம் பார்த்துவிட்டு, பெருத்த பொருட் செலவில் பையனைக் காட்டாங்குளத்தூர் பக்கம் ஜெனடிக் எஞ்சினியரிங் படிக்க அனுப்பியிருக்கும் நண்பருக்கு ஒரே கவலை : ஜெனடிக்ஸை எல்லோரும் இந்த சாத்து சாத்துகிறார்களே, படித்து முடித்த பிறகு பையனுக்கு வேலை கிடைக்குமா ?

நண்பருக்கு ஆறுதலாக இருப்பதற்காக, ‘ஜெனடிக்ஸ் இல்லையென்றால் போகிறது, எபிஜெனடிக்ஸ் கற்றுக்கொண்டு எப்படியும் பிழைத்துக் கொள்வான்’ என்று சொல்லி வைத்திருக்கிறேன். இந்த எபிஜெனடிக்ஸ் என்பதுதான் இப்போது உயிரியல்-அறிவியல் அறிஞர்களிடையே சூடான மிளகாய் பஜ்ஜி !

ஸ்வீடனின் பனி பெய்யும் வடக்குக் கோடியில் நார்பாட்டன் என்றொரு சின்னஞ் சிறிய சிற்றூர். ஜனத் தொகை, சதுர மைலுக்கு ஆறு பேர்தான். அரசியல்வாதிகள், தம்முடன் ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகளை ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கென்றே ஏற்பட்ட ஊர் போலிருக்கிறது. இந்த ஊரில்தான், நம் தினசரி வாழ்க்கை எப்படி நம் மரபீனிகளைப் பாதிக்கிறது என்பது பற்றி ஒரு தகவல் தங்கச் சுரங்கமே கிடைத்தது !

வெகு காலம் வரை நார்பாட்டனுக்கு ரயில் பஸ் கிடையாது. 19-ம் நூற்றாண்டில்கூட, மக்கள் உள்ளூரில் விளைந்த பயிர்களை நம்பித்தான் உயிர் வாழ்ந்தார்கள். வள்ளுவர் சொன்ன மாதிரி வான் பொய்த்தால், பயிர் செத்தால் அதன் விளைவுகள் உடனடியாக இருந்தன. சராசரியாகப் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நார்பாட்டனில் பஞ்சம், பட்டினி, பரிதவிப்பு ! நடுநடுவே நல்ல விளைச்சல் கிடைத்த வருடங்களில் மக்கள் தலைப்பா கட்டு கட்டிக்கொண்டு சாப்பாட்டை வெளுத்து வாங்கவும் தவறவில்லை.

டாக்டர் பைக்ரன் (http://www.time.com/time/health/article/0,8599,1951968,00.html) என்பவருக்கு ஒரு ஆவல் : தலைமுறைக் கணக்கில் பட்டினி – விருந்து என்று மாறி மாறி இளைத்தும் பருத்தும் வாழ்ந்ததால், இந்த மக்களின் மரபீனிகளில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டிருக்கிறதா ? அவர்களின் பிள்ளை பேரன்களுக்கும் மரபு வழியாக அது பரவுகிறதா ?

நார்பாட்டனில் நம்ம ஊர் முனிசிபாலிட்டி மாதிரி இல்லை; பிறப்பு இறப்பு ரிக்கார்டுகள் எல்லாம் பக்காவாக வைத்திருந்தார்கள். நூற்றாண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக இருந்த ஆவணங்களை ஆராய்ந்தார் பைக்ரன். இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிறந்த சுமார் நூறு பேர்களுடைய ஜாதகத்தை எடுத்து, பாட்டன் பூட்டன் வரை அவர்கள் குடும்ப விருட்சத்தையே பிடித்துவிட்டார்.

இதே நேரத்தில் வெளியான மற்றொரு ஆராய்ச்சி முடிவும் பைக்ரனின் சுவாரசியத்தைக் கூட்டியது : ஒரு பெண் கர்ப்பமாக இருக்கையில் மாசக் கணக்கில் பிறந்த வீட்டில் டெண்ட் அடித்து நன்றாகச் சாப்பிட்டு உடம்பைத் தேற்ற வேண்டும்; அப்படி சத்துள்ள ஆகாரம் சாப்பிடாவிட்டால் பிறக்கும் குழந்தைக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதைக் கேட்டதும் பைக்ரனுக்குள் எழுந்த கேள்வி – இந்த விளைவு, கர்ப்பத்துக்கு முன்னாலேயே கூட ஏற்படுமா ? பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியின் வாழ்க்கை அனுபவங்கள், மரபு வழியாகக் குழந்தையைப் பாதிக்குமா ?

அந்த நேரத்தில் இது அபத்தமான ஐடியாவாகத் தோன்றியது. கட்டுப்பாடில்லாமல் கண்டதையும் தின்று குடித்துப் புகைத்து வாழ்ந்தால், பின்னாளில் நாம்தான் அவதிப்படுவோம். ஆனால் அடுத்து வரும் தலைமுறைக்கு இந்தச் செய்தி நிரந்தரமாக ஜீன்களில் பதிவதில்லை. டார்வினின் பரிணாமத் தேர்வுக்கு ஆயிரக்கணக்கான வருடங்கள் தேவை.

ஆனால் பைக்ரனும் மற்ற பலரும் சேகரித்துள்ள ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கும் கதையே வேறு : பட்டினியால் கிட்டத்தட்ட சாவு – அல்லது இது போன்ற சக்திவாய்ந்த புறச் சூழ்நிலைகள் – எப்படியோ கரு முட்டைக்கும் விந்தணுவுக்கும் செய்தியாகப் போய்ச் சேர்ந்துவிடுகிறது. பரிணாமக் காட்டில் குறுக்குப் பாதை போட்டுக்கொண்டு, உடனடியான இரண்டாவது தலைமுறையைக் கூட பாதிக்கிறது.

ஸ்வீடன் பரிசோதனையில் கிடைத்த ஆச்சரியம் இதுதான் : ஓவர்கலிக்ஸ் பகுதியில், நிறைய விளைச்சல் கண்ட வருடங்களில் தின்று கொழுத்த பையன்களின் குடும்ப வரலாற்றை எடுத்துப் பார்த்தார்கள். அவர்களுடைய பிள்ளைகளும் பேரன்களும் சராசரியை விட ஆறு வருடம் குறைவாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இன்னும் சில சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் வாழ்நாள் வித்தியாசம் 32 வருடமாக இருந்தது ! பிறகு பெண்களிலும் அம்மா-மகள்-பேத்தி இடையே இதே போன்ற தொடர்பைக் கண்டுபிடித்தார்கள்.

ஒரே ஒரு வருடம் விளைச்சல் அமோகமாக இருந்தது என்று கொஞ்சம் நன்றாகச் சாப்பிட்டுவிட்டால், பேரன் பேத்திகளின் ஆயுள் குறைந்துவிடுமா !? அது எப்படி ?

இந்தப் புதிருக்கான சாவி, எபிஜெனோம் என்பதில் அடங்கியிருக்கிறது. (இதற்கெல்லாம் தமிழில் இன்னும் பெயர் வைத்திருக்க வாய்ப்பில்லை). பைக்ரன் போன்றவர்கள் கடந்த இருபது வருடங்களாகத் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் ஏற்பட்டுள்ள புதிய விஞ்ஞானப் பிரிவு இது. எளிமையாகச் சொன்னால் எபிஜெனடிக்ஸ் என்பது, நம் டி.என்.ஏக்களில் பதிவு செய்யப்படாமலேயே பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்குக் கடத்தப்படும் பரிணாமச் செய்தியைப் பற்றிய இயல் என்று சொல்லலாம். அதாவது, கடிதத்தில் இல்லாமல் கவரின் மேலேயே எழுதி அனுப்பப்படும் செய்தி.

எபிஜீன்கள் என்பவை நம் செல்லுக்குள், ஜீன்களுக்கு மேல் மாடியில் குடியிருக்கும் சமாச்சாரங்கள். பெற்றோர்கள் தின்ற தீனி, புகைத்த சிகரெட்டுகள், அனுபவித்த உளைச்சல்கள் என்று பற்பல தகவல்கள் எபிஜீன்களின் வழியே பிள்ளைகளுக்குச் செல்கின்றன.

எபிஜெனோம் ஒரு உயிரியல்-வேதியியல் ஸ்விட்ச் மாதிரி செயல்படுகிறது. சில ஜீன்களைத் தேர்ந்தெடுத்து ஆன்-அல்லது ஆஃப்- செய்துவிடுகிறது. ஜெனோம் என்பது ஹார்டுவேர் என்றால், எபிஜெனோம்தான் சாஃப்ட்வேர். அவரை இவர்தான் கட்டுப்படுத்துகிறார் !

‘ஒரே மாதிரி ஜீன் வைத்திருக்கும் இரட்டைப் பிறவிகளில் ஒருவருக்கு மட்டும் ஆஸ்துமா அல்லது பைபோலார் சீர்குலைவு ஏற்படுவது எப்படி ?’ போன்ற பல கேள்விகளுக்கும் எபிஜெனோமில் விடை இருக்கலாம்.

இதில் நமக்கு நல்ல செய்தியும் இருக்கிறது, கெட்ட செய்தியும் இருக்கிறது. முதலில் கெட்ட செய்தியைச் சொல்லிவிடுகிறேன் : வாழத் தெரியாமல் வாழும் நம்முடைய life style முட்டாள்தனங்கள், நம் குழந்தைகளுக்குச் சென்றால் அவர்களும் குண்டாக, நோயாளியாக வளர்வதற்கு சான்ஸ் அதிகம்.

இவை எபிஜெனடிக்ஸின் ‘மார்க்கர்கள்’ எனப்படும் அடையாளச் சின்னங்கள் வழியே அடுத்த தலைமுறைக்குப் போய்ச் சேருகின்றன. தீர்க்காயுசாக வாழ்ந்திருந்த நம் கொள்ளுத் தாத்தா – எள்ளுப் பாட்டி கொடுத்துவிட்டுப் போன நல்ல ஜீன்கள் இருந்தாலும், இந்த எபிஜெனடிக் செய்திகள்தான் கடைசியில் வெல்லும். ஒருவர் வேளா வேளைக்கு உண்டு உறங்கி உடற்பயின்று ஒழுங்கான வாழ்க்கை வாழவில்லையென்றால், அவர் குழந்தைகள் கருவுறுவதற்கு முன்னமே அவர்கள் தலையில் ‘குண்டு, பொதுக்கை, அற்ப ஆயுள்’ என்று எழுதப் பட்டுவிடும்.

பயமுறுத்தியது போதுமென்றால், இப்போது கொஞ்சம் நல்ல செய்தி : எபிஜீனின் செய்திகளைப் பிழை திருத்தம் செய்வதற்கு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி சாலையில் சில வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள். கெட்ட ஜீன்களை அடக்கி வாசிக்கச் சொல்லிவிட்டு நல்ல ஜீன்களை ஊக்கப்படுத்துவதற்கு விஞ்ஞானத்தில் வழி இருக்கிறது.

எபிஜெனடிக்ஸை உபயோகித்து எலிகளின் ஞாபக சக்தியை அதிகரித்திருக்கிறார்கள். அவற்றிற்குப் பிறந்த குழந்தை எலிகளும் சற்றேறக் குறைய 1330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்பிக்கிற அளவுக்கு ஞாபக சக்தியில் சிறந்து விளங்கின.

எபிஜீன் மாறுதல்கள், பரிணாமம் அல்ல; அதன் விளைவுகள் வேகமாகத் தோன்றிவிட்டு சில தலைமுறைகளுக்குப் பிறகு மறைந்துவிடக் கூடியவை. எனவே அப்பன் செய்த தப்பைத் தானும் செய்யாமல் நம் குழந்தைகளாவது திருந்தட்டும்.

ஜீன்களைக் கண்டுபிடித்ததற்குப் பிறகு எபிஜீன்கள்தான் நம்முடைய உன்னதக் கண்டுபிடிப்பு என்றே இப்போது விஞ்ஞானிகள் மகிழ்கிறார்கள். ஆனால் ழான் லாமார்க் என்பவர் 1800 வாக்கிலேயே இதைக் கண்டுபிடித்துச் சொன்னார். ஒட்டகச் சிவிங்கிகளை மேற்கோள் காட்டி, இரண்டொரு தலைமுறைகளுக்குள்ளேயே ஒரு வகைப் பரிணாம மாற்றம் நடக்கிறது என்று அவர் சொன்னபோது, அதை ஒத்துக்கொள்ளாத மற்ற விஞ்ஞானிகள் அவரைக் கிண்டல் செய்து கலாட்டா செய்து, எதிர்க் கட்சி உறுப்பினரைப் பேச விடாத எம்.எல்.ஏக்கள் மாதிரி அவரை அசெம்பிளி பண்ணிவிட்டார்கள் !

மனித உடம்பில் 210 வகை செல்கள் இருப்பது தெரியும். கண்டறியப்படாத இன்னும் பலவும் இருக்கலாம் என்கிறார்கள். ஒவ்வொரு வகைக்கும் வெவ்வேறு எபிஜெனோம். அத்தனையையும் படம் வரைந்து மேப் தயாரிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடப் போகிறது. 2000-ம் வருடத்தில் மனித ஜெனோம் ப்ராஜெக்ட் என்று வெறும் 25,000 ஜீன்களைப் பட்டியலிட்டு முடிப்பதற்கே படாத பாடு பட்டோம். 300 கோடி டாலர் செலவாயிற்று. ஆனால் பத்துலட்சக் கணக்கில் இருக்கும் எபிஜெனோம்களைக் கணக்கெடுத்து முடிப்பதற்குள் சுளுக்கெடுத்துப் போய்விடும். அத்துடன் ஒப்பிட்டால் ஜெனோம் ப்ராஜெக்ட், பள்ளிக்கூடத்து ஹோம் வொர்க் !

இது எபிஜெனடிக்ஸின் நூற்றாண்டு. காட்டாங்குளத்தூர் கல்லூரி ஒன்றில் உங்கள் மகன் அல்லது மகளை எபிஜெனடிக்ஸ் பிரிவில் படிக்க வைக்க சீட்டுக்கு முந்துங்கள்.