தேநீர்

title_othertopicசுமார் 5000 ஆண்டுகளுக்கும் முன்பே சீனத்தில் தோன்றிய தேயிலை கண்டுபிடித்தற்கு உண்மையாக நடந்த ஒரு சுவையான கதையைச் சொல்வார்கள். இந்தக்கதை வாய்வழியாக காலம் காலமாக வந்திருக்கிறது. பழஞ்சீனத்தில் ஷென் நுங் என்றொரு அரசர் இருந்தார். அவர் மிகவும் அறிவாளி. விஞ்ஞானமும் அறிந்திருந்த அரசர் சுகாதார நோக்குடன் குடிநீரைக் கொதிக்க வைத்து தான் குடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒரு கோடை காலத்தில் பயணத்தில் இருந்த அரசர், ஓய்வெடுக்கவென்று தன் சைன்யங்களுடன் ஓரிடத்தில் முகாமிட்டிருந்தார். அரசரின் மனமறிந்து வேலையாட்கள் எல்லோரும் குடிக்கவென்று குடிநீரைக் கொதிக்க வைக்க ஆரம்பித்தனர். அருகில் இருந்த புதரிலிருந்து சில உலர் இலைகள் பறந்து வந்து நீரில் விழுந்தன.

விஞ்ஞான புத்தியுடைய அரசர் அந்த நீரைக் குடித்துப் பார்த்தார். அது மிகவும் புத்துணர்ச்சி ஏற்படுத்துவதாகவும் உள்ளுடலைச் சுத்தப்படுத்துவதாகவும் உணர்ந்தார். அவ்வாறாக தேநீர் உருவானது என்பார்கள். அந்த அரசரின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தேநீர் தயாரிக்கப்பட்டு ஒரு கலாசாரமாக வளர்ந்திருக்கிறது.

காபி, மது, பழரசம் போன்றவற்றை விரும்பிப் பருகினாலும் தேநீர் தான் சீனமக்களின் மிக முக்கிய பானம். பெரும்பாலும் பால் சேர்க்காமல் தான் தேநீரை அருந்துவார்கள். சீனாவின் கொடையென்று ஆசியாவெங்கும், ஏன் உலகெங்கிலும் கூட அறியப்படும் தேயிலை, தண்ணீருக்கு அடுத்து அதிகமாக அருந்தப்படும் பானம். துவக்கத்திலிருந்து தேநீர் ஆரோக்கியத்துடன் இணைத்தே பேசப்பட்டு வந்திருக்கிறது. களைப்பைப் போக்கவும் மூளையைச் சுறுசுறுப்பாக்கவும் பலம் பெறவும் தேநீர் உதவும் என்றும் நம்பப்படுகிறது.

தாவோ தத்துவவாதிகள் மற்றும் பௌத்த பிக்குகள் தேநீரைப் பிரபலப்படுத்தியதிலும் தேயிலையை அதிகம் பயிரிட ஊக்குவித்தவர்களிலும் முன்னோடிகள். மற்ற எல்லா பானங்களையும் விட தேநீர் அருந்துதலுக்கு சீனத்தில் ஏராளமான அர்த்தங்கள் நிலவி வருகிறன்றன. தேநீரைப் பரிமாறும் முறைகளிலும் வேறுபாடுகளும் ஒவ்வொன்றுக்குமான பொருளும் இருக்கின்றன.

சீனத்தில் தேநீரை ஒருவித ஆன்மீகத் தளத்திற்கு உயர்த்திப் பிடிப்பார்கள். தேநீர் புனிதத்தையும் பற்றின்மையையும் குறிப்பதாகவும் சொல்வார்கள். தேநீர் ‘தனக்குச் சாதகமான மற்றும் பாதகமான அனைத்தின் போதும் நடுநிலையோடும் நிதானத்துடனும் இருக்கும்’, சீனத் தத்துவத்தைப் பிரதிபலிப்பதாக நம்பவும் படுகிறது.

பழங்காலத்தில் தனியே தேநீரருந்தாமல், பெருங் கூட்டமாகவுமில்லாமல் நாலைந்து பேராகக் கூடியிருந்து தேநீர் அருந்துவதையே சமூக வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இயற்கையோடு இயந்த சூழல் இருக்கும் போது தேநீர் அருந்துவது ஒருவித ஏகாந்த அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்பப்பட்டது. காலப்போக்கில் சமூகம் கண்ட வளர்ச்சியால் தேநீர் கலாசாரம் விருந்துகள், ஒன்று கூடலுடன் தொடர்புடையதாகிப் போனது.

படித்தவர்கள் சிறிய அளவில் தேநீர் உறிஞ்சுவதை நாகரிகமாகக் கருதினர். பெரிய மடக்குகளில் தேநீரைக் குடிப்பது சீனத்தில் அநாகரிகமாகக் கருதப்பட்டது. எளிய மக்களுக்கு தேநீர் தாகம் தீர்க்கும் அரிய பானம். உடலுழைப்பிற்குப் பின்னால், தொழிலாளர்கள் தேநீர் அருந்துவதை விரும்பினர். அவர்கள் மடமடவென்று கோப்பையிலிருந்து பானத்தைக் குடித்துவிட்டுப் புறங்கையால் வாயைத் துடைத்துக் கொண்டு இடத்தை விட்டகலும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இதுவும் ஒருவித வீரத்தையும் பெருந்தன்மையையும் காட்டுவதாகவே அச்சமூகத்தில் எண்ணினர்.

லூ யூவின் ‘ச்சா ஜிங்’

காலம் போகப் போக சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் தளங்களிலும் தேநீர் கலாசாரம் பெருகியது. தேநீர் பற்றிய அனைத்துமடங்கிய ‘ச்சா ஜிங்’ எனும் முதல் நூலை கி.மு800ல் லூ யூ எழுதினார். இந்நூல் தேநீர் செவ்வியல் என்று கருதப் படுகிறது. முக்கிய ஆளுமையாக சீனத்தில் கருதப்படும் இந்த நூலாசிரியர் சிறு வயதிலேயே அநாதையாகிப் போனவர். ஒரு அறிஞராக புத்த பிக்குவால் வளர்க்கப் பட்டார். லூ யூ சிறந்த கூர்மையான அவதானிப்பைப் பெற்று விளங்கினார். இருந்தும், சிறு வயதிலேயே இவர் மடாலயத்தின் கெடுபிடிகளை எதிர்த்திருக்கிறார். இவரது புகழ் நாளுக்கு நாள் பரவியிருக்கிறது. எனினும், வாழ்க்கையில் ஒரு நிறைவில்லாத வெறுமையை உணர்ந்தவராக இருந்தார்.

நடு வயதை எட்டிய பின்னர், இவர் ஐந்தாண்டுகளுக்கு தனிமையில் போய் இருந்து விட்டார். அப்போது தன் நினைவிலிருந்து நிகழ்வுகளையும் இடங்களையும் அவரால் அசைபோட முடிந்தது. அந்த காலத்தில் தான், தேயிலை பயிரிடும் பல்வேறு வழிமுறைகளையும் தேநீர் தயாரிக்கும் பல்வேறு வழிமுறைகளையும் லூ யூ நுணுக்கங்களுடன் எழுதினர். இந்த விரிவான நூல் அவருக்கு ஓர் அழியாப் புகழைக் கொண்டு வந்தது. கிட்டத்தட்ட ஒரு புனிதரானார்.

அரசரின் முழு ஆதரவும் பாராட்டும் பெற்ற இவரின் எழுத்தில் அவருக்குப் பரிச்சயமான ஜென் தத்துவத்தின் கூறுகளைக் காண முடிந்தது. இவர் அறிமுகப்படுத்திய தேநீர் சேவை வழிமுறைகள் தான் முடியாட்சியின் கீழிருந்த ஜப்பானின் ஜென் பௌத்த மடாலயங்களில் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

தேநீர் எனும் சொல்

சீனத்தில் தேயிலையைக் குறிக்க இன்றும் ஏராளமான சொற்கள் உண்டு. இலக்கியத்தில் நெடுக எங்கும் இச்சொற்கள் கண்டெடுக்கக் கூடியவை என்பர் சீனர். பழஞ்சீனத்தில் தேயிலையை ‘தூ’ என்றழைத்திருந்தனர். இது கசப்புச் சுவையைக் கொண்ட தாவர வகையைக் குறிக்கும் சொல். பின்னர், தேயிலையை கசப்புச் செடி என்ற பொருளில் ஜியாகுதூ என்றழைத்தனர்.

கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் லூ யூ எழுதிய ‘ச்சா ஜிங்’கில் ச்சா, ஜியா, ஷெ, மிங், ச்சுவான், தூ போன்ற பல்வேறு சொற்களின் பிரயோகங்களைக் காணலாம். சீனத்தில் இன்று ‘ச்சா’ என்றறியப்படும் தேநீரைக் குறிக்கும் சொல் “Camellia sinensis” எனும் ஆங்கிலச் சொல்லிலிருந்து உருவாகியிருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

சீனத்தின் தேயிலை எனும் சொல் டாங் முடியாட்சியின் போது உருவானதென்று சொல்வர். தேயிலை எனும் சித்திர எழுத்து மூன்று பகுதிகளைக் கொண்டது. கீழ்ப் பகுதியான ‘மு’ மரத்தைக் குறிக்கும். மேல்ப்பகுதி புல்லைக் குறிக்கும். நடுப்பகுதி ‘ரென்’ எனப்படும் மனிதன். தேயிலை மனிதனுக்கும் இயற்கைக்குமான இணக்கத்திற்கு அடையாளமாக விளங்குகிறது.

தேயிலை வகைகள்

தேயிலை பயிராகும் சீனத்தில் மலைகளை யுனெஸ்கோ நிறுவனம் பட்டியலிட்டிருக்கிறது. இப்பகுதிகளில் பயிராகும் தேயிலைகள் யன்ச்சா என்றறியப்படும் தேயிலை பயிராகும் வூயீ மலை, கிழக்குச் சீனத்தின் ஃபிஜியன் மாநிலம், அன்ஹ்யூ மாநிலத்தின் ஹூவாங்ஷன்னின் மாவோஃபெங் எனப்படும் தேயிலை வகை, மத்திய சீனத்தின் ஜியான்ஸி மாநிலத்தின் லூஷன்னில் உற்பத்தியாகும் தேயிலை யுன்வூ மற்றும் ஹூஹ்ஹன் மாநிலத்தின் வூலிங்கில் பயிராகும் மாவ்ஜியன் எனப்படும் தேயிலை ஆகிய அனைத்துமே மிகவும் உயர்தரமாகவும் பிரபலமாகவும் விளங்குகின்றன.

தேயிலைச் சுற்றுலா

சீனாவில் தேயிலை பயிராகும் மற்றும் பதப்படுத்தப்படும் வண்ணமயமான கலாசார மையங்கள் இருக்கின்றன. கைகளில் தேநீர் கோப்பையை ஏந்தியபடியே அரசாண்ட மன்னர்கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். நிறைய ஆலயங்கள், மாளிகைகள் மற்றும் வரலாற்றுத் தலங்கள் தேநீர் மற்றும் தேயிலை தொடர்புடையவையாகத் திகழ்கின்றன.

தானே தேயிலையைப் பறித்து தானே தேநீர் தயாரித்து அருந்துவதற்கேற்ற ஏற்பாடுகளுடன் பல சுற்றுலாத்தலங்கள் சீனாவில் உண்டு. பல்கலையில் தேநீர் குறித்த காட்சியும் உரையும் பார்க்கவும் கேட்கவும் வாய்ப்புண்டு.

தேயிலை தொழிற்சாலைகளுக்குப் போய் உற்பத்தித் துறைகுறித்து அறிந்து கொள்ளவும் முடியும். தேநீரைச் சுவைத்து தரம் பிரிக்கும் பணியில் நிபுணத்துவம் வாய்ந்த தேநீர் சுவைஞர்கள் தேயிலை தொழிற்சாலைகளில் இருப்பார்கள். இவர்களைச் சந்திக்கவும் தேநீர் சுவைக்கவும் நல்வாய்ப்பு கிடைக்கும். மல்லிகை மணத்துடன் தேயிலை பதப்படுத்தப் படுவதையும் தொழிற்சாலையில் காணலாம்.

பாதுகாக்கப்பட்ட இயற்கை வனத்திற்குப் போனால் லப்ஸங் சோவ்ச்சோங் தேயிலை தொழிற்சாலைக்குப் போகலாம். பீங்கானில் தேக்கெண்டிகள் செய்வதைக் காண தே ஹூவா எனும் தேயிலை தோட்டத்துக்குப் போகலாம். 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு தேயிலை செடியைப் போய் காணலாம்.

குதிரை சவாரி செய்து மங்கோலியப் பிரதேசங்களில் நாடோடிகளின் கூடாரங்களில் தங்கி பால் கலந்த தேநீர் அருந்தலாம். சிறப்பு வாய்ந்த பூ எர்ஹ் தேநீர் தயாரிப்பு மற்றும் சுவையை அறிய தென்மேற்கு சீனாவிற்கு பயணப்பட்டால், அங்கே அருமையான வாய்ப்பு கிடைக்கும். தேயிலை வகைகளைச் சந்தைகளில் அலசி ஆராய்ந்து வேண்டியதை வாங்கலாம்.

விரும்பினால், தாவோ ஆலயங்களிலும் சென்று தேநீர் அருந்தி ஆன்மீக அனுபவத்தையும் பெறலாம். தேநீரைச் சுவைக்க பேய்ஜிங் பாணியில் இருக்கும் நிறைய தேநீர் கடைகள் நாடெங்கும் இருக்கின்றன. மலையேறும் ஆர்வலர்கள் மலையேறிப் போய் அரசியல் பெரும்புள்ளிகளுக்குப் பரிசளிக்கவென்று வளர்க்கப்படும் தேயிலை வகைகளைக் காணவும் நல்ல வாய்ப்புண்டு. தைவானிலும் தேயிலைத் தோட்டங்கள் மிகவும் பிரபலம்.

தேநீர் மரபு

பல முக்கிய சந்தர்ப்பங்களிலும் நிகழ்வுகளிலும் தேநீர் தயாரித்து அருந்தும் மரபு சீனத்தில் இருக்கிறது.

ச்சிங் முடியாட்சியில் தான் பேரரசர் ச்சியன் லோங் காலத்தில் தேநீர் தயாரித்து பரிமாறும் மற்றும் அருந்தும் மரபுகள் உருவாகியிருக்கின்றன. பேரரசர் ச்சியன் லோங் நாடெங்கும் மாறுவேடத்தில் அலையும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். தன் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்று வேலையாட்களிடம் வலியுறுத்தியிருந்தார். ஒரு நாள் உணவகத்தில் பேரரசர் தனக்கு ஒரு கோப்பை தேநீரை ஊற்றிக் கொண்டார். பின்னர் தன் சேவகனுக்கும் தேநீர் பரிமாறினார். அதைக் கண்ட சேவகனுக்கு பெருமையாகி விட்டது. பேரரசரே தனக்கு தேநீர் ஊற்றிக் கொடுத்ததைப் பெரிய கௌரவமாகக் கருதினார். சட்டென்று மண்டியிட்டுத் தன் நன்றியையும் மரியாதையையும் வெளிப்படுத்த நினைத்தான் வேலையாள். இருந்தாலும், பேரரசரின் ஆணையை மீறி அப்படிச் செய்யவும் பயம் கொண்டான். ஆகவே, தன் கைவிரல்களை மேசையின் மீது மடக்கிக் காட்டி சூசகமாகத் தெரிவித்தான்.

ஒருவரது கோப்பையில் தேநீர் ஊற்றப் பட்டதும், நன்றி தெரிவிக்கும் பொருட்டு அவர் தனது சுட்டுவிரல் மற்றும் நடுவிரல்களை மேசையின் மீது மடக்கிக் குட்ட வேண்டும். தென்சீனக் கலாசாரத்தில் இது வழக்கில் இருக்கிறது. மற்ற வட்டாரங்களில் வாய் திறந்து சொற்களால் நன்றி சொல்வதே மரபு. மும்முரமாக யாருடனும் பேசிக் கொண்டிருந்தால், மேற்சொன்ன சைகளையால் நன்றி தெரிவிப்பார்கள்.

குங்ஃபூ தேநீர் எனப்படும் குறிப்பிட்ட வகை தேநீரை ச்சௌஷான் பிரிவினர் அருந்துவார்கள். வேறு பெயரில் இதைக் குறிப்பிட்டுச் சொல்வதில்லை அவர்கள். அந்த வகை தேநீர் அந்தக் குழுவுக்கே உரியது.

மகன்களும் மகள்களும் மணம் முடித்து வீட்டை விட்டுக் கிளம்பும் போதும், வேலை செய்ய வெளியூருக்குக் கிளம்பும் போதும், தேநீர் விருந்து மிக முக்கியமாகிவிடும். பிரிந்திருக்கும் மக்களையும் பேரப்பிள்ளைகளையும் மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பங்களிலும் தேநீர் விருந்து முதன்மை பெறும். இவை குடும்பக் கொண்டாட்டமாகக் கருதப் படுகிறன்றன. வாரயிறுதிகளிலும் விழாக் காலங்களிலும் உணவகங்களில் தேநீருக்குக் கூடுவதும் பிரபலம். இதில் குடும்பத்தினர் தவிர நண்பர்களும் சேர்ந்து கொள்வதுண்டு.

‘மன்னிப்பு’க் கோரும் பொருட்டும் தேநீர் பரிமாறுவார்கள். உதாரணத்துக்கு, குழந்தைகள் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்க நினைக்கும் போது பெற்றோருக்கு கோப்பையில் தேநீர் ஊற்றி அருந்தக் கொடுப்பர்.

திருமண வைபவத்தின் போது மூத்தோருக்கும் மணமக்கள் முன்னால் நின்று மண்டியிட்டு தேநீர் பரிமாறுவர். வளர்த்து ஆளாக்கியதற்கு நன்றி செலுத்துவதாகவே இந்தச் சடங்கு நடைபெறும். ஆகவே, “எமை வளர்த்து ஆளாக்கியதற்கு நன்றி. இப்போது எமக்குத் திருமணம் நடக்கிறது. இதெல்லாமே உங்களினால் தான் நடக்கிறது. உங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறோம்.” கொஞ்சம் தேநீரை அருந்திவிட்டு பெற்றோர் அதிருஷ்டமளித்து ஆசி வழங்க மணமக்களுக்கு சிவப்புறையில் பணமிட்டுப் பரிசளிப்பர். அதேபோல மணமக்கள் திருமணமாகாதவருக்கும் சிறார்களுக்கும் சிவப்புறையில் பணமிட்டுக் கொடுப்பார்கள்.

நாலைந்து தலைமுறைகளைக் கொண்ட கிட்டத்தட்ட நூறு பேர் வரையிலும் கொண்ட பெரிய குடும்பம் திருமணம் போன்ற விழாக்களில் ஒன்று சேரும் போது நிச்சயமாக தேநீர் விருந்து நடந்தேறும். இரு வீட்டாரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும் கூட தேநீர் விருந்துகள் ஏற்பாடாகும். இந்நேரங்களில் மேலும் பல திருமணங்கள் பேசப் படுவதுண்டு. காதலில் இளையோர் விழுவதுண்டு. இவ்வாறான பெரிய தேநீர் விருந்துகளில் பங்காளி சண்டைகள் தீர்க்கப் படுவதுண்டு. பல மனைவிகள் கொண்டவரின் அடுத்தடுத்த தலைமுறைகள் ஒரே கூரையின் கீழ் வந்திருந்து சுமுகமாகத் தேநீர் அருந்திக் களிப்பது உறவுக்கு மிகவும் நல்லது. தேநீர் விருந்தில் மணமக்கள் ஒவ்வொரு மேசையாக அருகில் போய் முறைசொல்லி விளித்து தேநீர் பரிமாறி மரியாதை செலுத்துவர். தேநீர் அருந்துவது குடும்பத்திற்குள் புது உறவு வந்ததற்கான அடையாளமுமாகிறது. யாரேனும் மறுத்தால் திருமணத்தை எதிர்த்தவராவார். அவ்வாறு குடிக்க மறுப்பது பெரும்பாலும் நடப்பதில்லை. ஏனெனில், அப்படிச் செய்தால் அவமானம் எனக் கருதப்படுகிறது.

இளையவர்கள் மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கோப்பையில் தேநீர் பரிமாறுவர். வெளியில் உணவகங்களுக்கு மூத்தவர்களை வரவேற்று தேநீர் பரிமாறுவதுண்டு. அந்தஸ்திலும் பதவியிலும் மேலிருப்போருக்கும் கீழிருப்போர் அதேபோல மரியாதை செலுத்திட தேநீர் பரிமாறுவார்கள். இன்று சீனச் சமூகம் அதிக சுதந்திரங்களை இளையோருக்கு அளிக்கிறது. பெரியவர்கள் இளைஞர்களுக்கு தேநீர் பரிமாறுவது போன்ற சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதே போல மூத்த அதிகாரியோ முதலாளியோ தேநீர் பரிமாறுவதும் நடக்கிறது. இருப்பினும், இது எப்போதும் எதிர்பார்க்கக் கூடியதன்று.

தேக்கெண்டி

யீஸின் தேநீர் கெண்டி ஸோங் முடியாட்சியின் போது (கி.பி. 960-1279) கண்டுபிடிக்கப் பட்டது. இது சீனர்களிடையே மெதுவாக பிரபலமடைந்த போது நிறைய கனவான்களும் அறிஞர்களும் இதன் அழகில் மயங்கி அலங்காரத்திற்காகவே ஆசைப்பட்டு வங்கியிருக்கிறார்கள். அப்போதிலிருந்து குயவர்கள் பொதுமக்கள் பாவித்த தேநீர் கோப்பைகளிலும் கெண்டிகளிலும் கலைத்துவமான வேலைப்பாடுகளைச் செய்தனர். தரமான மட்பாண்டங்கள் கைகளால் செய்யப்பட்டன. ஒரே கோப்பை அளவிலான தேநீரைப் பிடிக்கும் சிறிய கெண்டிகளும் கூட செய்யப்பட்டன.

சீனத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு விதமான தேக்கெண்டிகள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. வட சீனத்தில் கெண்டிகள் பெரிதாக இருக்கும். தென்சீனத்தில், குறிப்பாக பிஜியன் மற்றும் கண்டன் வட்டாரங்களில் முஷ்டியளவிலான சிறிய அழகிய தேக்கெண்டிகள் பயன்பாட்டிலிருக்கின்றன.

கெண்டிகள் எப்படியானதாகவும் இருக்கலாம். இருப்பினும், யீஸிங்கில் தயாராகும் தேக்கெண்டிகளையே உயர்ந்ததாகக் கருதுவர் சீனர். யீஸிங் தேக்கெண்டியை வருடக்கணக்காகப் பயன்படுத்துவோர் வெறும் வெந்நீரை ஊற்றிக் குடித்தாலே தேநீரைப் போலச் சுவையாக இருக்கும் என்று சொல்வர். இது ஏனென்றால், கத்தரிப்பு நிற மண்ணில் உறுவாகும் கெண்டியின் இருக்கும் நுண்துளைகள் தேநீரின் வாசனையைத் தொடர்ந்து தமக்குள் ஏற்று ஏற்று நிரந்தர வாசனையைக் கொண்டு விடுகின்றன. இதனால் தான் ஒரு கெண்டியைப் பயன்படுத்துபவர் ஒரே வகையிலான தேயிலையைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறார்கள். இந்த இயல்பு தான் யீஸின் தேக்கெண்டியை சிறப்புடையதாக்குகிறது. இவ்வகையான தேக்கெண்டி தன்னுள் வெப்பத்தைத் தக்க வைக்கக் கூடிய இயல்பும் கொண்டது. தேநீர் விருந்தின் விருந்தளிப்பவர் ஒரே கெண்டியில் ஒரே வகையான தேயிலையைப் பயன்படுத்தி தன் கெண்டியைப் பாதுகாத்து மிகப் பெருமையுடன் வைத்திருப்பார். யீஸின் தேக்கெண்டிக்கும் மேலும் பல சிறப்புகள் உண்டு. மற்ற எந்த மட்பாண்டங்களிலும் இருக்கும் நச்சுத் தன்மை இதில் இல்லை. கெட்டித் தன்மை கொண்டதும் வெப்பம் வெளியேறாத தன்மையுமுடையது.

தேநீர் தயாரிப்பு

தேநீர் தயாரிப்பதில் பலவகைகள் இருக்கின்றன. நிகழ்வு, தயாரிப்பு முறை மற்றும் தேயிலையின் தரம் ஆகியவற்றைப் பொருத்து தேநீர் தயாரிப்பு வேறுபடும். எடுத்துக்காட்டாக, வழக்கமான தேயிலையையும் கருந்தேயிலையையும் விட பச்சைத் தேநீர் மிகவும் கவனமாகத் தயாரிக்க வேண்டிய வகை. குறைந்த வெப்பத்துடனான நீரில் பச்சைத் தேயிலையைக் காய்ச்சுதல் வேண்டும்.

குங்ஃபூ ச்சா தயாரிக்க குறிப்பிட்ட தேக்கெண்டியில் செய்வார்கள். இந்தப் பாரம்பரியம் மின்னன் மக்களிடமும் ச்சாவ்ஜோவ் அல்லது ச்சாவ்ஷன் மக்களிடமும் மிகவும் பிரபலம். யீஸிங் தேநீர் கொப்பைகளும் தேக்கெண்டிகளும் பயன்படுத்தப் படுகின்றன. இந்தத் தேக்கெண்டிகள் 4-5 ஔன்ஸ் கொள்ளளவு கொண்டவை. மிகவும் பழமையான இந்தப் பாரம்பரியம் தனிப்பட்ட விருந்துகளுக்கும் விருந்தினரை வரவேற்பதற்குமாக விளங்குகிறது. இவ்வகை தேநீர் தயாரிப்பதே ஒரு கலையாக விளங்குகிறது.

ச்சாவ் தேநீர் தயாரிக்கப் பயன்படுவது அதற்கென்றே இருக்கும் பீங்கான் கோப்பைகளில். ஒரு சாஸர் என்றறியப்படும் சிறு தட்டு, ஒரு கோப்பை/கிண்ணம் மற்றும் ஒரு மூடி ஆகிய மூன்றும் சேர்ந்ததே ச்சாவ் தேக்கெண்டி. தேநீர் விருந்துகளில் பயன்படுத்துவர் என்றாலும் இதைப் பெரும்பாலும் தேநீர் சுவைத்துத் தரம் பிரிக்கும் நிபுணர்கள் பயன்படுத்துவர்.

கோப்பையின் அடியில் தேயிலையைப் பரப்பிவிட்டு, கொதிக்க வைத்த நீரைக் கோப்பையில் ஊற்றி சட்டென்று நீரைக் கொட்டிவிட்டு பின்னர் கோப்பையின் விளிம்பில் சுற்றி கொதிநீரை கோப்பையில் பாதிக்கு மேல் ஊற்ற வேண்டும். மூடி வைத்துவிட்டு, 30 நொடிகள் காத்திருந்து, பின்னர் அப்படியே அருந்த வேண்டும். தேநீரைக் கோப்பைகளில் விடும் போது கெண்டியை சுழற்றிக் கொள்வார்கள். ஒவ்வொரு கோப்பையும் ஒரே விதமான மணமும் குணமும் நிறமும் கொண்டதாக இருக்கும். இந்தச் செய்முறையில் கீழே சிந்தும் துளிகளுக்கென்று ஒரு பெரிய தட்டில் தான் கெண்டியையும் கோப்பைகளையும் வைத்திருப்பார்கள். முதல் சுற்றானதும் மீதமிருக்கும் மொத்தத் தேத்தண்ணீரையும் பிறகு பயன்படுத்தவென்று இன்னொரு கெண்டிக்கு மாற்றிவிடுவார்கள். தேயிலையில் மீண்டும் கொதிநீரை விடுவார்கள். இம்முறை ஊறவிடும் நேரத்தை 40-45 நொடிகளாகக் கூட்டுவார்கள். இதே போல் ஐந்தாறு முறை தேநீர் தயாரிப்பார்கள். தேநீர் தயாரிப்பதும் அருந்துவதும் சீனர்களால் மட்டுமின்றி சீனர்களல்லாதவராலும் ஒரு கலையாகவே கருதப்படுகிறது. ரசித்து அனுபவித்து தேநீரைப் பருகுவதுடன் ரசனையுடன் தயாரிக்கவும் விரும்புகிறார்கள். தேநீர் தயாரிக்கும் அந்தத் தருணங்களிலும் அருந்தும் நேரத்திலும் தம் மனக்கவலைகள் எல்லாவற்றையும் மறந்து விடுவதாகக் கருதுவர் சீனர். மற்றவருக்கு தாம் தயாரித்த தேநீரை ஊற்றி உபசரிக்கும் போது அவருக்கு அருந்திட தேநீர் கொடுப்பது மட்டுமில்லாது, தமக்கேற்பட்ட மனசாந்தியையும் சேர்த்தே கொடுப்பதாகவும் நம்புகிறார்கள்.

சிறந்த தேநீர்

சீனச் சமூகத்தில் தேநீர் அருந்தும் வழக்கம் கி.பி 220-265 வரையிலான காலகட்டங்களில் ஏற்பட்டிருக்கும் என்று கருதப் படுகிறது. அதற்குப் பிறகான நூற்றாண்டுகளில் தேநீர் கடைகள் ஏற்பட்டிருக்கின்றன. தேநீர் சிறப்பாக அமைய பல்வேறு கூறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டிதிருக்கும். குறிப்பாக, தேயிலை, நீர் மற்றும் தேக்கெண்டிகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.

தேநீர் தயாரிக்கவென்று பயன்படும் தேக்கெண்டிகளை ‘ஜி ஷா ஹூ’ என்றழைக்கிறார்கள். இது உயர்வகை மண்ணால் வனையப்படும். இந்த மண் கத்தரிப்பு நிறத்தில் இருக்கும். மட்பாண்டங்களின் மேற்புறத்தில் அழகிய உருவங்கள், கவிதை, மேற்கோள்கள் செதுக்கப் பட்டிருக்கும். இந்தக் கெண்டிகள் தேநீரின் மணத்தையும் குணத்தையும் உள்ளே தக்க வைத்துக் கொள்ளக் கூடிய இயல்பு உண்டு. நாள்பட நாள்பட தொடர்ந்து பயன்படுத்தும் கெண்டி மிகவும் விலை மதிப்பற்றதாகி விடும்.

மழை நீரின் உதவியில் வளர்ந்த தேயிலைச் செடிகளிலிருந்து கைகளால் பறிக்கப்பட்ட தேயிலை உயர்ந்ததென்று கருதப்படுகிறது. நேரடியாக ஆற்றிலிருந்து நீர் தேயிலை வளர்க்கப் பயன்படுத்தப் படுவதில்லை. தேநீர் தயாரிக்க ஊற்றுகளிலிருந்தும் உருகிய பனியிலிருந்தும் கிடைக்கும் நீர் ஏற்றது. பனிபொழியும் போது அதைச் சேக்கரித்து குடுவைகளில் குடிக்க வைத்துக் கொள்வர். இந்த நீரில் தயாராகும் தேநீர் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சேகரிக்கப்பட்டு குடுவைகளில் இருக்கும் பனி உருகிய பின்னும் கோடைகளில் தேநீர் தயாரிக்கப் பயன்படுத்துவர். இது வியர்க்குரு வருவதைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.

பாய் ஜூயி போன்ற சீனத்துப் பெருங்கவிஞர்கள் தேநீர்க் கடைகளுக்கு அடிக்கடி போகும் பழக்கம் கொண்டிருந்தார்கள். பாய் ஜூயி ஹாங்ஜோவ் வட்டாரத்தின் முக்கியஸ்தராகவும் விளங்கியவர். இயற்கை காட்சி கண்ணில் படும் நல்ல இருக்கையாக அமர்ந்து கொண்டால் தேநீர் அருந்துவது மிகவும் அற்புத அனுபவம் என்பர் சீனர்.

பழஞ்சீனத்தில் தேயிலை செடிகள் மகசூலின் அளவை வைத்து தரம் பிரிக்கக் கூடியதாக இல்லை. தேயிலை பயிராகும் சூழலைப் பொருத்து தான் தேயிலையைத் தரம் பிரித்தனர். சாதகமான சூழல் நிலவும் பிரதேசத்தில் பயிராகும் தேயிலை உயர்தரமாகக் கருதப் படுகிறது. அதனால் தான், ‘பிரபலமான மலைகள் தான் பிரபலமான தேயிலையைக் கொடுக்கும்’, என்ற ஒரு சொல் வழக்கு சீனத்தில் உண்டு.

தேநீரகங்கள்

தமிழர் பாரம்பரியத்தில் டீக்கடைக்கிருக்கும் அடையாளம் மிகவும் புதியது. ஒரு நூற்றாண்டுக்குள்ளானதென்று சொல்லலாம். சீனத்தில் தேநீர் கடைகள் பல நூற்றாண்டுப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. சீனத்தின் தேநீர் கலாசாரத்தை அனுபவிக்க மிகச் சிறந்த இடம் இந்தத் தேநீரகங்கள். பயனர்களையும் வாடிக்கையாளர்களையும் கவர தேநீர் கலாசாரத்தில் தேநீர் வகைகளில் மட்டுமின்றி அருந்தும் விதங்களிலும் கூட பல்வேறு புதுமைகள் புகுந்தன. சமூகத்தின் அனைத்து மட்டத்திலிருந்தும் வந்தமர்ந்து அருந்தும் இடமாக இருந்த தேநீரகம் ஒரு சிறு உலகமாகவே இயங்கியிருக்கிறது.

ச்சிங் முடியாட்சி காலத்தில் (கி.பி. 1644-1911) தான் தேநீர்க்கடைகளுக்குப் போகும் பழக்கம் அதிகரித்தது. தேநீரகங்களும் பெருகின. கடைகளில் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க அதிகமான கலைஞர்களும் தோன்றினர். இதே கலாசாரம் இன்று வரை நிலவுகிறது.

தேநீரகங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரையோரங்களிலும் குறுக்கே இருக்கும் பாலங்களின் மீதும் அமைந்திருக்கும். சின்னச் சின்ன கடைகளிலிருந்து பெரிய கடைகள் வரை பல்வேறு அளவுகளில் இயங்கும். சின்னதானாலும் பெரியதானாலும் தேநீர் தயாரிப்பிலும் உபசரிப்பிலும் நேர்த்திக்குக் குறைவிராது. கருந்தேயிலை முதல் பச்சைத் தேயிலை வரை அனைத்து விதமான தேயிலை வகைகளும் இங்கிருக்கும். பசித்தவர்களுக்கு உள்ளூர் பலகார வகைகளும் கிடைக்கும். கோப்பைகள் காலியாக ஆக ஊற்றிக் கொண்டே இருப்பார்கள். மணிக்கணக்காக பேசிக் கொண்டு சுற்றுச் சூழலையும் இயற்கையையும் வெயிலையும் ரசித்தபடி அமர்ந்திருப்பர் உள்ளூர்வாசிகள். பயணத்தின் வழியில் என்றால் கொஞ்ச நேரத்தில் கிளம்பி தம் வழியில் போவார்கள்.

வூ ஜ்யூயெனொங் என்ற இடத்தில் (கி.பி. 1897-1989) ஏழாண்டுகள் வாழ்ந்தவரின் வரலாற்றுப் பதிவுகளின் படி தேநீரகங்கள் தேநீர் கலாசாரத்தை வளர்த்திருக்கிறது. இவர் ஒரு நவீன தேநீர் மற்றும் தேயிலை நிபுணர். இவர் தேநீர் கலாசாரத்திற்கு பெரும் பங்களிப்பாற்றியிருக்கிறார்.

சீனாவையும் தேநீர் கலாசாரத்தை பிரிக்கவே முடியாதென்று சீனர்கள் நம்புகிறார்கள். தேநீர்க்கடைகளில் தேநீர் அருந்துவதுடன் நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டு கலை நிகழ்ச்சி போன்றவற்றையும் அனுபவிப்பார்கள். பேய்ஜிங்கில் மட்டுமே ஐநூறு விதவிதமான தேநீரகங்கள் இருக்கின்றன.

பேய்ஜிங்கின் உள்ளூர் வழக்கில் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து பாரம்பரிய உடையிலிருக்கும் வாயிற்காப்பவர்களின் வரவேற்பும் கொண்டு ஆரம்பிக்கும் தேநீர் விருந்து. சீனப் பாரம்பரிய பாணியிலிருக்கும் செஞ்சதுர மேசைகளும் நாற்காலிகளும் முற்றத்தில் கவிந்திருக்கும் மாடத்தைத் தாங்கும் பாரம்பரிய தூண்களும் தேநீரகத்தில் சீனப் பண்பாட்டையே ருசிக்கும் படியிருக்கும். கருப்பு வெள்ளையில் பேய்ஜிங்கின் வரலாற்றுப் புகைப்படங்கள் சுவர்களில் அலங்கரித்திருக்கும். கூடத்தின் ஒருபுறம் மேடை அமைக்கப் பட்டிருக்கும். இதுவே பழஞ்சீனத்தின் தேநீரகமாகும். நாடகம் பார்த்துக் கொண்டே தேநீரை உறிஞ்சியபடி அமர்ந்திருப்பார்கள். இக்காட்சியை இன்றும் சீனத் திரைப்படங்களில் காணலாம்.

சீன எழுத்தாளர் லாவ் ஷ¤ எழுதிய (1899-1966) ‘ச்சா குவான்’ (‘தேநீரகம்’) என்ற நாடகம் 1898-1945 வரையிலான சவால்கள் நிறைந்த மக்களின் வாழ்க்கையில் நிலவிய ஏற்றயிறக்கங்களைச் சொன்னது. பேய்ஜிங்கின் நாடக அரங்கில் இந்த நாடகம் அமோகமாக ஓடியது. ச்சிங் முடியாட்சி கால பாணியில் லாந்தர்களும் பதாகைகளும் தவிர பழங்கால இயற்கைக் காட்சிகள் பின் திரையில் இருக்கும். நாட்டுப்புறக் கலைப் பாணியில் இருக்கும் இந்நாடகம் வெளிநாடுகளிலிருந்து வந்தோருக்கு சீனக் கலாசாரத்தின் வெளிப்பாடாக விளங்கியது. ஆங்கிலத்தில் இந்த நாடகம் லியூ தோங் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.

தமிழ் பண்பாட்டின் நாட்டுப்புறக் கலையான ‘கூத்து’க்கு இணையான சீன ‘ஓபெரா’ வகையான நாடகங்கள் சீனத்தின் தேநீரகங்களில் நடக்கும். பேய்ஜிங்கின் தென் பகுதியில் தியன்ச்சியோ என்ற வட்டாரத்தில் இருக்கும் ஒரு கட்டடம் முழுக்க மரத்திலானது. இது 1933ல் கட்டப்பட்டுள்ளது. இன்று இந்தக் கட்டடத்தில் இயங்கும் தேநீரகத்திற்குள்ளிருக்கும் மேடையில் அப்பகுதியில் நிலவிய நாட்டுப்புறக் கலாசாரத்தைக் குறித்து அறிந்திட இங்கு நடக்கும் நாடகங்கள் உதவுகின்றன.

இவ்வட்டாரத்தில் ஒரு காலத்தில் வணிகமும் கலாசாரமும் பொங்கிப் பெருகியிருக்கிறது. ஏராளமான தேநீரகங்களும் நாடக அரங்கங்களும் உணவகங்களும் இருந்திருக்கின்றன. கலைஞர்களுக்கு பெரும் மதிப்பும் நல்வாழ்வும் இருந்திருக்கின்றன. பெரும் வணிகர் மட்டுமில்லாது சிறு வியாபாரிகளும் பிழைத்திருக்கிறார்கள்.

ஜாங் ஃபூயன் என்ற இன்றைய தேநீரகத்தின் நிர்வாகி அன்றைய தியன்ச்சியோவின் தெருக்களில் விளையாடியவர். “அன்றைக்கெல்லாம் பிழைப்பிற்கு ஒரு குறிப்பிட்ட திறனை வளர்த்துக் கொள்ளும் வழக்கமிருந்தது. அதனால் தான் இன்றும் கலைஞர்களுக்குப் பஞ்சமில்லாதிருக்கிறது. இங்கு தான் கலைஞர்கள் உருவானார்கள். சொற்பொழிவாளர் ஹோவ் பாவோலின், மல்யுத்தக் கலைஞர் பாவ் ஷான்லின் ஆகியோர் இங்கு உருவாகிப் பிரபலமடைந்தவர்கள்”, என்பார் இவர்.

சீனச் சமூகம் நவீனமும் வளர்ச்சியுமடைந்து போது கலைஞர்கள் பல்வேறு வணிக வளாகங்களுக்கும் அலுவலகக் கட்டடங்களுக்கும் போய்விட்டனர். இன்று சீன நாடகத்தின் ‘மெக்கா’வென்றறியப் படும் தியன்ச்சியோ முன்பு போலில்லை. இருப்பினும், அன்றைய தியன்ச்சியோவை மறக்க விரும்பாத சிலரும் உளர். தன் தேநீரகத்தில் மிக உயர்தர தேநீர் வகைகளைப் பரிமாறுவதாகப் பெருமையுடன் சொல்லும் ஜாங் பூயன் இங்கு மிகவும் பிரபலமென்று கருதப் படுவது பாரம்பரிய பலகார வகைகளும் மல்லிகைத் தேநீரும் என்பார்கள்.

“இன்றும் தினமும் மாலைகளில் கலைஞர்கள் வரவழைக்கப் படுகிறார்கள். அக்காலத்தில் நிலவிய கலாசாரத்தைப் பிரதிபலிப்பதே எங்கள் குறிக்கோள். தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளைப் போல மிகவும் நேர்த்தியாக இல்லாமல் இருக்கலாம் எங்களின் கலை நிகழ்ச்சிகள். பழங்கலாசாரத்தின் கூறுகளைக் கொண்டு வருவதே நோக்கம்”, என்று சொல்வார் ஜாங் ஃபூயன். இங்கு வியாழன் முதல் சனி வரை தினமும் மாலையில் ஏழரைக்கு நிகழ்ச்சிகள் துவங்கும். வெறும் 20 யுவான் கட்டணத்துக்கு மாலை முழுவதுமான அனுபவம் நிச்சயம்.

நுழைவுக் கட்டணத்தைப் பொருத்து மேடைக்கு அருகிலோ தொலைவிலோ மேசையில் இடம் கிடைக்கும். பீங்கான் கோப்பைகள் மற்றும் கெண்டிகள் மேசையில் வைக்கப்படும். சில தின்பண்டங்களும் வைக்கப்படும். கோப்பையில் தேத்தண்ணீர் தீரத்தீர ஊற்றுவார்கள்.

பழங்காலத்தில் அதிருஷ்ட தேவதை நடனத்தில் தான் ஒவ்வொரு நிக்ழ்ச்சியும் துவங்கியது. இன்றும் இந்த மரபு இந்தத் தேநீரகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. முழுமையான பாரம்பரிய உடையிலிருக்கும் அதிருஷ்ட தேவதையைக் கண்டால் தம் வியாபாரம் பெருகும் என்று பார்வையாளர்களாக வீற்றிருக்கும் வணிகர்கள் தீவிரமாக நம்புகிறார்கள்.

சுபமான துவக்கத்திற்குப் பிறகு பார்வையாளர்களுக்கு கரணங்கள் முதல் முல்யுத்தம் வரையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளைப் படைப்பார்கள். இருவர் நடிக்கும் ஷூவாங்ஹுவாங் நாடகமும் பேய்ஜிங்கில் மிகப்பிரபலம். ஓர் ஆள் நடிக்க, மற்ற ஆள் பின்னலிருந்து பேசவும் பாடவும் செய்வான். இது மிகவும் நகைச்சுவைமிளிரும் நாடகம். இந்தக்கலை மிகப்பழமை வாய்ந்தது. பேய்ஜிங்கில் ‘குடித்து போதையில் விழுந்த ஆசைநாயகி யாங்’ என்ற நாடகம் மிகவும் பிரபலம். நளினமான பாடல்களும் நடிப்பும் அசைவும் கொண்ட இந்நாடகத்தில் ஒரு பெண் பாத்திரம் மிகமிக ஆடம்பர ஆடையில் இருக்கும்.

இடைவேளையின் போது பாரம்பரிய உடையணிந்த வணிகர்கள் ஒவ்வொருவரும் ஒரு பாட்டைப் பாடியபடி அருகில் வந்து தோளில் வைத்திருக்கும் குச்சியில் இருபுறமும் தொங்கும் பெரிய கூடைகளிலிருந்து பார்வையாளர்களிடம் ஆளுக்கொரு சிறுகூடை காய்கறிகளைக் காட்டுவர். பாட்டில் தம் காய்கறியின் மேன்மையைக் கூறுவர். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தியன்ச்சியோவில் காய்கறிகளை இவ்வாறு விற்றிருக்கிறார்கள். பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையில் இதைச் செய்கிறார்கள். மேடையில் மட்டுமின்றி சூழலிலும் இவ்வாறு மரபைக் காட்டுகிறார்கள். சீனாவில் வேறு வட்டாரங்களில் இருப்போரில் பலரும் கூட இந்தத் தேநீரகத்தின் கோலாகலங்களைக் கண்டிருக்க மாட்டார்கள்.

title_othertopic_1