(இக்கதையின் முந்தைய பகுதிகள்: பகுதி1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5)
அவன் அறிவுத் திறனை ஒரு பாதையாகப் பார்க்கிறான், நான் அதை இலக்காகவே பார்க்கிறேன். இன்னும் உயர்ந்த அறிவுத் திறனால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை. அவனுடைய தற்போதைய அறிவுத் திறனை வைத்துக் கொண்டே, மனித அனுபவத்தில் எழும் எந்தப் பிரச்சினைக்கும் இருப்பதிலேயே சிறந்த விடையை அவனால் காண முடியும். அதையும் தாண்டிய பல விடைகளையும் காண முடியும். அவனுக்கு வேண்டியதெல்லாம், தன் விடைகளை நடைமுறைப்படுத்தத் தேவையான அவகாசம்தான்.
இதற்குப் பிறகு இன்னும் பேசுவதில் ஒரு பலனும் இல்லை. பரஸ்பரம் ஒத்துக் கொண்டு நாங்கள் செயலில் இறங்குகிறோம்.
எங்களுடைய பிரக்ஞை முன்னெச்சரிக்கை கிட்டுவதால் இப்போதுள்ள நிலையை விட உயரிய தயார் நிலைக்குப் போக வாய்ப்பில்லை என்பதால், எங்கள் தாக்குதல்களைத் துவங்குவதில் எதிர்பாராத தாக்குதலுக்கு அதிக இடம் இல்லை. நாங்கள் இருவரும் துவங்க ஒத்துக் கொண்டதில் ஏதோ மரியாதை செலுத்துவது என்றும் இல்லை, தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வை நடத்துவதுதான் அது.
ஊகம் செய்து ஒருவர் பற்றி மற்றவர் தம்முள் எழுப்பிய ஒரு மாதிரிஉருவில் பல வெற்றிடங்களும், சில இடைவெளிகளும் உண்டு: அவரவர் மனப்பாங்கில் ஏற்பட்ட வளர்ச்சிகள், மேலும் அவரவர் தாமே கண்டுபிடித்தவை ஆகியன அவை. இந்த வெளிகளில் இருந்து ஏதும் எதிரொலி கேட்கவில்லை, உலக வலையை இவற்றில் இருந்து எந்த இழையும் இதுவரை தீண்டவில்லை.
நான் துவங்குகிறேன்.
இரு ஒன்றையொன்று தாங்கிப் பிடிக்கும் சுழற்சிகளை அவனுள் துவங்குவதில் நான் கவனம் செலுத்துகிறேன். ஒன்று எளியது: ரத்த அழுத்தத்தை வெகு வேகமாக அது அதிகரிக்கிறது, எக்கச்சக்கமாக அதிகரிக்க வைக்கிறது. ஒரு வினாடிக்கு மேல் இந்த அதிகரிப்பு நீடித்தால் இந்தச் சுழல் அவனுடைய ரத்த அழுத்தத்தை ஒரு நரம்புத் தாக்கலளவுக்குக் கொண்டு போய்விடும்- ஒருவேளை 400/300 என்று- அதனால் அவன் மூளையில் மெல்லிய கிளை ரத்தக் குழாய்களை உடைத்து விடும்.
ரெய்னால்ட்ஸ் இதை உடனே கண்டு பிடித்து விடுகிறான். உடல் இயக்கத்தில் கிட்டும் தகவல் சுழற்சிகள் மற்றவர்களிடம் எப்படி செயல்படும் என்பதை அவன் ஆராய்ந்ததில்லை என்பது எங்கள் உரையாடலிலிருந்து எனக்குத் தெரியும், இருந்த போதும் அவன் நடப்பதைக் கண்டு விட்டான். உடனே தன் இதய ஓட்டத்தைக் குறைக்கிறான், உடலெங்கும் ரத்தக் குழாய்களை விரிவுபடுத்துகிறான்.
என் உண்மையான தாக்குதலோ மற்றொரு, இன்னும் நுட்பமான, முன்னதை உறுதிப் படுத்தும் தாக்கும் சுழற்சி. ரெய்னால்ட்ஸ் எங்கே என நான் தேடத் துவங்கியதில் இருந்தே இந்த ஆயுதத்தை நான் தயாரிக்கத் துவங்கி இருந்தேன். இந்தச் சுழற்சி அவனுடைய நியூரோன்களை அதீதமாகத் தூண்டி, நரம்புத் தொடர்புகளுக்கு எதிரிடைகளை ஏராளமாக உற்பத்தி செய்ய வைத்து, அவனுடைய உடல் தூண்டுதல்களை ஆங்காங்கே உள்ள தொடர்பு மண்டலங்களைத் தாண்டிச் செல்லாமல் தடுத்து, மூளையைச் செயலிழக்கச் செய்யும். இந்தச் சுழல்தூண்டுதலை மற்றதை விட அதிகத் தீவிரமாக நான் கதிர்வீச்சாக அனுப்பிக் கொண்டிருந்தேன்.
வெளிப்படையாகத் தாக்குதலாகத் தோன்றியதைத் தடுத்துக் கொண்டிருக்கையில், தன் ஊன்றிய கவனம் சிதறுவதை ரெய்னால்ட்ஸ் உணர்கிறான். அது உயர்கின்ற அவனது ரத்த அழுத்தத்தால் மறைக்கப்பட்டிருந்தது. ஒரு நொடிக்குப் பின், அவனுடைய உடல் அந்த விளைவைத் தானே உயர்த்தத் துவங்குகிறது. ரெய்னால்ட்ஸ் தன் சிந்தனைகள் சிதறுவதை அறிந்து அதிர்கிறான். மிகச் சரியான காரணியைத் தேடுகிறான்: அவன் அதை சீக்கிரம் கண்டுபிடித்து விடுவான், ஆனால் அதை வெகு நேரம் கூர்ந்து கவனிக்க அவனால் முடியாது.
ஒரு சாதாரண மனிதனின் அளவுக்கு அவன் மூளையியக்கம் குறைந்தால், அவனுடைய அறிவை என்னால் சுலபமாக என்னிச்சைக்கு வளைக்க முடியும். மனோவசிய உத்திகளால் அவனுடைய உயர்நிலை அறிதிறனால் பெற்ற ஞானத்தை எல்லாம் கக்கும்படி செய்ய எனக்கு முடியும்.
அவனுடைய உடல் மொழிவழி வெளிப்பாடுகளைக் கவனிக்கிறேன். அவை குறைந்து வரும் அறிவுத் திறனைச் சுட்டுகின்றன. சாதாரணத்துக்குக் குறைந்து வருவது தெளிவாகிறது.
அது அப்போது நின்று விடுகிறது.
ரெய்னால்ட்ஸ் சமநிலையில் இருக்கிறான். ஒன்றையொன்று உயர்த்தி உறுதி செய்யும் சுழல்களை அவன் உடைத்து விட்டான். என்னால் செலுத்தப்படக் கூடிய வெகு சிக்கலான ஒரு தாக்குதலை அவன் தடுத்து நிறுத்தி விட்டான்.
அடுத்து ஏற்கனவே ஏற்பட்ட சேதத்தை அவன் சீர் செய்கிறான். நான் திக்பிரமித்து நிற்கிறேன். குறைந்து விட்ட தன் திறனில் துவங்கியும் கூட, சில நொடிகளுக்குள்ளேயே நரம்புத் தொடர்புகளைச் சமனம் செய்து, ரெய்னால்ட்ஸ் முழுவதுமாக குணமாகி விட்டான்.
நானும் அவனுக்கு வெளிப்படையாகத் தெரிந்திருக்கிறேன். எங்கள் பேச்சில் நான் ஒன்றையொன்று தாங்கி, உயர்த்தும் சுழற்சிகளை ஆராய்ந்திருக்கிறேன் எனபதை அவன் ஊகித்திருக்கிறான், நாங்கள் தொடர்பு கொண்டிருக்கையிலேயே, அவன் ஒரு எதிர்த் தடுப்பு வழியை நான் அறியாத வகையில் கண்டுபிடித்திருக்கிறான். என் தாக்குதலின் இயல்பை அது வேலை செய்த போதே கவனித்து, அதை எப்படித் திருப்பி விட்டு, ரத்து செய்வது என்று தெரிந்து கொண்டிருக்கிறான். அவனுடைய புரிதல், வேகம், கள்ளத் தனம் எல்லாவற்றையும் கண்டு நான் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கிறேன்.
அவன் என் திறனை ஒத்துக் கொள்கிறான். “ஒரு மிக சுவாரசியமான உத்தி. அதுவும் உன் சுய-மையப் போக்குக்கு ஏற்றதே. அன்று உன்னிடம் இதற்கான அறிகுறி ஏதும் இல்லை”. திடீரென அவன் ஒரு வேறு விதமான உடல் மொழிச் சைகையை வெளிப்படுத்துகிறான். எனக்கு அது தெரிந்த ஒன்று. மூன்று தினங்கள் முன்னே, மளிகைக் கடையில் என் பின்னால் நடந்து வந்த போது அவன் அதைப் பயன்படுத்தினான். நடைபாதைகள் நெரிசலாக இருந்தன, என்னைச் சுற்றி ஒரு கிழவி, தன் காற்று வடிகட்டி வழியே கொர கொரவென்று இழுத்துக் கொண்டிருந்தாள், ஒல்லியான ஒரு இளம் பையன் ஏதோ போதைமருந்தின் தாக்கத்தில் இருந்தான், அவன் அணிந்த சட்டை, திரவப் படிகத்தால் ஆனது, கண்ணைப் பறித்து புத்தியை மயக்கும் வண்ண வடிவங்கள் அதில் ஓடிக் கொண்டிருந்தன. ரெய்னால்ட்ஸ் என் பின்னே நழுவி வந்திருக்கிறான், அவனுடைய மூளை காமப் புத்தகங்களில் ஊன்றி இருந்ததாகக் காட்டியபடி. அவனுடைய அன்றைய கண்காணிப்பில் என் சுழற்சி உத்திகள் தெரிய வரவில்லை, ஆனால் என் புத்தி பற்றிய விரிவான ஒரு சித்திரம் அவனுக்குக் கிட்டி இருக்கிறது.
அப்படி ஒரு சாத்தியப்பாட்டை நான் எதிர்பார்த்திருந்தேன். என் மனப்பாங்கை மறுவடிவாக்கி, அதில் எதிர்பார்க்க முடியாத தற்செயல் கூறுகளைச் சேர்த்திருந்தேன். என் புத்தியின் தற்போதைய சமன்பாடுகள் என் சாதாரணப் பிரக்ஞையைச் சிறிதும் ஒத்திருக்கவில்லை. ரெய்னால்ட்ஸ் என் புத்தியைப் பற்றி என்ன அனுமானங்கள் கொண்டிருந்தானோ அவற்றை என் மாற்றம் குலைத்து விட்டிருக்கும். உளப்பாங்கின் மீது அவன் செலுத்தக் கூடிய எந்த ஆயுதமும் இப்போது செயலற்றுப் போய்விடும்.
புன்சிரிப்பு போன்ற ஒரு உடல்வீச்சை அனுப்புகிறேன்.
ரெய்னால்ட்ஸ் பதிலுக்குச் சிரிக்கிறான். “எப்போதாவது யோசித்திருக்கிறாயா… ” பேசத் துவங்குகிறான், ஆனால் என்ன அது என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. இப்போது ஒரு சன்ன ஒலியாக அது வருகிறது. “… சுய அழிப்பைத் தூண்டும் கட்டளைகளைப் பற்றி, க்ரெகோ?”
அவன் அதைச் சொல்கையிலேயே அவனைப் பற்றி நான் என்னுள் கட்டிய ஊக உருவில் இருந்த வெற்றிடங்கள் நிரம்பி, விவரங்கள் வழியத் துவங்குகின்றன. அவன் சொன்னதின் உள்கிடக்கை புரிந்து, அவனைப் பற்றி எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் வெளிச்சமாக்குகிறது. அவன் சுட்டுவது ஒரு ‘சொல்’ பற்றியது. ஒரு வாக்கியம், அதைச் சொன்னதும், கேட்டவரின் அறிவு நாசமாகி விடும். இந்த புராணக் கதை, கட்டுக் கதை, உண்மை என்று ரெய்னால்ட்ஸ் சாதிக்கிறான். ஒவ்வொரு புத்திக்கும் இப்படி ஒரு சுண்டும் இடம் ஏற்கனவே உள்ளே பொதிந்திருக்கிறது, ஒவ்வொரு நபருக்கும் ஒரு வாக்கியம் இருக்கிறது, அதைச் சொன்னதுமே அவர் ஒரு அறிவிலியாக, பைத்தியமாக, தன்னுள் ஒடுங்கி நொறுங்கியவராக ஆகி விடுவாராம். எனக்கான சொல் என்ன என்று தனக்குத் தெரியும் என்று அறிவிக்கிறான்.
நான் உடனே என் எல்லா புலன் வாயில்களையும் அடைக்கிறேன். அவற்றின் உள்ளீடுகளைக் குறுகிய கால நினைவு சக்தி உள்ள ஒரு தடுப்புக்குள் செலுத்துகிறேன். என் பிரக்ஞையைப் போலி செய்கிற ஒரு அமைப்பை உருவாக்கி எல்லா உள்ளெடுப்புத் தகவலையும் அது வாங்கும்படிச் செய்கிறேன். அதையும் குறைவான வேகத்திலேயே அது உள்ளிழுக்கும். எல்லாவற்றுக்கும் மேல் நிற்கும் செயல்திட்ட வரைவாளனாக நான் இந்தப் பதிலிப் பிரக்ஞையின் சமன்பாடுகளைக் கண்காணிப்பேன். அதுவும் மறைமுகமாகவே. புலன் வழித் தகவல் ஆபத்தில்லாதது என்று தெரிந்த பின்னரே நான் அதை வாங்குவேன். பதிலி அழிக்கப் பட்டால் என் பிரக்ஞை தொடப்படாது இருக்கும். அந்த அழிப்புக்கு முந்தைய தடத்தைத் தேடிப் போய், அதிலிருந்து என் மனப் பாங்கிற்கு வேறு ஒரு செயல்திட்டம் வகுக்க முடியும்.
என் பெயரை ரெய்னால்ட்ஸ் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே நான் இத்தனை மாறுதல்களையும் செய்து தயார் நிலையில் இருந்தேன். அவனுடைய அடுத்த வாக்கியம் என் அழிப்புக்கான கட்டளையாகத்தான் இருக்க வேண்டும். இப்போது என் புலன்களின் உள்ளெடுப்பு நூற்றி இருபது மில்லி-வினாடித் தயக்கத்துடன் நேர்கிறது. நான் மனித புத்தி பற்றிய என் முந்தைய ஆராய்ச்சியை மறுபடி சோதிக்கிறேன். அவன் சாதித்தது சரியாக இருக்குமா என்று தெளிவாகச் சோதிக்கிறேன்.
இடையில் என் பதிலை அலட்டாமல், இலேசாகப் பாவிப்பது போல அனுப்புகிறேன். “எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தாக்கிக் கொள்.”
“கவலைப் படாதே. அதை நான் சொல்லவே தேவை இல்லை.”
என் உள்தேடல் ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறது. என்னை நானே நொந்து கொண்டேன். என் உளப்பாங்கின் அமைப்பில் ஒரு பின்வாயில் இருந்திருக்கிறது. அதைக் கவனிக்கத் தேவையான அறிவு அமைப்பு என்னிடம் இல்லை. என் ஆயுதம் என் உள்நோக்கிய சிந்தனையில் பிறந்தது. அவனதோ, பிறரை வசியப்படுத்தும், வளைக்கும் ஒரு மனிதனுக்கே தோன்றக் கூடியது.
ரெய்னால்ட்ஸுக்கு நான் என் அரண்களை எழுப்பி இருப்பது தெரியும், அப்படியானால் அவனுடைய சுண்டு விசைக் கட்டளை அவற்றைத் தாண்டி விடவென்று உருவாக்கப்பட்டிருக்கிறதா? அக்கட்டளையின் செயல்கள் எப்படி இருக்கும் என்பதை நான் இன்னமும் அறிய முனைந்திருக்கிறேன்.
“எதற்குக் காத்துக் கொண்டிருக்கிறாயாம்?” கூடுதலான நேரம் கொடுத்தாலும் என்னால் தற்காப்பு எதையும் எழுப்ப முடியாது என்று அத்தனை நிச்சயமாக இருக்கிறானே.
“ஊகித்துதான் பாரேன்.” என்ன திமிர். என்னை எள்ளி விளையாடும் அளவுக்கு வந்து விட்டானா.
ஒரு கட்டளைச் சுண்டல் சாதாரண மனிதரிடம் என்ன செய்யும் என்பது குறித்து ஒரு கருத்துருவை நான் அறிந்து விட்டேன். ஒரு கட்டளை உயர்நிலை பெறாத எந்த அறிவையும் அனைத்தையும் துடைத்த வெறும்பலகையாக்கும், ஆனால் உயர்ந்து விட்ட அறிவுகளை அழிக்க ஒவ்வொன்றுக்கும் தனித் தனியே தயாரிக்கப் பட்ட முறை வேண்டும், அதை முன்கூட்டித் திட்டமிடவும் முடியாது. அழிப்புக்கு சில தெளிவான அறிகுறிகள் உண்டு, என் பதிலிப் பிரக்ஞை அது துவங்கினால் எனக்கு எச்சரிக்கை கொடுக்கும்தான், ஆனால் அவை என்னால் கணக்கிடக் கூடிய முறைகளாயிருந்தால்தான் எனக்குப் பிடிபடும். வரையறுப்பின் படி நோக்கினால், அப்படி ஒரு அழிப்புக் கட்டளையும் அதற்கான குறிப்பிட்ட சமன்பாடும் என் கற்பனைத் திறனுக்கு எட்டாதவை, அப்படி ஆனால் நான் எல்லாவற்றிற்கும் மேல் ஒரு செயல்திட்ட வரைவமைப்பை நிறுத்தி இருக்கிறேனே அது பதிலிப் பிரக்ஞை எப்படி அழிந்தது என்று ஆராய்கையிலேயே நொறுங்கிப் போனால் என்ன செய்ய?
“சாதாரணர்கள் மீது இந்த அழிப்புக் கட்டளையைச் செலுத்தியிருக்கிறாயா?” அழிப்புக் கட்டளையை வீச என்ன தேவையாயிருக்கும் என்று கணக்கிட ஆரம்பித்திருக்கிறேன்.
“ஒரு தடவை. சோதனைக்காக. ஒரு போதை மருந்து விற்பவனிடம். அதற்குப் பிறகு தடயத்தை அழிக்க அவனுடைய பொட்டில் ஒரு அடி அடித்து வைத்தேன்”
அப்படி ஒரு கட்டளை பிறப்பிப்பதற்கு மாபெரும் எத்தனம் தேவைப்படும் என்று எனக்குப் புரிந்தது. அப்படி ஒரு கட்டளைச் சுண்டலுக்கு என் அறிவைப் பற்றி மிக நுணுக்கமாக, நெருக்கமான பரிச்சயம் வேண்டும்; என்னைப் பற்றி அவன் என்ன தெரிந்து கொண்டிருப்பான் என்பதை நான் கணக்கிட்டுப் பார்க்கிறேன். பார்வைக்கு அதெல்லாம் போதுமானதல்ல என்பதாகத் தெரிகிறது. அதுவும் நான் வேறு எல்லாவற்றையும் மாற்றிய செயல்திட்டத்துக்கு உள்ளாக்கி விட்டேன், ஆனால் அவனுக்கு எனக்கு இன்னமும் புலப்படாத வேறு விதமான கவனிப்புத் திறன்கள், முறைகள் தெரிந்திருக்கலாம். வெளி உலகோடு உறவாடி அவன் பெற்றிருக்கக் கூடிய பல சாதகங்கள் குறித்து நான் இப்போது உணரத் துவங்கி இருக்கிறேன்.
“நீ இதைப் பல முறை செய்ய வேண்டி வருமே?”
அவனுடைய வருத்தம் தெளிவாகத் தெரிகிறது. இன்னும் பல சாவுகள் இன்றி அவன் திட்டம் நிறைவேறாது: சாதாரண மக்கள், திட்டத் தந்திரத்துக்காக, தவிர சில உயர்த்தப்பட்ட மனிதர்கள், அவனுடைய உதவியாளர்கள் சாவார்கள், ஏனெனில் இன்னும் உயர்ந்த அறிவைப் பெற அவர்களுக்கு எழக் கூடிய ஆசை இவன் திட்டத்துக்கு உலை வைக்கும். கட்டளையைப் பயன்படுத்திய பிறகு ரெய்னால்ட்ஸ் அவர்கள் மீது மாற்றுச் செயல்திட்டத்தைப் பதிப்பான் போலிருக்கிறது – ஒருவேளை என்னிடமே கூட – அவர்கள் விசேஷச் சிந்தனையாளராக, முனைந்த திட்டங்களோடு, தம்மைத் திருத்திக் கொள்ள முடியாதவராக ஆக்குவான். இத்தகைய சாவுகள் அவனுடைய திட்டத்துக்கு அவசியமானவை.
“நான் ஏதும் புனிதமானவன் என்று சொல்லிக் கொள்ளவில்லையே?”
வெறும் ஆபத்பாந்தவன் மட்டுமே.
சாதாரணர் அவனைக் கொடுங்கோலன் எனக் கருதக் கூடும். அவனைத் தம்மைப் போன்றவன் என அவர்கள் தவறாகக் கருதக் கூடும். அவர்களோ தம் எடை போடும் திறனை, தீர்ப்புகளை ஒருபோதும் நம்பியதில்லை. ரெய்னால்ட்ஸ் தான் எடுத்த வேலைக்குத் தேவையான திறன் படைத்தவன் என்பதை அவர்கள் அறிய மாட்டாதவர்கள். அவர்களுடைய வேலைகளைப் பொறுத்த வரை அவனுடைய திறன் மிகக் கச்சிதமான அளவு போதுமானது. அவர்கள் எதெல்லாம் பேராசை, அடங்கா வெறி என்று கருதுகிறார்களோ அந்தத் தீர்மானமெல்லாம் அவனுடைய பெரிதும் உயர்ந்த அறிவுக்குச் சிறிதும் பொருந்தாது.
ஒரு நாடகத் தனமான சைகையோடு தன் கையை உயர்த்துகிறான். சுட்டும் விரலை நீட்டி ஏதோ ஒரு கருத்தை வலியுறுத்துவது போல. எது அழிப்புக் கட்டளையை வீசும் என்பது குறித்து என்னிடம் தகவல் இல்லை, எனவே நான் என் தற்காப்பு நடவடிக்கையைக் கவனிக்கிறேன். இந்தத் தாக்குதலுக்குப் பிழைத்து விட்டேனானால், எனக்கு இன்னொரு தாக்குதலை நடத்த நேரமிருக்கலாம்.
தன் விரலை உயர்த்தி அவன் சொல்கிறான், “புரிந்து கொள்.”
முதலில் எனக்குப் புரிவதில்லை. உடனே, பயங்கரமான அதிர்ச்சியுடன் நான் புரிந்து கொள்கிறேன்.
அவன் எந்தக் கட்டளையையும் உச்சரிக்கவென உருவாக்கவில்லை; அது ஒரு புலன்களைச் சுண்டும் ஆணையே அல்ல. அது ஒரு நினைப்பைச் சுண்டும் விசை: அந்த ஆணை வரிசையான மனப் பதிவுகளால் ஆனது. தனித் தனியே ஆபத்தற்றவை. அவற்றை என் புத்தியில் காலம் பார்த்து வெடிக்கும் குண்டுகளைப் போல அவன் முன்னமே பதித்திருக்கிறான். அந்த நினைவுகளைச் சார்ந்த மனக் கட்டுமானங்கள் இப்போது ஒரு உருவமைப்பாக என்னுள் இணைந்து கொண்டிருக்கின்றன, அவற்றில் இருந்து ஒரு உள்ளுரு எழுகிறது. அதில் என் கரைப்பு இருக்கிறது. அந்தச் ‘சொல்’லை நானே ஊகித்துக் கொண்டிருக்கிறேன்.
உடனே என் புத்தி முன்னெப்போதையும் விட அதிவேகத்தில் ஓடுகிறது. என் விருப்பத்துக்கு எதிராக, ஒரு கொல்லும் உணர்தல் தானாக எனக்குக் கிட்டுகிறது. அதன் தொடர்நிகழ்வுகளை நிறுத்த நான் முயல்கிறேன், ஆனால் அந்த நினைவுகளை என்னால் நசுக்க முடியவில்லை. அந்தத் தொடர் நிகழ்வு அது குறித்த என் விழிப்புணர்வின் விளைவாகத் தடுத்து நிறுத்தப் பட முடியாமல் நடந்து கொண்டே போகிறது, பெரும் உயரத்தில் இருந்து கீழே விழும் ஒரு மனிதனைப் போல நான் அதை வேறு வழியின்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
மில்லி-வினாடிகள் கடக்கின்றன. என் சாவு என் கண் முன்னரே கடக்கிறது.
ரெய்னால்ட்ஸ் என்னைக் கடந்து போன அந்த அங்காடியின் ஒரு காட்சி. அந்த இளம் பையன் அணிந்த சட்டையில் இருந்த கண்ணைப் பறித்து புத்தியை மயக்கும் வண்ண வடிவங்கள், ரெய்னால்ட்ஸ் அவற்றைத் திட்ட வகைப் படுத்தி என்னுள் ஒரு குறிப்பை விதைத்திருக்கிறான், என்னுடைய தற்செயல் நிகழ்வுகள் நிரம்பிய மாற்றுச் செயல்திட்டத்தால் உருவான உளவடிவு கூட இன்னும் அதற்குச் செவி மடுப்பதாகவே இருக்கும்படி. அவ்வளவு முன்னதாகவே நடத்தி இருக்கிறான்.
இனி நேரமில்லை. என்னால் இப்போது செய்யக் கூடியதெல்லாம் என்னை உயர் நிலையில் முற்றிலும் மறு உருவாக்கத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதுதான். அது முழுதும் தற்செயல் நிகழ்வுகளால் கட்டமைக்கப்பட வேண்டும். படுவேகமாகச் செய்ய வேண்டும். இது என்னை முழுதும் முடக்கும், ஒரு கடை கெட்ட பீதியான நிலையின் செயல்.
அந்த அசாதாரண ஒலிகள் – ரெய்னால்ட்ஸின் அபார்ட்மெண்டில் நான் நுழைந்த போது கேட்டவை. அவை கொல்லும் தன்மை உள்ள உள்பதிவுகள், என் தற்காப்பை நான் எழுப்பிக் கொள்ளும் முன்னரே என்னுள் பதிந்து விட்டன.
என் மனதை நான் கிழித்து விட முயல்கிறேன். ஆனாலும் அந்த முடிவு இன்னும் தெளிவாகிறது. அதன் துல்லியம் வெகு கூர்மையாகவே தெரிகிறது.
நான், என்னுள் ஒரு பதிலியைக் கட்டினேனே. அந்தக் கட்டமைப்பை நான் அமைத்ததுதான் இப்போது என்னை அழிக்கும் உள் உருவைப் புரிந்து கொள்ளும் திறனை எனக்குக் கொணர்ந்திருக்கிறது.
அவனுடைய அற்புதமான நுட்பம் கொண்ட செயல்திறனை நான் ஒத்துக் கொள்கிறேன். அவனுடைய திட்டம் வெல்லும் என்று இந்தத் திறன் சுட்டுகிறது. அழகையும், உன்னதத்தையும் ரசிக்கும் நோக்கை விட, கொண்ட நோக்கை விடாது முடிக்கும் செயலூக்கம் உள்ள இந்த அணுகல்தான் ஒரு ஆபத்பாந்தவனுக்கு மிக உதவும்.
உலகை அழிவில் இருந்து காப்பாற்றிய பின் அவன் என்ன செய்யப் போகிறான் என்று யோசிக்கிறேன்.
நான் அச் ‘சொல்லை’ அடைகிறேன், அது என்ன வழிகளில் செயல்படும் என்பது புரிகிறது, எனவே நான் கரைந்து போகிறேன்.
(முற்றும்)
இக் கதை முதல் முறையாக ’ஆசிமொவின் அறிவியல் நவீனம்’ என்னும் பத்திரிகையில் ஆகஸ்ட், 1991 ஆம் வருடம் வெளியானது. பின் 2002 இல் டொர் பிரசுர நிறுவனம் வெளியிட்ட டெட் சியாங்கின் (Ted Chiang) முதல் கதைத் தொகுப்பான ‘ உன் மற்றும் பிறரின் வாழ்வுக் கதைகள்’ (Stories of Your Life and Others) என்ற புத்தகத்தில் பிரசுரமானது.