நாம் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம்?

சென்ற பத்து வருடங்கள் இந்தியக் கல்வித்துறையின் கொந்தளிப்பான காலம். சலீல் திரிபாதி, ’Offence: The Hindu Case’(2009) எனும் தன்னுடைய சமீபத்திய புத்தகத்தில் இந்தியாவைக் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் எதிர்கொள்ளும் தணிக்கைகள், துன்பங்கள் குறித்த சமகாலத் தகவல்களை அளிக்கிறார். புத்தகங்கள் தடை செய்யப்படுதல், புத்தக ஆசிரியர்கள் மிரட்டலுக்கு உள்ளாகுதல், கற்பிக்கும் ஆசிரியர் தொடர்ந்த தடங்கல்களைச் சந்தித்தல், வகுப்புகளைக் குலைத்தல், முட்டையை வீசி எறிதல், முகத்தில் கரியைப் பூசுதல் போன்ற இத்தகைய நிகழ்வுகள் வருத்தமளிக்கக்கூடியவை. கல்வியாளர்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் அவதூறுப் பிரச்சாரங்கள், சட்ட ரீதியான மோதல்கள் மற்றும் நேரடி வன்முறை குறித்த அச்சத்துடன் பணிபுரிகிறார்கள். இதற்குக் காரணம், இந்தியாவின் கடந்தகாலம் அல்லது ஹிந்து மரபு குறித்த இந்த கல்வியாளர்களின் எழுத்துக்கள் சில குழுக்களைக் காயப்படுத்துகின்றன. இது மறுக்கப்படமுடியாத உண்மை. கல்வி ஆய்வுத்துறையின் சுதந்திரத்திற்கு எதிரான ஹிந்து தேசியத்தின் நடவடிக்கைகள் உலகெங்கும் பல கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளது.

திரிபாதியைப் பொருத்தவரை ஹிந்து தேசியத்தின் எழுச்சி அறிவுசார் இயக்கத்தின் சுதந்திரத்திற்கு பெரும் சவாலாக விளங்குகிறது. அவருடைய கட்டுரையில், இந்தியா மற்றும் அதன் கலாசாரம் முன்வைக்கப்படும் விதம் குறித்து கவலை கொண்டவர்கள் அனைவரையும், முன்முடிவுகளுடன் கூடிய, சகிப்புத்தன்மையற்ற, தங்கள் கலாசாரத்தின் மேன்மையை மிகத்தீவிரமாக வலியுறுத்தும் பிடிவாதக்காரர்களாகச் சித்தரிக்கிறார். எம்.எஃப்.ஹூசைனின் ஓவியங்களை எரித்தவர்களையும், பந்தர்க்கர் ஓரியண்டல் ஆராய்ச்சி நிறுவனத்தை துவம்சம் செய்தவர்களையும், “அடிப்படைவாத பெரும் கரத்தின்” பயங்கரவாத விளிம்புகளாக முன்வைக்கிறார். இந்த “பயங்கரவாதிகள்” பட்டியலில் வெளிநாடு வாழ் இந்தியர்களையும், மேற்குலகின் ஹிந்து மத ஆதரவாளர்களையும் சேர்த்துக்கொள்கிறார். அதே சமயம், ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்றாய்வாளர்களையும், வெண்டி டோனிகர் போன்ற மத அறிஞர்களையும், உண்மை அழைத்துச் செல்லும் எத்தகைய பாதையிலும் வெகு தூரம் பயணிப்பவர்களாகவும், அத்தகைய தேடலுக்காக அவர்கள் தாக்கப்படுவதாகவும் கூறுகிறார். இந்த அறிஞர்களை “கல்விசார் சுதந்திரத்துக்காகவும், இந்தியாவின் கடந்தகாலம் குறித்த வெளிப்படையான ஆராய்ச்சிக்காகவும்” எத்தகைய பேராபத்துகளையும் எதிர்த்துப் போராடும் போராளிகளாக முன்வைக்கிறார். கட்டுரையாளர் முன்வைக்கும் இத்தகைய சித்திரம் முற்றிலும் பிழையானது. பெரும்பாலான பத்திரிக்கையாளர்களைப் போல், திரிபாதி அறிவுசார் சுதந்திரம் சந்திக்கும் மற்றுமொரு பெரும் சவாலைப் புறக்கணிக்கிறார். அந்த சவால் பெரிதும் அறியப்படாத, ஆனால் பெரும் சேதம் விளைவிக்ககூடிய ஒன்று.

வெளித்தெரியாத தணிக்கை ஒன்று வெகு காலமாகவே அறிவுசார் துறைக்குள் பெரும் ஆதிக்கத்துடன் செயல்பட்டுவருகிறது. இந்தத் தணிக்கை “ஹிந்து” தணிக்கையைப் போன்று ஆரவாரமான விஷயம் இல்லை. கவர்ச்சியான இதழியல் செயல்பாடும் இல்லை. ஆனால், இந்தத் தணிக்கை மிகவும் ஆபத்தைத் தருவிக்கக் கூடியது; மக்கள் மனதைக் குறிப்பிட்ட வகைகளில் உருமாற்றம் செய்யக்கூடியது; அவர்கள் குரல்வளையை நெறித்து, அவர்கள் எழுத்தைக் குறிப்பிட்ட சில சித்தாந்த சட்டகங்களுக்குள் கட்டாயப்படுத்தி வைக்கிறது; ஒரு சில துரதிருஷ்டசாலிகளின் வேலை வாய்ப்புகளுக்கான நிரந்தர முற்றுப்புள்ளியாகவும் விளங்குகிறது. இந்தத் தணிக்கையைச் செயல்படுத்தும் ஒருவரைக் கண்டுகொள்வது மிகவும் கடினமான ஒன்று. இனவெறியைப் போல, இந்த தணிக்கையின் செயல்பாட்டை ஒரு சில தருணங்களில் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். இந்தியாவைக் குறித்த ஆய்வுகளில் தேவைப்படும் வெகு முக்கியமான மாற்றங்கள் ஏதும் நிகழாவண்ணம் வழிமறிக்கும் இந்தத் தணிக்கையை நாம் கட்டுப்படுத்த முயலவேண்டும். இனி தற்கால ஐரோப்பா, இந்தியா மற்றும் அமெரிக்காவில் நிலவும் இத்தகைய சூழல் குறித்த பதிவுகளைப் பார்க்கலாம். இவை உண்மைச் சூழலின் மிகைப்படுத்தப்பட்ட சித்தரிப்புகளாக தோன்றலாம், ஆனால் எளிதில் வெளித்தெரியாத பல விஷயங்களை அறிந்து கொள்ள இத்தகைய சித்தரிப்புகள் உதவும் என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள்.

ஐரோப்பிய அறிவுசார் துறையில் இந்த மறைமுகத் தணிக்கையின் போக்கை எளிதில் புரிந்துகொள்ளலாம். ஐரோப்பாவின் மனப்போக்கு இன்னும் காலனியம் மிகுந்த கடந்தகாலத்திலேயே இருக்கிறது. ஆசியநாடுகள் அசுர வளர்ச்சி பெற்று ஐரோப்பாவை ஒவ்வொரு வழியிலும் முந்திவரும் இந்த நிகழ்காலத்திலும் அவர்கள் இன்னும் உயர்வு மனப்பான்மையிலேயே இருக்கிறார்கள். ஐரோப்பியர்கள் தாங்கள் இன்னும் உலகின் உச்சாணிக்கொம்பில்தான் அமர்ந்திருக்கிறோம் என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்ளும் வகையில் தங்கள் அறிவுசார் துறைகளில் சில வழிமுறைகளைப் பின்பற்றிவருகிறார்கள். இந்த வழிமுறைகளில் இந்திய அறிஞர்களின் பங்கு மிக முக்கியமானது. இந்த அறிஞர்களிடமிருந்து பின்வரும் ஆய்வு முடிவுகளை ஐரோப்பியர்கள் எதிர்பார்க்கிறார்கள்: முதலில் இந்தியா ஒரு வலுவான பொருளாதார வளர்ச்சிப்பாதையில் செல்வதாக அங்கீகரித்துவிட வேண்டும். ஆனாலும் இந்தியாவில் கடும் ஏழ்மை, கொடும் ஜாதி அமைப்புகள், மூடநம்பிக்கைகள், மத மோதல்கள், பாலின ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல்கள், குழந்தைத் தொழிலாளர்கள், அதிகார வர்க்கத்தின் சுயநலம், லஞ்சம், கலகம், இயலாமை… இவையெல்லாம் நிலவுகின்றன என்று நிறுவ வேண்டும். இந்தப் பின்னடைவுகள் குறித்துத் தகுந்த ஆதாரங்களையும், தேவையான அடிக்குறிப்புகள், நேரடித் தகவல்களையும் அளிக்க வேண்டும். இவ்வகையில், ஜான் கிரே கூறுவதைப் போல, ஐரோப்பா தனக்குத் தானே பின்னிக்கொள்ளும் “பரிச்சயமில்லாத உலகத்தை எதிர்கொள்ள ஒரு வசதியான போர்வையைத்” தயாரிக்க இந்த அறிஞர்கள் தங்களாலான சேவைகளை அளிக்க வேண்டும். “எல்லாம் சரியாகவே இருக்கிறது; நாம் இன்னும் உலகத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறோம்” என்று மமதையிலேயே ஐரோப்பா எப்போதும் இருக்க வேண்டும்.

இன்றைய சூழலிலும் கூட சில அறிஞர்கள் ஐரோப்பிய நாகரிகம்தான் மேன்மையானது என்பதை அறிவிக்க எந்த அசூயையும் கொண்டிருக்கமாட்டார்கள். இருந்தாலும் ஐரோப்பிய மையப்பார்வையை அவர்கள் அங்கீகரிக்க மறுக்கும் அதே வேளையில், உலகக் கலாசாரங்களைக் குறித்து அணுகும்போது மட்டும் அவர்களிடையே நடுநிலை இருப்பதில்லை. ஐரோப்பிய அறிஞர்கள் இந்தியாவைக் குறித்துப் பேசும்போது அதன் அனைத்து இழிவுகளையும் கொடுமைகளையும் இந்தியக் கலாசாரத்துடன் இணைத்துப் பேசுவார்கள். உடன்கட்டை ஏறுதல், வரதட்சணை சாவுகள், குடும்ப வன்முறைகள், பெண் சிசுக்கொலை, சாதி ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் “ஹிந்து” மத அடிப்படைகளுடன் இணைத்துப் பேசப்படும். அதிலும் இந்தியாவின் இப்படிப்பட்ட ”இருண்ட பகுதிகளை” வெளிப்படுத்தும் இந்திய எழுத்தாளர்களைத் தலைமேல் வைத்துக் கொண்டாடும் ஐரோப்பா. இதற்கு மாறாக, ஐரோப்பிய சமூகங்களில் நிலவும் இழிவுகளையும் கொடுமைகளையும் வெறும் பிறழ்வுகளாக (aberration) மட்டுமே உருவகிக்கப்படும். இனவாதம், காலனிய இன அழிப்புகள், இரண்டு உலகப் போர்கள், யூத அழிப்பு (ஹோலோகாஸ்ட்), பாலியல் வன்முறை போன்றவை யாவும் மேன்மையான ஐரோப்பிய கலாசாரத்தின் உண்மையான அம்சங்களிலிருந்து விலகி நிற்கும் செயல்பாடுகளாக முன்வைக்கப்படும். இந்திய ஆய்வுகளில் ஈடுபடும் ஐரோப்பியர்களிடையே காணக்கிடைக்கும் இந்த முரண்பாட்டை யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.

வரலாற்றுரீதியாக, இந்திய அறிவுச்சூழலும் இதே சமன்பாடுகள் மீதுதான் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இந்தியாவை ஆண்ட காலனிய அரசு தங்கள் “நாகரிகப்படுத்தும்” நோக்கத்தை நியாயப்படுத்தவும், உலகுக்கு அறிவிக்கவும் வேண்டியும் ஒரு அறிவுசார் குழுவை ஊக்குவித்து வளர்த்தது. இந்த அறிவுசார் குழுவின் பணி, மேற்கத்திய அரசியல் சித்தாந்தம் எப்படி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்த உதவியது என்பதையும், எப்படி இந்தியா இந்தப் பாதையில் நடக்கக் காலனிய அரசு வழிகாட்டியது என்பதையும் அறிவிப்பதே. இந்திய வரலாறு, சமூகம், குறிப்பாக ஹிந்து மதம் இம்மூன்றும் மேற்கத்திய தாராளவாத அடிப்படைகளைக் கடுமையாக மறுதலித்தன என்று நிறுவுவதும் இக்குழுவின் வேலை. அதாவது இந்தியக் கலாசாரம் சமநிலையற்ற, அறிவுசாராத, கொடுங்கோல் ஆட்சி நிலவிய (“ஆணாதிக்க சமூகம்” இந்த வரிசையில் பின்னாளில் சேர்க்கப்பட்டது) ஒன்று என்று உலகெங்கும் சொல்வது இக்குழுவின் முக்கிய வேலை. காலனியத்திற்குப் பிந்தைய சுதந்திர இந்திய அரசு, காலனிய அரசின் கருத்தியல் சட்டகங்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டது. சமூக ஆய்வுத்துறைகளில் முந்தைய காலனிய அரசின் சமூக “சீரமைப்புத் திட்டங்களின்” வழிமுறை அப்படியே பிரதி எடுக்கப்பட்டது. உள்ளபடியே சொல்வதென்றால், இந்த ஆய்வுத்துறைகளில் இருக்கும் அறிஞர்கள் இரண்டு விதங்களில் செயலாற்றுவார்கள்: கருத்தியலாளர்கள் ஏதேனும் ஒரு மேற்கத்திய அரசியல் கருத்தியலின் முக்கியத்துவத்தைச் சொல்லி, அந்த கருத்தியலைத் தவிர இந்தியாவிற்கு வேறு மீட்சி இல்லை எனும் வகையில் இந்தியாவின் வரலாறையும், சமூகத்தையும் சித்தரிக்க முயல்வர். தகவல் சேகரிப்பாளர்கள் அரசின் இந்த சீர்திருத்தத் திட்டங்களுக்கு வசதியான தரவுகளைச் சேகரித்து அளிப்பர்.

காலத்தின் சுழற்சியில், மேற்சொன்ன காலனியம் உருவாக்கிச் சென்ற கவர்ச்சியான “கருத்தியல் நடைமுறை” தாராளவாதத்திலிருந்து மார்க்ஸியமாகவும், மீண்டும் தாராளவாதமாகவும் அமைந்தது. பொதுவாக இந்தக் காலனியக் கருத்தியல் நடைமுறையைப் பின்பற்றியவர்கள் தங்களை “மதச்சார்பற்றவர்கள்” என்று அழைத்துக்கொண்டனர். இவ்வனைவரும் ஒரு பொது மனப்பான்மையை கொண்டிருந்தனர்: அது, “ஹிந்து மதம் குறித்த ஒவ்வாமை”. இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்த ஐம்பது வருடங்களில், இந்த மதச்சார்பற்றவர்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அறிவுசார் மற்றும் நிறுவனம் சார்ந்த மேலாண்மையைக் கட்டியெழுப்பினர். இவர்களே பாடப்புத்தகங்களை எழுதினர். UGC, ICSSR மற்றும் ICHR போன்ற நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தினர். 1980-களில், உலகின் பல இடங்களில் ஆச்சார மார்க்சியம் வீழ்ச்சியைச் சந்தித்தபோதிலும், தில்லி மற்றும் கொல்கத்தாவின் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் காலனிய அரசுகளைப் போல செயல்படும் அளவுக்கு இந்த மதச்சார்பின்மைக் கருத்தியல் ஆழமாக ஊடுருவி விட்டிருந்தது. இவ்வாறு காலனியக் கருத்தியல் உருவாக்கிய ஆய்வாளர்கள் பாரிஸ் மற்றும் நியூயார்க்கிலிருந்து புத்தம் புதிய “மூலதத்துவங்களை” இறக்குமதி செய்து, பழைய கதையை புதிய சொற்றொடர்களில் எழுதினர்; பூக்கோவின் “கதையாடல்” (discourse) மற்றும் “நுண்ணதிகாரம்” (capillary power) அல்லது கிராம்சியின் “மேலாண்மை” (hegemony) போன்ற சொற்களை உபயோகித்து, இந்தியக் கலாசாரம் ஏற்றத்தாழ்வையும், ஆணாதிக்கத்தையும், அற வறட்சியையும் கொண்டிருந்ததாக நிறுவினர். தலைமை அறிஞர்களாக விளங்கிய இவர்களின் வார்த்தைகளை உதிரி சமூக விஞ்ஞானிகளும் வழிமொழிய வேண்டிய நிலை ஏற்பட்டது. வழிமொழிந்து நின்றவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலை (JNU) போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்பையும், மேற்கு நாடுகளிலிருந்து அழைப்பையும் பெற்றனர். மதச்சார்பின்மைவாதிகளின் ஆதிக்கம் மெல்ல மெல்ல ஓர் உள்ளார்ந்த தணிக்கையை உருப்பெருக்கிக் கொண்டே வந்தது. எந்த ஆய்வுகள் பதிக்கப்படவேண்டும், அரசின் நிதி உதவி எதற்கு ஒதுக்கப்படவேண்டும், எந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படவேண்டும் போன்றவற்றை இந்த உள் வட்டத் தணிக்கை முடிவு செய்தது.

அதே சமயம், இந்த அறிவுசார்குழுவுக்கும் அடிப்படை இந்திய சமூகத்துக்குமிடையே குறிப்பிடத்தகுந்த விலகல் ஏற்பட்டது. ஹிந்துத்துவத்தின் எழுச்சி கல்வித்துறையின் ஹிந்து மதம் மீதான ஒவ்வாமைக்கு எதிரான போக்கை உருவாக்கியது. பி.ஜே.பி. 1990-களின் இறுதியில் ஆட்சிக்கு வந்தபோது மதச்சார்பின்மைவாதிகள் ஏற்படுத்தியிருந்த உள் வட்டத் தணிக்கை முறையைத் தன்வயப்படுத்த முயன்றது; மதச்சார்பின்மையின் இடத்தை ஹிந்து தேசியம் கைப்பற்ற முயன்றது. பாடப்புத்தகங்களை எழுதுவது, பல்கலைக்கழகங்களையும், சில அரசு அமைப்புகளையும் கட்டுபடுத்துவது போன்றவை ஹிந்து தேசியவாதிகளிடம் சென்றது. இருந்தபோதும் மதச்சார்பின்மைவாதிகளைப் போல இவற்றை நுட்பமாகச் (subtle) செயல்படுத்தும் அளவுக்கு கல்வியறிவோ, லாகவமோ ஹிந்து தேசியவாதிகளிடம் இல்லை. இந்த முதிர்ச்சியற்ற நடவடிக்கைகள் இந்தியாவிலும், மேற்குலகிலும், பல கூக்குரல்கள் எழக் காரணமாயின. வரலாறு மாற்றி எழுதப்படுவதாகவும், கல்வித் துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டுவிட்டதாகவும், தணிக்கை மீண்டு எழுவதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஹிந்து தேசியவாதிகள் இதிலிருந்து ஒரு பாடத்தைத் தெளிவாக உணர்ந்திருப்பார்கள்: நுண்ணியமாக அதே சமயம் வெளிப்பார்வைக்கு தெரியாத வகையில் ஒரு உள்ளார்ந்த தணிக்கைச் சூழலைச் செயல்படுத்துவதை மதசார்பின்மைவாதிகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. எதிர்காலம் எப்படியிருந்தாலும், இப்போது இந்தியாவின் அறிவுச்சூழல் மதச்சார்பின்மை மற்றும் ஹிந்துத்துவா இடையே நடைபெறும் மோதலில் சிக்கிக்கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் நடைபெறும் இந்தியா மற்றும் இந்து மதம் குறித்த ஆய்வுகளின் இன்றைய போக்கை ஹிந்துத்துவத்தின் எழுச்சியும் நிர்ணயிக்கிறது. அமெரிக்காவில் உள்ளார்ந்த தணிக்கையாக விளங்குவது: பயம். “ஹிந்துத்துவர்” என்று முத்திரை குத்தப்படுவோமோ என்ற பயம். இத்தகைய மாசடைந்த ஒரு சூழலை உருவாக்கியதில் அமெரிக்க சமூகத்தின் மூன்று முக்கிய காரணிகள் உண்டு. ஒன்று, கடந்த சில பதின்ம வருடங்களாக நடைபெறும் உயர்கல்வி பெற்ற இந்தியர்களின் பெருமளவிலான குடியேற்றம். பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ள இந்த இந்தியர்களுக்கு அமெரிக்கப் பள்ளிகள் அளிக்கும் “ஹிந்து மதம்” மற்றும் இந்தியா குறித்தான சித்திரம் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. பல்கலைக்கழகத்திலும் போதுமான தத்துவத் துணையுடன் இதே கதை கற்பிக்கப்படுவதைப் பார்க்கிறார்கள். பல ஹிந்து-அமெரிக்கர்கள் பொறியியல், வணிகம், பிற துறைகளில் பெரும் சாதனையாளர்களாக விளங்குகின்றனர். இவர்களில் பலரும் ஏதேனும் ஒரு புள்ளியில் ஹிந்து தேசியம் குறித்த கருத்தியலை ஆதரிக்கிறார்கள். ”ஹிந்து மதம்” குறித்த மேற்கத்திய சித்திரிப்பால் அதிர்ச்சி அடையும் இவர்கள், தங்களின் தனிப்பட்ட “ஹிந்து”  சித்தரிப்புகளின் மூலம் இந்நிலையை மாற்றமுடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் 500 வருடத்தைய (மேற்கின்) கிழக்குலகு சார்ந்த பார்வைக்கு மாற்றான ஒரு பார்வையை உருவாக்கத் தங்கள் அறிவுத்திறன் மற்றும் தொழில் ரீதியான வெற்றிகளைத் தாண்டிய ஒன்று தேவை என்பதை அவர்கள் உணரவில்லை. இவர்களில் சிலர் தங்கள் ஓய்வுகாலத்தில் பொழுதுபோக்காக இந்தியாவைக் குறித்து எழுதும் கதைகள் எந்த ஒரு கருத்தியலாளராலும் தீவிரமாகப் பொருட்படுத்தப் படுவதில்லை.

இராண்டவது காரணி: அமெரிக்க சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் புரொடஸ்டண்ட் கிறித்துவத்தின் பல்வேறு வடிவங்கள் (அமைப்புகள்). இந்த அமைப்புகள் ஹிந்து மரபுகளை “பொய்யான மதத்தின்” காரணிகள் என்னும் வரிசையில் வைக்கின்றன. அரசியல் சரிநிலையின் காரணமாக கல்வியாளர்களால் முன்பு சொல்லிக்கொண்டு வந்தைதைப் போல ”பொய்யான மதத்தின்” கொடூரம் அல்லது அராஜகம் என்றெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது. ஆகையால், இந்த அறிஞர்கள் அனைவரும் இப்போது மதச்சார்பின்மை முகமூடி அணிந்து கொண்டு இந்தியாவின் சாதி, சமநிலையின்மை, ஆணாதிக்கம், ஏழ்மை போன்றவை வழியாக ஹிந்து மதத்தைக் கொடூரமான, மூடிய மனநிலை கொண்ட, தவறிழைக்கும் மதமாகச் சித்திரிக்கின்றனர். முன்பிருந்த ‘மத நிராகரிப்பு’ இப்போது ‘சமூக விமர்சனமாகி’ விட்டது. பெரும்பாலும் இவை இரண்டும் சேர்ந்தே நடைபெறுகின்றன. உதாரணமாக அமெரிக்க எவாஞ்சலிக நிறுவனங்கள், ஜாதி அமைப்பை விமர்சிக்கும் கல்வியாளர்களோடு சேர்ந்து கொண்டு இந்தியா ஹிந்து மதத்தைத் தாண்டி வெளியே வர வேண்டும் என்ற கருத்தியலைப் பரப்பி வருகின்றன. காஞ்சா இளையா, தலித் விடுதலைப் பேரவை (Dalit Freedom Network) ஆகியவை இவற்றுக்கு உதாரணங்கள்.

மூன்றாவது காரணி மிகவும் சுவாரசியமானது: அமெரிக்கக் கல்விச் சூழலில் நிலவும் உள்ளார்ந்த தணிக்கையின் சக்தி. இந்த சக்தியைச் செயல் இழக்கச்செய்வது மிகவும் கடினம். பனிப்போரின் போது செனட்டர் மெக்கார்த்தியால் செயல்படுத்தப்பட்ட ’சூனியக்காரிகளுக்கான வேட்டைகள்’ (The witch hunts) இத்தகைய சக்திகளை உருவாக்கியதில் பெரும் பங்காற்றின. தான் “துரோகி” என்று முத்திரை குத்த்ப்படுவோமோ என்ற பயம் அமெரிக்க மனதில் மிக ஆழமாக ஊடுருவியுள்ளது. பல இளம் அமெரிக்க அறிஞர்கள் ”நான் சரியென்று நினைப்பது இதுதான். ஆனாலும் இதை நான் பொதுவில் பேசமாட்டேன். ஏனெனில் பதவிக்காலம் ஆரம்பமாகும் நேரமிது” என்று சொல்லக்கூடியவர்கள். அமெரிக்காவில் இந்தியா குறித்த ஆய்வுகள் நடைபெறும் விதம் குறித்த எந்த நேரடி பரிச்சயமும் இல்லாதவர்களால் இந்த உண்மையை நிச்சயம் கற்பனைகூட செய்ய முடியாது. இளம் அறிஞர்களின் பதவிக்காலம் அவர்களை வந்தடையும் சமயம், அவர்கள் பொதுவாக (அமெரிக்க கல்விச்சூழலின்) ஆச்சாரத்திற்கு அடங்கிப் போயிருப்பார்கள்.

இந்த மூன்று காரணிகளும் சேர்ந்து ஒரு கவலையளிக்கும் கலவையை ஏற்படுத்தியிருக்கிறது. ’ஹிந்து-அமெரிக்கர்கள்’ (ஹிந்து மதம் குறித்து அனுதாபம் கொள்ளும் ஒரு சில கல்வித்துறை அறிஞர்கள்) ஹிந்துமதம் குறித்த கல்வித்துறை அறிஞர்களிடையே பனிப்போர் ஒன்று நிலவுகிறது. “கம்யூனிஸ்டுகள்” (commies), “இடதுசாரிகள்” அல்லது ”புறச் சமயத்தினர்” (கிறித்தவரோ யூதரோ இஸ்லாமியரோ அல்லாத பிற சமயத்தார்) போன்ற முத்திரை குத்தல்கள் இப்போதெல்லாம் எந்த பயத்தையும் ஏற்படுத்துவதில்லை. “ஹிந்துத்வா” என்ற முத்திரை இந்த இடத்தை எடுத்துக்கொண்டு விட்டது. யாரேனும் ஒருவர் மானுடத்திற்கு இந்திய கலாசாரத்தின் கொடை குறித்த குரலை எழுப்பினால், அவர் “ஹிந்து தேசியவாதி” என்றோ அல்லது ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட மூத்த கல்வித்துறை அறிஞர்களை மூர்க்கமாக எதிர்க்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் கூட்டத்தில் ஒருவர் என்றோ முத்திரை குத்தப்படும் அபாயம் உள்ளது. வெகுஜன ஊடகங்கள் இந்த மூத்த கல்வித்துறை அறிஞர்களைக் கல்விசார் சுதந்திரத்துக்காகப் போராடும் வீரமிக்க போராளிகளாக சித்தரிக்க விரும்புகின்றன. திரிபாதி தன்னுடைய கட்டுரையில் செய்வதைப் போல. இத்தகைய சித்திரம் நிதர்சனத்தை சிறிதும் பிரதிபலிப்பதில்லை. தங்கள் துறைகளில் மிகுந்த அதிகாரமிக்க இந்த மூத்த அறிஞர்களும் ஒரு சில சித்தாந்த/கருத்தியல் எல்லைகளை விதிக்கிறார்கள். இந்த எல்லைகளைத் தாண்ட முயலும் எவரும் இந்த அறிஞர்களின் கோபத்திற்கு உள்ளாகாமல் தப்பிக்க முடியாது. இந்த அறிஞர்களின் பரிந்துரைப்புக் கடிதங்களுக்கு இருக்கும் மதிப்பும், சக அறிஞர்கள் மீதான இவர்களின் கட்டுப்பாடும், அமெரிக்கக் கல்வித்துறை வட்டாரங்களில் பரப்பப்படும் வெற்று வதந்திகளும், இத்தகைய கண்ணுக்கு தெரியாத பல தடங்கல்களை உருவாக்குகின்றன. இந்த மூத்த அறிஞர்களின் சக்தி ஒருவர் பணியின் வளர்ச்சியை உருவாக்கவோ அல்லது முடக்கவோ வல்லமை மிக்கது. இந்த நிலை “அரசியல் சரிநிலைகளுக்கு எதிரான நிலையை” எடுப்பதில் பெரும் பயத்தை ஏற்படுத்துகிறது. இந்த பயம் இந்திய கலாசாரம் குறித்த ஆராய்ச்சிகளை முடக்குகிறது.

இந்திய மாணவர்கள் அச்சம் தருகிற ஒரு சூழலில் இருப்பதாக திரிபாதி சித்திரிக்கிறார். ஒரு விதத்தில், அவர்களுடைய சூழல் அவர் சித்தரிப்பதைவிட மோசமானதாக இருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், வேறு விதமாய்ப் பார்த்தால், சோதனை சூழ்ந்த காலம்தான் அறிவுத்தளங்களில் பெரும் மாறுதலுக்கான வாய்ப்பையும் கூடவே கொணரும். ஹிந்துக்கள் நடுவே தங்கள் மரபுகள் சித்திரிக்கப்படும் விதம் குறித்துக் கூடி வரும் அதிருப்தியை, இந்தியாவைப் பற்றி ஆய்பவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அதிருப்திக்கு ஒரு காரணி, இஸ்லாம் – கிருஸ்தவத்தை முன்மாதிரியாகக் கொண்டு, இந்து மரபுகளைச் சுத்திகரிக்கும் முயற்சிகளில் இருந்து எழுவது. மற்றும் ஆண் பெண் உறவுகள் குறித்து நடுத்தர மக்களிடையே நிலவும், மாற்றங்களுக்கு எதிரான மனோபாவத்தில் வேர் கொண்டது. ’மதச்சார்பின்மை’யின் மேலாதிக்கம் மீதும், ஹிந்து மதத்துக்கு எதிராக நிலவும் ஒவ்வாமை குறித்தும் அதிருப்தியின் இழைகள் இருக்கத்தான் செய்கின்றன. நன்மை நாடும் நேர் நோக்கும், தீர்க்கமான கல்வி அறிவும் உள்ளவர்கள் இந்த அதிருப்தியைச் சரியாகக் கவனித்து, அதற்கு விடை காண முயலாதவரை, ஹிந்து தேசியம் ஹிந்துக்களிடையே வளர்ந்துவரும் கோபத்தைத் தன் சொந்த லாபத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதே நடக்கும். இந்தப் பிரச்சினைகளுக்கு விடை காண, நாம் இந்தியா குறித்த ஆய்வுகளில் வெகுநாட்களாகவே இல்லாமல் போய்விட்ட அறிவுச் சுதந்திரம் உள்ள சூழலை உருவாக்கப் பாடுபட வேண்டும்.

 

 

குறிப்பு : கட்டுரையாளர் ஜேகப் த ரூவர் பெல்ஜியத்தின் கெண்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகப்  பணிப்புரிகிறார். அவுட்லுக் இதழில் வெளியான அவரது கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது.  இதை மொழிபெயர்த்துப் பிரசுரிக்க ஜேகப் த ரூவர் அனுமதி கொடுத்துள்ளார்.  அவருக்குச் சொல்வனம் நன்றி தெரிவிக்கிறது.

One Reply to “நாம் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம்?”

Comments are closed.