மாதிரிக் கணிப்பில் பிழையின் எல்லை

புகழொளி சுற்றி மின்னி வர பௌலா திரும்பி வந்தாள். அவள் அணிந்த சீருடையில் அவள் நிறுவனத்தின் போலி-ராணுவ பதக்கங்கள் கச்சிதமாய் ஒளிர்ந்தன. உய்ர் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வைர-இழைத் தடி போல கிண்ணென்று நேராகவிருந்தது அவளுடைய முதுகெலும்பு. நடைபாதையில் டக் டக்கென்று நடந்த அவள் காலடியோசை கேட்கவே, வீட்டு வாசலில் கடைசிப்படியில் அமர்ந்திருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். என் மடியில் ஒரு குழந்தை. பௌலாவின் முகம் மரபணுச் சிகிச்சையால் மாற்றம் கண்டிருந்தது. குறைகளே ஏதும் இல்லை. சருமத் துவாரங்கள் மிகப் பொடிசாக, தோல் இளமையோ இளமை. பச்சைக் கண்களுக்குக் கீழே, கன்னத்து எலும்புகள் அழகாக, செதுக்கப்பட்டாற் போலிருந்தன. ஆனால் ஒன்று… அந்த முகத்தை எப்படியும், எங்கேயும் நான் கண்டுபிடித்திருப்பேன்.  அவள் அதை எப்படி மாற்றியிருந்தாலும் எனக்குத் தப்பாது.

“கேரென் நீயா இது?” – அவள் குரலில் ஐயம்.

“பௌலா,” என்றேன்.

“கேரெனா இப்படி?” இந்த முறை நான் பதிலே சொல்லவில்லை. என் குழந்தை, பெரியவள், வந்தவளை என் கைகளின் அணைப்பில் இருந்தபடியே திரும்பி நோக்கினாள். அந்த மெல்லிய அசைவும் வாசற்படியை கிரீச்சிடச் செய்தது.

இந்த சுற்று வட்டாரமே இப்படித்தான். காலைப் பொழுது முழுதும் வாசற்படிகளிலும், தாழ்வாரங்களிலும் உட்கார்ந்து, குழந்தைகள் நடைபாதையில் விளையாடுவதை வேடிக்கை பார்த்தபடி, பெண்கள் கதையடிப்பார்கள். படிகள் எல்லாம் தொய்ந்திருக்கும். பெயிண்ட் உரிந்து தொங்கும். வீட்டின் முன்னே இருக்கும் புல்வெளியோ காலடி மிதிபட்டும், மூன்று சக்கர வாகனமோடியும், பிளாஸ்டிக் நீர்த்தொட்டிகள் உராய்ந்தும் அரைபட்டுத் தேய்ந்திருக்கும்.  தம் அம்மாக்களின் வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் பெண்களும் வீடு எடுத்து வசித்தனர். ஆண்டுதோறும் இருவருமே மேலும் பெருத்துக்கொண்டிருந்தனர். இங்கே சொற்பமான ஆண்களே இருந்தனர்.  இருந்த சிலரும் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்க முடிந்ததில்லை.

“என்னை எப்படிக் கண்டுபிடித்தாய்?” என்று கேட்டேன்.

“அது ஒன்றும் சிரமமாக இல்லை,” என்றாள் பௌலா. என் புன்னகையின் அர்த்தத்தை அவள் புரிந்து கொள்ளவில்லை என்பதை நான் அறிவேன். உண்மையிலே அது சிரமமாக இருந்திராது. சிரமமாக இருக்க வேண்டும் என நான் ஒருபோதும் விரும்பியதில்லை. இந்த ஐந்து ஆண்டுகளில் பௌலா என்னைத் தேடி வருவது இதுவே முதல் தடவை-துளியும் சந்தேகமில்லை… !

அவளுடைய கட்டான உடலை மிக ஜாக்கிரதையாக வாசற்படி மீது பொருத்திக் கொண்டாள். என் மடியிலிருந்தவாறே என் குட்டிப் பெண் லோலி அவளைத் துருதுருவென பார்த்தாள். பின் லோலி தன்  பொத்திய கைகளைத் திறந்து காட்டிப் புன்னகைத்தாள். ” ஏங்க! என்னோட தவளையைப் பார்க்கிறிங்களா?”

“ரொம்ப அழகா இருக்கே,” என்றாள் பௌலா. தன் வெறுப்பை அடக்க அவள் மிகவும் கஷப்பட்டாள். அதை நான் கவனித்தேன். அவள் இங்கே எல்லாவற்றையும் வெறுக்கிறாள். சோகமே உருவான இந்த தவளைக் கைதியை, லோலியின் அழுக்கு முகத்தை, பழசாகிப்  போன வாசற்புறத்தை, என் பரிதாபத் தோற்றத்தை… எல்லாமே  அவளுக்கு இளக்காரமாக இருந்த்து.

“கேரென்! நான் இங்கே வந்ததற்கு காரணம், நம் ப்ரொஜெக்டில் ஒரு சிக்கல். இன்னும் தெளிவாகச் சொன்னால், அதன் உட்புற சூத்திரங்களில் ஏதோ பிழை என்று நாங்கள் கருதுகிறோம். அதிலும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நானோ அசம்ப்ளர் கோடின் ஒரு பகுதியில் தான் பிழை, நீ கூட… அப்போது எங்களோடு இருந்தாய் .”

“ஒரு சிக்கலா,” நான் திரும்பச் சொன்னேன். வீட்டிற்குள்ளிருந்து ஒரு குழந்தை அழுதது. “ஒரு நிமிஷம்.”

லோலியை உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்றேன். லோரி தொட்டிலில் அழுது கொண்டிருந்தாள். அவளுடைய டயபர் நாறியது. அவளுடைய வாயில் ஒரு  ரப்பர் சுவைப்பானைக் கொடுத்தேன், என் இடக்கையால் தொட்டிலை ஆட்டினேன். என் வலக்கையால் டிம்மியைத் தொட்டிலிலிருந்து தூக்கினேன். அவன் முழித்துக் கொள்ளாததால் மெதுவாக உலுக்கினேன். இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வாசலுக்குச் சென்றேன். டிம்மியை தூக்கிப் போகும் தொட்டிலில் போட்டுவிட்டு, பௌலாவின் அருகே அமர்ந்தேன்.

“லோலி செல்லம்! போய் ஒரு டயபர் கொண்டு வா. கூடவே துடைக்கத் துணியும் எடுத்து வா.   தவளையை வேணும்னா உள்ளே கொண்டு போய்க்கோ.”

லோலி சென்றாள்; அவள் சமர்த்துக் குழந்தை. பௌலா அந்த இரட்டையர்களை வைத்த கண் வாங்காமல் வியப்போடு பார்த்தாள். நான் லோரியின் டயபரைக் கழற்றினேன். பௌலா முகத்தை சுளித்துக்கொண்டு தூர நகர்ந்தாள்.

“கேரென்! நான் சொல்வதைக் கேட்கிறாயா? இது முக்கியம்!”

“ம்ம்… கேட்கிறேன்.”

“எப்படியோ நானோ-கம்ப்யூடரின் கட்டளைகள் எல்லாம் அழிந்து விட்டன. பிரதான முடிவுகள் எல்லாம் வழக்கம் போல ஒத்துப் போனாலும்…” ஹும்…வழக்கம் போல! ஐந்து வருடங்களாக ஊடகங்கள் அனைத்தும் பிரதான முடிவுகளைத் தான் தலை மீது தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகின்றன.

“பன்னிரண்டாம் சந்ததி நானோ-அசெம்பிளருடைய புரதங்களில் சில வினோதமான மடிப்புகள் இருக்கின்றன.”

பன்னிரண்டாம் சந்ததி. ஒவ்வொரு அசெம்ப்ளருடன் இணைக்கப்பட்ட நானோ-கணினியும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தன்னையே பிரதி எடுத்துக் கொள்ளும். கணிப்புப் பிழைகளை சரிபார்த்துத் திருத்திக் கொள்ள ப்ராஜக்ட்டுக்கு இது தேவை. ஐந்தரை ஆண்டுகள் ஆகிவிட்டன. பன்னிரண்டாம் சந்ததி வந்திருக்க வேண்டிய சமயம்தான் இது.

eye-computer-chip“மேலும்…” பௌலா தொடர்ந்தாள். அவள் குரலில் இருந்த திணறலை நான் உணர்ந்தேன்,”எதிர்பாராத சில மேக்ரோ நிலை வளர்ச்சிகள் தெரிகின்றன. நானோ-கம்ப்யூடரின் புரத  இணைப்புகளுக்கும்  இந்த வளர்ச்சிகளுக்கும் தொடர்பு இருக்குமா என்று எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. தொடர்பு ஏதும் இல்லாமலும் இருக்கலாம். மாறுகிற மதிப்புகள் எல்லாவற்றையும்   கவனிக்க நாங்கள் இப்போது முயற்சி செய்கிறோம்.”

“என்னைத் தேடி வந்து கேட்கிறாய் என்றால் நீ இப்போது மிக்க் கோடியில் உள்ள மாறிகளோடு மண்டையை உடைத்துக் கொண்டிருக்க வேண்டும்.”

“ஆம். அதைத்தான் செய்கிறோம். கேரென்! நீ அதை இப்போதே செய்தாக வேண்டுமா?”

“ஆமாம்.” கறையாகிப் போன டயபரின் ஒரு முனையால் லோரியின் மலத்தைத் துடைத்தேன். லோலி குதித்து ஆடியபடி, ஒரு சுத்தமான துணியுடன் வீட்டுக்குள்ளிருந்து வந்தாள். என் அருகில்அமர்ந்து, தன் தவளையோடு கிசுகிசுத்தாள்.

பௌலா, “எனக்கு வேண்டியது என்னவென்றால்… ப்ராஜக்ட்டுக்கு வேண்டியது என்னவென்றால்” என்று ஆரம்பித்தாள் .

“நாம் தவளைகளை சேகரித்த கோடைக்காலம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? எனக்கு எட்டு வயதும் உனக்குப் பத்து வயதும் இருக்கலாம். நீ அந்தப் பரிசோதனையைப் பற்றி படித்துவிட்டு, பின் அதிலே வசப்பட்டுப் போனாய். அந்த சோதனையில் கொதிக்கும் நீரில் ஒரு தவளையை வீசுவார்கள். ஆனால் அது குதித்து ஓடிவிடும். பின் குளிர்ந்த நீரில் ஒரு தவளையை விட்டு, மெல்ல நீரை சூடேற்றி அதை கொதிநிலைக்கு கொண்டுவருவார்கள். முட்டாள் தவளையோ அங்கேயே கிடந்து சாகும். நினைவிருக்கிறதா?” நான் கேட்டேன்.

“கேரென்-“

“நான் உனக்காகப் பதினாறு தவளைகளைச் சேகரித்தேன். பின் நீ அவற்றைக் கொண்டு என்ன செய்வாய் என்று தெரிந்ததும் அழுதேன். அவற்றை விடுவிக்க முயற்சி செய்தேன். நீயோ விடாமல் எட்டை வேகவைத்தாய். மீதி எட்டும் ‘கண்ட்ரோல்கள்’. அதை நான் ஒத்துக் கொள்வேன் – நீ செய்தது  சரியான விஞ்ஞான முறைதான். மாதிரிக் கணிப்பில் பிழையின் எல்லையை குறைக்க, இப்படிச் செய்ய வேண்டும் என்று சொன்னாய்.”

“கேரென்- நாம் அப்போது  வெறும் குழந்தைகள்…”

சுத்தமான டயபரை லோரிக்கு மாட்டினேன். “எல்லாக் குழந்தைகளும் அப்படிப் பண்ணுவதில்லை. லோலி பண்ணமாட்டாள். அதெப்படி உனக்குத் தெரியும், இல்லையா? உன் கூட்டத்திலேயே ஒருவருக்குக் கூட குழந்தைகளே இல்லை. பௌலா, நீ ஒரு குழந்தையைப் பெற்றிருக்க வேண்டும்.”

அவள் தன் நடுக்கத்தைக் கஷ்டப்பட்டுதான்  மறைத்தாள். ஆனால், எங்களுக்குத் தெரிந்தவர்களில் பெரும்பான்மையும் அப்படித்தான் எண்ணினார்கள்.

“நீ திரும்ப வேலைக்கு வந்து, முன்பு  நீ கவனித்த அந்தச் சிறு பகுதியை  மீண்டும்  பார்த்துச் சரி செய்ய வேண்டியதுதான் இப்போது ப்ராஜெக்டின் தேவை. நானோ-அசம்ப்ளரின் அடுத்தடுத்த சந்ததியைத் தீர்மானிக்கும் புரதத் தொகுப்பின் கட்டளைகளில் நீ எதையாவது தவறவிட்டிருந்தால் தேடிக் கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டும்” என்றாள்.

“முடியாது.”

“இதில் உன் இஷ்டமென்று ஒன்றுமில்லை. இந்த மேக்ரோ நிலை சிக்கல்கள்… கேரென்! வெளிப்படியாகவே சொல்கிறேன். இது என்னவோ ஒரு புது வடிவமான புற்றுநோயைப் போல தெரிகிறது. யாரும் இதைப் போல பார்த்ததில்லை.  முற்றிலும் அறிந்திராத சில வினோதமான செல்களின் கட்டுப்பாடில்லாத வளர்ச்சி இது.”

“அப்படி என்றால் செல்லுலர் எந்திரத்தை வெளியே எடுத்துவிடு.” நாறும் டையபரைக் கசக்கி குழந்தைக்கு எட்டாத தூரத்தில் வைத்தேன். பௌலாவிற்கு அருகே.

“அப்படிச் செய்யமுடியாது என்று உனக்கே  தெரியாது? அந்தப் ப்ரொஜெக்டில் திரும்பிப் போக முடியாது.”

“”பல விஷயங்களிலுமே திரும்பிப் போக முடியாதுதான்.” லோரி சிணுங்கத் தொடங்கினாள். அவளைத் தூக்கினேன். என் மேல் சட்டையை  விலக்கி ஒரு மார்பை அவளுக்குத் தந்தேன். பேராசையுடன் உறிஞ்சினாள். பௌலா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் தேகத்துக்குள் நானோ இயந்திரத்தைப் பொருத்திக் கொண்டிருக்கிறாள். கடந்த ஐந்து ஆண்டுகளாக அது அவளைப் பிழையின்றி வைத்திருக்கிறது. அவள் மார்பகங்கள் ஒரு பொழுதும் வீங்காது, அங்கே நீல நிறத்தில் இரத்த நாளங்கள் ஓடாது, அவை தொங்காது.

“கேரென்! கொஞ்சம் கேளு….”

“இல்லை. நான் சொல்வதை நீ கேள்,” அமைதியாகச் சொன்னேன். “ஆய்வுக் குழுவில் நான் ஒரு சாதாரணமான, கடைநிலை உறுப்பினர் என்றும், உன் சகோதரியாக இருப்பதால் மட்டுமே சேர்க்கப்பட்டேன் என்றும் எட்டு ஆண்டுகளுக்கு முன் ஸ்வைக்லரை நம்ப வைத்தாய். நீ அதை எப்படிச் சாதித்தாய் என்று நான் வெகு நாளாய் வியந்திருக்கிறேன்- ஆமாம், நீ  அவனோடும் படுத்துக் கொண்டாயா என்ன? ஏழு ஆண்டுகளுக்கு முன்… இந்தப் ப்ராஜெக்ட் பெண் கருமுட்டைகள் மீது ஏற்படுத்தும் விளைவுகளை ஆராயும் உப்புப்பெறாத ஒரு மூலைக்கு என்னைத் தள்ளிவிட்டாய். பக்க விளைவாக வரும் மலட்டுத்தனத்தை தடுக்க மாற்றுவழி இல்லை என்று எல்லோருக்கும் தெரிந்ததால், ஒருவரும்  அதைக் கண்டுகொள்ளவில்லை. குறையே இல்லாத, தன்னையே பழுது பார்க்கும் உடலைப் பெற இது அதிகமான விலை என்று எவருக்கும் தோன்றவில்லை. எனக்கு மட்டுந்தான் அப்படி இருந்தது.”

பௌலா பதில் பேச்வில்லை. லோலி தன் தவளையுடன், துளைந்து விளையாடவிருந்த சிறு குட்டைக்குச் சென்று, தண்ணீரில் அதை மிக கவனமாக விட்டாள்.

“அது உப்புசப்பில்லாத பகுதியாக  இருந்தாலும், பெண் கருமுட்டை தொடர்பாகப் பணி செய்ய நான் தயங்கவில்லை. எல்லாப் புகழும் உனக்குத்தான் போயிற்று என்றாலும் கூட நான் பொருட்படுத்தவில்லை.  எனக்குதான் அதெல்லாம் பழகிப் போச்சே.  குழந்தைகளாக இருக்கும் போதே நீதான் எப்போதும் கௌபாய். நான் குதிரையாகத்தான் ஆக வேண்டும். நீ விண்வெளி வீரன். நானோ, நீ ஜெயித்துப்  பிடித்த வேற்று கிரகவாசி. இது நினைவிருக்கிறதா? ஒரு கிறிஸ்துமஸின் போது நீ உன் னுடைய முதல் முதல் வேதியியல் பெட்டியிலிருந்த அத்தனை இரசாயனங்களையும் தீர்த்துவிட்டு, பின் என்னுடையதை எல்லாம் திருடிக் கொண்டாய்.”

“குழந்தைப் பருவத்தின்  அற்ப நிகழ்ச்சிக்கெல்லாம் இப்போது இங்கே ஏதாவது அவசியம் இருக்கா என்ன…”

“ஆமாமாம், உனக்கெங்கே நினைவிருக்கும். நானும் அதையெல்லாம் பெரிசா நினைத்ததில்லை.  ஆனாலும் ஒரு விஷயத்தை  என்னாலஅப்படி விட்டு விட முடியவில்லை.  ஐந்து வருடங்களுக்கு முன் லோலி உண்டாகியதால் நான் ரொம்ப உடம்பு சுகமில்லாமல் படுத்துக்கிடந்த போது, நீ என் எல்லாக் குறிப்புகளையும் பிரதி எடுத்துக் கொண்டு,  அதெல்லாம்  உன் வேலை என்று சமர்ப்பித்தாய். என் உழைப்பை நீ உரிமை கொண்டாடினாய்.  திருடினாய். வேதியியல் பெட்டியிலிருந்து திருடினது போலவே! பின் என்னைப் ப்ராஜெக்டிலிருந்து மெள்ளக் கழட்டியும் விட்டாய்.”

“நீ செய்தது ரொம்பச் சின்ன விஷயம்…”

“அது அவ்வளவு சின்ன வேலை என்றால் அப்புறம் என் உதவியைக் கேட்க இங்கே ஏன் வந்தாயாம்?  நான்தானாகட்டும், நீ கேட்பதைச் செய்வேன் என்று உன்னால் எப்படி அரை நொடி கூட  கற்பனை செய்ய முடிந்தது?”

அவள் எதையோ கணக்குப் பண்ணியபடியே என்னை முறைத்தாள்.  பதிலுக்கு நானும் அசங்காமல் முறைத்தேன். நான் இப்படி நிதானமாக இருந்து பௌலா பார்த்ததில்லை. நான் அதைக் கவனித்தேன். நான் எப்போதுமே பரபரப்பானவள், நிதானமில்லாதவள், உறுதி அற்றவள் – அப்படித்தான் ஸ்வைக்லரிடம் அவள் போட்டுக் கொடுத்தாள். நான் பாதுகாப்புக்கு ஆபத்தானவளாம்.

டிம்மி தூக்கிப் போகும் தொட்டிலிலிருந்து சிணுங்கினான். லோரிக்கு பாலூட்டியபடியே எழுந்தேன். மறுகையால் அவனை அள்ளிக் கொண்டு மறுபடி படியில் உட்கார்ந்தேன். லோரிக்குப் போக டிம்மிக்கும் என் மடியில் இடம் பண்ணிக் கொண்டு என் சட்டையைப் பின்னுக்குத் தள்ளினேன். மற்றொரு மார்பைத் தந்தேன். இம்முறை பௌலா முகஞ்சுளிப்பதைத் தடுத்துக் கொண்டாள்.

“கேரென்! நான் செய்தது தவறுதான். இப்போது புரிந்து கொண்டேன். எனக்காக வேண்டாம், ப்ராஜெக்டுக்காகவாவது நீ இதைச் செய்ய வேண்டும்-” என்றாள்.

“நீ தானே ப்ராஜெக்டே. ஸ்வைக்லரிடமிருந்தும், இந்த ப்ராஜெக்டுக்காக தங்கள் உயிரையே கொடுத்த மற்றவர்களிடமிருந்தும் நீ எல்லாப் பெருமையையும் பிடுங்கிக் கொண்டாயே, அந்தக் கணத்திலிருந்தே அப்படித்தானே இருக்கிறது! ‘அழகான இளம் விஞ்ஞானி மாசற்ற செல்லுக்கான மருந்தைத் தனக்கே ஊசியாய்ப் போட்டுச் சோதித்துக் கொண்டார்!’, ‘எப். டி. ஏ வின் குறைப் பார்வையைத் தாண்டித் தப்பிவர , என்ன தியாகம் செய்தாலும் ஒரு பொருட்டில்லை, விஞ்ஞானியின்  வீரமான அறிவிப்பு.”

பௌலா படக்கென்று கொட்டினாள், “உனக்குப் பொறாமை. உன்னைக் கவனிக்க யாருமில்லாது போய்விட்டாய், நான் பிரபலமாகிவிட்டேன். நீ கந்தலாகிவிட்டாய், நான் அழகியாய் இருக்கிறேன். நீ-“

“ஒரு பாலூட்டும் பசுமாடு? நீ ஒரு அறிவாளியான ஆராச்சியாளர்? அப்படித்தானே? அப்படி என்றால் உன் ஆராச்சியின் சிக்கல்களை நீயே தீர்த்துக்கொளளேன்.”

“இது உன் பகுதி-“

“ஓ, பௌலா! அவை எல்லாமே என்னுடைய பகுதிகளாகத்தான் இருந்தன. நீ செய்ததை விட அதிகமான அடிப்படை ஆராய்ச்சியை எல்லாம் நான்தான் செய்திருக்கிறேன். அது உனக்கும் தெரியும். ஆனால் உனக்கு ஸ்வைக்லரிடம் எப்படி உன்னைக் காட்டிக் கொள்வது என்றும், முக்கியமான நேரங்களில் முக்கியமான முடிவுகளை எப்படி அறிவிப்பதென்றும், சரியான தொடர்புகளை எப்படி உருவாக்கிப் பராமரிப்பது என்றும் தெளிவாகத் தெரிந்திருந்தது… அதெல்லாம் உனக்குக் கை வந்த கலை.  நானோ,  இன்னுமே  நாம் இருவரும் கூட்டாளிகள் என்ற மாயையிலே இருந்தேன். தங்கமீனோடு ஒரு சுறாமீன் கூட்டு சேர்கிறது என்று அப்போது என் மரமண்டைக்கு புரியவில்லை.”

நீர்த்தொட்டியிலிருந்து லோலி தன் பெரிய கண்களால் எங்களையே உற்றுப் பார்த்தாள். “அம்மா…”

“ஒண்ணுமில்லைடா செல்லம்! அம்மாவுக்கு உன் கிட்ட கோபமில்லை. அங்கே பார்! உன் தவளையைப் பிடி பார்ப்போம். அது தத்தித் தத்தி ஓடுகிறது.”

அவள் சந்தோஷத்தில் கூவிக் கொண்டு தவளையைத் துரத்தினாள். பௌலா மெல்லச் சொன்னாள், “இத்தனை நாளாய் நீ இவ்வளவு கோபமாக இருந்தாய் என்று எனக்குத் துளியும் தெரியாது. கேரென், நீ மாறிவிட்டாய்.”

“ஆனால் நான் கோபமாக இல்லையே. இப்போது நிச்சயம்  கோபமாய் இல்லை. நான் முன்பு எப்படி இருந்தேன் என்று உனக்கு எப்பவுமே தெரிஞ்சதில்லை. தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீ நினைக்கக் கூட இல்லை.”

“விஞ்ஞான வாழ்க்கை வேண்டும் என்று நீ  ஒருபோதும்   விரும்பவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் விரும்பிய அளவு நிச்சயமாய் இல்லை.  குழந்தைகள் வேண்டும் என்று நீ எப்போதுமே விரும்பினாய்.  இதெல்லாம்… வேண்டும்.” அவள் கையை வீசி எல்லாவற்றையும் காட்டினாள்.  அலங்கோலமாக இருந்த வீட்டு முன்புறத்தை. டேவிட் போய் பதினெட்டு மாதங்கள் ஆகிவிட்டன. பணம் அனுப்புகிறான்.  அதெல்லாம்  ஒருபோதும் போதவில்லை.

“நான் இரண்டுக்கும் வாய்ப்பளிக்கும்  ஒரு விஞ்ஞானக் கூடத்தை நாடினேன். கூடவே, என் வேலைக்கான மதிப்பையும் நான் பெற விரும்பினேன். என்னுடையது எதுவோ அதைத்தான் வேண்டினேன்.  ஆனால் நீ உன்னுடையதோடு என்னுடையதையும் சேர்த்து எடுத்துக் கொண்டாயே, அதை எப்படிச் சாதித்தாய் பௌலா?”

“ஏனென்றால் நீ குழந்தையின் மலத்திலும், தவளைகளிலும் உன் கவனத்தை சிதறவிட்டாய்!” பௌலா கத்தினாள். முதல் தடவையாக, அவள் நிஜமாகவே ரொம்பவும் பயந்திருந்ததை நான் கண்டேன். பௌலா இது போல என்றுமே எதையும் ஒப்புக் கொண்டதில்லை. செயல் தந்திரத்தில் இன்று பிழை செய்துவிட்டாள். சரிந்து விட்ட தன் நிலையை மீட்டுக் கொள்ள அவள்  கட்டிழந்து கத்துவதை நான் கவனித்தேன்.  தன் கையை மேலோங்க வைக்க  இதுவும் ஒரு வழி.

நான் முந்திக்கொண்டேன். மேல் நிலையைக் கைப்பற்றினேன். “நீ டேவிடை தூண்டி இருக்கக் கூடாது. உனக்கு ஏற்கனவே ஸ்வைக்லர் இருந்தான்; நீ தான் டேவிடை எனக்கு விட்டாய். அதன் பிறகு எங்கள் மணவாழ்க்கை முன்பு போல இல்லை.”

“கேரென்! நான் செத்துக் கொண்டிருக்கிறேன்…” என்றாள் பௌலா.

பால்குடிப் பிள்ளைகளிடமிருந்து என் முகத்தைத் திருப்பி அவளைப் பார்த்தேன்.

“உண்மைதான். என் செல்லுலர் இயந்திரம் கதி மீறி ஓடுகிறது.  கடந்த சில மாதங்களாகத்தான். நானோ அசம்ப்ளர்கள் எல்லாம் வினோதமான அமைப்புகளையும், அழிக்கும் நொதிகளையும் உருவாக்குகின்றன. ஐந்து வருடங்களாக ஒழுங்காக பிரதி எடுத்துக் கொண்டு வந்தது, ஆனால் இப்போது… ஐந்து ஆண்டுகளாக திட்டமிட்டபடித்தான் செய்து வந்தது…”

“இப்பவுந்தான்” என்றேன்.

பௌலா அசையாமல் இருந்தாள். லோரி தூங்கிவிட்டாள். அவளை நடமாடும் தொட்டிலில் படுக்கவைத்து, டிம்மியை இன்னும் சௌகரியமாக மடியில் வைத்துக் கொண்டேன். லோலி தவளையைத் துரத்தியபடி, நீர்க்குட்டையைச் சுற்றி சுற்றி ஓடினாள். அவள் உதடு நீலமாகி விட்டதா என்று பார்க்க கண்களை இடுக்கினேன். குளிர் ஜாஸ்தியாக இருக்கிறது. குழந்தை நீண்ட நேரம் நீரில் விளையாடுவது நல்லதல்ல.

“கருப்பையிலும் நீ அசம்ப்ளர் எந்திரத்தை ப்ரோகிராம் செய்தாயா?” கேட்கும் பொது பௌலாவின் தொண்டை அடைத்தது.

“பெண்களின் அண்டச் சுரப்பிகளைப் பற்றி யாரும் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. கல்லூரி பட்டம் பெற்ற பெண்களில் பதினான்கு சதவிகிதம் மட்டுமே குழந்தை பெற்றுக் கொண்டு தம் வாழ்வை குழப்பிக் கொள்ள விரும்புகிறார்களாம். சமீபத்திய கருத்துக் கணிப்பு சொல்கிறது. மாதிரி கணிப்பில் பிழையின் எல்லை ஒரு விழுக்காடை விட குறைவே!”

“நீ நாசவேலை செய்தாயா?  நூற்றுக்கணக்கான பெண்கள் இப்போது இதை ஊசியால் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள், எவர் கண்டார் ஆயிரக் கணக்கில் கூட இருக்கலாம்…”

“ஓ! அதைத் திருப்பி விட ஒரு  மாற்று நொதியம் இருக்கிறது. பன்னிரண்டாம் சந்ததி பிரதி எடுப்பதற்குள் நீ அதை உட்கொண்டால் பூரண பலன் இருக்கும். உன் ஒருத்திக்குத் தான் மருந்து நீண்ட நாட்களுக்கு முன் செலுத்தப் பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் இந்த திருப்பும் மாற்றை கண்டுபிடித்தேன். அடுக்களைச் சிறை என்று உன் நண்பர்கள் அழைக்கக்கூடும் இந்த இடத்தில், ஏதாவது செய்வோமே என்று என் பழைய குறிப்புகளை நோண்டிக் கொண்டிருக்கும் வேளையில் அகப்பட்டது. தவிரவும், இதை என்னால் நிரூபிக்கவும் முடியும். என் எல்லாக் குறிப்புகளும் தேதி வாரியாக கணிணியால் குறிக்கப்பட்டவை.”

பௌலா கிசுகிசுத்தாள், “விஞ்ஞானிகள் இது போலச் செய்வதில்லை-“

“கேரென்-“

“மாற்று நொதி என்னவென்று தெரிந்து கொள்ள உனக்கு ஆர்வமாகயில்லையா, பௌலா? அது மனித கொரியோனிக் கொனாடோ ட்ரோபினிலிருந்து உருவாக்கப்பட்டது. அதுதான், கர்ப்பநிலை நொதி. பாவம் நீ… குழந்தை வேண்டும் என்று ஒருபோதும் நீ விரும்பவில்லை.”

அவள் என்னை முறைத்துப் பார்த்தபடியே இருந்தாள். லோலி தன் தவளையுடன் கூவிக் கொண்டும், நீர்த்தெளித்துக் கொண்டும் விளையாடியிருந்தாள். அவளுடைய உதடுகள் நீலமாகிக் கொண்டிருந்தன. நான் எழுந்து, டிம்மியை லோரிக்கு அருகே நடமாடும் தொட்டிலில் போட்டுவிட்டு, என் சட்டைப்  பித்தான்களை மாட்டிக்கொண்டேன்.

“இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் நீ ஒரு சோதனைப் பிழையை செய்து விட்டாய்.” நான் பௌலாவிடம் தொடர்ந்தேன், “மிகக் குறைவான மாதிரித் தொகையை நீ வைத்துக் கொண்டாய். சில நேரங்களில் ஒரு தவளை குதித்து ஓடிவிடும்.”

நீர்த்தொட்டியிலிருந்து என் பெண்ணைத் தூக்க நான் சென்றேன்.

nan4நான்ஸி க்ரெஸ் மிக்க வெற்றி கண்ட ஒரு அமெரிக்க அறிவியல் புனைகதை ஆசிரியர். 1948 இல் பிறந்த இவர் ‘78இலிருந்து எழுதுகிறார்.  1991ல் இவர் எழுதிய ‘ஸ்பெயினின் பிச்சைக்காரர்கள்’  என்ற குறுநாவல் இவரை புகழேணியில் ஏற்றியது.  அதை விரித்து எழுதி, 1993-’96 காலகட்டடத்தில் வெளிவந்த இவருடைய வலுவான மாற்றுக் கற்பனை நாவல்கள் மூன்றும் 90களில் மிகக் கவனிக்கப் பட்ட அறிவியல் நவீனங்கள். அந்நாவல்கள் – ஸ்பெயினின் பிச்சைக்காரர்கள் (1993), பிச்சைக்காரர்களும் தேர்ந்தெடுப்பாரும் (1994) பிச்சைக்காரர்களின் பவனி (1996).  [Beggars in Spain, Beggars and Choosers, Beggars ride].  சுமார் 20 நாவலகளும் பல சிறுகதைத் தொகுப்புகளும், கதைகள் எப்படி எழுதுவது என்று சொல்லித் தரும் நூல்களும் எழுதியுள்ள இவர் 2009 இல் கூட அமெரிக்க அறிவியல் நவீனங்களுக்கான முக்கியப் பரிசான ஹுகோ பரிசைத் தன் குறுநாவல் ஒன்றுக்குப் பெற்றார்.  பொதுவாக மரபணு மாற்றம் குறித்தும்,  மிக்க அறிவுள்ளவர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் உள்ள உறவு குறித்தும் நிறைய கதைகள் எழுதியவர்.  இங்கு பிரசுரமாகும் கதையான ‘Margin of Error’  குறித்து இவர் தன் வலைப் பக்கத்தில் எழுதியதன் சாரம் கீழே.

‘சில எழுத்தாளர்கள் நீளமாக எழுதுபவர்கள்.  சிலர் சுருக்கமாக.  நான் நடுவகை.  எனக்குப் பிடித்த வடிவம் குறுநாவல்.  என் விருப்பப்படி எழுத விட்டால் நான் அனேகமாகக் குறுநாவல்கள்தான் எழுதுவேன்.  பல நேரம் பிரசுரகர்த்தர்கள் நாவல் எழுதச் சொல்கிறார்கள்.  பதிப்பாசிரியர்களோ மிகச் சிறிய கதைகளை எழுதச் சொல்லித் துன்புறுத்துகிறார்கள். எல்லன் டாலோ, ஆம்னி பத்திரிகையின் புனை கதைப் பதிப்பாசிரியர், என்னை 2000 வார்த்தைகளுக்குள் ஒரு கதை கேட்டார். நான் சுணங்கினேன், அவர் விடுவதாயில்லை.  எனவே இதை 2200 வார்த்தைகளில் எழுதினேன்.  அதை விடக் குறுக்க என்னால் முடியவில்லை.  இத்தனைக்கும் இக்கதையில் ஒரே ஒரு காட்சிதான், மூன்றே பாத்திரங்கள்தான் பேசுகிறார்கள், ஒரு தவளை இருக்கிறது, இலலை என்கவில்லை.   இது ஒரு வழக்கமான கதையாயிருந்தால் தவளைக்கு ஒரு தடவையாவது (’ரிப்பிட்’ ) என்று குரல் கொடுக்க வாய்ப்பு கிட்டியிருக்கும். ’

இக்கதையைத் தமிழாக்கம் செய்த விஸ்வநாத் சங்கர் சொல்வனம் வாசகருக்கு முன்பே அறிமுகமானவர்.  இந்தத் தளத்தில் தேடினால் அவரது இதர எழுத்துகள் கிட்டும்.