வார்த்தைப் பாடாகிவிட்ட தமிழ் வாழ்க்கை

வெளியாகவிருக்கும் கவிஞர் அகஸ்டஸின்டீக்கடைச் சூரியன்” எனும் கவிதைத் தொகுப்பிற்கான முன்னுரை.

அகஸ்டஸின் முதல் கவிதையே வார்த்தைப் பாடு தான். முதல் கவிதை என்றால் இத்தொகுப்பில் முதலில் இடம் பெற அதை வைத்துள்ளார் அகஸ்டஸ். எண்ணிச் செய்தது தான். அதோடு கூட இன்னொரு குறிப்பும் தரவேண்டும். அக்கவிதை எதோ பத்திரிகையில் வெளிவந்த போது அவர் எனக்கு அதைக்காட்டினார். எனக்கு அதில் ஒரு சிக்கலான படிமம் இருந்ததாக நினைவு. அது எப்போதோ வெகு ஆண்டுகளுக்கு முன். 1987 என்று சொல்கிறார் அகஸ்டஸ். ஒரே ஒரு கவிதை அவ்வளவு காலம் முந்திப் படித்தது அதற்குப் பின் அவர் கவிதைகளைப் பார்த்ததில்லை. நானும் தில்லி விட்டு சென்னை வந்துவிட்டேன். அவர் தன் கவிதைகளை இவ்வளவு காலம் கழித்துத் தொகுக்கும்போது அது இப்போது வடிவ மாற்றம் பெற்று முன்னிடத்தைக் கோரியிருக்கிறது. தற்செயல் என்பதற்கும் மீறி வார்த்தை அகஸ்டஸின் பிரக்ஞையை ஆக்கிரமித்துள்ளது. அவரை மாத்திரம் என்ன, நம்மையும் தான்.

வார்த்தைப் பாடு என்று சொல்கிறார் அகஸ்டஸ். தொடர்ந்து நிகழும் ஒன்று, அது நம்மீது கொள்ளும் தாக்கம் என்று நான் புரிந்து கொள்கிறேன். நாற்பது வருஷங்களுக்கு முன் புவியரசு சிலுவைப்பாடு என்று ஒரு கவிதை எழுதியிருந்தார். இயேசு சிலுவையில் அறைபட்டதோடு அது முடியவில்லை. தொடர்ந்து தசாவ் முகாம்களில், வன்னியில், வியத் நாமில் இன்னும் எத்தனையோ அகதி, சிறை முகாம்களில் தொடர்கிறது சிலுவையில் அறைதல்.

சிலுவைப்பாடு போல வார்த்தைப் பாடும் அகஸ்டஸின் மனதில் விவிலியத்தோடு உறவு கொண்டதாக இருக்கலாம். எனக்கு அது தெரியாது. எனக்கு அது உணர்த்தும் பொருளைப் பற்றித் தான் நான் பேசமுடியும். இதில் எனக்கு தமிழ் வாழ்க்கை மிகவும் உதவுகிறது.

நமக்கு வார்த்தைப் பாடு. வார்த்தைகள் மனதில் உள்ளதை இன்னொருவருக்குச் சொல்ல. ஒரு உண்மையை, யதார்த்தத்தை இன்னொருவருக்குச் சொல்ல. ஆனால் சொல்ல ஏதும் இல்லாது, இல்லாததைச் சொல்ல வார்த்தைகள் வெள்ளமெனப் பெருக்கெடுக்க நாம் அதில் மூழ்கி மூச்சடைத்துப் போகிறோம். இது தமிழ் வாழ்வின் யதார்த்தம். வாழ்க்கையின் இடத்தை வார்த்தைகள் எடுத்துக்கொள்கின்றன.

வார்த்தைப் பாடு கவிதை இப்படி தொடங்குகிறது.

ஆதியில் வார்த்தை
ஆண்டவனிடம் இருந்தது
அவன் அதை மனிதனில் விதைக்க
முளைத்தது நாக்கு.
……

அன்றிலிருந்து பெய்கிறது
அடைமழை
புராணங்களும் புத்தகங்களும்
முணுமுணுத்துக்கொண்டிருக்கும்
வார்த்தை மதவிதானங்களிலிருந்து…

அனைத்தும்
வார்த்தைகளால் ஆகக் கடவது
என்றான் ஒருவன்….

என்னறையில் நீ
பேசிவிட்டுச் சென்றதும்
புழுவாய்ப் பூச்சியாய்
நெளிந்து நகர்ந்தன
உன் வார்த்தைகள்

கதவைத் திறந்து வைத்தேன்,
காற்று வந்து எடுத்துச் செல்ல
….
மேலே ஒட்டடையாய்
ஒருவன் வார்த்தைகள்
…..
உணர்ந்த போது
வீசியெறியப்படும் என் வார்த்தைகள்
அவரவர்க்குப் பேசியவை
அவரவர் காதுகளையடையும்
அது வரை
ஊமையென்று என்னையழைக்கும்
எவர் மீதும் கோபமில்லை
எனக்கு.

வார்த்தைகள் நம் தமிழ் வாழ்க்கையில் அர்த்தமிழந்து போயின. அவை எதையும் சொல்லாத வெற்று ஒலிகள். ஆனால் சொல்லிவிட்டதாக ஆணைகள் பிறக்கின்றன. ஒரு பயங்கர ஆக்கிரமிப்பு சக்தியாகிவிட்டன வார்த்தைகள். ஆணைகள் இன்றியே ஆணையாக உணரும் மந்தைத் தனம் தமிழருக்குப் பழகிவிட்டது.

இந்த வார்த்தைகளின் வெள்ளப் பெருக்கெடுப்பு நிகழாத காலத்திலேயே, வார்த்தைகள் அர்த்தமிழக்காத காலத்திலேயே ‘மௌனமே’ சக்தி வாய்ந்த மொழியாகக் கண்டறிந்தவர் இருந்தனர் தமிழ் நாட்டில்.

மௌனம் தான் கடவுளின் மொழி. ஆனால் நமக்குக் கிடைக்கும் மற்றதெல்லாம் மோசமான மொழிபெயர்ப்புகள் தான் என்று எங்கேயோ படித்தேன். சொன்னது யாரென்று நினைவில் இல்லை. அவன் ஒரு ஞானியாக இருக்க வேண்டும். நம்மிடையேயும் ஒரு ரமணர் இருந்தார்.

வார்த்தைகளால் நம் அலைக்கழிக்கப்படுவதைச் சொல்லும் அகஸ்டஸின் கவிதை மிக நீண்டது. அவரது கவிதை மொழி அவருக்கே உரியது. இந்த செய்தியையும் மொழியையும் நாம் வேறு எங்கு கேட்டிருக்கிறோம்?

‘மனிதனில் விதைக்க,
முளைத்தது நாக்கு..
…….
மாபெரும் வெளியில் நின்று
வார்த்தைகளை
வீசி விதைப்பதும் அறுப்பதும்….

வேறொரு கவிதையில்,

சொல்லொன்று
கல்லெனத் தாக்க
உன் தூக்கம் கலைந்து விடுகிறது

அகஸ்டஸ் தனக்கென ஒரு மொழியை உருவாக்கிக்கொண்டுள்ளார். அந்த மொழி நமக்குத் தரும் படிமங்கள் அவரது அனுபவம் தந்த சித்திரத்தின் படிமங்கள். வார்த்தைகள் கொட்டும் புராணங்கள் இன்று நம்மிடையே விதைக்கப்படும் புராணங்கள். இன்றைய வார்த்தைகள் கொட்டியவைதான். ஆனாலும் அவை புராணங்களே. உண்மையல்ல. தேர்தலின் போது கொட்டப்பட்ட வார்த்தைகளை நினைத்துப் பார்க்கலாம். எல்லாம் புராணங்கள்.

மகா யுத்தம் என்று ஒரு கவிதை. மகா யுத்தம் ஊர்ந்து பயந்தே வாழும் நத்தைக்குத் தான்.

உடல்மீது கவிந்து
அதன் உலகை மூடிப்
படர்ந்தது நிழல் திடீரென்று
பறக்கும் பறவையா
அசையும் மரக்கிளையா……

கடைசியில் கவிதை இப்படி முடிகிறது.

ஆடாது அசையாது
தூக்கி நிறுத்திய காலால்
பாத நிழலை
நிழற்சிலையென படர்த்திக்
காத்து நின்ற கோபம்
தலைக்குள்ளெரிய
சிறு நத்தையோட்டையே
வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த யானை
சிறு நகர்வு கண்டதும்
வெறியும் வெற்றியுமாய்ப் பிளிறி
நிலத்தோடு அறைந்து மூடியது
அந்தச் சிறு உலகத்தை

நத்தையும் யானையும் பொருதும் இந்த மகா யுத்தம் நம்மிடையே சிறிய பெரிய அளவில் என்றும் நடப்பது. அதிகாரத்திற்கும் எளிய மனிதனுக்கும் இடையே. அதை இப்படித் தான் சொல்லியாக வேண்டும், நாம் நசுக்கப் படாது தப்பிக்கவேண்டுமானால். நத்தை இன்னும் பல கவிதைகளில் அகஸ்டஸின் அடிக்கடி தோன்றும் படிமமாகிறது. யுத்த முயற்சி, அப்படியான ஒன்று.

தம் பெரும்பாலான கவிதைகளில் அகஸ்டஸ் இப்படித்தான் பேசுகிறார். நம் அவஸ்தைப் பாட்டை, படிமங்களாக, தனக்கேயான மொழியில்.

கோவிலின் பின் பக்கம்
குப்பைமேட்டில் குடியிருக்கும்
கடவுளுக்குச்
சன்னமான குரல்
நத்தைகளைப்போல
நகர்ந்து நாக்கு நுனியில் தொங்கி
சொல்லற்று விழும்
கல் நட்சத்திரம்….

மரித்தோர் காலத்தையெல்லாம்
மனப்பாடமாய்க் கொண்டிருக்கும்
கல்லறை மண்ணில்…….

வார்தைகள் பேய் மழையாய்க் கொட்டும் போது, அவை அர்த்தமிழந்துவிட்ட சூழலில், புதிய சொல்முறையும் மொழியும் ஒரு கவிஞனிடம் தானே உருவாகிவிடுகின்றன. அவன் நத்தை. அவன் ஓடு அவனைக் காப்பாற்றாது போய்விடும். பயந்து பயந்து நகர்ந்து தான் அவன் வாழவேண்டும்.

வேறொரு இடத்தில் தன்னைப் பற்றி (மட்டுமல்ல, நம்மில் யாரையும் பற்றித் தான்)

“இந்த உலகின் முதுகெலும்புகள்
பாம்புகளிடமும்
பல்லிகளிடமுமுள்ளன
என்னிடமுள்ளதோ
அடித்துத் துவைக்கப்பட்டு
நைந்துபோன துணிச்சுருள்”

வேறொரு காலத்தில் வேறொரு நாட்டில், ஒரு நாள் தான் ஒரு கரப்பானாக மாறிவிட்டதாக காஃப்கா உணருகிறான். அகஸ்டஸ் கவிதைகளைப் படிக்கும் போது நாம் மிதிபடவிருக்கும் நத்தையாக, துணிச் சுருளே முதுகெலும்பாக வாழ்வது தெரிகிறது.

படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து
வாக்கியமொன்று
படமெடுத்தாடி கொத்த….

கனவுகளிலும்
வார்த்தைகளிலுமிருந்து
மண் உதிர்ந்து அடிக்கடி
மண் புடல் மூடும்….

இது ‘வேர்கள்’ என்ற கவிதையிலிருந்து

கான்நிறை வான் கனத்து
பூட்டிய வாசல்முன் திரண்டு
ஏதோ சொல்லத் திணறுவது போல
தெரிந்தும் அதைக் கேட்க
பூமி கிடந்து பரப்பது போல

தமிழ் வாழ்க்கையில், தலைவர்களின் கனவுகளில், ஆசைகளில் சிலைகள் முக்கிய இடம் கொண்டுள்ளன. ‘சிலைகள் நகரும் நேரம், சிலைகள் வளரும் காலம், சிலைகள் அமைதி இழக்கும் நாட்கள்’ எல்லாம் நீண்ட கவிதைகள். அவை சொல்வது என்ன என்று கோடி காட்டியாயிற்று. சொல்லும் பொருளும், சொல்முறையும், மொழியும் ஒரு கவிஞனுக்கே உரியன. மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட கவிதை பற்றி ஒன்று சொல்லத் தோன்றுகிறது. அகஸ்டஸ் ரோடானின் சிலைகள் முழுக்க வடிவமைக்கப்பட்டதாக இராது. கற்பாறையிலிருந்து வடிவம் பெற்று எழுந்துள்ளதான தோற்றம் தர, சிலையின் அடிப்பாகம் செதுக்கப்படாமலேயே விடப்பட்டிருக்கும். இனி அகஸ்டஸின் கவிதை. இரண்டு படிமங்கள் ஒன்று இடுப்பளவு கடலில் அலையாட நிற்கும் உருவமும், இடுப்பளவு செதுக்கப்பட்ட சிலை, அகஸ்டஸ் ரோடானின் பாணியில்.

இடுப்பு வரை அலையாடி
விளையாடிக் கிடப்பது
கடல் தானென்றால்
கைகளால் முன்னேறி
வெளிவந்து விடலாம் தான்

கடலல்ல
கருங்கற்பாறை
இடுப்புக்குக்கீழே இறுகிக் கிடக்க
யோசித்தபடியே டீ குடித்து
பீடிபுகையை முகத்தில் ஊதுகின்ற
சிற்பியையே
வெறித்துக்கொண்டிருந்தது
தலையிலிருந்து
இடுப்பு வரை
செதுக்கிவிடப்பட்ட சிலை.

இது போல, இரு நிலக் காதல் என்ற கவிதையில்

காதலியொருத்தி நேரம் பார்த்துத்
தன் காதலனை
ரகசியமாய் ஒளித்துக்
கூட்டிச் செல்வது போல…..

வெண் பறவையொன்று
கறுப்புப் பறவையுடன்
பறந்து சென்றது….

இப்படி வேறு செய்தி சொல்லும் கவிதைகளும் உண்டு. கடை, கையடக்கப் பிரதி, தலைக்கதவு போன்ற கவிதைகள். அஞ்சலி என்ற கவிதை எழுதிய மனச்சாய்வு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

உங்கள் தலையணையைச் சுற்றி
வார்த்தைகள் சிந்திக்கிடந்தன
நீங்கள் ஒருவரையொருவர்
வீரர் என்றீர்கள்

நான் கண்டதில்லையுங்கள்
விற்களையும் வாட்களையும்

இந்தக் கள்ளப் புன்னகை தான் வார்த்தைப்பாடுகளிடையே வாழ நமக்குக் கற்றுக்கொடுக்கும். தில்லி இந்திரபிரஸ்தத்தில் வாங்கிய நண்டுகளில் ஒன்றை குழந்தைகள் விளையாட தூத்துக்குடி எடுத்துச் சென்றால், அது கடல் நோக்கி விரைவதைச் சொல்லும் வீடு பேறு. எப்படியும் நத்தைகளும் வாழக் கற்றுக்கொண்டுள்ளன (யுத்த முயற்சி)

அகஸ்டஸின் கவிதை மொழியும் அவர் கவிதை தரும் செய்திகளும் நமக்கு வேண்டும். அவை தமிழுக்கு வேண்டிய சேர்க்கை.