மகரந்தம்

ரஷ்ய சிறைகள் பிரசவிக்கும் உலக இலக்கியம்

சிறையில் இருக்கும் மனிதர்களின் எழுத்துகளைப் பிரசுரித்துப் பெயர் வாங்குவது என்பது ரஷ்யாவுக்கும், ரஷ்யர்களுக்கும் கை வந்த கலை. சாகரொவ், சோல்ஷெனிட்சின், என்று துவங்கி ஒரு பெரிய பட்டாளமே ரஷ்யச் சிறைகளில் இருந்திருக்கிறார்கள். அவர்களில் பலரும் உள்ளே இருந்தபடி காகிதங்களைக் கடத்தியோ, லஞ்சம் கொடுத்து எழுதியவற்றை வெளியே அனுப்பியோ ஏதோ வகைகளில் இலக்கியத்தை, பல வகை சிந்தனைகளை உலகுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இப்போது ஒரு முன்னாள் கோடீஸ்வரர், பூடினின் அரசியலை, அதான் முன்னாள் ரஷ்ய, மேலும் உலகக் கம்யூனிஸ்டுகளின் ஆதர்ச ’ஜனநாயக’முன்னணிப் படையான கே.ஜி.பி எனப்படும் ரஷ்ய ரகசியப் போலிஸ் படையின் ஆட்சியை எதிர்த்ததால் இன்று நீண்ட நாள் சிறையில் இருக்கிறார். அவருடைய சமீபத்துக் கடிதங்களுக்கு ஒரு இலக்கியப் பரிசு கிட்டி இருக்கிறது. அதுவும் ரஷ்ய பாரம்பரியம்தான். இந்த சுட்டியில் இந்தப் பரிசு பற்றி படிக்கலாம். ரஷ்யச் சிறைகள் என்னவொரு மாதிரி வெஞ்சிறைகள் என்பதைச் சுட்டும் ஒரு கட்டுரை இங்கே.

அமேசான் கிண்டிலில் இலவச புத்தகங்கள்

கேள்வி : அமேசானின் கிண்டிலில்(Kindle) ஒரு புத்தகத்தின் விற்பனையை முதலிடத்திற்க்கு கொண்டு வருவது எப்படி?

பதில் : அதை இலவசமாக தந்துவிடுவது தான்.

பல புத்தக வெளியீட்டாளர்கள் அவ்வளவாக கவனிக்கப்படாத ஒரு எழுத்தாளரின் புத்தகத்தை இலவசமாக வெளியிடுகிறார்கள். அந்த புத்தகத்தை படித்த வாசகர்கள் அந்த ஆசிரியரின் இதர படைப்புகளை நிச்சயம் பணம் கொடுத்து வாங்கத் தயாராக இருப்பார் என்பது பதிப்பாளர்களின் நம்பிக்கை. இதே நம்பிக்கை நம் தமிழ் பதிப்பாளர்களிடமும் இருப்பதாக எண்ணத்தோன்றுகிறது. ஆனால் இந்த வாதத்தை முற்றிலும் மறுக்கும் வேறு சில தயாரிப்பாளர்கள், இது போன்ற செயல்கள் புத்தகத்தின் மதிப்பை குறைத்துவிடும் என்றும், எழுத்தாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும் சொல்கின்றனர். இந்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்த ஒரு கட்டுரையை இங்கே வாசிக்கலாம். எது எப்படியோ வாசகர்களின் பாடு கொண்டாட்டம் தான்.  இந்த இதழில் மின்புத்தகங்கள் பற்றியும் அவை எப்படி வாசகர்களின் வாழ்வை மாற்றி அமைக்க முடியும் என்பது பற்றியும் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.  அதையும் படியுங்கள்.

உங்களை சுற்றி இருக்கும் பூச்சிகள்

ஒரு கன சதுர அடி என்பது அத்தனை பெரிய பரப்போ, இடமோ இல்லைதானே? ஆனால் ஒரு கனசதுர அடியில் என்ன பார்க்க முடியும் என்று இரு நேஷனல் ஜ்யொக்ராஃபிக் ஒளிப் படக்காரர்கள் முயன்று பார்த்தார்கள். உலகின் பல இடங்களில் அவர்கள் கண்டவற்றைப் படமாகவும் விவரணையாகவும் இங்கே பார்க்கலாம். ஒரு கன சதுர அடியில் இத்தனை இருந்தால் நம் அன்றாட வாழ்வில் எத்தனை ஜீவராசிகள் நம்மைச் சுற்றி வாழ்கின்றன என்று நமக்கு உடனே யோசனை வரும். ஜைனர்கள் வாயை மூடித் துணிப் பட்டி கட்டி, தரையை மயில் பீலியால் பெருக்கிக் கொண்டு போவதில் ஏதோ அர்த்தம் இருக்கிறது என்று இதைப் பார்த்தால் தோன்றும்.

உலக இலக்கிய வம்புகள்

தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள் பல குழுக்களாகப் பிரிந்து செயல்படுவது எல்லாருக்கும் தெரியும். இதில் அரசியல் சார்பு என்பது ஒரு சிறு தளம், அதை ஒட்டி ஜாதி அபிமானம், ஜாதி வெறுப்பு, மதப் பிடிப்பு, மதப் பீடிப்பு, இனச் சாய்வு அல்லது வெறுப்பு, மொழிப் பிரிவுகள் – தமிழரிடையே என்ன மொழிப் பிரிவு என்று கேட்க மாட்டீர்கள் என்று தெரியும்- வசிப்பிடம், பிறப்பிடம், வளர்ப்பிடம் சார்ந்த பார்வைகள் என்று என்னென்ன விதங்களில் பிரிந்து கூறு கூறாகக் கட்ட முடியுமோ அப்படி எல்லாம் பிளவுகளைப் பார்க்கலாம். இதைத் தாண்டி, பொது ஜன ஊடகம், யாரும் படிக்காத பத்திரிகை/ஊடகம், வெற்றி கண்டவர், வெற்றி என்றால் என்னவென்றே தெரியாதவர், ‘வசதியானவர்’, வசதியைக் கண்டவர், வசதியைப் பிறருக்கு விநியோகிக்கவும் தெரிந்தவர். அரசுப் பணத்தைத் தன் பணம் போல வழங்கிப் பெயர் பெறுபவர், நிரந்தர ஜால்ரா, நிரந்தர ‘பீடாதிபதிகள்’ என்றெல்லாம் வேறு பிரிவினை உண்டு. இதில் எப்போதும் அமிலத்தைக் கொட்டியே பிரபலமானவர்கள், எல்லாருக்கும் நல்லவராக இருக்க முயல்பவர் என்று வேறு சில வகைகள் உண்டு. ஆனால் இதெல்லாம் தமிழ நாட்டிற்கு மட்டும் உள்ள குணாதிசயங்களா என்றால் இல்லை என்று சொல்ல வேண்டும். ஊருக்கு ஊர் குப்பை மேடு இல்லாமலா போகும்? ஆங்கில எழுத்தாள உலகில் என்னென்ன காழ்ப்புகள் கடந்த இரு நூறாண்டுகளில் இருந்தன என்று சுருக்கமாக ஆனால் ஒரு சிறிது ஹாஸ்ய உணர்வோடு சொல்லும் ஒரு கட்டுரை இதோ.

நச்சுக் கப்பல்கள்
1979 இலிருந்து 2001 வரையான காலகட்டத்தில் ஏராளமான கப்பல்கள் நடுக்கடலில் மூழ்கினவாம்.  ‘79 இலிருந்து 1995  வரை யூரோப்பியக் கப்பல்களில் மட்டுமே, வருடத்துக்கு இரண்டு. 1995க்குப் பிறகு வருடத்துக்கு ஒன்பது. இதென்னடா புதுப் பிரச்சினை என்று சில யூரோப்பிய நாடுகள் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கின்றன.  ஸ்காலியா என்கிற இத்தாலிய இயற்பியல் பேராசிரியர்,  இந்த மர்மத்தை முடிச்சவிழ்த்து விட்டதாகச் சொல்கிறாராம்.  எல்லாம் பணம் பண்ணுகிற வேலைதாங்க. அனேகக் கப்பல் மூழ்கலிலும் அக்கப்பல்களில் இருந்த மாலுமிகள் அது மூழகுவதற்கு இரண்டு மூன்று தினம் முன்னாலேயே கப்பலை விட்டுத் தப்பித்திருக்கிறார்கள்.  ஸ்காலியா இந்தக் கப்பல்களெல்லாம் ‘விஷக் கப்பல்கள்’  என்கிறார். அதாவது கொடும் நச்சுக் கழிவுகளைச் சுமந்து திரிகிற கப்பல்கள் இவை. கடந்த சில பத்தாண்டுகளாக உலக நாடுகள் நச்சுக் கழிவுகளை ஏழை நாடுகள் மீது தள்ளி விடுவதைத் தடுத்து நிறுத்த கடும் சட்டங்களை உருவாக்கி அவற்றை அமல்படுத்தவும் துவங்கி இருப்பதால் இக்கப்பல்களை அவற்றின் நிறுவனங்கள் ஒழித்துக் கட்ட ஆரம்பித்து விட்டன என்கிறார்.  என்னென்ன நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டன என்று பாருங்கள்.  ஒரு நாடு இட்டலி,  இன்னொன்று… வெறென்ன,  சொமாலியா.  சிறு கட்டுரையை இங்கே பார்க்கலாம்.  எழுதியது நம்ம ஊர்லேருந்து போனவங்கதான், மதுஸ்ரீ முகர்ஜி.