பூவா தலையா

மேலே பார்க்கும் இந்த ஃபிளக்ஸ் பேனர் (தமிழ் பெயர் டிஜிட்டல் பேனர்), 3 பாஸ் முறையில், பத்துக்கு பத்து என்ற அளவில், கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் செலவில் அவசர அவசரமாக அச்சடிக்கப்பட்டது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், வட்டம் என்ற நீண்ட பட்டியலினால் கொஞ்சம் கனமாகவே இருந்தது. ஏழைகளின் காவலன் என்ற வாசகத்துக்கு கீழே, தலைவர் இரு கரம்கூப்பி வணக்கம் சொல்லும் படத்தில் பவழ மோதிரம் பளிச் என்று தெரிந்தது. வட்டங்களின் படங்கள் சதுரமாக ஸ்டாம்ப் சைஸுக்கு கீழே அடுக்கியிருந்தது.

தமிழ்நாட்டில் ஒரு பட்டி. வெயில் வழக்கதை விட அதிகமாக அடிக்கும் ஒரு நாள்.

மெயின் ரோட்டிலிருந்து பிரியும் அந்த ரோட்டில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் போனால், “மங்கலம் காலனி வருக! வருக!” என்று வரவேற்கும். அதைத் தாண்டிப் போனால் மங்கலம் காலனி எக்ஸ்டென்ஷன். தபால்காரரைத் தவிர்த்து வேறு யாரைக் கேட்டாலும் “எக்ஸ்டன்ஷனா ? என்று வானத்தைப் பார்த்துவிட்டு “அங்கே சிவா மெடிக்கல்ஸுல கேளுங்க” என்பார்கள். பிரசித்தி பெற்ற சிவா மெடிக்கல்ஸ் பக்கத்தில் குப்பைத் தொட்டி மறைத்திருக்கும் மஞ்சள் கலர் பெயிண்ட் அடித்த கல்லில் எழுதியிருக்கும் “மூன்றாவது மெயினை”க் கடந்து உள்ளே சென்றால், “சுகுணா சிக்கன்” என்ற போர்டுக்குக் கீழே சின்னதாக, “வேளாங்கன்னி மளிகை ஸ்டோர்ஸ்” என்று எழுதியிருப்பதைப் பார்க்கலாம். கடை வாசலிலிருந்து பார்த்தால் கோயில் கோபுரம் சின்னதாகத் தெரியும். பக்கத்தில் போனால் வாசலில் “உ” என்ற பிள்ளையார் சுழிக்கு கீழே “நவ சக்தி விநாயகர்” என்ற பலகை. அதற்குக் கீழேதான் சிவகாமி பூக்கடை. கடை என்றால் நிஜக் கடை இல்லை. தரையில் பிளாஸ்டிக் பேப்பர் போட்டு பந்து பந்தாகப் பூக்கள்.

சிவகாமிக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கும். ஒல்லியான உடம்பு. உதட்டு விரிசல்களில் வெற்றிலைக் கறை. பூவை முழம் போடும்போது முழங்கையில் சின்ன கோலம் பச்சை குத்தியிருப்பது தெரியும். காது குத்தியிருக்கும் இடத்தில் துந்து போகாமல் இருக்க ஈர்க்குச்சி. பக்கத்தில் போனால் ஒருவித வேப்ப எண்ணெய் வாசனை. எப்போதும் சிரித்த முகம்.

அன்று மதியம் பதினொரு மணி இருக்கும். இனிமேல் கோயிலுக்கு யாரும் வர மாட்டார்கள் என்று சிவகாமி கீழே பரப்பிவைத்திருக்கும் பூக்களை கூடையில் மூட்டைகட்ட ஆரம்பித்த சமயம் ஏர் ஹாரன் அலற, முன்பக்கம் கூட்டணிக் கட்சிக் கொடிகள் சொறுகியிருக்க, புழுதியைக் கிளப்பிக்கொண்டு வந்த டாட்டா சுமோ சிவகாமி இருக்கும் இடத்துக்கு வந்து நின்றது. புழுதிப் படலம் நிற்காமல் கோயில் வாசலில் சாராய வாசனையை விட்டுவிட்டு கடந்து சென்றது.

சிவகாமி உடனே ஒரு அர்ச்சனைத் தட்டை ரெடி செய்து அவர்கள் இறங்குவதற்குள், “இந்தாங்கையா அர்ச்சனைத் தட்டு. கோயில் மூடற சமயம் சீக்கிரம், சீக்கிரம்” என்றாள்.

செருப்புக் கடைச் சிறுவன் “அய்யரே, அய்யரே” என்று கத்திக்கொண்டு கோயில் உள்ளே ஓடினான்.

வண்டியை ஓட்டிய இளைஞன் வாயில் சிகரெட்டும், சுமோ இன்ஜினும் நிற்காமல் எரிந்து கொண்டிருந்தன. முன்சீட்டிலிருந்து இறங்கியவன் வண்டியில் இருந்து பாட்டில் தண்ணீரை எடுத்துக் கொப்பளித்துவிட்டு, கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு மேலும் கீழும் பார்த்தான்.

“இங்கே” என்று சிவகாமி பூ விற்கும் இடத்தைக் காண்பித்தான்.

வண்டியை ஓட்டியவன் அனாவசியத்துக்கு ஆக்ஸிலரேட்டரை அழுத்திக்கொண்டு தலையை ஆட்டினான்.

அர்ச்சனைத் தட்டை நீட்டியவாறே “கோயில் மூடப்போறாங்க. சீக்கிரம்” என்றவளை அலட்சியமாகப் பார்த்துவிட்டு அந்த இளைஞன் சுமோவில் ஒரு தாவு தாவி ஏறி உட்கார்ந்து கதவை மூடும் முன் ரிவர்ஸ் எடுக்கப்பட்டு, விட்ட புழுதியை எடுத்துக்கொண்டு கிளம்பியது.

சிவகாமிக்கு ஒன்றும் புரியாமல், பூப் பந்துகளை தண்ணீர் தெளித்து திரும்பவும் தன் கூடைக்குள் வைத்தபோது, “போயிட்டாங்களாக்கா?” என்று தன் இரண்டு ரூபாய் வருமானம் போன சோகமாகக் கேட்டான் செருப்புக் கடைச் சிறுவன்.

அதே நாள் சாயுங்காலம், வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சிவகாமி, “முழம் எட்டு ரூபாய்க்கு எடுத்துக்கோங்க” என்று வியாபாரம் செய்துகொண்டிருந்த சமயம், திரும்பவும் அதே சுமோ வர அதை கவனிக்கவில்லை.

“எந்திரிமா” என்ற குரல் கேட்டுத் திரும்பிய சிவகாமிக்கு, சாராய நெடியே அவர்களின் அடையாளத்தைத் காட்டிக்கொடுத்தது.

“என்ன?” என்றாள் புரியாமல்.

“எந்திரி, எந்திரி, குழி நோண்டணும்” என்று சொல்லி தன் வாயில் இருந்த பான்பராக்கைத் துப்பினான்.

சிவகாமிக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஏங்க வியாபார சமயம், அப்பறம்…” என்று ஏதோ சொல்லுவதற்குள் வண்டியிலிருந்து இறங்கியவன் அலாக்காக சிவகாமியின் மொத்தப் பூக்கடையை இரண்டு நுனியையும் கோவணம் மாதிரி சுருட்டி எங்கே போடுவது என்று யோசிப்பதற்குள், நடுவில் இருந்த ஓட்டையில் உதிரி பூக்கள் கொட்டியது. சிவகாமி பதறிப் போய் பூக்களை கூடையில் அள்ளிப் போட்டுக்கொண்டாள்.

வந்தவன் தன் கரை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சிவகாமி உட்காரும் இடத்தில் கடப்பாறையால் குழி தோண்ட ஆரம்பித்தான். அடியில் இருந்த கல் மீது பட்டு ‘நங்’ என்ற சத்தம் வர, ‘வக்காளி..’ என்று யாரையோ திட்டி விட்டு, அரை மணியில் அங்கு இரண்டு கம்பம் நிறுத்தப்பட்டு மோதிரக் கையால் வணக்கம் சொல்லும் தலைவர் சிவகாமியைப் பார்த்துச் சிரித்தார்.

கரை வேட்டி, “கிளம்புடா அடுத்த தெருவுக்குப் போகணும்” என்ற போது,

“அட தலைவர் படம்” என்றாள் சிவகாமி. வந்தவர்கள் அவளைத் திரும்பிப் பார்க்க “ஏங்க, தலைவர் படம் வைக்கணமுனு முன்னமே சொல்லக்கூடாதா?” என்று கோவித்துக்கொண்டே, தன் பூக்கூடையிலிருந்து ஒரு பந்துப் பூவை எடுத்து, “ஏங்க, இதைத் தலைவருக்கு போடுங்க” என்றாள்.

வந்தவர்கள் புரியாமல் பேனர் மீது அதை மாலையாகப் போட்டுவிட்டு, வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனார்கள்.

அவர்கள் போன பின்பு, கொஞ்சம் தள்ளி கடையை விரித்தாள். அடிக்கடி அண்ணாந்து பேனரைப் பார்த்துக்கொண்டாள். அவளிடம் அர்ச்சனைத் தட்டு வாங்கிக்கொண்டு ஏதோ மந்திரம் சொல்லிக்கொண்டே கோயிலுக்குள் போனவரை நிறுத்தி, “ஏங்க அதுல என்ன எழுதியிருக்கு கொஞ்சம் படிச்சுச் சொல்லுங்க” என்றாள்.

“அந்தப் படத்துல இருக்காரே அவருக்கு பிறந்தநாளாம். நாளைக்கு இங்கே வாழ்த்துக் கூட்டமாம்” என்று விட்ட இடத்திலிருந்து மந்திரத்தை சொல்லிக்கொண்டே சென்றார்.

அடுத்த நாள் காலையில் சிவகாமி வந்த போது ரோட்டில் இரண்டு பக்கமும், டியூப் லைட், ரோடு நடுவில் பள்ளம் தோண்டி சவுக்கு மரக் கம்பங்களில் கொடிகள். கம்பத்துக்குக் கம்பம் வாழை மரமும், போலீஸும் இருந்தார்கள். ரோடு நெடுகிலும் வளையம் வளையமாக கார்ப்பரேஷன்காரர்கள் கோலம் மாதிரி சுகாதாரத்துக்கு ஏதோ போட்டிருந்தார்கள். சாலையின் குறுக்கும் நெடுக்குமாக பிளாஸ்டிக் கொடித் தோரணங்கள்; ஷாமியானா போடப்பட்டு தண்ணீர்ப் பந்தல். தள்ளுவண்டியில் வேர்க்கடலை, லவுட் ஸ்பீக்கரில் பக்திப் பாடல்களும், நாக்க முக்கமுக்கவும் ரீமிக்ஸாகி தலைவர் புகழ் பாடிக்கொண்டிருக்கும் போது லாரியிலும், டிராக்டரிலும் மக்கள் வந்து இறங்கத் தொடங்கினார்கள்.

“இன்னும் சிறுது நேரத்தில் தலைவர் வருகிறார்” என்ற அறிவிப்பும் “கோயிலுக்குப் பின்புறம் பிரியாணி” என்ற அறிவிப்பும் வந்துக்கொண்டே இருந்தது.

“இப்போது எட்டாவது வட்டம், இலக்கியத் துணை தலைவர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்” என்று சொன்னவுடன் ஒருவர் மேடைக்கு வந்து “மேடையில் அமர்ந்திருக்கும்…” என்று எல்லோரையும் வரவேற்ற பொழுது மேடையில் இருந்த அனைவருக்கும் ஏதோ ஒரு பதவி இருந்தது தெரியவந்தது.

சிவகாமி பேனர் கீழே உட்கார்ந்திருந்தாள். அன்று கடை பரப்பவில்லை. எடுத்துக்கொண்டு வந்த ஒரு பூப்பந்தை மாலை மாதிரி தலைவர் மீது போட்டிருந்தாள். கூட்டம் அதிகமாக இருந்தாலும், கோயிலுக்குக் கூட்டம் வரவில்லை. கோயிலின் பெரிய கதவை மூடியிருந்தார்கள். வந்த சிலர் பெரிய கதவில் உள்ள சின்னக் கதவு வழியாகப் போய்விட்டு வந்தார்கள்.

“ஏங்கா இங்கேயே குந்திகிணு இருக்க. பிரியாணி துன்னல? சூப்பரா இருக்குதுகா. ஒரு முட்டை கூடக் கெடச்சுச்சு” என்று கையில் எடுத்து காண்பித்தான் செருப்பு கடைச் சிறுவன்.

“ப்ச், இல்லை. நீதான் எனக்கு ஒண்ணு எடுத்தாயேன்” என்ற சொல்லி பேனரை பார்த்த போது தலைவர் சிவகாமியைப் பார்த்து சிரித்தார்.

“இருக்கா வாங்கியாரேன்”, என்று தான் சாப்பிட்ட மீதியை மடித்து செருப்பு வைக்கும் அலமாரியின் ஒரு பொந்துக்குள் வைத்துவிட்டு. “பாத்துக்கக்கா” என்று ஸ்கூட்டர் மாதிரி சத்தம் செய்துகொண்டு ஓடினான்.

“இன்னும் சிறிது நேரத்தில் தலைவர் வருகிறார்” என்ற அறிவிப்பு “தலைவர் வந்துகொண்டே இருக்கிறார்” என்று மாறியதில் கூட்டம் பரபரத்தது.

ஒருவழியாக ராத்திரி பத்து மணிக்கு பேனரில் இருந்த தலைவர் உயிர்பெற்றுப் பேசத் தொடங்கினார். பேனரில் இருந்த அனைவரின் பெயரையும் குறிப்பிட்டபின், “தாய்மார்களே, பெரியோர்களே… அலைகடலென திரண்டு வந்திருக்கும் அன்பு நெஞ்சங்களே… வாழ்த்துச் சொன்ன.. ” என்று ஆரம்பித்துவிட்டு, எதிர்கட்சிக்கு ஏகப்பட்ட சவால் விட்டு, ஏதேதோ பேசிவிட்டு இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்” என்று சொன்னபோது பதினொன்றரை. கூட்டம் மெல்ல கலையத் தொடங்கிய போது, கோயிலுக்குப் பின்புறம் பிரியாணி வாசனையை மீறி சாராய வாசனை அடிக்கத் தொடங்கியது.

சிவகாமிக்கு அன்று ஏனோ வீட்டுக்கு போக வேண்டும் என்று தோன்றவில்லை. கோயில் பக்கத்தில் உள்ள அரச மரம் சுற்றி போன கும்பாபிஷேகத்துக்கு மிஞ்சிய சிமிண்டில் ஒரு மேடை கட்டியிருந்தார்கள்.அரச மர மேடையில் படுத்துக்கொண்டாள். அவள் தூங்கிய பின்பும் தலைவர் சிவகாமியை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார்.

மறுநாள் சூரியனும், சிவகாமியும் எழுந்த போது, மந்தார இலைகளில் பிரியாணி மிச்சங்களின் மீது ஈக்களும், பாலிதீன் பை குப்பைகளும், சில ஒற்றைச் செருப்புக்களும், மூத்திர நாற்றமுமாக அந்த இடமே மாறிப்போயிருந்தது. ஒரு மினி டெம்போ லாரியில் வந்தவர்கள் ரோட்டு நடுவில் இருக்கும் கொடிக் கம்பங்களை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள். பேப்பர் பொறுக்கும் கிழவி வாழை மரத்தைப் பிரித்து, அதிலிருக்கும் தண்டை எடுத்துக்கொண்டிருந்தாள். டியூப் லைட் அடுக்கப்பட்டது. பிளாஸ்டிக் கொடிகள் விடுதலை பெற்று எல்லா இடங்களிலும் பறந்துகொண்டிருந்தன.

சுமோவில் வந்தவர்கள் பேனரைக் கழற்ற முற்பட்ட போது சிவகாமி, “ஐயா எனக்கு தலைவர் படம் வேணுமுங்க” என்று கெஞ்சலாக கேட்டாள்.

“நீ யார்?” என்பதைப் போல் அவர்கள் பார்க்க,

“ஐயா நாந்தாங்க… நேத்தைக்கு தலைவர் படத்துக்கு மாலை கூட போட்டேனே” என்றாள்

“அதுக்கு என்ன இப்ப ?”

“இன்னிக்கு கூட போட்டிருக்கேன் பாருங்க..பேனரை குடுத்தீங்கனா…”

“தோடா… பேனர் வேணுமாமே” என்று ஒருவன் மற்றவனை பார்த்து சிரிக்க

“கொடுத்தீங்கனா தலைவர் படத்தை வீட்டுல மாட்டிப்பேனுங்க” என்ற போது இளைஞன் கையில் இருந்த செல்போன் ஒலிக்க

“கொடு” என்பது போல ஒரு இளைஞன் கையசைக்க அந்த பேனரைக் கழற்றி சிவகாமிக்குக் கொடுத்துவிட்டு கம்பங்களை உருவிக்கொண்டு போனார்கள். செருப்பு கடைச் சிறுவன் பறந்துகொண்ருந்த கொடிகளைத் தாவித் தாவிப் பிடித்துக்கொண்டிருந்தான்.

அவர்கள் போன பின், சிவகாமி அந்த பேனரை நான்காக மடித்துக் கீழே போட்டு அதன்மேல் பூக்களை அடுக்கிவிட்டு, தானும் வசதியாக உட்கார்ந்தபோது முன்தினம் சாப்பிட்ட பிரியாணியால் “பர்ர்ர்” என்று விட, தலைவர் தலை மீது படிந்த தூசி விலகியது.