புரிந்து கொள் – 5

(இக்கதையின் முந்தைய பகுதிகள்: பகுதி1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4)

இப்போது எனக்குச் சாதாரண வகைக் கனவுகளைக் காண முடிவதில்லை. ஆழ்மனது என்று சொல்லப்படக் கூடிய எதுவும் எனக்கு இல்லையா? என் மூளை எதையெல்லாம் இயக்குகிறதோ அதை எல்லாம் நான் அறிந்து கட்டுக்குள் வைத்திருக்கிறேன், அதனால் சாதாரணமான, துரிதக் கண்ணசைவு உறக்கம் (REM sleep) மூலம் மூளை செய்யும் வேலைகளுக்கு இப்போது அவசியமில்லை. எப்போதாவது என் மூளை மீது எனக்கிருக்கும் கட்டுப்பாடு சிறிது தளர்கிறது, ஆனால் அதை எல்லாம் உறக்கம் எனக் கொள்ள முடியாது. மருட்சிகளைத் தாண்டிய நிலையோ என்னவோ. ஆனால் அதீத வதை. சில நேரங்களில் நான் முற்றிலும் விலகிப் போன நிலையில் இருக்கிறேன். என் புத்தி எப்படி விசித்திரமான காட்சிகளை உருவாக்குகிறது என்பதை நான் அறிவேன், ஆனால் அப்போது என்னால் ஏதும் மறுவினை காட்ட முடிவதில்லை, ஸ்தம்பித்த நிலையில் இருக்கிறேன். என்ன பார்க்கிறேன் என்பதை என்னால் ஏதுமே இனம் காண முடியவில்லை, கற்பனைக்கும் அப்பாற்பட்டதான, மிக விசித்திரமான, எல்லையில்லாமல் தம்க்குள்ளேயே திரும்பும் குறிப்புகளும், திருத்தங்களும் எனக்கே பிதற்றல்களாகத் தெரிகின்றன.

என் புத்தி என் மூளைக்கு உள்ள வசதிகளை மீறிக் கொண்டிருக்கிறது. இந்த அளவும், அடர்வும் கொண்ட ஒரு உயிரினத்தின் அமைப்பு இப்படித் தன்னை முழுதும் அறியும் ஒரு மனதைத் தாக்குப் பிடிக்க சிரமப்படுகிறது. ஆனால் தன்னை அறிந்த உள்ளம், தன்னை கட்டுப்படுத்தவும் ஓரளவு முடிவது. என் மனதுக்கு என்னவெல்லாம் உள்ளனவோ அவற்றைக் கொடுத்து, அவற்றுக்கு மேல் விரிந்து செல்லாமல் கட்டுப்பாடு விதிக்கிறேன். இது மிகத் துன்பமான செயல். நிற்கவோ, உட்காரவோ கூட இடமில்லாத ஒரு சிறு மூங்கில் கூண்டில் என்னை அடைத்தது போலிருக்கிறது. சிறிது ஓய்ந்தாலோ, என்னை முழுதுமாக விரிய விட்டாலோ, உடனே கொடுந்துன்பம், பித்து.

-o00o-

என்னை மருட்சி கவிகிறது. என் புத்தி தனக்கு என்னென்ன கூட்டுருக்களெல்லாம் சாத்தியம் என்று கற்பனை செய்து பார்த்து, தன்னுள் ஒடுங்கி வீழ்வதைப் பார்க்கிறேன். இறுதியில் எல்லாவற்றின் சூட்சுமங்களையும் நான் அறிந்து விடப்போகும் கட்டத்தில் என் புத்தி என்ன உருவெடுக்கும் என்பது குறித்த என் பிரமைகளை நானே கவனித்து நிற்கிறேன்.

ஒப்பீடற்ற இறுதி நிலைச் சுயப் பிரக்ஞையை நான் கைப்பற்றி விடுவேனா? என் புத்தியின் உள்வடிவைக் கட்டமைக்கும் கூறுகளை நான் கண்டு பிடித்து விடுவேனா? மனிதரின் இனவழி நினைவையே நான் ஊடுருவுவேனா? அறத்தின் உள்ளியல்பான அறிவை நான் காண்பேனா? ஜடப்பொருளிலிருந்து புத்தி எப்படி உருவாகிறது என்பதை அப்போது நான் தீர்மானிக்கக்கூடும். மனிதப்பிரக்ஞை இதரப் பேரண்டத்துடன் எப்படி உறவாடுகிறது என்பதை நான் புரிந்து கொள்ளக் கூடும். அகத்தையும் புறத்தையும், தன்மையையும், பொருண்மையையும் எப்படி இணைப்பது என்பதைக் காணக் கூடும் : அதாவது, அனுபவத்தை முற்றாக அழித்த நிலை (அனுபவ சூன்யம்).

அல்லது ஒருவேளை புத்தியின் உள்ளுறை வடிவைக் கைப்பற்ற முடியாதென்று நான் கண்டு பிடிக்கக் கூடும். அப்போது ஏதோ ஒருத் தலையீடு தேவைப்படலாம். ஆன்மாவையே நான் பார்க்கக் கூடும். தூலத் தன்மையை மீறிய பிரக்ஞையைக் கொணரும் ஏதோ ஒன்றை நான் காணக் கூடுமோ? கடவுளுக்கு நிரூபணத்தைக் காண்பேனோ? அர்த்தத்தை நான் தரிசிப்பேனோ, இருத்தலின் உண்மையான இயல்பை, தன்மையை நான் காண்பேனோ?

நான் ஞானியாவேன். அதை உணர்வதே பரமானந்தமாக இருக்கும்.

என் புத்தி தன்னிலைக்குத் திரும்பி வீழ்கிறது. என் சுயத்தை இன்னும் இறுகலான கடிவாளத்தால் பிடிக்க வேண்டும். அனைத்தையும் தாண்டிய செயல் திட்டம் தயாரிக்கும் நிலையில் என் புத்தி தன்னைத் தானே செப்பனிடக் கூடியதாய் உள்ளது. முழு மறதியோ, மருண்ட நிலையோ எதிலிருந்தும் என்னை மீட்டுக் கொள்ள அப்போது முடிகிறது. ஆனால் அப்படி ஒரு எல்லாவற்றையும் தாண்டிய திட்டம் போடும் நிலையில் இருந்து அதிக தூரம் விலகினால், என் புத்தி ஸ்திரத்தனமை இழந்து, நான் பேதலித்த நிலையையும் தாண்டி மீளமுடியாத ஒரு இருட்டில் சிக்குவேன் போலிருக்கிறது. இனிமேல் திட்டம் போடும் நிலையிலிருந்து அதிகம் விலகாதபடி என புத்திக்கு நானே ஒரு தடைக் கட்டளை எழுப்பிக் கொள்கிறேன்.

இந்த மருட்சி அனுபவங்கள் ஒரு செயற்கை மூளையைத் தயாரிப்பதற்கு என்னை உந்துகின்றன. அப்படி ஒரு அமைப்பால்தான் எல்லாவற்றுக்கும் உள்ளுறை வடிவுகளைப் பற்றிச் சும்மா கனவு கண்டு கொண்டிராமல், அவற்றை மொத்தமாக தரிசிக்க முடியும். உள்ளொளியைப் பெற, ஞானத்தை அடைய, இன்னொரு அவசியக் கட்டத்தைத் தாண்டக் கூடிய, நியுரோன்களை ஒத்த, தூல அமைப்பை அடைய வேண்டும்.

-o00o-

விழிக்கிறேன். உறங்க அல்ல, ஓய்வெடுக்கக் கண்களை மூடினேனா அதற்குள் இரண்டு மணி, இருபத்தி எட்டு நிமிடங்கள், பத்து வினாடிகள் ஆகி விட்டன. நான் எழுந்து விடுகிறேன். என் பங்குகள் சந்தையில் என்ன நிலையில் இருக்கின்றன என்று என் டெர்மினல் மூலம் பார்க்கிறேன். அந்தத் தட்டையான திரையைப் பார்த்ததும் நான் அப்படியே உறைந்து போகிறேன். அந்தத் திரை என்னைப் பார்த்துக் கத்துகிறார் போல இருக்கிறது. என்னைப் போலவே பேரளவைக் கொண்ட புத்தியோடு இன்னொரு நபர் உண்டு என்று அது சொல்கிறது. என் முதலீடுகளில் ஐந்து கணிசமாக நஷ்டம் காட்டுகின்றன. என்னை மூழ்கடிக்கவில்லை, ஆனால் இவ்வளவு நஷ்டம் வரும் என்றால் அதை நான் பங்குச் சந்தைத் தரகர்களின் உடல் அசைவுகளிலேயே கண்டு பிடித்திருப்பேன். அகர வரிசையாகப் பார்க்கையில், நஷ்டம் கொடுத்த பங்குகளின் நிறுவனப் பெயர்களுடைய முதல் எழுத்துகளைக் கவனித்தால் 5 எழுத்துகள். அவற்றை சரியாக ஒலிக்கப் பொருத்திப் பார்த்தால் கிட்டும் பெயர் ’கிரீக்கோ’ (GRECO).

யாரோ எனக்கு ஒரு செய்தி அனுப்பி இருக்கிறார்கள். என்னைப் போல ஒருவன் வெளியே எங்கோ இருக்கிறான். என்னைப் போல முற்றிலும் நினைவிழந்த நிலையில் இருந்த போது மூன்றாவது ஊசியைப் பெற்றிருக்க வேண்டும். எஃப்டிஏ (FDA)வின் தகவல் தொகுப்பில் இருந்து தன்னைப் பற்றிய விவரங்களை நீக்கி இருக்கிறான். நான் அதற்குப் பிறகே அதைப் பார்த்திருக்கிறேன். தன் மருத்துவர்களின் குறிப்புகளிலும் பொய்த் தகவல்களை நிரப்பி இருக்கிறான். அவர்கள் அதை அறிய முடியவில்லை. அவனும் இன்னொரு ஊசியைத் திருடிப் போட்டுக் கொண்டு, எஃப்டிஏ அவனுடைய கோப்புகளை மூடி விடும்படி செய்திருக்கிறான். அவன் எங்கு உள்ளான் என்பதை அதிகாரிகள் அறிய முடியாத நிலையில் இருக்கும் அவன், என் தரத்துக்கு வந்தாயிற்று.

என் பொய் அடையாளங்கள் மூலம், நான் செய்யும் முதலீடுகள் வழியே என்னை இனம் கண்டு கொண்டிருக்கிறான். அதைக் கண்டு பிடிப்பதென்றால் பிரமாதமான ஆய்வாளனாக அவன் இருக்க வேண்டும். அறிவில் பெரும் உயரத்துக்கு எழுந்து விட்ட அவன், ஏதோ திடீரென்று கூர்மையான சரிவுகளைச் சந்தையில் தூண்டி எனக்கு நஷ்டம் ஏற்படுத்தி என் கவனத்தை ஈர்த்திருக்கிறான்.

பல தகவல் தளங்களில் பங்குகளுக்கான விலைகளை சோதிக்கிறேன். என் பங்குகளின் விலைப் பட்டியல்கள் சரியாகவே இருக்கின்றன. என் எதிராளி என் கணக்கை மட்டும் தாக்கி எதையும் தவறாக அதில் நுழைத்து என்னைக் குழப்ப முயலவில்லை. ஐந்து ஒன்றுடனொன்று தொடர்பில்லாத நிறுவனங்களின் பங்குகளின் விற்பனை பாணிகளை மாற்றி இருக்கிறான், ஒரு சொல்லை எனக்குக் காட்ட. இது ஒரு விவரமான ஆட்டம். நான் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.

எனக்கு சிகிச்சை துவங்குமுன்னரே அவனுக்கு அது ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் எவ்வளவு நாட்கள் முன்னால் ஆரம்பித்தது? அவனுடைய முன்னேற்றம் எவ்வளவு இருக்கும் என்று நான் கணிக்க ஆரம்பித்தேன். புதுத்தகவல்கள் கிட்டினால் அவற்றை ஆங்காங்கே சேர்த்துக் கொள்ள எனக்கு முடியும்.

முக்கியமான கேள்வி – அவன் நண்பனா, எதிரியா? நல்ல விதமாகத் தன் சக்தியை அவன் எனக்கு நிரூபித்தானா, அல்லது என்னை அழிக்கத் திட்டமிட்டிருக்கின்றானா? எனக்கு ஏற்பட்ட நஷ்டம் சாதாரணமானதுதான். அது என் மீது அவனுக்கு சிறிதாவது கரிசனம் இருக்கிறதைக் காட்டுகிறதா அல்லது அவனுக்கு அந்த நிறுவனங்கள் மீது அக்கறை இருப்பதால் அப்பங்குகளுக்கு அதிகம் சரிவைக் கொணரவில்லையா? எத்தனையோ விதங்களில் எனக்கு நஷ்டமில்லாமல் என் கவனத்தை அவன் ஈர்த்திருக்க முடியும், ஆனால் இந்த வழியில் என்னைத் தூண்டியதால் ஓரளவாவது அவன் பகை என்றுதான் தோன்றியது.

அப்படியானால், இன்னொரு குறும்போ, அல்லது கொலைத் தாக்குதலோ எனக்கு நேர வாய்ப்பிருக்கிறது. முன் ஜாக்கிரதையாக நான் உடனே இங்கிருந்து போக வேண்டும். அவன் என்னைத் தீவிரமாகக் கவனித்தானால், இத்தனை நேரம் நான் செத்தே போயிருக்க வேண்டும். இப்படி ஒரு செய்தி அனுப்புகிறான் என்றால், என்னோடு ஏதோ விபரீத விளையாட்டுகள் விளையாடுவதில் அவனுக்கு விருப்பம். நான் அவனுக்குச் சமமாக என்னை நிறுத்திக் கொள்ள வேண்டும்: என் இருப்பிடத்தை மறைக்க வேண்டும், அவன் அடையாளத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். பின் அவனோடு தொடர்பு கொள்ள முயல வேண்டும்.

ஏதும் திட்டமின்றி சும்மா ஒரு நகரைப் பொறுக்குகிறேன். மெம்ஃபிஸ். என் மானிடரை மூடுகிறேன். உடுப்புகளை அணிகிறேன், ஒரு சிறு பையில் என் பொருட்களை அடுக்குகிறேன், அவசரத்துக்கு வைத்திருந்த பணத்தை எல்லாம் திரட்டி எடுத்துக் கொள்கிறேன்.

-o00o-

மெம்ஃபிஸ் நகரத்தில் விடுதி ஒன்றில், அந்த அறையின் தகவல்வலை டெர்மினலில் வேலை செய்யத் துவங்குகிறேன். முதலில் என் நடவடிக்கைகளைப் பல போலி டெர்மினல்கள் வழியே செலுத்தித் தடயங்களைக் குழப்புகிறேன். ஒரு சாதாரண காவல்படையின் துப்பு தேடும் முயற்சிக்கு, என் தேடல்கள் யூடா மாநிலத்தில் பல இடங்களில் உள்ள டெர்மினல்களில் இருந்து வருவதாகத் தெரியும். ராணுவ துப்பறியும் துறை என் தேடல்களைத் தொடர்ந்து போனால் ஹ்யூஸ்டன் மாநகரத்தில் ஒரு டெர்மினலுக்கு வந்து சேரும். அதைத் தொடர்ந்து தேடி மெம்ஃபிஸ் நகருக்கு வந்து சேர்வது என் போன்றவனுக்கே மிகக் கடினம். இருந்தும் குறிப்பாக நான் மெம்ஃபிஸில் இருப்பதை அறிந்து விட்டார்களானால், ஹ்யூஸ்டன் டெர்மினல் எனக்கு ஒரு முன்னெச்சரிக்கை விடுக்கும்.

என் இரட்டை அவனுடைய அடையாளம் தெரியாமலிருக்க எத்தனை தடயங்களை அழித்திருக்கிறானோ? எனக்கு இப்போது கிட்டாத பல எஃப்டிஏ கோப்புகளை விட்டு விட்டு, பல நகரங்களுக்குப் போன கூரியர் சேவைக்கான கோப்புகளைத் தேடுகிறேன். ஹார்மோன் கே சோதனைகள் நடந்த போது, எஃப்டிஏ எந்தெந்த மருத்துவ மனைகளுக்கு என்ன மருந்துகளைக் கொணர்ந்து அளித்தது என்று தேடுகிறேன். பிறகு அந்த சமயத்தில் எல்லா மருத்துவமனைகளிலும் எங்கெல்லாம் மூளைச் சேத நோயாளிகள் இருந்தார்கள் என்ற தகவல்களைத் தேடுவதில் என் துவக்கம் இருக்கும்.

இந்தத் தகவலெல்லாம் கிட்டினால் கூட அவை அவ்வளவு முக்கியமான தகவல் அல்ல. முதலீடுகளில் என்ன ஒழுங்கமைதி இருக்கிறது என்று ஆராய்வதே மிக அவசியமான முயற்சி. அதில் ஒரு பெருவளர்ச்சி பெற்ற அறிவின் தடயங்கள் கிட்டும். இதற்கு நிறைய நேரம் பிடிக்கும்.

-o00o-

அவன் பெயர் ரெய்னால்ட்ஸ். முதலில் ஃபீனிக்ஸ் நகரில் இருந்திருக்கிறான். அவனுடைய முதல் கட்ட முன்னேற்றம் என்னுடையது போலவே இருந்திருக்கிறது. ஆறு மாதங்கள், நான்கு தினங்களுக்கு முன் அவனது மூன்றாவது ஊசியைப் பெற்றிருக்கிறான். என்னை விட பதினைந்து தினங்கள் முன்பு என்பது அவனுக்கு சாதகம். வெளிப்படையாகத் தெரிகிற பதிவுகளை அவன் அழிக்கவில்லை. நான் அவனைக் கண்டு பிடிக்கவென அவன் காத்திருக்கிறான். பனிரெண்டு தினங்களாக அவன் அதி உச்சத் தாவல் நிலையில் இருக்கிறான், என்னைப் போல இரட்டை மடங்கு, என கணிப்பில்.

அவனுடைய முதலீடுகளில் என்ன அமைப்பு இருக்கிறது என்று பார்க்க முடிகிறது. ஆனால் அவன் எங்கே இருக்கிறான் என்பதைக் கண்டு பிடிப்பது இமாலய முயற்சி. தகவல்வலை எங்கும் தேடி பயன்படுத்துவோரின் தடப்பட்டியல் வழியே அவன் எந்தெந்த கணக்கில் எல்லாம் ஊடுருவி இருக்கிறான் என்று இனம் கண்டு…

பனிரெண்டு தடங்களைத் திறந்து வைத்திருக்கிறேன் என் டெர்மினலில். இரண்டு ஒற்றைக் கைப்பயனுக்கான அச்சுப் பலகைகள். ஒரு தொண்டையில் பொருத்திய மைக். மூன்று புறமும் ஒரே நேரம் வேலை செய்ய இதெல்லாம். என் உடல் அனேகமாக ஸ்தம்பித்து இருக்கிறது. இருந்தாலும் களைப்பு ஏற்படாமல் இருக்க, ரத்த ஓட்டத்தை நான் சரியாகச் செலுத்துகிறேன். அவ்வப்போது தசைகளை இறுக்கி, அசைத்து, இளக்கி, லாக்டிக் அமிலம் சேர்ந்து விடாமல் அதை வெளியேற்றி… இவ்வளவும் செய்தபடி, தகவல்களின் பெருக்கை உள்வாங்குகிறேன். அதன் உள்ளமைப்புகள், இயக்கங்களைப் பார்க்கிறேன். தனிச் சுரங்களின் இணைவில் எழும் இசையைப் படிக்கிறேன். எல்லாவற்றுக்கும் மையம் எது எனத் தேடுகிறேன். வலை அதிர்வுகளின் குவிமையம் எங்கே?

மணிகள் கடக்கின்றன. நாங்கள் இருவருமே பல லட்சக் கணக்கான தகவல் துண்டுகளை அலசுகிறோம். ஒருவரை ஒருவர் வட்டமிட்டபடி.

-o00o-

அவன் இருப்பது ஃபிலடெல்ஃபியாவில். என் வருகையை எதிர் நோக்குகிறான்.

-o00o-

சேறு எங்கும் அடித்திருக்கிற ஒரு டாக்ஸியில் ரெய்னால்ட்ஸ் உடைய அபார்ட்மெண்டுக்குப் போகிறேன்.

ரெய்னால்ட்ஸ் எந்தெந்தத் தகவல் தளங்கள் மற்றும் விற்பனை நிறுவனங்களில் எல்லாம் கடந்த பல மாதங்களில் தேடியிருக்கிறான் என்று பார்த்தால், அவனுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிகள் உயிர்-பொறியியல் மூலம் தயாரான நுண்ணுயிர்களை வைத்து  கடும்விஷங்களை எப்படி ஒழிப்பது, பயன்படுத்தலுக்கு உருவாக்கப்படும் அணு உருக்கலை எப்படி ஜடத்தனம் கொண்ட கட்டுப்பாடுகளுக்குள் அடைப்பது, சமூகங்களின் பல்வேறு அமைப்புகளில் உணர்-அறிதலுக்குப் புலப்படாத அடித் தளங்களில் ஊடுருவும் வகையில் தகவலைப் பரப்புவது என்று அமைந்துள்ளன. அவன் உலகைக் காப்பாற்றத் திட்டமிடுகிறான்; அதனிடம் இருந்தே உலகைக் காப்பாற்றப் போகிறான். அதனால் என்மீது அவனுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை.

வெளி உலக நடப்புகளில் எனக்கு ஈடுபாடு இல்லை. சாதாரண மனிதர்களுக்கு உதவ நான் எந்த ஆய்வுகளிலும் இறங்கவில்லை. எங்கள் இருவரில் ஒருவரை மற்றவர் மாற்ற முடியாது. இந்த உலகை நான் என் குறிக்கோள்களுக்குத் துளியளவே சம்பந்தமுள்ளதாகக் கருதுகிறேன். அவன் இப்படி ஒரு உயர்த்தப்பட்ட அறிவுள்ளவன் தன்னலத்துக்கு மட்டும் இயங்குவதை அனுமதிக்க முடியாதவன். புத்தியையும் கணினிகளையும் ஒருங்கிணைக்கும் என் திட்டத்தால் உலகின் மீது பெரும்பாதிப்பு ஏற்படும். அதற்கு அரசாங்கங்களும், ஜனத்திரள்களும் எதிராக எழுச்சி அடைந்தால், அவனுடைய திட்டங்களுக்கு அதெல்லாம் இடையூறாகும். நான் பழமொழி சொல்வது போல விடைகளில ஒரு பகுதியாக இல்லையானால், பிரச்சினையில் ஒரு பகுதியாகத்தான் இருக்க முடியும், இல்லையா?

எழுச்சி பெற்று விட்ட அறிவுள்ளவர்களாலான சமூகத்தில் நாங்கள் இருவரும் உறுப்பினராக இருந்தால், மனிதர்களோடு உறவாடுவதன் இயல்பு வேறு வகையானதாக இருந்திருக்கும். ஆனால் சாதாரண மனிதர்கள் பெரும்பான்மையான இந்த உலகில், நாங்கள் இருவருமே பெரும் தடையாக எழுந்திருக்கிறோம். எங்களுடைய அளவைகளால் பார்த்தால், மனிதர்கள் என்ன செய்தாலும் அது ஏதும் மதிப்பற்றதாகி விட்டது. எங்களிடையே பன்னிரண்டாயிரம் மைல்கள் இடைவெளி இருந்தால் கூட ஒருவர் மற்றவரை உதாசீனம் செய்ய முடியாது. இதற்கு ஒரு முடிவு கட்டத்தான் வேண்டும்.

பல கட்டங்கள், பல விளையாட்டுகள் – இவற்றைத் தாண்டி விட்டோம். ஆயிரம் வழிகளில் ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்ட நாங்கள் முயன்றிருக்க முடியும். கதவுக் கைப்பிடியில் நரம்புவிஷம் கலந்த டைமெதில் சல்ஃபாக்ஸைடை (DMSO) பூசியிருக்கலாம். அல்லது ஒரு ராணுவ சாடிலைட்டால் கூர்மையாகக் குறிவைத்த தாக்குதலுக்குக் கட்டளை பிறப்பித்திருக்கலாம். இருவரும் மற்றவரின் இருப்பிடத்தையும், தகவல்வலையிலும் முழுவதுமாகத் தேடி, எல்லா சாத்தியங்களையும் முன்னதாகவே யோசித்து, ஒருவர் மற்றவரின் தேடல்களுக்கெதிராகப் பொறி வைத்திருக்கலாம். இருவருமே அப்படி ஏதும் முயலவில்லை. அப்படி ஏதும் இருக்குமா என்று சோதிக்கவுமில்லை. அத்தகைய முடிவற்ற ஊகங்களையும், ஒரே நபர் இருவர் போலவும் இருந்து யோசிப்பதையும் பற்றிய கணிப்பும் ஒரு சாதாரண ஆய்வில் வியர்த்தம் என்று புலப்பட்டிருந்தது. அவற்றை ஒதுக்கி விட்டோம். எங்களால் ஊகிக்கவோ, குறி சொல்லவோ முடியாதவற்றிலிருந்துதான் ஏதும் முடிவாக நடக்கப் போகிறது.

டாக்ஸி நிற்கிறது. ஓட்டுபவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு, அந்த அபார்ட்மெண்ட்கள் கொண்ட கட்டிடத்தை நோக்கி நடக்கிறேன். வெளிக் கதவில் இருந்த மின்பூட்டு எனக்குத் திறக்கிறது. என் மேலங்கியைக் கழற்றி விட்டு, நான்கு மாடிகள் ஏறுகிறேன்.

ரெய்னால்ட்ஸின் அபார்ட்மெண்ட் கதவு திறந்தே இருக்கிறது. நுழைவாயில் இடத்தைத் தாண்டிப் போகிறேன், புழங்கும் இடம். டிஜிடல் சிந்தஸைசர் ஒன்றில் படுவேகமாக ஒலிக்கும் பல்குரலிசையைக் கேட்டபடி நடக்கிறேன். அவனுடைய படைப்பாக இருக்க வேண்டும். சாதாரணச் செவிகள் கேட்க முடியாத அலைவரிசைகளில் அந்த இசை மாறி மாறி இயங்குகிறது. என்னால் கூட அவற்றில் என்ன அமைப்பு உள்ளதெனக் காண முடியவில்லை. தகவலில் உயர் செறிவுள்ள இசையில் ஏதோ ஒரு சோதனை முயற்சியாக இருக்க வேண்டும்.

ஒரு பெரிய சுழல் நாற்காலி அறையில். எனக்கு முதுகுப் புறம் காட்டி. ரெய்னால்ட்ஸ் பார்வைக்குத் தெரியாதபடி. தன் உடல் வீச்சங்களை நான் அறிய முடியாதபடி மிகத் தாழ் நிலையில், உறை நிலையில் வைத்திருக்கிறான். நான் அங்கு வந்ததை நான் சுட்டுகிறேன், அவனை அடையாளம் கண்டதையும்.

<<ரெய்னால்ட்ஸ்>>

அங்கீகாரம்.

<<க்ரீக்கோ>>

நாற்காலி நழுவிச் சுழன்று திரும்புகிறது, மெல்ல. அவன் புன்முறுவல் செய்கிறான். அருகில் இருக்கும் சிந்தசைஸரை அணைக்கிறான். திருப்தியைக் காட்டுகிறான்.

<<உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.>>

உடல் அசைவுகளால் இயங்கும் மொழியின் சிறு துணுக்குகள் மூலம், சாதாரண மனிதர்களைப் போல நாங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்கிறோம். இது புழங்குமொழியின் சுருக்கு வடிவாக உள்ளது. ஒவ்வொரு சொல்லும் வழக்கமான நேரத்தில் பத்தில் ஒரு பங்கு நேரமே எடுக்கிறது. நான் வருத்தத்தைச் சிறிது காட்டுகிறேன்.

<<நாம் எதிரிகளாகச் சந்திக்க நேர்வது வெட்கத்துக்குரியது.>>

ஒரு சிறிது ஏக்கம், ஒத்துக் கொள்கிறான். வேறெப்படி இருந்திருக்கலாம் என்று ஒரு கோடி காட்டுகிறான்.

<<ஆமாம், இல்லையா? நாம் மட்டும் சேர்ந்து வேலை செய்தால் உலகத்தை எப்படி எல்லாம் மாற்றி விட முடியும்! இரண்டு பேரெழுச்சி அடைந்த புத்திகள், என்ன மாதிரி ஒரு வாய்ப்பை இழக்கிறோம்.>>

உண்மையே. ஒத்துழைத்து வேலை செய்தால் நாங்கள் தனித் தனியே சாதித்தது எதையும் விடப் பல மடங்கு வியத்தகு சாதனைகளை அடைய முடியும்தான். என்ன விதமான பரிமாற்றமும் பிரமாதமான விளைவுகளைக் கொணரும். என் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் ஒருவனுடன் கலந்து பேசுவதும், எனக்குத் தோன்றாத ஒரு புதுக் கருத்தை அவனிடம் பெறுவதும், எனக்குக் கேட்காத சுஸ்வரங்களைக் கேட்கக் கூடியவனைக் காண்பதும் எத்தனை இன்பம் கொடுக்கக் கூடிய அனுபவங்கள்! அவனுமே இதைத் தான் விரும்புகிறான். இந்த அறையை விட்டு இருவரில் ஒருவன்தான் உயிரோடு வெளியே போகப் போகிறோம் என்பது எங்கள் இருவருக்குமே மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ஒரு கருத்தை முன்வைக்கிறான்.

<<கடந்த ஆறுமாதங்களில் நாம் கற்றதைப் பகிர்ந்து கொள்வோமா?>>

அதற்கு என் பதில் என்னவாக இருக்கும் என்று அவனுக்குத் தெரிந்திருக்கிறது.

நாங்கள் உரக்கப் பேசுகிறோம், ஏனெனில் உடல் மொழியில் தொழில் நுட்பத்துக்கான சொற்களஞ்சியம் இல்லை. ரேய்னால்ட்ஸ் வேகமாகவும், அமைதியாகவும் ஐந்து சொற்களைச் சொல்கிறான். எந்தக் கவிதைப் பத்தியையும் விட அவை செறிவான அர்த்தம் பொதிந்த சொற்கள். ஒவ்வொரு சொல்லும், அதன் அர்த்தத்தை நான் முழுதும் கிரஹித்த பின் அடுத்த சொல்லுக்குக் கால் பதித்து மேலேறிச் செல்ல இடைவெளி கொண்டது. கூட்டாக அவை சமூகவியல் பற்றிய புரட்சிகரமான புரிதலைக் கொடுக்கின்றன. உடல் மொழியைக் கொண்டு அவன் தான் முதல் கட்டங்களில் கண்டறிந்த முடிவுகள் இவை எனச் சொல்கிறான். நானும் இவற்றை அறிந்திருந்தேன், ஆனால் வேறு வகையாக இவற்றை உருவாக்கி இருந்தேன். நான் ஏழு சொற்களால் அவனுடைய முடிவுகளுக்குப் பதில் சொல்கிறேன், நான்கு சொற்களில் என் உருவாக்கத்துக்கும் அவனுடையதற்கும் வேறுபாட்டைச் சுருக்கிக் கொடுத்து, மூன்று சொற்களால் அந்த வேறுபாடுகளில் அவ்வளவு எளிதாகப் புலப்படாத விளைவைச் சுட்டுகிறேன். அவன் பதிலளிக்கிறான்.

நாங்கள் தொடர்கிறோம். இரு புலவர்களைப் போல, ஒருவருக்கு மற்றவர் அடியெடுத்துக் கொடுத்து, ஆசுகவி பாட ஊக்குவிப்பது போல இருக்கிறது. மனிதரின் அறிவுத் திரட்டை எல்லாம் பற்றிய காப்பியம் பாட இருவர் சேர்ந்து முயல்வது போல இருக்கிறது. சில கணங்களில் நாங்கள் வெகுதுரிதமாகிறோம். ஒருவர் சொற்களை மற்றவர் எடுத்துக் கொண்டு, ஆனால் ஒவ்வொரு அடிநாதத்தையும் உள்வாங்கி, ஒவ்வொரு சொல் நிழலையும் கணித்து, எல்லாவற்றிலும் ஊறி, முடிவுகள் கண்டறிந்து, அவற்றுக்குப் பதில் கொடுத்து, தொடர்ந்தும், ஒரே நேரமும், கூட்டாகவும் இயங்குகிறோம்.

-o00o-

பல வினாடிகள் கழிகின்றன. அவனிடமிருந்து நான் நிறைய கற்கிறேன். அவன் என்னிடம் கற்கிறான். எனக்கு முழுவதும் புரியப் பல நாட்கள் ஆகும் வகையான கருத்துகளில் நான் முங்கி எழும் அனுபவமே படு உற்சாகமாய் இருக்கிறது. ஆனால் நாங்கள் அதே நேரம் பாதுகாப்பைக் குறித்த தகவல்களையும் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். அவன் பேசாத தகவல்களில் இருந்து அவனுடைய அறிவின் எல்லையை நான் கிரஹிக்கிறேன். என்னுடைய அறிவோடு ஒப்பிடுகிறேன், அவன் என்னைப் பற்றி என்ன ஊகிக்கக் கூடும் என்பதையும் யோசித்தறிகிறேன். ஏனெனில் இதெல்லாம் ஒரு முடிவுக்கு வரும், அப்போது எங்கள் பரிமாற்றங்கள் எமது கருத்தியல் வேறுபாடுகளைப் பளீரெனத் துலக்கிக் காட்டும்.

நான் அறிந்து உணர்ந்த அசாதாரண எழில்களை ரெய்னால்ட்ஸ் அறிந்திருக்கவில்லை. ஒவ்வொரு அற்புதமான அறிவுத் துலக்கத்தின் முன்னும் அவன் கடந்திருக்கிறான், ஆனால் அவை குறித்துச் சிறிதும் ஈடுபாடற்று இருந்திருக்கிறான். அவனை உந்தும் ஒரே ஒரு உள்சரடு, நான் எதை அலட்சியம் செய்தேனோ அது இந்த பூமியெனும் கிரகத்தில் உள்ள சமூகம், உயிர்கள் சுழலும் வெளி. நான் சௌந்தர்ய உபாசகன், அவன் மனிதத்தின் காதலன். நாங்கள் ஒவ்வொருவரும் மற்றவர் பெரும் வாய்ப்புகளை அலட்சியம் செய்து விட்டதாகக் கருதுகிறோம்.

உலக சுபிட்சத்துக்கு என சக்தி வாய்ந்தவர்களின் உலகு தழுவிய உறவுப் பின்னல் ஒன்றைக் கட்ட ஒரு திட்டம் அவனிடம் உண்டு, அவன் அதைச் சொல்லவில்லை. அதை அமல்படுத்த கணிசமான எண்ணிக்கையுள்ள நபர்களை அவன் பணிக்கு அமர்த்தவிருக்கிறான். அவர்களுக்குச் சாதாரணமான அறிவு உயர்த்தலை அவன் கொடுக்கப் போகிறான். சிலருக்கு எல்லாம் கடந்து அறியும் சுயப் பிரக்ஞையையும் சாத்தியமாக்கப் போகிறான். அவர்களில் சிலர் அவனுக்கே ஆபத்தைக் கொணர்வர்.

<<சாதாரணர்களுக்காக ஏன் அப்படி ஒரு அபாயத்தை ஏற்க வேண்டும்?>>

<<நீ பரமானந்தத்தை அடைந்தவனானால், உன் வாழ்வும் அவர்கள் வாழ்வும் எங்கும் சந்திக்காது போகும். அதனால் நீ அவர்களைக் குறித்து சிறிதும் அக்கறை இல்லாதது நியாயமாக இருக்கலாம். இப்போதைக்கு நீயும், நானும் அவர்கள் வாழ்க்கைகளை இன்னும் புரிந்து கொள்ளக் கூடிய நிலையில்தான் இருக்கிறோம். நாம் அவர்களை அலட்சியம் செய்ய முடியாது.>>

(அடுத்த இதழில் முடியும்)