தெலுங்கானா புயல் தன்னுடைய புழுதியை எங்கும் வீசியடித்த நேரத்திலும் அற்புதமான ஒரு விழாவை நடத்தி முடித்தனர் ஹைதராபாதில் வசிக்கும் வங்காளிகள். பிரபல இயக்குநர் பிமல் ராயின் (Bimal Roy) நூறாவது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் அவரின் முக்கியத் திரை ஆக்கங்களை இலவசமாகத் திரையிட்டுக் கொண்டாடினார்கள். இலவசம் என்பதால் நகரத்தை விட்டு வெளியே எறியப்பட்டுக் கிடக்கும் ஏதோ ஒரு திரையரங்காக அல்லாமல், நகரின் மிக முக்கியமான இரு திரையரங்குகளில் நடைபெற்றது இந்த விழா. பிரபல பாடகர் மன்னா டேயின் இசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கிய விழாவை மிக அழகாக நடத்திக் காட்டினார்கள்.
ராயின் எந்த ஆக்கத்தையும் அதுவரை நான் பார்த்ததில்லை. ஆனால் அவரைப் பற்றி அறிந்திருந்தேன். இந்திய திரைப்பட உலகில் மாற்றுத் திரைப்படங்களுக்கான இயக்கத்தின் முன்னோடிப் புதிய அலையை உருவாக்கியவர். சொல்லப்போனால் சத்தியஜித் ராய்க்கும் முன்னோடி என்று குறிப்பிடலாம். இயல்பான கதைக்களங்களையும், அதே சமயம் நாடகத்தின் சில கூறுகளையும் கொண்டிருக்கும் திரைப்படங்கள் இவருடையவை. தான் வாழ்ந்த சமூகத்தின் சிக்கல்களை மையப்படுத்தி, அதை வணிகரீதியாகவும் வெற்றி பெற வைக்கும் வித்தையை அறிந்தவர். இன்றளவும் பல கலைஞர்களிடம் இவருடைய திரைப்படங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நான் பார்த்த ‘இரண்டு ஏக்கர் நிலம்’ (Do Bhiga Zameen) திரைப்படத்தின் ஆரம்ப காட்சி ’லகான்’ திரைப்படத்தைப் பாதித்திருப்பதை மிக எளிதாக உணரமுடிகிறது. ராயின் “மதுமதி”, கமலின் “எனக்குள் ஒருவன்”, ஷாரூக்கானின் “ஓம் சாந்தி ஓம்” என்று பல விதமாகப் பரிணமித்து விட்டிருக்கிறது.
வெள்ளியன்று அலுவலகம் முடிந்தும் முடியாததுமாக கிளம்பிவிட்டிருந்தேன். அன்று தான் ‘இரண்டு ஏக்கர் நிலம்’ திரையிடப்படுகிறது. திரையரங்கில் குழுமியிருந்த வங்காளிகளின் கூட்டத்தில் சிறிதும் ஒட்டாத, சிறிதும் எதிர்பார்க்காத ஒரு தமிழ் முகத்தை பார்த்த மகிழ்ச்சியும் குழப்பமும் அவர்கள் முகத்தில். பல வங்காளிகளை அவதானித்தபோது, அவர்களின் தோற்றம் 1960-களோடு உறைந்து நின்றுவிட்டிருந்ததை உணரமுடிந்தது. இளைஞர்களாகத் தங்களை அறிவிக்க விரும்பியவர்கள் மட்டும் சற்று மாறுபட்டு 80-ஐ தேர்ந்தெடுத்திருந்தனர். பிமல் ராயின் மகன்(ஜோய் ராய்) நிகழ்ச்சியை முறைப்படி துவக்கிவைத்தார். தன் தந்தை குறித்த நினைவுகளையும், ராய் குறித்த தன்னுடைய ஆவணப்படம் குறித்த சில தகவல்களையும் உதிர்த்தார். அத்திரைப்படத்தில் நடித்திருந்த ஒருவர் ராயுடனான தன்னுடைய அனுபவங்களைக் குறித்துப் பேசினார். ராயின் இத்திரைப்படம் தற்கால இந்திய விவசாயிகளுக்கும் பொருந்தி வருவதைக் குறிப்பிட்டார். “இந்நிலை தொடர்ந்தால் இந்திய விவசாயி மரணத்தை மட்டுமே அறுவடை செய்வான்” என்ற ராயின் தீர்க்கதரிசனம் இன்று உண்மையாகி வருவதாக நெகிழ்ந்தார்.
“இரண்டு ஏக்கர் நிலம்” வழக்கமான இந்தியத் திரைப்படங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டே துவங்குகிறது. காய்ந்து, பாளம் பாளமாக வெடித்துப் போன நிலம். ஒரு இலை கூட இல்லாத உயிரற்ற ஒரு மரம். விவசாயிகள் துன்பத்தில் வாடுகிறார்கள். அடுத்த காட்சி சட்டென திசை மாறுகிறது. மேகத்தைக் கிழித்தபடி பெய்யும் மழை. விவசாயிகள் மழையில் நனைந்து, தங்கள் துன்பம் தீர்ந்ததென்று மகிழ்ச்சியில் ஆடிப் பாடுகிறார்கள். திரைப்படம் பயணிக்கப் போகும் திசை குறித்த எந்த ஒரு முன்முடிவையும் பார்வையாளன் மேற்கொண்டுவிட முடியாது. மிக நுட்பமாக ராய் தனது பார்வையாளனை வழிதவற வைக்கிறார். தொழில் மயமாக்க சூழலிலும், நகரத்துப் பரபரப்பிலும் ஒரு விவசாயிக்கான இடம் எத்தகையது என்பதை சித்தரிக்கிறது இந்த படம். தன் நிலத்தின் மீதான தன்னுடைய உரிமையை நிலைநாட்ட முயலும் விவசாயி ஒருவனின் போராட்டம் மிகுந்த தீர்க்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1950-களுக்கே உரிய சோஷலிசச் சிந்தனைகளின் தாக்கம் பெருமளவு காணப்படும் இத்திரைப்படம், மிக பெரும் வணிக வெற்றியை ஈட்டியதில் சலீல் செளத்ரியின் பாடல்கள் பெரும் பங்கு வகித்திருக்கும் என்றும் கருத முடியும்.
தனது போராட்டத்தில் முழுத் தோல்வியை சந்திக்கும் அந்த விவசாயி, எங்கோ நடக்க துவங்குகிறான். அவன் எங்கு செல்கிறான், அவன் வருங்கால நிலை என்ன என்பதை பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் படம் முடிகிறது. ராய் தன் பார்வையாளர்கள் முன் வைக்கும் கேள்விகள் இவை என்றே கருதுகிறேன்.
ஆக்கிரமிப்பு வேகம் நிறைய உள்ள பெரும் சமூகப் பொருளாதார மாறுதல்களிடம், சமூகத்தில் தனக்கான இடத்தையும், தன் சுதந்திரப் புழக்கத்துக்கான தனி வெளியையும் முற்றிலும் இழந்து வெளியேறும் ஒரு சாதாரணன் குறித்த படைப்பாக இதை நாம் புரிந்துகொள்ளலாம். தன் வெளி சூன்யமாவதைக் கண்ணேதிரே கண்டபடியே, ஆக்கிரமிப்பின் மிகப்பெரும் கொடுமைகளின் சுமையை சுமந்தபடியே வாழும் மக்கள் கூட்டங்களை வரலாற்றின் மிக முக்கியமான தருணங்கள் அனைத்திலும் நம்மால் காணமுடியும். மதம்/மொழி/நாடு போன்ற எந்த அடையாளங்களைக் கொண்டும் இவர்கள் மீது செயல்படுத்தப்படும் வன்முறையை மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் எவரும் நியாயப்படுத்தி விடமுடியாது. ஆனால் துரதிருஷ்டவசமாக இத்தகைய வன்முறைகள் சில தருணங்களில் நியாயப்படுத்தப்படுகின்றன.
காஷ்மீர் பண்டிட்கள் விஷயத்தில் இது நடந்தது. இன்னும் நடந்து வருகிறது. பல வருடத்தைய ஆக்கிரமிப்பின் மூர்க்கமான படையெடுப்புகளும் சுரண்டல்களும், கலாச்சார செழிப்புடனும் அனைத்து வகையிலும் சிறந்து விளங்கிய ஒரு மக்கள் கூட்டத்தை வரலாற்றின் மோசமான குழிக்குள் தள்ளியது. 1990-களில் துவங்கி இன்று வரையில் நடைபெற்று வரும் திட்டமிட்ட இன அழித்தொழிப்பு முயற்சிகள் அந்த மக்கள் கூட்டத்தை தங்கள் மண் மீதான அவர்களின் உரிமையை முற்றிலும் மறுத்து, அவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய முயன்று வருகின்றன. இந்த அழிப்பு முயற்சியில் எதிர்ப்பாளர்கள் பெரும் வெற்றியை ஈட்டிவருகின்றனர்; இந்திய அமைப்பின் துணையோடு. வேலி பயிரை மேய்வதற்கு அச்சான உதாரணம் காஷ்மீரிப் பண்டிட்களை இந்திய அரசு உதாசீனப்படுத்தி அவமதிக்கும் விதம்தான்.
பண்டிட்களின் அழித்தொழிப்பு ஏதோ ஒரு நாளில் முடிவு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்ட விஷயமல்ல. மிகுந்த கவனமான திட்டமிடலில் நிகழ்த்தப்பட்ட ஒரு பாதகம். 1980-களின் இறுதியில் பண்டிட்களின் பிரதிநிதிகளாக விளங்கியவர்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டனர். 1990-களில் பாகிஸ்தான் அதிபர் பெநசீர் புட்டோ தன்னுடைய வெறுப்பை உமிழும் பேச்சுக்களால் காஷ்மீர் மக்களிடையே ஒரு மாபெரும் பிளவை ஏற்படுத்தினார். உள்ளூர் பத்திரிக்கைகளில் பண்டிட்களை காஷ்மீரை விட்டு வெளியேற ”வேண்டுகோள்” விடுக்கப்பட்டன. முடிவாக, ஒரு இரவில் மசூதிகளில் இருந்த ”பண்டிட்களை விரட்ட அணிதிரள வேண்டி” வெளியான அறிவிப்பொன்று கொடூரத்தின் உச்ச தருணத்தை உலகுக்கு நிகழ்த்தி காட்டின.
பண்டிட்கள் சந்தித்த துன்பங்கள் குறித்த அசோக் பண்டிட் என்பவரின் பேட்டியின் ஒரு பகுதியை இங்கே அளிக்கிறேன் :
“ஜனவரி 19, 1991 ஒரு மறக்கமுடியாத நாள். அன்று தான் காஷ்மீர் பண்டிட்களின் பெருமையும், மதிப்பும் தாக்கப்பட்டது. நாங்கள்(பண்டிட்கள்) கல்வியறிவு பெற்றவர்களாகவும், அகிம்சையை கடைபிடித்ததாலும், எதிர் வன்முறையில் ஈடுபடாமல் இருந்தோம். காஷ்மீரிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டோம். நாங்கள்(என்னையும் சேர்த்து) அகதி முகாம்களில் வசித்தோம். கூடிய விரைவில் எங்கள் சொந்த மண்ணிற்கே திரும்பி விடுவோம் என்று நினைத்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. பனூன் காஷ்மீர் எனும் அமைப்பை உருவாக்கினோம். அது எங்கள் மக்களின் மேன்மைக்காக உழைக்கிறது. புலம்பெயர்தல் நிகழ்ந்து இத்தனை வருடங்கள் கழித்தும் எந்த நன்மையும் எங்களுக்கு நடக்கவில்லை. முக்கியமாக, காஷ்மீர் பண்டிட்களின் புலம்பெயர்தல் குறித்து யாரும் பேசுவதில்லை. அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். எங்களை குறித்த அலட்சியம் எங்கும் பரவியுள்ளது”[1].
அசோக் பண்டிட். இந்த ஒரு தனி நபர் தன் மக்கள் இழந்த கலாச்சாரமும் அடையாளமும் வன்முறைக்கு உள்ளானதை, அவர்கள் அடைந்த ரணங்களை ஆவணப்படமாக பதிவுசெய்திருக்கிறார். “இருந்தும் உலகம் அமைதியாக இருந்தது…”(And the world remained silent) என்ற அவரது இந்த ஆவணப்படம் 1990-களில் பண்டிட்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை ஆதாரங்களுடன் பதிவுசெய்துள்ளது. பண்டிட்கள் அழித்தொழிக்கபட்டதிலிருந்து, தங்கள் நாட்டிலேயே அகதிகளாகவும், குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லாத நிலையில் வாழும் பண்டிட்களின் அவல நிலையை கண்முன் நிறுத்துகிறது. 2000-மாவது ஆண்டில் வெளியான இந்த ஆவணப்படம் பல உலக நாடுகளின் பாராளுமன்றங்களில் திரையிடப்பட்டிருக்கிறது. பண்டிட்களின் வாழ்வாதார சிக்கல்களை மையப்படுத்தி திரைப்படங்களையும் எடுத்துவருகிறார். இவரது திரைப்படங்கள் காஷ்மீரை விட்டு வெளியேறிய ஹிந்துக்களை குறித்து மட்டுமல்லாமல், சீக்கிய, இஸ்லாமியர்கள் குறித்தும் பேசுகிறது.
அசோக் பண்டிட் கூறியதைப் போல், இந்த கோரத்தாண்டவம் குறித்துப் பேச யாரும் தயாராக இல்லை. மனித உரிமை பிரதிநிதிகள், அறிவுஜீவிகள், அரசியல் அமைப்புகள் என்று யாரும். மாறாக, இந்த கொடூரத்தை நிகழ்த்திய தீவிரவாதிகளுடன்(உதாரணம்:யாசின் மாலிக்) கைகோர்த்துக் கொண்டு அவர்களை எந்தவித பின்விளைவுகளும் பாதிக்காதபடி பாதுகாத்துக் கிடக்கின்றனர். மதச்சார்பற்ற இந்தியாவில் மத அடிப்படையிலான ஒரு மாநிலம் உருவானதன் மெளன சாட்சிகளாக விளங்குகின்றனர். மேலும், இந்த கொடூர நிகழ்விற்குக் காரணமே பண்டிட்கள் தான் என்ற வாதத்தை இப்போது முன்வைக்க முயல்கின்றனர். “பெரும்பான்மையினரை (இஸ்லாமியர்) விட சிறுபான்மையினர்(பண்டிட்கள்) காஷ்மீரில் பொருளாதார/சமூக அந்தஸ்த்தில் உயர்ந்திருந்ததே இந்த வன்முறைக்கான காரணம்” என்ற வாதத்தை எந்த தயக்கமுமின்றி முன்வைக்க அவர்களின் அறம்(?!) அவர்களை அனுமதிக்கிறது[2]. யூதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அரக்கத்தனத்தை நியாயப்படுத்த மதவாதிகள் முன்வைத்த வாதங்களுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல இந்த வாதம். இதே வாதத்தை கொஞ்சம் விரிவாக்கினால், இந்தியாவில் நிகழ்ந்த அனைத்து மத கலவரங்களையும் மிக எளிதாக நியாயப்படுத்திவிட முடியும் தானே?
மனித சமூகத்தின் அனைத்து அலகுகளும் தம்முள் வேறுபாடுகளை கொண்டிருப்பது இயல்பு. இந்த வேறுபாடுகள் சமூகத்தின் பன்முகத்தன்மையை பறைசாற்றுவதாகவும், அச்சமூகத்தின் வளர்ச்சிக்கு பலவித சாத்தியங்களை கொண்டதாகவும் இருப்பது அச்சமூகத்தின் அனைத்து அலகுகளுக்கும் நன்மை அளிப்பவை. ஆனால், இந்த வேறுபாடுகளை ஊதிபெரிதாக்கி எந்த ஒரு மக்கள் கூட்டத்தின் மீதும் வெறுப்புணர்வை உமிழும், அந்த மக்களின் ஒட்டுமொத்த இருப்பை கேள்விக்குளாக்கி, அவர்களை எந்த வித உரிமையுமற்று உலவவிட துடிக்கும் எந்த ஒரு அடிப்படைவாதத்தையும், எந்தவித சமரசமுமின்றி, அற அடிப்படையிலான விசாரணைக்கு உட்படுத்துதல் அவசியம். மேலும், எந்த ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாலும் பாதிக்கப்பட்டோர் குறித்த உண்மையை பேச மதம்/மொழி/உறவு போன்ற எந்தவித தடையும் அவசியமில்லை. மனிதம் குறித்த பிரக்ஞை மட்டும் போதுமானது. இந்த பிரக்ஞையின் குரல் கொந்தளிப்பான தருணங்களில் சமூகத்தின் எந்த மூலையிலிருந்தும் வெளிப்படவே செய்யும். அது போன்ற தருணங்களில் அபத்தமான வாதங்களை முன்வைத்து அந்த குரல்களை ஏதேனும் ஒரு முத்திரையிட்டு, கூண்டில் அடைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பதே கூட தங்கள் மனிதம் உயிர்ப்புடன் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளும் ஒரு வாய்ப்பே.
இரண்டு உலகப்போர்களின் கோரங்களை தரிசித்த மானுடம், தேச/சமூக வரையறையற்ற மனித உரிமை குறித்த பிரக்ஞையின் அவசியத்தை உணர்ந்தது. ஆனால், மதவாதம்/இனவாதம் போன்ற அடிப்படைவாத போக்குகள் சக்திபெற்று உலவும் இன்றைய காலகட்டத்தில், மனித உரிமைக்கான போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட மக்கள்குழு தனித்துவிடப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த மனித இனத்துக்குமான அவமானம். சமூகத்தின் எந்த ஒரு பிரிவும் துன்பத்தில் வாடும்போதும், அதன் துன்பத்தை உணர்ந்தும் கண்மூடி இருத்தல் என்பது எந்த ஒரு நாகரீக மனிதர்க்கும் அழகல்ல. இந்த இரு ஒளிப்பதிவுகளும் இக்கருத்தை வலியுறுத்துவதாகவே என்னால் கருதமுடிகிறது.
குறிப்புகள்
1. http://www.hindu.com/mp/2004/04/06/stories/2004040600640100.htm
2. http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1196232