ஈரானில் குடிமக்கள் இதழியல்

இக்கட்டுரையாசிரியர் ஹைதெ தரகாஹி (Haideh Daragahi) ஆங்கில இலக்கியப் பேராசிரியராக ஈரானின் தலைநகரில், டெஹ்ரான் பல்கலையில் பணியாற்றி வந்த போது கொமெய்னி ஈரானின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 1984 க்குப் பிறகு தரகாஹி ஸ்வீடன் நாட்டில் ஒரு பல்கலையாளராகப் பணியாற்றி வந்திருக்கிறார். தவிர பெண் இயக்க ஆர்வலராகவும், செய்தியாளராகவும் செயல் புரிந்திருக்கிறார்.

ஈரானின் இன்றைய கொந்தளிப்புக்குக் கடந்த ஜூன் மாதத்தில் நடந்த தேர்தல் மோசடிகள் காரணமல்ல. மாறாக முப்பது ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் மிருகத்தனமான அவமதிப்பினால் விளைந்த வெறுப்பே காரணம் என்கிறார் ஹைதெ தரகாஹி.

***                                 ***                                ***

ஈரானிலிருந்து நேரடியாக எனக்கு அனுப்பப்பட்ட அளவில்லா மின் மடல்களில் ஈரானைப் பற்றி பல ஒளிப்படங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள் உள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வரும் சம்பவங்கள் தொடர்புடைய மூன்று புகைப்படங்களை அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்துள்ளேன். ஈரானில் நடைபெற்று வரும் கிளர்ச்சி பற்றியும் , அதன் காரணங்கள் பற்றியும் இந்த ஒளிப்படங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தல் மோசடிகளுக்குப் பிறகு  இதழாளர்கள் ஈரானில் தடை செய்யப்பட்டனர். வெளிநாட்டு நிருபர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு எஞ்சியவர் மக்கள் இதழாளர்களே.  இப் படங்கள் மூன்றும் “மக்கள் இதழியலு“க்கான (Citizen’s Journalism) உதாரணங்கள்.


[படம்: 1]

தென் கிழக்கில் உள்ள சிர்ஜன் நகரில் பொது இடத்தில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை முதல் ஒளிப்படத்தில் காணலாம் .  இதை நடத்திய காவலாளிகளைத் தாக்கிவிட்டு, தூக்குக் கயிற்றைத் துண்டித்து உயிருடன் தொங்கிக்கொண்டிருந்த இருவரையும் பொது மக்கள் மீட்டனர்.  துண்டிக்கப்பட்ட கயிறு புகைப்படத்தின் வலது (மேல்) மூலையில் உள்ளது. நிலம் நோக்கிச் சரிந்திருக்கும் மூடிய உடலைப் பல கைகள் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்வதை இப்படத்தில் பார்க்கலாம்.

தூக்கில் போடுவது, கற்களால் அடித்துக் கொல்வது போன்ற முறைகளில் மரண தண்டனையைப் பொதுவெளியில் நிகழ்த்துவது வன்முறையைச் சகஜ நிலை போல ஆக்குவதற்கும்,  மக்களை மிருகங்களாக்கி அடக்கவும் இஸ்லாமியக் குடியரசு மேற்கொண்டுவரும்  செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும். 1979 முதல் இஸ்லாமிய ஷரீயா சட்டத்தை அமலாக்குவதன் மூலம், நீதி என்பது பழிக்குப் பழி என்ற நாகரீகம் இல்லாத கொடூரச் செயலாகக் குறுக்கப் பட்டு விட்டது. சின்னத் திருட்டுகளுக்குத் திருடரின் கை துண்டிக்கப்படுகிறது.  ஒரு கண் இழப்பு ஏற்படுத்தும் குற்றவாளியின் கண் தோண்டிப் பிய்த்து எடுக்கப்படுகிறது. கொலை செய்வதோ ஒரு சமூகக் குற்றமாகக் கருதப்படாமல்,  குடும்பங்களுக்குள் நடந்த குற்றமாகக் கருதப்படுகிறது.  அதனால், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் `ரத்த ஈடு பெற வேண்டியவர்` என்று கருதப்படுவதால்,  (மாநிலம் நிர்ணயிக்கும் தொகையான) ‘ரத்தப் பணத்தை’ ஏற்றுக்கொண்டு வழக்கை முடிவுக்குக் கொணர மறுக்கலாம். அந்த நிலையில், குற்றவாளி கழுத்தில் கயிறு கட்டிச் சுருக்கோடு, தூக்கிலிடப்படத் தயார் நிலையில் இருக்கும்போது,  அவன் நிற்கும் முக்காலியை பாதிக்கப்பட்ட ’ரத்த உறவினர்’ எட்டி உதைக்குமாறு ஷரீயா நீதிபதிகள் சொல்லுவர்.

தூக்கு தண்டனையின் போது பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதைச் சித்திரிக்கும் இப்படம், இப்படிப் பழிக்குப் பழிவாங்கத் தூண்டும் கொடூரமான சட்டத்தோடு உடன்படாத, சமரசம் செய்யாத மக்கள் குழுக்கள் இருக்கின்றன என்பதற்கு ஒரு தெளிவான நிரூபணம்.


[படம்: 2]

இரண்டாவது படம் தெஹ்ரானில் டிசம்பர் 27ஆம் தேதி எடுக்கப்பட்டது. கண்ணீர்ப் புகை குண்டுகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு பெண் வெள்ளை முகமூடி அணிந்திருக்கிறாள். அவள் முகத்தில் ரத்தச்  சுவடுகள் இருக்கின்றன. காமிரா முன் வெற்றிக்கான குறியீடாக  இரண்டு விரல்களை `V` என்ற வடிவில் காட்டுகிறார். இவர். உடல் பாவனை, கடந்த ஆறு மாதங்களாக ஈரானின் பல முக்கிய நகரங்களில் தெருக்களில் குழுமி எழுச்சி காட்டும் பல லட்சம் பெண்களின் எதிர்ப்பு மனோபாவத்தை அப்படியே சித்திரிக்கிறது.  இப்பெண்கள் எதிர்ப்பு ஊர்வலங்களை முன் நின்று நடத்துகிறார்கள். கலவரத்தை அடக்க வரும் போலிஸாரை எதிர்த்து நிற்கவும்,   அவர்கள் கைது செய்ய முனையும் ஆண்களிடமிருந்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பவும் இப்பெண்கள் முனைகிறார்கள்.  முப்பது வருடங்களாக அவர்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்புகள் ,  அவர்களிடமிருந்து  பறிக்கப்பட்ட ஜீவாதார உரிமைகள் போன்றவற்றை நாம் அறிந்திருந்தால் இவர்களின் நடவடிக்கைகள் நமக்கு நன்றாகவே புரியும்.

பால் பிரிவினை அடிப்படையில் தனிமைப்படுத்துவது, பொது இடங்களில் முகத்திரை அணிய வற்புறுத்தப்படுவது என இப்பெண்கள் ஒவ்வொரு நாளும் அவமதிக்கப் படுகிறார்கள். திருமணச் சட்டப்படி கணவன் மணந்து கொள்ளும் மற்ற மூன்று மனைவிகளுடன் ஒன்றாய்ச் சேர்ந்து வாழும் கட்டாயத்துக்கு இப்பெண்கள் ஆளாகிறார்கள்.மேலும், ஷியா சட்டப்படி முல்லா குறிப்பிடும் பணத்தைச் செலுத்தும் ஓர் ஆண், கணக்கில்லாத மனைவிகளைத் தற்காலிகமாகத் திருமணம் செய்ய முடியும். இவ்விருவரின் தொடர்பை கூலிக்கு அமர்த்தப்படும் முல்லா ஒப்புக்கொண்டால் மட்டும் போதும்.  திருமண  ஒப்பந்தத்துக்கு வெளியே வேறொரு ஆணை காதலிக்கும் பெண்ணுக்கோ கல்லாலடித்துக் கொல்லப்படும் தண்டனை கிட்டும். ஒன்பது வயதில் திருமண வயதை எய்திவிடுவதாகப் பெண்கள் கருதப்படுகிறார்கள்.  (அப்படித் திருமணமான பெண்கள்) கணவனை விட்டுப் பிரிய விரும்பினால் ஜீவனாம்சமும் கிடைக்காது, குழந்தைகள் இருந்தால் அவர்களைத் தம்முடன் வைத்துக்கொள்ளவும் முடியாது. கணவன் அல்லது ஆண் துணை எழுத்துப் பூர்வமாக சம்மதிக்காமல் பெண்கள் தனியே பயணம் செய்யவோ, வேலை தேடவோ முடியாது. அதற்கு அவளுடைய ஆண் காப்பாளரோ, கணவனோ எழுத்தில் அனுமதி கொடுக்க வேண்டும்.  அவள் கொல்லப்பட்டால், அவளுடைய ’ரத்த சொந்தங்களுக்கு’க் கிடைக்கும் ‘ரத்தப் பணத்தின்’ மதிப்பு,  (கொல்லப்பட்ட) ஒரு ஆணின் உறவினருக்குக் கிட்டுவதில் பாதிதான். அவளுக்கு உள்ள சொத்துரிமையோ அவள் சகோதரனின் சொத்துரிமையில் பாதிதான்.  நீதிமன்றத்தில் கூட அவள் சொல்லும் சாட்சியின் மதிப்பு ஒரு ஆண் சொல்லும் சாட்சியத்தின் மதிப்பில் பாதிதான்.

இந்த வகைச் சூழலில், நவீன, மதச் சார்பற்ற அரசின் கீழ் வாழ்வதில் தமக்கு இழக்க ஏதுமில்லை, மாறாகக் கிட்டுவதெல்லாம் நன்மையே என்ற முடிவுக்கு இவர்கள் வந்திருப்பதில் எந்த ஆச்சர்யமுமில்லை.


[படம்: 3]

அதே டிசம்பர் 27ஆம் தேதி எடுக்கப்பட்ட மூன்றாவது ஒளிப்படத்தில்,  தப்ப முயலும் ’புரட்சிக் காவலனி’ன் (Islamic Revolutionary Guard) குதிகாலில் அடிக்க ஒரு இளைஞன் முயல்வதைக் காணலாம். இக்காட்சி, முப்பதாண்டுகளாக நிலவிவரும் அரசியல் அடக்குமுறை, பொருளாதாரச் சீர்குலைவு, சமூக மற்றும் தனிப்பட்ட அவமானங்களினால் சிறுமைப்பட்ட ஆண்கள் கொண்ட கோபத்தின் விளைவாகும். அதிகாரம், சொத்து, மக்கள் தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை மதபோதக உயர்குடிகளும், அவர்களின் கூட்டாளிகளும் தம்முடைய ஏகபோக உரிமையாக்கிக் கொண்டனர்.  இதனால் பொது மக்களுக்கு அரசியல் மற்றும் கலைச் சுதந்திரம் பறிபோனது மட்டுமல்லாமல்,  அன்றாட வாழ்வில் தம் இச்சைகளைத் தெரிவிக்கும் உரிமைகளும் பறி போயின. அவர்கள் தமக்குப்  பிடித்த இசையை ரசிப்பது,  எதைச் சாப்பிடுவது,குடிப்பது எனத் தீர்மானிப்பது, தாம் விரும்பிய கருத்துக்களோ படங்களோ பதித்த டி-சர்ட்டுக்களை அணிவது, தெருக்களில் நடக்கும் போது தம் காதலியின் கையைப் பிடித்து நடப்பது போன்ற அன்றாட வாழ்வில் இருக்கும் சின்னச் சின்னச் சுதந்திரங்களையும் பறி கொடுத்தனர்.

ஓரினச்சேர்க்கையாளர்கள், அவர்கள் சிறுவரே ஆயினும், தூக்கிலிடப்படுகிறார்கள்.  குடும்ப வருவாய் ஏகமாகச் சரிந்து விட்டதால், தெருக்களில் ஆயிரக்கணக்கான ஆதரவற்றக் குழந்தைகள் திரிகிறார்கள்.  பல லட்சக் கணக்கான பெண்கள்  விலைமாதர்களாகி விட்டார்கள், ஹெராயின், ஓபியம் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையான மக்களோ லட்சக்கணக்கில் திரிகிறார்கள்.  இந்த சமூகத்தில், மக்கள் இதழாளர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து எதிர்ப்பு தெரிவிப்பதில் என்ன வியப்பு இருக்க முடியும்?

முப்பது வருடங்களாக ஈரானின் நிலவரம் பற்றி மேற்கு நாடுகளின் பத்திரிகைகள்  மேம்போக்காகவே செய்தி சேகரித்தன, பிரசுரித்தன.  அதனால் அவை சமீபத்திய கலவரங்கள் பெருகி வரும் நிலையைக் கவனிக்கத் தவறி விட்டன.  முப்பது வருடங்களாகச் சிறுகச் சிறுகச் சேர்ந்து வளர்ந்து விட்ட பெரும் சலிப்பே இந்தப் பெரும் சமூக எதிர்ப்புக்குக் காரணம் என்பதே உண்மை.  இதற்கு மாற்றாக, நடந்து முடிந்த தேர்தல் மோசடிகளால் உருவான கலவரம் என்ற பொய்த் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.  இது  ஈரானுக்கு வெளியே இருக்கும் மக்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.  மேற்கு நாடுகளின் குடியரசுகளில் தேர்தல் மோசடி ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனாலும், தேர்தல் மோசடிகளைக் காரணமாகக் கொண்டு, இன்று நாம் சீறி வெடித்துள்ள மக்கள் சக்தியை விளக்க முடியாது.

ஈரானில் தீவிரமான அரசியல் மாற்றங்கள் ஏற்படப் போவது போலத் தெரிவதைப் பார்த்து, மேற்கத்திய அரசியல்வாதிகள், ஸ்வீடன் போன்ற நாடுகளில் கூட, பயப்படுகிறார்கள். இவை அந்த வட்டாரத்தையே பாதிக்கும் எனவும், அந்தப் பகுதியில் உள்ள நாடுகளில் ஆட்சியாளர்களோடும் அரசியலோடும் தாங்கள் செய்துள்ள சமரசங்களை, ஒப்பந்தங்களை இத்தகைய பெரும் மாற்றங்கள்  பாதிக்குமெனவும் பயந்து இவ்வகை மேம்போக்கான அறிக்கைகளுக்கு ஒத்து ஊதுகிறார்கள்.  அதிக பட்சம் இரானின் கடந்த ஆறுமாதத்து மனித உரிமை அத்து மீறல்களைக் கண்டனம் செய்வதற்கு மேல் எதுவும் செய்ய இந்நாடுகள் தயாரில்லை.  கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில் ஈரானிய அதிகார அமைப்பிற்குள் உள்ள சீர்திருத்தக் கோஷ்டிகள் தோற்றுப் போயினவே, அவற்றின் நிலைப்பாடும் இந்நாடுகளின் நிலைப்பாடும் ஒன்றே.  .

மேல்நிலை அதிகார அமைப்பின் மீது கவனம் குவிக்கவே பயிற்சி பெற்றிருக்கும் மேற்கின் ஊடகங்கள் இரானில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆச்சரியமான நிலைகளைப் புரிந்து கொள்ளத் தேவையான மதி நுட்பமற்றவை. இஸ்லாமியக் குடியரசு சுமத்த முயலும் கொடுமையான அதிதீவிரமான கட்டுப்பாடு இப்படி முழுதும் எதிர்ப் பட்சமான விளைவுகளைத் தோற்றுவித்திருப்பதை இந்த வகை மேம்போக்கான செய்தித் த்யாரிப்புக்கான முயற்சிகளால் சற்றும் விளக்க முடியவில்லை.  மூன்று வருடங்களாக பெண்கள் இயக்கங்கள் கட்டமைத்துக் காட்டிய முன்மாதிரியையே பின்பற்றி இன்று குவிமையம் இல்லாத, பரவலாக உள்ள எதிர்ப்புகள் உருவாகியுள்ளன என்று தெரிகிறது.  உறவு வலைகளால் பின்னிய நிறுவன அமைப்பும், இணையம் வழித் தொடர்பும் இவ்வகையான விரிந்து பரவிய அரசியல் இயக்கத்துக்கு வழிவகுத்துள்ளது.

ஏராளமான மக்கள் ஆதரவைப் பெற்றதும், தொடர்ந்து நிகழ்வதுமான ஒரு இயக்கம் என்ன விளைவைக் கொணரும் என்று நாம் எளிதில் கணித்துச் சொல்ல முடியாது.  . எனினும், ஏதோ சாத்தியமாகும் ஒரு சமரசம்  மேல்மட்டத்தில் எழுந்து, அதன்  மூலம் ஏற்கனவே அதிகாரத்தில் இருப்பவர்களில் ஏதோ ஒரு குழு அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடும் என்று வைத்துக் கொண்டாலும், அதற்கு மேற்கு நாடுகளின் அங்கீகாரம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் கூட,  எந்தப் புது அரசாங்கமும், குறைந்த பட்சம் மதத்தையும் அரசையும் பிரித்தே ஆக வேண்டும் என்ற ஒரு கோரிக்கையைச் சந்திப்பது தவிர்க்க இயலாது.  இதுதான் இன்று போராட்டத்தில் கலந்து கொள்ளும் பல குழுக்களின் கோரிக்கையே இதுதான். இந்தக் கோரிக்கையை ஷரீயா சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு எதுவும் சந்திக்கவோ நிறைவேற்றவோ இயலாது.

-o00o-

மொழி பெயர்ப்பாளர் ரா.கிரிதரன் லண்டனில் பணி செய்கிறார்.  தமிழில் இன்றைய அச்சு/ வலை வெளிப் பத்திரிகைகள் பலவற்றில் தொடர்ந்து எழுதி பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறார்.

மேலும் ஒளிப்படங்கள் காணச் செல்ல வேண்டிய வலையிடம் இது:
Tehran Live photo blog

-o00o-

மூலக்கட்டுரை ‘இடுகுறியும் பார்வையும் ‘ (SignandSight.com) என்ற ஆங்கில வலைத் தளப் பத்திரிகையில் ஜனவரி 11, 2010 அன்று வெளியானது. மூலக் கட்டுரையை இங்கே படிக்கலாம்.

தன்னைப் பற்றி இப்பத்திரிகை சொல்வது இது.

signandsight.com translates outstanding articles by non-English language authors bringing them to a worldwide audience. signandsight.com gathers voices from across Europe on a variety of topics, aiming to foster trans-European debates and the creation of a European public space.

signandsight.com is the English language service of perlentaucher.de, the largest cultural online magazine in German language. 2003 perlentaucher.de has won the Grimme Award, Germany’s most prestigious media prize.

இக்கட்டுரையை மொழிபெயர்த்துத் தமிழில் பிரசுரிக்க அனுமதி கொடுத்த ஹைதெ தரகாஹி அவர்களுக்கும்,  ‘சைன் அண்ட் சைட்’ பத்திரிகைக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

We at ‘Solvanam‘ thank Ms.Haideh Daragahi and the magazine ‘signandsight.com‘  for granting us permission to translate and publish this article ‘Citizen Journalism in Iran‘ in our pages.