அதனால்தான்…

“மாம்! எனக்கு இட்லி வேண்டாம்” என்று சூரன் தட்டைத் தள்ளிவைத்தான். முதல்நாள் இரவில் குளித்திருந்தாலும் காலையில் முகத்தைத்துடைத்து சுத்தமான உடைக்கு மாறியிருந்தான்.

“ஏன், சூரன்?”

“அப்படித்தான்.”

“உனக்குப் பிடிச்சமாதிரி வெல்லம் போட்டிருக்கிறேன், பார்!” என்று மூன்று இட்லிகளைத் தொடாமல் தட்டின் ஓரத்திலிருந்த பழுப்புக் குன்றைக் காட்டினாள் அவனெதிரில் நின்றிருந்த சரவணப்ரியா.

அது அவனுக்குக் கவர்ச்சியாகப் படவில்லை.

“வயிறு சரியில்லையா?”

திங்கள்காலை ஆறுமணிக்கே சாமி வேலைக்குச் சென்றுவிட்டான். சூரனுக்கு உணவுதந்து அவனைப் பள்ளிக்கூட பஸ்ஸில் ஏற்றுவது அவள் கடமை. பிறகுதான் வேலைக்குக் கிளம்பமுடியும்.

சூரன் நாற்காலியிலிருந்து எழுந்திராமலே ரெஃப்ரிஜரேடர் மேலிருந்த ‘ஃப்ரூடி ரிங்ஸை’க் காட்டினான். மேலட்டையில் கண்ணைப்பறிக்கும் வர்ண வளையங்கள். வெள்ளிமாலை வந்த விருந்தினர்கள், அவர்கள் ஒன்பதுவயதுப் பையனுக்காக எடுத்துவந்தது. நேற்றுகாலை அவர்கள் கிளம்புவதற்குமுன் சரவணப்ரியா ஞாபகமாக பையனின் அம்மாவிடம் அதை எடுத்துத்தந்தாள். அட்டைப்பெட்டியைப் பிரித்துப்பார்த்த அவள், “இவ்வளுண்டுதானே மிச்சமிருக்கு. மெனக்கெட்டு எதுக்கு எடுத்துண்டு போகணும்? சூரனுக்கும் பிடிச்சிருந்துதே. அவன் சாப்பிடட்டும்” என்று சொன்னதை மறுத்துப்பேச மனம்வரவில்லை.

“பேர்தான் ஃப்ரூடி, அதிலே பழமெதுவும் கிடையாது. கலரும், வெறும் சக்கரையும்தான்” என்று சரவணப்ரியா சொன்ன உண்மை, சிறுவர் தொலைக்காட்சியின்போது வரும் விளம்பரத்தில் ‘ஃப்ரூடி ரிங்க்ஸ்’ சாப்பிட்டு மகிழ்ச்சிக்கூவலுடன் பறக்கும் வண்ணப்பறவையின் மாயையை விலக்கும்போல் தோன்றவில்லை. இன்று ஒருநாள் போனால்போகிறதென விட்டுவிடலாமா? சூரன் ஒருவேளை சாப்பிட்டால் அந்த சீரியல் தீர்ந்துவிடும், பிறகு வாங்க வேண்டாம்.

“நாளையிலிருந்து பெட்டியில் நிஞ்சா படம்போட்ட சீரியல்தான் சாப்பிடுவேன்” என்கிற தன்தீர்மானத்தை சூரன் வெளிப்படுத்தினான். “இன்றுமாலை அப்பாவுடன் கடைக்குப்போய் வாங்கப்போகிறேன்.”

subwaysas‘பப்ளிக் ஸ்கூல் போனப்புறம் கூட்டு, ரசம்னு நம்ம சாப்பாடு எதையும் தொடமாட்டான், பாத்திண்டே இரு!’ என்று அனுபவப்பட்ட சரோஜா எச்சரித்தது சரிதான் போலிருக்கிறது. சூரன் கின்டர்கார்டன் போகத்தொடங்கி ஒருமாதம்கூட ஆகவில்லை, அதற்குள் இட்லி தின்ன முரண்டுபிடிக்கிறானே. சரவணப்ரியா அவனருகில் உட்கார்ந்து பொறுமையாகச் சொன்னாள். “இட்லிக்கு என்ன குறைச்சல்? காலைலே குளிரா இருக்கும்போது சூடா சாப்பிடறதுதான் நல்லது. அதில் நல்ல கார்போஹைட்ரேட், ப்ரோடீன் இருக்கு. குழந்தைகள் சீரியல் எல்லாத்திலியும் பாதி சக்கரைதான். சாப்பிட்டு ஒருமணிலே பசிக்கும். பல் கெட்டுப்போகும். நீ நல்லா வளரணும்னா என்ன வேணும்?”

“ப்ரோடீன்” என்று சூரன் மென்றுவிழுங்கினான்.

“அது நிஞ்சா சீரியல்லே ஒருகிராம்கூடக் கிடையாது.”

அம்மா சொல்வது புரிந்தாலும், புரியாததுபோல் இமைமூடாமல் அவளைப் பார்த்தான்.

“அப்பா நமக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அரிசியையும், உளுத்தம் பருப்பiயும் தண்ணீரில் ஊறவைச்சு, அரைச்சு, கலந்து வைக்கிறார். அப்புறம் மாவு என்ன ஆகிறது?”

“இரண்டுமடங்காகிறது.”

“எப்படி? மாவுல இருக்கிற கண்ணுக்குத் தெரியாத ‘யீஸ்ட்’னாலே. இப்ப சமத்தா இட்லி சாப்பிட்டா அடுத்த தடவை தோசை செய்வேன். வட்டமா, பெரிய பான்கேக் மாதிரி இருக்குமே, அது.”

சூரனின் மௌனம் மறுப்புக்கு அறிகுறி.

“சரி, இன்னைக்கி இட்லி வேணாம்னா, ப்ரெட் டோஸ்ட் செஞ்சு வெண்ணெய் போட்டுத் தரட்டுமா?”

“பள்ளிக்குத்தான் ப்ரெட் சான்ட்விச் எடுத்துப்போகிறேனே, இப்போது எதற்கு?”

“அப்ப வேற என்ன வேணும்?”

“என் வகுப்பில் எல்லா பையன்களும் நிஞ்சா சீரியலைத்தான் தினம் காலையில் தின்கிறார்கள்” என்கிற ரகசியம் மெதுவாக வெளிப்பட்டது. ‘நானொருவன்தான் இட்லி சாப்பிடுகிறேன்’ என்கிற முறையீடு அதில் அடக்கம்.

“மத்தவங்க எல்லாரும் செய்யறாங்கன்னு நாமும் அதைச் செய்யக்கூடாது. நமக்கு எது நல்லதோ, எது சரின்னு தோணுதோ அதைத்தான் செய்யணும். அவங்க மாதிரி இருந்த இடத்தில் உக்காந்து விடியோவில் டென்னிஸ் ஆடாமல் நீ நிஜமான டென்னிஸே விளையாடுகிறாய். இப்பவே உனக்கு கூட்டல் கழித்தல் கணக்கு போடத்தெரியும், அவங்களுக்குத் தெரியாது. என்னைப்பார்! மத்த அம்மாக்கள் மாதிரி நான் ஹை-ஹீல்ஸ் போடறேனா?”

“நீ நல்ல உயரம்” என்று அம்மாவுக்கு ஐஸ்வைத்தான்.

“அதனால மட்டுமில்லை. மத்தவங்க போடறாங்கன்னு நானும் போட்டுக்கிட்டா, அப்புறம் நான்தான் முதுகுவலிலே கஷ்டப்படணும்.”

சூரன் யோசித்தான். அவன் பிடிவாதம் தளர்ந்திருக்கலாமென்று, “பஸ் வர இன்னும் ஐந்து நிமிடம்தான்” என்று நினைவூட்டினாள்.

ஆனால், அவன் தன்பிடியை இன்னும் விடவில்லை. “அதற்குள் ‘ஃப்ரூடி ரிங்க்ஸை’ வேகமாக சாப்பிட்டுவிடுவேன்” என்றான்.

“ஐ’ம் சாரி!”

CB106386சிலநிமிட நிசப்தத்தில் எண்ணப்போராட்டம். தெருவில் பஸ் வந்துநிற்கும் ஓசை அதைக் குலைத்தது. சூரன் முன்னறைக்கு ஓடினான். சரவணப்ரியா அலுவலகத்தை அழைத்து வேலைக்குவர சற்றுநேரமாகும் என்று தெரிவித்தாள். சூரன் ஜன்னலின் கண்ணாடியில் முகத்தைப் பதித்து வெளியே பார்த்தான். விட்னி, ஜேசன், கெவின் என்று மாமூல் கும்பல் பஸ்ஸில் ஏறியது. கடைசியாக, எதிர்வரிசையில் வசிக்கும் அவனுடைய நெருங்கிய சினேகிதி கேரன் அவன் பக்கம் திரும்பிக் கையசைத்தாள். அவள் நுழைந்ததும் கதவு மூடிக்கொள்ள பஸ் நகர்ந்தது. சூரன் சமையலறைக்கு வேகமாக வந்தான். “இட்லிக்கு பழுப்புச்சர்க்கரை மட்டும் எனக்குப் போதாது, வெண்ணெயும் போட்டால்தான் சாப்பிடுவேன்” என்றான் விறைப்பாக.

புன்னகையை மறைத்து, மௌனமாக சரவணப்ரியா ஆறிப்போன இட்லியை நுண்ணலை அடுப்பில் சுடவைத்து அவன் விருப்பத்தை நிறைவேற்றினாள். அவன் சாப்பிடுவதற்குள் வேலைக்குச்செல்லத் தயாரானாள்.

“புத்தகப்பையை எடுத்துக்கோ! கார்லே ஷூ போட்டுக்கலாம்” என்று சூரனின் காலணிகளை எடுத்துக்கொண்டாள். காரில் ஏறியதும், “கவலைப்படாதே, சூரன்! பஸ் நின்றுநின்று போவதற்குள் நாம் குறுக்குவழியில் சென்று அதைப் பிடித்துவிடலாம்” என்றாள்.

அவள் சொன்னதுபோல், அவர்கள் பள்ளிக்கூடத்தை நெருங்கியபோது மஞ்சள் பஸ்களிலிருந்து சிறுவர்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள். கார் நின்றதும் சூரன் கதவைத் திறந்தான்.

“ஐ’ம் சாரி, மாம்! என்னால் நீ வேலைக்குச் செல்வது தாமதமாகிவிட்டது” என்று தெளிவான குரலில் சொன்னான்.

“பரவாயில்லை. ஐ லவ் யூ, சூரன்!”

“பை மாம்!” பையை எடுத்துக்கொண்டு காரிலிருந்து இறங்கி அதன் கதவைச் சாத்தினான்.

“பை சூரன்! மாலையில் பார்க்கலாம்.”

சூரன் மாணவர்களின் வரிசையை நோக்கி விரைந்தான். அவன் வருவதைப் பார்த்து, கேரன் வரிசைக்கு வெளியே காத்திருந்து அவனுடன் சேர்ந்துகொண்டாள்.

“ஹாய் சூர்! நேரம்கழித்து எழுந்தாயா?”

“அதெல்லாமில்லை, கேரன்! சாப்பிடத்தான் நேரமாகிவிட்டது.”

கும்பல் பள்ளிக்குள் நுழைய மற்றநாட்களைவிட அதிக நேரமெடுத்தது. காரணம், பள்ளியின் முகப்பிற்கு முன்னால் அப்பழுக்கற்ற சம்பிரதாய உடையில் ஒருவர். நடைபாதையில் நின்று கைக்கடக்கமான சிறுபுத்தகத்தை விநியோகம் செய்தார். ஒவ்வொருவரும் அதைவாங்கிப்பார்த்து, நன்றிசொல்லி, பையில் செருகிக்கொண்டே நிதானமாக நகர்ந்தனர். கையிலிருந்த புத்தகங்கள் தீர்ந்ததும் தரையிலிருந்த அட்டைப்பெட்டியிலிருந்து இன்னும்சில அடுக்காக எடுத்தார். கடைசியில் சூரனும் கேரனும் அவரை நெருங்கியபோது கையிலிருந்த புத்தகங்கள்தான். ஒன்றை அவனிடம் நீட்டினார்.

சூரன் அதைப் பெற்றுக்கொள்ள கையை உயர்த்தவில்லை. “தாங்க்யூ! எனக்கு வேண்டாம்.”

“ஏன்?”

“நான் உன்னை இதுவரை பார்த்ததில்லையே.”

“முன்பின் தெரியாதவர்களிடமிருந்து மிட்டாய் வாங்குவது தவறுதான். நான் புத்தகம்தானே தருகிறேன். இது சாதாரண புத்தகமில்லை. மிக உன்னதமானது, மிக உயர்வானது. இதிலிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் கடவுள் அருளியது.”

புத்தகத்தை வேகமாகப் பிரித்துக்காட்டினார். முன்னால் சென்ற மாணவர்கள் பள்ளியின் முகப்பைத் தொட்டுவிட்டார்கள்.

சூரன் தயங்கினான். அவன் கின்டர்கார்டன் மாணவனென்று ஊகித்து, “உனக்கு முடியாவிட்டால் உன் பெற்றோரிடம் கொடுத்துப் படிக்கச்சொல்!” என்றார்.

“எனக்கே படிக்கத் தெரியும்.”

“எங்கே படி, பார்க்கலாம்!” என்று புத்தகத்தை அவன் முகத்துக்குமுன் காட்டினார்.

சூரன் ஆரஞ்சுநிற அட்டையில் தங்க எழுத்துக்களைப் படித்தான்.
“வெரி குட்! இந்தா, உனக்குத்தான், வைத்துக்கொள்! நீயே முழுவதையும் படிக்கலாம். அப்போதுதான், நீ நல்ல பையனாக முடியும்.”

“வேண்டாம்!”

“ஏன்?

“என் அம்மாவுக்குப் பிடிக்காது.”

“அவளுக்கு ஏன் பிடிக்காது? மற்றவர்கள் எல்லாரும் சமர்த்தாக வாங்கிக்கொண்டு போகிறார்களே.” எல்லாரும் என்பதை அழுத்திச்சொன்னதுடன் அவர்கள் பக்கம் கையை நீட்டிக்காட்டினார்.

“அதனால்தான் அவளுக்குப் பிடிக்காது.”