மகரந்தம்

ஸ்விஸ் வங்கிகளின் குட்டு உடைபடுகிறது

சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய அரசியலின் உச்ச திருவிழாவான தேர்தல் காலத்தில், ஸ்விஸ் வங்கிகளின் பதுக்கப் பட்டு இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்பது குறித்து பரப்பாகப் பேசப்பட்டது. திருவிழாவின் முடிவில் அந்தப் பரபரப்பு காணாமல் போனது. ஆனால் உலகரங்கில் இந்தப்பிரச்சினை மீண்டும் தலை தூக்கியுள்ளது. வரி ஏய்ப்போரின் சொர்க்கபுரியான ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜூலியஸ் பேயர் எனும் வங்கியின் மேற்கிந்திய தீவுகளின் கிளையை நிர்வகித்து வந்த எல்மர் என்பவர் 2002-ஆம் ஆண்டு அந்த வங்கியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். அதே எல்மர் தற்போது அந்த வங்கியின் ரகசியங்களை கூவிக் கூவி விற்கிறார். உலக நாடுகள் பலவற்றின் வருமான தணிக்கை அமைப்புகள் பலவும் அவரை தொடர்பு கொண்டு தங்கள் நாட்டிற்க்கு சேர வேண்டிய கறுப்பு பணத்தை திரும்ப பெற முனைந்துள்ளன. மேலதிகத் தகவல்களை இங்கே படிக்கலாம். இந்த விஷயத்தில் இந்திய அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும்? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ரஷ்யாவிலும் தெரு நாய்கள்

மனித சமூகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள் குறித்து அறிந்து, அச்சமூகத்தை ஒட்டுமொத்தமாக வழிநடத்த முன்னணி வீரத் தோழர்கள் மேற்கொண்ட/மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்துப் பேச புதிதாக ஒன்றுமில்லை. ஆனால் மிக வேகமாக பெருகிவரும் ரஷ்யத் தெரு நாய்களின் எண்ணிக்கையின் விளைவாக, அவற்றின் உற்பத்தி சக்தி மற்றும் அவற்றிகிடையேயான உறவு குறித்து ஆராய வேண்டிய கூடுதல் பொறுப்பு தோழர்களுக்கு வந்துவிடும் என்றே எண்ணத் தோன்றுகிறது. ரஷ்யத் தலைநகரில் மட்டும் மொத்தம் 35,000 தெருநாய்கள் அலைகின்றன. ஒரு சதுர மைலில் சுமார் 84 தெரு நாய்கள். அங்காடிகள், ரயில் நிலையங்கள், முக்கிய தெருக்கள் ஒரு இடம் விடாமல், பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்துள்ளன. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனரா, இல்லையா? அங்கேதான் நாம் உடனடியாக வரும் முடிவுகள் வீழ்கின்றன.  ரஷ்யர்களில் பலர் இந்த நாய்களை விரும்புகின்றனர்.  இவற்றில் பல நகருக்கு வெளியே உள்ள ஓநாய்களோடு கலந்து ஓரளவு ஓநாயக் குணம் பெறுகின்றனவாம்.  சில சுரங்கத்தில் ஓடும் மெட்ரோ ரயிலில் சகஜமாக ஏறி இறங்கி உணவு தேடி வாழ்கின்றனவாம்.   அருகே படத்தில் கொல்லப்பட்ட ஒரு நாய்க்கு ரஷ்ய மக்கள் வைத்த ஒரு சிலை ரயில் நிலையத்தில் இருக்கிறது.   மாறிவரும் ரஷ்ய சமூகத்துடனான இந்த நாய்களின் உறவு, அவை எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் குறித்துச் சிலர் விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள். இந்த நாய்கள் குறித்து ஒருவர் தனது ஆராய்ச்சி முடிவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

பரிணாம வளர்ச்சியில்  பாலினச்சண்டை

இதை ஒரு பாலினச்சண்டை என்று கூட சொல்லலாம். பொதுவான அபிப்பிராயம் என்னவென்றால் ஆண் க்ரோமோசோமான “Y” பாலூட்டிகளில் ஒருவித ‘சீரழியும்’ – அதாவது பரிணாமத்தில் பொருளிழக்கும் செயலிழக்கும் -ஒரு க்ரோமோசோம் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் சில சமீபத்திய ஆராய்ச்சிகள் -சிம்பன்ஸி மேலும் மானுட’ Y ’ க்ரோமோஸோம்களை ஆராய்ந்ததில் கடந்த ஆறு மில்லியன் ஆண்டுகளில் இந்த க்ரோமோஸோம் அதிவேக பரிணாம மாற்றமடைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். சிம்ப்-மானுட இனவிலகலுக்கே இது காரணியாக இருந்திருக்குமோ? அப்படி என்றால் பெண்கள் சிம்பன்ஸிகளுக்கு ஆண்களைக் காட்டிலும் நெருக்கமோ…சுவாரசியமான இந்த லிங்கை படித்து விட்டு வீட்டம்மாவுடனோ அய்யாவுடனோ அறிவியல் பூர்வமாக சண்டை போடலாம். லிங்க் இங்கே.

ஹிமாலய பனிப்பாறையும் இந்திய விஞ்ஞானிகளும்

ஹிமாலய பனிப்பெரும்பாறைகளின் உருகும் வேகம் குறித்து வெளியான அறிக்கையை சர்வதேச அறிவியலாளர்கள் சந்தேகிக்கின்றனர். இந்திய விஞ்ஞானிகள் ஜகா வாங்குவது போலவும் இமாலயம் குறித்த ஆராய்ச்சிகள் சர்வதேச அமைப்பிடம் விடப்படுவது நல்லது என்பது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கும் இந்த பத்திரிகை கட்டுரையும் இது சந்தேகிக்கும் அறிவியல் அறிக்கை போலவே அஜெண்டா கொண்டதாக இருக்குமோ என்று ஐயப்படத்தான் தோன்றுகிறது. யாரைத்தான் நம்புவதோ பாழாய் போகும் எளிய இந்திய மனமே! நீங்களும் இதை படியுங்கள்

அடிப்படைவாத மடத்தனம்… 1- தரம்… 2 -தரம்…

அறிவியலுக்கு எதிரான அடிப்படைவாத மடத்தனம் என்ன ஆபிரகாமியத்துக்குத்தான் முழு குத்தகையா? இல்லை என நிரூபித்திருக்கிறார்கள் அலகாபாத்தில். வேத அறிவியல் நிறுவனம் என்கிற அமைப்பின் மைக்கேல் கிரிமோ (Michael Cremo) வழக்கமான படைப்புவாத முட்டாள் தனமான விதத்தில்,  தொல்லெச்சங்களில் துண்டு விழுவது டார்வினிய அறிவியலை கேள்விக்குள்ளாக்குவதாக கதை விட்டிருக்கிறார். ஆனால் சோகமான விஷயம் சந்திரா விக்ரமசிங்கே போன்ற ஒரு நல்ல அறிவியலாளர் அஸ்ட்ரோ பயாலஜிக்கும் கடவுளுக்கும் முடிச்சு போட முனைந்திருப்பதுதான். இந்த அறிவியலையும் ஆன்மிகத்தையும் கேலிக்கூத்தாக்கும் கூட்டம் குறித்த செய்தி இங்கே

அக்னி, பரிணாம வளர்ச்சி, மானுடம்

எங்கும் வேள்வி அமர ரெங்கும்
யாங்கணுந் தீ! தீ! – இந்நேரம்
தங்கு மின்பம் அமர வாழ்க்கை
சார்ந்து நின்றோமே!

என வேதரிஷிகள் வேள்வி நெருப்பின் முன் ஆனந்த எழுச்சி அடைவதை மனக்கண்ணால் கண்டு வார்த்தைகளால் வடித்தெடுத்தான் முண்டாசு பாரதி. அக்னியின் முன் மானுடம் பெறும் அகக்கிளர்ச்சியின் வேர்கள் வேதகாலத்தினைக் காட்டிலும் ஆழமானவை, மானுடத்தைக் காட்டிலும் ஆதியானவை என்பதுதான் உண்மை. இந்த சுட்டியைப் படியுங்கள்