சீனத்தின் தூரிகையெழுத்துக் கலையின் மீது மோகங்கொண்ட மிகப் பிரபல ஓவியர் பிகாஸோ ஒரு முறை, “நான் சீனாவில் பிறந்திருந்தால் ஓவியனாகியிருக்க மாட்டேன். தூரிகைக் கலைஞனாகத் தான் ஆகியிருப்பேன்”, என்று சொன்னாராம். சீனத்தில் மொழியை வெறும் மொழியாக மட்டும் பார்க்காமல் கலை என்ற தளத்திற்கு எழுதுமொழியை உயர்த்தியிருக்கிறார்கள். இக்கலையின் வரலாறு நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேல் மிகவும் வளமுடன் திகழ்ந்து உலகெங்கிலும் எல்லாக் கலைஞர்களையும் கவர்ந்து வருகிறது. சீனத்தின் இக்கலையை அப்படியே ஏற்றுக் கொண்டு கொண்டாடுகிறது மேலை நாகரிகம். மேலை ஓவியர்கள் தூரிகைக்கலையின் வழி கீழைக் கலாசாரத்தை அறிய நினைக்கிறார்கள். கலையை அறிய மிகுந்த ஆர்வம் காட்டுவதால், அதற்காகவே அவர்கள் சீனமொழியைக் கற்கவும் தயாராகிறார்கள். இக்கலையின் பல்வேறு கூறுகளை மேலை ஓவியக்கலை உள்வாங்கிக் கொள்ள ஆரம்பித்து வருடங்களாகின்றன.
ஓவியத்தையும் தூரிகைக்கலையையும் ஒரே தாய்வயிற்றுப் பிள்ளைகள் என்று வருணிப்பர் சீனர். அவ்வந்த காலத்துக் கலைஞர் உருவாக்கிய முக்கிய பாணியிலிருந்தே படைப்பின் காலத்தைச் சொல்லிவிடக் கூடிய தூரிகைக் கலைஞர்கள் சீனாவிலும் சீனாவுக்கு வெளியிலும் இன்றும் உளர். சீனத்திலோ அரசர் முதல் ஆண்டி வரை பலரும் தூரிகை ஓவியங்களைக் காலங்காலமாக சேகரித்துப் பாதுகாத்திருக்கிறார்கள். சீனச் சமூகத்தில் வீடு, அறைகள், பெரிய கட்டங்கள், நீதிமன்றம், கைவிசிறிகள், சுவர்கள், நுழைவாயில்கள், அருங்காட்சியகம், அலுவலகம், நினைவுச் சின்னங்கள், கல்லறைகள், ஆலயங்கள் என்று எங்கெங்கு காணினும் தூரிகைக்கலையின் சுவடுகள் வாழ்த்து, முதுமொழிகள், அறிஞர் பொன்மொழிகள், கவிதை, பாடல், ஈரடிக்கவிதை, கடிதம் போன்ற பல்வேறு வடிவில் மிளிரும். தோட்டம், மாடம், மாளிகை, ஆலயம் போன்ற எல்லா வித கட்டடங்களிலுமே கட்டடவியலிலும் இக்கலையின் தாக்கத்தைக் காணலாம். இக்கலையின் தாக்கம் இல்லாத இடமோ துறையோ சீனத்தில் இல்லை என்றே சொல்லிவிடலாம்.
சீனத்து தூரிகைக் கலையின் அரூபத் தன்மையையும் அத்தன்மையின் அழகையும் புரிந்து கொள்ளக் கூடிய கலைஞர்கள் மேற்கில் இருக்கிறார்கள். அடர்த்தியும் தொன்மையும் கொண்டது சீனத்து தூரிகைக் கலை என்பதே அவர்களின் நம்பிக்கை. மேற்கின் நவீன அரூப ஓவியக்கலைக்கும் கிழக்கின் பழமையான தூரிகைக் கலைக்குமான வேறுபாடுகளின் பிரக்ஞையுடன் இரண்டுக்கும் தொடர்பு ஏற்படுத்தவும் மேலைக் கலைஞர்கள் விழைகின்றனர். ஓவியக்கலையின் காட்சி, நடனக்கலையின் வேகம், இசைக்கலையின் லயம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டது தூரிகைக்கலை. அரிய அற்புத மலரைப் போன்றதாக இருக்கிறது இக்கலையைக் கீழை நாகரிகத்தின் ரத்தினம் என்கிறார்கள். செழுமை நிறைந்த வடிவங்கள் வேலைப்பாடுகள் வழி உணர்வுகளை எழுப்பவல்ல எந்தவொரு நுண்கலையுடனும் ஒப்பிடக் கூடியது தூரிகைக்கலை.
ஓர் அரூபக் கலையென்ற அளவில் தூரிகைக்கலையானது அரிய இசையைப் போன்ற ஒரு லயத்தையும் இணக்கத்தையும் ஏற்படுத்தவல்லது. நடைமுறையிலோ அது ஓர் எழுத்துமொழி. தூரிகையெழுத்து வகை கிட்டத்தட்ட ஓவியத்தைப் போன்றே தோற்றமளிக்கிறது. ச்சாப் குச்சிகளைப் போலவே தூரிகைக்கலையும் சீனத்திலிருந்து பிறந்து, கொரியா, சிங்கப்பூர், ஜப்பான் கிழக்காசிய நாடுகளுக்குப் பரவியதும் அது கீழைக்கலையானது. முற்காலத்தில் முடியாட்சிகள் தோறும் அரசாங்கத் தேர்வு அல்லது கலை இலக்கியத் தேர்வுகளில் முக்கியமாகப் பரிசோதித்த நான்கு கலைகளுள் ஒன்று தூரிகைக்கலை. இன்று இவ்வரிய கலை சீனத்தில் மட்டுமல்லாது உலக நாடுகளெங்கும் உயிர்ப்புடனே இருந்து வருகிறது.
சித்திர எழுத்துக்களின் துணைகொண்டு கலைஞர்கள் ஆன்மீகத் தேடலில் இறங்குவதாகவே சீனர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஓராயிரம் ஆட்களுக்கு ஓராயிரம் வித முகங்கள் இருப்பதைப் போலவே ஓராயிரம் வகையான கையெழுத்தும் இருக்கின்றன. தூரிகையைக் கையாளும் விதத்திலும் எழுத்துக்களைப் படைப்பதிலும் தூரிகையெழுத்துக் கலைஞர்கள் அவரவருக்கான தனித்துவத்தைப் பெறுகிறார்கள். குண இயல்பு, அழகியல் உணர்வு, மன உணர்வுகள் மற்றும் நெறிகள் ஆகிய பலவற்றையும் கலைஞர் கவர்ச்சியின் மூலமும், அழகின் மூலமும் சுவைஞரிடம் கொண்டு சேர்கிறார்.
கலைஞரின் ஆழ்மனவுலகை தூரிகைக்கலையானது பிரதிபலிக்கிறது. இக்கலையைப் பயிலும் ஒருவரது குண இயல்பில் மாற்றம் தெரிவதுடன் வாழ்க்கையைப் பார்க்கும் கோணமும் மாறுதலடையும். சொல்லைக் கடந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடிய கலையின் அரூபத்தன்மை கலைஞருக்குள்ளும் சுவைஞருக்குள்ளும் ஓர் புனிதத் தன்மையையும் ஒருவித ஏகாந்தத்தையும் கொணர்கிறது. ஒருவரது உள்ளார்ந்த ஆன்ம பலத்தைப் பிரதிபலிக்கக் கூடிய கலையாகவே சீனர்கள் இதைப் பார்க்கிறார்கள். இதன் காரணமாகத் தான் சீனத்து அறிஞர்கள் முற்காலத்தில் தூரிகைக்கலைக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். அவ்வந்த கலைஞரின் அவ்வந்த நேரத்து மனோநிலையைப் பொருத்து அவரது புத்தாக்கம் வெளிப்படும். சொல்லுக்குள் கவித்துவ அழகியலைக் கொணர கலைஞருக்கு முழுச்சுதந்திரம் கிடைப்பதுடன் வெள்ளைக் காகிதத்தில் கருப்புத் தீட்டல்கள் மிக அழகிய உணர்வைக் கொடுக்கின்றன.
இன்றும் தாய்வானில் இக்கலை தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரையில் ஒரு முக்கிய பாடமாகவே கற்பிக்கப் படுகிறது. சீனத்தில் மட்டுமின்றி தாய்வானிலும் இக்கலைக்கு ஏராளமான சங்கங்களும் பள்ளிகளும் உண்டு. இளையோரை ஊக்குவிக்கவென்று போட்டிகளும் பரிசுகளும் நடக்கின்றன. இந்த கணியுகத்திலும் இக்கலைக்கான கவனமும் அக்கறையும் குறையாதிருக்கிறது. தூரிகைக் கலையில் தேர்ச்சியடைய ஒவ்வொரு சொல்லாக, ஒவ்வொரு கீற்றாக மனதில் ஆழப்பதியும் வரை பயிலுதல் அவசியமாகிறது. சீனத்து உடற்பயிற்சி வகையான ச்சீ கோங் உடலுக்கு மட்டுமான பயிற்சியாக இல்லாமல் மனதிற்கும் பயிற்சியளிக்கும் ஒரு வகையான யோகம். அதைப் போலவே இக்கலையானது தொடர்ந்து பயின்றால் கலைஞரின் ஆழ் மனதிற்குள் மையின் அளவு, எழுத்தின் அளவு, எழுத்தின் உருவம், ஒவ்வொரு கீற்றின் அளவும் போக்கும் அவரே அறியாத அளவிலான தேர்ச்சியைக் கொணரும். மிகச் சுவாதீனமாகக் கைகள் இயங்கும்.
பலவிதமான கட்டுப்பாடுகளுடன் மேலைநாடுகளில் நிலவும் தூரிகைக்கலையைப் போலில்லாமல் சீனத்து தூரிகைக்கலையில் மையின் ஈரமும், உலர்வும், பயனும் அனைத்துச் சுதந்திரங்களையும் கொண்டிருக்கிறது. சரியான சொற்களைச் சரியான முறையில் விவரிப்பது உள்ளிட்ட எல்லாவித இயக்கமும் கலைஞரின் மனநிலை, மனக்கட்டுப்பாடு, உடலுக்கும் மனதிற்குமான ஒத்திசைவு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். படைப்புகலையான தூரிகைக்கலை, கலைஞர் தூரிகையையும் மையையும் கையாளும் திறனில் உருவாகிறது. இதற்குப் பயன்படுத்தப்படும் காகிதம் ஸூவான் காகிதம் என்றறியப்படும். இது அரிசியால் உருவாகும் உயர்தரக் காகிதம். சீனக் கலாசாரத்தின் மிக முக்கியக் கூறாக விளங்கும் இக்கலை மிகுந்த ஆழமுடையது.
சித்திர எழுத்துக்களை நடைமுறையில் சாதாரணமாக எழுதுவதைப் போல எழுதுவதல்ல தூரிகையெழுத்து. இது ஓவியத்தைப் போன்றே உணர்வுகளைக் காட்டக்கூடியதும் ஆளுகைக்குட்பட்டதும் ஆகும். கற்றலில் ஒரு கிளை என்ற வகையில் மிகுந்த செழுமையும், பரிணாம வளர்ச்சியும், விதிகளும் வரலாறும் கொண்டிருக்கிறது. கலைஞர்களும் கலையைப் பின்பற்றுவோரும் மதிப்பிடுவோரும் ஏராளமானோர் உளர். தூரிகைக்கலை மேலோட்டமாகப் பார்க்கும் போது எளிமையாகத் தெரியலாம். ஆனால், அத்தனை எளிதல்ல. அப்படி எளிதாக இருந்திருக்குமென்றால் தூரிகைக் கலைஞர்களும் நிறைய பேர் இருந்திருக்க வேண்டும். ஆனால், கலையைப் பயில்வோரின் எண்ணிக்கையை ஒப்புநோக்க கலையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்று உயர்ந்த கலைஞர்கள் மிகமிகக் குறைவு. அதனினும் குறைவு உச்சங்களை எட்டியவர்கள்.
தூரிகையெழுத்துக் கலையைக் கற்கவோ அதைக் குறித்து அறியவோ முற்படும் ஒருவர் அக்கலையின் துவக்கத்தை அறிய முற்படுவதும் இயற்கையே. துல்லியமான காலகட்டத்தை இதுவரை கணிக்க முடிந்ததில்லை. இருப்பினும், சீனாவில் மஞ்சள் பேரரசரின் ஆட்சியின் போது சாங் ஜேய் என்ற பெயருடைய ஒருவர் தான் இக்கலையைக் கண்டுபிடித்ததாச் சொல்வார்கள். எப்படியும் சீனமொழி பிறந்த காலகட்டத்திற்குப் பிறகு, அதாவது 4600 ஆண்டுகளுக்கு முன்பு தான் இக்கலை தோன்றியிருக்க வேண்டும் என்பது உறுதி. இதன் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்புவோர் உளர். ஏனெனில், அகழ்வாராய்ச்சியாளர் சீனாவில் மொழி தோன்றி 4500 ஆண்டுகள் ஆவதாக உரைக்கிறார்கள். அப்படிப் பார்த்தாலும், அன்று இக்கலை தொடக்க நிலையிலேயே இருந்திருக்க வேண்டும்.
தொன்மைமிகு லோங்ஷான் நாகரிகத்தில் திங்கோங் கிராமத்தில் ஜோபிங் என்ற பகுதியில் 1992ல், தோண்டியெடுக்கப்பட்ட குயக்கலயங்களில் தீட்டியிருந்ததிலிருந்து ஓரளவிற்கு இக்கலை தோன்றிய காலத்தைக் கணிக்க முடிகிறது. கிடைத்த ஒரு துண்டு மட்பாண்டத்தில் அலையென எழுந்து வழிந்த ஐந்து வரிகளில் பதினோரு சித்திர எழுத்துக்கள் இருந்தன. அமைப்பு மிக நேர்த்தியாக இருந்திருக்கிறது. அதுவே தாவென்கோவ் நாகரிகத்து மட்பாண்டத்தில் ஓவியமும் தூரிகையெழுத்தும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தறிய முடியாதவாறு கலந்திருந்தன. இரண்டுமே கூர்மையான கருவியைக் கொண்டு தீட்டப்பட்டிருந்த போதிலும் லோங்ஷான் காலத்தைச் சேர்ந்த தாலத்தில் உள்ள மொழியானது இதைவிடப் பண்பட்டிருந்தது. இன்றும் அது தான் சீனாவின் ஆகப் பழமையான தூரிகைப் படைப்பு என்று கருதப்படுகிறது. 4300 ஆண்டுகள் பழமை கொண்ட இது தான் சீனத்து தூரிகையெழுத்துக் கலைக்கு முன்னோடியாகவும் கருதப்படுகிறது.
தூரிகையால் உருவான எழுத்துக்களைவிட உலோகக் கருவியால் செதுக்கப் பெற்றவை அதிகக் காலச் சிதைவின்றி கிடைத்திருக்கின்றன. தூரிகையால் தீட்டப்பட்டவை மூங்கில் பாளங்களிலும் மரச்சட்டங்கள், பட்டு, விலங்கின் தோல் போன்ற அழியக் கூடிய பொருட்களில் உருவாகியிருந்தது அவை சிதைவுற ஒரு காரணம். ’ஷாங்’ காலத்தில், எலும்பிலோ ஆமை ஓட்டிலோ உலோகக் கருவியால் செதுக்கப்பட்டவை தான் நிலைத்திருக்கும் தன்மையுடையவை. உலோகத்தால் செதுக்கும் முன்னர் தூரிகையால் வரையப்பட்டிருந்தன. தூரிகையால் வரையாமல் நேரடியாகச் செதுக்கப்பட்டிருந்த திங்கோங் கிராமத்து மட்கலயத்தில் இருந்த எழுத்து புரியக் கூடியதாக இல்லை. அதிக நுட்பமுடன் விளங்கியது.
தூரிகையெழுத்து சாதாரண எழுத்துமுறைக்கு மிக நெருங்கியிருக்கிறது. இக்கலையை உயரத்திலோ தூரத்திலோ வைத்துவிட்டு நடைமுறைப் படுத்தாத வேலையெல்லாம் கலைக்கு உதவாது என்பதே சீனர்களின் கொள்கை. எழுத்துக்கள் தவறில்லாமல் உருக்கொண்டால் போதும் என்று நினைக்கும் மேற்கைப் போலில்லாமல் சீனத்தில் சித்திர எழுத்துக்கள் முறையாக எழுதினால் மட்டுமே சரியாக உருவாகும். புதிதாக எழுதும் ஒருவர் எட்டு முக்கியக் கீற்றுகளைப் பயிற்சி செய்தல் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.
முதலாவது ‘புள்ளி’. இந்தப்புள்ளியானது பெரும்பாலும் சித்திர எழுத்தின் மேலோ பக்கத்திலோ தான் இருக்கும். அடுத்தது குறுக்குக்கோடு. எப்போதுமே இடமிருந்து வலம் இழுக்கப் படுதல் வேண்டும். மூன்றாவது தான் நேர்கோடு. இது எப்போதுமே மேலிருந்து கீழே தான் வரையப்பட வேண்டும். இடப்புறம் திரும்பும் கீழ்க்கோடு தான் நான்காவது பயிற்சி. இது ஒரு கோணல் கோடு. மேலிருந்து கீழ்நோக்கி வரும்போதே இடப்புறம் திரும்பிக் குறுகும். நுனியில் தூரிகையின் அடர்த்தி படிப்படியாகக் குறைந்து மெல்லியதாக முடிய வேண்டும்.
வலப்புறம் திரும்பும் கீழ்க்கோடு தான் ஐந்தாவது பயிற்சி. இதுவும் ஒரு கோணல் கோடு. மேலிருந்து கீழ்நோக்கி வரும்போதே வலப்புறம் திரும்பிக் கூடும். நுனியில் தூரிகையின் அடர்த்தி படிப்படியாகக் கூடி ஆரம்பித்ததைவிட அதிக தடிமனாக முடிய வேண்டும். ஆறாவது பயிற்சி கொக்கி. இது பல திக்கில் போகக் கூடியது. குறுக்கு அல்லது நேர்கோட்டின் முடிவில் பேனா/தூரிகை எதிர்திசைக்குப் போகும் முன்பு வரும் சின்ன கொக்கி. கோட்டின் இறுதியில் ஒரு மீன் தூண்டில் நுனியில் இருக்கும் கொக்கி போன்ற உருவத்தைக் கொணரும். மேலே எழுந்து வலம் திரும்பும் கீற்று ஏழாவது பயிற்சி. இது ஒரு கோணல் கீற்று. இடப்பக்கத்தில் துவங்கி கோணலாய் மேலெழும்பி எழுதுகோலை மேலே தூக்கியிருப்பதைப் போன்று நுனி மெலிந்து முடியும். எட்டாவதும் இறுதியானதுமான பயிற்சி தான் வளைவு. கூர்மையான வளைவு நேர்கோட்டிலிருந்து குறுக்குக் கோடாக்கவோ, குறுக்குக் கோட்டிலிருந்து நேர்கோடாக்கவோ பயன்படும் முறை இது.
இப்பயிற்சிகளை மேற்கொள்வதுடன் நில்லாமல் இவை தீட்டப்படும் வரிசையையும் அறிதல் முக்கியமாகிறது. ஒவ்வொரு சித்திர எழுத்துக்கும் எழுதும் முறையில், அதாவது தீட்டும் முறையில் பின்பற்ற வேண்டிய வரிசை மிக மிக முக்கியம். இந்த வரிசையின் முக்கிய குறிக்கோள் நடைமுறைச் சௌகரியம். முற்காலச் சீனர்களின் மேலங்கியின் நீளமான கைப்பகுதி, மணிக்கட்டின் அருகில் மிகவும் அகலமாக இருக்கும். அவர்கள் மைதோய்த்த ஈரத் தூரிகையை மேலும் கீழும் முறையற்று பயன்படுத்தினால் எழுதப்பட்ட மை காயும் முன்பே கைப்பகுதி பட்டு கலைந்து விடும். சில விதிவிலக்குகள் இருந்தபோதிலும், பொதுவாகப் பின்பற்றும் விதிகள் சிலவுண்டு. எப்போதும் மேலிருந்து கீழ் நோக்கியும் இடமிருந்து வலம் நோக்கியும் தான் தீட்ட வேண்டும். குறுக்குக் கோடுகள் முதலிலும் நேர்கோடுகள் பிறகும் வரும். சதுரம் போன்ற சித்திர எழுத்தை எழுதும் போது இடப்புற நேர்கீற்று முதலிலும் பிறகு மேல் குறுக்குக் கோடும் தீட்டிவிட்டு உட்பகுதியில் ஏதேனும் எழுத இருந்தால் அதையும் முடித்து விட்டு இறுதியில் தான் கீழ்கோடு தீட்டப்படுதல் வேண்டும். உள்ளேயோ வெளியேயோ புள்ளிகள் இருப்பின் அவை ஆக இறுதியில் இடப்படும்.
இந்தப் பொதுவிதிகள் காரணமாக அக்கால சீனத்தில் இடது கைப்பழக்கம் இருந்தவர்களுக்கு எழுதுவதும் தீட்டுவதும் மிகவும் சிரமமாக இருந்திருக்கிறது. ஆகவே, இடது கைப்பழக்கம் இருக்கும் பலர் வலது கையால் கஷ்டப்பட்டு எழுதியிருக்கிறார்கள். இக்காலத்தில் சட்டென்று காய்ந்து விடும் மையும் பேனாவும் இருப்பதால் இடது கைப்பழக்கம் ஒரு பிரச்சனையாக இல்லை. சித்திர எழுத்துக்களில் நினைவில் வைக்க வேண்டியவை பலவுண்டு. சரியான கீற்றுகள் இணைந்து தான் முழுச்சித்திர எழுத்து உருவாகும். இது சரியாக இருக்க வேண்டுமானால் தனிக்கீற்றுகளின் பொருளும் பயனும் அறிந்திருத்தல் அவசியமாகிறது. ஒன்றைக் காட்டிலும் இன்னொன்று அதிக பொருத்தமாகத் தேர்ந்தெடுக்கும் போது உருவம் பொருந்துவதால் மட்டுமின்றி முத்திரையானது மொத்த எழுத்தையும் மேலும் தெளிவாக விளக்கக் கூடியதாகவும் இருத்தல் அவசியமாகிறது.
அவ்வந்த கால கட்டத்திலும் தூரிகைக்கலையின் குறிப்பிட்ட வடிவங்களும் நுணுக்கங்களும் வழக்கில் இருந்தன. இக்கலையில் பயிற்சியுள்ள ஒரு சுவைஞர், கலைஞர் தீட்டியிருக்கும் கீற்றுகளையும் அதன் தூரிகை அசைவுகளையும் வைத்து கலைஞனின் குண இயல்புகளைச் சொல்லிவிட முடியும். அதுமட்டுமின்றி அவரது கல்வித் தேர்ச்சி மற்றும் கலையில் அவரது அனுபவம் ஆகிய பலவற்றையும் கூடச் சொல்லி விடுவர். தீட்டல்கள் அழுத்தமானதும் தெளிவானதுமாக இருந்தால் கலைஞர் உறுதியானர். அலையலையென நளின கீற்றுகள், கலைஞர் இயற்கையுடனும் வாழ்க்கையுடனும் ஒன்றியவர் என்று சொல்லும். இப்படி ஏராளமாகச் சொல்வார்கள்.
தூரிகையால் எழுதப்படும் சீனச் சித்திர எழுத்துக்கள் அடிப்படையில் நேரடியாகச் சொல்லும் ஹ்ஸியாங் ஹ்ஸிங், அரூபமாகவோ குறிப்பாகவோ சொல்லும் ச்சீஹ் ச்சீஹ், நேரடியாகச் சொல்வதும் குறிப்பாலுணர்த்துவதும் இணைந்த ஹூய் யீ, உச்சரிப்புகளையும் படங்களையும் சேர்த்து எழுதப்படும் ஹ்ஸிங் ஷெங், வெறும் உச்சரிப்புக்கான எழுத்தைக் கொண்ட ச்சியா ச்சியேஹ், மூலச் சொல்லுக்கு புதுப் பொருளையோ வேறொரு பொருளையோ கொடுக்கும் ச்சுவான் ச்சூ ஆகிய ஆறு வகைப்படும். இவை ஆறு எழுத்து முறைகள் என்ற பொருளில் ‘லிஹூ’ என்றறியப் படுகின்றது. தூரிகை, மைக்குச்சி, காகிதம் மற்றும் மைக் கல் ஆகியவை இக்கலையின் நான்கு முக்கிய சாதனங்கள். இவையில்லாமல் சீன ஓவியமோ தூரிகைக்கலையோ சாத்தியமில்லை. இவை கலையின் நான்கு பொக்கிஷங்கள் என்ற பொருளில் ‘வென் ஃபங் ஜூ பாவ்’ என்றறியப்படும்.
சீனத்து நுண்கலைகளின் இதயம் என்று போற்றப்படும் தூரிகைக்கலையின் ஆகச் சிறந்த கலைஞர் என்றறியப் பட்டவர் வாங் ஸின்ஜி. ’டாங்’ காலம் வரை இவரை அடித்துக் கொள்ள வேறு ஆளே இருக்கவில்லை. ’டாங்’ காலத்தில் இக்கலை குறித்த ஆய்வுகளும் நுணுக்க விவரங்களும் நிறைய எழுதப்பட்டன. அது தொடர்பான நூல்களும் பதிப்பிக்கப்பட்டன. அவற்றில் சில ஷூ பு, ஷூ யி ஆகியவை. இந்நூல்கள் பின் வந்த சந்ததியில் உருவான கலைஞர்களுக்கு சிறந்த கையேடாக விளங்கின. போர்களாலும் பூசல்களாலும் அரசியல் நிலமை கட்டற்று போன ஐந்து முடியாட்சி மற்றும் யுவான் முடியாட்சி காலங்களில் இக்கலை சில திருப்பங்களையும் குழப்பங்களையும் சந்திக்க நேர்ந்தது. ’மிங்’ காலத்து தூரிகைக் கலையானது ’ஸோங்’, மற்றும் ’யுவான்’ காலத்து வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ’ச்சிங்’ காலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இரண்டு முடியாட்சி காலத்திலும் ஏராளமான படைப்புகள் உருவாகின. தீட்டும் பாணியின் அடிப்படையில் முத்திரைப் பாணியான ச்சுவான் ஷூ, அரசாங்க எழுத்துப்பாணியான லிஷூ, வழக்கமான எழுத்துப் பாணியான காய்ஷூ, சேர்த்தெழுதும் வேகமுடனான பாணியான ஹ்ஸிங் ஹூ, புல்லைப் போன்ற தோற்றம் கொண்ட பாணியான ட்ஸாவ் ஹூ ஆகிய ஐந்து வகையாகப் பிரிக்கிறார்கள்.
முத்திரைப் பாணியில் இருக்கும் இரு வகையை ஜோவ்வென், டாஜுவான் என்று அழைப்பார்கள். ஷோவ் வென் ஜேய் ஜி என்பவர் தான் 220 ஜோவ்வென் சித்திர எழுத்துக்கள் கொண்ட தொகுப்பை ஹூ ஷென் தொகுத்தார். நவீன அறிஞர் வாங் குவேய் இந்த எழுத்துக்கள் குழப்பங்கள் நிறைந்ததென எண்ணினார். டாஜுவான் வகை எழுத்துக்கு ஷிகுவென் எனும் உட்பிரிவு தான் முதன்மையாக இருந்திருக்கிறது. ஸ்யூ (581-618) மற்றும் டாங் (618-907) காலங்களில் பத்து முத்திரைக் கற்கள் தியான்ஸிங் என்ற சிற்றூரில் கண்டெடுக்கப்பட்டன. இது இன்றைய ஷான்ஸி மாநிலத்தின் ஃபெங்சியான் என்ற ஊர். இந்த முத்திரைக் கற்களில் இருந்த எழுத்துக்கள் கி.மு770-476 மற்றும் கி.மு475-221 காலங்களைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பத்து கற்களிலும் ஷிகுவென் எழுத்துக்களே இருந்ததென்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அவற்றில் இருந்தவை அனைத்துமே பேரரசர் ச்சின்ஷிஹூவாங்குக்கு அஞ்சலி செலுத்தும் கவிதைகள். செதுக்கப்பட்ட எழுத்துக்களுடனான மேலும் மூன்று கற்கள் வடஸோங் காலத்தில் (960-1127) கண்டெடுக்கப்பட்டன. இவை யாவும் ச்சின் அரசர் ச்சூ அரசருக்கு அனுப்பிய செய்திகள். இவற்றை ஜோவ்ச்சூவென் என்றழைத்தார்கள். ச்சின் நாட்டின் ஒரே பாணியிலான வெண்கலச் செதுக்குகளில் காணக் கூடியதுமானவை ஜோவ்வென், ஷிவென் மற்றும் ஜோவ்ச்சூவென் ஆகிய மூன்றும். இவை டாஜுவான் அல்லது ஜோவ்வென் வகை எழுத்துக்களில் அடங்கும். இவை கூர் தீட்டல்களையும் கச்சிதமான உருவமும் கொண்டவை. அக்காலத்தில் உருவாகி நீண்ட காலத்துக்கு நடைமுறையில் இருந்திருக்கின்றன.
ச்சின்ஜுவான் என்றும் அறியப்படும் ஸியோஜுவான், டாஜுவான்னிலிருந்து உருவான எழுத்துமுறை. ’வாரிங்’ காலத்தின் போது (கி.மு475-221) ச்சின் நாட்டில் உருவாகி ச்சின் மற்றும் மேற்கு ஹ்ஹான் காலங்களில் புழக்கத்தில் இருந்திருக்கிறது. ச்சின் காலத்தில் தோண்டியெடுக்கப்பட்ட கலாசாரக் குறிப்புகள் ஸியோஜுவான், டாஜுவான்னிலிருந்து உருவான எழுத்துமுறை என்பதற்கு ஆதாரமாக விளங்கின. இரண்டுக்கும் இடையிலான கால வேறுபாடு ஒன்று இருக்கவில்லை. ஒப்பு நோக்க டாஜுவான்னின் சில எழுத்துகள் குழப்பமாகவும் எழுத சிரமமாகவும் இருந்தன. இருப்பினும், கி.மு770-476 காலங்களில் எளிமை படுத்தப்பட்டன. லீஸி என்ற ச்சின்ஹூஹூவாங்கின் அமைச்சர் உள்ளிட்ட சில ஸியோஜுவானின் எழுத்துக்களைச் சேகரித்து முறைப்படுத்தி அளித்தனர். அதுவே சமூகத்தில் பிரபலமடைந்தது. ஸியோஜுவான் படைப்புகளில் சில ‘தாய்’ மலையில் கண்டெடுக்கப்பட்ட செதுக்கு கல் மற்றும் லாங்யா வெளியில் கிடைத்த சில செதுக்குகள் ஆகியவை. ஸியோஜுவான் சீனச்சித்திர எழுத்துக்களின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் பங்காற்றியுள்ளது. இதுவே பழஞ்சீன எழுத்துக்களுக்கும் நவீன சீன எழுத்துக்களுக்கும் பாலமாக விளங்குகிறது.
லிஷூ என்ற தூரிகை எழுத்தானது முறையற்று எழுதப்பட்ட லியூவென் என்ற எழுத்து வகையிலிருந்து உருவானது. இவ்வெழுத்துகள் உருண்டை வடிவம் கொண்டு நிறைய கீற்றுகளுடன் இருக்கும். லியூவென் எழுத்து முறை எழுத அதிக நேரமெடுக்கக் கூடியது என்பதால் மக்கள் அதை எழுதும் போது மனம் போன போக்கில் எழுதினர். கொஞ்சம் விதிமுறைகளை மீறினர். வளைவுகள் கோடுகளாகின. சில வேளைகளில் இவை நேர்கோடாகவே மாறின. லிஹூ, ’வாரிங்’ (கி.மு475-221) கால இறுதியில் மெதுவாகப் பிரபலமடைந்தது. லிஹூ மூன்று வகைப்படும். அவை, ’ச்சின்’ காலத்து (கி.மு221-206) ச்சின் லீ, ’ஹ்ஹான்’ காலத்து (கி.பி206-220) ஹ்ஹான் லீ மற்றும் பாஃபென் ஆகியவை. ச்சின் லீ பேரரசர் ஷிஹூவாங்கால் எளிமைப் படுத்தப்பட்ட புழக்கத்தில் வந்ததைக் குறிக்கிறது. ’ஹ்ஹான்’ காலத்திலோ லிஹூ கிட்டத்தட்ட நடைமுறைக்கு வந்திருந்தது. என்றாலும், வளர்ச்சியடைந்தபடி தான் இருந்தது. பாஃபென் கிட்டத்தட்ட லிஹூக்கு அருகில் வந்த எழுத்து முறை.
எளிமைப் படுத்தப்பட்ட சீனச் சித்திர எழுத்துக்கள் ச்சின்ஷிஹூவாங் எட்டு தூரிகைப் பாணிகளை முறைப் படுத்துவதற்கு முன்பே ச்சின் காலத்தில் பிரபலமாகியிருக்க வேண்டும். அகழ்வுகளின் படி வாரிங் காலத்து சில மரத்தட்டுகளும் மூங்கில் சாமான்களும் ச்சின் காலத்து ஆயுதங்கள், அரக்கு சாதனங்கள் மற்றும் மட்கலயங்கள் ஆகியவற்றில் ஜுவான்ஹூவை விட மேலும் எளிமைப் படுத்தப் பட்டிருந்தன. உருண்டை வடிவிலிருந்து சதுர வடிவிற்கு மாறிய சித்திர எழுத்துக்கள் அலைபோன்ற தோற்றம் கொண்டன. இதுவே லிஷூவின் துவக்கம். லிஷூவின் தோற்றமே சீனத்தின் இக்கலைக்கு பெரும் மாற்றத்தையும் புரட்சியையும் கொணர்ந்தது. அது மட்டுமின்றி 3000 ஆண்டு பட எழுத்துக்களைக் களைந்து சீனம் எளிய எழுத்துமுறையை ஏற்றது. குறிகளும் படங்களும் கிட்டத்தட்ட காணாமல் போய் எழுத்துக்கள் வெறும் முத்திரைகளாகின.
’ஜின்’ காலத்தில் (265-420) காய்ஹூ குறிப்பிட்ட ஒரு கட்ட வளர்ச்சியை அடைந்தது. அக்காலத்து படைப்புக்களில் லிஹூவின் சாயல்களைக் காணலாம். லோங்ஜாங் கோவிலில் கிடைத்த கல்லும் அழகி சீமாட்டி தோங்கின் கல்லறையில் கிடைத்த செதுக்கு எழுத்தும் காய்ஹூவில் இருக்கின்றன. ’ஸ்யூ’ காலத்தில் (581-618) தான் காய்ஹூ முதிர்ச்சியடைந்தது. ஆனால், அது ’டாங்’ காலம் (618-907) வரையில் உச்சத்தை அடையவில்லை. காய்ஹூ அடர்த்தியும் அலைபோன்ற கீற்றுகளும் கொண்டது. வரலாற்றில் ஏராளமான படைப்புக்கள் காய்ஹூவில் கிடைக்கப் பெற்றுள்ளன. ஔயாங் ஸூன், லியூ கோங்ச்சுவான், யான் ஜென்ச்சின், ஜாவ் மெங் ஆகியோர் தம் தனித்துவ பாணியால் காய்ஷூவை உயரங்களுக்குக் கொண்டு சென்றார்கள். இவர்கள் காய்ஹூவின் ‘நான்கு வல்லவர்கள்’ என்றறியப் படுகிறார்கள். லிஷூவை விட காய்ஹூ எழுதவும் இனங்காணவும் எளிது. ஆகவே, வேய் மற்றும் ஜின் காலத்திலிருந்தே காய்ஹூ லிஹூவின் இடத்தைப் பிடித்தது. ஸோங் காலத்தில் அச்சுமுறை வழக்கில் வந்தபோது காய்ஷி அடிப்படையில் ஸோங்தி உருவானது. அதைத் தொடர்ந்து ஃபங்ஸோங்தி, தேதி போன்ற பலவும் உருவாகின. கணிணியிலும் இப்போது நடைமுறையில் இவற்றில் பல எழுத்துருவாகக் கிடைக்கின்றன.
இணைக் கீற்றுகளைக் கொண்ட எழுத்துமுறையை காவ்ஹூ என்கிறார்கள். எளிமைப் படுத்தப்பட்டதும் மிகைப் படுத்தப்பட்ட சித்தரிப்பும் கொண்ட எழுத்துமுறை இது. உள்ளார்ந்த லயத்தை உணர வைக்கக் கூடிய உருவமும் சித்திர எழுத்தும் கொண்ட காவ்ஷூ உண்மையில் இன்றைய நவீன எழுத்து முறைக்கு மிக அருகில் வரும். எந்த எழுத்தையும் காவ்ஹூவில் எழுதிவிட முடியும். எடுத்துக்காட்டாக, வெண்கலக் கலயங்களில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்கள். காவ்ஹூ இலக்கியமானது, மேற்கு ’ஹ்ஹான்’ காலத்தில் (கி.மு206-கி.பி8) ச்சின் லி வகையிலிருந்து தான் வளர்ச்சி கண்டு கிழக்கு ’ஹ்ஹான்’ காலத்தில் (25-220) நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும் என்பதே பரவலான நம்பிக்கை. ’ச்சின்’ முடியாட்சிக்கு முன்னரான காலகட்டத்தில் காவ்ஹூ பிறந்திருக்க வேண்டும் என்பதே வரலாற்றாளர்களின் கூற்று. நாடுகளுக்கிடையே பெரும் போட்டி நிலவியது. அவர்கள் எப்போதுமே மற்ற அண்டை நாடுகளின் நடவடிக்கைகளில் உஷாராக இருக்க வேண்டியிருந்தது. அப்போது தொடர்புத் துறைக்கு அதிக முக்கியத்துவம் வந்தது.
ஆரம்ப காலத்தில் காவ்ஹூ எழுத்துமுறை லிஹூயின் இயல்புகளைக் கொண்டு விளங்கியது. அப்போது அது ஜாங்காவ் என்றழைக்கப்பட்டது. கிழக்கு ’ஹ்ஹான்’ காலம் (25-220) முதல் ’வேய்’ காலம் (220-265) வரையிலும் மற்றும் ’ஜின்’ காலத்திலும் (265-420) காவ்ஹூ லிஹூவின் அடையாளங்களை இழந்தது. இக்கால கட்டத்தில், ஏராளமான இணைக்கீற்றுகளைக் கொண்ட காவ்ஹூ ஜின்காவ் என்றழைப்பட்டது. டாங் காலத்தில் (618-907) காவ்ஹூ மேலும் வளர்ச்சியடைந்து துடிப்புடனும் பெரும்வீச்சுடனும் எழுதப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் குவாங்காவ் என்றழைக்கப் பட்டிருக்கிறது. காவ்ஹூவில் சேர்ந்த கீற்றுகள் நிறைய இருக்கும். சித்திர எழுத்தின் மொத்த உருவம் மட்டுமே சித்தரிக்கக் கூடியதாக இருக்கும். இது பொதுவாக யாராலும் வாசித்து விடக் கூடிய பாணியில் அமைந்திருக்கிறது. ஆகவே, தொடர்புக்கு ஏற்றதாகவும் இருக்கிறது. காவ்ஹூ இன்னும் முன்பே உருவாகியிருக்க வேண்டும். ஆனால், எழுத்துமுறை உருவாவதற்கு தான் காலமெடுத்திருக்கிறது. ஹூவான்ஹூ மற்றும் லிஹூ வேகமாக எழுத முடியாது. ஆகவே, காவ்ஹூ உருவாகி அதிக பழக்கத்திற்கு வந்தது என்பதே ஆய்வாளர்களின் கூற்று. இதுவே எல்லோராலும் மிகவும் விரும்பப் படுகிறது. காவ்ஹூ கலைஞர்களில் முக்கியமானவர்கள் ஜாங்ஜி, ஜாங் ஸூ, ஹூவாய் ஸூ ஆகியோர்.
ஸிங்ஹூ அதிக சுதந்திரம் கொடுக்கும் ஒரு பாணி. இதை ஹ்ஹான் முடியாட்சி காலத்து (கி.மு206-கி.பி220) பேரரசர்கள் ஹூவான் மற்றும் லிங்கின் கீழ் கலைஞராக இருந்த லியூ தேஷெங் என்பவர் உருவாக்கினார். முதலில் இதை ஸிங்யா என்றழைத்தனர். பிறகு தான் அதன் பெயர் ஸிங்ஹூ என்று மருவி அதுவே தனிப்பாணியாக வளர்ந்தது. ஸிங்ஹூ கலையழகுசொட்டும் அரூபக் கலையாகத் திகழ்கிறது. இதை எழுதும் போது தூரிகையின் வேகம் அதிகம் இருக்கக் காணலாம். நடைமுறையில் இது மிகச் சுலபமானது என்றறியப்படுகிறது. கட்டற்ற வீச்சும் லேசாக வளைந்த கோடுகளும் கொண்ட தீட்டல் வகை லிஹூவுக்கும் காவ்ஹூவுக்கும் இடைப்பட்ட பாணியாகக் கொள்ளக் கூடியது. எந்த வகையானாலும் கவனமாக தீட்டப்பட்டால் வேறுபாடுகள் தெளிவாகத் தெரியும்.
ஸிங்ஹூ, காவ்ஹூ அளவிற்கு கொசகொசவென்றும் இருக்காது; காய்ஹூ அளவிற்கு நேர்த்தியாகவும் இராது. இரண்டிற்கும் இடைப்பட்டிருக்கும். வேகமான வீச்சுடன் தூரிகை இயங்கினால் ஸிங்ஹூ காவ்ஹூவில் சேரும். தூரிகை ஓவியப் பாணிகளை சீனர்கள் நிற்கும், நடக்கும், ஓடும் மனிதனுடன் ஒப்பிடுவர். ஸிங்ஹூவுக்கான சிறந்த உதாரணம் வாங் ஸிஜியின் ‘ஆர்கிட் மாடம்’ தொகுப்பாகும். இன்று கிடைத்துள்ள இந்தப்படைப்பு அசல் இல்லை. அதன் பிரதி தான். பிரதியெடுத்தவரின் திறன் அசலைப் போலவே நகலையும் சிறப்பாக வடிக்க உதவியிருக்கிறது. ’ஸோங்’ காலத்து (960-1279) காய் ஸியாங், ஸூ தோங்போ, ஹூவான் திங்ஜியான் மற்றும் பி ஃபு ஆகியோர் ஸிங்ஹூ பாணிக் கலைஞர்களில் குறிப்பிட வேண்டியவர்கள். பிற்காலங்களில் ’ச்சிங்’ மற்றும் ’மிங்’ முடியாட்சிகளிலும் தற்காலத்திலும் நிறைய ஸிங்ஹூ பாணி கலைஞர்கள் உருவானார்கள்.
சீனர்கள் மிகப் பழங்காலத்திலேயே தூரிகையை கண்டுபிடித்து விட்டார்கள். அதை எழுதப்பயன்படுத்த ஆரம்பித்தே மூவாயிரம் ஆண்டுகளாகியிருக்கும். மட்கலயங்கள், விலங்குகளின் எலும்புகள், மூங்கில் விளாறுகள், பட்டு என்று பலவற்றிலும் தூரிகையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பழங்கால தூரிகைகளை கல்லறைகளிலிருந்து அகழ்ந்தெடுத்து அவற்றின் காலத்தைக் கண்டறிந்துள்ளார்கள்.
’டாங்’ மற்றும் ’ஸோங்’ காலத்தில், ஸூவான்ஜோவ் என்ற ஊர் தான் தூரிகை உற்பத்திக்கான மையமாக உருவானது. அங்கு தயாராகும் வகைகளில் ‘ஸூவான்-பி’ மற்றும் ‘ஜூகே-பி’ ஆகிய தூரிகைகள் தான் மிகச் சிறந்தவை என்றறியப் பெறுபவை. யுவான் காலத்திற்குப் பிறகு ஹூஜோவ்வில் தூரிகை உற்பத்தி பெருமளவில் உயர்ந்தது. அப்போதிலிருந்து ‘ஹூ-பி’ தான் ஆகச் சிறந்த தூரிகை என்றறியப் படுகின்றது. அதன் கூர்மையும் நேர்த்தியும் கலைஞரை மிகவும் உற்சாகப் படுத்தக் கூடியவை. அழுத்தமான பளிச்சென்ற எழுத்துக்களுக்கும் மங்கலான எழுத்து வகைகளுக்கும் ஏற்றதான தூரிகைகள் உண்டு. பேனாவைப் போல உலோக நுனியுடன் உருவாகாமல் இக்கலைக்குரிய தூரிகையானது மெல்லிய மற்றும் மென்மையான விலங்குகளின் முடியிலிருந்து உருவாகிறது. தூரிகையின் வளையும் தன்மை தான் எழுதுகோலிலிருந்து அதை வேறுபடுத்துகிறது. அதுவுமில்லாமல் எல்லாத் திக்கிலும் கலைநயத்துடன் திருப்பியெழுதக் கூடிய சௌகரியம் தூரிகைக்கு உண்டு. காகிதத்திலிருந்து விலகியும் காகிதத்தை நோக்கியும் அசைத்து மிக மெல்லிய மற்றும் அடர்கோடுகளையும் தீட்டல்களை உருவாக்க முடியும். தூரிகையைப் பயன்படுத்துவதிலிருக்கும் அனைத்து சலுகைகளையும் கண்டடைந்து உருவானதே சீனத்து தூரிகைக்கலை மற்றும் ஓவியம்.
தூரிகைகள் செய்யப் பயன்படும் முடியிழைகளைப் பொருத்து அவை தரம் பிரிக்கப் படுகின்றன. ஆட்டு முடித் தூரிகை, ஓநாய் முடித் தூரிகை மற்றும் ஊதாநிறத் தூரிகை ஆகிய மூன்று வகையுண்டு. வளையும் தன்மையும் உறிஞ்சும் தன்மையும் அதிகம் கொண்ட மிக மென்மையான ஆட்டு முடித் தூரிகை ஆட்டின் முடியிலிருந்து உருவாகிறது. ஓநாய் முடித் தூரிகையைப் பெரும்பாலும் கீரியின் முடியிலிருந்து தான் தயாரிக்கிறார்கள். முயல் முடியிலிருந்து செய்யப்படும் ஊதாநிறத் தூரிகை துல்லிய கோடுகளை உருவாக்கும் என்பதால் தூரிகைக்கலைக்கு மிகவும் ஏற்றது. சில வேளைகளில் இருவேறு விலங்குகளின் முடிகளைச் சேர்த்தும் தூரிகைகளைச் செய்வதுண்டு. இவ்வகைத் தூரிகையைக் கொண்டு உறுதியான மற்றும் இலகுவான கோட்டுக் கலவையைத் தீட்டுவார்கள். இடத்துக்கும் தேவைக்குமேற்ப தூரிகைளைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக கலைஞர்கள் எப்போதும் தங்களிடம் பல்வேறு வகையான தூரிகைகளை வைத்துக் கொள்வதே வழக்கம். தூரிகையின் பிடியைப் பெரும்பாலும் மூங்கில், மரம், அரக்கு, பீங்கான் போன்றவற்றைக் கொண்டே உருவாக்குவார்கள். முத்து, தந்தம், ஜேட் போன்ற விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டும் பிடியைச் செய்வார்கள்.
தூரிகையெழுத்துக்கலை ஒருவரை ஆரோக்கியமாகவும் திடமாகவும் வைத்திருக்கும் என்று சீனர்கள் உறுதியாக நம்புகிறார்கள். சீனாவிலும் ஜப்பானிலும் இக்கலையை வருடக்கணக்கில் பயிலும் முதியோர் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் மனநலன் மற்றும் உடல்நலன் ஆகிய இரண்டு முக்கிய நலன்கள் உண்டு. இரண்டும் ஒன்றுடன் ஒன்றும் தொடர்புடையதுமாகும். ஒன்றில்லாமல் மற்றது இல்லை. இக்கலை ஒருவரது ஆரோக்கியத்தை சமநிலையாக வைத்திருக்க உதவக் கூடியது. ஆகவே தான் கலைஞர்கள் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெறுகிறார்கள். இக்கலையைப் பயிலும் ஒருவருக்கும் கூர்மையான மனக்குவிப்பு ஏற்படுகிறது. கலையில் பிறக்கும் தன் படைப்பின் அழகில் மயங்கும் கலைஞர் மனதிற்கு இதமளிக்காத எதையும் தன் காதுகளால் கேட்காமல் தன் மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு விடுகிறார். உடலும் மனமும் தளர்ந்து ஒருவித அமைதி அவர் மனதை நிறைக்கிறது. மனநிலையில் ஏகாந்தம் ஏற்பட்டு உடலுக்கும் மனதுக்கும் நன்மையேற்படுத்துகிறது. ஆரோக்கியத்துக்கும் தூரிகைக்கலைக்குமான மெல்லிய உறவை வேறொரு வகையிலும் விளக்கலாம். குறிப்பிட்ட திறன்களைக் காட்டும் வூஷூ போன்ற உடற்பயிற்சி வகையான லியாங்கோங் மற்றும் நிமிர்ந்து அமர்ந்து செய்யும் மூச்சுப் பயிற்சியான ஜோவ்கோங் ஆகிய இரண்டின் பலனும் இக்கலையைப் பயிலும் ஒருவருக்குக் கிடைக்கும். நேராக நிமிர்ந்தமர்ந்து தூரிகை எழுத்தில் மூழ்கிவிடும் ஒருவருக்கும் ஆன்மயோகம் வாய்க்கிறது. இதுவே ஆரோக்கிய உடலுக்கும் ஆன்மபலத்துக்கும் காரணமாகிறது என்பது பொதுவானதொரு நம்பிக்கை.