காலமே உனைஓத நீவந்து காட்டினாய்!

இறையன்பு மிக்க மாமன்னர் அரவிந்தர் ஒரு கோவில் கட்டத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள் விண்ணில் மேகக் கூட்டம் ஒன்று கம்பீரமான திருக்கோவில் போலத் தோன்றி அசைவதைக் கண்டார். தான் கட்ட இருந்த திருக்கோவிலை இந்த மேகக் கூட்டம் காட்டும் தோற்றத்தில் அமைக்க வேண்டும் என விருப்பம் கொண்டார். தான் வானில் கண்ட திருக்கோவிலின் வடிவத்தை வரைந்து பத்திரப்படுத்திக் கொள்ள நினைந்து தூரிகை, வண்ணக் கலவை, திரைச்சீலை ஆகியன கொண்டுவரப் பணித்தார். அவை வந்தவுடன், ஆகாயத்தை ஆசையுடன் நோக்கினார். ஆ! அவர் கண்டு ஆசைப்பட்ட திருக்கோவிலின் அழகிய தோற்றம் அங்கு இல்லை. மேகக்கூட்டம் கலைந்து சிதைந்து போயிருந்தது. இப்படிக் கூடி வேடிக்கை காட்டிக் கலைவதுதான் உலகத்து இயற்கையா? இந்த அசாதாரணமான சிந்தனை அவருள் எழுந்தது. அது அலையலையெனப் பல எண்ணங்களை மன்னரின் உள்ளத்தில் தோற்றுவித்தது

மன்னர் சிந்தித்தார். “அப்படியானால் நான் எதனை என்னுடையது என்று உரிமை கொண்டாடிக் கூறிக்கொள்ள முடியும்? நிலையற்ற இந்த அரசபதவியை ஏன் தொடர்ந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டும்?’” மன்னர் தம் குமாரனை அழைத்தார். சிம்மாசனத்தில் அமர்த்தினார். முடி துறந்து நாட்டை விட்டு வெளியேறினார். உலகப் பற்று நீங்கி ஊரூராய் அலைந்து திரியும் துறவியானார்.

வாட்சன் நினைக்கிறார். ‘நானும் மன்னர் அரவிந்தரைப்போல அலைந்து திரிபவள்தான். நான் என் இறந்த கால நினைவுகளான பிரதேசங்களில் அலைந்து திரிகின்றேன். இன்று செப்டம்பர் 1980. சாலையைக் கடக்கும்போது மேலே மேகத்தைப் பார்க்கின்றேன். மேகம் தீட்டியுள்ள வடிவங்களைப் பார்க்கின்றேன். மாமன்னர் அரவிந்தரே! உம்மை நினைக்கின்றேன். நம்மிருவருக்கும் இடையே உள்ள பலநூறு வருட இடைவெளியை நினைத்துப் பார்க்கின்றேன்.

நான் ஒரு நூலக அலுவலர். தாங்கள் புகழ் வாய்ந்த பழம்பெருமாமன்னர். இருப்பினும் நான் இப்பொழுது, இந்தக் கணத்தில், இந்த மண்ணில், உம்முடைய கால் பட்ட நிலத்தில், உம்முடைய நாட்டில் பிரகாசித்த அதே சூரிய ஒளியில் நடந்து கொண்டிருக்கின்றேன்.

ஜீன் வாட்சன் என்னும் நியூசிலாந்து நாட்டின் எழுத்தாளர் எழுதிய “மன்னருக்குப் பேருரை” (Address to the King) என்னும் குறுநாவல் இப்படி தொடங்குகிறது.

காலம் வெளி இவற்றைப் பற்றிய சிந்தனைப் பின்னணியில் ஜீன் வாட்சன் இந்த நாவலில் தன் வாழ்க்கையை உரக்கச் சிந்திக்கின்றார். மணவாழ்க்கைக்குத் துரோகம் செய்யும் கணவனின் மனைவியாக, படித்துவிட்டு வேலை தேடியும் காதல் வயப்பட்டுத் துயரப்பட்டும் கலங்கும் மகளுக்குத் தாயாக, வெலிங்டன் நகர நூலகப் பணியாளராக என இப்படிப் பல நிலைகளில் உழலும் பெண்ணொருத்தியின் மனநிலையை வேதாந்தப் பின்னணியில் ஆசிரியர் சித்தரிக்கின்றார். காலத்தை வென்ற அல்லது உணர்ந்து விட்ட ஒரு மாமன்னனை நோக்கி இப்பெண் தன் மனவோட்டத்தை நினைவலைகளைக் கூறும் போக்கில் இந்த நாவல் அமைந்துள்ளது.

தத்துவமும் உலகியலும் கலந்து படைக்கப்பட்ட இந்தக் குறுநாவலில் ஜீன் வாட்சனின் இந்தியத் தத்துவ ஞான அறிவு, இவருடைய படைப்பாற்றலை மேலும் விகசித்துள்ளது. இதனைப் படித்து முடித்தவுடன் என் மனத்திலும் காலத்தைப் பற்றிய எண்ணவோட்டங்கள் அலையலையாக எழுந்தன.

இந்தியத் தத்துவ ஞானத்தில் `காலம் மற்றும் வெளி’ (Time and Space) என்பன சிறப்பாகச் சிந்திக்கப்படும் கருத்துக்கள். இவை, கடவுளைப்போல `உள்பொருள்கள்` என்றும் `இல்பொருள்கள்` என்றும், எல்லையற்றன, வரையறைக்கு அகப்படாதன என்றெல்லாம் பேசப்படும். எல்லையற்ற பரம்பொருளுக்குக் குறியீடாகவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. எல்லையற்ற இப்பரப்பினுக்குள் நம் வாழ்க்கை அல்லது இன்ப துன்ப அனுபவங்கள் என்பவை வெறும் சிறுதுளிகளே. காலத்தின் உண்மை நிலையினை அறிந்து கொண்டவர்கள் வாழ்க்கையை வென்றவர்களாவர் எனக் கூறப்படுகின்றது.

காலம் எப்பொழுது பிறந்தது? அது முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருள். பின்னைப் புதுமைக்கும் புதுமையானது. காலவரையறையக் கடந்த பரம்பொருளான இறை சிவமே, கலையித்திரி யென்னுஞ் சத்தியொடு கூடிக் காலத்தானமாய் நிற்கும் என சைவசாத்திரம் கூறும். காலவரையறையில் அகப்பட்டுள்ள நம்மைப் போன்றோர் செய்யும் செயல்களுக்குக் காலம் ஒரு துணைக்காரணமாகும். (தொல்.வேற்றுமை மயங்கியல் சூ30)

இறைவனே காலமுமாய் ஆகி உலகத்தைத் தொழிற்படுத்துகிறான். ‘காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே’, ‘காற்றாகிக் கார்முகிலாகிக் காலமூன்றாய்’, ‘கூறும் நாளாம் கொள்ளும் கிழமையாம் கோளே தானாம்’, எனத் திருமுறைகள் முதல்வன் காலமாகவும் இருத்தலைக் கூறும். அருவமாக, உடலும் கருவியும் இல்லாத கடவுள் உலகத்தைப் படைத்துக் காத்தது அழித்துத் தொழில் புரிவது எப்படி என்ற வினாவுக்கு அருவமான காலத்தைப் போல எனச் சித்தாந்திகள் சமாதானம் கூறுவர்.

“ ஞாலம் ஏழினையும் தந்து நிறுத்திப்பின் நாசம் பண்ணும்
காலமே போலக் கொள்நீ நிலைசெயல் கடவுட் கண்ணே”

(சிவஞான சித்தியார்- 50)

உ.வே.சா அவர்கள் பதிப்பித்த பதிற்றுப்பத்தில், கடவுள் வாழ்த்துப்பாடலாக இருக்கக்கூடும் என எடுத்துக்காட்டப்பட்ட பாடலில், சிவன் காலக் கடவுள் எனக் குறிப்பிடப்படுகிறார்.

“சூலம் பிடித்த சுடர்ப்படைக்
காலக் கடவுட் குயர்கமா வலனே”

காலம் போல உலகமும் தொன்மையானது. தொல்லுலகம் என அழைக்கப்படுகிறது. முதுமை, தொன்மை, பழமை எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் இருக்க வேண்டுமே. பிரபஞ்சத் தோற்றத்தில் காலதத்துவமே முதலில் தோன்றியது என்பர். இந்த உலகமும் காலமும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியுடையனவாக இருந்துள்ளன; அவருக்கும் பல்லாயிரமாண்டுகளுக்கு முற்பட்டவர்களுடையதாவும் இருந்துள்ளன. இன்று, இப்பொழுது என்னுடையனவாகவும் நம்முடையனவாகவும் இருக்கின்றன. அதனால், இவை என்றும் உள்ளவைதாமே?

பவுத்தர் முதலியோர் காலமென்றொரு பொருள் இல்லை என்பர். மாந்தளிர் முதலியன இளவேனிற் காலத்தில் தளிர்க்கின்றன. முல்லைப்பூ முதலியன கார்காலத்தில் மட்டும் உற்பத்தியாகின்றன. வேம்பு வேனிலில் தளிர்த்துப் பனியில் கறுகுகின்றது. இதுபோன்றே இயற்கையில் சில குறிப்பிட்ட பருவத்தே தோன்றிக் குறிப்பிட பருவத்திலே நாசம் அடைகின்றன. காலம் இல்லை என்றால் உரிய பருவகாலம் இல்லாமலேயே அவையனைத்தும் தோன்றி உற்பத்தியான அப்பொழுதே அவை நாசம் அடைதலும் வேண்டும். அவ்வாறு காணப்படுதல் இல்லை. இச்செயல்களைச் செய்கின்ற காலம் ஒன்று உண்டு எனக் கொள்வதே அறிவுக்குப் பொருத்தமாக உள்ளது.

தார்க்கிகர்கள் என்பார் காலம் ஒன்று எனும் கொள்கையுடையவர்கள். காலத்தில் எந்தப் பாகுபாடும் கிடையாது என்பர். வீட்டுக்கு முன் , வீட்டுக்குப் பின் என்பது போல கிறித்துவுக்கு முன் கிறித்துவுக்குப் பின், சுதந்திரத்துக்கு முன் சுதந்திரத்துக்குப் பின், உறங்குமுன் உறங்கிய பின் என ஏதோ ஒரு நிகழ்வுக்குமுன், பின் எனச் சொல்லப்படுமேயன்றி காலத்தில் எந்தப்பாகுபாடும் இல்லை, அது ஒன்றாகத்தான் இருக்கின்றது என்பது இவர்கள் கொள்கை.

நையாயிகர் என்பவர்கள் காலம் ஒன்றாய் வியாபகமாய் நித்தமாய் உள்ளது என்பர். அதனை மறுத்துக் காலம் பலவாய் ஏகதேசமாய் அநித்தமாக உள்ளது என்றும் கூறுவர். காலம் பலவாக இல்லையெனில் இறப்பு நிகழ்வு முதலியனவாய் நிகழும் தொழிற்பாகுபாடு நிகழ ஏது இல்லையென்றும் அத்தொழிற்பாகுபாட்டிற்குக் காரணம் காலத்தின் பாகுபாடே என்றும் கூறுவர். இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மாறுபட்ட நிலைகள் ஒரு பொருளிடத்தில் காணப்படுதலால் காலம் பலவேறு வகைப்படும், காலம் பலவகைப்படுமென்பது பெறவே, தம்முள் பலவுமாய்ச் சடமுமாக இருத்தலின் தோன்றி நின்றழியும் காலம் அநித்தம் என்றும் அநித்தப் பொருளாகலின் காலம் வியாபம் அன்று, ஏகதேசமே என்றும் சிலர் கூறுவர். இவ்வாறு காலத்தை இந்தியத் தத்துவ ஞானம் அல்வேறு கோணங்களில் சிந்தித்துக் கொள்கைகளை வகுத்துள்ளது.

காலமும் வெளியும் எல்லையற்று என்றுமுளவாக உள்ளன.; வெளி எல்லாப்பொருள்களின் இருப்பிற்கும் இயக்கத்திற்கும் இடங்கொடுக்கின்றது. பொருள்களின் இருப்பும் இயக்கமும் காலத்தொடு தொடர்புடையனவாக உள்ளன. காலத்தின் இயக்கம் நம் வசமில்லை. அதன் இயக்கத்தில் நாமும் இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இறந்த காலத்தை மட்டும் மனத்தளவில் ஏதோ ஒருவகையில் நம் வசத்தில் வைத்துள்ளோம் எனலாம். நாம் விரும்பினால் கடந்து போன நிகழ்ச்சியை மீள நினைவு படுத்திக் கொள்ளலாம். எழுதி வைத்து நிரந்தரப்படுத்தலாம். அந்த நினைவை ஏதோ ஒருவகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடந்த காலம் நமக்குப் பூரணமாகக் கொடுக்கப்பட்டது. அதை நாம் கண்டுள்ளோம்.; அனுபவித்துள்ளோம். அது எப்படி யிருந்தது என நமக்குத் தெரியும்.ஆனால், அதை நம்மால் மாற்றியமைக்க முடியாது.; அழிக்கமுடியாது. அதில் பாதியைக் கூடக் கவர்ந்து அழிக்க முடியாது. இருந்தாலும், கடந்துபோன நிகழ்ச்சிகளில் நமக்கு வேண்டுவனவற்றைச் சரியாக நினைவுபடுத்திக் கொள்ளலாம். வேண்டாதவற்றைச் சிறிது முயன்று மறந்து விடலாம். இந்த அளவுக்குத்தான் இறந்த காலம் நம் வசத்தில் உள்ளது எனலாம்.

எதிர்காலம் நம் கணிப்புக்கு ஒருவகையில் உரியதே எனினும், உண்மையில், 11 ஆவது மணியில் வாழும் நமக்கு 12 ஆவது மணி அறிமுகமில்லாத பாதையே. அடுத்து வரும் ஆண்டைப்போல, அதைத் தொடர்ந்து வரும் ஆயிரமாயிரம் ஆண்டுகளைப்போலத் தற்சமயம் அடுத்த கணமும் நம் அறிவுக்கு எட்ட முடியாததே.

இறந்த காலத்துக்கும் இது பொருந்தும். எப்படிக் கழிந்துபோன பல்லாயிரமாண்டுகளீல் ஓராண்டைக் கூடத் திரும்பப் பெற முடியாதோ , அவ்வாறே கழிந்துபோன காலத்தில் ஒரு நிமிஷம் அல்லது ஒரு விநாடியைக் கூடத் திரும்பப் பெற முடியாது.

காலதத்துவமானது முடிவில்லாதது என்னும் கருத்தில், ‘குறையாக்காலம்’ என ஞானாமிர்தம் எனும் நூல் கூறுகின்றது. முடிவில்லாக் காலதத்துவமானது “(கலை, வித்தை, அராகங்களால் தொழிலும் அறிவும் இச்சையும் விளங்கிப்) போக நுகர்ச்சியில் சென்ற ஆன்மாக்களுக்குக் கணம், இலவம், துடி எனப் பலவேறு வகைப்பட்டுப் போக அனுபவத்தின் காலத்தை வரையறைப் படுத்துவது கால தத்துவம் என ஞான சாத்திரம் கூறும்.

நொடி,கணம், இலவம், துடி என்பன நுண்ணிய கால அளவைகள். காலதத்துவம் இவ்வாறு அளவுபட்டு , கழிகாலத்து எல்லையையும் நிகழ்காலத்துப் பலத்தையும் எதிர்காலத்துப் புதுமையையும் ஆன்மாவுக்குப் பொருத்துவிக்கும் எனச் சைவ சாத்திரம், (உண்மைவிளக்கம் 18) கூறும். சுகதுக்க பலத்தை அனுபவித்தற்கு இடமாயிருப்பது நிகழ்காலம். நிகழ்கால அனுபவம் சிறிது சிறிதாகப் பழமை அடைந்து வரும். அனுபவம் முற்றுப் பெற்ற எல்லையில் அது இறந்த காலமாய் விடுகிறது. இறந்தகாலம் நம்மால் அறியப்பட்டது. ஏற்கெனெவே ஓரளவு அறியப்பட்டதாகையால் இறந்தகாலம் பழமை எனப்பெயர் பெற்றது.

இறந்தகாலம் நம்வசம் இல்லை. நினைவில்தான் உள்ளது. எதிர்காலத்தின் முதலும் தெரியாது; முடிவும் தெரியாது. எனவே எதிர்காலத்தின் புதுமை புலப்படும். புதுமை எதிர்காலத்துக்கே உரியது. எனவே, அனுபவ உண்மையாக நிகழ்காலம் மட்டுமே நம் வசம் உள்ளது எனலாம்.

காலம் ஒன்றா? பலவா? “காலந் தாமே மூன்றென மொழிப” (தொல்கப்பியம், சொல்.வினையியல் 2) என்பது இலக்கணம்.

தன்னளவில் , காலத்தில் இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனும் இந்த மூன்று வேறுபாடுகளும் உள்ளனவா?ஒன்றன் புடைபெயர்ச்சி அல்லது செயலை வைத்துத்தானே நிகழ்ச்சியொன்றின் சார்பாகத்தானே முக்காலத்தையும் கூறவியலும்? புடை பெயர்ச்சியால் காலம் முப்பாகுபாடு அடைகின்றதா? அல்லது காலப்பாகுபாடு பற்றியே பொருள்களுக்கு இறப்பு , நிகழ்வு, எதிர்வு எனும் பாகுபாடுகள் உண்டாகின்றனவா? இறப்பாவது, தொழிலின் கழிவு; நிகழ்வாவது, தொழில் தொடங்கி முற்றுப் பெறாமல் நடக்கின்ற நிலைமை; எதிர்வாவது, தொழில் பிறவாமை. தொழிலாவது, பொருளின் புடைபெயர்ச்சி. இது, இரண்டுகணம் காலத்தினிடத்து நில்லாமையினால் நிகழ்காலம் என்பது ஒன்று இல்லை எனக் கூறுவாரும் நிகழ்காலம் உண்டு எனக் கூறுவாரும் உளர்.

சூரியன் சந்திரன் எழுதல் மறைதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் சார்த்து வைத்துக் காலம் நாள், பட்சம், மாதம் ஆண்டு எனப் பகுக்கப்படுகின்றது. ஆனாலும் காலம் சூரியன் உதயம், மறைவு ஆகிய நிகழ்ச்சிகளுக்கு வேறாகத்தான் இருக்கின்றது. காலமென்ற ஒன்றின் இருப்பில் இவை நிகழ்கின்றனவே யன்றி , இவை நிகழ்வதால் காலம் தோன்றுவதில்லை. சூரியன் சந்திரன் ஆகியவற்றின் செயல்களுக்கு வேறாகவே காலத்தின் இருப்பு இருக்கின்றது.

நம்மால் காலத்தைத் துரிதப்படுத்தவோ, நிதானப்படுத்தவோ முடியாது போனாலும், காலவோட்டத்தை நிறுத்தி வைக்க இயலாதுபோனாலும் பகல் என்றும் இரவு என்றும் நாள் என்றும் கிழமை என்றும் அடுத்த நொடி வரைக்கும் ‘லேபிள்’ ஒட்டி அடையாளம் காண முடிகிறது. மாத்திரை, நாழிகை, யாமம், பொழுது, நாள், கிழமை, பக்கம், திங்கள், இருது, அயநம், யுகம், தேதி, மணி என்பன எல்லாம் காலத்தைக் கூறுபடுத்தி நாம் ஒட்டிய ‘லேபிள்கள்’ தானே!.

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலமுதல்’ இன்று , இந்த நாள் வரை, மிலனிய யுகம் முதல் இந்த நொடி வரை காலமனைத்தும் ‘லேபிள்’களாலேயே அளக்கப்படுகின்றன.

இன்று புதன் கிழமை. மே மாதம். ஏழாம் நாள். சுவரில் மாட்டியிருக்கும் நாள்காட்டியைப் பார்க்கின்றேன். வெள்ளைக் கட்டங்கள்; கறுப்பு நிறத்தில் எல்லைக்கோடுகள். நடுவில் பெரிய எழுத்தில் எண்கள். இன்றைய தினத்தை 7 என்ற எண் காட்டுகின்றது. அடுத்து 8,9,10 இப்படி எண்கள் தொடருகின்றன.

வீட்டில் நாற்காலியில் இருந்தவாறே 26ஆம் தேதி நிகழ்வுகளை, அவற்றில் என் பங்களிப்புகளை, அவற்றின் எதிர் வினைகளை ஒலி – ஒளிக்காட்சியாக மனக்கண்ணில் கண்டு நிறைவு செய்ய முடிகிறது. அன்று நிகழவிருக்கும் நிகழ்ச்சிகளை நானறிவேன். அந்த அளவுக்கு எதிர்காலம் முன் கூட்டி அறிய முடிவதுதான்; புகை ஓவியம்போல. மேகத்தின் வடிவம்போல. ஆனால் அந்த நிகழ்ச்சிகள் நான் கண்டவாறே நூற்றுக்கு நூறு நிகழும் என்ற உத்திரவாதமில்லை. மேகவடிவம்போல உருக்குலைந்தும் போகலாம்.; வேறு வகையாகவும் அமையலாம்.

மனக்கண்ணில் ‘நாளைகள்’ தாமாக வடிவெடுக்கின்றன. மறுபடியும் மறைகின்றன. எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கையில் அது இனிமையான சுவைமிக்க , வண்ணமயமான, நொடிக்குநொடி உண்மை போன்று தோற்றம் அளிக்கின்றது. ’Expectation is sweeter than the result’ அல்லவா? நிஜ வாழ்வு வந்த்போது, அந்த நிதரிசனத்தில், யதார்த்த வெளிச்சத்தில்,முன்பு மனத்தில் இருந்த எதிர்காலம் பற்றிய வண்ணக்கோலங்கள் வடிவற்றுச் சிதைந்து கரைந்து போகின்றன. ‘வாழ்க்கை ஒரு கனவு. நாமெல்லாம் கனவில் உருவாக்கப்பட்ட பண்டங்கள் போல’ என கவிஞர்களும் கூறுவர்.

இருந்தாலும் என்ன? எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதும் ஒரு ‘சாகசந்தானே’? யாருடைய காலடியும் பட்டிராததொரு பிரதேசத்தில் சஞ்சரிப்பது போன்றதுதானெ அது? காலையில் எழுதிய வரைகோடுகளுக்கு உயிர்ப்பும் வண்ணமுமான யதார்த்த உண்மைய் அனுபவங்களைத் தீட்டிவதுதானே அது?

திட்டமிட்டபடியே எல்லாம் நடந்து முடிந்து விட்டால் இயந்திரத்தனமாகத்தான் இருக்கும். “Life is dull and predictable” என்று சிலர் பழிக்கவும் கூடும். எதையும் எதிர் பார்க்காமல் எவ்வளவு சாதாரணமாக இருந்தலும் வருவதை அப்படியே எதிர்கொள்வதில்தான் வாழ்வின் சுவை கூடுகின்றது என்று சிலர் சொல்லவும் கூடும். இப்படியும் சிலர் கூறலாம். எதிர் காலத்தைத் திட்டமிடுவதால் மகிழ்ச்சி இன்பம் உண்டா? குழந்தைகளைப் பாருங்கள். அவை எதிர்காலத்தைப் பற்றித் திட்டமிட்டா வாழ்க்கையை அனுபவிக்கின்றன?

சிலர் பொழுதே போகவில்லை எனக் குறைபட்டுக் கொள்கின்றனர். சிலர் பொழுதே போதவில்லை , காலம் வேகமாகப் பறக்கின்றது எனக் கவலைப்பட்டுக் கொள்கின்றனர். காலம் அப்படி வேறுபாடு காட்டுகின்றதா?

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலத்தின் போக்கில் அதன் இயல்பில் எந்த மாறுதலும் இல்லை. காலம் என்னும் மாபெருஞ் சத்தி அதன்போக்கில் இயங்கிக் கொண்டுதானிருக்கின்றது. யாரையும் எதையும் எதற்கும் பொருட்படுத்தாத காலம் அதன் போக்கில் இயங்கிக்கொண்டே இருக்கின்றது. அதுவும் இயங்குகிறது. நம்மையும் இயங்கச் செய்கின்றது. அதன் இயக்கத்தில் நாமும் நம்மை அறியாமலேயே, நம்முடைய சம்மதமோ உடன்பாடோ விருப்பமோ இன்றியே நாமும் இயங்கி வருகிறோம். இன்னதென்று அறிய இயலாத இலக்கை நோக்கி அடித்துச் செல்லப்படுகிறொம். நாம் காலத்தைப் பொருட்படுத்தாமலும் எந்தச் செயலையும் செய்யாமலும் இருந்தாலும் இந்த இயக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது.

காலம் தன்போக்கில் பகை, உறவு, சண்டை, பாசம், பந்தம் அனைத்தையும் பொருளற்றதாக்கி விடுகின்றது. காலம் மன்க்காயங்களை ஆற்றிவிடுகின்றது. மனத்துன்ப வடுக்களைத் துடைத்து விடுகின்றது. ஒருவரைச் சார்ந்து இருத்தல், விலகி இருத்தல், பற்று, பற்றுக்கோடுஇன்மை அனைத்தையும் காலம்மாற்றி விடுகின்றது. காலத்தைப் போல ஆறுதல் அளிப்பவர், விருப்பு வெறுப்புக்களைச் சமப்படுத்துபவர், மனச்சந்ந்தி அளிக்கும் மனநல வைத்தியர் வேறு ஒருவரும் இல்லை.

காலத்துக்கு முன் எல்லாரும் எல்லாமும் ஒரேவிலை ஒரேநிகர்தான். அது கடலால் விழுங்கப்பட்ட இலெமூரியாக் கண்டமானாலும் சரி, அணுகுண்டால் அழிந்த நாகசாகி, ஹிரோஷிமா நகரங்களானாலும் சரி, கால் பட்டு அழிந்த கறையான் புற்றானாலும் சரி, காலத்தினிடத்தில் அனைத்துக்கும் ஒரே மதிப்புத்தான்.

காலம், வெளி பற்றிய அறிவியல் சிந்தனையில் படைக்கப்பட்ட கதைகள் கற்பனைகளே என்றாலும், சிந்திக்க வைக்கின்றன. அந்தக் கதைகள் முழுவது என் நினைவுக்கு வரவில்லை யென்றாலும்,சில நிகழ்ச்சிகளை நினைவுபடுத்திக் கூறுகின்றேன்.

விண்வெளிக்கலத்தில் முதன்முதலாக சிலர், இதற்கு முன் அறிந்திராத கிரகத்தை நோக்கிப் பயணித்தனர். வெளியின் மேல் நோக்கிச் செல்ல செல்ல அவர்களின் உடம்பும் விண்கலமும் விரிவடைந்து பெருகும் என்பது அவர்களுக்குச் தெரியாது. விண்வெளிக்கலமும் பயணிகளும் ஒருசேரக் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்தனர். அந்த நிகழ்ச்சியை அவர்கள் கவனிக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பெருக்கம் சுருக்கம் என்பன ஒன்றன் சார்பாகவே அறியத் தக்கன. திடீரெனப் பேரொளியுடன் சிறுபொறி ஒன்று வந்து விண்கலத்தைத் தாக்கி ஊடுருவுகின்றது. விண்கலத்தில் ஒரு ஓட்டை விழுகின்றது. விண்கலம் காற்றுப்போன ‘பிளாடர்’ போலச் சிறிது சிறிதகச் சுருங்கத் தொடங்குகிறது. அப்பொழுதுதான் பயணிகள் விண்கலத்தைத் தாக்கிய ஒளிப்பொறி ஒரு விண்மீன் என்றும் விண்கலமும் அவர்களும் ககன வெளியில் விரிவடைந்திருந்தனர் என்றும் உணர்ந்தனர்.

மற்றொரு கதையும் நினைவுக்கு வருகின்றது.

விண்வெளியில் வயது கூடாதாம். முதுமை விண்வெளியில் தோன்றாதாம். புராணங்களில் மனித நூறாண்டுகள் தேவர்களுக்கு ஒருநாள் எனக் கூறப்படுதல் போல. 26 வயதான விஞ்ஞானி ஒருவன் விண்வெளியில் பயணம் செய்து மீள்கிறான். அவன் திரும்பி வந்தபோது, அவனுடைய வருகைக்காகக் காத்திருந்த மனைவிக்கு வயது 70. அவனுடைய பிள்ளைகள் பேரக் குழந்தைகளுடன் இருந்தனர். ஆனால், அவனுக்கு மட்டும் வயது 26! இது எப்படியிருக்கிறது!?

இளமைக் காலத்தைப் பற்றிய நினைவு ஒருவனுக்கு இருந்தால், அதில் ஒரு நன்மையும் உண்டு; ஏக்கமும் உண்டு.

“இனிநினைந் திரக்க மாகின்று — ——

கல்லா இளமை
அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூ தாளரே மாகிய வெமக்கே”
(புறநானூறு, 243)

எனப் புறநானூற்றுப் புலவன் பாடியதுபோலக் கழிந்த இளமைக் காலத்தை நினைந்து கழிவிரக்கம் கொள்வோருமுண்டு. கழிந்த கால நினைவில் வாழ்வோருமுண்டு. கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிய நினைவுகள்தானே நாம் வாழ்ந்த வாழ்கையாகின்றது?

கடந்துபோன வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்து நாம் அனுபவ ஞானம் பெறுவோம். ஆனால், அந்த அனுபவ ஞானத்தால் கடந்த காலத்தில் இழந்ததைத் திரும்பப் பெற முடியுமா? பட்டறிவாகிய நினைவு ஒன்றே மிஞ்சுகிறது. இது காலம் என்னும் குறும்பனின் விளையாட்டு. அவன் ஓரங்குலம் விட்டுக் கொடுத்தான் என்றால் பல அடிகள் எடுத்துக் கொள்ளவும் செய்கிறான். இரண்டாம் ரிச்சர்டு என்னும் ஷேக்ஸ்பியர் நாடகத்தில், கதாநாயகன் இரண்டாம் ரிச்சர்டு மன்னன், ‘நான் காலத்தைக் கழித்தேன், இப்பொழுது காலம் என்னைக் கழிக்கிறது’ ( I wasted the time and the time doth wasteth me) என்று புலம்புவது நினைவுக்கு
வருகின்றது. பெரும்பாலோருக்கு இந்த வாழ்க்கை அனுபவமே ஞானமாகிவிடுகிறது. எனவே நாம் இப்படியும் பேசலாம். “காலமற்ற உலகில், நாள், நாள்தோறும் புதிதாகப் பிறக்கிறது. ஒவ்வொரு நாளும் புதுநாள்.‘ இதை உணர்ந்தவர்கள் புதிதாகப் பிறக்கின்றனர்.

நான் செயலற்ற மவுனியாக அசைவற்று அமர்ந்திருக்கின்றேன். நான் எத்தனை சடமாக இருந்தாலும் சரி, காலம் அதன் காரியத்திதைச் செய்து கொண்டே இருக்கின்றது. வருடக்கணக்காக நான் செயலற்று இருந்தாலும், என் உடற்சதைகள் கட்டுக் குலந்து, சிதைந்து, திரைத்து உருக்குலைகின்றன. கறையான் என் உடல்மீது புற்றினைச் சமைக்கின்றது. என் உடல் மறைந்துவிடுகின்றது. காலத்தின் பரப்பில், எல்லையற்ற அதன் அகண்ட பரப்பில், நான் எங்கே? எல்லையற்ற, என்றும் உள்ளதாகிய ஒன்றிடத்திலிருந்து பிறந்தழியும் நான் ஏன் தோன்றினேன்? எதற்காகப் பிறந்தேன்? இதில் நான் செய்யக் கடவதென்ன?

காலம், வெளி இரண்டும் எல்லையற்றவை, நிலையானவை. இப்படிச் சொல்லுவதும் இதன்போக்கில் சிந்திப்பதும் எளிதானதுதான். ஆனால் நிலையானதுக்கும் எனக்கும் என்ன உறவு? அந்த `உள்பொருளால்’ எனக்கு என்ன காரியம் ஆக வேண்டியுள்லது? அது ஏன் என்னை என்னென்னவோ செய்கின்றது? இந்த வினாக்கள் என்னைக் குடைந்தெடுக்கின்றன.

முன்னொரு சமயம் மழைக்காலத்து மாலையில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். மழை பெய்து கொண்டிருந்தது. வழியில் குட்டை குட்டையாகத் தேங்கிக் கிடந்த மழைநீரத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. மழைத்துளி அந்தக் குட்டையில் விழுந்து தெரித்தபோது, தேங்கி நின்றநீரில் குமிழிகள் தோன்றின. தோன்றிய குமிழ்கள் நீரில் குதித்துக் கும்மாளமிட்டன. புள்ளியிலிருந்து, வட்டமாக, கோளமாக விரிந்து புடைத்தன. சூரிய ஒளியில் பல வண்ணமாக ஒளி விட்டன. ஆடியே கரைந்தன. அப்பொழுது அந்தக் கனத்தில், வாழ்க்கையின் அர்த்தம் எனக்குத் தெரிவது போலத் தோன்றியது. வாழ்க்கை, அண்டம், பிண்டம், பிறப்பு, இறப்பு, நிலைபேறு, நிலையாமை ஆகிய அனைத்தையும் பற்றிய ஞானம் அந்த நொடியில் எனக்குள் தோன்றியதைப் போல நான் உணர்ந்தேன்.

நான் பள்ளியில் படித்த ஆங்கிலப் பழம்பாடல் ஒன்றின் வரிகளை நினைவு படுத்திக் கொண்டேன். “Time like an ever rolling stream bears all its sons away, they are forgotten as dreams die at the break of the day”. ‘காலம் உருண்டோடுகின்ற நீரோடையைப்போல மக்களை அடித்துச் செல்கிறது. விடியலில் கலைந்து போகின்ற கனவுகளைப் போல அவர்கள் மறக்கப்படுகின்றனர்.’

கனவென்பது என்ன? வெறும் மனக்காட்சிதானே? உள்ளீடு இல்லாத மனக் காட்சி தானே? முன்னம் நடந்து முடிந்து விட்ட ஒன்றாக இருந்தாலும் இனி நிகழ இருக்கின்ற ஒன்றாக இருந்தாலும் கனவு மன்க்காட்சியாகிய ஒன்றுதானே.! ஆகவே, கடந்த கால வாழ்க்கையே ஒரு மனக்காட்சிதானே!… கனவுபோல.

ஒவ்வொரு கணமும் வாழ்க்கை உண்மையாக வழப்பட்டுப் பின்னர்க் கனவாக, மனக்காட்சியாக ஆகும்படி விதிக்கப்பட்டுள்லது.

அப்படியென்றால், கனவு எப்பொழுது அழிகின்றது? எப்பொழுது கனவு கலைகின்றது? இரவுக்கு மாறானதொரு பகல் கனவைக் கலைக்கத் தோன்ற வேண்டும். கனவில் வருத்தம் மகிச்சி, விருப்பு வெறுப்பு, பகை நட்பு, வறுமை உடைமை போன்ற துவந்தமான அளவிலாப் பாவகங்களைத் தொலைக்கும் நல்லபகல்., நன்னாளின் தோற்றத்தை எதிர்நோக்குவோம்

‘தொல்லைப் பேரொளி’, என்றும் ‘அருட்பெருஞ்சோதி’ என்றும், `அகண்டாகாரப் பெருவெளி’ என்றும், ‘எண்ணில் ஒன்றும் இல்லா வெளி’ என்றும் இன்னும் இவை போன்ற அனுபூதி மொழிகளால் ஞானியர் விளக்க முயல்வது இந்தப் பகலைத்தானே.

மனத்தில் இந்தப் பெருவெளியைக் கண்டுவிட்டால் இன்பமில்லை துன்பமில்லை, உறவில்லைபகையில்லை ஆர்வச்செற்றக் குரோதமில்ல, மனக் களங்கமில்லை, கலக்கமில்லை. அவையெல்லாம் மன்னர் அரவிந்தர் கண்ட மேகக்கூட்டங்களைப்போல ஆடல் காட்டி மறைந்து விடும். பேரொளியில் குறுநிழல்கள்போலக் கரைந்துவிடும். காலங்கடந்ததின் சார்பில் நிற்கக் காலவயப்பட்டன கலக்கம் செய்ய. மானுட வாழ்க்கையின் பண்பும் பயனும் இப்பேரொளியைக் கண்டு அதனில் ஒடுங்கி லயமடைவதே என்பர், சமய ஆன்மீகப் பெரியோர்.

அலைவாய்க் கரையிலிருந்துகொண்டு கண்முன்னே விரிந்து பரந்து கிடக்கும் கடற்பரப்பை நோக்கிச் சிந்தனையைச் செலுத்தினால் மனமும் விரிவடைகிறது. மலையுச்சி யிலிருந்து ஊரைப் பார்க்கும்போது சாக்கடைகளும் அழுக்குக் குப்பைக்கூலங்களும் தெரிவதில்லை. ஊரே அழகாகத் தோன்றுகிறது. காலங் கடந்த எல்லையற்ற இப்பேரொளியைக் கண்டு அதில் நிற்பதே மனக்கலக்கம் இல்லா வாழ்க்கைக்கு அடிப்படை என்பர்.

அதுவரையில்… …

நமக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. இந்தக் காலமற்ற தொல்லுலகில் ஒவ்வொரு நாளும் புதிய நாளாம். நாமும், ஏன், அதன் அங்கமாக, ஒரு கூறாக இருந்து, புதிதாகப் பிறந்தாற்போன்ற உணர்வுடன் வாழ்ந்து அனுபவித்துக் கழித்து விடக்கூடாது.?, — நம் நினைவும் எதிர்பார்ப்பும் மாற்றப்படலாம் என்னும் நினைவுடன். அதது நிகழ்ந்து கொண்டிருக்கும் இயல்பினை அப்படியே ஏற்றுக்கொண்டு, நம்முடையதாக்கிக் கொள்வோம். வாழ்க்கை நம்முடையதாக இருக்கும்.