ஒரு இளவேனில் காலத்தின் முடிவில் என்னை ஊரை விட்டு விலக்கி வைத்தார்கள். பூக்கள் வாடியிருந்த பாதைகளின் வழியே நானும் நிலாவும் நடந்தோம். எடை தாங்க முடியாமல், நிலா சுமைக்கல்லில் மூட்டையை இறக்கி வைத்தாள். அதன் காலடியில் நான் உட்கார்ந்து வந்த பாதையை பார்த்தேன். மாட்டுவண்டி ஓடிய இரட்டை பாதையின் நடுவே புல் முளைத்து வளைந்திருந்தது. மாட்டுவண்டி ஓடிய தடங்களில் நீர் நிறைந்து குழம்பாக இருந்தது. வளைந்து திரும்பிய பாதை மறைவில் எங்கோ ஊர் இருந்தது.
நான் இதை எதிர்பார்க்க – வில்லை. கண்ணீரும் சிந்திய மூக்குமாக நின்ற அம்மாவின் உருவம் மட்டுமே கண்ணை மூடினால் நின்றது. ஞாபக சக்தி இல்லாத பிராம்மணனால் எப்படி மந்திரம் சொல்ல முடியும்? வேதம் ஒப்பிக்க முடியும்? கல்யாணமும் பண்ணி வைத்தார்கள். ஏன் இவளைக் கல்யாணம் பண்ணி வைத்தார்கள்? இவளுக்கு நான் என்ன கொண்டு வர முடியும்?
அடுத்த வீட்டில் திருடித்தான் இவளுக்கு நகை வாங்கித்தர முடியும்! எத்தனை நாள் நான் திருடுவதைப் பொறுத்திருப்பார்கள்? ஊர் கூடி என்னை விலக்கம் செய்தாயிற்று. தலைநகரத்தில் ராஜ துரோகம் செய்தவர்களுக்கு மட்டும்தானே காராக்கிருகம்? திருடுபவனுக்கும் மானபங்கம் செய்பவனுக்கும் ஊர்விலக்கம்தான். ஒவ்வொரு ஊரிலுமா காராக்கிருகம் கட்ட முடியும்?
நிலா வாய் பொத்தி அழுதாள். என் பக்கம் திரும்பவே இல்லை. என் கண்களைப் பார்க்கக்கூடாதென்று பிடிவாதமாகக் குனிந்துகொண்டாள். நான் திரும்பிப் பார்த்தேன். ஊரெல்லையில் அய்யனார் நின்றுகொண்டிருந்தார். நிலாவின் மூட்டையையும் எடுத்து என் தோள் மீது வைத்துக்கொண்டு அய்யனாரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
அய்யனாரின் காலடியில் என் சுமைகளை இறக்கி வைத்தேன். நிலா பின்னாலேயே வந்திருந்தாள்.
ஊரெல்லை தாண்டியதும் விவசாய நிலங்கள் முடிந்து காடு ஆரம்பித்திருந்தது. இனி இவையெல்லாம் என் சொந்தம். ஊரெல்லைக்குள் போனால் அடி உதை. எவன் போகப்போகிறான்? அங்கு வெகுநேரம் உட்கார்ந்திருந்தோம். கவிந்திருந்த தென்னை மரங்களின் ஊடே அங்கங்கு சேறு தங்கிய பாதைகள். தூரத்தில் மாட்டுவண்டியில் தலையாரி வரும் சத்தம் கேட்டது.
மீண்டும் சுமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். திரும்பிப் பார்த்தேன். நிலா இன்னமும் எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளது கன்னங்களில் கண்ணீர் காய்ந்து தடமாக ஆகியிருந்தது. எதிரில் மாட்டு வண்டி பாதை திரும்பி ஊர் சென்றது. நிலா எழுந்து வரும் வரை நின்றுகொண்டிருந்தேன். யுகமாக இருந்தது. அவளது காலடி சத்தம் கேட்டதும் நடக்க ஆரம்பித்தேன். இனி மேடும் பள்ளமுமாக காடுதான். சீர் செய்யாத காடு.
முட்களும் சிறுபுதர்களும் கொளுத்தும் வெய்யலும் மனித நடமாட்டமற்றதுமாகக் காடு. ஒரு பாம்பு ஒரு பொந்திலிருந்து வெளிப்பட்டு இன்னொரு பொந்துக்குள் சரசரவென்று புகுந்தது. ஒரு பூரான் நடந்து சென்றது. தூரத்தில் ஒரு கரும் காட்டுப்பன்றி என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. நிலா என் பின்னால் ஒதுங்கினாள். வெகு தூரத்தில் ஒரு மரம் ஒற்றையாக நின்றுகொண்டிருந்தது. நான் திரும்பிப்பார்த்தேன். வெகுதூரத்தில் அடிவானத்தில் ஓரிரு தென்னைகளாக ஊர் கரைந்திருந்தது. திரும்பி தனியாக நிற்கும் ஒற்றை மரத்தை நோக்கி நடந்தேன். அங்குதான் என் எதிர்கால வீடு.
மரத்தின் கீழ் நிழலில் நானும் அவளும் உட்கார்ந்தோம்.
’இது புளியமரம்.’ என்றாள் நிலா.
’ஆமாம்.’
’இங்கே வீடு கட்டமுடியாது.’ என்றாள்.
’சரி, தள்ளிக் கட்டுவோம்.’
’எவ்வளவு தள்ளி கட்டுவாய்?’ என்றாள் நிலா.
’எப்படிக் கட்டுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்,’ என்றேன்.
சமூகத்தின் உதவிகள் அற்ற வாழ்க்கை மிருக வாழ்க்கை. சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை ஒப்புக்கொள்ளவில்லை என்றால், சமுதாயத்தின் உதவிகளின்றி இரு என்ற ஆணைதான் ஊர் விலக்கமோ என்னவோ. தனியொரு ஆளாக ஆறு தேடிச் சென்று குளித்து, துணி துவைத்து அவை நைந்து கிழிந்ததும் என்ன செய்வதென்று விழித்து சமுதாயத்தின் சின்னஞ்சிறு உதவிகள் எவ்வளவு பெரிய உதவிகள் என்று தெரியும்.
அந்த வருடமே பஞ்சம் வந்துவிட்டது. கோடைக்காலம் வந்தபோது வெறும் கடுமையான வெயில் என்றுதான் நினைத்தேன். புளியமர நிழலும் ஆளை அமுக்கியது. வெயில் தாளாமல் கூரை எரிந்து போனது. பனையோலை எடுத்து வர ஆறு தேடிச் சென்றபோது ஆறு கூடக் காய்ந்துவிட்டதை அறிந்தேன். ஆற்றின் உள்ளே அங்கங்கு தோண்டி நீர் எடுக்க முயற்சி செய்திருப்பதைப் பார்த்தேன்.
இறந்த காட்டுப்பன்றிகளின் கொழுப்பில் நானும் நிலாவும் உயிர்வாழ்ந்தோம். பிறகு பாம்புகளை வேட்டையாடி உண்டோம். அந்த கோடைக்காலத்தின் முடிவில் நிலா ஒரு நல்ல வேட்டைக்காரியாக ஆகியிருந்தாள். நிரந்தரமாக இடுப்பில் தொங்கும் கத்தியும் கையில் இருக்கும் ஈட்டியுமாக காணாமல் போன வன தேவதை போல உருமாறியிருந்தாள். அவளது நிறம் வெயிலில் அலைந்து கருத்திருந்தது.
பஞ்சம் பிழைக்க ஊர் காலியாகி தலைநகரத்தில் கட்டட வேலைக்குச் சென்றது. நானும் சென்றிருக்கலாம். இன்னொரு ஊரின் கூட்டத்தோடு கூட்டமாக மறைந்திருக்க முயற்சி செய்திருக்கலாம். ஆனால் என்னால் முடியவில்லை. கால்கள் மரத்துக் கொண்டிருந்தன. மூன்று அடி நடந்தால் என் கால்கள் கடும் வலி கொண்டவையாகி நடுங்க ஆரம்பித்திருந்தன. பாம்பின் வயிற்றில் இருந்த பல்லியையும் நான் தின்றிருப்பேன் என்று நிலா சொன்னாள்.
பஞ்சம் கடுமையாக ஆகிக்கொண்டிருந்தது. ஆற்றிலிருந்து பொங்கும் கனல் குடிசை வரை அடித்தது. மரங்கள் கருகிச் செத்தன. புளியமரம் மட்டும் பல இலைகளை இழந்தும் உயிருக்கு தப்ப முயற்சி செய்துகொண்டிருந்தது.
’நான் போகப்போகிறேன்.’ என்று நிலா சொன்னாள்.
அவளைத் தடுக்கவோ அல்லது அவளுக்குப் பிள்ளை கொடுக்கவோ என்னிடம் சக்தி இல்லை.
’இந்தக் குடிசை அழிந்துவிடும். ஆகவே மரத்தில் செய்கிறேன்,’ என்று புளிய மரத்தில் கத்தியால் வட்டம் போட்டாள்.
’இந்த வட்டத்திலிருந்து ரத்தம் வடிந்தால், நான் இறந்துவிட்டேன் என்று நினைத்துக்கொள். இதிலிருந்து தண்ணீர் வந்தால், நான் திரும்ப உன்னிடம் வந்துவிட்டேன் என்று நினைத்துக் கொள்.’ என்று சொல்லிவிட்டு, தன்னுடைய கத்தியை இடுப்பில் செருகிக்கொண்டு, சென்றுவிட்டாள். என்னால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. உட்கார்ந்தவாறே அவள் போவதை பார்த்துக்கொண்டிருந்தேன். பளீரென்று அடிக்கும் வெயிலில் அவளது கத்திகள் இடுப்பில் ஆட புதர்களின் நடுவே நடந்து, வளைந்து திரும்பி மறைந்தாள்.
அவள் சொன்னது போலவே இரண்டே நாளில் குடிசை வெயில் தாங்காமல் மறுபடி எரிந்துவிட்டது. மரத்தின் கீழே வந்து உட்கார்ந்தேன். குடிசையை குச்சிகளை நட்டு ஓலைகளால் வேய்ந்து சுவரெழுப்பி இருந்தேன். மேலே இருந்த கூரை மட்டுமின்றி குச்சிகளும் சுவராக இருந்த ஓலைகளும் கூட எரிந்துவிட்டன. அணைக்க எனக்கு தெம்புமில்லை. தெம்பிருந்தால், தேடிப்போகத் தண்ணீருமில்லை.
மரத்தின் கீழே வந்து உட்கார்ந்தேன். அவள் போனதும் எனக்கு இருந்த உணவும் போய்விட்டது. உணவின்றி எவ்வளவு நாட்கள் இருக்கமுடியும்? புளிய இலைகளைத் தின்று தின்று என் உதடுகள் வெடித்துகிளம்பின. பசி மயக்கத்தில் அண்ணாந்து கிடந்தேன். இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் பசிக்குப் பிறகு ஊர ஆரம்பித்தேன். புளியமரத்தில் பகலில் இருப்பது கூட பரவாயில்லை. இருளில் இருப்பது இன்னும் என்னை கலவரப்படுத்தியது. புளியமரத்தின் கீழே வளமையான காலங்களில் கூட புல் பூண்டு முளைத்திருக்காது. பஞ்சகாலத்தில் எப்படி இருக்கும். இரவில் பசி மயக்கத்திலும் புளிய மரத்தின் மூச்சை முட்டும் காற்றிலும் பயங்கரமான கனவுகள் என்னை அலைக்கழித்தன.
திரும்பத்திரும்ப உணவே என் கனவில் வந்தது. செழுமையான உணவு. அள்ள, அள்ளக் குறையாத பாத்திரங்களிலிருந்து தின்று முடிக்காத நான் தின்று கொண்டே இருக்கிறேன். பாத்திரம் நிலாவாக ஆகியது. அவளிடமிருந்து தின்கிறேன். பிறகு அம்மா தன் கண்களிலிருந்து பொங்கும் கண்ணீரால் எனக்கு குடிப்பிக்கிறாள். திணறி விழித்தால், அநாதரவாகக் காட்டில் படுத்திருக்கிறேன்.
மீண்டும் ஏதோ என்னை இழுப்பதில் விழித்து, என் கால்களைச் சாப்பிட முனையும் பன்றியிடமிருந்து தப்பினேன். மெல்ல ஊர்ந்து, இறந்துபோன பன்றிகளையும் பாம்புகளையும் எடுத்து வந்து மரத்தடியில் போட்டு வைத்தேன். மர நிழலின் கீழே ஒண்ட வரும் மிருகங்களிடமிருந்து என்னால் என்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல், ஒரு முறை காலை இழந்தேன். பிறகு குளிர்காலம் வந்தது. அப்போதும் பஞ்சம் தொடர்ந்தது. இப்படியே வருடங்கள் கழிந்தன. பஞ்சம் மட்டுமே தொடர்ந்தது. மழை வரவே இல்லை.
இறுகிப்போன மரத்தின் பட்டைகளிடையே நிலா செதுக்கிய வட்டம் மறைந்துகொண்டிருந்தது. நான் கனவுகளில் தவளையாக ஆகிக்கொண்டிருந்தேன். கனவிலா, நனவிலா, என்று அறியமுடியாத ஒரு நிலையில் ஈரத்தவளையாகக் கிரீச் கிரீச்சென்று அவ்வப்போது குரல் கொடுத்துக்கொண்டிருந்தேன். நிலா ஒரு தாமரை இலையாக இருந்தாள். அந்த இலை மீது நான் அமர்ந்திருந்தேன். என் அப்பா ஒரு திமிங்கலமாக என்னை
விழுங்க வந்தார். தாமரை இலை என்னை மூடி திமிங்கலத்திடமிருந்து காப்பாற்றியது. தாமரை இலைக்குள் பெரிய கோட்டைகள் இருந்தன. ஏராளமானோர் வேலை செய்துகொண்டிருந்தனர். அங்கு மாட்டுவண்டியில் செட்டியார் என்னை கடந்து சென்றார். விழித்துப் பார்த்தேன். கருகிய இருளில் புளியமரத்தின் கிளைகள் என்மீது படர்ந்திருந்தன. அவை நிழல்கள் மட்டுமல்லாது நிஜக் கிளைகளாகவே என் மீது ஊர்வதை உணர்ந்தேன்.
கருமையானதோர் பாதையில் நான் நடந்துகொண்டிருந்தேன். இறந்த பன்றிகளும் பாம்புகளும் என்னையே தின்றுகொண்டிருந்தன. இரவின் மடியில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்க தவளையாக ஊர்ந்துகொண்டிருந்தேன். நிலா, நிலா என்று உணவுக்காக ஏங்கினேன்.
கண் விழித்துப் பார்த்தேன். ஆனால் எழுந்திருக்க முடியவில்லை. மரத்தின் கிளைகளோடு கிளைகளாக என் கரங்களும் கைகளும் ஆகிவிட்டிருந்தன, மரத்தோடு மரமாக என் உடல் ஆகிவிட்டிருந்தது., மரப்பட்டையோடு பட்டையாக என் தோல் ஆகிவிட்டிருந்தது. எழுந்திருக்க முடியவில்லையே தவிர அனைத்தும் தெரிந்தது. என்னைச் சுற்றியும் என் பெற்றோரும் ஊராரும் நின்றுகொண்டிருந்தனர். என் அப்பா என்னை காலால் எட்டி உதைத்தார். கோடரிக்காம்பு என்று துப்பினார். ஊரார் எல்லோரும் சேர்ந்து என் மீது மண்ணை அள்ளிப் போட்டனர். தூரத்தில் என் அம்மா முந்தானையால் வாய் பொத்தி சிவந்த கண்களுடன் நின்றுகொண்டிருந்தாள். தூரத்தில் நிலாவின் அப்பாவும் அம்மாவும் நின்றிருந்தனர்.
“என் பொண்ணு என்ன பாவம் செய்தாள்? அவள் சாபம் உங்களை விடாது” என்று நிலாவின் அப்பா கர்ஜித்தார். நிலாவின் அம்மா மண்ணை எடுத்து ஊர்ப்பக்கம் வீசினாள். எல்லோரும் அதிர்ந்து அவளது காலில் விழுந்தனர். நிலாவின் அம்மா கடுங்கோபத்துடன் ஊர்பக்கம் நடந்தாள். மக்கள் அவள் பின்னாலேயே ஓடினர். ஊர்ப்புறத்திலிருந்து ஊர்வலமாக மக்கள் வந்தனர். புளியமரம் தாண்டிச் சென்றனர். அவர்கள் நடந்து நடந்து பாதை உருவானது. எங்கோ தொலை தூரம் சென்றனர். மழை அடித்தது. காற்று அடித்தது. மழை மீண்டும்.
என் மீது ஆறாக மண் ஓடியது. பிறகு என் மீது செடிகள் முளைத்தன. மரங்களாயின. மரங்கள் சிதிலமடைந்து வீழ்ந்தன.
புளியமரம் அப்படியே நின்றுகொண்டிருந்தது. புளியமரத்தில் நிலாவின் வட்டத்தைத் தேடினேன். அங்கு நிலாவின் வட்டமே இல்லை. வட்டம் வரைந்த சுவடும் இல்லை. அது என் கனவா? நிலா வட்டம் வரைந்து சென்றாள் என்று நான் கனவில் நினைத்தேனா? தெரியவில்லை. இல்லாத வட்டத்தை தேடித்தேடி என் கண்கள் பூத்தன. என் கண்களே வரைந்தனவோ என்று அங்கு வட்டமும் தெரிந்தது. அந்த
வட்டத்திலிருந்து தண்ணீரும் கொட்டியது. திரும்பிப்பார்த்தேன்.
நிலா வந்துகொண்டிருந்தாள். என்னை விட்டு போகும்போது எந்த உடை அணிந்திருந்தாளோ அதே உடையில் அதே கத்தியோடும் ஈட்டியோடும் வந்துகொண்டிருந்தாள். என்னருகே நின்றாள். என்னைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு விடுவிடுவென்று நடந்து சென்றாள். வெகுதூரம் நடந்த பின்னால், குளத்தருகே ஒரு கோவில் வந்தது. அந்தக்கோவிலில் வனப்பேச்சி நின்றுகொண்டிருந்தாள். குளத்தருகே தவளைகள் கத்திக்கொண்டிருந்தன. தாமரை இலைகள் மீதும் சில தவளைகள் இருந்தன. வனப்பேச்சியின் உடலுக்குள் நிலா புகும்போது திரும்பிப்பார்த்தேன். வெகு தூரத்தில் புளியமரத்தின் கீழே சிதிலமாக என் எலும்புகள் கிடந்தன.