கதைசொல்ல வரும் குழந்தை

ஒரு குழந்தை கதை சொல்கிறேன் என்று
உன்னிடம் வரும்போது
அப்புறம்
இப்ப முடியாது
என்று குதித்தெழும் சொற்களை
விழுங்கிவிட்டு
செல்பேசியை அணைத்துவிடு

நீ இதுவரை கதையே கேட்காதவன்
நினைவில் வைத்துக்கொண்டு
வீட்டுத்தரையில்
மர நிழலில்
விண்மீன்களுக்கு அடியில்
எங்கேனும்
கிடைத்த இடத்தில்
அவசரமாக
அமர்ந்துகொள்

எனக்கு இது முன்பே தெரியும்
இது அப்படி வராது இப்படி வரும்
என்ற வெடிகளை
பற்றவைத்துவிடாதே
குளிர்ந்த நீரில் அவற்றை
மூழ்க வை

நீ இப்போது கதைகேட்பவன்
பத்திரிகை மெய்ப்பு பார்ப்பவரோ
விடைத்தாள் திருத்தும் ஆசிரியரோ
முதலாளியோ
இல்லை
தவறுகள் உன் கண்ணில் படப்போவதில்லை
அவை கதைகளின் ஒளியைக் களவாடுபவை

நீ இப்போது கதைகேட்பவன்
கதைசொல்லியின்
தொடையில் ஒட்டி இருக்கும் சோற்றுப்பருக்கையோ
கோணலான சட்டை பட்டன்களோ
உனக்கு ஒரு பொருட்டு இல்லை
நினைவில் இருத்திக்கொள்

கதையின் சுவாரசியத்தில்
குழந்தை
கைகால் ஆட்டுவதையோ
வாயில் எச்சில் ஒழுகுவதையோ
மறந்தும் சுட்டிக்காட்டாதே

நீ இப்போது கதை கேட்பவன்
உன் சேமிப்பிலிருக்கும்
ஆச்சரியங்களையும்
வைப்புக்கணக்கில்
இருக்கும்
புன்னகைகளை
கொஞ்சம் கொஞ்சமாக
செலவழிக்கத் துவங்கு

கதைமுடிந்தபின்
முதலில் எழுந்தோடி விடுபவனாய் இருக்காதே
அதைப்பற்றிப்பேசு
முடிந்தவரை
சின்னச் சொற்கள் கொண்ட
குட்டிக்குட்டி வாக்கியங்கள் போதும்

கதை ஏற்படுத்திக்கொடுத்த
தருணமும் உணர்வும்
உங்களைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கும்
பின்னொருநாளில்
கதையை நீங்களிருவரும்
மறந்துபோனாலும் கூட