உத்தண்டி

நகரத்தெல்லை
உத்தண்டி வரையென
அரசு அறிவித்துள்ளது.
ஊர்க்கோடிக்கு அப்பால்
யாருமண்டாத கடற்கரையுள்ள
அந்த நாளைய
உத்தண்டிக்கு ஆருயிர் நண்பர்கள்
நால்வர் பேருந்தில் சென்றிருந்தோம்,
ஒரு முன்காலைப் பொழுதில்.
பேருந்து நடத்துனரிடம்
கடைசி வண்டியை எடுக்குமுன்னர்
குரல் கொடுக்கச் சொல்லிவிட்டு,
கடற்கரை மேட்டில் ஒரு பனைமரம் கீழே
அமர்ந்தோம் அளவளாவ.
வீட்டிலிருந்து எடுத்து வந்த
சிற்றுண்டியை பகிர்ந்துண்டோம்.
கடைசி வண்டி எடுக்கையில்
நடத்துநர் குரல்கேட்டு ஓட்டமும் நடையுமாக
நிறுத்தத்தை அடைந்து பேருந்தில் ஓட்டுநர் அருகே ஒன்றாக
நால்வரும் அமர்ந்தோம். அளவளாவல் தொடர்ந்தது.
ஆருயிர் நண்பர் ஒருவர் சில
மாதங்களில் தன்னை முடித்துக்கொண்டார்-
ஆருயிர் நண்பர் இன்னொருவர் பல
ஆண்டுகள் கழித்து தன்னை முடித்துக் கொண்டார்-
செய்தியில் உத்தண்டி பற்றி பேச
ஆருயிர் நண்பர் மூன்றாமவருக்கு
கைப்பேசியில் தொடர்பு கொள்ளவேண்டும்,
நெஞ்சில் கனம் குறைந்த பின்னர்.