”ஆர்மீனியன் கோல்கத்தா”*

ஏப்ரல் 24, 1915. கான்ஸ்டான்டிநோபிளில் அன்று சுமார் 250 ஆர்மீனிய சமூகத்தலைவர்களும், அறிவுஜீவிகளும் கைதானார்கள். அவர்களில் ஒருவரான கிரிகோரிஸ் பலாகியன் ஒரு கிரிஸ்தவ வர்த்தபெத் – அதாவது பாதிரியார். ”அநேகமாய் ஒருவர் பாக்கியில்லாமல், ஆர்மீனியப் பொதுவாழ்வின் எல்லா முக்கியஸ்தர்களும்- எல்லா மதகுருமார்களும், தொண்டர்களும், புரட்சிக்காரர்களும், பத்திரிகையாசிரியர்களும், ஆசிரியர்களும், மருத்துவர்களும், மருந்தாளர்களும், பல்மருத்துவர்களும், வணிகர்களும், வங்கியாளர்களும் என எல்லாருமாக- ஒன்றுகூட முடிவு‍செய்து அந்த இருளடித்த சிறை அறைகளுக்கு விஜயம் செய்தார் போலிருந்தது,” என பலாகியன் பிற்பாடு எழுதினார். துருக்கி அரசாங்கம் ஆர்மீனியருக்கு எதிராகத் திட்டமிட்டு நிகழ்த்திய உக்கிரமான கலாச்சார அழிப்புக்கு நேரடி சாட்சியாக இருந்தார் அவர். சில நாட்களிலேயே அவருடன் இருந்த சிறைக்கைதிகள் பலரை கிழக்கு நோக்கி, மத்திய துருக்கிப் பள்ளத் தாக்கு நிலங்களுக்கு,  ரயிலில் தவிர்க்கவியலாத மரணத்தை நோக்கி அழைத்துச் சென்றதை அவர் பார்த்திருந்தார். வாரங்களும் மாதங்களும் உருள, மேலும் பலர் குதி‍ரைமேலும், வண்டிகளிலும், கழுதைகளிலும், நடத்தியே கூட வட சிரியாவில் அத்துவானமான, வெறித்த பாலைவனங்களில் தவித்துச் சாக அனுப்பப்பட்டார்கள்.

கான்ஸ்டான்டிநோபிளுக்கு 200 மைல் கிழக்கே,சான்கிரி என்ற இடத்தில் நெடுநாட்கள் சிறையிலிருந்தார்கள் பலாகியன் மற்றும் சகாக்கள். லஞ்சங் கொடுத்துத்தான் கொஞ்சம் தாக்குப் பிடித்து அங்கேயே வாழ முடிந்தது என்றாலும், அவர்கள் கிளம்பும் வேளையும் வந்தது. சிரிய எல்லையில் தெர் சோர் என்ற இடம் நோக்கிய- அந்தப் பெயரே பிற்பாடு  மரணம் என்று ஒலிக்கலாயிற்று –  அவர்கள் பயணம் வன்கொடுமைகள் நிறைந்தது. இந்த நூல் ‘ஆர்மீனியன் கோல்கத்தா’வின் முதல்பகுதி சுமார் ஒன்றரை மாதப் பயணத்தை விவரிக்கிறது. அதிலும் குறிப்பாக பலாகியன் பெரும்பாலும் நடையாகவே கொண்டுபோகப் பட்டிருக்கிறார். பசி. கடும் சோர்வு. துயரம். கூடவே தவிர்க்கவே முடியாதபடி எதிரே காத்திருக்கும் மரணம். வழிநெடுகிலும் உருக்குலைந்து கொண்டிருக்கும் எலும்புக்கூடுகள். பெண்களின், சிறுமிகளின் நீண்டகூந்தல் கொண்ட மண்டையோடுகள் – இவர்களுக்கு முன்னால் அவர்கள் பயணப்பட்டு பாதிவழியிலேயே கொலைசெய்யப் பட்டிருக்கலாம். ”கேள்விப்படவே முடியாத அளவு நரகவேதனைகளுடன் எங்களது ஒவ்வொரு நாளும் கழிந்தது. அதை முழுதாய் உள்வாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு  யோசிக்கும் திராணியைக் கூட இழந்திருந்தோம்,” எனக் குறிப்பிடுகிறார் பலாகியன். ”உயிரோடு இருந்த எங்களுக்கு இந்த குருதி சொட்டும் வதைகளுக்கும் மரணத்துக்கும்  ஆட்பட்டு  முன்பே இறந்தவர்களைப் பார்க்கப் பொறாமையாய்க் கூட இருந்தது.”

ஏப்ரல் 1916இல் பலாகியன் தப்பியோடினார். பதினெட்டு மணிநேர விடாத மழையில் விடாத ஓட்டம். அவரை அரவணைத்துக் காப்பாற்றிய பல குடும்பங்களில் முதலாவதை அவர் சந்திக்குமுன் பாழாகிப் போன ஒரு அரவை ஆலையில் ஒளிந்திருந்தார். அடுத்த இரண்டரை வருடங்களில் அவர் தான் யார் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் மறைக்க, போடாத வேஷம் கிடையாது. ரயில்வே ஊழியன், திராட்சைத் தோட்ட வேலைக்காரன், மருத்துவ மனையில் மன நோயாளி, ஜெர்மானியச் சிப்பாய். நண்பர்களிடமும், அறிமுகமில்லாத நல்ல மனிதர்களிடமும் இப்படி அடைக்கலப்பட்டிருந்தார். கான்ஸ்டான்டிநோபிளுக்குத் திரும்பும் முன் ஒருமுறை காட்டில் ஒண்டியாய்க் கூட ஒளிந்து  திரிந்திருக்கிறார். வந்துசேர்ந்தபின் 1918ன் இலையுதிர்காலத்தில், நீண்ட நாட்கள்  சாட்சியாக ஆக்கப்பட்டு, தான் பார்த்தவற்றை , கொடூரங்களைப் பற்றி எல்லாம் எழுத்தில் பதிவுசெய்ய ஆரம்பித்தார். பலாகியன் நினைவுகூர்கிறார். ”அவரவர் கல்லறைக்கு இட்டுப் போகும் சாலையில் பயணம் போனபோது, எங்கள் இனப் படுகொலையின் அத்தனை அம்சங்களையும் உள்வாங்கிக்கொள்ள முயன்றேன். எப்படியாவது பிழைத்தால், இந்தக்  குற்றங்களை, கொடும் சம்பவங்களை நான் வெளிச்சம் போட்டுக் காட்டுவேன் என்றும் நினைத்துக் கொண்டேன்.” அதற்குமுன்பாகவே, ஒரு பாதிரியாரின் இந்த யாத்திரையும், அதில் எதிர் வந்த அடுக்கடுக்கான ஆபத்துகளில் இருந்து மீண்டும் மீண்டும் தப்பித்த வழிகள் பற்றியும், அதற்காக வேஷத்துக்கு மேல் வேஷங்களை மாறி மாறிப்போட்டதும், தடைகளை யெல்லாம் கடந்து போனதுமே கூட ஊரெங்கும் சாகசக் கதையாய்ப் பரவியிருந்தது. மாறுவேஷத்தில் இருந்த அவரிடமே அது காலும் கண்ணும் காதும் முளைத்து வந்து சேர்ந்தது. மீட்சிக்கு வழிகோலும் நாயகர் அவர் என்கிறதாய் அவரை ஜனங்கள் நம்ப ஆரம்பித்திருந்தார்கள். ஒரு ஆர்மீனியப் பெண்மணி அவரிடமே இப்படித் தெரிவித்தார். ”குறைந்த பட்சம் அந்தப் பாதிரியாராவது விடுதலையானால் நாம் அனுபவித்த அத்தனை படுபாதகங்களும், துயரங்களும் முழுக்க வீணாகாமலிருக்கும்.”

யுத்தம் முடிந்து சுதந்திரத்தைக் கண்ட பலாகியன்  இந்த நினைவுகளைச் சரித்திர ஆவணமாகப் பதிவு செய்வதை,  “துன்பமான, பெருஞ்சுமையான பொறுப்பாக” உணர்ந்தார். இனப் படுகொலை என்கிற சொல்லே (Genocide) அவர் எழுதியதற்கு ஒரு 30 ஆண்டுகளுக்குப் பின்னரே படைக்கப் பட்டது, அதனால் அவர் சாட்சியாய் நின்ற சம்பவங்களைப் புரிந்து கொள்ள பலாகியன் வரலாற்றில் மிகப் பின்னே போக வேண்டி இருந்தது.  துருக்கியருக்கும், ஆர்மீனியருக்குமிடையே இருந்த உறவுகளில் அத்தனை பகைமை இருப்பதன் காரணங்களையும்,  இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய வருடங்களில் எழுந்த அனைத்து இஸ்லாமிய, அனைத்துத் துருக்கிய தேசியத்தையும் பற்றியே பேச வேண்டி இருந்தது. அவற்றில், பிற்காலத்துப் படுபாதகங்கள் தலையெடுக்குமுன்னேயே அவற்றின் ஆரம்ப விஷவிதைகள் புலப்பட்டன என்கிறார் பலாகியன். நகராட்சிப் பதவி நியமனங்களில் வேலை வாய்ப்புகள் மறுக்கப் பட்டதால்,  ஐரோப்பிய வழிக் கல்வியில் தேர்ந்த ஆர்மீனிய கிரிஸ்தவர்கள் தனியார் நிறுவனங்களில், பன்னாட்டு வர்த்தகங்களில், மருத்துவத்திலும் கலைத்துறைகளிலும் வாய்ப்புகள் தேடிக் கொண்டதோடு, அவற்றில் வளப்பமும் கண்டார்கள். இதுவும்  துருக்கியருக்குச் சிறிதும் ஏற்கவில்லை. தவிரவும்,  மத்திய சக்தி நாடுகளுடன் (Central Powers) [1]  துருக்கி வைத்திருந்த பாதுகாப்புக் கூட்டணிக்கு,  ருஷ்ய உதவியுடன் ஆர்மீனியா துருக்கியிடமிருந்து விடுதலை பெற வாய்ப்பு அதிகம் என்பது தலைவலியாகத் தெரிந்தது. பெருமகனார் ரூதிகர் வான் தெர் கோல்ட்ஸ் பாஷா (Baron Rudiger Von der Goltz Pasha) ஜெர்மானிய-துருக்கியர் சமூகத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்று, ஃபெப்ருவரி 1914ல் ஓர் உரை நிகழ்த்தினார். ஆட்டோமன் சாம்ராஜ்யத்துக்கு இந்த துருக்கி நாட்டில் உள்ள ஆர்மீனிய கிரிஸ்தவர்கள் பெரும் சுமையாக இருக்கிறார்கள் என அவர் வாதிட்டார்.  “துருக்கிக்கு மேலும் பெருநாசங்கள் ஏற்படாமல் இருக்க, நாட்டின் ருஷ்ய-துருக்கிய எல்லையின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அரை மில்லியனுக்கும் மேலான ஆர்மீனியர்களை அகற்ற வேண்டும், அப்படியே அலெப்போ, மேலும் மெசப்பதோமியா பகுதிகளான தெற்கு எல்லைப் பக்கமாக குடிபெயர்க்க வேண்டும்.” என்பதே அவர் விளக்கம்.

’அகற்றுதல்’  என்ற சொல்லுக்கு விபரீத அர்த்தங்கள் உண்டு என்பது சீக்கிரமே புலனாயிற்று.   ”ஆர்மீனியர்களை வேரோடு அறுப்பது அவசியம்.” என்று 1916 இன் துவக்கத்திலேயே உள்ளாட்சி அமைச்சர் வெளிப்படையாகவே அறிவித்ததாக எழுதுகிறார் பலாகியன்.  ஆட்டோமன் சாம்ராஜ்யத்தின் முக்கியமான ஆர்மீனிய அறிஞர்கள் ஏற்கனவே நாடுகடத்தப் பட்டதும், அல்லது வாயடைக்கப் பட்டதும் நடந்தாயிற்று. அதனால் ஆர்மீனிய சமூகத்திற்கு தன்னைக் காத்துக் கொள்ளத் தேவையான தலைமை இல்லாது   போயிற்று.  ’இடப்பெயர்ச்சி முயற்சிகள்’ என்று அரசாங்கம் சொன்னது, உண்மையில் சாவை நோக்கிய நடைப்பயணமே, பசி, பட்டினி என்று வாட்டி வதைத்து அவர்களைக் கொல்வதே அது. பாலைவனத்தின் ஆகக் கடுமையான பிரதேசங்களில் கூட பிழைத்திருந்த குறைவான நபர்களோ, உள்ளூர் கிராமவாசிகளாலும், அரசாங்கம் சமீபத்தில் விடுவித்த கைதிகளாலும் தாக்கப்பட்டார்கள்.   அரசாங்கம் தன்னுடைய மிக  இழிவான இந்த வேலையைச் செய்யவென்றுதான்  இக்கைதிகளை மன்னித்து விடுவித்திருந்தது. இப்படியான  திரள் கொலைகளில் ஒன்றை நினைவுகூர்ந்து ஒரு துருக்கியக் கேப்டன் பலாகியனிடம் சொன்னான். ”யுத்தநேரம் என்பதால் குண்டுகள் கிராக்கியாயிருந்தன. எனவே மக்கள் கிராமத்தில் என்ன கிடைக்கிறதோ அதையெல்லாம் கையிலெடுத்தார்கள் – கோடரிகள். வெட்டுக்கத்திகள், புல் அரிவாள், பிடியறுவாள், தடிகள், மண்வெட்டிகள். சுத்தியல்,கொறடுகள்- இவற்றை வைத்தே கொன்று குவித்தார்கள்.” சாகுமுன் நிறையப்பேர் பாலுறவுக்குப் பலாத்காரப் படுத்தப்பட்டார்கள். கை கால் வெட்டியெறியப்பட்டார்கள். தலை சீவியெறியப்பட்டார்கள்… செத்த பிணங்கள் நிர்வாணப்படுத்தப் பட்டு துணிமணிகளில் தைத்து ஒளிக்கப்பட்ட சொத்துக்கள், அல்லது விலையுயர்ந்ததாய் எது கிடைத்தாலும், தேறியவற்றைப் பறித்துக் கொண்டு அப்படியே பாலைவனத்தில் அழுகிப் போகும்படி  வீசியெறிப்பட்டன.

1914ன் துவக்கத்தில் துருக்கியில் ஏறத்தாழ 21.5 லட்சம் (2.15 million) ஆர்மீனியர்கள் இருந்தார்கள் எனக் கணிக்கப் படுகிறது. நான்கு வருடத்தில் 1918ல் அந்தத் தொகை 10 லட்சம் பேருக்கு மேல் குறைந்து விட்டது (1 million). பலாகியன் யுத்த முடிவின் போது  உயிர் பிழைத்திருந்தார். ஓட்டோமன் சாம்ராஜ்யம் சின்னாபின்னமாகச் சிதறியது, புதிய சுதந்திர ஆர்மீனியக் குடியரசு எழுந்தது. ஆனால் என்ன, துருக்கிய அரசின் போர்க்கால  வெறி ஆட்டங்களுக்கு எந்த எதிர்விளைவோ, நஷ்ட ஈடோ எழவில்லை.  உண்மையைச் சொன்னால், இன்றுவரை துருக்கிய அரசு இந்த இனப் படுகொலைகள் நிகழ்த்தியதைப் பற்றி அதிகாரபூர்வமாக ஒத்துக்கொள்ளவே யில்லை. தொண்ணூறு வருடங்கள் கடந்து, இன்றைக்கும் அந்த வரலாற்றுக் கொடுமைகளை நினைவுகூர்வதும், கணக்கெடுத்துச் சொல்வதும்  சார்பற்ற ஆய்வாளர்களின், வரலாற்றாசிரியர்களின், மேலும் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து ஆர்மீனியச் சமூகங்களின் பணியாகவே உள்ளது.  இந்தநிலையில், பலாகியனின் ரத்தினச் சுருக்கமாகவும், தொலை நோக்குள்ளதாகவும் அமைந்த  சுய அனுபவம் சார்ந்த சித்திரிப்புகள்,  விலை மதிக்க முடியாத பொக்கிஷமாகத் துலங்குகின்றன.

ஆர்மீனியன் கோல்கத்தா புத்தகத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால் அதன் விசாலமான  கண்ணோட்டம்தான். ஆர்மீனிய மொழியிலும், துருக்கிய மேலும் ஜெர்மன் மொழிகளிலுமே பலாகியன் சரளமான ஆளுமை கொண்டவர். அதேபோல உயர்மட்டத்து அரசியல்வாதிகளாகட்டும், அடித் தட்டு உழைக்கும் மக்களாகட்டும் எவரிடமும் சகஜமாகப் பழக முடிந்தவர்.   பல இக்கட்டுகளிடையே  புழங்கி சாதுரியமாக மீளும் திறமையும், அவசியத்துக்கு ஏற்ப தன்னை மறு வடிவமைத்துக் கொள்ளும் திறமையுமே இரண்டாண்டுகளுக்கு மேல் பல்வேறு கோலங்களில், பலதினுசு வாழ்க்கையை மேற்கொள்ள அவருக்குப் பெரிதும் உதவின. தன் விவரணைகளில் யுத்த நிகழ்வுகளை பல்வேறு விதமான வாழ்க்கைக் கோணங்களில் காட்ட அவரால் முடிந்தது. ‘ஆர்மீனியன் கோல்கத்தா’ நூலில்  பல வகைக் குரல்கள், கருத்துகள் துடிப்புடன் அதிர்கின்றன.   போர் துவங்குமுன் அனுதாபம் கொண்ட துருக்கிய அமைச்சரின் பூடகமான எச்சரிக்கைகள்,  ஒரு கணம் கவனமிழந்து பகிர்ந்து கொண்டு  வெளிப்படுத்திய அரசின் ரகசியத் தந்திகள்,   நம்மை உலைத்தாட்டும் விதமாக, மிகச் சாதாரணமாக ஏதோ சொல்வது போல, தோராயமாகச் சொன்னால் 42,000 பேருடைய சாவில் தனக்குப் பங்கிருந்ததாக  ஒரு துருக்கிய காப்டன் தரும் குற்ற ஒப்புதல் ,  வழிப்பயணிகளாக இருந்து தாம் கண்டவை பற்றி ஜெர்மானிய, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியர்களின் சாட்சியங்கள். நான்கு வருடங்களாக பலாகியனைச் சுற்றியிருந்தவர்கள்  ஒன்றுஅவர் கூடியவிரைவில் இறந்து விடுவார் என்றே நினைத்தார்கள், அல்லது அவர் ஒரு அகதி, தப்பிப் பிழைத்து ஒளிந்து  வாழ்கிறார் என்று யாரும் யூகிக்கவே இல்லை. ஆக பலாகியன் பற்றிய பயப்படக் காரணம் எதுவும் இல்லாததால், அவருடன் எல்லாரும் சரளமாக உரையாடினார்கள். அதையெல்லாம் வஞ்சகமில்லாமல் அப்படியே கொடுத்திருக்கிறார் இந்தப் புத்தகத்தில். அவரது ஒன்று விட்ட பேரன்  (grand-nephew) பீட்டர் பலாகியன் சமீபத்தில் ஒரு பேட்டியில், புத்தகத்தின் மொத்தப் பிழிவாகக் கிடைப்பது ‘ஒரு பல்குரல் கூட்டிசை’ என்கிறார்.

ஆர்மேனிய இனஅழிப்பு குறித்த நினைவு சின்னம்

ஆனால் புத்தகத்தின் நாடித்துடிப்பு எது என்றால், பலாகியனின் தெளிந்த பார்வையும், மனமுடைந்து தழுதழுக்கும் குரலும்தான். ”ஐய என் பாடுகள் தாளவொண்ணாதவை” என எழுதுகிறார். ”புறமொதுக்கி ஒழிக்கப்பட்ட ஒரு மந்தையின் மிச்சமாக ஒரே ஒரு மேய்ப்பனாக நான். நானுமே நாடுகடத்தப்பட்டவனாகவும் நாடோடியாகவுமாக ஆகியிருந்தேன்.” மொழிபெயர்ப்பிலுங்கூட பலாகியனின் குரல் ஒரு மனம் பதற வைக்கும் துயரக்கவிதை. ஒரு ’ஸ்பெஷல்’ ரயிலில் கான்ஸ்டான்டிநோபிளில் இருந்து ஆர்மீனியாவின் அறிஞர்கள் நீண்ட பயணத்தில் கடத்தப்படுகிறார்கள். அதை பலாகியன் எழுதுகிறார். ”எங்கள் கல்லறைகளுக்கு நாங்கள் போனோம், பெயரே இல்லாமல், யாராலும் அறியப்படாதவர்களாக, நிரந்தரமாகப் புதைக்கப்படப் போனோம்.”  நிலைமை மேலும் மோசமானபோது அவர் குறிப்பிட்டார். ”எங்கள் யாராலும் தூங்க முடியவில்லை.  சாப்பிடவுமில்லை.  எங்கள் பசியெல்லாம் சாவு பற்றிய தொடர்ந்த பயங்கர உணர்வால் தீய்ந்து போயிருந்தது.    ஜுவாலையில்லாமல்  நாங்கள் தஹித்தோம்,  எரியாமலே கரிந்து அழிந்தோம்.”  கடுந்துன்பம் பீடித்த தருணங்களைப் பற்றி எழுதுகையில் கூட சித்திரிப்பில் அவருக்கிருக்கும் திறமை பெருஞ்சுடராக உள்ளது. ஒரு கூட்டம் மக்களை மிருகத்தனமாகக் கொன்ற ஒரு சம்பவத்தைப் பற்றி அவர் எழுதுகிறார் – இளைஞர்கள் ”கோடாரியால் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள், மரங்களைத் தரிப்பது போல”.

ஒன்று விட்ட வழிப் பேரனும் மொழிபெயர்ப்பாளருமான பீட்டர் பலாகியனே தெரியப்பட்ட ஒரு கவிஞர் என்பதால், இந்த வகை விவரிப்புகள் அவருடைய பாதிப்பைக் காட்டலாம். பதவியால் அவர் பாதிரியார் என்ற அளவில் பலாகியன், தனது இலக்கிய உந்துதல்களைப் பின்னிறுத்தி, வரலாற்று சாட்சியமாக இதை நடத்திச் செல்வதையே முதல் கடமையாகக் கண்டிருக்கிறார் எனச் சொல்லலாம். தான் பார்த்திராத விஷயங்களைப் பற்றியும் சில இடங்களில் அவரது கவிதாமொழி பாய்கிறது, என்றாலும் அக்கட்டங்களில் அவர் தன் கற்பனையை முன்வைத்து சம்பவங்களை விவரிப்பதைக் குறித்து எச்சரிக்கையாகவே இருக்கிறார்.  அவர் கேள்விப்பட்ட ஒரு இனப்படுகொலை. பத்தாயிரம் பேர் கொண்ட  துருக்கியர் வெறியாடி ஆறாயிரத்துக்கும் அதிக ஆர்மீனியர்களைக் கொல்லுகிறார்கள். இரத்தம் ஆறாய் ஓடிய அந்த சம்பவத்தை எழுதுகையில் கையைக் கட்டுப்படுத்திக் கொண்டு பலாகியன் குறிப்பிடுகிறார். ”பதிவு என்றாலும் கூட இந்தக் குற்றத்தை அல்லது வெறிக்கூத்தை என்னால் கற்பனை செய்து விலாவாரியாய் விவரிக்க இயலவில்லை.  அத்தனை உரமுள்ள கற்பனை வசப்பட  குற்றம் செய்தே பழகிப் போனவர்களுக்கு உரித்தான விசேஷ குணங்க்ள் தேவைப்படும் .”  பலாகியனுக்குப் பலவகை இலக்கியத் திறமைகள் இருந்தன.  பரந்து விரிந்த கற்பனைத் திறனும்,  தொடர்ந்து மறுபடைப்பு செய்து விடும் சக்தியும் இருந்ததாலேயே அவர் தாக்குப்பிடித்துப் பிழைத்து வந்திருக்கிறார். ஆனால் இறுதியில், அவரது இந்தப் படைப்பு சக்தி அல்ல, அவரது கவனிப்புகளின்,  வலுவும், பரந்த வெளியும், அவரது விரிந்த அனுபவமும்தான் ”ஆர்மீனியன் கோல்கத்தா” என்ற இப்புத்தகத்தை அசாதாரணமானதாக ஆக்குகிறது.  ஆர்மீனிய இனப்படுகொலைகளின் அஞ்சாத கூசாத சித்திரிப்பாக்குகிறது. காலத்துக்கும் நிற்கும்  சத்தியப் பதிவாக இது அமையும் என அவர் நம்பியபடியே உருவாக்கி இருக்கிறது.

கட்டுரை ஆசிரியர் மைதிலி ராவ் ஆங்கில, அமெரிக்க இலக்கியத் துறையில்   நியுயார்க் பல்கலையில் படித்து முதுகலைப் பட்டம் வாங்கியவர். இவரது படைப்புகள் நியுயார்க் அப்ஸர்வர், பப்ளிஷர்ஸ் வீக்லி, த நேஷன், பாஸ்டன் ரிவ்யூ, மற்றும் பல சஞ்சிகைகளில் வெளியாயிருக்கின்றன.

கட்டுரை பதிப்புரிமை 2009 மைதிலி ஜி. ராவ் உடையது.**

-o00o-

புத்தக மதிப்புரை

புத்தகம்: ”ஆர்மீனியன் கோல்கத்தா”  -கிரிகோரிஸ் பலாகியனின் போர்க்கால அனுபவங்கள்

ஆர்மீனிய மொழியில் இருந்து ஆங்கில மொழியாக்கம்

பீட்டர் பலாகியன் மற்றும் அரிஸ் சேவாக்.

நூல் மதிப்புரை ஆங்கிலத்தில் மைதிலி ஜி. ராவ்

தமிழாக்கம்: எஸ். ஷங்கர் நாராயணன்

-o00o-

* கட்டுரைத் தலைப்பில் இட்ட இந்தக் குறியீடுக்கு ஒரு விளக்கம். ’ கோல்கத்தா’ என்றால் என்ன என்பது கிரிஸ்தவர்களுக்கும், அனேக முஸ்லிம்களுக்கும் தெரிந்திருக்கும்.  கிரிஸ்து சிலுவையில் அறையப்பட்ட குன்று இருந்த இடம் கோல்கத்தா என்று சொல்லப் படுகிறது.  இதுவே ஒரு அரமைக் மொழியில் ஒரு சொல் ’குல்கால்தா’ (Gûlgaltâ) திரிந்து கோல்கத்தா எனவும், லத்தீன் மொழியின் திரிப்பால் கால்வரி எனவும் மருவியதாகச் சொல்லப் படுகிறது.  மண்டை ஓடு உள்ள் குன்று, அல்லது இடம் என்று பொருள்.  ஆதாமின் மண்டை ஓடு புதைந்த இடம் என்றும் இந்த இடத்தைச் சொல்வர்.  இது எங்குள்ளது என்பது குறித்து நெடிய சர்ச்சைகளும், ஆய்வுகளும் பிரசுரமாகி உள்ளன.  ஒரு விவாதம் இங்கு விரிக்கப் படுகிறது- காண்க: http://en.wikipedia.org/wiki/Calvary

** மூலக் கட்டுரையைப் பிரசுரித்த  அருமையான ஒரு வலைப் பத்திரிகை: Words Without Borders.org

இந்தக் கட்டுரையை மொழிபெயர்க்க அனுமதி கொடுத்த இப்பத்திரிகையின் பதிப்பாசிரியர்களுக்கு சொல்வனம் நன்றி தெரிவிக்கிறது.

We thank the publishers/ editors of ‘Words Without Borders’ magazine and the author of this article, for the kind permission they granted us to translate and publish the article here in our E-zine.

மூலக் கட்டுரை கிட்டும் இடம்: http://wordswithoutborders.org/book-review/grigoris-balakians-armenian-golgotha/

எமது பின்குறிப்புகள்:

1) Der Zor, a Syrian town and its history are available at this link-

http://en.wikipedia.org/wiki/Deir_ez-Zor

இந்த சிறு நகரத்தில் ஆர்மீனிய இனப்படுகொலைகளுக்கு ஒரு நினைவுச் சின்ன மண்டபம் உள்ளது.

2] Central Powers என அறியப்பட்ட ஒரு பன்னாட்டுக் கூட்டணியில் ஜெர்மன் பேரரசு, ஆஸ்திரிய- ஹங்கேரியப் பேரரசு, ஆட்டொமான் பேரரசு (துருக்கி), மேலும் பல்கேரிய ராஜ்யம்  ஆகியன இருந்தன.  Entente Powers என்று அறியப்பட்ட் இன்னொரு கூட்டணி இந்த மத்திய நாட்டுக் கூட்டணியை எதிர்த்துப் புரிந்த போரே முதல் உலகமஹா யுத்தம்.  பின்னாளில் நாஜிகள் ஜெர்மனியில் பதவியைப் பிடித்து ஹிட்லரின் உலகப் பேரரசு க்கான பேராசை இரண்டாம் உலக மஹா யுத்தமாக வெடித்த போது இதே நாடுகளில் பெரும்பாலானவை மற்ற அணியை எதிர்த்துக் கூட்டணி வகுத்தன.  இன்றும் ஜெர்ம்னியில் கணிசமான குடியேறிகள் துருக்கிய மக்களாக இருக்க இந்த நூற்றாண்டு காலப் போருக்கான கூட்டுறவு ஒரு காரணம்.  துருக்கியில் யூதர் வெறுக்கப்படுவதற்கு இஸ்லாமியம் ஒரு காரணம் என்றாலும், இன்னொரு காரணம் நாஜியிசத்தின் குறிக்கோள்களில் துருக்கியருக்கு ஈடுபாடும் பங்கேற்பும் இருந்தது ஒரு காரணம்.  ஆர்மீனியர் கிருஸ்தவராக இருந்த போதும், ஜெர்மனியக் கிருஸ்தவம் இஸ்லாமியத்தோடு கூட்டு வைத்து ஆர்மீனியக் கிருஸ்தவரை ஒடுக்கத் தயாராக இருந்ததற்கு  ஜெர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் யூரோப்பில் ஆதிக்கப் போட்டி இருந்தது ஒரு காரணம்.  ரஷ்யரை இன்னமும் ஜெர்மனி போன்ற நாடடு மக்கள் யூரோப்பியராகப் பார்க்கிறாரா என்பது ஐயமே.