டேவிட் அட்டன்பரோ – இயற்கையின் குரல்

சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பருடன் வேடந்தாங்கலுக்குச் சென்றிருந்தேன். நண்பர் பறவையியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அன்று முழுவதும் பெயர் தெரியாத பல பறவைகளின் வாழ்வை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வல்லூறு, நாரை, மைனா என பல வகைப் பறவைகள் இருந்தன. பறவைகளை அடையாளம் காணும் உந்துதல் என் நண்பருக்கு நிறைய இருந்ததால், அவர் காட்டும் திசைகளிலெல்லாம் கழுத்தைத் திருப்பியபடி நடந்துகொண்டிருந்தேன். அதுவரை தரையைப் பார்க்காமல் வேடிக்கை பார்த்தபடி நடந்து தடுக்கி விழும் இடமாக இருந்த ஷாப்பிங் செண்டர்களுடன், இந்த இடமும் சேர்ந்து கொண்டது. மூன்று மணி நேரங்கள் நடந்ததில் சோர்வாகி, என் முன்னே தரிசனம் தரும் பறவைகளை மட்டும் பார்த்தால் போதுமென நிம்மதியாக ஒரு பெஞ்சில் உட்கார்ந்தேன்.

நான் அசந்தாலும், நண்பர் விடுவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து உலகின் பல மூலைகளில் வாழும் பறவைகளின் பழக்க வழக்கங்களை நண்பர் விவரித்துக்கொண்டேயிருந்தார். பூநாரைகளைப் (Flamingo) பற்றி அவர் விவரித்த விஷயம் சோர்வின் விளிம்பில் இருந்த என் கவனத்தை முழுமையாகக் கவர்ந்தது.

நாரைகள் தண்ணீரில் ஒற்றைக் காலில் நிற்கும் பழக்கம் கொண்டவை என்பது நாம் எல்லாரும் அறிந்ததே. ஆனால், இதற்கான காரணத்தைப் பல வருடங்களாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்திருக்கிறார்கள். களைப்பு மிகுதியானால் காலை மாற்றிக்கொள்ளவும், தாக்க வரும் எதிரிகளிடமிருந்து தப்பிக்க உடனடியாகப் பறக்க ஆயத்தம் செய்ய முடியுமென்பதாலும் இந்த ஒற்றைக் கால் தவம் என இதுவரை நம்பி வந்தனர். ஆனால், தொடர்ந்து ஆய்வு செய்துவந்த விஞ்ஞானிகள் குழுவின் அறிக்கை இம்முடிவுகளைத் தப்பாக்கியது. நாரைகள் தண்ணீரில் மட்டுமே ஒற்றைக் காலில் நிற்கும். அவற்றின் உடல்சூட்டைப் பாதுகாக்கவே ஒற்றைக்காலில் நிற்கின்றன;உடலில் சூடு குறைந்த நாரைகளின் தோல் நிறம் மங்கத்தொடங்குவதோடு மட்டுமல்லாது அவற்றின் ரத்த ஓட்டமும் பாதிக்கப்படுகிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் பல மிருகங்களின் விசித்திர நடவடிக்கைகளை பற்றி என் நண்பர் சொல்லிக் கொண்டேயிருந்தார். நம்மருகே இருக்கும் சாதாரண உயிர்களின் அசாதாரண பழக்கங்கள் எனக்கு மிக ஆச்சர்யர்த்தை அளித்தன.

உலகின் பல மூலைகளிலும், விலங்கு வகைகளை வகை-தொகைப்படுத்தும் பணி இன்றளவும் நடந்து வருகிறது. இதன் மூலம் நமக்குப் புலப்படாத பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துக்கொண்டிருக்கிறது. பறவைகள் எதற்காகப் பறக்க வேண்டும்? பாதுகாப்பு, தட்பவெட்ப மாற்றங்கள், உணவைத் தேடி எனும் பல காரணங்கள் போதுமானதாக இல்லை. பறக்காமல் இருக்கும் பறவைகளும் இருக்கின்றன.மொரீசியஸ் தீவில் இருந்த டோடோ அழிந்துபோனாலும், அதீதமான குளிர்ச்சிப் பகுதியான அண்டார்டிக் பகுதியில் பறக்க முடியாத பென்க்வின்கள் (சில வகைப் பென்க்வின்களால் பறக்க முடியுமென இப்போது கண்டுபிடித்துள்ளனர்) பல நூற்றாண்டுகளாக வாழ்வின் விளிம்பில் உயிர்ப்பிடிப்போடு இருப்பதற்கு காரணம் என்ன?

ஒவ்வொரு நாளும் பல நூறு மைல்கள் நடந்து புலப்பெயர்வு செய்யும் மிருகங்களில் வாழ்வு தினப்போராட்டமாக இருந்து வருகிறது. மனிதன் உட்பட பல மிருகங்களிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் தன்னையும் தன் வம்சத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இயல்பான ஒன்றா?

இக்கேள்விகளுக்கான பதில்கள் நூற்றுக்கணக்கான விலங்கியல் புத்தகங்களில் இருக்கின்றன. இந்தியப் பறவையியல் ஆராய்ச்சியாளர் சலீம் அலி தன் வாழ்நாள் முழுவதும் இதற்காக செலவு செய்தவர். இவரைப் போல் பல ஆராய்ச்சியாளர்கள், அடர்ந்த காட்டுப் பகுதிகளில் தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவு செய்து வருகின்றனர். ஆராய்ச்சியாளர்களின் முயற்சியால் பல விலங்கினங்களின் வாழ்வு முறை இன்று நமக்கு புத்தகங்கள் வாயிலாகவும், ஆவணப்படங்கள் மூலமும் கிடைக்கின்றன.இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான தொகுப்புகள் மூலம் விலங்குகளைப் பற்றிய முழு சித்திரத்தை அளிக்க முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது.

இத்தொகுப்புகளில் முதன்மையாக இருப்பது டேவிட் அட்டன்பரோ என்ற இயற்கையியல் ஆய்வாளர் இயக்கிய பல ஆவணப்படங்கள். இவர் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக விலங்குகளில் வாழ்வு முறைகள், இயற்கையோடு அவற்றுக்கு இருக்கும் உறவுகளைப் பதிவு செய்துவருகிறார்.டேவிட் அட்டன்பரோ பெயரை முதலில் கேள்விப்பட்ட போது புகழ்பெற்ற ’காந்தி’ இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோ நினைவுக்கு வரலாம். இவர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் தம்பி.

டேவிட் அட்டன்பரோ காட்டில் வாழும் அபூர்வமான விலங்குகள் மட்டுமல்லாது, நம் தெருக்களில் உலவும் விலங்குகளைப் பற்றி நமக்குத் தெரியாத பல வாழ்வியல் பழக்கங்களைத் தொகுத்திருக்கிறார். விலங்குகளின் புலப்பெயர்வு, உண்ணும் உணவு வகைகள், விசித்திரமான பழக்கங்கள், தந்திரமான வேட்டை முறைகள், குழுக்களாய் அலையும் குணங்கள் போன்ற அனைத்தையும் ஆவணப்படமாக்கியிருக்கிறார்.

இவர் இயக்கிய எண்ணிலடங்கா ஆவணப்படங்களில் The Planet Earth, Life of Birds, The Trials of Life, Life in Cold Blood போன்ற தொகுப்புகள் மிகப் பிரபலமானவை. இன்றளவும் Life, Frozen Planet போன்ற ஆவணங்களை இயக்கி வரும் இவர், விலங்குகளுக்கும் இயற்கைக்கும் இருக்கும் உறவை பல கோணங்களின் தொகுத்திருக்கிறார். உலகின் பல பகுதிகளில் இயற்கை நடத்தும் நாடகங்களை ஒளிப்படங்களாக்கியிருக்கிறார். அடர்ந்த காடுகள், ஆழமான கடற்பகுதிகள், கடலுக்கடியில் இருக்கும் குகைகள் என எதையும் விட்டு வைக்கவில்லை. நம் உலகில் இருக்கும் அதிசயங்களைப் பார்த்து வியப்பதோடு மட்டுமல்லாது, அழிந்து கொண்டிருக்கும் விலங்குகளின் பாதுகாப்பு, உலக வெட்ப ஏற்றம் (Global Warming) தொடர்பான குழுக்களை நடத்தி வருகிறார்.

இவர் இயக்கிய ஆவணப்படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தில் பி.பி.ஸியின் தயாரிப்பில் 2006ஆம் ஆண்டு வெளியான ஆவணப்படம் The Planet Earth மற்றும் The Blue Planet(2001) வீடியோத் தொகுப்புகளை வாங்கினேன்.

ஒவ்வொரு தொகுப்பும் பல பாகங்கள் கொண்டவை. டேவிட் அட்டன்பரோவின் கம்பீரமான குரலில் வர்ணனை, பல தொழில் நுட்ப வல்லுநர்களின் பேட்டி, பல அரிய காட்சிகளைப் படம் பிடித்த விதம் என நமக்குத் தெரியாத உலகம் நம் முன்னே அற்புதமாக விரிகிறது. ஒவ்வொரு பாகத்தையும் படம் பிடிக்கத் தொழில்நுட்பக்குழு மேற்கொண்ட முயற்சிகள், தவம் போல் பல வாரங்கள் காத்திருந்து படம் பிடித்த காட்சிகள் என ஒரு ஆவணப்படத்துக்கு தேவையான விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

The Planet Earth தொகுப்பில் உள்ள சில காட்சிகளை National Geographic போன்றவற்றில் பார்த்திருந்தாலும், இயற்கைக்கும், விலங்குகளுக்கும் உள்ள உறவை மிக நுணுக்கமாகவும், விரிவாகவும் இந்த ஆவணம் ஒட்டுமொத்தமாகத் தொகுத்துள்ளது.துருவங்களில் துவங்கும் இத்தொகுப்பு இயற்கைக்கும், விலங்குகளுக்கும் நடக்கும் தொடர் போராட்டமாக காட்சியளிக்கிறது. இயற்கையின் குரூரமான சீற்றத்த்தையும் தாண்டி விலங்குகளின் பிழைப்புத்திறன் நம்மை பிரமிக்க வைக்கிறது. இப்போராட்டம் வெற்றி தோல்வி என்ற போர் விதிகளைக் கொண்டது. ஆனால், மிகக் தந்திரமான இந்த ஆட்டத்தில், வெற்றிகளும் தோல்விகளும் நிரந்தமானவை அல்ல. புலப்பெயர்வுக்கு கொஞ்சம் தாமதமானலோ, தட்ப வெட்பம் சிறிது மாறினாலோ ஓர் இனத்தின் இருப்பையே இவ்வுலகிலிருந்து அழிக்கக் கூடிய வல்லமை கொண்டவை இப்போராட்டங்கள்.

ஒரு துருவத்திலிருந்து மற்றொன்றுக்கு (From Pole to Pole), மலைகள் (Mountains), நன்னீர் (Fresh Water), குகைகள்(Caves), பாலைவனங்கள்(Deserts),பனி உலகம்(Ice Worlds), பெரிய சமவெளிகள்(Great Plains), காடுகள் (Jungles), ஆழமற்ற கடல் பகுதி(Shallow Sea) , பருவக் காடுகள்(Seasonal Forests) மற்றும் ஆழமான கடற்பகுதிகள்(Ocean Deep) என்ற பகுதிகளைக் கொண்டது இத்தொகுப்பு.

வேட்டையாடும் விலங்குகளின் பல அரிய நடவடிக்கைகள் இத்தொகுப்பில் உள்ளன.

குளிர்காலத்தில் வறண்ட பாலைவனத்திலிருந்து , இமாலய மலையைத் தாண்டி இந்தியாவுக்குள் கோடிக்கணக்கான பறவைகள் நுழைகின்றன. இமாலய மலையை ஒரே வீச்சில் அனுமன் போல் தாண்ட முடியாது. குறிப்பாக சைபீரிய நாரைகள் பல நாட்கள் தொடர்ந்து போராடி இமாலய மலையைக் கடக்கின்றன. இரு விதமான எதிரிகளை சந்திக்கின்றன.

பறவைகள் தொடர்ந்து மலைகளைக் கடப்பதற்குத் தடையாக உயரமான மலைகளின் குறைந்த காற்றழுத்தம் இருக்கும். மேலும், பறவைகள் புலம்பெயரும் பருவத்தில், அவற்றை வேட்டையாட வல்லூறுகள் காத்திருக்கும். குறிப்பாக நடுவானத்தில் சிறு நாரைகளை மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வல்லூறு துரத்தி பிடிக்கும் காட்சி மிக அற்புதமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. நாரைகளின் கனத்தை தாங்க முடியாமல், வல்லூறுகள் அவற்றை வாயில் கவ்வியபடி நிலத்தை நோக்கி விழுகின்றன. பல சமயங்களில் இவை இரண்டுமே பிழைக்காது. இதைப் பார்த்த போது, சம்பந்தமேயில்லாமல் கோபோ அபே எழுதிய `The Women in Sand Dunes’புத்தகத்தில் வரும் – Without the threat of punishment there is no joy in flight – என்ற வரி ஞாபகத்துக்கு வந்தது. இவ்விரண்டு எதிரிகளையும் தாண்டியே பல பறவை இனங்கள் புது இடங்களுக்குப் பெயர்க்கின்றன.

இதேபோல், அடர்ந்த காட்டுப்பகுதியில் இருக்கும் வேட்டை நாய்கள் குழு, மான்களைத் துரத்திப் பிடிக்கும் காட்சியும் மிகப் பிரம்மாண்டமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. காட்டில் இருக்கும் வேட்டை நாய்களின் திட்டமிடும் பாணி நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். நான்கு, ஐந்து நாய்கள் மான்கள் கூட்டமாய் மேய்ந்துகொண்டிருக்கும் இடத்தை நோக்கி மெதுவாக நகரும். ஒரு குறிப்பிட்ட தூரத்தில், இந்த நாய்கள் திட்டமிட்டதுபோல் திசைக்கொன்றாக பிரிந்து, மான்கள் குழுவை வட்டமாக சுற்றிக்கொள்கின்றன. திடுக்கிடும் மான்கள் எத்திசையில் சென்றாலும், அங்கிருக்கும் நாய் அதில் ஒன்றை குறிவைத்து துரத்துகிறது. ஆங்காங்கே வெடிக்கும் கண்ணிவெடி போல், புது நாய்கள் திடீரெனத் தோன்றி எல்லா திசைகளிலிருந்தும் ஒரு மானைத் துரத்துகின்றன.

இதைப் படமாக்கும்போது, காட்டில் பல காலம் சுற்றித் திரிந்த ஆராய்ச்சியாளர்களுக்குக் கூட வேட்டை நாய்களின் இவ்வியூகத் திட்டம் தெரியாது.இவர்கள் முதல் முறையாக வேட்டை நாய்களின் துல்லியமான செயல்திட்டத்தை கண்டு வியந்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இந்நாய்களின் பழக்கங்களைப் பல மாதங்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து ஆவணமாகத் தொகுத்துள்ளனர்.

சீனாவில் கனத்த பனிக்கு நடுவே எந்த உணவும் கிடைக்காமல் இறந்த விலங்குகளை சாப்பிடும் சிறுத்தைகள், ஆறு மாதங்களாக பனி மலைக்கடியே புதைந்து கிடக்கும் துருவக் கரடிகள் என விலங்குகள் இயற்கையோடு இயைந்து நடத்தும் உயிர்ப்புக்கான போராட்டங்கள் நம் வாழ்வை அற்பமாக்குகிறது. துருவங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான பெங்க்வின்கள் கடுங்குளிரைச் சமாளிக்க ஒன்றோடு ஒன்று அணைத்துக்கொண்டு கதகதப்பு கொடுப்பதோடு மட்டுமல்லாது, தங்கள் குஞ்சுகளுக்குக் குளிராதபடி ஆறு மாதங்கள் காலடியில் வைத்து காப்பாற்றும் அதிசயமும் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படியாகப் பல விலங்குகளின் வியத்தகு பழக்கங்களும், வேட்டை முறைகளையும் திரைப்படத்தை விடவும் அதிக விறுவிறுப்புடன் தொகுத்துள்ளார்கள்.

இத்தொடரில் உள்ள தனித்தனி நிகழ்வுகள், பல பகுதியில் வாழும் விலங்குகள், அவற்றின் சூழல்கள், அந்தச் சூழலுக்கேற்ப மாறும் விலங்குகளின் பழக்கங்கள், உணவு முறை, வேட்டையாடும் நுட்பங்கள், இனப்பெருக்க நடவடிக்கைகள் என நமக்கு புதிதான ஓர் உலகத்துக்குக் கூட்டிச் செல்கிறது.

அழிந்து வரும் பல விலங்கினங்கள் பற்றிய செய்திகள் இத்தொகுப்பு மூலம் நமக்குக் கிடைக்கின்றன.

விலங்குகள் எப்போதும் ஒரே இடத்தில் தங்கும் எளிமையான வாழ்க்கையை இயற்கை அளிப்பதில்லை. பருவ மாற்றங்கள், பாதுகாப்புக் காரணங்கள், உணவு வேட்டை என விலங்குகள் அலைந்துகொண்டேயிருக்கின்றன; இயற்கையின் மாற்றங்களை அவை கண்களால் அளந்துகொண்டேயிருக்கின்றன. நிரந்தரமாகத் தங்கும் வசதியில்லாததால், சூழ்நிலைக்கேற்ப புதுப் பழக்கங்களைக் கொள்கின்றன.

அதே சமயம், இடம் பெயராமல் வாழும் விலங்குகளும் உண்டு. புலப்பெயர்வு செய்யாத விலங்குகள் குழுக்களாய் இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும். தங்கள் உடல்வாகு, மற்றும் பழக்கங்கள் காரணமாக ஒரே இடத்தில் பிறந்து, வளரும் இவற்றைச் சுற்றி எப்போதும் எதிரிகள் இருக்கும். தங்களின் அபரிதமான உடல் பலத்தினாலும், தந்திரமான வழிகளாலும் தங்களைக் காத்துக்கொள்ளமுடியும் என்றாலும், பல குழுக்கள் புலபெயர்வு செய்யமுடியாத காரணங்களால் அழிந்துகொண்டிருக்கின்றன.

டோடோ பறவை இதற்கு நல்ல உதாரணம். பருத்த வாத்தின் கனமான உடல் அமைப்பு கொண்ட இப்பறவை பத்தொன்பதாம் நூற்றாண்டில் அழிந்து விட்டது. மொரீஸியஸ் தீவில் வாழ்ந்து வந்த இவை தங்கள் கனமான சிறகுகள் காரணமாகப் பறக்க முடியாது- இடமாற்றம் கூட குறைவுதான்- அத்தீவிலிருந்த பன்றிகளுக்கு இரையாகி அழிந்தன.

அதே போல், பல விலங்குகள் பருவ மாற்றங்களாலும் அழிந்துகொண்டிருக்கின்றன. பறவைகள் சுலபமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாறுவது போல், பூனை வகைகளால் இடமாற முடிவதில்லை. சீனாவின் காட்டுப்பகுதியில் வாழும் சிறுத்தைகள் கடுங்குளிரினால் உணவு கிடைக்காமல் அழிந்துகொண்டிருக்கின்றன. இது ஒரு உதாரணம் மட்டுமே.

விலங்குகளின் அழிவுகளில் மனிதனின் பங்கு மிக அதிகம். சமச்சீரான தட்ப வெட்பம், செழிப்பான நிலங்கள் என விலங்குகள் வாழ்வதற்குத் தேவையானவை இருந்தும் இந்தியா போன்ற கிழக்காசிய நாடுகளில் பல இனங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன. பூனை வகைகளான புலி, சிங்கம், அரிய வகை மைனாக்கள், வல்லூறுகள் போன்ற விலங்குகளின் கணக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளில் பாதியாகிவிட்டது என டேவிட் அட்டன்பரோ புள்ளிவிபரங்களோடு கூறுகிறார்.

டேவிட் அட்டன்பரோவின் கூற்றுப்படி உலகின் பல மூலைகளில் வாழும் குழுக்கள் சராசரியாக பத்தாண்டுகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஏதேனும் ஒரு காரணங்களால் ஒவ்வொன்றாக அழிந்துகொண்டிருக்கின்றன.

அடுத்ததாக நம்மை வியப்பில் ஆழ்த்துவது இத்தொகுப்புகளை படம்பிடிக்க உதவிய தொழில்நுட்பம். ஹாலிவுட் படங்களில் உபயோகப்படுத்தும் இந்த அதிவேக காமிராக்கள், விலங்குகளுக்கு தெரியாதவாறு தொலைவிலிருந்து படம் பிடிக்கக்கூடிய திறமையும் கொண்டவை. உதாரணத்துக்கு, ஆயிரக்கணக்கான யானைகள் தண்ணீருக்காக நூறு நாட்கள் புலம் பெயர்ந்து செல்வதை வானிலிருந்து பத்து அதி நவீன காமிராக்களைக் கொண்டு படம் பிடித்துள்ளனர். அதே போல், வேட்டை நாயின் வேட்டையை பதிவு செய்ய, வேகமாகவும் தெளிவாகவும் காட்சியைப் பெரிதாக்கக்கூடிய இருபது காமிராக்களைக்கொண்டு ஹெலிகாப்டரிலிருந்து படம் பிடித்துள்ளனர்.

இமாலய மலையிலிருந்து நாரை, வல்லூறு போன்ற பறவைகள் பறப்பது, இரண்டும் ஒன்றாகப் பள்ளத்தாக்கில் விழுவது போன்ற படங்களை பதிவுசெய்த விதத்தைப் பார்த்தால், ஒளிப்பதிவாளரும் கூடவே சிறகடித்துப் பறந்தாரோ என்ற சந்தேகம் உண்டாகிறது! அவ்வளவு துல்லியத்துடன் எடுக்கப்பட்ட காமிரா கோணங்கள் எந்த திரைப்படக் காட்சியையும் விஞ்சி நிற்கின்றன.

இதைப் போல், திமிங்கலங்களின் புலப் பெயர்வை முதல்முறையாகத் தொகுத்துள்ளனர்.  வேகமாகத் திசைகளை மாற்றக்கூடிய திறன் படைத்த கடல் நாய்களைத் திமிங்கிலங்கள் வேட்டையாடும் காட்சி அதி நவீன தொழில்நுட்பத்துக்கு ஒரு சவாலாக இருந்ததாக காமிராக் குழு தெரிவிக்கிறது. இக் காட்சி இயற்கையியல் ஆவணங்களில் ஒரு மைல் கல் என்றும், இதன் மூலம் திமிங்கலங்களின் வேட்டை முறைகளைப் பற்றி முதல் முறையாக தெளிவாகத் தெரிய வந்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குழு விவரிக்கிறது.

அதே போல், இயற்கையின் பருவ மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறும் தாவரங்களைப் பல மாதங்கள் நிதானமாக பதிவு செய்து, நவீன முறையில் எடிட்டிங் செய்து இணைத்துள்ளனர். இந்த ஆவணப்படத்தை High Definition தொழில்நுட்பத்தில் எடுத்துள்ளதால், மிகத் துல்லியமான வித்தியாசங்களைக் கூடத் திரையில் சிரமமில்லாமல் பார்க்க முடிகிறது.

இந்த ஆவணப்படத்தைப் பார்த்த பின் என்னால் விலங்குகளை முன்போல் பார்க்க முடியவில்லை. நகரப் பகுதிகளில் நாம் அரிதாக கேட்கும் பறவை ஒலிகளின் திசையில் தானாக கவனம் குவிகிறது.மைனா, குருவி என என் கண்ணில் தென்பட்ட பறவைகளை அவை மறையும் வரை பார்த்துக்கொண்டேயிருந்தேன். ஆங்காங்கே பார்த்த விலங்குகளின் அவயங்கள், நாம் மறந்த வேறொரு உலகில் சிருஷ்டித்தது போல இருந்தது. விலங்குகளையும், இயற்கையையும் நாம் பார்க்கும் பார்வையை மாற்றிவிடும் அதிசயத்தை இத்தொகுப்பு நிகழ்த்திக்காட்டுகிறது.

கணந்தோறும் மாறி வரும் நகர வாழ்வின் சுகங்களுக்காகப் பலி கொடுத்த பலவற்றில் இவையும் அடங்கும். பத்து மணிநேரத்துக்கும் அதிகமாக ஓடும் இத்தொகுப்பு இப்படிப்பட்ட பல எண்ணங்களை நம் முகத்தில் அறைவது போல் உணர்த்துகிறது.

இன்று, டேவிட் அட்டன்பரோ விலங்குகளின் பாதுகாப்பும், இயற்கை வளங்களைக் காப்பதும் நம் வாழ்வுக்கு எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதை உலகெங்கிலும் வலியுறுத்தி வருகிறார். இன்று, சுயநலம் சார்ந்து கூட நமக்கு இது தேவையாகிறது.

இயற்கையின் அழகும், விலங்குகளின் செயற்பாடுகளும் நம் கவிமனதை விழித்தெழச் செய்தாலும் அவை மெளனமாய் உணர்த்தும் ரகசியம் நமக்குப் புரியாமலில்லை.

நாணயத்தின் இரு பக்கங்களைப் போல் , உயிர் வாழ்வின் ஆதாரமாகத் தந்திரமும் தாயுள்ளமும் ஒன்றை ஒன்று நிரப்பி இந்த ரகசியத்தை முழுமைப்படுத்துகின்றன. விலங்குகள் இயற்கையிடமிருந்து கற்றுக்கொண்ட இந்த ரகசியத்தை, மனித குலத்தின் அடிப்படைத் தத்துவமாக, நாமும் கற்றுக்கொண்டோம்.

வில்லைத் தொடர்ந்து வளைப்பது போல் விடாப்பிடியாக இந்த ரகசியத்தின் எல்லைகளைச் சோதித்துக்கொண்டேயிருக்கிறோம்.