மகரந்தம்

பால்வெளியில் ஒரு ”இசை” நிகழ்ச்சி

பிதாகரஸ் (Pythagoras) கோளங்களின் இசை குறித்து பேசினார்.  580-500 B.C.E (பொது ஆண்டின் துவக்கத்துக்கு முந்தைய) நூற்றாண்டுகளில்.  இன்று விண்மீன்களின் “இசை”, கோள்களைக் கண்டுபிடிக்க உதவுமா? ஜனவரி 4 ஆம் தேதி கெப்லர் (Kepler) எனும் பெயர் தாங்கிய செயற்கை கோள் மூலமாக ஐந்து புதிய கோள்களை கண்டுபிடித்ததாக அறிவித்த நாஸா அறிவியலாளர்கள் அதைத்தான் கூறினார்கள். ஏறக்குறைய அவ்வாறுதான். விண்மீன்களின் அதிர்வுகளின் அடிப்படையில் இந்த கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்ததாக. விண்-அதிர்வியல் (astero-seismology) என இந்த புதிய அறிவியல் புலத்தைக் குறிப்பிடுகிறார்கள்.  இந்த அதிர்வலைகளை ஆராய்ந்து புவி போன்ற கிரகங்களை கண்டுபிடிப்பதுடன் அவற்றை இரண்டாக வகைப்படுத்தவும் செய்கிறார்களாம். நீர் அதிகமாக இருக்கும் கிரகங்கள், பாறைகள் அதிகமாக இருக்கும் கிரகங்கள்…இந்த சுவாரசியமான விஷயம் குறித்த கட்டுரையை இங்கே காணலாம்

மதம், சரித்திரம், சர்ச்சை

சரித்திரம் என்றாலே சர்ச்சைகள்தான். தற்போதைய போப் பெனிடிக்ட் -16 தனது முந்தைய போப்பான போப் பயஸ்-12 க்குப் ’புனிதர்’ பட்டமளிக்கத் தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகிறார். இருவரும் ஜெர்மானியர் என்பது ஒருபுறம் இருக்கட்டும், பயஸ்-12 கதோலிக்கப் பேரவையில் இதாலியரின் ஏகபோக உரிமையை ஒழித்தவர் என்பதும், ஜெர்மன் மேலும் இதர யூரோப்பியருக்கு போப் ஸ்தானத்தைத் திறந்து விட இது உதவியது என்பதும் குறிப்பிடத் தக்கவை. காரணம் என்னவாக இருந்த போதும்,  இந்த ‘மேலேற்றுதலை’  உலகெங்கிலும் உள்ள யூத அமைப்புகளும் இரண்டாம் உலகப்போரின் மானுடப்பேரழிவு குறித்த ஆராய்ச்சியாளர்களும்  எதிர்க்கின்றனர். போப் பயஸ் -12 இரண்டாம் உலகப் போரின் போது பாப்பரசராக இருந்தவர். அப்போது அவர் மானுட நேயத்துடன் யூத அழிவுப் பிரச்சனையை அணுகத் தவறியவர் என்கிற குற்றச்சாட்டு மீண்டும் குரலுயர்கிறது. இது குறித்து டெபோரா தாவார்க் என்கிற வரலாற்றறிஞரின் பேட்டியுடனான கட்டுரையை இங்கே காணலாம்

“அவதார்” படம் குறித்து…

அவதார் படத்தின் பிரம்மாண்டத்தில், பிக்ஸல் பிக்ஸலாக வடிவமைக்கப்பட்ட அதன் கிராபிக் அசாத்தியத்தில் மயங்கிக் கிறங்கி இருப்பவர்களுக்கு ஒரு செய்தி. அத்திரைப்படத்தின் வேற்றுலக சிருஷ்டியில் முக்கிய பங்கு வகித்தவர் ஜோடி கோல்ட் (Jodie) எனும் தாவரவியலாளர். இவர்  கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின், ரிவர்சைட் வளாகத்தில்,  தாவர அறிவியல் துறை தலைவியும் கூட. வேற்றுக்கிரகமொன்றை முதன்முதலாக ஆராயும் ஒரு தாவரவியலாளர் எவ்வாறு நடந்து கொள்வார் எனும் உணர்ச்சிகளை இவரே அத்திரைப்பாத்திரங்களுக்கு சொல்லி கொடுத்தார். இத்திரைப்படத்தில் வரும் தாவரங்களுக்கு தாவரவியல் வகைப்படுத்தல் கூட செய்யப்பட்டதாம். இந்த சுவாரசியமான விஷயம் குறித்து அவருடனான ஒரு பேட்டி இங்கே

festival_of_booksவூக்ஸ் – ஒரு புதிய வாசிப்பு அனுபவம்

ஒரு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஐஸக் ஆஸிமாவ் “மாற்றம்” (Change) என்கிற தனது கட்டுரைத் தொகுப்பில் நம்முடைய படிக்கும் போக்கு எப்படி எல்லாம் மாறுபாடடையும், எப்படி மின்னணு ஊடகங்கள் புத்தகங்களை இருக்குமிடம் தெரியாமல் ஆக்கும்  என்பதையெல்லாம் எழுதி இறுதியில் என்னதான் வந்தாலும் புத்தகம் போலக் கச்சிதமாக வாசகனின் தனிமையுடன் இணைந்து அவன் மனதுக்குள் செல்லும் ஒரு ஊடகத்தைப் போலாகுமா மின்னணு ஊடகங்கள்,  அந்த இடத்தை அவை பிடித்து விட முடியுமா எனச் சந்தேகத்துடன் கேட்டு முடித்திருந்தார். ஆசிமாவ் இறந்த போது,  டிஜிடல் ஒலி நாடாக்கள் புழக்கத்திற்கு வந்து 5 ஆண்டுகளே ஆயிருந்தன.  1993இல், ஆசிமாவ் இறந்து ஒரு ஆண்டு கழித்தே முதல் ஈ-புத்தகம் (E-book, electronic book reader) தயாரானது என்பதால் அவர் தொலைக் காட்சி ஊடக அனுபவம் வழியே தான் எதிர்காலத்தை ஊகித்திருக்க வேண்டும்.  இன்றோ கதையாடலின் தன்மையை மின்னணு ஊடகங்களின் மல்டிமீடியாத்தன்மை வெகுவாக மாற்றிவருகிறது. இந்தப் பரிணாம வளர்ச்சியின் ஒரு முகம்தான் வூக்ஸ்(Vooks). ஒரு புது வகை நூல் வாசிப்பு அனுபவத்தை அளிக்கும் கம்பெனியான Vook ஷெர்லாக் ஹோம்ஸ் நாவலை அந்த காலத்தைக் குறித்து வரலாற்றாசிரியர்கள் தரும் தகவல்கள் வீடியோ வெட்டுத் துண்டுகள் ஆகியவற்றுடன் இணைத்து தருகின்றது. இந்த புதிய ஊடகத்தாவல் குறித்து இங்கே வாசிக்கலாம்.

இந்த ஊடக யுக்தியை பயன்படுத்தி ஸயிண்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகை அளித்துள்ள ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே காணுங்கள்: ஒரு புதிய வாசிப்பு அனுபவமாக இருக்கும்.

http://www.scientificamerican.com/article.cfm?id=powering-a-green-planet&sc=WR_20091027

hubble1வரலாறு, மூப்பு, அறிவியல்

வரலாற்றுப் பாடம் என்றாலே சலிப்பாயிருக்கும். ஐயாயிரம் ஆண்டு வரலாறு  என்றாலே கண்ணைக் கட்டுதே! நம் பிரபஞ்சத்தின் 12 பில்லியன் ஆண்டுகள் வரலாற்றை வெளிக்கொண்டு வரும் சில கண்டுபிடிப்புகள் நாஸாவால் நடத்தப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டி வழியே சென்றால் அங்கே காணும் கொலாஜ் (collage) இந்த 12 பில்லியன் ஆண்டுகளின் பிரபஞ்ச வரலாற்றை ஆராயப் பயன்படும் ஹப்பிள் வானோக்கி கண்ட சித்திரங்களின் தொகுப்பு இங்கே.

வயதாகும் போது ஒவ்வொரு நோயாக வருகிறது. சர்க்கரை வியாதி முதல், மறதியின் கொடுமை வரை.  ஒவ்வொரு வியாதியையும் தனித்தனியாக போராடிக்கொண்டிருந்திருக்கிறோம் இத்தனை நாளும். இப்போது சில முதுமைப் பொது வியாதிகளை ஒரு கணமாக பார்த்து அதற்கான மரபணுக்காரணிகளையும் கண்டடைந்து சிகிச்சை அளிக்கும் நோக்கம் பிரபலமாகி வருகிறது. அது குறித்த ஒரு கட்டுரை இங்கே