சமைலறையில் பூனை (டொனால்டு ஹாலுக்கு)
கரிய நீருக்கு பக்கமாய் நடந்து சென்ற சிறுவனைப் பற்றி
கேள்விப் பட்டதுண்டா? நான் இதற்கு மேல் சொல்ல மாட்டேன்.
மேலும் சில வருடங்கள் காத்திருப்போம். அது பதிவாக விரும்பியது.
சில வேளைகளில் ஒரு மனிதன் குளம் பக்கமாய் நடக்கிறான்; ஒரு கை
வெளியே நீண்டு அவனை உள்ளே இழுக்கும்.
சரியாக, எந்த ஒரு நோக்கமும்
இல்லை. குளம் தனியாக இருந்தது, அல்லது
கால்சியம் தேவைப்பட்டது, எலும்புகள் போதுமே. பிறகு என்ன நடந்தது?
அது இரவுக் காற்றைப் போன்றே சற்று சிறியது; அது மென்மையானது,
மெதுவாய் நகரும், இரவில் தன் சமையலறையில் கொதிகலத்தட்டுகளை நகர்த்தி, தீ பற்ற வைத்து
பூனைக்கு ஏதோ உணவு சமைக்கும் ஒரு முதியவளைப் போன்று பெருமூச்செறிந்து.
வீட்டுக்கு வடக்காய் பனிக்குவியல்கள்
வீட்டிலிருந்து ஆறு அடிகளில் திடீரென நிற்கும்
அந்த விரிந்த பெரும் பனிப்பரப்புகள் …
அத்தனை தொலைவாய் செல்லும் எண்ணங்கள்.
சிறுவன் மேல்நிலைப்பள்ளியில் இருந்து நிற்கிறான்;
அதற்கு மேல் புத்தகமே படிப்பதில்லை.
மகன் வீட்டுக்கு வருவதை நிப்பாட்டுகிறான்.
அம்மா உருளிக்கட்டையை கீழே வைத்து விடுகிறாள்;
பிறகு ரொட்டி செய்வதே இல்லை.
மனைவி கணவனை ஓர் இரவு விருந்தில் பார்க்கிறாள்
பிறகு அவனை நேசிப்பது இல்லை.
வைனில் இருந்து சக்தி வெளியேறும், தேவாலயத்திலிருந்து
வெளியேறுகையில் மதகுரு விழுகிறார்.
அது மேலும் நெருங்காது.
உள்ளே இருப்பது பின்னகரும், கரங்கள்
எதையும் தொடாது, பத்திரமாகும்.
அப்பா மகனுக்காக துக்கப்படுகிறார், பிணப்பெட்டி
உள்ள அறையை விட்டு நீங்க மாட்டார்.
அவர் மனைவியிடம் இருந்து திரும்புகிறார்; அவள் தனித்து தூங்குகிறாள்.
இரவெல்லாம் கடல் எழுந்து விழுகிறது, நிலவு
இணைவற்ற சுவர்க்கங்களின் ஊடாய் தனியாக செல்லும்.
ஷூவின் பெருவிரல் பகுதி தூசில்
மையங்கொண்டு சுழலும் …
கருப்பு அங்கி அணிந்த அம்மனிதன் திரும்புகிறான்.
குன்றில் இறங்கிச் செல்கிறான்.
அவன் ஏன் வந்தான் என்றோ, ஏன் திரும்பினான், ஏன் குன்றில் ஏறவில்லை என்றோ
எவருக்கும் தெரியாது
புதைந்த ரயில்
பனிச்சரிவில் புதைந்ததாய் சொல்லப்படும்
அந்த ரயிலைப் பற்றி சொல் – அது பனியா? – அது
கொலொரோடாவில், யாரும் அது நடந்ததை பார்க்கவில்லை.
எந்திரத்தில் இருந்து சீமைக்கள்ளி மர உச்சிகளின் ஊடாய் சன்னமாக சுருண்டு எழுந்த புகை இருந்தது, எந்திர ஒலிகளும் கூடவே.
வாசித்துக் கொண்டிருந்த மக்கள் இருந்தனர் – சிலர்
தொரோவிலிருந்து, சிலர் ஹென்ரி வார்ட் பீச்சரில் இருந்து.
மேலும் புகைத்தபடி, தலையை வெளியே நீட்டியபடி பொறியாளரும்.
என்ன நடந்திருக்கும் என்று வியக்கிறேன். மேனிலைப் பள்ளிக்கு
பின்னரா அல்லது நமக்கு ரெண்டு வயதிருக்கும் போதா?
நாம் இந்த குறுகின இடத்திற்குள் நுழைந்தோம், நமக்கு மேல்
அந்த ஒலியைக் கேட்டோம் – ரயில் போதுமான வேகத்தில் செல்ல மாட்டேன் என்கிறது.
பிறகு என்ன நடந்தது என்பது தெளிவாக இல்லை. நாம் இருவரும்
அங்கு ரயிலில் உட்கார்ந்து இருக்கிறோமா, விளக்குகள் தொடர காத்தபடி? அல்லது ரயில் நிஜமாகவே புதைந்து போனதா;
ஆகையால் இரவில் ஒரு பேய் ரயில் வெளிவந்து தொடர்ந்து போகிறது …
ரொபர்ட் ப்ளை (Robert Bly)
இந்த மாதம் 23-ஆம் தேதி எண்பத்து நாலு வயதைத் தொடும் ரொபர்ட் ப்ளை நார்வேஜிய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எழுத்தாளர். பின்-படிம இயக்கத்தின் முக்கியக் கவிஞர். பாப்லோ நெருடா, அந்தொனியோ மச்சாடோ போன்ற கவிஞர்களை ஆங்கிலத்துக்கு அறிமுகப்படுத்தி, எலியட், பௌண்ட், வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் ஆகியோரின் படிம இறுக்கத்தைக் கடந்து நேரடி கவிதைக்கு வரும்படி படைப்பாளிகளை ஊக்குவித்தவர். கட்டுரையாளர், இதழாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரும் கூட. வியட்நாம் போருக்கு எதிராக American Writers Against Vietnam War என்ற சமூக இயக்கத்தை உருவாக்கினவர்களுள் ஒருவர். கொல்கத்தாவுக்கு வந்து வங்காள ஹங்கிரியலிஸ்டு இயக்க கவிஞர்களுக்காகப் போராடினார். நாற்பதுக்கும் மேற்பட்ட கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். Maurice English Poetry award, Minnesota Book Award போன்ற குறிப்பிடத்தக்க விருதுகளை வென்றுள்ளார்.