முட்டாள்களின் அறைகள்

கதாபாத்திரங்கள் : அறைவாசி 1, அறைவாசி 2, வீட்டு உரிமையாளர், அசரீரியின் குரல்கள், புறாக்கள்

பாகம் 1

காட்சி 1: 1957இல் கட்டப்பட்ட 31 ஆம் நம்பர் வீடு 8வது சாலை (வீட்டில்)

அடர்ந்த இருளில் மூழ்கியிருக்கும் வீட்டின் முன்கதவு மெல்ல திறக்கப்படும் ஓசை எழுகிறது. கதவின் ஒலியைக் கடந்து உள்ளேயிருந்து விரிகிறது மஞ்சள் ஒளி. குறுகலான இரு பிளவுகளில் இருளும் ஒளியும் வியாபித்து படர கதவை அடைகிறான் ஒருவன்.

வீட்டு உரிமையாளன்: இன்று முதல் இந்த வீட்டின் இரண்டு அறைகளும் வாடகைக்கு விடப்படும். யார் வேண்டுமானாலும் முட்டாளாக மட்டுமே இருக்கக்கூடியவர்கள் அறைகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். உரிமைகள் வரையறுக்கப்பட்டு நிதானமாகத் திணிக்கப்படும். அதை மென்மையான முறையில் தினம் தினம் பருகி இன்புற மூன்று அறைகளுக்கும் இரண்டு முட்டாள்கள் வேண்டும். கோமாளித்தனமான முட்டாள்களாக இருந்தாலும் பரவாயில்லை. தாராளமாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்.

அசரீரி: அடே முட்டாளே! நீயும் ஒரு முட்டாளாக இருந்தவன் ஆயிற்றே. முட்டாள்தனத்தின் மீது ஏன் இத்துணை விருப்பமாக அலைகிறாய்?

வீ.உ: முட்டாள் என்றால் என்ன அவ்வளவு இழிவானதா? என்றாவது நீ ஒரு முட்டாளாக உன்னை அறிந்திருக்கிறாயா? சில தருணங்களில் முட்டாளாக இருந்தும், அது உன் இயல்பாக இருப்பினும் அந்த முட்டாள்தனங்களை வெளிக்காட்டாமல் அதை மறைக்க எத்துணை அபத்த சிரமங்களை அள்ளி அள்ளி மலம் தின்னுவது போல அருவருக்கத்தக்க முறையில் தின்று தீர்த்திருக்கிறாய்?

அசரீரி: அடே முட்டாளே! நியாயம் கற்பிக்கத் தொடங்கிவிட்டால், அடிவானமும் உன் அக்குளுக்குக் கீழ் என்று பிதற்றலாம்தான், அதை நம்ப வைக்க குரங்கு போல தாவி தாவி கயிறு தாண்டி பிழைப்பு நடத்தலாம்தான். குரங்கிலிருந்து தப்பிய பரிணாமத்தின் மீதங்களின் மீதங்களின் மீதம்தானே உன் பிண்டம்.

வீ.உ: ஆஆஆஆ. .  சலிப்பூட்டுகிறது உனது உரையாடல். எட்டி நில். வாய்ப்புக் கிடைத்தால்,கீழிருந்து மேலே பரவும் ஓர் உன்னதநிலையிலான அதிசயம் நிகழுமாயின் நான் கீழே பெய்யும் சிறுநீர் மேலே வந்து உன் முகத்தை நிரப்புமாக.

அசரீரி: முட்டாள்களின் சிறுநீர் சாக்கடையிலும் ஓடத் தகுதியில்லாதது. போய்த் தொலை.

வீ.உ: இன்று முதல் யாரும் எதிர்பார்த்திராத வகையிலான கழிவில் மூன்று அறைகளும் தைரியமாகத் தன்னை முட்டாள் என ஒப்புக் கொள்ளும் வீரர்களுக்கே தரப்படும். தன்னைப் பாதி முட்டாள் பாதி அறிவாளியென அடையாளப்படுத்த நினைக்கும் கோமாளிக்கு மூன்று மாதம் என் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் தண்டனைக்குப் பிறகே அறையில் படுக்க அனுமதியளிக்கப்படும். இந்த அறைகள் மிக நேர்மையான முட்டாளுக்கு மட்டுமே. வாருங்கள் வாருங்கள் . . .

(மீண்டும் இருள் மெல்ல கசிய மஞ்சள் ஒளியைக் கவ்விக் கொண்டு அவன் மறைகிறான் – கதவு மூடப்படுகிறது)

காட்சி 2: வீட்டின் அருகிலிருக்கும் மரம்

கதாபாத்திரம்: இரண்டு புறாக்கள், அறைவாசி 1, அசரீரியின் குரல்

காற்று பலமாக வீச பறவைகளின் ஒலிகள் விரிகின்றன. பதற்றம், நடுக்கம், ஓலம் என ஒலிகள் மர்மங்களைக் கக்கும் வகையிலான சூழல் தொடங்குகிறது. இரு புறாக்கள் மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கின்றன)

புறா 1: இந்த வீட்டின் பழமை அச்சுறுத்தலாக இருப்பதால், அவை நிலைத்திருக்கின்றன. அச்சம் மிக பாதுகாப்பானது.

புறா 2: அப்படியல்ல. அந்த வீட்டில் இருந்தவர்கள், இப்பொழுது இருப்பவர்கள் எல்லோரும் முட்டாளாக இருக்கப் பழகியவர்கள். முட்டாள்தனம் மிக இரகசியமானது. பல்லாண்டு காலமாய் பல நூற்றாண்டுகளாய் அதன் இரகசியம் ஆழப் பதிந்து ஓர் உன்னதத்தை எட்டிவிட்டது. இந்த வீட்டில் அந்த உன்னதம் ஓர் ஒளியாய் மறைக்கப்பட்டு தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்பட்டு பரிணமிக்கவும் படுகிறது.

புறா 1: அப்படியென்றால் இது உன்னத முட்டாள்தனத்தின் உச்சமா?

புறா 2: மரபார்ந்த அறிவின் வரையறைகளை அதன் ஒழுங்குகளை கரையான் போல அரித்துக் கொண்டிருப்பவை. எது அழகியல் எனக் கொண்டாடப்படுகிறதோ, அந்த அழகியலுக்கு அடியில் அதற்கு எதிராக வளர்ந்து நிற்பவை.

புறா 1: இந்த வீடு பொய் என்கிறாயா? இது மற்ற வீடுகள் போல ஒழுங்கின் அமைதியுடன் அல்லவா அமைக்கப்பட்டிருக்கிறது? பிறகென்ன புது அழகியல்?

புறா 2: இந்த வீட்டின் அசல் இதற்குக் கீழாக கரைந்துவிட்ட அபத்தம். இப்பொழுது நீ பார்ப்பது இத்துணை நூற்றாண்டுகளாய் மிக உன்னதமாக வளர்க்கப்பட்ட ஒழுங்குகளுக்கு அறிவாளித்தனங்களுக்கு எதிராக வளர்க்கப்பட்ட நேர்மையான முட்டாள்தனத்தின் அசல்.

புறா 1: இது பயங்கரமாக தெரிகிறது. என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இதன் தோற்றம் மிகவும் கொடூரமானதாக அச்சமூட்டும் வகையில் தனது பிம்பத்தை நெளிய விடுகிறதே.

புறா 2: அறிவாளியாக மட்டுமே இருக்க நினைக்கும், அதற்காகப் போராடும் அற்பத்தனங்களின் பழக்கமும் தேர்ந்த அபிவிருத்திகளும் முட்டாள்தனத்தைக் கொடுரமானதாகவும் அசிங்கமானதாகவும் தோற்றுவிக்கப்பட்டு, நசுக்கிப் புதைத்துவிட்டது. புதைந்து போனவை, வீச்சத்துடன் பாதியில் எரிந்து கருகிய பிணம் போல எழுந்து வந்தால், பயப்படத்தான் செய்வார்கள்.

புறா 1: முட்டாள் என்றால் அசிங்கமானவர்தானே?

புறா 2: அறுத்தெறி உன் நாக்கை அல்லது உன் நாக்கை நீண்டதாக வெளியே இழுத்து உன் குதத்தைத் துடைத்துக் கொள். உன் சாடலின் உபயோகம் யதார்த்தங்களின் நுண் இருத்தலை அபாயமானதாகவும் கேலியானதாகவும் மாற்றிவிடக்கூடும். அழகு என்பதன் அதீத மோகத்தின் மீதே படர துடிக்கும் உன் போன்ற அற்பங்களுக்கு அசிங்கம் என்று புறக்கணித்து இன்பம் கொள்ள சில அசிங்கங்களை உற்பத்தி செய்து கொள்கிறாய். அதன் மீது காரி உமிழ்ந்து கொண்டும் துடைத்துக் கொண்டும் பன்முக முகங்களைக் கழற்றி எறிந்து இன்புறுகிறாய்.

(அறையை வாடகைக்குக் கேட்டு ஒருவன் வருகிறான் – இவன் அறை எண் ஒன்றை வாடகைக்கு எடுக்கப் போகும் முதல் முட்டாள்)

அறைவாசி 1: நான்தான் அறை ஒன்றுக்குரிய முட்டாள். நான் வெகு சீக்கிரமே என் பயணத்தைத் தொடங்கிவிட்டேன். வரும் வழியில் நேர்த்தியாக இருந்த பாதையைச் சில சிறு சிறு உடைவுகளாக ஆக்கினால், ஒருவன் எப்படியெல்லாம் வழி தவறி தனது பயணத்தை நெடும் பயணமாக்கிக் கொள்வானோ அதைப் போல ஒரு கற்பனையில், காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து படுத்துறங்கி, பசியுணர்ந்து, நாயைப்போல மூச்சு வாங்க ஓடி வந்திருக்கிறேன்.

புறா 1: அட முட்டாளே. நீ உண்மையில் முட்டாள்தான். உன் பயணத்தை ஏன் நீயே சிரமப்படுத்திக் கொண்டாய்?

அறைவாசி 1: எனக்குத் தெரிந்து நான் மட்டுமே மிக எளிமையாக எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் முட்டாளாக இருக்க முடிந்தவன். அதனால் உன் அற்ப மிக சிறியதான மூளையைக் கொண்டு இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யாதே. நான் வலுக்கட்டாயமாக, உறங்க நினைப்பவன். அப்படி உறங்க நினைத்தே ஓரிரு நாட்கள் சரியான உறக்கம் இல்லாமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். தற்கொலை எனக்கு விடுதலையளிக்கும் என நம்புகிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் தற்கொலைக்கு முன் ஒரு கனவு காண்பேன். அந்தக் கனவில் என் அம்மாவும் அப்பாவும் பெரிய மரமாக வளர்ந்து, கிளைகளை வானம் நிரம்ப பரவவிட்டு, மேகத்தைக் கட்டியிழுக்க மிக உன்னதமாக உழைப்பார்கள். என் அப்பாவிடமிருந்து ஒரு குரல் வரும், “மகனே நம் பரம்பரையிலிருந்து எப்படியாவது நீதான் இந்த மேகத்தை ஒருமுறையாவது கட்டி நம் வீட்டின் முற்றத்தில் கட்டிப்போட வேண்டும். இல்லையேல் நீ ஒரு மரமாக இருந்துவிடு. இந்த மேகம் நமது உரிமைகள். இந்த மேகம் நமது ஆதாரம். நமது மொழி. நமது அடிப்படை. எப்பொழுதும் அது கரைந்து ஒழுகிவிடும்”.  ஆதலால் எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு. சிறுவயதில் மிகவும் உன்னத முட்டாள்தனமாக நான் கற்பித்துக் கொண்டவை. மேகத்தைக் கட்டி இழுக்க முடியாத அத்துணைப் பேரும் இப்படிக் காடு மேடெல்லாம் மரமாகி நிற்கிறார்கள் என. இப்பொழுது நீ அமர்ந்திருக்கும் மரம்கூட தோல்வியின் யதார்த்தம். அதன் வடிவம். ஒவ்வொரு கிளையும் இயலாமை, அதிலிருக்கும் ஒவ்வொரு இலைகளும் ஒளித்து வைக்கப்பட்டு இரகசியமாக வளர்க்கப்பட்ட அந்தந்த மனிதனின் முட்டாள்தனங்கள்.

புறாக்கள்: எப்படி அது முட்டாள்தனமாகக்கூடும்? உளறுகிறாய்.

அறைவாசி 1: புலம்புவதும், பிதற்றுவதும், அழுவதும், உளறுவதும், சத்தமாகச் சிரிப்பதும், குழந்தைத்தனமாக இருப்பதும் என இவற்றையெல்லாம் சில சமயங்களில் அறிவாளிகள் செய்ய தயங்குவார்கள். அது அவர்களின் பிம்பத்தின் மீது எச்சில் உமிழ்ந்துவிடும் எனப் பயந்து சாகிறார்கள். என் தலைமுறையில் மறுக்கப்பட்ட எத்துணையோ புலம்பல்களும், அழுகுரல்களும், பிதற்றல்களும், சுயத்தை இழந்த சிரிப்பொலிகளும் பாதாளத்தின் ஆழத்தில் யாரும் கண்டறிய முடியாத இருளில் ஒளித்து வைக்கப்பட்டிருகின்றன. அந்த ஆழத்திலிருந்து ஒவ்வொன்றாய் உலகின் மேற்பரப்பிற்கு வர துவங்கியிருக்கிறது. அதன் ஒரு தெறிப்புதான் நான்.

புறா 1: அப்படியென்றால் நீ இந்த வீட்டின் ஒன்றாவது முட்டாள் அறையில் தாராளமாகத் தங்கலாம். சென்று வா உன் மேகங்களை மீட்க, உனது மேகங்களை உன் வீட்டு முற்றத்தில் கட்ட முடியாத உன் பரம்பரையின் தோல்விகளைக் கொண்டாடி மகிழ்ந்து உனது முட்டாள்தனங்களைக் கட்டமைத்து உத்வேகம் கொள்.

அசரீரி: ஆமாம் ஆமாம். இந்த யுகம் அறிவாளிகளுக்குரியதல்ல. முட்டாள்களுக்கு. அவர்களின் உரிமைகளையும் இயல்புகளையும் வானத்தில் மிதக்கவிட, முதலில் மேகங்களை அகற்றுங்கள்.

(ஒளி குறைய அறைவாசி 1 கதவைத் திறந்து வீட்டினுள் போய்விடுகிறான்)

பாகம் 2

காட்சி 3: வீட்டிற்குள் அறைகளுக்கு நடுவே

கதாபாத்திரம்: அறைவாசி 1, வீட்டு உரிமையாளர்

(அறை ஒன்றின் அறைவாசியும் வீட்டின் உரிமையாளரும் அமர்ந்திருக்க, மங்கிய மஞ்சள் ஒளி பரவுகிறது)

வீ.உ: எப்பொழுது வந்தாய் மகனே?

அறைவாசி 1: நான் உனக்கு மகனா? எப்படி இது சாத்தியம்?

வீ.உ: நீ வந்து சேரக்கூடிய இலக்கு இந்த வீடுதான். இங்கிருந்து கொண்டு உனது போராட்டங்களைத் துவங்கலாம். அதற்கு சகல வசதிகளும் உள்ளன.

(அறைவாசி 1 கையில் தாள்களைச் சுருட்டி காற்று வீசுகிறான்)

அறைவாசி: உனது வீடு மிகவும் அலுப்பூட்டும் வகையில் கட்டியிருக்கிறாயே? எனக்கு வசதியாக இருக்குமா?

வீ.உ: இது ஆரம்பத்தில் இந்தச் சமூகத்தின் முன் ஏமாற்றப்பட்ட எனது மூதாதையர்கள் எழுப்பிய வீடு. இதன் இரகசியம் மிக உன்னதமானவை. என் மூத்த மகன் நீ. அண்மையில்தான் உன் பரம்பரை இங்கு வந்தேறிகளாக வந்திருந்திருந்தாலும், நீங்கள் அன்னியர்கள் என தேசத்தையும் நிலத்தையும் வீட்டையும் என்ன கூறு போட்டா வரையறுப்பது? அது அறிவாளிகளின் அரசியல். எல்லாம் உன் வீடு, எல்லாம் உன் தேசம். உலகம் உனக்குரியவை. அதோ அந்த அறை ஒன்றுதான் இனி உன் உலகத்தின் கடைசி இருக்கை. அதில் அமர்ந்துகொண்டு சுதந்திரமாக நீ சுழல வேண்டும்.

அறைவாசி 1: என் அறையின் சுவர்களில் சில வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தேன். தினம் ஒரு எழுத்து என்னுள் ஒரு கனவை உற்பத்தி செய்கிறது. அதன் உருவம் மிக கோரமாக இருக்கிறதே?

வீ.உ: அது முட்டாளுக்குரிய கனவுகள். முட்டாள்கள் அனுபவித்த அத்துணை வேதனைகளும் அங்கு வாசகங்களாக எழுதப்பட்டு அங்கீகரிக்க மறந்த தோல்விகளாகவும் வலிகளாகவும் மிதந்து கொண்டிருக்கின்றன. இனி நீ தான் அந்த அறையின் கனவுகளுக்குச் சொந்தக்காரன்.

அறைவாசி 1: எங்கள் பரம்பரை செய்த முதல் முட்டாள்தனம் எதுவென்று உனக்கு தெரியுமா? தெரிந்தால் அதை நியாயப்படுத்த எனக்குச் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

வீ.உ:  நீங்கள் தேசம் தேடி வந்தீர்கள். அதுவும் அடிமைகளாகக் கொண்டு வருவதையும் ஏற்றுக் கொண்டு அதிகாரங்களுக்கு உங்களை ஒப்படைத்திருந்தீர்கள். ஆகையால் காலம் முழுக்க முதலாளிகளின் மேல்தட்டு வாழ்க்கையின் கள்ளத்தனங்கள்தான் உங்களின் வாழ்வொழுக்கமாய் கொடுக்கப்பட்டன. நீங்களும் மகிழ்ச்சியுடன் அதிகாரத்தின் கட்டளைகளை முதுகில் சுமக்கப் பழகிக் கொண்டீர்கள். அன்றிலிருந்து நீங்கள் தேசம் மறுக்கப்பட்ட முட்டாள்களென மிக இரகசியமாக வளர்க்கப்பட்டீர்கள். முதன் முதலில் முதலாளிகளுக்கு எதிராக நீங்கள் கொடுத்த எதிர்குரல்தான் முதல் முட்டாள்தனம்.

அறைவாசி 1: அடிமையாய் இருப்பது முட்டாள்தனமா? அல்லது அடிமைத்தனத்தை எதிர்த்தது முட்டாள்தனமா? மிக கேவலமான ஒப்பீடாக அல்லவா இருக்கிறது?

வீ.உ: முதலில் இதுவரை நம்மை இறுக்கமாகப் பிடித்திருந்த பாரம்பரியமான அனைத்து மதிப்பீடுகளையும் உதறித் தள்ளிவிட்டு ஆண்டான் கொடுத்த மனப்பாவத்திலிருந்து விடுப்பட வேண்டும். இதுவே மிக வலுவான முட்டாள்தனமாகும். இதற்கு முன் இருந்த நம் சமூகத்தின் துரோகிகள் மிக அறிவாளியென நினைத்துக் கொண்டு முதலாளிகளுக்கு சாமரம் வீசி பிழைப்பதைச் சாமர்த்தியம் எனவும் அதுவே தொடர்ந்து இங்கு நிலைத்திருப்பதற்கு உத்தரவாதம் எனவும் கற்பித்திருக்கிறார்கள். அறிவாளிகள் இப்படித்தான் செய்வார்கள், அறிவார்ந்த சமூகம் அதிகாரத்தின் முன் எப்பொழுதும் அடிப்பணிந்து மட்டுமே போகும் எனவும் முன்னுதாரணமாகவும் இருந்திருப்பதால், அவர்களைப் பின் தொடராதவர்கள் முட்டாள்கள். முட்டாள்தனத்தைப் பற்றி விழிப்புணர்வும் தவறான போதனைகளும் இங்கிருந்துதான் தொடங்குகின்றன.

(அறைவாசி 1-இன் முகம் உக்கிரமடைகிறது, அவன் அணிந்திருந்த சட்டையைக் கிழித்தெறிந்து ஆவேசமாக சுற்றிலும் பார்க்கிறான்)

அறைவாசி 1: இங்கு முட்டாளுக்கும் தேசம் இல்லை, அறிவாளிக்கும் தேசம் இல்லை. ஆனால் முட்டாள்தனங்களை ஒடுக்கச் சட்டங்கள் விதிக்கப்படுகின்றன, கடுமையான தண்டனைகள் கொண்டு வரப்படுகின்றன. சாமர்த்தியத்தையும் அறிவாளித்தனத்தையும் உயர்ந்த துரோகங்கள் என பக்கத்திலேயே வைத்துக் கொண்டு குட்டி முதலாளிகளாக வளர்க்கப்படுகின்றன.

வீ.உ: இந்தத் தேசமும் உரிமையும் முட்டாள்களுக்கு இல்லையென முட்டாள்கள் மட்டுமே உணர முடியும். அறிவாளிகள் அறிவு தலத்தில் தனது திறமையான வார்த்தைகளின் மூலமும் வாதங்களின் மூலமும் தன் இருப்பைப் பாதுகாப்பானதாக வைத்துக் கொண்டு காலம் முழுக்க, பிழைக்கத் தெரியாதவர்களை “முட்டாள்’ எனக் கூப்பிட்டு, அதுவே முட்டாள்தனம் எனச் சொல்லி, அதை இழிவாக்கிவிட்டன.

அறைவாசி 1: அவர்களின் ஒழுங்குகளின் படி எல்லாமும் நடக்க வேண்டும். அவர்களின் ஒழுங்குகளும் சட்டங்களும் மீறப்படும்போது, அவையனைத்தையும் முட்டாள்தனம் எனப் பெயரிட்டு புறக்கணித்து உள்ளார்கள், நடுத்தரகர்கள். துரோகிகள்.

(வீட்டு உரிமையாளன், வீட்டின் சுவர் முழுக்க தொங்கிக் கொண்டிருந்த அறிவாளி என்ற எழுதப்பட்ட பெயர் பலகைகளைக் கழற்றி எறிகிறான். அறைவாசி 1 அதைத் தீயிட்டுக் கொளுத்துகிறான். தீயின் கொந்தளிப்பு பரவி உக்கிரமாகிறது)

காட்சி 4: வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றோரம்

கதாபாத்திரம்: புறாக்கள், அறைவாசி 2

கிணற்றின் மேல்கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் தூக்கு வாலி காற்றில் ஆடிக் கொண்டிருக்கிறது. இரண்டு புறாக்கள் கிணற்றின் ஓரச்சுவரில் அமர்ந்திருக்கின்றன. மழை இருட்டி, அந்த இடமே மெல்லிய இருளில் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றன.

புறா 1: இனி எதிரியின் குரல் ஒரு ஜனரஞ்சக பொருள் போல எங்கும் ஒலிக்கும். முட்டாள்கள் அங்கீகரிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

புறா 2: அங்கீகாரம்? யாருக்கு வேண்டும் அந்த அங்கீகாரம். அறிவாளிகளின் மோகத்தின் எச்சங்கள் அவை. அங்கீகாரம் எனப்தே அதிகார சக்திகள் கையில் வைத்துக் கொண்டு எளியவர்களைப் பயமுறுத்தும் ஆயுதம்.

புறா 1: அங்கீகாரம் தேவை இல்லை என்கிறாயா? முட்டாள்தனமாகப் பேசுகிறாய்.

புறா 2: ஆ ஆ ஆ இதுதான் இதுதானய்யா அறிவாளிகளின் கேலித்தனம். எது முட்டாள்தனம் என்று அவர்கள் வரையறுத்து, பிறரை முட்டாள் என்றார்களோ அவர்களின் உச்சக் கோட்பாடுகளின் கேலிக்குரல் இவை. அப்படியென்றால் தன்னை அறிவாளிகள் எனக்காட்டிக் கொள்பவர்கள்தான் அவர்களின் ஒழுங்குகள் படி முட்டாள்களை அடையாளம் காட்டுகிறார்கள். ரொம்பவும் வேடிக்கையாக இருக்கிறது.

புறா 1: அறிவாளிகளின் அங்கீகாரம் முட்டாள்களுக்குத் தேவை இல்லை. எதற்கெடுத்தாலும் மறுப்புத்தானா? இதுதான் முட்டாள்தனமா?

புறா 2: ஒரு சமூகமே தன் சகோதரர்களை மறுத்து மறுத்து அதிகாரத்தின் முன் அவர்கள் மண்டியிட கற்றுக் கொடுத்ததன் விளைவுதான் இது. மண்ணை முத்தம் கொடுத்தவன் அந்த மண்ணையே வாயில் கவ்வி முதலாளிகளின் மீது துப்புகிறான். இது எதிர்பாராத திருப்பம். தமிழ் சினிமாவில் வருகின்ற அபத்தமான திருப்பம் கிடையாது. துரோகங்களுக்கு எதிரானது.

காற்று மேலும் பலமாக வீச பறவைகளின் ஒலி இரைச்சலாகக் கேட்கிறது. தூரத்தில் ஒருவன் பாடிக் கொண்டே கிணற்றின் அருகில் வருகிறான்.

அறைவாசி 2: நான் முட்டாள்களின் அறையை வாடகைக்கு எடுக்க வந்திருக்கிறேன். ஏற்கனவே ஒரு முட்டாள் வந்துவிட்டதாகக் கேள்வியுற்றேன். நான் அனேகமாக அந்த இரண்டாவது முட்டாளாக இருக்க வேண்டும்.

புறா 2: நாங்கள் சொல்லும்வரை அது சாத்தியமாகாது. நீ உன் உரையாடலின் மூலம் நிருபிக்க வேண்டும். இது பரிசோதனை. முட்டாளாக இருப்பதற்கும் உயர்ந்த தகுதிகள் வேண்டும்.

புறா 1: ஆமாம் கண்டிப்பாக. முட்டாள்னா என்னா சும்மாவா?

அறைவாசி 2: ஆமாம் . .  நான் ஒரு சிறந்த முட்டாள். வரும் வழியில் நான் கண்ட சுவர்களின் மீதெல்லாம் மாட்டி வைக்கப்பட்டிருந்த அறிவிப்புகளையெல்லாம் அகற்றி சாலையில் எறிந்தேன். ஏனோ மேல்மட்டம் உருவாக்கிய மேலாதிக்க அறிவிப்புகள் எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. “குப்பைகளை இங்கே போடாதே” என்கிற அறிவிப்பு உயர்மட்ட அதிகாரத்தின் வன்முறையை மறைக்க கொண்டு வரப்பட்டது.

புறா 1: எப்படி அவ்வளவு துல்லியமாகச் சொல்கிறாய்? குப்பைகள் சுற்றுச்சூழலை நாசப்படுத்துவது உண்மைதானே?

அறைவாசி 2: குப்பைகளைப் போடாதே என்பார்கள் ஆனால் அவர்கள் வீசும் குப்பைகளாக எளியவர்களை வீதியில் வீசுகிறார்கள். குப்பைகள் குப்பைகளாக விடப்படுகின்றன. பிறகு வன்முறையாக மாறுகின்றன.

புறா 2: ஆமாம், வன்முறை அங்கிருந்துதான் தனது கால்களை ஆழமாக உள்ளே இழுத்துக் கொள்கின்றது.

அறைவாசி 2: குப்பைகளைப் போடாதே என்பார்கள் ஆனால் அவர்கள் வீசும் எச்சிலை நாம் அமிர்தமென பங்கிட்டுக் கொள்வோம். கேட்டால் சிறுபான்மையின் கதி எனப் போற்றிடுவோம். அமைதியாகிவிடுவோம். குப்பைகளைப் போடாதீர்கள் என்பார்கள் ஆனால் தினம் தினம் ஒரு குப்பை அலட்சியத்தால் வெளியே வீசப்படுவதைக் கண்டுகொள்ளமாட்டார்கள்.

புறா 2: நிச்சயமாக நீ முட்டாள்தான். உன் துணிச்சல் இங்கு வசதியாக நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களுக்கு ஒவ்வாதவை. அப்படியென்றால் நீ தைரியமான முட்டாள்தான். நீ இந்த வீட்டின் அறையில் தாராளமாகத் தங்கலாம். போய் வா.

கதவின் முன் ஒளி உதிக்க, கதவு திறக்கப்படுகிறது. அறைவாசி இரண்டு உள்ளே நுழைந்தவுடன் புறாக்கள் பறக்க, கதவு மூடப்படுகிறது.

காட்சி 5: வீடு

கதாபாத்திரம்: அறைவாசி 1, அறைவாசி 2, அசரீரியின் குரல்கள்

வீட்டின் இரு அறைகளுக்கும் நடுவே ஒரு மரம் முலைத்திருக்கிறது. அதன் மீது தெளிவான மஞ்சள் ஒளி படிந்துள்ளது. ஒரு வினோதமான ஒலியும் அவ்வப்போது மரத்திலிருந்து எழுகிறது. இரு அறைகளின் கதவுகள் மெல்லத் திறக்கின்றன.

அறைவாசி 1: வா நண்பா. எப்பொழுது வந்தாய்? உனக்காகவே காத்திருந்தேன்.

அறைவாசி 2: வந்தேன். வரும் வழியெல்லாம் உன் உருவத்தைக் கற்பனை செய்திருந்தேன், ஒர் அடர் மரம் போலவே நீ எனக்குக் காட்சியளித்தாய்.

அறைவாசி 1: இது ஒரு நூற்றாண்டின் அதிசயம் நண்பா. ஒரு முட்டாள் பரம்பரையின் கடைசி மனிதனும் இன்னொரு முட்டாள் பரம்பரையின் கடைசி மனிதனும் சந்தித்துக் கொள்ளும் ஓர் அரிய சந்தர்ப்பம் இதற்கு முன் எதிர்பார்க்கப்படாதது. அதிகார சக்திகள் இதை விரும்பமாட்டார்கள். படித்தவர்கள் மட்டுமே அறிவாளிகள் என்கிற கட்டுக்கோப்பான ஒரு மாயையைத் தோற்றுவித்தவர்கள் படிக்காதவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என நம்ப வைத்தார்கள்.

அறைவாசி 2: எது படிப்பு? இவர்கள் நினைப்பதா? வேடிக்கை வேடிக்கை.

அசரீரி: ஏய் முட்டாள்களே! எதை அழிக்க இப்படி ஒன்று கூடியிருக்கிறீர்கள்? உங்களின் வருகை ஒரு மிகப்பெரிய சலிப்பு.

அறைவாசி 1: முட்டாள்களின் மீதுள்ள உங்களின் அபத்தங்களையும் கரைகளையும் கேலிகளையும் மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் துடைத்தொழிக்க வந்துள்ளோம்.

-வீட்டின் மேற்கூரையிலிருந்து மரத்தின் மீது வெள்ளை நிறத்தில் ஒரு துணி விழுகிறது-

அறைவாசி 2: இதுதான் மிக இரகசியமாக நடைமுறை வாதங்களுக்கு எதிராக வளர்க்கப்பட்ட மரம். முட்டாள்தனத்தின் அடையாளம். இந்த மரம் பணக்காரர்களாலும் மேல்மட்ட படித்த மேதைகளாலும் ஒழுங்குகளின் தலைவர்களாலும் வாழத் தகுதியுடையதாகத் தன்னை நிறுவிக் கொண்ட மனிதர்களாலும் மிதிக்கப்பட்டவை. பிற மனிதர்களைச் சிறுமைப்படுத்தும் ஒரு கேலிக்கூத்தை நடத்திக் காட்டி, தாண்டவம் ஆடி, இது போன்ற கோடி மரங்களைப் புறக்கணித்தார்கள். அந்தப் புறக்கணிப்பின் ஒட்டு மொத்த வலிகளும் துடிப்புகளும் எரிமலை குழம்பு போல அவர்களுக்குக் கீழாக அவர்களுக்கு எதிராக ஊர்ந்துகொண்டிருக்கின்றன. எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களின் மீது ஒரு துரோகத்தின் காவியமாக தனது வரிகளை எழுதக்கூடும்.

-வெள்ளை துணி மீண்டும் அகற்றபடுகிறது, மரம் செழிப்பாக பழங்களாலும் இலைகளாலும் நிரம்பி தோற்றமளிக்கிறது-

காட்சி 6: வீட்டிற்கு வெளியிலுள்ள மரம், அடர்ந்த நிலையில் இருக்கிறது. இரு புறாக்கள் அமர்ந்துள்ளன.

கதாபாத்திரம்: இரண்டு புறாக்கள்

புறா 1: கடந்த பல நூற்றாண்டுகளாக மனிதர்களைக் கவனித்து வருகிறோம்.

புறா 2: திருத்திக் கொள்ளவும். குரங்கினத்தின் உயர்ந்த பரிணாமம்.

புறா 1: குரங்குகள் யாருக்கும் அடிமையாக இருந்ததாக எனக்கு நினைவில்லை.

புறா 2: அடிமைத்தனம் அவர்கள் புதியதாகக் கற்றுக் கொண்டவை. சொற்கள் அதீதமான அடையாள அரசியலை உருவாக்கியக் காலத்தில் புதிய புதிய புனைவுகளும் கற்பிதங்களும் அதன் மீது ஏற்றப்பட்டன. அது அதிசயம் கிடையாது. பிரிவினை என்கிற வசதி ஏற்படுத்திய ஒப்பீட்டு சௌகரியம்.

புறா 1: வசதியும் வாய்ப்பும் கொண்டவர்கள் தன்னை மேலாதிக்க சக்திகளாக நிறுவிக் கொண்டு அவர்களின் ஒழுங்குக்குள் அதன் ஒழுங்கை மீறாத எல்லாமும் அறிவாளித்தனம் என்றும் அதை மீறியதை முட்டாள்தனம் என்றும் சொல்லிக் கொண்டனர்.

புறா 2: ஆமாம். அங்கிருந்துதான் அடையாள அரசியல் தனது தீவிரமான புறக்கணிப்பை உருவாக்குகிறது.

புறா 1 : தோல்வியடைந்தவர்கள் எல்லாம் தனது முட்டாள்தனமான செயல்களால் இனம்காணப்பட்டார்களா?

புறா 2: தோல்வியென்பது கிடையாது. முட்டாள்தனம் என்பதும் கிடையாது. அதிகாரத்துடன் உடன்பட மறுத்தவர்களும் உடன்பட்டு தன் மீதான ஒடுக்குதல்களை ஏற்றுக் கொண்டு எளியவர்களுக்குத் துரோகம் இளைத்தவர்கள் என மட்டுமே இரு பிரிவினர் இருந்தனர்.

புறா 1: மேதைகள் ஊமையாக தனக்குக் கிடைத்த வசதியையும் வாய்ப்பையும் கொண்டு சிறுபான்மை உரிமைகளைப் பெறாத முடமாக இருந்ததே அறிவாளித்தனம் என இருந்துவிட்டனர். முட்டாளுக்குப் பிழைக்க வழியில்லை என அவர்களே சொல்லிக் கொண்டனர்.

புறா 2: படித்தவன் அறிவாளி படிக்காதவன் முட்டாள். படித்தவன் செய்பவை அறிவாளித்தனம் படிக்காதவன் செய்பவை முட்டாள்தனம். மிக அற்பமான மதிப்பீடுகள்

மேலிருந்து ஒவ்வொரு எழுத்துப் பலகையாகக் கீழே தொங்குகின்றன. சுற்றிலும் இருள் தனது மர்மமான வலையை வீசுகிறது. மஞ்சள் ஒளி எங்கும் பரவ வாசகங்கள் அசரீரியின் குரலால் வாசிக்கப்படுகின்றன.

-முட்டாள்தனம் மேலாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டவர்கள் வெளிப்படுத்தும் எதிர் சிந்தனை-

-முட்டாள்கள் அதிகாரத்தின் சொகுசுகளில் வாழ மறுத்த நேர்மைக்குரியவர்கள்-

-முட்டாள்தனம் போராளியின் அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகள்-