மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. உடலில் உள்ள செல்கள் தொடர்ந்து மாறி ஒரு சமயம் மொத்தமாக அனைத்துமே மாறி விடுகின்றன. போர்ஹே “பத்து வருடங்களுக்கு முன்னால் நான் எழுதியவற்றுக்கு என்னை பொறுப்பாக்காதீர்கள். அது வேறு ஆள்.” என்றாராம்.
‘சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, யாரோ எந்த வீட்டிலிருந்தோ எங்கேயோ போய் விட்டார்கள், ஏழரை நாட்டுச் சனி,’ என்பனவெல்லாம் எனக்குப் புரிந்ததேயில்லை. பாரதி சொன்னதில் நான் கடை பிடிக்கும் ஒரு விஷயம் ஜோதிடம் பற்றி அவர் கூறியது.
ஆனாலும் இட மாற்றங்களும், வீடு மாற்றங்களும் கிரகங்களைப் போல் எனக்கும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. வங்கி உத்யோகத்தில் இருக்கும் கஷ்டங்களில் இதுவும் ஒன்று. நாடோடி வாழ்க்கை. ஆனால் நாடோடிகளைப் போல் சுதந்திரமுமின்றி கூடுகளுக்கு அலைய வேண்டும்.
முதன் முதலாக மாற்றலாகி சேலம் போய் இருந்த நான்கு வருடங்களில் ஆறு வீடுகளுக்கு அட்வான்ஸ் கொடுத்து, வாடகையும் கொடுத்து இருக்கிறேன். முதல் வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டுக் குடி போக முடியவில்லை. இரண்டாவது வீட்டில் ஒரு நான்கு நாட்கள் கூட இல்லை. போய்க் குடியேறிய இரண்டாம் நாள் என் தாயாருக்கு உடல் நலம் மிகவும் குன்றி உடனே சென்னை திரும்ப வேண்டியானது.
அதன் பின் அதிகாரம் மிக்க ஒரு அரசுத் துறையாளர் வீட்டின் பின் போர்ஷனில் குடி போனோம். நான் கடைசியாகத் தேளைப் பார்த்த வீடு அதுதான். பூகோளமயமாக்கலில் காணாமல் போன ஜீவராசிகளில் ஒன்று நகர, மாநகரத் தேள்.
அந்த வீட்டில் இருக்கையில் என் திருமணம் நடந்தது. புது மருமகள் வருவதற்கு முன், வீட்டின் முன் போர்ஷன் காலியாகி, என் தாயார் முயற்சியால் நாங்கள் அங்கு குடி போய் விட்டோம். பக்கத்தில் வீட்டின் சொந்தக்காரர். தினமும் அரசு ஊழியர்கள் வருவார்கள், வீட்டு வேலை செய்ய. பூக்காரர்கள் மட்டும் பத்து பேர் வருவார்கள். ஆனால் அவர் அலுவலகத்திற்கு கிழிந்த சட்டையுடன் சைக்கிளில் போய் வருவார். அந்த வீட்டம்மாளுக்கு எங்களைப் பிடிக்கவில்லை. தம்பதியரிடையே பயங்கர சண்டைகள் நடக்கும். சண்டை என்றால் அந்தம்மாள் கத்துவார்கள். அவர் கெஞ்சுவார். இதைத் தவிர ‘ஆடட் அட்ராக்ஷன்’ அந்த வீட்டின் அரை வட்ட வடிவில் கண்ணாடி பதித்த சன்னல்களோடு மிக அழகாக இருக்கும் முன்னறையில் சில உருவங்கள், ஒலிகள் இரவில் வருவதாக என் அம்மா சொன்னார்கள். எங்கள் வீட்டு வேலைக்காரப் பெண்மணியும் அவ்வீட்டைப் பற்றிய கதைகளைச் சொல்லியிருக்கிறார். அந்த வீட்டம்மாள் அப்படி இருப்பதற்குக் காரணமும் அதுதான் என்று இருவரும் நிச்சயமாக நம்பினார்கள். ஆயினும் நாங்கள் அந்த வீட்டைக் காலி செய்ததற்குக் காரணம் அதுவல்ல. அவர்கள் வீட்டில் பொங்கிய சச்சரவுகளும் வெறுப்பும் வெளியிலும் கசிந்து எங்கள் போர்ஷனை நோக்கியும் வர ஆரம்பித்தன. என் வங்கியைச் சேர்ந்த முக்கிய வாடிக்கையாளர்கள் அந்த வீட்டைக் காலி செய்வது உசிதம் என்று அறிவுறுத்தினார்கள். எனவே நல்ல வேளையாக சிறிது ஞானக் கொள்முதலிலேயே வீடு மாறினோம்.
இப்போது வந்த வீடு புது வீடு. டவுனுக்குள் இருக்கும் வீடுதான். ஆனாலும் எதிரில் பெரிய வயல் வெளி. சொந்தக் காரர் செட்டியார். அவர் மனைவி வேறு ஜாதியைச் சேர்ந்தவர். மகள் திருமணம் ஆகி கணவனை விட்டுப் பிரிந்து வாழ்பவர். மகன். நல்லவர்கள். மரியாதை மிக்கவர்கள். ஆனால் பணத்தேவை அதிகம். அதனால் அடிக்கடி கடன் கேட்டார்கள். இந்தக் காரணத்திற்காக நாங்கள் மறுபடி வீடு மாறினோம்.
அது ஒரு வீடு கட்டும் மேஸ்திரியுடையது. அவர் இறந்து விட்டார். அவரது இரண்டு மகன்களும் வீட்டின் குறுக்கே சுவர் எழுப்பி இரண்டு முன் மற்றும் இரண்டு பின் போர்ஷன்களாக வைத்திருந்தனர். தொடர்ந்து ஆறு மாத இடைவெளியில் பின் வீட்டில் குடியேறிய குடும்பத்தின் குடும்பத் தலைவர்கள் இறந்து போனார்கள். இரண்டும் தற்கொலை என்று பின்பு தெரிய வந்தது.
மாற்றலில் சென்னை திரும்பியதும் சென்னையில் ஒரு உறவினரின் குவார்ட்டர்ஸில் மூன்று மாதங்கள் இருந்தோம். என் சொந்த ஃபிளாட்டுக்கு பின்பு சென்றோம். எண்ணி ஐந்தாம் வருடம் மாற்றலில் கல்கத்தா சென்றோம். சௌத்ரி என்பவரின் வீட்டில் ஒரு போர்ஷனில் மூன்று வருடங்கள் தங்கினோம். மீண்டும் சென்னை. சொந்த ஃபிளாட். மறுபடி ஐந்து வருடங்களில் வேலூர் சென்றோம். முதலில் ஒரு முதலியார்(பஸ் முதலாளி) வீட்டு மாடியில் தங்கினோம். வெலூர் வெயிலின் கொடுமையையெல்லாம் ஞாபகம் வைக்க முடியாதவாறு என் தாயார் மரணம் அங்கு சி.எம்.சி.யில்தான் நடந்தது. அவரது ஈமச் சடங்குகளும் மே மாதத்தில் வற்றிப் போன பாலாற்றங்கரையில்தான் நடந்தன. இரண்டாம் வருடம் வங்கியின் குவார்டர்ஸுக்குக் குடி பெயர்ந்தோம். நாயுடு ஒருவரின் வீடு. மிகப் பெரிய கனவான். என் மனைவி உடல் நலம் ஒரு சமயம் குன்றியபோது அந்த வீட்டம்மாளின் மடியில் படுக்க வைத்துக் கொண்டுதான் அவர்கள் காரில் மருத்துவரிடம் சென்றோம். பழைய ஆனால் பிரம்மாண்டமான வீடு. மழைக்கு ஒழுகும் ஓர் அறை இருந்தது. தண்ணீர் செலவானால் வீட்டின் லட்சுமி போய் விடுவாள் என்ற அச்சத்தில் எப்போதுமே தண்ணீர் சிக்கனமாகவே செலவழிப்பார்கள். அங்கிருந்து திருச்சி. கண் தெரியாத ஆனால் எமகாதகரான ஒரு பாலக்காட்டு பிராமணரின் வீட்டின் மேல் போர்ஷனில் குடி போனோம். எல்லா வசதிகளும் இருந்த அந்த வீட்டைக் காலி செய்து கோவை வரும்போது அதிகமாக ஒரு மாத வாடகையை அவர் அட்வான்ஸிலிருந்து எடுத்துக் கொண்டார். கோவையில் ஒரு நாகர்கோயில் பிராமணர் வீட்டின் மாடியில் குடி இருந்தோம். அங்குதான் என் மாமனார் திடீரென்று இற்ந்து போனார். பின்பு சென்னை ஃபிளாட்டை விற்று கோவையில் வாங்கிய ஃபிளாட்டில் குடியேறினோம். மீண்டும் சென்னை. நான்கு வருடங்கள் வெயிலும், புழுதியும் பிச்சு வாங்கிய வீட்டில் குடி இருந்தோம். இருந்த எல்லா வீடுகளுமே பெரிய விஸ்தாரமான வீடுகள்தான். ஆனால் புத்தகக் குவியல்களால் சிறியதாக ஆகிவிடுபவை. இப்போது மீண்டும் கோவையில் சொந்த ஃப்ளாட்டில் வாசம் ஆரம்பித்து இருக்கிறது.
என் தாயாருக்கு தூத்துக்குடியில் ஏழு வீடுகள் இருந்தன. அவற்றில் குடி இருந்தவர்களிடமிருந்து எப்போதேனும் வாடகையும், பெரும்பாலும் அஞ்சலட்டைகளும் வரும். “வேலை போய் விட்டது,” “தகப்பனார் காலமாகி விட்டார்,” “மகள் திருமணம் நிச்சயமாகி விட்டது,” என்று வித விதமான சேதிகள் அவற்றில் வரும். என் தகப்பனார் கர்ம சிரத்தையாக பதில் போடுவார். “வேறு வேலை சீக்கிரம் கிடைக்கட்டும்,” “எங்கள் மனமார்ந்த வருத்தங்கள்,” “நல்ல படி நடக்க எங்கள் வாழ்த்துகள்,” என்பன போன்ற வாசகங்களன்றி வாடகையைப் பற்றி ஒரு வரி இராது. ஆயினும் என் தகப்பனார் அகால மறைவுக்குப் பின் என் பெரியப்பா உதவியால் விற்கப் பட்ட அவ்வீடுகள், எங்களிடமிருந்து கைமாறியபின், பல விதங்களிலும் பொருளாதார ரீதியில் எங்களுக்குத் துணை நின்றன.
என் மாமனார் கட்டிய வீடு ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது. அதில் அவரது பெயர்ப் பலகையோ அல்லது வீட்டினுள் அவரது புகைப் படமோ இராது. அவரது மகள், மருமகன்(நான்), பேத்தியின் புகைப்படங்களே சுவர்களில் இருக்கும். வீட்டின் கீழ்ப்பகுதியில் குடியிருப்பவர் பொறுப்பில்தான் காம்பவுண்ட் சாவி, தண்ணீர் மோட்டார் ஸ்விட்ச் எல்லாம் இருக்கும். அவர் மரணத்தின் போது பத்து வருடங்களுக்கு முன் அங்கு குடியிருந்தவர் வந்து, சொந்தத் தகப்பனைப் பறிகொடுத்த பிள்ளை போல, கதறி அழுத போது நாங்கள் எல்லோரும் கலங்கிப் போனோம்.
-o00o-
என் வீட்டைத் தவிர என் பள்ளி நண்பன் பார்த்தசாரதியின் வீட்டில்தான் நான் அதிக நாட்கள் தங்கி இருக்கிறேன். சென்னையில் வசிக்காதபோது, சென்னை செல்லும் போதெல்லாம் அவன் வீட்டில் தங்குவேன். நான் சென்னை ஃபிளாட்டை விற்று விட்டு ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்திலிருந்து அவன் வீட்டுக்குத்தான் போனேன். இரவு ரயில். புறப்படும் முன், “சொந்த வீட்டை விற்பது கஷ்டம்தான்.
வருத்தமாகத்தான் இருக்கும்.” என்றான் ஆறுதலாக. “இல்லையே” என்று பதில் சொன்னேன். அதே போல் சுமார் நாலரை வருடங்கள் சென்னை வீட்டின் வெயிலில் தூசியில் குடி இருந்துவிட்டு இப்போது சொந்த வீட்டுக்குக் கோவை போனதும் “சொந்த வீட்டில் வாழ்கிற மகிழ்ச்சியில் எல்லாம் மறந்துவிடும்.” என்றான். அதற்கும் என் பதில் “இல்லையே,”தான். கோவையின் குளிர்ச்சியில் சென்னையில் பட்ட பாடு மறந்து விட்டது. சொந்த வீடு என்பதற்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
எது சொந்த வீடு. எந்த வீடு யாருக்கு சொந்தம். ஒரு விதத்தில் குடியிருப்பவருக்கு வீடு சொந்தம் என்பதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. அந்த வீட்டின் அனுகூலங்களையும், குறைபாடுகளையும் அன்றாடம் தவறாது அனுபவிப்பவர் என்பதால். மேலும் எல்லா வீடுகளுக்கும் அங்கு மிக அதிக நேரம் வசிக்கும், புழங்கும்
பெண்களே சொந்தக்காரர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.
எவ்வளவோ வீடுகளில் இருந்தாயிற்று, சொந்த வீடுகள் உட்பட.
எனினும் இப்போதும், என் கனவுகளில், வயது அற்ற நான் என் தற்போதைய, புதிய, பழைய, உறவு, நட்பு வட்ட மற்றும் தெரிந்த , தெரியாத மனிதர்களோடு உலவுவது சென்னையில் பிறந்ததிலிருந்து இருபத்தேழு வருடங்கள் வாழ்ந்த வாடகை வீட்டில்தான்.
“முட்டாள்கள் வீடுகளைக் கட்டுகிறார்கள்; அறிவாளிகள் அவற்றில் வசிக்கிறார்கள்” என்று ஒரு பழமொழி இருக்கிறதே. கு.அழகிரிசாமியின் “யாருக்கோ கட்டிய வீடு” கதையைப் படித்துப் பாருங்கள். கிரீஷ் காசரவள்ளியின் ‘மனே’ படத்தைப் பாருங்கள். சொந்த வீடு என்னும் சொப்பனங்கள் கலைந்து போகும். மழை தாக்காது, வெயில் நேரடியாக வேகாது நம்போன்று வாழ்பவர்கள் அதிருஷ்டசாலிகள். கோடானு கோடிப் பேர் ஒவ்வொரு மழையிலும் ‘பிரளய’த்தை சந்தித்து, வெயிலில் ‘கல்நார்’ கூரைகளின் கீழ் வெந்துபோய் வாழ்கிறார்கள். கோடிக் கணக்கான ரூபாய்களில் புரண்டு ஐந்து, ஆறு, ஏழு நட்சத்திர வாழ்க்கையை அனுபவிக்கும் அரசியல்வாதிகள் கண்களுக்கு அவர்கள் துயரம் எங்கே தெரியும்; அரசியல்வாதிகளுக்கு அவர்கள் வெறும் துடைத்துப் போடும் காகிதங்கள்தானே. பதிலுக்கு அவர்கள் துடைத்துப் போடும் காகிதம் வாக்குச் சீட்டு.
-o00o-
ஜே.க்ருஷ்ணமூர்த்தி ஒருவரின் அழைப்பின் பேரில் ஒரு முறை பம்பாய் சென்றிருக்கிறார். விமான நிலையத்திலேயே அவர்கள் இல்லை. ஒருவாறு அவர்கள் வீட்டை அடைந்த போது அக மகிழ்ந்து வரவேற்றிருக்கிறார்கள். வீட்டுத் தலைவரும் தலைவியும் சாப்பிடாமல் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். பள்ளி சென்றிருக்கும் தங்கள் மகளும் வந்து விடட்டும், க்ருஷ்ணமூர்த்தியோடு சேர்ந்து உணவருந்த அவள் பெரிதும் விரும்புவாள் என்று சொல்லி மேலும் காத்திருப்பு. இறுதியில் அந்தப் பெண் வந்ததும் அவளும் உற்சாகத்தோடு மேலும் பேசிக் கொண்டு இருந்திருக்கிறாள். நேரம் போனதைப் பற்றி, க்ருஷ்ணமூர்த்தி இன்னும் சாப்பிடவில்லை என்பது பற்றி, அவர்கள் உணரவேயில்லை. பேச்சின் ஊடே அச்சிறுமி “எவ்வளவோ ஊர்கள், நாடுகள் பார்த்திருக்கிறீர்கள், உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது” என்று கேட்டதும், க்ருஷ்ணமூர்த்தி, அவளிடம் அன்போடு: “இங்கேதான் (here)” என்றாராம்.
க்ருஷ்ண மூர்த்தி நிரந்தரமாக எங்கேயுமே தங்கியதில்லை. ஒரு வருடத்தில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து முதலிய நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒரு சில மாதங்கள் இருப்பதே வழக்கம். ஒரு முறை ஓர் இந்தியர் அவரிடம், “நீங்கள் ஓர் இந்தியர், அதனால் இந்தியாவில்தான் தங்க வேண்டும். அதுதான் சரி” என்றதும் அவர் சொன்ன பதில்: “என் வீடு இந்த உலகத்தில்” (“My home is in this world”).
நம்மனைவருக்குமே அப்படித்தான், இல்லையா?