மணம்

பீட்டர் மல்லாந்து படுத்திருந்தான். நேற்றுப்போல. இன்றும் அதே இடத்தில். அறையில் வேர்வை வாடை வீசியது. இரவு முழுவதும் காற்று அமுங்கிய புழுங்கிய மக்கிய வாடையில் அவள் அருகே நூர்ஜஹான் படுத்திருந்தாள். காலை. நேற்றும் இதே நேரத்தில்தான் அவன் எழுந்திருந்தான். அருகே அதே நூர்ஜஹான் படுத்திருந்தாள்.

நூர்ஜஹான் ஒரு சினிமா நடிகை. அல்லது சினிமா நடிகையாக விரும்பி சென்னை வந்து சந்தோஷமாக இருப்பவள். அவளுக்கு திருநெல்வேலியின் அப்பா சித்தி கொடுமை காரணமாக எவனிடமோ விற்கப்பட்டு அவனிடமிருந்து தப்பித்து சென்னையில் எவளோ ஒரு நண்பியை நம்பி வந்து நின்றவள். இந்த கதையைக் கூட மோகினிதான் சொன்னாள். மோகினி நூர்ஜஹானின் நண்பி. மோகினியின் புருஷன் அல்லது கீப் நூர்ஜஹானின் பின்னால் வந்துவிட்டான். அவனோடு கொஞ்ச நாள் இருந்தாள் நூர்ஜஹான். அவனுடைய மோட்டார் சைக்கிளை ரிப்பேர் பண்ண பீட்டரிடம் கொண்டுவந்து கொடுத்தான். அவனோடு நூர்ஜஹான் அடிக்கடி வந்தாள். என்னவோ நூர்ஜஹானுக்குப் பீட்டரைப் பிடித்துப்போய் விட்டது. சில படங்களில் பின்னால் டான்ஸ் ஆடும்வாய்ப்பு கூட மோகினியின் முன்னாள் புருஷனின் தயவால் கிடைத்துவிட்டது. ஆனால், நூர்ஜஹானுக்கு டான்ஸ் ஆடவோ அல்லது சினிமாவில் நடிக்கவோ ஆர்வமில்லாது போய் விட்டது. மோகினியின் புருஷனை விட்டுவிட்டு பீட்டரோடு வந்துவிட்டாள்.

’இன்னிக்கு நீ டான்ஸ் ஆட போகலையா?’ என்றான் பீட்டர்.

’இன்னிக்கு சான்ஸ் இல்லைய்யா.. மோகினி சொல்றேன்னாள்.’ என்று படித்தவாறே சொன்னாள் நூர்ஜஹான்

’செல்லடிச்சி கேளேன்!’ என்றவாறு எழுந்து பல் விளக்கப் போனான் பீட்டர்.

’அது கெடக்குது.’ என்றவாறு எழுந்து பாத்ரூமுக்குள் அவளும் நுழைந்து நின்றுகொண்டு இடித்துக்கொண்டே பல் விளக்கினாள்.

’டீ.. இப்படி இடிக்காதடி.’ என்றவாறு  பாத்ரூமுக்குள் போனான் பீட்டர்.

பீட்டர் இரண்டு மூன்று இடங்களில் மோட்டார் சைக்கிள் ரிப்பேர் செய்கிறான். எல்லா இடங்களும் அவன் உடம்பை ரிப்பேர் செய்கின்றன. பரங்கி மலையில் ஒரு கராஜ். சேத்துப்பட்டில் ஒரு கராஜ். அயனாவரத்திற்கு கூப்பிட்டு அனுப்பினால் போவான். வடபழனியில் கராஜின் பின்புறத்திலேயே அவன் படுத்துக்கொள்கிறான். கூட இப்போது நூர்ஜஹான்.

’நாயித்துக்கிழமை கூட உனக்கு பிரி கிடையாதுய்யா.  அவனைப்பாரு. நாயித்துக்கிழமைன்னா அவன் எஞ்சாய் பண்ண ஆரம்பிச்சிடுவான்.’ என்று நூர்ஜஹான் அவனோடு வந்து இழைந்தாள்.

இவள் எப்போதுமே இப்படித்தான். மோகினி புருஷனை பற்றி பேசினால், பீட்டருக்கு எரிச்சல் வரும் என்று நூர்ஜஹானுக்கு நிச்சயம் தெரியும். இருந்தாலும் அவள் விடமாட்டாள். விரலால் அவன் நெஞ்சில் கோலம் போட்டாள். மெல்ல விரல் அவனது லுங்கி மீது நின்றது. இடுப்பில் விளையாடியது. மெல்ல நடுவே டக் டக்கென்று விரல் நடந்தது.

அவளை உதறிவிட்டு எழுந்து நின்றான் பீட்டர். வெளியே இறங்கி பைக்கில் ஏறினான். சர்ரென்று நூர்ஜஹானின் முகம் மாறியது. கடுப்படித்தது. உர்ரென்று உள்ளே போனாள்.

”என்ன சாப்பிட வேணும்?” என்றான் பீட்டர்.

”உன் தலை.”

இனிமே என்ன கேட்டாலும் பதில் வராது என்று தெரியும். பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான். மூலைக்கடைக்கு சென்று தோசை பார்ஸல் பண்ணி எடுத்துக்கொண்டு திரும்பியபோது அம்மா ஞாபகம் வந்தது. கண்ணம்மா பேட்டைக்கு திரும்பினான்.

தெரு திரும்பும்போதே வீட்டிலிருந்து பொங்கல் வாடை வந்தது. அம்மாதான். பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான்.

”யம்மா!”

”வாடா! எங்க அந்த சிறுக்கி? துரத்தி விட்டுட்டியா?” என்றாள்.

லூர்து மேரிக்கு நூர்ஜஹான் எப்போதுமே சிறுக்கிதான். கடந்த ஆறு மாதங்களாக இதே கேள்வியை கேட்டுக்கொண்டிருக்கிறாள். அது “நல்லாயிருக்காளா,” என்பது மாதிரி கேள்வி.

”ஏண்டா தோசை வாங்கினியா?” என்றாள் லூர்து.

“உனக்குத்தான் வாங்கினேன்.” என்று கூசாமல் பொய் சொன்னான் பீட்டர்.

“ஏண்டா கூசாம பொய் சொல்ற?” என்றவாறு தோசை பொட்டலத்தை பிரித்துச் சாப்பிட்டாள் லூர்து.

”நல்லாத்தான் இருக்கு. மூலைக்கடையா?”

”எங்க அப்பன்?”

“அவனா.. ஊர்மேயப் போயிருக்கான். நேத்து காத்தால போனவன். இன்னும் காணலை.” என்றாள் லூர்து.

பீட்டரின் அப்பா யார் என்று தெரியாது. ஆனால் லூர்துவின் கணவனைத்தான் அப்பன் என்று பீட்டர் சொன்னான். லூர்துவின் கணவன் மாற்றாந்தந்தை என்றும் கிடையாது. அவன் ஊர் மேய்பவனும் கிடையாது. லாரியில் கிளீனர் வேலை. முன்பு லாரி டிரைவராக இருந்தவன். கிளீனர் வேலை என்பது கொஞ்சம் தொந்தரவு இல்லாத வேலை அவனுக்கு. லாரி ஓட்டும் டென்ஷன் இல்லை. டிரைவர் தூங்காமல் இருக்கப் பேச வயசானவனாய் அருகே கிளீனர் வேலை ஸ்தானம்.

”வயசாயிடுச்சில்ல. சும்மா கிடக்கலாம்ல?” என்றான் பீட்டர்.

“அவனுக்கும் பொழுது போகணும்ல.” என்றாள் லூர்து.

வெளியே பூச்செடிகளை வைத்திருந்தாள் லூர்து. “ஏம்மா இந்த தெருவுலயே நீ ஒருத்திதான் பூ வளர்க்கிற!” என்றான் பீட்டர்.

”ஆமா இருந்துட்டு போவுது.. உன்னை என்னா பண்ணிச்சி?” என்றாள் லூர்து.

”நீ எனக்கு பூச்செடி கொடுத்து வளக்கச்சொல்லுவ.” என்றான் பீட்டர்.

”ஆமடா.. அதுக்கு அப்பப்ப தண்ணி ஊத்தணும்டா.. “ என்றாள் லூர்து.

”வேற வேலையில்லை.”

“இந்தா அவளுக்கும் சேத்து வச்சிருக்கேன்.” என்று பொங்கல் பொட்டலங்களைத் தந்தாள் லூர்து.

”ஒரு பைல போட்டுக்குடு.” என்றான்.

அருகே ஒரு அங்காள பரமேஸ்வரி படம் ஊதுபத்தி பூவுடன் இருந்தது.

“அப்பன் ஒன்னும் சொல்றதில்லையா?” என்றான் பீட்டர். அவன் கண் போன இடத்தை பார்த்த லூர்து, “அதுவா.. சொல்லி அலுத்து உட்டாச்சு.” என்றாள்.

”செரி குடு.” என்று பொங்கல் பையை வாங்கிக்கொண்டு கிளம்பினான் பீட்டர்.

லூர்து அவனை அழைத்துக்கொண்டு அம்மன் கோவிலுக்கு போயிருக்கிறாள். ஊதுபத்தி மணமும் விபூதி பூ மணங்களும் வினோதமாக அவனைச் சுற்றி சூழ்ந்து கொள்ளும். காவி உடை பிச்சைக்காரர்கள், மூத்திரம் போகும் மாடு, அங்கங்கு தண்ணீர் தேங்கி நிற்கும் சிறு குட்டைகள், மொட்டைபோட்ட சிறுவர்கள் என்று கலந்துகட்டிய கலவையாக இருக்கும். அப்பன் கூப்பிட்டுக்கொண்டு போகும் சர்ச்சில் இருக்கும் ஒழுங்குமுறைக்கு நேர் எதிராக இருக்கும். அப்பனுக்கும் கொஞ்ச நாள்தான். பிறகு அவனும் விட்டுவிட்டான். அவனும் நூர்ஜஹானும் ஒரு முறை அம்மன் கோவில் போயிருக்கிறார்கள். “யேய் இதுக்குள்ள போய் பாக்கணும்யா. எஙகூர்ல நான் உள்ள எப்படி இருக்கும்னே பாத்ததில்லை.” என்றாள். ஒரு டான்ஸுக்கு இவன் அவளைக் கொண்டு போய் விடும்போது அருகே அந்த கோவில் இருந்தது.

அவனும் அவளும் உள்ளே சென்றபோது அவள் செருப்புக்களை கழட்டிப்போட்டுவிட்டு உள்ளே சென்றாள். காலை மடித்து போட்டு உட்கார்ந்து மற்றொரு காலில் ஒரு தலை.

பீட்டர் அந்த முகத்தை பார்க்கும்போது அருகே யாரோ, தன்னுடனிருந்த சிறுவனிடம் ”காலைப்பார்த்து கும்பிடு” என்று சொன்னார்கள்.

காலைப்பார்த்தான். தலை மீது இருந்த கால்.

அருகே சாய்ந்து உட்கார்ந்திருந்த காவி உடை பிச்சைக்காரன், “உன் அம்மா மாதிரி இருக்கா?” என்றான். திடுக்கிட்டு அவனை பார்த்தான் பீட்டர். அவனோ மோனத்தில் கண்கள் செருகி மல்லாந்து பார்த்திருந்தான்.

”வா போலாம்.” என்றான் பீட்டர்.

“இருய்யா.”

“வா போலாம்!” என்று அவசரமாக அவளை இழுத்துக்கொண்டு வெளியே வந்தான் பீட்டர். அதுதான் அவன் கடைசியாக அந்த கோவிலுக்குப் போனது.

பைபாஸ் ரோடில் வந்துகொண்டிருந்தபோது எதிரே ஒரு லாரி கிறுக்குத்தனமாக ஓடிக்கொண்டிருந்தது. பச்சையும் சிவப்புமாக தடதடவென்று கட்டுப்பாடில்லாமல் எதிர்த்து ஓடியது. பைக்கை வளைத்து திருப்பி, “டே, சாவு கிராக்கி!” என்று கத்தினான். அந்த வண்டி நிற்கவில்லை. அது போய்விட்டது. லாரி போனதும் திரும்பிப்பார்த்தபோதுதான், ஏன் அது தலைதெறிக்க ஓடியது என்பது தெரிந்தது. எதிரில் ஒரு கார் கவிழ்ந்து கிடந்தது. இடித்துவிட்டு ஓடியிருக்கிறான். அருகே யாரும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை காலையில் எவனுக்கு வேலை? அருகே சென்று வண்டியை நிறுத்தினான். உள்ளேயிருந்து புகை வந்தது. ஸ்டீயரிங் வீல் மேலே அழுந்த தலைகீழாக மயக்கமாக ஒரு பெண் கிடந்தாள். கதவை பிய்க்க முயன்றான். சற்று நேரத்தில் கார் எரியப்போகிறது. பலம் கொண்ட மட்டும் கதவை இழுத்தான். கதவு எரிய ஆரம்பித்திருந்தது. கொதிக்க ஆரம்பித்தது.

இன்னும் வலிமையாக இழுத்தான். அங்கே கூட்டம் சேர ஆரம்பித்தது. “அது வராதுங்கண்ணே. விட்டுருங்க!” என்றான் ஒருவன். கதவை ஓங்கி ஒரு உதை விட்டான். “நமக்கு ஏன்னே வம்பு!” என்றவாறு இரண்டு பேர் அங்கிருந்து நகர்ந்தனர். “போலீஸுக்குப் போன் பண்ணுய்யா!” என்றான் ஒருவன். ”மவனே செத்த.” என்றவாறு கதவை இழுத்தான் பீட்டர். கதவு திறந்துகொண்டது. மயங்கிக்கிடந்த அந்த பெண்ணை இழுத்து வெளியே போட்டான் பீட்டர். இழுத்த வேகத்தில் கார் நிலைகுலைந்து அவன் மீதே விழுந்தது. விழுவதை உணர்ந்த பீட்டர் அவளை வெளியே தள்ளினான். படீரென்று கார் டாங்கி வெடித்த வெளிச்சம். அதுதான் அவன் ஞாபகத்தில் இருந்த விஷயம்.

அவன் கண் விழித்து பார்க்கும்போது ஒரு மருத்துவமனையில் இருந்தான். ஒரு நர்ஸ் அவனை குனிந்து பார்த்துக்கொண்டிருந்தாள். “முழிச்சாச்சா,” என்றாள்.

சிரிக்க முயன்றான். கன்னங்களில் வலித்தது.

”உங்க பையன் முழிச்சிட்டான்.” என்று வெளியே கூறினாள் நர்ஸ்.

“ஏண்டா பாழாப்போறவனே.” என்றவாறு லூர்து உள்ளே வந்தாள். பின்னாலேயே நூர்ஜஹானும் வந்தாள்.

“ஏ கிழவி. கத்துனியின்னா டாக்டருக்கு தெரிஞ்சிடும். அப்புறம் நாந்தான் டோஸ் வாங்கணும். மெல்லமா வச்சிக்க.” என்றவாறு நர்ஸ் வெளியே போனாள்.

“உனக்கென்னத்துக்குடா ஊர்பட்ட வேலை? உன்னிய யாராவது கேட்டாங்களா… அய்யா சாமி ஹெல்ப் பண்ணுங்கன்னு? எதுக்குடா உனக்கு இதெல்லாம்.” என்று அழுதாள் லூர்து.

“யோவ்… தப்பிச்ச நீ.. கை கால் போயிருக்கும். தெரியுமில்ல.” என்றாள் நூர்ஜஹான்.

“மூணுநாளா முச்சு பேச்சில்லாம கிடந்தியே ராசா.” என்றாள் லூர்து.

“அப்படியா,” என்று சொல்ல முயன்றான் பீட்டர். முடியவில்லை.

”ஏய் ஏய் டாக்டர் வரார்.. ஓடு நீ,” என்று நர்ஸ் லூர்துவைத் துரத்தினாள்.

அதற்குள் டாக்டர் வந்துவிட்டார். “நீதான் பீட்டரோட அம்மாவா? ரொம்ப நல்ல பையனைப் பெத்திருக்க. ஒருத்தர் உயிரை காப்பாத்திருக்காம்மா உம்மவன்.” என்றார் டாக்டர்.

”அவன் கை காலை காப்பாத்திருக்கீங்களே டாகடர்!” என்றாள் லூர்து.

”அவன் கெட்டி.. நீ ஒண்ணும் கவலைப்படாத.” என்றார் டாக்டர்.

-o00o-

மாலையில் ஒரு போலீஸ்காரர் வந்தார். தட்டிக்கொடுத்தார். “மெட்ராஸில அப்பப்ப நல்லவனுங்களை பாக்கமுடியுதுய்யா.” என்றார். நல்ல போலீஸ்காரரை பார்ப்பது பற்றி அவன் நினைத்தான். ”காலையில டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. டிபார்ட்மெண்டே உன் செலவை எடுத்துக்கிச்சி.” என்றார்.

-o00o-

மீண்டும் அவன் கராஜுக்கு வந்தபோது அவனை அவன் நண்பர்கள் பார்க்க வந்தார்கள். மச்சான் தப்பிச்சடா என்றார்கள். மோகினி வந்தாள். கிளம்பினாள். இரவு கவிந்தது.

நூர்ஜஹான் கதவை மூடினாள். மேலே விளக்கெரிந்துகொண்டிருந்தது. அவனருகே வந்து படுத்தாள். ரவிக்கையை கழட்டினாள். அவனோடு இழைந்தாள். அவன் அவளை அணைத்தான். அவள் மேலே ஏறி அவன் மீது உட்கார்ந்தாள். இறங்கினாள். மேலே நிமிர்ந்து பார்த்தான். விளக்கிலிருந்து பூவாய் கொட்டியது. விபூதி மணமும், பூ மணமும், சந்தன மணமும் இறங்கியது.