பண்பாட்டைப் பேசுதல் – ஒரு பார்வை

‘சுமைதாங்கி, எறங்கு!’ கண்டக்டரின் குரல் கணீரென்று ஒலிக்கிறது. ஜன்னலோரமாய் தேடிப்பார்த்தேன். அந்த சுமைதாங்கி கல்லை காணவில்லை. 25 வருஷங்களுக்கு முன்னர் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் பல நாட்கள் பார்த்ததுண்டு. மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி போகும் சாலையில் கொத்தத்தெரு தாண்டி சற்றே மேடான பகுதியில் இருந்தது அந்த சுமைதாங்கிக் கல். சாலையோரமாய் ஆறடி உயரத்தில் ஆஜானுபாவாய் வீற்றிருக்கும். நட்டு வைக்கப்பட்டிருக்கும் இரண்டு கருங்கல்களின் மேல் இன்னொரு ஆறடி நீளமுள்ள கருங்கல் கிடத்தப்பட்டிருக்கும். காலை நேரத்தில் சுமைதாங்கியின் மீது கூடைக்காரம்மா இறங்கி வைக்கும் காய்கறிக்கூடையும் அதிலிருந்து வெளிவரும் கீரை வாசமும் இன்னும் நினைவில் இருக்கிறது. பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது சுமைதாங்கியின் கீழே சிறுவர்கள் கோலிக்குண்டு விளையாடிக்கொண்டிருப்பதை பார்கக முடியும். தொண்ணுறுகளில் கல்லுரிக்கு செல்லும் போது சுமைதாங்கியின் ஒரு கல் சரிந்து கிடந்ததைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. இப்போது அங்கே எந்தக் கல்லும் இல்லை. முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனாலும் சுமைதாங்கி ஸ்டாப்பிங் என்னும் பெயர் மட்டும் மாறவில்லை.

சுமை தாங்கி, இனி என் வாழ்க்கையில் குறுக்கிடப்போவதில்லை. நினைவடுக்குகளில் இன்னும் மிச்சமிருக்கும் பால்ய காலத்து நினைவுகளை சுமந்து நின்ற அந்தக் கல்லை இனி பார்க்க முடியாது என்பதை நினைக்கும்போது ஏனோ ஒரு பதட்டம் ஏற்படுகிறது. வி.எஸ். நைபாலுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். பால்ய வாழ்க்கையின் மிச்சங்களை தேடி இந்தியாவுக்கு வந்த நைபால், ஏமாற்றத்தாலும், இந்தியர்களின் அலட்சிய மனோபாவத்தால் காயம்பட்டு வெளிப்படுத்தும் உணர்வுகள், நம்மையும் ரணப்படுத்துகின்றன. பேரழிவும், பெரும் புரட்சியும் எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப் போட்டுவிடுகின்றன. அவரது வார்த்தைகளிலேயே சொல்வதென்றால், பிரிட்டிஷ் காலானியாதிக்கத்துக்கு எதிரான சுதந்திரப் போராட்டம், அவர்களது வருகைக்கு முன்னால் இந்தியா சந்தித்த பேரழிவுகளை மறைத்துவிட்டது.

எழுதுவதும், படிப்பதும் என்ற வி.எஸ். நைபாலின் கட்டுரையும் மிஷனரிகளின் செயல்பாடுகளைப் பற்றிய சீதாராம் கோயலின் கட்டுரையும் இந்தத் தொகுப்பில் முக்கியமானவை, விவாதத்துக்குரியவை. பாரதத்தின் பண்பாடு, இன்று ஒரு சிக்கலான சூழலில் இருக்கிறது. பண்பாட்டைப் பேணுவது, பண்பாட்டைக் காப்பது என்கிற தளங்களில் முன்னேறி, விவாதிக்குமளவுக்கு இந்து சமூகத்திற்கு இன்னும் நிஜமான சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. குறைந்தபட்சம் பண்பாட்டைப் பேசுவது என்கிற கருத்தையாவது முன்வைக்கலாம் என்கிற நம்பிக்கையைத்தான் இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் விதைத்திருக்கின்றன.

கோயில் பற்றி பேசுவது எப்போதும் சுவாரசியமான விஷயம். கோயில், வெறும் வழிபாட்டுத் தலம் அல்ல. ஒரு சமூகத்தின் அரசியல்,நிர்வாகம், வரலாறு, கலை, பண்பாடு ஆகியவற்றை சுமந்து நிற்கும் காலப் பெட்டகம். கோயிலும், கோயிலைச் சுற்றிய மாட வீதிகளும் அதன் கட்டமைப்புகளும் சமூகத்தில் ஆன்மீகத்திற்கு இருந்த உன்னத நிலையை பளிச்சென்று சொல்லிவிடுகின்றன. இந்து சமூகத்தை வேரோடு அழிப்பதற்கான செயல்திட்டம், அதிகார பீடங்களாக இருக்கும் கோயில்களை அழிப்பதில் இருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும் என்பது கைபர் கணவாயில் உள்நுழைவதிலேயே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது.

தன்னை ஒரு இஸ்லாமியத் தலைவனாகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த கஞ்சமகா பிரபுவான ஔரங்கசீப்பின் கண்ணில் பட்டது கோயில்கள்தான். கோயில்களை இடித்து தரைமட்டமாக்கிவிட்டால் ஒரு சமூகத்தையே நிர்மூலமாக்கிவிடலாம் என்பது அவருக்குத் தெரிந்தது. கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, விலைமதிப்பற்ற பொருட்களின் கருவூலமும் கூட என்பதையும் புரிந்து கொண்டார். ஒரு துண்டு ஓலையில், ஓரிரு வரிகளில் ஜெகன்நாதர் கோயிலை இடிக்க உத்தரவு பறந்தது. மதுரா, இஸ்லாமாபாத் ஆனது.

ஔரங்கசீப்பிற்கு இருந்த அதே அகச்சிக்கல்கள் திப்புவுக்கும் இருந்திருக்கிறது. தன்னுடைய சமூகத்தின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்றுத் தலைவனாக வேண்டும். திப்புவின் வாள், இந்துக்களுக்கு மட்டுமல்ல கிறிஸ்தவர்களுக்கும் எதிரானதாக இருந்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய வரலாற்றில் திப்புவின் இடம், ஔரங்கசீப்பை விட உயரத்தில் வைக்கப்பட்டிருப்பது விசித்திரம். ஆங்கிலேயரை எதிர்த்த ஒரே காரணத்திற்காக ஒட்டோமான் காலீப் மேலாதிக்கத்தை ஆராதித்த திப்பு, சிறந்த தேச பக்தராக்கப்பட்டார். ஸ்ரீரங்கப்பட்டின கோயில் சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டு, விக்ரகங்களை மட்டும் விட்டுவைத்ததால் திப்பு, மதச்சார்பற்ற மகானாக வரலாறு திருத்தி எழுதப்பட்டது. அரசியல், சரித்திரத்திற்கு இழைத்த துரோகம் அளப்பரியது. திப்பு, திப்பு சுல்தானாக மாற்றப்பட்டதில் உள்ள உள்-அரசியல், மறதிக்குப் பழக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் மேலக்கோட்டை மக்களின் வித்தியாசமான பழக்கத்தை விவரிக்கும் கட்டுரைகள், பல வரலாற்றுப் புரட்டுகளை கட்டுடைக்கின்றன.

தமிழ் சமூகத்தின் வரலாற்றை முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்த முடியாமைக்கு காரணமே களப்பிரர்களின் இருண்ட காலம்தான் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். களப்பிரர் காலத்திற்குள் செல்லாமலே சங்ககாலத்திற்குப் பின்னர் என்ன நடந்தது என்கிற யூகங்களுக்கு வரமுடியும் என்கிற வாதத்தை இன்னொரு கட்டுரை முன்வைக்கிறது. ஏழாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சமூக அடுக்கில் சமணம் கீழ் நோக்கி சென்றதும், சைவம் மேலேகிச் சென்றதற்கும் காரணம், மக்கள் நுண் கலைகளைப் போற்றி வளர்க்க ஆரம்பித்ததுதான். பாட்டும், இசையும், நடனமும் சைவத்தை மக்களோடு நெருங்க வைத்தன. சமணமோ மலையிடுக்குளிலும், மனிதர்கள் நடமாடாத காடுகளிலும் முடங்கிப்போனதுதான் உண்மை. கழுவேற்றித்தான் சமணத்தை ஒழிக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. சைவ சமயப் பெரியோர்களின் செயல்பாடுகள் சமணத்தையோ, சமண மத தெய்வங்களையோ எதிர்த்து அமையவில்லை. சமணத் துறவிகளின் நடவடிக்கைளுக்கு மட்டுமே எதிராக இருந்தார்கள். சைவம், சமணத்தை முடக்கியது என்பதை சமணத் துறவிகளே இதுவரை ஏற்கவில்லை என்பது போன்ற ஆச்சர்யமான குறிப்புகளுடன் முடிவடையும் கழுவேற்றம் பற்றிய கட்டுரை தமிழ் கருத்துப் பரப்பில் முக்கியமானது.

புராணக்கதைகளின் இறுதியில் நாயகர்களின் துன்பம் நீங்கி, இன்பநிலை எய்துவதாக முடிப்பதுதான் இந்து சமூகத்தில் வழக்கம். சோகமான முடிவுகள் மூலமாக இந்து மதத்தை கட்டமைக்கப் பல நுற்றாண்டுகளாக யாரும் முயற்சிக்கவில்லை என்பதே ஆச்சர்யமானது. நடந்ததெல்லாம் நாடகம்தான்; ஆண்டவனின் லீலைகள்தான் என்கிற ஒற்றை வரி முடிவுகள் காலம் காலமாக தொடர்வது விசித்திரமானது. பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறித்துவம் உள்ளிட்ட மதங்கள் துன்பவியல் முடிவுகளையும், ரத்தம் தோய்ந்த தியாகச் செயல்களையும் புராணக்கதைகளின் முடிவுகளாக முன்வைக்கும்போது இந்து மதம் மட்டும் ஏன் தனித்தன்மையுட்ன் இருக்கிறது என்கிற கேள்வியை ஒரு கட்டுரை எழுப்புகிறது. இந்து மதத்தின் சாராம்சத்தை விளக்குவதே அதன் கேள்விக்குரிய பதிலாக அமைந்திருக்கிறது.

மதத்தை அறிவியலையும் எதிரெதிரே நிறுத்திப் பல நுற்றாண்டுகளாக விவாதம் செய்பவர்களுக்கு மத்தியில் ஐன்ஸ்டைனும், விவேகானந்தரும் முன்வைத்த வாதங்கள் நிச்சயம் அதிர்ச்சியளித்திருக்கும். மதத்திற்கான இடத்தில் அறிவியல் அத்து மீறுவதோ, அறிவியலுக்கான இடத்தை மதம் ஆக்ரமித்துக்கொள்வதோ மனிதகுலத்திற்கு நன்மை செய்யாது என்பதில் ஐன்ஸ்டைனும் விவேகானந்தரும் ஒரே தளத்தில் நின்று பேசுகிறார்கள். அறிவியலோடு அனுசரணையாக இருந்த ஒரே ஆன்மீகவாதி விவேகானந்தரோடு, ஐன்ஸடைனை ஒப்பிட்டது மிகச்சரியானதே. இரு வேறு சமூகங்கள், இரு வேறு ஆளுமைகளாக இருந்தாலும் மானுடம் என்கிற உணர்வில் இருவரும் ஒரே நிலைப்பாட்டில் ஒன்றுபட்டு நிற்பது முக்கியமான விஷயம்.

இந்து சமூகம், பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கிறதா என்கிற கேள்வியை முன்வைத்து சீதையையும் கீதையையும் விளக்கும் கட்டுரை, சீதை என்னும் கதாபாத்திரத்தின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. அரக்கிகள் மீது அன்பு கொண்டிருக்கும் சீதையின் பிம்பம், ராமரை விட சற்றே உயர்ந்து நின்று ராமாயணத்தில் இன்னும் திறக்கப்படாத பல கதவுகள் உண்டு என்பதை குறிப்பால் உணர்த்துகிறது.

காவிரிப் பூம்பட்டினத்தின் துயருக்கு, ராமனைப் பிரிந்த அயோத்தியின் துயராக உருவகம் செய்யும் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையும் கற்றுத் தேர்ந்த கழக நாயகர்களின் அரசியல் பாதை, அயோத்தி சம்பவத்திற்கு பின்னர் எதிர் திசையில் பயணித்து ராமனும் கம்பனும் யாரென்று கேட்கும் நிலைக்கு வந்திருக்கிறது. ஆரிய ராமன்; சூத்திர ராவணனை வஞ்சகமாகக் கொன்றான் என்ற பகுத்தறிவு பிரச்சாரங்களை மட்டுமே படித்திருக்கிறோம். ராவணன், அந்தணன்தான்; சம்பூகன்தான் சூத்திரன் என்கிற குறிப்பு ஆச்சர்யப்படவைக்கிறது. இனி சம்பூகனைத் திராவிடக் கலாசாரத்தோடு சம்பந்தப்படுத்திட கடுமையான முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும்.

(c) Oochappan

(c) Oochappan

ஆண் தெய்வங்கள் ஆரியர்களுக்கு; பெண் தெய்வங்கள் நம்மவர்களுக்கு என்னும் திராவிட ‘அறிஞர்களின்’  பொன்மொழியை புறந்தள்ளுகிறது இன்னொரு கட்டுரை. உண்மையான பகுத்தறிவு, ஆன்மீகத்தை ஆராதிக்கும். நாத்திகவாதிகளும் தொழும் நாட்டார் தெய்வங்கள் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. பெரியாரிஸ்டுகளின் போலித்தனங்களை சுட்டிக்காட்டி நேரத்தை வீணடிக்காமல், எதிர்க்குரல் எந்த திசையிலிருந்து வந்தாலும் அதற்கான விளக்கத்தை பதிவு செய்யும் கட்டுரைகள் சில இத்தொகுப்பில் உண்டு.

பாலியல் உணர்வில் மூழ்கித் திளைத்து, எழுந்து வெளியேறாமல் நிஜமான ஆன்மீகத்தை எட்ட முடியாது என்கிற ஓஷோவின் மேற்கோளைக் காட்டி நிர்வாணச் சிற்பங்கள் சொல்லும் செய்திகளை ஒரு கட்டுரை சுவாரசியமாக விவரிக்கிறது. நிர்வாணத்தில் நம்பிக்கை கொண்ட பெரியாரிஸ்டுகள், கோயில் சிற்பங்க்ள் விஷயத்தில் மட்டும் கலாசாரக் காவலர்களாக உருவெடுப்பதில் உள்ள முரண் நகையையும் போகிற போக்கில் சொல்லிக்கொண்டே போகிறார் கட்டுரையின் ஆசிரியர். அனுமனின் கையிலிருந்து வீழந்த கல், மலையானது குறித்த புராணக் கட்டுக்கதைகளைக் கூட கார்பரேட் உலகில் நமக்குச் சாதகமாக்கிக்கொள்வது எப்படி என்பதை விளக்கும் கட்டுரையும் முக்கியமானது.

என்னதான் கசப்புணர்வு கொண்டிருந்தாலும் நம்முடைய எழுத்து நம்மால் வெறுக்கப்படுபவர்களாலும் படிக்கப்படும் என்பதை அறிந்து உள்ளூரக் கொண்டாடும் மனது எல்லோருக்கும் இருப்பதுதான். குறளோவியம் சமஸ்கிருத்தில் வருவதும், தனித்தமிழ் இயக்கத்தில் தலைவராக இருந்த கி.ஆ.பெ விசுவநாதத்தின் மருமகன் அதை வெளியிடுவதும் ஒரு செய்தி அவ்வளவே.

ஆன்மீக விஷயத்தில் தமிழ் சினிமாவினரின் போலிமுகங்களை வெளிச்சப்படுத்தும் விஸ்வாமித்ராவின் கட்டுரை முககியமானது. அதே சமயம் மாற்று சினிமாவாகக் கட்டுரை முன் வைக்கும் மலையாள சினிமாவான பைத்ருகமும் அதே மசாலா பக்திப் படங்களின் வரிசையில்தான் சேர்க்கப்பட முடிகிறது. நிஜமான ஆன்மீக உணர்வுகளை பிரதிபலிக்கும் சினிமா, இந்தியச் சூழலில் இன்னும் வரவில்லை. இனி வரவும் முடியாது. பக்திப்படங்களை பிரச்சார படங்கள் அல்லது எதிர் பிராச்சாரப் படங்கள் என்கிற இரு வரிசைகளில் மட்டுமே சேர்த்துக்கொள்ள முடியும். பகவதி, பீவியாகி திரும்பவும் பழையபடி பகவதியாகும் கதையைக் கூட திரைப்படமாக்கினால் ஆன்மீகச் சிந்தனையுள்ள படமாக ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் சென்ஸார் ’ஏ’ சர்ட்டிபிகேட் தரத் தயாராக இருக்கும்.

இந்தப் புத்தகம் இந்துமதத்தையும் அதன் தத்துவார்த்தங்களையும் உயர்த்திப் பிடித்து உரத்த குரலில் பேசி பிரச்சாரம் செய்யவில்லை. இந்து கலாசாரத்தின் மீது வைக்கப்படும் கடுமையான விமர்சனங்களை ஒதுக்கிவிடாமல், அவற்றையெல்லாம் எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் விளக்கங்களை நம்முன் பரப்பி வைக்கிறது. வெவ்வேறு தளங்களில் நின்று விவாதித்தாலும், கட்டுரைகளினுடே இழைந்திருக்கும் அடிநாதம் ஒரே ஒரு செய்தியை மட்டும் அழுத்தமாக பதிவு செய்கின்றன. இந்து சமூகம் சந்திக்கும் நிஜமான சவால், மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்களின் அசட்டு மௌனம்தான். கட்டுரைகள் உரத்துச் சொல்லும் ஒரே செய்தியும் அதுதான்.

-o00o-

நூல் பற்றிய தகவல்கள்

பண்பாட்டைப் பேசுதல் – இந்து அறிவியக்கக் கட்டுரைகள்
பக்கங்கள்: 256
விலை ரூ 120/-
தமிழ்ஹிந்து வெளியீடு

சென்னை புத்தகக் கண்காட்சியில் (2010 ஜனவரி-1 முதல் ஜனவரி-10 வரை) விஜயபாரதம் கடையில் (ஸ்டால் எண்: 278 & 279)  கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
விவேகானந்த கேந்திரம்
5, சிங்காராசாரி தெரு,
திருவல்லிக்கேணி,
சென்னை – 600 005.
(தொலைபேசி: 91763-68789)

தபால் மூலம் பெற விரும்புபவர்கள், புத்தகத்தின் விலையுடன் தபால் செலவும் சேர்த்து ஆர்.எஸ்.நாராயணன் என்ற பெயரில் டிமாண்ட் டிராஃப்ட் (சென்னை) எடுத்து, தங்கள் முகவரியைக் குறிப்பிட்டு மேற்கண்ட விவேகானந்த கேந்திர முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம். (தபால் செலவு – தமிழ்நாடு:  ரூ. 25,  வெளிமாநிலங்கள்: ரூ. 30, வெளிநாடுகள்: ரூ. 140)

மேலும் விவரங்களுக்கு…

One Reply to “பண்பாட்டைப் பேசுதல் – ஒரு பார்வை”

Comments are closed.