மண்விழுதில் நுண்ணுயிரிகள்

mushroom3

‘நன்றும் தீதும் பிறர் தர வாரா’ நன்னெறியா, நான்மணிக்கடிகையா, நாலடியாரா… எதுவாயினும் ஒன்றே. நல்ல காளானும் கெட்டகாளானும் மண்தான் தருகிறது. பென்சிலின் ஸ்ட்ரப்டோமைசீன் எல்லாம் காளான் வகை என்பதால் நாய்க்குடைகளைத் தின்றால் பிணி தீருமா? பூஞ்சைக் காளான் பிடித்த கீரை உணவை உண்டதால் புத்தர் மரணமடைந்தாராம். நாய்க்குடைகளைத் (சிப்பிக் காளான்) தின்றால் நோய் வராது என்ற மூட நம்பிக்கை சிலரிடம் உள்ளது. என்னிடம் ஒரு நண்பர் கேட்டார், சிப்பிக்காளான் இயற்கையா? செயற்கையா? வைக்கோல் பிரி கட்டி காளான் விதைத்து வெண்குடை விரிக்க விஷமான பூச்சிமருந்து அடிப்பதால் இயற்கையான ஒன்றையும் விஷமாக்கும் போது காளானைத்தின்றால் நோய்தானே வரும்? இதற்கு இயற்கையாக அதுவாகவே முளைக்கும் காளான்(நாய்க்குடை) ஒருக்கால் நல்லதாக இருக்கலாம். நல்ல வெள்ளைக் கலரில் இருக்க வேண்டும்.

காளான்களில் நன்று எது தீது எது என்று கணிப்பதில் ஹாவொர்டும் ஷாட்சும் வல்லவர்கள். இயற்கை வேளாண்மையில் நுண்ணுயிரிகளின் பங்குதான் நல்ல விளைச்சலுக்குக் காரணமாகிறது. ஆரோக்கியமான பயிரின் அர்த்தம் மண்ணில் விழுதுகள். மண்ணில் விழுதுகள் இருந்தால் விண்ணில் விழுதுகள் பெறலாம். புரியவில்லையா. விழுது என்பது வேரைத்தான் குறிக்கிறது. மண்ணுக்குள் வேரை வளர்ப்பதில் நுண்ணுயிர்களின் பங்கு சிறப்பானது. மண்விழுது என்பது ஹூமஸ் (Humus) ஆகும். இது பொலபொலப்பாக, பால் சேர்க்காத காப்பி நிறத்தில், பிடிக்கும் பக்குவத்தில் இருக்கும் மண். ஆகவே ஹூமஸ் என்ற சொல்லுக்கு விழுது என்று பொருள்கொண்டு, நமது சிந்தனை சொல்லுக்கு விழுது என்று பொருள்கொண்டு, நமது சிந்தனைகளைத் தொடர்வோமா?

ஈரமான அதே சமயம் சேறாக்காத உலர் நிலையில், பசுமையாக இருக்கும் புற்களைப் பிடுங்கிப்பார்த்தால் அப்புற்களின் வேர்களுடன் ஒட்டியிருக்கும் துகள்கள், அதை மண்ணென்றும் சொல்லலாம், நீரில் கரையக்கூடியதாயிருக்கும். வேரை வளர்ப்பதிலும், வேர்வழியே நீரில் கரைந்து ஊட்டத்தை ஏற்றி மேலே பசுமையைத் தரும். பச்சையத்தை (Chlorophyll) உருவாக்க நீரிலுள்ள ஆக்சிஜன் துணைபுரியும். மண்விழுதில் காணக்கூடிய நுண்ணுயிரிகள் பற்றிய முறையான ஆய்வுகள் புறக்கணிக்கப்பட்டுவிட்டன என்ற உண்மையை ஹாவொர்டைப் போல் ஷாட்சும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றார். கண்களுக்குப் புலப்படாத ஒரு செல் தாவரங்களில் பாசி, காளான், பாக்டீரியா என்று கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் உண்டு. வேர்விழுதுகளில் ஒரு வகைப் பாசியினம் பற்றிய கவனம் ஷாட்சுக்கு வந்தது.

நாம் சாதாரணமாகப் பார்க்கக்கூடிய உதாரணம் கல்லிடுக்குளில் பாசிகள் படர்ந்து ஆல் அல்லது அரசு முளைத்துக் கல்லில் வேர் விடுவதையும் அக்கல்லைச் சுற்றிப் பாசிபடர்ந்து கட்டிடம் விரிசல் விட்டிருக்கும். பாழடைந்த கிணறு, பாழடைந்த வீடுகளில் பார்க்கலாம். கல்லைக் கரைத்து வேர் உருவாகி மரமாகிறது. மண்விழுதாகக் கல்லைப் பாசி மாற்றிப் பயிருக்கு ஊட்டம் தருகிறது. உலோகச் சத்தைக் கல்லிலிருந்தும் பாசி கரைத்துப் பயிருக்கு ஊட்டம் தருகிறது. ஆங்கிலத்தில் Chelation என்பார்கள். இதை மண்விழுதின் ஒரு அங்கமாக ஷாட்ஸ் கவனித்ததுடன் இதன் சக்தியை அளவிட விரும்பினார்.

இப்படி ஒரு விருப்புடன் இருந்த ஷாட்ஸ் எதேச்சையாக 150 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த போஸ்டன் நாளிதழில் ‘ புதிய இங்கிலாந்து விவசாயி’ (The New England Farmer) என்ற தலைப்பில் வந்த ஒரு கட்டுரை அவர் கவனத்தை இழுத்தது. ஒரு பயணியின் வியப்பான அனுபவங்களில், அன்பீன் பகுதியில் உள்ள கூஸ்கோ நகரில் (பெரு) உள்ள ஒரு புராதன சூரியன் கோவில் பற்றிய ஒரு தகவலை அது வழங்கியது. இப்படிப்பட்ட ஒரு புராதனக் கோவில் கட்டிடத்துச் சுவர்கள் பாறைகளை அடுக்கிக் கட்டப்பட்டவை.  அக் கற்களிடையே  ஒரு ஊசியைக் கூட நுழைக்க முடியவில்லையாம். ஆன்டீஸ் (ANDES) என்பது வாவிலோவ் கருத்தின்படி உணவுப்பயிர்களின் முக்கியத்தோற்ற மையம். உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, காஃபி, பச்சைமிளகாய், தக்காளி ஆகிய பயிர்களின் தோற்றத்துடன் இங்காக்களின் (Inca) நாகரிகம் தொடர்புடையது. புராதனக் கோட்டைச் சுவர்களில் அல்லது கோவில் மதில் சுவர்களில் கற்களை அறுத்து ஒட்டும் ஒரு அற்புதக் கலை இங்கா நாகரிக அழிவுடன் மறைந்துவிட்டது.

இங்காக்களின் நாகரிகத்தை உருவாக்கிய செவ்விந்தியர்களும் சரி சிந்து சமவெளி நாகரிகத்தைத் தோற்றுவித்த ஆரிய-திராவிடக் கருப்பு இந்தியர்களும் சரி, உணவு வேளாண்மையில் வல்லவர்கள். அதற்கான தொல்பொருள் சான்றுகள் நிறைய உண்டு. எனினும் இங்கா நாகரிகத்தில் – மேற்படி பயணியின் அனுமானப்படி, அவர்கள் ஒரு வகையான தாவரச்சாறைப் பயன்படுத்தியதாகக் கருதப்பட்டது. கருப்பு இந்தியர்களுக்கு சிந்து-கங்கை போல் செவ்விந்தியர்களுக்கு ஒரு அமேசான் நதி. ‘ புதிய இங்கிலாந்து விவசாயி’  கட்டுரையைத் தொடர்ந்து ஷாட்ஸ் படித்தது ”பீட்டோ” என்ற இன்காப் பழங்கதை. ‘பீட்டோ’ என்பது ஒரு பறவை. இக்கதையை P.M. Fawcett என்ற 19-ம் நூற்றாண்டுப் பயணியின் குறிப்பில் கண்டெடுத்தார். இப்பறவை எவ்வாறு ஆன்டீஸ் மலை உச்சியில் கல்லைக்குடைத்து கூடுகட்டியது என்று விவரிக்கிறது. இந்தப் பிட்டோ பறவை ஒரு வகையான செடியின் கிளையைப் பச்சை இலைகளோடு கொத்திச் சென்று அதைக் காலாலும் சிறகாலும் கசக்கிப் பின் மூக்கால் கொத்தித் துளையிட்டுத் துளையிட்டு கருங்கல்லில் குழிகளை ஏற்படுத்தி வசிக்குமாம். மேற்படி இரண்டு தகவல்களின் அடிப்படையில் ஒரு வகையான பச்சிலை வழஙகும் லைகானின் – அதாவது பாசிக்காளான் நுண்ணுயிரியில் உலோகம், கல் ஆகியவற்றைக் கரைக்கும் ஆற்றல் உண்டு என்பது ஷாட்சுக்குத் தெளிவானது. ஆகவே ஷாட்ஸ் ஆண்டீஸ் பயணம் மேற்கொள்ள விரும்பினார்.

lost-city-of-the-incas”இங்கர் நாகரிகத்தின் மறைந்த நகரம்” என்ற தொல்பொருள் ஆய்வு நூல் இவர் கவனத்திற்கு வந்தது. ஆங்கிலத்தில் சொல்வதானால் ‘The Lost City of Incas.’ இதை ஹைரம் பிங்கம் (Hiram Bingham) எழுதியது மட்டுமல்ல; பிங்கம் என்பவர் இங்கா நாகரிகம் என ஒன்று இருந்ததைக் கண்டுபிடித்தவரும்கூட. அந்த இங்கா நகரின், இடம் மச்சு பிச்சு (Machu Picchu). இப்பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் ஆஃப்கானிஸ்தானில் வாழும் ஹூன்சா பழங்குடி மக்களைப் போல் அலோபதி மருத்துவம் இல்லாமல், நீண்ட ஆயுள் வாழ்ந்தனர். இப்பகுதி மக்கள் செய்த விவசாயம் வியப்பூட்டுவதாயுள்ளது என்று பிங்கம் குறிப்பிட்டுள்ளார். பலவகையான உணவுப்பயிர் சாகுபடி, சரியான நீர்ப்பாசன நிர்வாக நுண்ணறிவு, ஆகியன கொண்ட இம்மலைப்பகுதி விவசாயம் படித்தளங்களை அமைத்து (Terraces) உருவாகியுள்ளது. படித்தளம் அமைக்க எக்கச்சக்கமாக மனித உழைப்பைப் பயன்படுத்தியுள்ளது புலனாகியுள்ளது. பெருவிய ஆன்டீஸ் பகுதி நிலம் எல்லாம் செயற்கையாகச் சேர்த்தவை. இன்னமும் இப்பகுதி நிலம் மண்வளம் நிரம்பியுள்ளது.

பண்டைய இங்காப் பேரரசின் தலைநகர் கூஸ்கோ (Cuzco). ஸ்பானியர் படையெடுத்து இங்காக்களை வென்று கொன்று குவித்த காலகட்டத்தில் தென் அமெரிக்கக் கண்டத்தின் பெரு நகராக இது விளங்கியுள்ளது என்று பிங்காம் கூறுகிறார். கூஸ்கோ கோட்டையை இவ்வாறு பிங்காம் வர்ணிக்கிறார்: ”புராதன கட்டிடக்கலைப் பொறியில் நுட்பத்திற்கு ஈடாக எதையும் எடுத்துக்காட்ட முடியாது. இந்தக் கோட்டைச் சுவரில் சிறுகற்கள்/கரணைகள் 10 முதல் 20 டன் எடையுள்ளது. பெரிய கரணைகள் 200 டன்கள் இருக்கும். இவ்வாறு பெரிய பாறைகளைக் கச்சிதமாக அறுத்து ஒட்டியுள்ள தொழில்நுட்பம் பிரமிப்பூட்டுகிறது…”

ஆண்டீஸ் மலைப் பகுதியின் பெருவியப் பூர்வகுடிகள் நாகரிகத்தை மீண்டும் தலை தூக்க முடியாதவாறு ஸ்பானியர் படையெடுப்பு அழித்துவிட்டது. அற்புதமான விவசாயத்தையும் மீட்க முடியாதவாறு அழித்துவிட்டது.(1) ‘இப்பழம் பெரும் செவ்விந்திய நாகரிகத்தில் மிகவும் ஆரோக்கியமான பயிர் விளைச்சலுக்கு அடிப்படையான அதே நுண்ணுயிரிப் பண்பாடே கோட்டைச்சுவர் கட்டவும் உதவியுள்ளது…” என்பது ஷாட்சின் கருத்து. செலேஷன் (Chelatiion) ஆற்றல் உள்ள லைகனைக் (lichen) கொண்ட ஒரு தாவரம் பற்றிய செய்தியும் ஷாட்சின் கவனத்திற்கு வந்தது. ஷாட்ஸ்  சீலெ நாட்டில் (Chile)  சான்டியாகோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த போது ”மெர்குரியோ” என்ற பத்திரிகையில் செலேஷன் குறித்த ஒரு விவரத்தைப் படித்தார். பெருவைச் சார்ந்த பாதிரியார் ஹோர்ஹெ லீரா (Jorge Lira) என்பவர் நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து இன்கா நாகரிகச் சின்னமான கூஸ்கோ கோட்டையில் தொல் பொருள் ஆய்வு செய்து இறுதியில் கல்லைப் பிளக்கும் அந்த அதிசயத் தாவரத்தை அடையாளப்படுத்திய விவரம் தெரிந்தது. விடாமுயற்சியுடன் அவரைத் தொடர்பு கொண்ட ஷாட்ஸ் அந்தத் தாவரத்தின் பெயர், ஷெஸ்வா என்ற இன்கா மக்கள் மொழியில், ”ஹரக் கெஹாமா” (Harak Kehama) என்று கண்டுபிடித்தார். அதன் பின்னர் மாஸ்கோ வானொலியில் பலமொழிகளில் இத்தகவல்கள் ஒலிபரப்பாயின. இந்த ஹரக் கெஹாமா தாவரத்திலிருந்து பெறப்படும் சாறில் உள்ள லைகனுக்கு எப்படிப்பட்ட உலோகத்தையும், கல்லையும், கரைக்கும் ஆற்றல் உண்டு என்பதால் – இத்தாவரத்தின் மூலம் கற்கள் அறுக்கப்பட்டு கஸ்கா கோட்டை எழுப்பப்பட்டுள்ளது.

இதுபோன்ற லைகன் ஹூமசில் மண் விழுதுகளில் செயல்படும்போது, உலோகச்சத்து உயிர்ச்சத்தாகப் பயிர்களுக்கு ஏற்றப் படுகிறது என்று ஷாட்ஸ் கருதினார். அதாவது ஒரு பயிருக்கு வேண்டிய தாதுப்புக்கள், நுண்ணூட்டங்கள் ஆகியவற்றைப் பெறும் வழி என்று நாம் புரிந்து கொள்வோம். நான் படித்தவரையில் ஷாட்ஸ் பிற்காலத்தில் மண்ணாராய்ச்சியில் தீவிரமாயிருந்தார். மண் என்றால் விவசாயத்துடன் தொடர்புள்ள ஹூமஸ் – அதாவது ஒரு பயிரின் வேர் விழுதுகளுடன் ஒட்டியுள்ள மண்விழுதுகள். ஒரு ஆரோக்கியமான பயிரின் ஊட்டம் என்று ஹூமசை வரையறுக்கலாம். அன்று இயற்கை வழியில் மண்ணை ஆராய்ந்த ஹாவொர்ட், ஷாட்ஸ் ஆகியோருடன் இன்றைய மண் ஆராய்ச்சியை ஒப்பிடும் முன்பு, இன்று பரவலாகப் பேசப்படும் மரபணுமாற்ற விதை விளைவுகளைச் சற்று கவனித்துவிட்டு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முனைவர்களுக்கும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்கழக விஞ்ஞானிகளுக்கும் சேர்த்து, விதை நிறுவனங்களுக்கு அவர்கள் விலைபோனதைப் பாராட்டி மாலை அணிவிக்கலாம்.

எப்படிப்பட்ட மாலை அது? அதைப் பின்னர் யோசிக்கலாமே!

தாவர இயலின் மரபணு/மரபியல் அறிவு – அதாவது Genetics. சில கோட்பாடுகளைக் கொண்ட நல்லொழுக்கமாகும்.

மனிதர்களை எடுத்துக்கொண்டால் – மனுஸ்மிருதி எடுத்துக்காட்டும் அனுலோம, பிரதிலோம உறவுகள் நல்லொழுக்கமில்லை, என்று கூறப்பட்டுள்ளது. 2000ஆண்டுகளுக்கு முன்பு அது தர்மமாயிருக்கலாம். இன்று அது அதர்மம். அனுலோமம் என்றால் என்ன? பிரதிலோமம் என்றால் என்ன? அனுலோமம் என்றால் ஒரு ஆண் வேறு வர்ணத்து ஸ்த்ரீகளை மணப்பது. அதற்கான தண்டனைச்சட்டம். ஒரு பிராமணனோ, சத்திரியனோ சூத்ரப் பெண்ணை மணந்தால் தண்டனையும் உண்டு. பரிகாரமும் உண்டு. பிரதிலோமம் என்றால் ஒரு வர்ணத்திற்குரிய பெண் வேறு வர்ணத்து ஆண்களை மணக்கும் போது வழங்கவேண்டிய தண்டனைச்சட்டம். உதாரணமாக, ஒரு வைசியப்பெண் சூத்ர ஆணை மணந்தால் தண்டனையும் உண்டு. பரிகாரமும் உண்டு. மனு வழங்கும் பரிகாரங்களை கவனித்தால் – மனுஸ்மிருதி எழுதப்பட்ட காலத்திற்கு முன்பு கலப்புக்கல்யாணம் நியதியாக இருந்திருக்க வேண்டும். பின்னர் சற்றுக் கட்டுப்பட்டாலும் கூட இன்னமும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. என்ன சாதியோ என்ன வர்ணமோ எதுவாயினும் ஒரு ஆண் ஒரு பெண்ணை மணப்பது நல்லொழுக்கமே. Genetics ரீதியாக கலப்பினம், ஒட்டு என்று விதைகளை உருவாக்குவது நல்லொழுக்கமே. நெல்லோடு நெல், கோதுமையோடு கோதுமை – பார்லியுடன் பார்லி – தாவரஇயல் மொழியில் சொல்வதானால் ஒரே இனவகையில் மாறுபடும் குண இயல்புகள் அடிப்படையில் குள்ள ரகத்துடன் நெட்டையை ஒட்டுதல் கொத்து ரகத்துடன் கொடிரகத்தை ஒட்டுதல் – நல்லொழுக்கமே.

ஆனால் ஒரு தாவரத்துடன் எந்த இனவகையிலும் பொருந்தாத ஒரு பூஞ்சையை, ஒரு கிருமியை அதன் பாரம்பர்ய குணக்கூறை மலடாக்கிவிட்டு அதைச் செலுத்துவது மரபியல் ஒழுக்கமா? இப்படி ஒரு ஒழுக்கங்கெட்ட விதைதான் மரபணு மாற்ற விதை. தமிழ்நாட்டில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், மாலிக்யுலர் பயாலஜி கற்றவர் – பிட்டி கத்தரிக்காய் விஷமில்லை என்று கூறியதற்கு சந்திராயன் மயில்சாமி அண்ணாத்துறை ஒத்து ஊதியுள்ளார். மயில் சாமிக்குச் சந்திரனைப் பற்றித் தெரிந்த அளவு, பூமியைப் பற்றி எதுவும் தெரியாது என்று புரிகிறது. பூமியைப் பற்றி அவர் ஏன் கவலைப்பட வேண்டும்? சந்திரனில் தங்க இடம் ஒதுக்கிவிட்டாரோ!

அதேசமயம், லண்டனில் புகழ் வாய்ந்த கிங்ஸ் கல்லூரியின் மாலிக்யுலர் ஜெனட்டிக்ஸ் துறைப் பேராசிரியர் மைக்கேல் ஆண்டனியோ, பூச்சி மருந்து தெளித்த கத்தரிக்காயைவிட பிட்டி கத்தரிக்காய் கூடுதல் விஷம் என்கிறார். களைக்கொல்லி விஷம் சேர்கிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைப் பூச்சி தாக்குதல் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் இருக்காது. அதற்கு மேல் பூச்சி மருந்து பயன்படுத்தப்படுகிறது – என்பதுடன், ஜீன் மாற்றத்தால் பல புதிய அணுக்கள் உருவாகுமாம். அமெரிக்காவில்கூட மரபணுமாற்ற சோயா, தக்காளி, உருளை, மக்காச்சோளம் ஆகிய உணவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பணியாரங்கள் மனித உள் அவயங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி ஆராய்ச்சி நிகழவில்லை, என்று கூறுகிறார். ஜீன் மாற்ற விளைவுகள் – ஆங்கிலத்தில் ”The Main toxic effect that comes from G.M. Food is not from the new glue, but from the effects of the glue transformation porcess ”…Gene transformation is highly mutagenic” (Michal Antonio) இதை நான் புரிந்து கொண்ட அளவில், பிட்டி கத்தரிக்காய், பிட்டி சோயா ஆகியவற்றில் பசுமை நிலையில் சோதித்தால் விஷம் இருப்பது தெரியாது. ஆனால் அதையே சமைத்துப் பக்குவம் செய்யும்போதும், மனிதர் – கால்நடைகளின் வயிற்றில் என்சைம்கள் சேர்ந்து கொள்ளும்போதும் விஷம் வெளிப்பட்டு அதனால் மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் அமெரிக்காவில் நோய்கள் ஏற்படுவதாக அன்டோனியோ குறிப்பிட்டுள்ளார். ஜீன் மாற்ற விஷ நுண்ணுயிரிகள் பன்முகமாகி கல்லீரல், சிறுநீரகம், இதயம், ரத்தக்குழாய் பாதிப்புறலாம். அவ்வாறு பாதிப்புற்ற நோயாளிகள் உள்ளனர். மாட்டுத்தீவனமாக வழங்கும்போது மாடுகள் கிழடு தட்டி மலடாகலாம்… ஜீன் மாற்ற – பிட்டி விதை உணவு பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆல்பர்ட் ஷாட்ஸ்
ஆல்பர்ட் ஷாட்ஸ்

மீண்டும் ஷாட்சின் கதைக்கு வரும் போது, மண்ணுக்கு விழுதாகிய ஹூமஸ் ஆய்வுகள் புறக்கணிக்கப்பட்டதை எண்ணி ஷாட்ஸ் இவ்வாறு நெஞ்சுருக எழுதுகிறார்:

”இக்காலத்தில் மண் விஞ்ஞானிகள் என்று கூறுவோரின் செயல்பாடு வெட்கக்கேடு. நான் ஒரு மண் விஞ்ஞானி என்று சொல்லிக் கொள்வதற்கே வெட்கப்படுகிறேன். மண்ணில் ரசாயனங்களை இட்டு அந்த விளைவைப் பயிரில் எடுத்துக்காட்டும் செயற்கைக்கு விஞ்ஞானம் விலைபோய்விட்டது. மண் விஞ்ஞானிக்கும் உழவியல் விளைச்சலைக் கணக்குப் பார்க்கும் பண்ணை நிர்வகிக்கும் வித்தியாசமில்லாமல் போய்விட்டது. மண் ஆய்வு என்பது ரசாயன உர நிறுவனங்கள் வழங்கும் பாட திட்ட அடிப்படையில் நிகழ்கிறது. ரசாயன உர நிறுவனங்களின் லாபத்திற்காகவே அத்தகைய பாடதிட்டங்கள் வரையப்பட்டுள்ளன. பல்கலைக்கழக ஆசியர்களாலும் மாணவர்களாலும் ரசாயனத்தில் ஈர்க்கப்பட்டுவிட்டனர். ரசாயன உரக்கம்பெனிகளின் கொழுத்த சம்பளம் காரணமாக அவர்கள் தேனில் விழுந்த ஈக்களாகிவிட்டனர். ஆண்டுக்கு ஆண்டு – தலைமுறைக்குத் தலைமுறை காலம் மாற மாறப் பல்கலைக்கழக அளவில் ஆராயவேண்டிய மண் விழுதுகளாகிய ஹூமஸ் என்ற படிப்பை – மிகவும் அற்புதமான அறிவியல் – கிடப்பில் போட்டுவிட்டார்கள். Pedology குறித்த ருஷிய வரையறையே காலம் காலமாகப் பொருந்தக்கூடியது. மைக்ரோ பயாலஜி என்ற பொருள்கூட மருத்துவ நிறுவனங்களின் தேவைக்குப் பயன்படும் ஆய்வாகிவிட்டது. SOIL MICRO BIOLOGY – புறக்கணிக்கப்பட்டுவிட்டது…”

இன்று ஹாவொர்டோ, ஷாட்சோ உயிருடன் இருந்தால் மேற்படி வாசகத்தில் ‘உர நிறுவனங்கள் என்ற சொல்லுடன் விதை நிறுவனங்களையும்’ கோர்த்திருப்பார்கள். அன்று மரபணு மாற்ற விதைகள் இல்லை. ஜீன் மாற்ற பிட்டி விதைகளின் மீது தமிழ்நாடு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் காட்டும் ஆர்வம் சுயநலம் நிரம்பியது. அவர்களுக்கும் மஹைக்கோ – மான்சண்டோ விதை நிறுவனங்களுக்கும் உள்ள உறவு பச்சையாகவே உள்ளது என்று ஒரு மூத்த பத்திரிகையாளர், சோலை கூறுகிறார். தமிழ்நாடு பல்கலைக்கழகம் கோவையில் மாலிக்யுலர் பயாலஜி துறைப் பேராசிரியர், பிட்டி கத்தரிக்காயில் சேர்க்கப்பட்டுள்ள ‘பாசிலஸ் துரிஞ்சன்சிஸ்’ என்ற நுண்ணுயிரி மண்ணில் எடுக்கப்பட்டது என்று கூறுகிறார். இப்படிப்பட்ட செய்தியைக் கூறுவதற்கு இவருக்கும், இவரைப் போன்ற சக பல்கலைக்கழக முனைவர்களுக்கும் பாராட்டு விழா நடத்தி மாலை அணிவிக்க வேண்டும் – ஒரு கேள்வியுடன். ”ஐயா, மண்ணில் உள்ளது மண்ணில்தான் இருக்கவேண்டும். அதை எடுத்துக் காய்க்கும், பூவுக்கும், விதைக்கும் செயற்கையாக ஏன் கொண்டு செல்கிறீர்கள்? கால்களில் அணிவதைக் கழட்டி உங்கள் கழுத்தில் மாலையாகப் போட்டால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?… ஒரு பாவமும் அறியாத கத்தரிச்செடி சும்மா இருக்கிறது.”

____________________________________________________________________

அடிக் குறிப்புகள்:

[1] ஸ்பானியர்கள் இங்கா பேரரசை அழிக்க முடிந்ததற்குப் பல காரணங்கள் உண்டு.  இங்காக்களின் ஆளும் குழுவினரிடையே ஏற்பட்ட உள் நாட்டுப் போர் ஒரு முக்கிய்க் காரணம்.   ஸ்பானியர்களின் மொத்த எண்ணிக்கையைப் போல பல நூறு மடங்கு பெரும் ஜனத் தொகையும், படைபலமும் கொண்ட இங்காக்கள் தோற்கடிக்கப் பட்டு அழிக்கப்பட்டது பல விதங்களில் இங்கிலிஷ் படைகள் இந்தியாவை வென்றதை ஒத்தது.   எப்படிப் பல இந்திய மொழிகள் அன்னியரால் புது எழுத்து உருவாக்கங்கள், அகராதிகள், அச்செழுத்து மூலமாக காலனியத்தின் போது மறு உருவாக்கம் செய்யப்பட்டனவோ அதே போல இங்கா மக்களிடையே புழங்கிய பல மொழிகளுக்கு எழுத்து உருவும், அச்சு உருவும் கொடுத்தது ஸ்பானியப் பாதிரிகள்.  ஷெஸ்வா என்று இன்று அறியப்படும் Quechua மொழி ஸ்பெயின் நாட்டின் செவியா (Sevilla)  பகுதியைச் சேர்ந்த டொமிங்கோ தெ சான்டோ டொமாஸ் என்ற பாதிரியாரின் வட்டார வழக்கு ஒலி அமைப்பால் பாதிக்கப்பட்டே கட்டமைக்கப் பட்டு நமக்கு இன்று கிட்டுகிறது.  அதை உலகெங்கும் கெச்சுவா என்று ஸ்பானிய மொழி உச்சரிப்பாலேயே மக்கள் அறிகின்றனர் என்றால் எப்படி மொழியின் பெயர் கூடத் தவறாகப் போயிற்று என்பது புரியும்.  எந்த அளவுக்குக் காலனியம் ஒரு மக்களின் பண்பாட்டு உருவைத் திரிக்கிறது என்பதும் புரியும்.  எப்படி இந்திய நாகரிகமும், தமிழ் பண்பாடும் ஆயிரம் ஆண்டு காலனியத்தால் பாதிக்கப்பட்டு மூல உருக்கள் சிதைந்தே இன்று நமக்குக் கிட்டுகின்றனவோ அதே சிதைவுகள் அமெரிக்கப் பழங்குடியினருக்கு பன்மடங்கு கூடதிகச் சேதத்தோடு நேர்ந்தன.  இங்கா நாகரிகமும், பேரரசும், மொழிகளும், அம்மக்கள் வாழ்வும் யூரோப்பியக் காலனியத்தால் அழிக்கப் பட்ட போதும்  ஏதோ ஒரு விதத்தில் அவை மறு உயிர்ப்பு பெற்று இன்று உலவுகின்றன என்பதை லைகன், நுண்ணுயிரிகள், பாக்டீரியாக்கள் பற்றிய இக்கட்டுரையில் நாம் அறிவது மிகப் பொருத்தமாகவே தெரிகிறது.  ஸ்பானியப் பாறைகளை அமெரிக்கப் பழங்குடி நாகரிகங்கள் அரித்து அரித்து இன்று பல தென்னமெரிக்க நாடுகளில் பழங்குடியினர் அரசியல் அதிகாரத்தைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றுகிறார் என்பதை நாம் காண்பது ஒரு சான்று. மேல் விவரங்களுக்கு இந்த நூலில் காண்க: South Atlantic Studies for Sturgis E. Leavitt (1953; reprint 1972 Scarecrow press inc). இந்நூலில் டி. லிங்கன் கான்ஃபீல்ட் என்பார் எழுதிய ஷெஸ்வா மொழிக்கும் ஸ்பானிய மொழியியலாளர்களுக்குமான தொடர்பு பற்றிய அத்தியாயம் தகவல் நிறைந்தது.  (பக் 63-70)