திராவிட-ஹரப்பன் தொடர்பு? ஆய்வுமுறைச் சிக்கல்கள்

ஆய்வாளர் குறிப்பு : மிஷேல் டேனினோ 1956-ல் பிரான்சில் பிறந்தார். சிறிய வயதிலேயே இந்தியா அவரை ஈர்த்தது. இந்திய யோகிகள் மீதும், குறிப்பாக அரவிந்தர் மீதும் அவருக்கு தீவிரமான ஈடுபாடு உண்டு. 1977-ல் உயர்-அறிவியல் படிப்பை துறந்து, பிரான்சை விட்டு இந்தியா வந்தார். அன்று முதல் கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வருகிறார். நீலகிரி மலையின் வெப்பமண்டல காடுகளை பாதுகாப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ”The Invasion that Never Was”(2000) என்ற ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். இவரை குறித்த விகி(Wiki) பக்கத்தை இந்த தளத்தில் படிக்கலாம்.

இவரது வலைத்தளம் : http://micheldanino.voiceofdharma.com/

குறிப்பு : சென்னையில், தமிழக அரசின் தொல்லியல் துறை மற்றும் மதராஸ் பல்கலைக்கழகத்தின் பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட ”சிந்து நாகரிகம் மற்றும் தமிழ் மொழி” என்ற தலைப்பிலான சர்வதேச கலந்தமர்வில்(15–16 February 2007) சமர்பிக்கபட்ட ஆய்வறிக்கை இது.

சுருக்கம்

சமீபத்தில் செம்பியன்-கண்டியூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல் கோடாரியில் காணப்படும் ஆழமான குறியீடுகள் சிந்து சமவெளி குறியீடுகளை ஒத்திருப்பது, ஹரப்பாவுடன் தமிழ் கலாச்சார மற்றும் மொழித் தொடர்புகளின் சாத்தியங்கள் குறித்த நெடுநாளைய விவாதத்தை மீண்டும் உயிர் பெறச் செய்துள்ளது. குறிப்பாக, ஹரப்ப மொழியை தொல்-திராவிட(proto-Dravidian) மொழியாக முன்னிருத்தும் வாதத்தை மீண்டும் உயிர் பெறச் செய்துள்ளது. ஆனால், இவ்விவாதம் மிகு-மலினப்படுத்தல்கள் மூலம் பிழையான ஆய்வுமுறைக்கு வழிகோலியுள்ளது. டில்மன் (Dilmun), மெஸோபொடோமியா அல்லது மார்ஜினியா (Marginia) போன்ற தொலைதூரப் பகுதிகளுடனான ஹரப்பர்களின் தொடர்புகளை முன்வைத்து பார்த்தால் தென்னிந்தியாவுடனான அவர்களின் உறவு சாத்தியமானதே. நீண்டகால ஆய்வுகள் இச்சாத்தியம் குறித்து பேசியிருக்கின்றன. ஹரப்பன் எழுத்துரு தென்னிந்தியாவில் காணக் கிடைப்பதை இந்த அடிப்படையில் நாம் புரிந்துக் கொள்ளலாம். ஆனால் தென்னிந்தியாவில் காணப்படும் எழுத்துருக்கள் அவற்றைப் படைத்தவரைக் குறித்து எதையும் தெரிவிக்கவில்லை. மேலும், தென்னிந்தியாவின் சில பூர்வ குடிகள் ஹரப்ப எழுத்துருவை ஒத்த ஒரு எழுத்துருவை கைகொண்டிருந்தால், அவர்கள் அந்த எழுத்துருவை தங்கள் மொழியை எழுத உபயோகித்திருப்பார்களேயன்றி, ஹரப்பன் மொழியையே பயன்படுத்தி இருக்கமாட்டார்கள். எழுத்துரு, மொழி இரண்டும் வெவ்வெறு விஷயங்கள். மேலும், விந்திய மலைகளுக்குத் தெற்கே எந்த ஹரப்பத் தொல்பொருடகளும், அம்சங்களும் காணக் கிடைக்கவில்லை. ப்ரஹி (Brahui) மொழி மத்திய இந்தியாவில் தோன்றியதெனக் கூறும் சமீபத்திய ஆய்வுமுடிவுகளும், இந்திய விவசாயம், தொல்லியல் மற்றும் மரபணுவியல் குறித்த ஆய்வுமுடிவுகளும் சிந்து நாகரிகத்தின் நகர்புற காலகட்டத்தின் முடிவில், வெண்கல-யுக கலாச்சாரத்தில் இருந்து, தங்கள் கலை மற்றும் முன்னேறிய தொழில்நுட்பங்களை, பானை வேலைப்பாடுகளை, ஆபரணங்களை, நகர் சார்ந்த வாழ்வை முற்றிலும் மறந்து, புது-கற்கால யுகத்தை நோக்கி ஹரப்பர்கள் தென்னிந்தியாவிற்க்கு குடிபெயர்ந்ததாக சொல்லப்படும் சாத்தியத்தை முற்றிலும் மறுக்கிறது. ஹரப்பர்கள் காலம் தொடங்கித் தென்படும் கலாச்சார தொடர்ச்சி, பல்வேறு துறைகளில், வட இந்தியாவில் காணப்படுகிறது, ஆனால் தென்னிந்தியாவில் அத்தகைய தொடர்ச்சி எதுவும் காணப்படவில்லை. இந்த ஆய்வறிக்கை, நம் ஆய்வுமுறைகளில் காணப்படும் இத்தகைய மற்றும் பிற பிழைகள் குறித்தும், இவ்விவாதம் குறித்த மேலும் நுட்பம் செறிந்த  பார்வையின் அவசியம் குறித்தும் பேசுகிறது.

-o00o-

சமீபத்தில் செம்பியன்-கண்டியூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல் கோடாரியில் காணப்படும்  குறியீட்டுச் செதுக்கல்கள் சிந்து சமவெளி எழுத்துகளை ஒத்திருப்பது, ஹரப்பாவுடனான தமிழ் கலாச்சார மற்றும் மொழிக்கிடையேயான சாத்தியமான தொடர்பு குறித்த நெடு நாளைய விவாதத்தை மீண்டும் உயிர் பெறச் செய்துள்ளது. குறிப்பாக, ஹரப்ப மொழியை தொல்-திராவிட(proto-Dravidian) மொழியாக முன்னிருத்தும் வாதத்தை மீண்டும் உயிர் பெறச்  செய்துள்ளது. ஆனால், நுண்ணிய ஆய்வில், இவ்விவாதம் மிகு-மலினப்படுத்தல்கள், அவசரக் குழப்படிகள் மற்றும் பிழையான ஆய்வுமுறைகளால் நிரம்பியிருப்பதை அறியமுடிகிறது. இந்த ஆய்வறிக்கை, இவ்விவாதத்தின் உள்ளிருக்கும் – மேலும், உதாசீனப்படுத்தப்பட்ட – பிரச்சினைகளை ஆராய்ந்து, இந்த கூட்டு அமர்வின் (Symposium) தலைப்பாக அறிவிக்கப்பட்டதிலிருந்து விலகிய பார்வையை அளிக்கிறது.

பின்ணனி

காலனிய சூழல், “திராவிடன்” எனும் எதிர்-தனித்தன்மை(contradistinction) கொண்ட ஒரு கற்பனையான பூர்வகுடி அடையாளத்தை, மற்றொரு கற்பனையான “ஆரியன்” எனும் அந்நிய அடையாளத்தின் மறு தரப்பில் நிறுத்தியதை நாம் நினைவு கூறவேண்டும். ஹரப்ப-திராவிட சமன்பாடு பெரும்பாலும் இந்த காலனியச் சூழலிலிருந்தே பெறப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஊன்றியிருந்த ”ஆரிய-செமிதிய” கருத்து வெறி, அதற்கிணையான ”ஆரிய-திராவிட” கற்பனை ஜோடியை இந்தியாவில் உருவாக்கியது. முதல் ஜோடியின் கட்டுடைப்பு பல்வேறு வரலாற்றாய்வாளர்களின் கடும்முயற்சியால்(குறிப்பாக Léon Poliakov,[1] Maurice Olender,[2] Thomas Trautmann[3] and Stefan Arvidsson[4] ஆகியோரால்) நிகழ்ந்தது, ஆனால் பிந்தைய ஜோடி(ஆரிய-திராவிட) அதன் முழு கட்டுடைப்பிற்காக இன்னும் காத்திருக்கிறது[5].

இதற்கிடையே, ஐரோப்பிய இந்தியவியலின்(Indology) தோற்றத்திற்க்கு முன்புவரை, “திராவிடம்” மற்றும் “ஆரியம்” என்ற வார்த்தைகள், இந்தியாவில், அதன் புவி சார்ந்த வரையறைகளாகவும், குறிப்பாக “ஆரியம்” இந்தியாவின் கலாச்சாரம் குறித்த சொல்லாடலாக இருந்ததை நாம் மனதில் கொள்ள வேண்டும். இவ்வார்த்தைகளுக்கான இனம் மற்றும் மொழியியல் சார்ந்த அர்த்தங்கள் இந்திய இலக்கியங்கள் மற்றும் மரபிற்கு முற்றிலும் அந்நியமானதாக இருந்தன; மாக்ஸ் முல்லர் மற்றும் பிஷப் கால்டுவெல் இவ்வார்த்தைகளின் அர்த்த-மரபை மீறாதவரை. இந்த மரபு மீறல் இந்தியவியலுக்கான அடித்தளமாக இடப்பட்டு, இவ்வடித்தளமே எந்த கேள்வியுமின்றி பெரும்பான்மையான அறிஞர்களால்-ஒரு சில அற்புதமான விடுபடல்களை தவிர்த்து[6]-ஏற்றுக்கொள்ளப்பட்டது. துரதிருஷ்டவசமாக, “திராவிட” மற்றும் “ஆரிய” வார்த்தைக்களுக்கான – மரபு, கலாச்சாரம், இனம் மற்றும் மொழியியல் சார்ந்த – நான்கு கற்பிதங்களும், பெரும்பாலான சமயங்களில் ஒன்றுடன் ஒன்று கலக்கப்பட்டதால், பல அறிஞர்கள் குழுப்பதிற்க்கு உள்ளாயினர். குழு அடையாளங்கள் (உயிரியலாளர்களால் நிராகரிக்கப்பட்ட, அறிவியல் அடிப்படையில்லாத, ”இனம்” என்ற வார்த்தையின் அர்த்தத்தில் அல்ல), மொழி மற்றும் கலாச்சாரம், இம்மூன்றும் தனித்தன்மை வாய்ந்த, சில சமயம் பகுதி-கவிந்தும்(overlap), சில சமயம் பகுதி-கவிலாத கருத்துருக்கள்.

இந்த குழப்பத்தின் எடுத்துக்காட்டாக, மொழியியல் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட திராவிட மொழி குடும்பம்(முறையாக ”தென் இந்திய குடும்பம்” என்று பெயரிடப்பட்டிருக்க வேண்டும்) எனும் கருத்து, இனம் சார்ந்த கருத்துக்களுடன் இணைக்கப்பட்டதால், வட-மேற்கு இந்தியாவிலிருந்து தென்னிந்தியா வரை நடைபெற்றதாக சொல்லப்படும் “நெடும் திராவிட பயணம்”(Dravidian Long March) எனும் பெரும் தரிசனத்திற்க்கு வழிவகுத்தது. ஆர்.எஸ்.ஷர்மாவின்[7] இந்த வரைபடத்தில்(Fig. 1) காணப்படுவதை போல், திராவிட மொழி பேசும் மக்கள் வசித்த இடங்களின் புள்ளிகளெல்லம் கற்பனை கோட்டால் இணைக்கப்பட்டது.

Fig. 1 : திராவிடர்களின் இடப்பெயர்வை கற்பனை சார்ந்து விளக்கும் வரைப்படம்(ஆர்.எஸ்.ஷர்மாவிடமிருந்து)

இந்த வரைப்படத்தின் தலைப்பில், ஷர்மா என்றும் இருந்திராத “குடியிருப்புகளை” விவரிக்க “வரலாற்று ரீதியானது”(historical) எனும் தவறான சொல்லை உபயோகிக்கிறார். மனம்போன போக்கில் இவ்வரைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ”தெளிவான கால வரிசை”யை விட்டுத் தள்ளுங்கள். ஆனால், எந்த வித ஒழுங்குமில்லாத பிரிவுகளை கொண்டிருக்கும்(முதலில் எல்லாம் கிழக்கு திசையில், பின் அனைத்தும் மேற்கு திசையில்), ஒவ்வொரு 500 வருடத்திற்குமான பெரும் நிலைகளை அசாதரண துல்லியத்துடன் பேசும், தமிழ் பகுதிக்கு அவர்கள் தாமதமாக(500 BCE அல்லது அதற்கும் பிந்தைய காலத்தில்) வந்த சேர்ந்ததை குறித்தும் பேசும் இந்த வரைபடம் தொல்லியல் அடிப்படையில் எப்படி சாத்தியமற்றது என்பதை பிறகு விளக்குகிறேன்.

1920-இன் ஹரப்பா(அல்லது)சிந்து-சரஸ்வதி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை தொடர்ந்து, இந்த அமானுஷ்ய வரைப்படத்தை முழுமை பெற்றது; வலுவற்ற கலாச்சார அடிப்படையில், சில அறிஞர்கள் “திராவிடர்கள்” என்று அறியப்படுவோரே ஹரப்ப நாகரிகத்தை தோற்றுவித்தனர் எனும் முடிவிற்க்கு வந்தனர். இந்த முடிவு, “ஆரியர்கள்” என்று அறியப்படுவோரை ஒரு அற்புத நாகரிகத்தை அழித்தவர்களாக முன்வைக்கும் வாய்ப்பை வழங்கி, அந்த அழிவில் உயிர்பிழைத்த திராவிடர்களுக்கு, தென்னிந்தியா நோக்கிய குடிபெயர வசதியான சூழலை உருவாக்கினர்.

செம்பியன்கண்டியூர் தொல்பொருள்

செம்பியன்கண்டியூரில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் “சிந்து அச்சுரு(script) மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்க்கும் இடையேயான உறவை சுட்டுவதாக” அர்த்தம் கொள்ளப்படுகிறது[8]. இந்த புரிதல் உடனடியாக மொழிக்கும் கலாச்சாரத்திற்க்கும் இடையேயான குழப்பத்தை தோற்றப்படுத்துவதோடு, ஒரு அச்சுரு மற்றும் ஒரு மொழி பல கலாச்சாரங்களுக்கான பொது ஊடகமாக இருக்க இயலும் எனும் நிதர்சனத்தை மறுதலிதக்கிறது. உதாரணமாக, சீன அச்சுரு கன்பூஷிய மற்றும் பெளத்தத்தின் ஊடகமாக இருக்கிறது. ஆகவே, இங்கு நம்முன் இருக்கும் கேள்விகள் இரண்டு :

– ”கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் கொண்டிருப்பது சிந்து அச்சுருதானா?”

– ”தொல்பொருளில் காணப்படுவது சிந்து அச்சுருவாக இருந்தால், எந்த அடிப்படையில் இந்த அச்சுரு தமிழ் மொழி மற்றும் அதன் கலாச்சாரத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது?”

இந்த கேள்விகளை ஆராய புகும்முன், நான் ஆய்வுமுறையில் உள்ள ஒரு சில சிக்கல்களை எழுப்பவேண்டும். ஒன்று, தமிழகத்திலும் பிற இடங்களிலும் தொல்பொருட்களில் போலியாக எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நிகழ்வுகள் வெகு பிரசித்தம்; ஆகையால் தேர்ந்த கனிபொருளறிஞர்களை(mineralogists) கொண்டு நுண்ணிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ”இவ்வெழுத்துக்கள் பொறிக்கப்பட்டது தொல்பொருள் பட்டை தீட்டுப்படும் முன்பா அல்லது பின்பா?”, மேலும், பட்டை தீட்டப்பட்ட பின் பொறிக்கப்பட்டதெனில், ”தோராயமாக எத்தனை வருடங்களுக்கு பிறகு பொறிக்கப்பட்டது?”, என்பதை அறியவேண்டும்.

இரண்டாவது, இக்கண்டுபிடிப்பில் இருக்கும் தொல்லியல் அடிப்படையின் வெறுமை; இருந்தும் சிந்து அச்சுருவில் வித்தகரான ஐ.மகாதேவன்[9] இத்தொல்லியல் பொருளுக்கான பொருத்தமான காலத்தை “2000 BCE முதல் 1500 BCE வரை” என கணித்துள்ளார். நாம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்; தென்னிந்தியாவில் பொதுவாக கற்காலத்தை(neolithic) சேர்ந்த பல்வேறு தொல்பொருட்கள் பிந்தைய megalithic நிலங்களில், சிலசமயங்களில் மேலோட்டமான அகழ்வாய் ஆராய்ச்சிகளில் கூட, கண்டெடுக்கப்படு்கின்றன. ஆகையால், தற்போது (ஐ.மகாதேவனால்)கணிக்கப்பட்டுள்ள காலத்திற்க்கு எந்த அடிப்படையும் இருக்க சாத்தியமில்லை. ஹரப்பன் நகர் சார்ந்த காலகட்டத்தின் அழிவை தொடர்ந்து, வட-மேற்கிலிருந்து தெற்கு நோக்கி நிகழ்ந்ததாக சொல்லப்படும் கற்பனையான பயணம் நிகழ்ந்த காலத்துடன் எப்போது முழுவதுமாக பொருந்துப்போகிறதோ அப்போது இந்த காலத்தை ஒருவரால் நியாயப்படுத்த முடியும். நாம் அறிந்தவரை, பொது யுகத்திற்க்கு முந்தைய(BCE) 2500-ஆம் ஆண்டு முதல் 500-வது ஆண்டுக்கு உள்ளாக இந்த தொல்பொருள் மெருகூட்டப்பட்டிருக்கலாம் என்பதே.

இருப்பினும், கல்வெட்டின் மொழியின் இயல்பு குறித்த ஆய்வுகளின் தவறான அணுகுமுறை இங்கு முக்கியமாக பேசப்படவேண்டிய ஒன்று. தொல்பொருளில் சில குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளதாக எடுத்துக்கொண்டாலும், அவை எவ்வகையிலும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கவில்லை (உண்மையில், முதலில் மூன்று குறியீடுகள் இருப்பதாக தெரிவித்த ஐ.மகாதேவன், பின் நான்கு குறியீடுகள் இருப்பதாக அறிவித்தார்). எந்த வகையிலும் அக்குறியீடுகள் சிந்து குறியீடுகளுடன் அடையாளப்படுத்தப் படவில்லை. மேலும், தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பல பானைகளிலும், கற் சித்திரங்களிலும் உள்ள ஓவியங்களின், சிந்து-வின் தொல்பொருட்களில் காணக்கிடைக்கும் ஓவியங்களுடனான(graffiti) ஒற்றுமை பல காலமாக பேசப்பட்டு வந்திருக்கின்றன[10]. சிந்து எழுத்துரு தென்னிந்தியாவில் புழக்கத்தில் இருந்தமைக்கான சான்றாக இவை முன்னிருத்தப்பட்டிருக்கின்றன[11]. இருந்தபோதும், சிந்து எழுத்துருவை ஒத்த அந்த குறியீடுகள் இத்தகைய கூற்றுகளை நிரூபிப்பதாக இல்லை. சிந்து எழுத்துரு பல்வேறு நாகரிகங்களின் எழுத்துருக்களுடன்-காட்டாக முன்-எலாமெய்ட்(proto-Elamite)[(Fig. 2)], பழைய செமிதிக்(Old Semitic)[(Fig. 3)], ஈஸ்டர் தீவுகளின் எழுத்துரு[Fig. 4], எட்ரூஸ்கன் எழுத்துரு(Etruscan script)- ஒப்பிடப்படுவதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

Fig.2 : வால்டர் ஃபெர்செர்விஸ்[12] அளித்த முன்-எலாமெய்ட் மற்றும் சிந்து எழுத்துருக்களுக்கு இடையேயான ஒப்பீடு[தெளிவாக பார்க்க புகைப்படத்தை அழுத்துக]

Fig. 3: எஸ்.ஆர்.ராவ்[13] அளித்த, பழைய செமிதிக் மற்றும் சிந்து எழுத்துருக்களுக்கு இடையேயான ஒப்பீடு[தெளிவாக பார்க்க புகைப்படத்தை அழுத்துக]

Fig. 4: டி.ஹெவிஸி[14] அளித்த, ஈஸ்டர் தீவுகள் மற்றும் சிந்து எழுத்துருக்களுக்கு இடையேயான ஒப்பீடு[தெளிவாக பார்க்க புகைப்படத்தை அழுத்துக]

மேலே உள்ள மூன்று படங்களை கூர்ந்து அவதனித்தால், குறியீடுகளின் ஒத்த உருவ அமைப்பு குறித்த இந்த ஆராய்ச்சி முடிவிலுள்ள ஓட்டைகளை அறிந்துக் கொள்ளலாம். தன்னளவில், இவை யாவும் எதையும் நிரூபிப்பதாயில்லை. எப்போது சிந்து குறியீடுகளுடன் முற்றிலும் பொருந்திப் போகும் பல குறியீடுகளை நாம் தென்னிந்தியாவில் கண்டடைகிறோமோ, அப்போது தான் தென்னிந்தியாவில் சிந்து குறியீடுகள் காணக்கிடைப்பதாக நம்மால் முறையாக அறிவிக்க முடியும்.

இத்தகைய அறிவிப்பை வெளியிட நாம் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கும். மேலும், செம்பியன்கண்டியூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருளில் உள்ள குறியீடுகளில் ஐ.மகாதேவன் இரண்டு குறியீடுகளை மட்டும் ஹரப்பன் குறியீடுகளுடன் தொடர்புபடுத்துவதால், இம்முடிவை அடைய, இத்தொல்பொருள் நமக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை. மேலும், எல்லா வகையிலும், இக்குறியீட்டின் வாசிப்பு அகவயப்பட்டதாகவும், சிந்து குறியீடுகளில் நிபுணரும், அக்குறியீடுகளை திராவிட மொழிகளாக அர்த்தப்படுத்துவதை ஆதரிப்பவருமான அஸ்கோ பர்போலா-வின்(Asko Parpola) வார்த்தைகளிலேயே சொல்வதானால், இந்த முடிவு “நிதர்சனத்தை விட்டு வெகு தொலைவில்” நிற்கிறது[15]. இதுவரை தென்னிந்தியாவில், சிந்து குறியீடுகளை போன்ற குறியீடுகளை பொறிக்கப்பட்ட(ஆனால் சிந்து குறியீடுகளின் அதே வரிசையற்ற) பல்வேறு பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக காட்டும் எந்த அம்சமும் செம்பியன்கண்டியூரில் கண்டெடுக்கப்பட்ட கோடாரியில் காணப்படும் எழுத்துக்களில்(graffiti) இல்லை.

ஹரப்பன்-திராவிட மொழியியல் சமன்பாடு

இந்த ஆராய்ச்சியில் உள்ள சில ஆழமான சிக்கல்கள் குறித்து பார்ப்போம்.

வாதத்திற்காக மட்டும், இந்த தொல்பொருளில் நான்கு ஹரப்ப குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளதாக ஒப்புக்கொள்வோம். உடனடியாக, ”ஹரப்பன் மொழி திராவிடர்களுடையது எனும் கூற்று உண்மையே” என்ற முடிவு உண்மையானதாகவே தோன்றும். ஆனால், பின்வரும் இரண்டு வாதங்களின் அடிப்படையில் இக்கூற்று முற்றிலும் தவறானது :

முதலில், டில்மன்(Dilmun), மெஸோபொடோமியா அல்லது மார்ஜினியா(Marginia) போன்ற தொலைதூர பகுதிகளுடனான ஹரப்பர்களின் நீண்ட இடைவெளியற்ற தொடர்புகளை நாம் அறிவோம்; தென்னிந்தியாவின் சில பகுதிகளுடனான குறைந்த வணிக மதிப்புள்ள கற்கள்(semiprecious stones) சம்பந்தமான இரு தரப்பு உறவுகளின் சாத்தியங்கள் குறித்தும் பல காலமாக பேசப்பட்டு வருகின்றன. தென்னிந்தியாவில் காணக்கிடைக்கும் ஹரப்ப எழுத்துருக்கள் குறித்த சில கேள்விகளுக்கு மேற்கூறிய கூற்று விடையாக அமையலாம். ஆனால், மெஸோபொடோமியாவில் கிடைத்த சிந்து முத்திரைகளை கொண்டு, ”சிந்து எழுத்துருவை கண்டுபிடித்தவர்கள் மெஸோபொடோமியர்கள்” என்றோ, ”ஹரப்பன் மொழியே மெஸோபொடோமிய மொழி” என்றோ யாரும் முடிவிற்க்கு வந்துவிடவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அங்கும் இங்கும் காணக்கிடைக்கும் எழுத்துருக்கள், அவ்வெழுத்துருக்களின் உரிமையாளர்கள் குறித்தோ அல்லது தாங்கள் கண்டெடுக்கப்பட்ட அந்நிலத்துடனான தங்கள் தொடர்பு குறித்தோ எதையும் அறிவிப்பதில்லை.

இரண்டாவதாக, தென்னிந்தியாவின் சில பூர்வ குடிகள் ஹரப்ப எழுத்துருவை ஒத்த ஒரு எழுத்துருவை கைகொண்டிருந்தால், அவர்கள் அந்த எழுத்துருவை தங்களுக்கான மொழியை உருவாக்க பயன்படுத்தியிருப்பார்கள். ஹரப்பன் மொழியையே பயன்படுத்தி இருக்கமாட்டார்கள் – மீண்டும் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன், எழுத்துருவும் மொழியும் முற்றிலும் வெவ்வேறு தளங்கள். உதாரணத்திற்கு, ப்ரமி(Brahmi) பல தனித்தன்மையான மொழிகளில் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டது. ஆகையால் என்றேனும் ஒருநாள் எந்தவித குழப்பமுமற்ற ஹரப்ப எழுத்துருவை தென்னிந்தியாவில் நாம் கண்டடையும் பட்சத்தில், அதன் மொழி தமிழாக இருக்கும் நிலையிலும், சிந்து-சரஸ்வதி நாகரிகத்தின் மொழி குறித்த எந்த தகவலையும் நாம் அறியமுடியாது. இந்த முக்கியமான விஷயம் பொதுவாக கண்டுகொள்ளப்படுவதில்லை.

திராவிட-ஹரப்ப சமன்பாடை முன்மொழியும் பலரும் பல்வேறு “மொழியியல் சான்றுகளை” முன்வைத்து ஹரப்பன் மொழி திராவிட மொழிக் குடும்பத்தை சார்ந்தது என நிரூபிக்க முயல்கிறார்கள். இருப்பினும், நன்கறியப்பட்ட ஒரு வாதத்துக்கு முற்றிலும் எதிராக, வட-மேற்கு பகுதியில் திராவிடர்களின் இருப்பை முற்றிலும் மறுக்கும் விதமாக அந்த “மொழியியல் சான்றுகள்” உள்ளன. இது குறித்த முக்கிய வாதங்களை சுருக்கமாக வழங்குகிறேன்.

அந்த “மொழியியல் சான்று”களின் ஒரு பகுதி, ரிக் வேதத்தில் காணப்படும் பல்வேறு திராவிட வார்த்தைகளை ஹரப்ப மொழியை திராவிட மொழிக்கான அடித்தளமாக(Dravidian “substratum”) முன்னிருத்துகிறது. உண்மை என்னவெனில் இது குறித்த மொழியியல் அறிஞர்களிடம் ஒருமித்த கருத்து நிலவவில்லை என்பதே. டி.புரோ-வை(T.Burrow) பொறுத்தவரை ரிக் வேதத்தில் 500 திராவிட வார்த்தைகள் கடனாக பெறப்பட்டுள்ளன; இதே எண்ணிக்கை எஃப்.கியூப்பரின்(F.Kuiper) கணக்கில் 380-ஆகவும்; விட்சலின்(Witzel) கணக்கில் 100-ஆகவும், பி.இமினோ-வின்(B.Emeneau) கணக்கில் வெறும் ஒரு வார்த்தையாகவும் சுருங்குகிறது. மேலும், அந்த “விளைநிலத்தில்” முளைத்த மொழி ஆதி-திராவிட மொழியே என புரோவும், சொவுத்வொர்த்தும்(Southworth) கருதுகின்றனர். ஆனால் விட்சல், அதை துணை-முண்டா(para-munda) மொழி என்றும், ரிக்-வேதத்தில் உள்ள கடனாக பெறப்பட்ட திராவிட வார்த்தைகள் சமீபத்திய மண்டலங்களில் மட்டுமே காணப்படுவதால், அத்தகைய(ஹரப்ப-திராவிட தொடர்பு குறித்த) வாதங்களை பொருத்தமற்றது என்றும் கூறுகிறார்[16].பிற மொழியியலாளர்கள் ”கடனாக பெறப்பட்ட திராவிட வார்த்தைகள்” என முன்னிருத்தப்படுபவை அனைத்தையும் முற்றிலும் மறுதலிக்கின்றனர். பி.தீய்மே, ஹெச்.ஹெச்.ஹோக் ஆகியோரின் நிலையும் இதுவே[17]. ”மயுரா” எனும் ஒரு வார்த்தையை மட்டுமாவது மொழியியலாளர்கள் திராவிடத்திலிருந்து கடனாக பெறப்பட்டதாக ஒப்புவர் என்று கருதிய மறைந்த திராவிட மொழியியலாளர் பி.இமினோ எழுதுகிறார் : “[திராவிடத்திலிருந்து இந்தோ-ஆரிய மொழியால் கடனாக பெறப்பட்ட சொல்வளம்(Vocabulary)] குறித்த வாதங்கள் வெறும் “ஊகங்கள்” மட்டுமே. துரதிருஷ்டவசமாக, இத்துறை சார்ந்த அனைத்து சொல்லாக்க விளக்கங்கள்(Etymology) தங்களால் நிரூபிக்கவியலாத, ’நம்பிக்கையின் அடிப்படையின் இயங்கும்’ ஆய்வுகளின் இறுதிகட்டத்தில் உள்ளன…”[18]. முடிவாக, வேதிய சம்ஸ்கிருத்தில் “திராவிடத்தின் அடித்தளத்தை” கண்டடைவது கடினமான ஒன்று.

இங்கு ஒரு நுட்பமான விஷயத்தை கவனிக்க வேண்டும்: ரிக்-வேதத்தில் உள்ள ஒரு சில வார்த்தைகளின் வேர்கள் திராவிட மொழியில் இருப்பதாகக் கொண்டாலும், அவை குடிபெயர்ந்த ஆரியர்களால் “கடன் வாங்கப்பட்டவை” என்ற முடிவிற்க்கு நாம் எப்படி வரமுடியும்? கடன்-வார்த்தைகள்(loanwords), அப்படி எவையேனும் இருந்தால், அவை (திராவிட மொழியின்)”அடித்தள”த்தின் தொல்மிச்சங்களாக இருக்கவேண்டிய அவசியமேதுமில்லை; நன்கு-வரையறுக்கப்பட்ட மாதிரி(pattern) ஒன்றை நாம் கண்டடையாத சூழலில், அவை நெடு-நாளைய கொடுக்கல்-வாங்கல்களின் விளைவாக இருக்கலாம்.

பலூசிஸ்தானின் சில பகுதிகளில் இன்னும் உபயோகத்தில் இருக்கும் ப்ரூஹீ(Brahui) எனும் திராவிட மொழி, சிந்து சமவெளியில் திராவிடர்களின் இருப்பை ஊர்ஜிதப்படுத்தும் அதிஉன்னத சான்றாக அதிதீவரத்துடன் முன்வைக்கப்படுகிறது. ஆனால் 1920-களில், பிரஞ்சு மொழியிலாளர் ஜூல்ஸ் போலோச்(Jules Bloch), ப்ருஹீயின் சொல்வளத்தை ஆராய்ந்து, அம்மொழி பலூசிஸ்தானுக்கு மிக சமீபத்தில் வந்தடைந்தாகவும், குறிப்பாக இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நிகழ்ந்த காலத்தில், மத்திய இந்தியாவிலிருந்து வந்திருப்பதாக நிரூபித்தார்[19]. இந்த ஆராய்ச்சி முடிவு சமீபத்தில் முர்ரே இமினோ[20] மற்றும் இன்னும் வெகு சமீபத்தில் ஹெச்.ஹெச்.ஹோக்[21] ஆகிய இருவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இறுதியாக, மொழியியலாளர் மற்றும் கணிதவியலாளரான ஜோசெஃப் எல்ஃப்ன்பெய்ன்(Josef Elfenbein), இம்முடிவை வேறு நோக்கில் உறுதிபடுத்தினார்[22]. பிரஞ்ச் இந்தோ-ஐரோப்பியவாதியான பெர்னார்ட் செர்ஜண்ட், “இம்முடிவு ஒரு புதிய திருப்பத்தை அடிகோலியிருக்கிறது…. ப்ருஹீ பலூசிஸ்தானை தாமதமாகவே வந்தடைந்துள்ளது, ஆகையால் சிந்து சமவெளியில் திராவிடர்கள் வாழ்ந்ததாக கூறுப்படும் கருத்தை அது(ப்ரூஹீ) எந்த வகையிலும் நிரூபிக்கவோ அல்லது ஒரு மறைசெய்தியாக(clue) விளங்குவதாகவோ கொள்ள முடியாது”[23]. மேற்சொன்ன மொழியியல் ஆராய்ச்சி முடிவுகளை நம்முடைய பல்வேறு இந்திய கற்றறிவாளர்கள் அறியாவிட்டாலும், முற்றிலுமாக ”ப்ரூஹீ வாதம்” தன் மதிப்பை இழந்துவிட்டது.

மற்றொரு வகையில், ஒரு மொழியியல் வாதம் திராவிட-ஹரப்பன் உறவு குறித்தான ஆய்வு-முடிவுகளை முழு முற்றான அழிக்க வல்லதாக இருக்கிறது. அந்த வாதம் நதிகளின் பெயர்கள்(hydronymy) சம்பந்தமானது. இந்திய துணைகண்டத்தின் வட-மேற்கில் ஓடும் 35 நதிகளுக்கான பெயர்கள் அனைத்தும் இந்தோ-ஆரிய மொழியை சேர்ந்ததேயன்றி திராவிட மொழியை சேர்ந்ததல்ல. ஆரியர்கள் என்றழைக்கப்படுவோரின் வருகைக்கு முன்பு திராவிட மொழி பேசும் மக்கள் அங்கு வாழ்ந்தனர் என்பதும் ஏற்கமுடியாத ஒன்று, ஏனெனில், அவ்வாறு நடந்திருந்தால், குறைந்தபட்சம் சில நதிகளின் பெயர்களாவது (அப்பகுதியில்)திராவிடர்களின் இருப்பை நிச்சயம் வெளிபடுத்தியிருக்கும். ஆனால் அப்படி எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. நதிகளுக்கான முந்தைய பெயர்கள் முற்றிலும் அழிக்கப்படுவது வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்று: ஐரோப்பாவில், பல முந்தைய-ரோம(pre-Roman) நதிகளின் பெயர்கள், அமெரிக்காவில் காலனியத்திற்க்கு-முந்தைய நதிகளின் பெயர்கள், ஆகியவை இன்னும் புழக்கத்தில் உள்ளன. நதிகளின் பெயர்கள் மொழியியலில் மாற்றங்களுக்கு உட்படாத சிறப்பம்சங்களில் ஒன்று. வட-மேற்கின் நதிகளின் பெயர்கள் ஒன்றை நமக்கு தெளிவாக அறிவிக்கிறது : இந்தோ-ஆரிய மொழி அப்பகுதியில்(வட-மேற்கில்) பல காலமாக புழக்கத்தில் இருந்திருக்கிறது.

மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத்தின் கடலோர பகுதிகள் சிலவற்றின் பெயர்களில் திராவிட பெயர்களின் தடயங்கள் உள்ள போதிலும், இப்பகுதிகள் ஹரப்பர்களின் மைய வாழ்நிலமாக இருந்ததில்லை. இப்பகுதிகளில் திராவிட மொழி பேசுவோர்கள் வாழ்ந்த காலம் தெளிவாக அறியப்படாத வரை, ப்ருஹீ விஷயத்தில் நாம் இழைத்த தவறுகளை இவ்விஷயத்திலும் செய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.

முடிவாக, சிந்து குறியீடுகளிலிருந்து தொல்-திராவிட மொழியை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஐந்து பெரும் முயற்சிகளை நாம் நினைவில் கொள்வது நல்லது. அவை, பாதிரியார் ஹீராஸ்(Heras), அஸ்கோ பார்போலா(Asko Parpola) தலைமையிலான பின்லாந்து குழு, யுரி நோர்சோவ்(Yuri Knorozov) தலைமையிலான ரஷ்ய குழு, வால்டர் ஃபேர்செர்விஸ் மற்றும் ஐ.மகாதேவன். இவர்கள் அனைவரின் ஆராய்ச்சிகளின் வெவ்வேறு முடிவுகளை சுருக்கமாக சில வார்த்தைகளில் கூறுவதெனில், இவர்களில் எந்த இரு அறிஞர்களும் மற்றவரின் மறைகுறியீட்டு பொருள் விளக்கத்தை(Decipherment) ஒத்துக்கொள்ளவில்லை, அல்லது சிந்து குறியீட்டின் “திராவிட” அம்சங்கள் குறித்த அறிதலை கூட ஏற்கவில்லை. திராவிடர்கள் குறித்த இத்தகைய ஆய்வுசூழல், குறிப்பாக பர்போலா, நோர்சோவ் மற்றும் மகாதேவன் ஆகியோரின் நீண்ட மற்றும் கணிணியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட கடும் உழைப்பிற்க்கு பிறகும் இத்தகையதொரு சூழல் நிலவுவது, நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

திராவிட-ஹரப்பன் சமன்பாடு சந்திக்கும் ஏழு தடங்கல்கள்

மொழியியல் சான்றுகளை தொடர்ந்து, (சிந்து நாகரிகம் மீதான)திராவிட இனத்தின் உரிமையை அறிவிப்பதில் நாம் பின்வரும் ஏழு இடர்பாடுகளை சந்திக்கிறோம். இந்த இடர்பாடுகளை நான் முடிந்தவரை சுருக்கமாக அளிக்கிறேன்.

1. சிந்து-சரஸ்வதி நாகரிகத்தில், “திராவிட கலாச்சாரம்” என்றழைக்கபடும்(”தொல்-சிவன்”(proto-Shiva) போன்றவை) ஒன்றின் கூறுகள் இருப்பதாக கூறும் வாதங்கள் நம்மை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றன. கடந்த 5000 வருடங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட கலாச்சாரம் எதுவும் இருந்ததாக நாம் அறியவில்லை. ஆகையால், இரண்டாயிரம் வருடங்களுக்கான பள்ளத்தை ஆதாரமற்ற முடிவுகளால் நிரப்புவது முறைகேடானது.

2. சங்க இலக்கியங்கள், வட-மேற்கிலிருந்து பெரும் அளவிலான மக்கள் குடிபெயர்ந்த நிகழ்வு குறித்தும், படையெடுத்த ஆரியர்கள் உடனான மோதல் குறித்தும், எந்த தகவலையும் கொண்டிருக்கவில்லை.

3. சிந்து-சரஸ்வதி நாகரிகத்தின் நகர் சார்ந்த காலகட்டம் முடிவிற்க்கு வந்ததை தொடர்ந்து, தக்காணம்(Deccan) வழியாக தெற்கு நோக்கிய குடிபெயர்தல் நிகழ்ந்தமைக்கான எந்தவித தொல்லியல் சான்றுகளும் இல்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆர்.எஸ்.ஷர்மாவின் வரைபடத்தை(Fig.1) போன்ற “மொழி” சார்ந்த திராவிட குடிபெயர்ப்பை விளக்கும் வரைப்படங்கள், நிதர்சனத்தில் எந்தவித ஆதாரத்தின் அடிப்படையிலும் நிலைக்கொள்ளாமல், வெறும் கற்பனை சஞ்சாரத்தில் மட்டுமே சாத்தியம். பிந்தைய ஹரப்பர்கள் கங்கை சமவெளி மற்றும் குஜராத் நோக்கி குடிபெயர்ந்தமைக்கான ஆதாரம் மட்டுமே நம்மிடம் இருக்கின்றன.

4. குடிபெயர்வை தவிர்த்து, ஹரப்ப தொல்பொருட்கள் மற்றும் அவர்களின் அம்சங்கள் எதுவும் விந்திய மலையின் தெற்கு பகுதியில் காணக்கிடைப்பதில்லை : பானைகளில் ஹரப்ப உருவங்கள், ஹரப்ப முத்திரைகள், கலைப்பொருட்கள் மற்றும் ஆபரணங்கள், ஹரப்ப நகர்புற வாழ்க்கையின் எந்த தடயங்கள்(துல்லியமான வீதங்கள்(ration) கொண்ட வேகவைத்த செங்கல்கள் உட்பட) , குடிமை சமூகத்தின் அமைப்பு, விரிவான வெண்கலம் குறித்த தொழில்நுட்பங்கள், படிக(chert) அளவைகள், போன்ற பல; இவையேதும் காணப்படவில்லை. வட இந்தியாவில், ஹரப்பர்களின் காலம் முதல் வரலாற்று காலம் வரை, தென்படும் கலாச்சார தொடர்ச்சி பெருமளவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் தென்னிந்தியாவில் அத்தகைய தொடர்ச்சி எதுவும் காணப்படவில்லை[24]. உண்மையில், தென்னிந்தியாவில் தனித்துவமான செம்பு யுகம்(Chalcolithic or Copper phase) என்ற ஒன்று காணப்படவில்லை. இது எதை குறிக்கிறதென்றால், தென் பகுதியை சேர்ந்த பிற்கால ஹரப்பர்கள், முன்னேறிய நகர் சார்ந்த வெண்கல-யுக கலாச்சாரத்தில் இருந்து புது-கற்கால யுகத்தை நோக்கி பின்னோக்கி பயணத்திருக்கலாம் என்பதையே! ஆக, ஹரப்பர்களின் தெற்கு நோக்கிய குடிபெயர்தல் குறித்த வாதம் இரட்டை “தொல்லியல் அதிசயங்களை” நிகழ்த்துகிறது: நிதர்சனத்தில் எந்த ஆதாரமுமற்ற ஒன்று என்பதாக இருந்தாலும், குடிபெயர்ந்த மக்கள் தங்கள் மரபிலிருந்து முற்றிலுமாக தங்களை துண்டித்துக் கொண்டதையே இது குறிக்கிறது. இத்தகைய நிகழ்வு (தொல்லியலில்)இது வரை கேள்விப்படாத ஒன்று.

5. ஹரப்பர்கள் தெற்கு நோக்கி குடிபெயர்ந்திருந்தால், சமீபத்திய உயர்தரமான துறைகளான உயிரியல்-மானுடவியல்(biological anthropology) போன்றவை அதை ஊர்ஜிதப்படுத்தியிருக்கும். கே.ஏ.ஆர்.கென்னடி[25], ஜான் லூக்காஸ் மற்றும் பிரைன் ஹெம்பில்[26], ஹரப்பர்கள் தெற்கு நோக்கிய குடிபெயதலை மறுக்கும் விதமாக, பொது யுகத்திற்கு முந்தைய(BCE) ஆண்டான 4500 முதல் 800 வரையிலான காலகட்டத்தில் வட-மேற்கில் காணப்பட்ட உயிரியல் தொடர்ச்சியை நிறுவியுள்ளனர். குறிப்பாக, ஆரிய படையெடுப்பு நடைபெற்றதாக கூறப்படும் பொது யுகத்திற்கு முந்தைய 1500-ஆம் ஆண்டை ஒட்டிய காலகட்டங்களின் மண்டை ஓடுகளின் வடிவில் எத்தகைய ஒழுங்கின்மையும்(மாறுபாடுகள்) இல்லை. இது எதை குறிக்கிறதென்றால், ஹரப்பர்கள் அனைவரும், தற்கால பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, சிந்தி மற்றும் குஜராத்திகளின் முன்னோர்கள் என்பதையே. காலனிய பார்வையில் எழுந்த கற்பனை சார்ந்த எந்த ஒரு குடிபெயர்வு குறித்த கருத்துக்களும், நிதர்சனத்தில் எந்த சான்றையும் கொண்டிருக்கவில்லை.

6. சமீபத்திய மரபணு சோதனைகள், பொது யுகத்திற்கு முந்தைய(BCE) 2000-மாவது ஆண்டில் “ஆரியர்கள்” என்றழைக்கப்படுவோரின் வருகையை முற்றிலும் மறுத்து, மேற்சொன்ன முடிவிற்க்கு வலுசேர்த்துள்ளன[27]. சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று[28], 36 இந்திய மக்கட்குழுக்களின் 728 மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு, “திராவிட மொழி பேசுவோர் இந்தியாவில் தோன்றியதை ஊர்ஜிதப்படுத்தும் பரவலான சான்றுகளை” கொண்டுள்ளதாகவும், “எங்கள் தரவுகள் திராவிட மொழி பேசுவோர் சிந்து நாகரிகத்தவர்கள் என்பதை மறுத்து இந்திய தீபகற்பத்தில் தோன்றியதை உறுதிபடுத்திகிறது…” என்று கூறியுள்ளனர்.

7. விவசாயத் துறையை எடுத்துக்கொண்டால், பிரிட்டிஷ் தொல்லியல் ஆய்வாளரும் மற்றும் தொல்லியல்-தாவரவியலாளருமான(archaeobotanist) டோரியன் புஃல்லர்(Dorian Fuller)[29], சமீபத்திய தொல்லியல்-தாவரவியல் சான்றுகளை திராவிட மொழியியல் சான்றுகளுடன் பொறுத்திப்பார்த்து, “தொல்-திராவிடர்கள் நவீன திராவிடர்களின் மையப் பரப்பெல்லையில்(core range) எங்கோ தான் இருந்திருக்கிறார்கள்”, அதாவது, தென்னிந்தியாவில் இருந்திருக்கிறார்கள் என்ற முடிவிற்க்கு வருகிறார்.

சரஸ்வதி நதி போன்ற முக்கியத்துவமில்லாத விவரங்களை முன்வைக்காமல் கூட, பிற துறைகளான – தொல்லியல், மானுடவியல், மரபணுவியல் மற்றும் மரபு போன்றவை – பிற்கால ஹரப்பர்களின் தென்னிந்தியாவை நோக்கி மேற்கொண்டாதாக கூறப்படும் “பெரும் பயண”த்தின் சாத்தியங்களை மறுப்பதை நாம் அறிய முடியும்.(அதோடு, சிந்து-சரஸ்வதி நாகரிகத்தின் முதிர்ந்த(mature) காலகட்டத்திற்க்கு முந்தைய வருடங்களில் நடைபெற்றதாக கூறப்படும் ”திராவிடர்”களின் எதிர்திசை பயணம் குறித்த, அதாவது தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய பயணம் குறித்த கற்பனையான கருத்துக்களையும் இவை மறுதலிக்கின்றன). இத்தகைய (கற்பனையான)கருத்துக்களை தீவிரமாக முன்வைக்கும் அறிஞர்கள், குறியீடுகளுக்கு இடையேயான ஒற்றுமைகள் குறித்து அகவயப்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதை விட, மேற்சொன்ன விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியம்.

முடிவுரை

சிந்து நாகரிகம் மீதான திராவிடர்களின் உரிமை குறித்த கருத்துக்கள், ஆரிய படையெடுப்புக் கோட்பாடு குறித்த காலனிய ஆராய்ச்சிகளின் எஞ்சிய மிச்சங்களே. ஆரிய படையெடுப்பு குறித்த ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக விளங்குவதால் இன்று வரை இவை உயிர்ப்புடன் உள்ளது. ஒரு சில சித்தாந்தங்களின் துணையுடன் இந்த ஆராய்ச்சிகள் அசைக்க முடியாத தூணைப் போல் நிறுவப்பட்டுள்ளது.

“ஆரிய இனம்” அல்லது “திராவிட இனம்” என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை. எப்போதும், அந்த கருத்துருக்களுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் அளிக்க முயலும் யாரும், அத்தகைய ஒன்று என்றுமே இருந்ததில்லை என்பதை வெகு விரைவில் கண்டுகொள்கிறார்கள்.

இந்தியாவின் தொல்-வரலாறு குறித்த நமது காலத்திற்க்கு ஒவ்வாத மற்றும் எளிய வரைவுகளை நாம் மீள்வாசிப்பு செய்ய வேண்டிய முக்கியமான காலகட்டம் இது. நம்மிடம் தற்போது நிலவும் இந்திய தொல்-வரலாறு எந்த வகையிலும் உதவாத, அதே சமயம், நம்மை முடிவில்லாத முரண்பாடுகளுக்குள் கொண்டு சேர்ப்பவை. கிடைக்கும் தொல்பொருட்களை புறவயமாக ஆராய வேண்டிய புனித கடமை அறிஞர்களுக்கு உண்டு.

தமிழ் கலாச்சாரம் தன்னளவிலேயே உயர்ந்து விளங்கும். ஹரப்பர்களின் தோளில் ஏறி நின்று தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டிய தேவை அதற்கில்லை.

-o00o-

உதவிய புத்தகங்கள்

1. Léon Poliakov, The Aryan Myth: A History of Racist and Nationalist Ideas in Europe, New York: Basic Books, 1974.

2. Maurice Olender, The Languages of Paradise: Race, Religion, and Philology in the Nineteenth Century, Cambridge, Massachusetts, and London: Harvard University Press, 1992.

3. Thomas R. Trautmann, Aryans and British India, New Delhi: Vistaar Publications, 1997.

4. Stefan Arvidsson, Aryan Idols: Indo-European Mythology as Ideology and Science, Chicago: The University of Chicago Press, 2006.

5. Michel Danino, The Invasion That Never Was, 2nd ed., Mysore: Mira Aditi, 2001, provides an overview of those twin myths (especially ch. 1).

6. Such as Swami Dayananda Saraswati, Swami Vivekananda, Sri Aurobindo, B.R. Ambedkar, among others (see previous note, ch. 2).

7. Ram Sharan Sharma, Advent of the Aryans in India, New Delhi: Manohar, 2001, p. 51.

8. From the leaflet announcing the Symposium, authored by Dr. Sitharam Gurumurthi.

9. As reported in The Hindu, May 01, 2006: “ ‘Discovery of a century’ in Tamil Nadu” by T .S.Subramanian.

10. For instance, B.B. Lal, “From the Megalithic to the Harappa: Tracing Back the Graffiti on the Pottery,” in Ancient India No. 16, 1960, pp. 4-24.

11. For instance, S. Gurumurthy, Deciphering the Indus Script … From Graffiti on Ancient Indian Pottery, Chennai: University of Madras, 1999.

12. Walter A. Fairservis, Excavations at the Harappan Site of Allahadino: The seals and other inscribed material, New York: Papers of the Allahdino Expedition, No. 1. This table is reproduced in Gregory L. Possehl, Indus Age: The Writing System, New Delhi: Oxford & IBH, 1996, p. 59.

13. S.R. Rao, “New Light on Indus Script and Language,” in Frontiers of the Indus Civilization, eds. B.B.Lal & S.P. Gupta, New Delhi: Books and Books, p. 197.

14. Guillaume de Hevesy, 1935, reproduced in Gregory L. Possehl, Indus Age: The Writing System, op.cit., p. 94; another table can be seen p. 95.

15. Asko Parpola, “Comments on the Incised Stone Axe Found in Tamil Nadu in 2006” in the collection of abstracts of papers presented at the Symposium, p. 26.

16. Edwin Bryant, The Quest for the Origins of Vedic Culture: The Indo-Aryan Migration Debate, New York: Oxford University Press, 2001, pp. 80-81.

17. Hans Henrich Hock, “Philology and the Historical Interpretation of the Vedic Texts,” in The Indo-Aryan Controversy: Evidence and Inference in Indian History, eds. Edwin F. Bryant & Laurie L.Patton, London & New York: Routledge, 2005, p. 286 and the references to his earlier works.

18. Murray Emeneau, Language and Linguistic Area, Stanford: Stanford University Press, 1980, p. 177, quoted by Edwin F. Bryant, “Linguistic Substrata and the Indigenous Aryan Debate,” in Aryan and Non-Aryan in South Asia: Evidence, Interpretation and Ideology, eds. Johannes Bronkhorst & Madhav M. Deshpande, Cambridge: Harvard University, p. 71.

19. Jules Bloch, “Sanskrit et dravidien,” Bulletin de la Société de linguistique de Paris, No.76, 1924, pp. 1-21, quoted by Edwin Bryant in The Quest for the Origins of Vedic Culture, op. cit., p. 80.

20. Murray B. Emeneau, Brahui and Dravidian Comparative Grammar, Berkeley: University of California Publications in Linguistics, 1962, p. 27.

21. Hans Heinrich Hock, “Substratum Influence on (Rig-Vedic) Sanskrit,” Studies in the Linguistic Sciences, vol. 5, n°2, p. 88, quoted by Edwin Bryant, The Quest for the Origins of Vedic Culture, op. cit., p. 83.

22. Josef Elfenbein, “A periplus of the Brahui problem,” Studia Iranica, No.16.2, 1987, pp. 215-233, quoted by Edwin Bryant, ibid.

23. Bernard Sergent, Genèse de l’Inde, Paris: Payot, 1997, p. 130.

24. See for instance: Jonathan Mark Kenoyer, Ancient Cities of the Indus Valley Civilization, Karachi & Islamabad: Oxford University Press & American Institute of Pakistan Studies, 1998; B.B. Lal, The Sarasvati Flows On: The Continuity of Indian Culture, New Delhi: Aryan Books International, 2002; Michel Danino, “The Harappan Heritage and the Aryan Problem” in Man and Environment, Pune, 2003, vol. XXVIII, No. 1, p. 21-32.

25. Kenneth A.R. Kennedy, “Have Aryans been identified in the prehistoric skeletal record from South Asia?” in The Indo-Aryans of Ancient South Asia: Language, Material Culture and Ethnicity, ed. George Erdosy, Berlin & New York: Walter de Gruyter, 1995, pp. 32-66.

26. B.E. Hemphill, J.R. Lukacs & K.A.R. Kennedy, “Biological adaptations and affinities of the Bronze Age Harappans,” in Harappa Excavations 1986-1990: A Multidisciplinary Approach to Third Millennium Urbanism, ed. R.H. Meadow, Madison: Prehistory Press, 1991, pp. 137-182

27. For a summary of recent genetic findings, see Michel Danino, “Genetics and the Aryan Debate,” Puratattva, Bulletin of the Indian Archaeological Society, New Delhi, No.36, 2005-06, pp. 146-154.

28. Sanghamitra Sengupta, Lev A. Zhivotovsky, Roy King, S.Q. Mehdi, Christopher A. Edmonds, Cheryl-Emiliane T. Chow, Alice A. Lin, Mitashree Mitra, Samir K. Sil, A. Ramesh, M.V. Usha Rani, Chitra M. Thakur, L. Luca Cavalli-Sforza, Partha P. Majumder, & Peter A. Underhill, “Polarity and Temporality of High-Resolution Y-Chromosome Distributions in India Identify Both Indigenous and Exogenous Expansions and Reveal Minor Genetic Influence of Central Asian Pastoralists,” American Journal of Human Genetics, February 2006; 78(2):202-21.

29. Dorian Fuller, “An Agricultural Perspective on Dravidian Historical Linguistics: Archaeological Crop Packages, Livestock and Dravidian Crop Vocabulary,” ch. 16 in Examining the farming/language dispersal hypothesis edited by Peter Bellwood & Colin Renfrew, The McDonald Institute for Archaeological Research: 2003.