வயலின் 35 லட்சம் டாலர், வசூல் 32 டாலர்!

டிசம்பர் சீசன். சங்கீதக் கச்சேரிகள் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. டி.வி.யில் கச்சேரி பார்ப்பதில் ஒரு பிரச்னை; ஒன்றி அனுபவிக்க விடாமல் நடுநடுவே நாராசமாகத் தலை நீட்டும் டாய்லெட் க்ளீனர் விளம்பரங்கள். நேரில் போய்க் கேட்கலாம் என்று சபாவுக்குப் போனால் அங்கே சரியாக நம் பின் சீட்டில் வந்து உட்காரும் எட்டுக் கல் பேஸரி அணிந்த மாமிகள், தங்களது கலிஃபோர்னிய மருமகளின் அக்கிரமங்களைப் பற்றி வாய் ஓயாமல் அரட்டை அடிப்பார்கள். போதும் போதாததற்கு, செல் போன்களின் ரிங் டோன்களில் ரீமிக்ஸ் சினிமாப் பாட்டுகளின் அராஜகம்.

இசையைப் புரிந்துகொள்வதிலும் அனுபவிப்பதிலும் சுற்றுப்புறச் சூழ்நிலை – context – என்பதன் பங்கு என்ன என்பது பற்றி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை ஒரு சுவாரசியமான ஆராய்ச்சி நடத்தியது. அந்த விவரங்களுக்குப் போவதற்கு முன், இசை என்றால் என்ன என்பதிலேயே சற்றுக் கருத்து வேறுபாடு உண்டு. அறிவியல் பூர்வமாக விளக்கக் கடினமான விஷயங்களில் அது ஒன்று. ஐன்ஸ்டைன் கூடச் சொன்னாரே – “உலகத்தில் எதை வேண்டுமானாலும் விஞ்ஞானத்தால் விளக்க முடியும். ஆனால் பீத்தோவனின் அருமையான ஸிம்ஃபனி ஒன்றை, ‘காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் உயர்வு தாழ்வுகள்’ என்று வர்ணித்தால் அதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா ?”

டானியல் லெவிடின் ‘This is your brain on music’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். லெவிடின் ஓர் இசைக் கலைஞர், சவுண்ட் எஞ்சினியர், ஆல்பம் தயாரிப்பாளர். சங்கீத பிசினஸின் சாகசங்களும் சதிகளும் பிடிக்காமல் இசை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார். நியூரோ சயன்ஸ் துறையில், நம் மூளை இசையை எப்படிப் புரிந்து கொள்கிறது என்பதில் இன்றைக்கு அவர்தான் எக்ஸ்பர்ட்.

லெவிடின், இசை மேதைகளுக்கும் சாதாரண மக்களுக்கும் மூளையின் அமைப்பில் எந்தவித வித்தியாசமும் இல்லை என்கிறார். இசையை ரசிப்பது, அமைப்பது இரண்டும் நாம் பிறந்தபோதே மூளையில் ப்ரொக்ராம் செய்யப்பட்டிருக்கிறது. உதாரணமாக, சரியான சுருதியைப் பிடிப்பதற்குத் தனிப்பட்ட திறன் எதுவும் தேவையில்லை, பயிற்சிதான் அவசியம். சுத்தமான அதிர்வு எழுப்பும் இசைக் கவையின் (tuning fork) ஒலியைக் கேட்டுக் கேட்டுப் பழகிய பிறகு, சங்கீத உணர்வே இல்லாதவர்களுக்குக் கூட சுருதியில் வந்து ‘டக்’கென்று நிற்க முடிகிறது. (கச்சேரியின் நடுவே மேல் ஷட்ஜத்தைப் பிடிக்க முடியாமல், கையாலேயே விட்டத்தை சுட்டிக் காட்டி சமாளிக்கும் வித்வான்கள் கவனிக்கவும்).

இசை மேதையாக ஆவதற்கு என்ன தேவை ? அது இயற்கையிலேயே வந்த வரமா, போன பிறவியில் ஏதோ ஒரு தெய்வத்துக்குத் தேன் அபிஷேகம் செய்த புண்ணியமா ? சிலருக்கு மட்டும் ஜீன்களிலேயே சரிகமபதநி இருக்கிறதா ? இதற்கு லெவிடின் சொல்லும் ஒரே பதில், ‘இல்லை’ என்பதுதான். பயிற்சிதான் ஒருவரை சிறந்த இசைக் கலைஞராக ஆக்குகிறது. எவ்வளவு பயிற்சி செய்ய வேண்டும் என்பதையும் குத்து மதிப்பாகக் கணக்கு போட்டுச் சொல்ல முடியும் : ஒருவர் தன் வாழ்க்கையில் பத்தாயிரம் மணி நேரம் கடுமையாகப் பயிற்சி செய்தால் ஏறக் குறைய மாஸ்ட்ரோ ஆகிவிடலாம். அரியக்குடி, குன்னக்குடி போன்றவர்கள் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்; இசையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தங்கள் வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு வாழ்ந்த வருடங்களைச் சொல்வார்கள்.

அன்றைக்கு நீடாமங்கலத்தில் வாழ்ந்த பாகவதர் ஒருவர், தன் சிஷ்யப் பிள்ளைகளை அதிகாலையில் குளத்தங்கரைக்கு அழைத்துப் போய், கழுத்தளவு தண்ணீரில் நின்று சாதகம் செய்யச் சொல்வாராம். யாராவது எஸ்.பி.சி.ஏ.விடம் சொல்லி மிருக வதைச் சட்டத்தில் பாகவதரை புக் செய்தார்களா என்பது தெரியவில்லை.

அவர்கள் பயிற்சிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததை இன்று விஞ்ஞானமும் வழி மொழிகிறது. பிறக்கும்போதே ஒருவர் சங்கீதக் காதுடன் பிறந்தாரா, இரும்புக் காதுடன் பிறந்தாரா என்பது இசை அறிவிற்கு முக்கியமில்லை.

அப்படியானால் எட்டு வயதிலேயே இசையில் அசத்திய மொசார்ட் போன்றவர்கள் கதை என்ன ? ஒரு சின்னக் கணக்கு போட்டுப் பார்ப்போம் : மொசார்ட்டின் தந்தை மற்றொரு நீடாமங்கலம் பாகவதர்; இரண்டு வயதிலேயே ஆரம்பித்து அந்தப் பச்சைக் குழந்தையை சங்கீத இம்சை செய்திருக்கிறார். தினம் நாலரை மணி நேரப் பயிற்சி. ஒரு வாரத்துக்கு 32 மணி நேரம் என்று வைத்துக் கொள்ளலாம். வருடத்துக்கு 1664 மணி ஆகிறது. எனவே மோசார்ட்டுக்கு எட்டு வயதாகும்போது திடமாகப் பத்தாயிரம் மணி நேரப் பயிற்சியை முடித்துவிட்டிருக்கிறார் ! பிறகென்ன, மேதைதானே ?

மறுபடி வாஷிங்டன் போஸ்ட் பரிசோதனைக்கு வருவோம் : அமெரிக்கத் தலைநகரில் ஒரு பிசியான சப்வே ரயில் நிலையம். காலை எட்டு மணி. ஒவ்வொரு ரயில் வந்து நிற்கும்போதும் தேன் கூட்டைக் கிளறி விட்டது போல் மக்கள் உதிர்ந்து கலைந்து விரைந்து கொண்டிருக்கிறார்கள். எஸ்கலேட்டர் முடியும் இடத்தில் குப்பைத் தொட்டிக்குப் பக்கத்தில் இளைஞர் ஒருவர் நின்று கொண்டு அருமையாக வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறார். அவர் எதிரே சில டாலர் நோட்டுகள், சில்லறைக் காசுகள். இரண்டொருவர் போகிற போக்கில் ஒரு காசை வீசிவிட்டுப் போகிறார்கள். கல்கி பாஷையில் சொன்னால் கர்ணாமிருதமான இசை. ஆனால் நின்று கவனிக்கவோ, கேட்டு ரசிக்கவோ அங்கே யாருக்கும் நேரமில்லை.

ஜோஷ்வா பெல்

ஜோஷ்வா பெல்

இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது – ரயில்வே ஸ்டேஷன் பிச்சைக்காரர்களை யாராவது அகாடமி ஆடியன்ஸ் போல உட்கார்ந்து ரசிப்பார்களா என்கிறீர்களா ? அன்று வயலின் வாசித்தவர் யாரோ பிச்சைக்காரர் அல்ல; உலகத்தின் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களில் ஒருவரான ஜோஷுவா பெல் !

ஸிம்ஃபனி ஹாலில் அவருடைய இசை நிகழ்ச்சி நடந்தால் டிக்கெட் விலை குறைந்தது நூறு டாலர். அதுவும் நிற்க இடமில்லாமல் ஹவுஸ் ஃபுல் ! வெறி பிடித்த ரசிகர் பட்டாளமே அவருக்கு உண்டு. ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் போனால் முடி மன்னர்களெல்லாம் கூப்பிட்டு வைத்து மரியாதை செய்வார்கள்.

இந்த மாதிரி ரயில்வே ஸ்டேஷனில் அவரை யாருமறியாமல் ப்ளாட்ஃபாரக் கச்சேரி செய்ய வைத்தது, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்த பாதி குறும்பு, பாதி சீரியஸான பரிசோதனை. தினசரிக் கடமைகளில் ஆபீஸ் அவசரத்தில் பரபரத்துக் கொண்டிருப்பவர்கள், எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத சூழ்நிலையில் உலகத் தரமான இசையைச் சந்தித்தால் அதை அடையாளம் கண்டு கொள்வார்களா ? நாம் கலையை ரசிப்பதில் context என்பதன் பங்கு என்ன ?

அன்றைக்கு ஜோஷுவா வாசித்தது, நூற்றாண்டுகளாக இருந்து வரும், காலத்தால் அழியாத கிருதிகள். பாக், ஷூபர்ட், மாஸ்ஸனெட். அவர் கையில் இருந்த வயலின், 1713-ல் புகழ் பெற்ற இத்தாலிய வயலின் தயாரிப்புக் கலைஞர் ஸ்ட்ராட் தன் கைப்படத் தயாரித்தது. விலை 35 லட்சம் டாலர்.

அந்த முக்கால் மணி நேரத்தில் ஆயிரம் பேருக்கு மேல் ஜோஷுவாவைத் தாண்டிச் செல்கிறார்கள். வெள்ளையர்கள், கறுப்பர்கள். ஆசியர்கள். இளைஞர்கள், முதியவர்கள். இன, நிற, வயது வித்தியாசமில்லாமல் அத்தனை பேரும் அந்த அருமையான இசை அருவியுனூடே புகுந்து எதுவுமே நடக்காததுபோல், எதுவுமே கேட்காதது போல் போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஐபாட் வைத்திருக்கும் சிலர் இரண்டு காதிலும் இயர்போன் அடைத்துக்கொண்டு நடக்கிறார்கள்; டப்பாவில் அடைக்கப்பட்ட டிஜிட்டல் ஓசைகளில் கரைந்து தன் கண்ணெதிரே நடக்கும் வித்தியாசமான உயிர்க் கச்சேரியை முழுவதும் புறக்கணிக்கிறார்கள்.

நின்று கவனிக்க விரும்பியவை குழந்தைகள் மட்டும்தான். அவர்களை அவசரப் பெற்றோர்கள் தரதரவென்று இழுத்துப் போக, அவை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போகின்றன. ஒரு சிலர் அந்த மாபெரும் இசைக் கலைஞனின் எதிரே சில்லறைக் காசுகளை வீசிவிட்டுப் போகிறார்கள். ஒவ்வொரு பாட்டு முடிந்ததும் வழக்கமான அப்ளாஸ் இல்லை, ஆரவாரம் இல்லை. ஒரு புருவத் தூக்கல் கூட இல்லை.

இந்த நிகழ்ச்சி எழுப்பும் முக்கியமான கேள்வி, அழகு என்றால் என்ன ? கலை என்றால் என்ன ? அது தன்னளவில் அனுபவித்து, அளவிடக் கூடியதா, அல்லது பார்வையாளனின் அந்த நேரத்து மன நிலையின் பிரதிபலிப்புதானா ?

அன்றைய நிகழ்ச்சி முழுவதும் ரகசிய வீடியோ காமிராவில் பதிவு செய்யப்பட்டது. அதை ஃபாஸ்ட் ஃபார்வர்டில் போட்டுப் பார்த்தால் தமாஷாக இருக்கும். பழைய கால சார்லி சாப்ளின் படங்கள் போல் வேடிக்கையான சிறிய உருவங்கள் தாவித் தாவி ஓடுகின்றன. பல பேர் காதில் செல்போனை ஒட்ட வைத்துக்கொண்டே ஓடுகிறார்கள். அல்லது கையில் ப்ரீஃப் கேஸ்களையும் காகிதங்களையும் காப்பிக் கோப்பைகளையும் சமாளிக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். நாய் லைசென்ஸ் மாதிரி கழுத்தில் மாட்டியிருக்கும் அடையாள அட்டை அவர்களுடைய தொப்பைகளில் மோதி மோதி விலகுகிறது. நவீன நகர வாழ்க்கையின் அவசரமும் அலட்சியமும் அபத்தமும் கலந்த சரியான கார்ட்டூன் நடனம்… அட, அது நாமேதான்!

இந்த சப்வே பரிசோதனையில் எடுக்கப்பட்ட வீடியோவைக் கீழே பார்க்கலாம்:

ஒரு வேளை நாமெல்லாம் ஆபீஸ் போகும், பணம் சம்பாதிக்கும் அவசரத்தில் மரத்துப் போய்விட்டோமா? நம் வாழ்க்கையில் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி உலகத்தின் மிகச் சிறந்த கலைஞன் வாசிக்கும் மிகச் சிறந்த இசைக் கோவையைக் கேட்கவும் நேரமின்றி செவிடாகக் குருடாகப் போய்விட்டோமா ? இது போல இன்னும் என்னவெல்லாம் இழந்துகொண்டிருக்கிறோம் ?

பி.கு : ஜோஷுவாவின் பிச்சைப் பாத்திரத்தில் அன்று வசூலான தொகை, 32 டாலர் சில்லறை !