மங்களம் பாடும் இசைப்பத்திரிகைகள்
மேற்கின் பிரபலமான இசைப்பத்திரிகைகள் கொஞ்ச கொஞ்சமாகக் கடையை மூடிவருகின்றன. Vibe பத்திரிகை சென்ற மாதத்தோடு பதிப்பை நிறுத்திக் கொண்டது. Spin என்ற பத்திரிகை பாதியாக ஆட்குறைப்பு செய்துவிட்டது. Rolling Stone, Blender போன்ற பிரபல பத்திரிகைகளுக்கும் இதே கதிதான். என்ன காரணம்? மூன்று காரணங்கள் முக்கியமானவை என்று ஜோனா வெய்னர் ஒரு பெரிய அலசலைச் செய்திருக்கிறார். பொதுவாக நம் சமூகச்சூழலின் மாற்றம் இப்பத்திரிகைகளையும் பாதிக்கிறது என்று இவர் எழுதியிருக்கும் சுவாரசியமான கட்டுரை இங்கே.
மொழியறியாவிட்டாலும் தியாகராஜரின் உணர்ச்சிகளை நம்மால் உணர்ந்து கொள்ள முடிவதன் காரணம் என்ன? இசைக்கும் மானுட உணர்ச்சிகளுக்கும் ஆதாரமான தொடர்பு இருக்கக் கூடுமா? அதனால்தான் நமக்கு இசை அங்கெங்கினாதபடி காலை நம்மை எழுப்பும் அலாரக்கடிகாரம் முதல் செல்போன் ரிங்டோன், காரின் ரிவர்ஸ் கியர் என எல்லா இடத்திலும் தேவைப்படுகிறதா? இசை நாம் உணர்ச்சிகளை அறிவதில் தாக்கம் ஏற்படுத்துகிறது என்கிறார்கள் நித்யா லோகேஸ்வரனும் ஜோய்தீப் பட்டாச்சார்யாவும். இசை உண்மையில் மொழியின் ஒரு வித உயர் அறிதல் வடிவமா? இந்த உளவியலாளர்களின் ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் நம் இசைத்தேவையின் வேர்களை அலசும் ஒரு கட்டுரை இங்கே
Close encounters of the Third Kind பார்த்திருக்கிறீர்களா? வேற்றுக்கிரக ஜீவராசிகளுடன் தொடர்பு கொள்ள இசையை பயன்படுத்துவார்கள். இசை ஒரு பிரபஞ்சமளாவிய மொழி (universal language) ஆக முடியுமா? பிரபஞ்சத்தை விடுங்கள்…பூமியளாவிய பொது இசை கூட இருக்கமுடியாது போலிருக்கிறதே… மனிதர்களுக்கு பிடித்த இசை வேறு பிற குரங்கினங்களுக்கு பிடித்த இசையின் தன்மை வேறாம். தாமரின் இன குரங்குகள் ஸென் துறவிகளாக இருந்திருக்கும் போல. மொஸார்ட்டின் இசையைக் காட்டிலும் மௌனமே அவற்றுக்கு பிடிக்குமாம். இந்த ஆய்வுகள் குறித்த சுவாரசியமான ரிப்போர்ட் இங்கே.
எதுவானாலும் வேற்றுக்கிரக வாசிகளுடன் தொடர்பு கொள்ள இசையைக் காட்டிலும் கணிதம்தான் சரியாக இருக்கும். இதை வைத்து டெட் சியாங் ஒரு அருமையான குறுநாவல் எழுதி இருக்கிறார். நேரம் கை கூடினால், அதன் மொழி பெயர்ப்பு சொல்வனத்தில் பிரசுரமாகும்.
எழுதியது நீதானா? சொல் சொல் சொல்….
அண்மையில், ஆவியுலகங்களை நம்பும் நண்பர், மறைந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரிடமிருந்து அவர் எழுதாமல் விட்ட நாவல் ஒன்றை ஆவியுலகிலிருந்து டவுண்லோட் செய்து கொண்டு வந்தார். எழுதியது உண்மையிலேயே ஆவியுலகில் வாழும் தமிழ் எழுத்தாளரா அல்லது நண்பர்தானா என எப்படித் தெரிந்து கொள்வது? ஒவ்வொடு எழுத்தாளருக்கும் ஒருவித மொழியியல் கையெழுத்து இருக்கலாம். இந்த மொழியியல் கையெழுத்து வார்த்தைகளை பயன்படுத்தும் முறையில் பதங்களின் பிரயோக எண்ணிக்கையின் மூலமாக அறிந்து கொள்ள முடியும். தாமஸ் ஹார்டி, டி.எய்ச். லாரன்ஸ் மற்றும் ஹெர்மன் மெல்வில் (Herman Melville) ஆகியோரின் இலக்கியங்கள் அவற்றின் அத்தியாயங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த இயற்பியலாளர் ஒருவர் இந்த முறையைப் பயன்படுத்தி எழுத்தாளர்கள் எழுதியதாகக் கூறப்படுபவை அவர்களுடையதுதானா என்பதை அறிந்து கொள்ளலாம் என்கிறாராம். இது குறித்த விவரங்களை இங்கே காணலாம். நமக்கு உடனே தோன்றியது என்ன? டிகேசிக்கு இந்த முறை தெரிந்திருந்தால் கம்பனுக்கும் பயன்படுத்தியிருப்பாரே!
One Reply to “மகரந்தம்”
Comments are closed.