தனிப்பாடல்

dnews

அறிமுகம்

ஆர்ஸன் ஸ்காட் கார்ட், அமெரிக்க அதிகற்பனைப் புனைகதையாளர்.

மேலை நாட்டு அறிவியல் / அதிகற்பனைப் புனைகதைகளைப் படிப்பவர்களுக்கு ஆர்ஸன் ஸ்காட் கார்ட் (Orson Scott Card) நன்கு அறிமுகமானவர்.  இவருடைய ‘என்டருடைய விளையாட்டு’  (Ender’s Game) என்ற நாவல் உலகப் பிரசித்தி பெற்றது.  இதைப் படித்து போர், மனித நாகரிகங்களின் வரலாற்றுத் தேர்வுகள், சிறு குழந்தைகளின் உளவியல் போக்குகள் என்று பல பரிமாணங்களில் உணர்வு பூர்வமான அணுகலில் புதுச் சிந்தனைகளைத் தேடலாம்.

கார்ட் வறட்டுத்தனமான எழுத்தாளர் அல்ல.  விறுவிறுப்பும், வேகமும், திடீர்த் தாவல்களும் கொண்ட நடை இவருடையது.  மார்மன் கிருஸ்தவம் என்ற அமெரிக்க பிராண்ட் கிருஸ்தவக் குழுவைச் சேர்ந்தவர். ஆனாலும் நிறுவன மதங்களின் பிரச்சினைகளையும், அவற்றின் கண்பட்டி போட்ட செயல்பாட்டையும் விமர்சித்தே புதினம் எழுதுகிறார்.  மதத்தைக் குறித்து தான் மூன்று வகைகளான கதைகளை எழுதுவதாக இவரே சொல்கிறார்.  ஒரு வகை, அனேக அறிவியல் நவீன எழுத்தாளர்கள் போல, வாழ்வின் குறிக்கோள் என்ன என்பதைப் பற்றியும், கடவுளோடு மனிதருக்கு உள்ள உறவு குறித்தும் எழுதப்பட்டவை.   அடுத்தது, மதங்கள் பற்றி அமெரிக்க புனைகதை உலகில் இருக்கும் உளுத்துப் போன கருத்துகளை உடைத்து, நம்பிக்கை உள்ளவர்களின் பாத்திரங்களை அசல் மனிதர்களாகக் காட்ட முயல்வது.  மூன்றாவது, இறைநம்பிக்கை மூலம் தனக்குக் கிட்டிய அனுபவங்கள் வ்ழியே கிட்டிய முடிவுகளைப் பற்றியது.  சுருக்கமாகச் சொன்னால், புனிதத் தன்மை, பெருவியப்பு, நம்பிக்கை, அரவணைப்பு, பொறுப்பு, சமூகம் என்று வழக்கமாக மேலைப் புனைகதைகளில் அதிகம் பேசப்படாத கருப்பொருட்களைப் பற்றி எழுதுவதாக்த் தெரிவிக்கிறார்.  ஆனால் இவர் போராடுவது ஓரளவு மதங்கள் பால் இழிவுணர்வு பரவியுள்ள மேலை நாடுகளின் அறிவார்ந்த வாழ்வுத் தளங்களோடு.  இந்த வகைப் போராட்டம் இந்தியாவுக்கு எத்தனை பொருந்தும் என்று வாசகர்கள் தீர்மானிக்கலாம்.

– மைத்ரேயன்

மூலம்: Unaccompanied Sonata / Orson Scott Card / Tor Books/ 1990

music_topbanner

சுருதி சேர்ப்பு

ஆறு மாதக் குழந்தையாக இருந்த க்ரிஸ்டியன் ஹரொல்ட்செனுக்கு நடந்த ஆரம்பப் பரிசோதனைகள் எல்லாம்,  தாளத்தின் மீதும், லயத்தின் மீதும் அவனுக்கு இருந்த அதீத ஞானத்தை கணித்து விட்டன.  அதன் பின் அவனுக்கு வேறு சோதனைகள் இருக்கவே செய்தன, இன்னமும் பல வேறு பாதைகளும் அவனுக்குத் திறந்தே இருந்தன.  ஆனால் தாளமும், லயமுமே அவன் ஜாதகத்தில் உச்சத்தில் இருந்த அதிபதிகள், அவற்றுக்கு ஏற்கனவே வலுச் சேர்க்கும் முயற்சிகள் துவங்கி இருந்தன.    திரு.ஹரொல்ட்சென், அவர் மனைவி, இருவரிடமும் பல வகை ஓசைகளின் ஒலிப்பதிவுகள் வழங்கப்பட்டன.  க்ரிஸ்டியன் விழித்துக் கொண்டிருந்தாலும் சரி, தூங்கினாலும் சரி… எப்போதும் தொடர்ந்து அவற்றை ஒலிக்க வைக்க வேண்டும் என அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

க்ரிஸ்டியனுக்கு இரண்டு வயது இருக்கும்போது, அவனுக்கு ஏழாம் கட்டமாக, ஒரு கூட்டம் சோதனைகள் நடந்தன.  அவை எதிர்காலத்தில் தவிர்க்கவியலாதபடி அவன் வாழவிருக்கும் வாழ்க்கையைச் சுட்டின. அதாவது, அவனுடைய படைப்புத் திறன் அபாரமாக இருந்தது; அறிவதில் அவனுக்குச் சளைப்பில்லா ஆர்வம் இருந்தது; அவன் இசையறிவின் ஆழமோ… சோதனைகளிலேயே உச்ச கட்டச் சோதனை கூட அவனை “மாமேதை” என்றே அறிவித்தது.

”மாமேதை” என்னும் அப்பெயர்ச்சொல் அவனை, பெற்றோருடைய இல்லத்திலிருந்து பிரித்து, ஆழ்ந்த காட்டிலிருந்த ஒரு வீட்டுக்குக் கொண்டு போயிற்று. அது இலையுதிர் மரங்கள் அடர்ந்த நெடுங்கானகம். அங்கே குளிர்காலம் சீற்றத்துடன் மோதியது;  குறுகிய காலமே அங்கு நடந்த கோடையில், படாத பாடுபட்டுப் பேரவசரத்தில் பசுமை முட்டி முளைத்து மோதிக் கிளைத்தது.  பாட்டு வாசனையே காட்டாத பணியாட்கள் கவனிப்பில் அவன் வளர்ந்தான். அவனுக்குக் கேட்க அனுமதி இருந்த இசையெல்லாம் … பட்சிகளின் பாட்டுகளும், காற்றின் கீதமும், குளிரால் உலர்ந்த மரங்களின் உராய்வொலியும், இடியோசையும், கிளை விடுத்துத் தரை நோக்கி உருண்டு வீழும் தங்க நிற இலைகளின் மெல்லிய சோக விசும்பலும்; கூரையைக் குட்டும்  மழைத்துளியும், தடித்த பனிக் கம்பிகள் உருகி நீர்த்துளியாய்ச் சொட்டும் ஒலியும், அணில்களின் அரட்டையும், மற்றும் நிலவில்லாக் கரும் இரவில் விழும் பனியின் ஆழ்ந்த நிசப்தமுமே. இச் சப்தங்களே க்ரிஸ்டியன் தன்னுணர்வுடன் கேட்ட ஒரே சங்கீதம். பல விதமான  கூட்டு வாத்திய இசைகளை (சிம்ஃபனி)  குழந்தைப் பருவத்தில் கேட்டிருக்கிறான்தான்,  ஆனால் அவையெல்லாம் இப்போது தொலைவில், தேடினாலும் கிடைக்காத நினைவுகளாயின. எனவே அவன் இசை அற்ற விஷயங்களில் இசையைக் கேட்கக் கற்றுக்கொண்டான்- அவனுக்கோ இசையை எப்படியாவது கண்டு பிடித்தாக வேண்டி இருந்தது.  இசையே இல்லாத இடத்திலும் இசையைக் காண வேண்டி இருந்தது.

வண்ணங்கள் அவன் மனதில் ஓசைகளாய் ஒலித்தன என்பதைய் அவன் கண்டான். கோடைக்காலச் சூரிய ஒளி வீறிடும் சுரம். குளிர்கால நிலவொளி மெலிவான சோகப் புலம்பலொலி.  வசந்தத்தின் புதுப்பச்சை கன்னாப்பின்னா தாளங்களில் முணு முணுப்பாயிற்று (ஆனாலும் காதில் விழுந்தது.)  இலைகளூடே மின்னித் தெறித்து ஓடும் செந்நரியோ அதிர்ச்சியில் திக்கித் திணறும் மூச்சொலி. அத்தனை ஒலிகளையும் அவன் தன் வாத்தியத்தில் வாசிக்கப் பழகினான்.

உலகத்திலோ வயலின்களும், மத்தளங்களும், கிளாரினெட்களும், வளைந்த ஊதுகுழல்களும் இருக்கின்றன.  இப்போதுதானா, அவை பல நூறாண்டுகளாகவே இருக்கின்றனவே?  அதெல்லாம் க்ரிஸ்டியனுக்கு சுத்தமாகத் தெரியாது.  அவனிடம் இருந்ததெல்லாம் அவனுடைய வாத்தியம் மட்டுமே. அதுவே போதும்.

க்ரிஸ்டியன் தனியாக இருந்த ஒரு வீட்டில், ஓரு அறையில் படுக்க ஒரு கட்டில்,  அதில் அவ்வளவு மிருதுவில்லாத ஒரு படுக்கை.  அங்கே அவனைத் தவிர ஒரு மேஜை ஒரு நாற்காலி, அவனையும் அவன் ஆடைகளையும்  சுத்தம் செய்யும் ஒரு ஒலியடங்கிய இயந்திரம், மற்றும் ஒரு மின்சார விளக்கும் இருந்தன.
மற்றொரு அறையில் அவனது இசைக் கருவி மாத்திரம் இருந்தது. நிறைய விசைகளும், பட்டைகளும், நேம்புகொல்களும், கம்பிகளும் கொண்ட ஒரு முனையம் அது. அவன் அதில் எங்கு தொட்டாலும் ஒரு சத்தம் வரும். ஒவ்வொரு விசைக்கும் ஒரு சத்தம். பட்டையின் ஒவ்வொரு புள்ளியிலும் ஒரு ஸ்தாயி. ஒவ்வொரு நேம்புகொலிலும் ஒரு தொனி. ஒவ்வொரு கம்பியும் ஒலியின் அமைப்பை மாற்றியது.
இந்த வீட்டுக்கு வந்த புதிதில், க்ரிஸ்டியன் (எந்தக் குழந்தையையும் போல) வாத்தியத்தோடு விளையாடினான். வினோதமான, வேடிக்கையான பல சப்தங்களை எழுப்பினான்.  அது ஒன்றுதான் அவனுக்கு விளையாட்டுத் தோழமை;  ஆரம்பத்தில், இரைச்சலும், முழக்கங்களும் அவனை மகிழ்வித்தன. பின் மென்மையாகவும், உரக்கவும் மாறி மாறி;  பிறகு இரண்டையும் ஒரு சேர இசைத்தான், அதன் பின் இரண்டு சத்தங்களையும் ஒன்றாயிணைத்து மூன்றாவதான் புதிய ஒலியை உருவாக்கினான். இறுதியாக மொத்தத்தையும் வரிசையில் தொடுத்து அழகு பார்த்தான்.

மெல்ல,  வீட்டுக்கு வெளியே இருந்த காட்டின் ஓசைகளும்,  அவனுடைய இசைக்குள் வரும் வழியைக் கண்டன. அதில் கலந்தன.  காற்றுகளைத் தன் கருவி வழியே பாடச் செய்ய அவன் கற்றான்; கோடையையே தன் பாட்டுகளில் ஒன்றாக்கி தன் விருப்பத்துக்கு அதை வாசிக்கத் தெரிந்து கொண்டான்;  பசுமை அதன் கணக்கற்ற நிறபேதங்களோடு அவனுடைய மிக நுட்பமான ஒத்திசை ஆனது.  பறவைகளோ அவனுடைய தனிமையின் மொத்த ஆழத்தையும் அவனுடைய வாத்தியத்திலிருந்து பாடின.

செய்தி இசையை ரசிக்க உரிமம் கொண்டவர்களுக்குப் பரவியது.

“இங்கிருந்து வடக்கே, அப்புறம் இப்படி கிழக்கே போனால் அங்கே ஒரு புது ஒலி கேட்கிறதாமே. க்ரிஸ்டியன் ஹரால்ட்செனாம். அவன் பாட்டெல்லாம் கேட்போரின் மனதைப் பிழிந்து விடுமாம்.”
உரிம ரசிகர்கள் வந்தார்கள்.  முதல் அலையாய் வந்தவர் சிலர் விதம் விதமாகக் கேட்க விரும்புவோர்,  பின் வந்தவர்கள் புதுமையும்,  தற்போதைய மோஸ்தருமே முக்கியம் என்பவர், கடைசியாக வந்தவர்களுக்கோ இசையின் எழிலும், அதில் பெருக்கிடும் பாவமுமே தேவையாய் இருந்தது.   வந்தார்கள், வெளியில் அவனுடைய கானகத்தில் தங்கினார்கள், அவன் வீட்டுக் கூரையின் மேலே பொருத்தப்பட்டிருந்த அப்பழுக்கற்ற ஒலி பெருக்கிகளில் பரவிய அவனுடைய இசையைக் கேட்டனர்.  இசை நின்று, க்ரிஸ்டியன் வீட்டுக்கு வெளியே வந்த போது, ரசிகர்கள் செல்வதைக் கண்டான்;  விசாரித்தான்,  அவர்கள் ஏன் வந்தனர் என்று அவனுக்குச் சொல்லப் பட்டது.  தான் ஆசைப்பட்டு வாத்தியத்தில் இசைப்பது பிற மக்களுக்கும் பிடித்திருப்பதைக் கண்டு அவன் ஆச்சரியமடைந்தான்.

தான்  உரிம ரசிகர்களுக்காக இசைக்கலாம், ஆனால் அவர்களுடைய பாடல்களைக் கேட்கத் தனக்கு அனுமதி இல்லை என்று அறிந்ததும் அவனுடைய தனிமை உணர்வு,  இனம் புரியாதபடி ஏனோ மேலும்  தீவிரமடைந்தது.

“ஆனால் அவர்களிடம் பாட்டு ஏதுமில்லையே” என்றாள் தினமும் உணவு கொண்டுவரும் பெண். “அவர்கள் கேட்பவர்கள்.  நீ ஒரு படைப்பாளி.  உன்னிடம் பாடல்கள் உண்டு, அவர்கள் கேட்பார்கள்.”

“ஏன்?” என்று க்ரிஸ்டியன் அப்பாவியாகக் கேட்டான்.

அவள் குழம்பினாள். “ஏனென்றால், அவர்கள் பெரிதும் செய்ய விரும்புவது அதுதானே.  அவர்களை எல்லாம் சோதித்துப் பார்த்தாயிற்று, அவர்கள் உரிம ரசிகர்களாக இருப்பதில்தான் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். நீ படைப்பாளியாக இருப்பதில்தான் மிக மகிழ்கிறாய்.  ஏன், நீ மகிழ்ச்சியாகத் தானே இருக்கிறாய்?”

“ஆம்.” அவன் பதில் சொன்னான்.  அது உண்மையே. அவன் வாழ்க்கை குறைவேதுமின்றி இருந்தது. அவனுக்கு அதில் எதையும் மாற்றத் தேவை இருக்கவில்லை . அவன் இசைத்து முடித்ததும் திரும்பிப் போய்க் கொண்டிருக்கும் உரிம ரசிகர்களைப் பார்க்கையில் அவனுள் பொங்கிய இனிமை கலந்த சோகத்தைக் கூட அவன் மாற்ற விரும்பவில்லை.

க்ரிஸ்டியனுக்கு அப்போது ஏழு வயது.

master20chorale2020orchestra

முதல் அசைவு (அனுபல்லவி)

முகத்துக்குப் பொருந்தாத விசித்திரமான மீசை வைத்து, மூக்குக்கண்ணாடியும் போட்டிருந்த அந்தக் குள்ளமான மனிதன், மூன்றாவது முறையாக, க்ரிஸ்டியன் வெளியே வருவதற்காக புதரிடுக்கில் அசட்டுத் தைரியத்துடன் காத்திருந்தான். மூன்றாவது முறையாக, சற்று முன் நிறைவடைந்த பாடலின் அழகால்  அவன் தன்னிலை மறந்து அயர்ந்து போயிருந்தான்.   அந்தத் துயரம் நிரம்பிய பலலிசை, கண்ணாடி அணிந்த குள்ளனுக்கு, அவன் தலைக்கு மேலே இருந்த இலைகள் அவனை அழுத்துவதைப் போல ஒரு உணர்வைத் தந்தது.  இத்தனைக்கும் அது வெயிற்காலம் தான்.  இலைகள் உதிர இன்னும் மாதங்கள் இருக்கின்றன. அவை உதிர்வதோ தவிர்க்க முடியாததே என்றது க்ரிஸ்டியனின் பாடல்;  இலைகள் தங்கள் வாழ்க்கை நெடுகிலும் சாகும் சக்தியை தங்களுக்குள்ளே வைத்துக் கொண்டிருக்கின்றன. அது அவற்றுடைய வாழ்க்கைக்கு ஒரு சாயம் பூசவே செய்யும்.  கண்ணாடி அணிந்த குட்டை ஆள் அழுதான்-  ஆனால், பாட்டு முடிந்தவுடன் மற்றவர்கள் போய் விட்டார்கள், அவன் மட்டும் புதரில் மறைந்து காத்திருந்தான்.

இம்முறை அவன் காத்ததற்குப் பலன் கிடைத்தது. க்ரிஸ்டியன் வீட்டுக்கு வெளியே வந்தான், மரங்களூடே நடந்தான், கண்ணாடி அணிந்த குட்டை மனிதன் இருந்த இடத்தருகே வந்தான். அலட்டல் இல்லாத க்ரிஸ்டியனின் நடையை குள்ளன் ரசித்தான்.  அந்த இசையமைப்பாளனைப் பார்த்தால் சுமார் முப்பது வயது சொல்லலாம். ஆனாலும் ஏதோ குழந்தைத்தனம் அவனிடம் தெரிந்தது; இங்குமங்கும் தன்னைச் சுற்றி அவன் பார்க்கும் விதமா,  இலக்கில்லாத அவனுடைய நடையா, கீழே விழுந்து கிடக்கும் காய்ந்த சிறு கிளையை உடைத்து விடாமல்,  வெறுமனே கால் விரல்களால் தொடுவதற்காக அவன் நின்ற விதமா, எது?

“க்ரிஸ்டியன்,” கண்ணாடி அணிந்த குள்ளன் கூப்பிட்டான்.

க்ரிஸ்டியன் திரும்பினான். திகைத்தான்.  இத்தனை வருடங்களாக ஒரு உரிம ரசிகர் கூட அவனிடம் பேசியதில்லை. அதற்குத் தடை இருந்தது.  க்ரிஸ்டியனுக்கு அந்த சட்டம் தெரியும்.

“இது தடை செய்யப்பட்டுள்ளது,”  க்ரிஸ்டியன் சொன்னான்.

“இந்தா” என்றான் கண்ணாடி போட்ட குள்ளன், ஒரு சிறு கருப்பான வஸ்துவை முன் நீட்டினான்.

“அது என்னது?”

குள்ளன் இகழ்வால் முகம் கோணினான். “அட, எடுத்துக்கப்பா. இந்த பித்தானை அழுத்து, ஓடும்.”

“ஓடுமா?”

“சங்கீதம்.”
க்றிஸ்டியனின் கண்கள் விரிந்தன.  “ஆனால் அதற்குத் தடை உள்ளது.  நான் பிற சங்கீதக்காரர்களின் படைப்பைக் கேட்டு என் ஆக்கத் திறனை மாசு படுத்தக் கூடாதே.  அது என் இசையில் சுயத்தன்மையைப் போக்கி, என்னை நகலாக்கி விடும்.”

“ஒப்பிக்கிறாயாக்கும்.” அந்த மனிதன் சொன்னான் “யோசிக்காமல் அதை ஒப்பிக்கிறாய். இது பாஹுடைய இசை.”  அவன் குரலில் மரியாதை.

“என்னால் முடியாது,” க்ரிஸ்டியன் சொன்னான்.

குள்ளன் தலையை ஆட்டினான். “உனக்குத் தெரியவில்லை.  நீ எதை இழக்கிறாய் என்று உனக்குத் தெரியவில்லை.  க்ரிஸ்டியன், பல ஆண்டுகளுக்கு முன் இங்கே வந்த போது  உன் இசையில் அதைக் கேட்டிருக்கிறேன். உனக்கு இது தேவை.”

“இதெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளது,” க்ரிஸ்டியன் பதில் சொன்னான்,  தடைசெய்யப்பட்டது என்று தெரிந்தும் ஒரு மனிதன் இப்படி ஒரு காரியத்தை செய்ய முனைகிறான் என்ற விஷயமே அவனுக்குப் பெருவியப்பாக இருந்தது.  அந்த விஷயத்தின் அசாதாரணம் தந்த மலைப்பிலிருந்து மீளாததால்,  தான் ஏதோ செய்ய வேண்டும் என அம்மனிதன் எதிர்பார்க்கிறான் என்பதை அறியாமல் நின்றான்.

தூரத்தில் காலடி ஓசையும், ஏதோ பேசப் பட்டதும் கேட்டன. குள்ளனின் முகத்தில் பயம் எழுந்தது.   க்ரிஸ்டியனிடம் ஓடி அணுகி, ஒரு ஒலிப் பதிவு எந்திரத்தை அவன் கையில் திணித்தான். பின் வாசலை நோக்கிப் பிய்த்துக் கொண்டோடினான்.

க்ரிஸ்டியன் அந்த பதிவு எந்திரத்தை எடுத்து,  இலைகள் நடுவே விழும் வெளிச்சத்தில் பிடித்தான்.   அது மங்கலாக ஒளிர்ந்தது.  “பாஹாமே,”என்றான் க்ரிஸ்டியன். பின்  ”யார் அது, பாஹ்?”

ஆனால் அவன் அந்த இயந்திரத்தைக் கீழே வீசவில்லை. கண்ணாடி போட்ட அந்தக் குள்ள மனிதன் எதற்காகத் தங்கினான் என்று அவனிடம் வினவ வந்த பெண்ணிடம் அதைக் கொடுக்கவுமில்லை. “அவன் குறைந்தது பத்து நிமிடங்கள் இருந்தானே.”

“நான் முப்பது வினாடிகள் தான் பார்த்தேன்,” க்ரிஸ்டியன் பதில் சொன்னான்.

“அப்புறம்?”

“அவன் நான் ஏதோ வேறு இசையைக் கேட்க வேண்டும் என்றான்.  அவனிடம் ஒரு பதிவியந்திரம் இருந்தது.”

“அவன் அதை உன்னிடம் கொடுத்தானா?”

“இல்லை,” க்ரிஸ்டியன் சொன்னான். “ இப்போது அவனிடம் அது இல்லையா?”

“அவன் காட்டில்தான் எங்கேயாவது போட்டிருப்பான்.”

“ஏதோ பாஹ் என்றான்.”

“இதெல்லாம் தடை செய்யப்பட்டது. அவ்வளவு மட்டும் உனக்குத் தெரிந்தால் போதும். ஒருவேளை அந்த இயந்திரம் உன் கண்ணில் அகப்பட்டால், க்ரிஸ்டியன், சட்டப்படி என்ன செய்ய வேண்டும் என்று உனக்கே தெரியும்.”

“உன்னிடம் தந்து விடுகிறேன்.”

அவள் அவனை உற்று நோக்கினாள். “அதைக் கேட்டால் என்னவாகும் என்று உனக்குத் தெரியுமல்லவா?”

அவன் தலையாட்டி ஆமோதித்தான்.

“நல்லது. நாங்களும் அதைத் தேடுவோம்.  நாளைக்கு உன்னைப் பார்க்கிறேன், க்ரிஸ்டியன்.  மேலும்,  அடுத்த தடவை யாராவது பின் தங்கினால் நீ அவனிடம் பேசாதே. வீட்டுக்குள் திரும்பிப் போய்விடு, கதவுகளைப் பூட்டிக்கொள்.”

“அப்படியே செய்கிறேன்,”க்ரிஸ்டியன் சொன்னான்.
அவள் சென்றபின், அவன் பல மணி நேரம் தன வாத்தியத்தை வாசித்தான்.  நிறைய உரிம ரசிகர்கள் வந்தார்கள். அவனுடைய இசையை முன்பு கேட்டிருந்தவர்கள், இந்த முறை அவன் பாடலில் இருக்கும் குழப்பத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.

அன்று இரவு கோடைமழை புயலாக அடித்தது, காற்றும், மழையும், இடியும்,  தன்னால் தூங்க முடியவில்லை என்று க்ரிஸ்டியன் கண்டான். அதற்கு காரணம் மழைச் சப்தங்களின் இசை இல்லை. அவன் இதைப் போன்ற ஆயிரம் புயல்களின் சப்தங்களூடே அலுங்காமல் உறங்கியிருக்கிறான். அவன் தூக்கமின்மைக்குக் காரணம், இசைக் கருவியின் பின்னால், சுவரில் சாய்ந்திருந்த பதிவியந்திரம்தான்.  இந்த ரம்மியமான காட்டுச் சூழலில், தானுண்டு தன் இசையுண்டு என்று க்ரிஸ்டியன் கிட்டத்தட்ட முப்பதாண்டு காலம் வாழ்ந்துவிட்டான். ஆனால் இன்று.

இன்று அவனால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. பாஹ் யார்?  யார் தான் அந்த பாஹ்? அவருடைய இசை என்ன? என்னுடைய இசையிலிருந்து எப்படி அது வேறுபட்டது? எனக்குத் தெரியாத எதையாவது அவர் கண்டு பிடித்திருக்கிறாரா?

அவருடைய இசை என்ன?
அவருடைய இசை என்ன?
அவருடைய இசை என்ன?
கடைசியாக, விடிந்து, புயல் மட்டுப் பட்டது. காற்று மரித்து விட்டது,  க்ரிஸ்டியன் தன் படுக்கையை விட்டு எழுந்தான். அதில் அவன் தூங்கவில்லை. இரவு முழுதும் புரண்டு புரண்டு படுத்தே நேரத்தை நகர்த்தியிருந்தான். மறைத்து வைத்த இடத்திலிருந்து பதிவு இயந்திரத்தை எடுத்து அதை இயக்கினான்.

முதலில் விசித்திரமாக இருந்தது, இரைச்சல் போலிருந்தது.  க்ரிஸ்டியன் வாழ்வில் இருக்கிற ஒலிகளில் எதையும் போல இல்லாத வினோதமான ஓசைகள் கேட்டன.  ஆனால் அவற்றில் பல அமைப்புகள் தெளிவாக இருந்தன, அந்த ஒலிப்பதிவு முடிகையில், அதென்னவோ அரை மணிதான் ஓடியது,  க்ரிஸ்டியனுக்கு ஃப்யூக் இசையின் மையக் கருத்து பிடிபட்டு விட்டது.  ஹாப்சிகார்டின் ஒலிகள் அவன் புத்தியில் குமைந்தன.

ஆனால், இதெல்லாம் தன் இசையில் எங்காவது வெளிப்பட்டால் மாட்டிக்கொள்வோம் அன்று அவனுக்குத் தெரியும். அதனால், அவன் ஃப்யூக் இசையை அவன் முயலவில்லை. ஹாப்சிகார்டின் ஒலியையும் செய்து பார்க்கவில்லை.

தினமும் இரவு அந்த பதிவிசையைக் கேட்டான். தினம் தினம், பல இரவுகள் கேட்டுக் கேட்டு நிறைய கற்றுக்கொண்டான்- இறுதியில் ஒரு நாள் அந்தக் கண்காணிப்பாளன் வரும் வரை.

அந்த கண்காணிப்பாளன் பார்வை அற்றவன், அவனை ஒரு நாய் வழி நடத்தியது. அவன் வாயிற் கதவருகே வந்தான், அவன் கண்காணிப்பாளன் என்பதால் கதவு தட்டாமலே தானாகத் திறந்து கொண்டது.

“க்ரிஸ்டியன் ஹரால்ட்சென்,  பதிவியந்திரம் எங்கே?” கண்காணிப்பாளன் கேட்டான்.

“பதிவியந்திரமா?”  என்று முதலில் கேட்ட க்ரிஸ்டியன், அது வீண் வேலை என்று உடனே உணர்ந்து,  இயந்திரத்தை எடுத்து கண்காணிப்பாளனிடம் தந்தான்.

“ஓ, க்ரிஸ்டியன்,” என்றான் கண்காணிப்பாள்ன், அவன் குரல் மிருதுவாக இருந்தது, அதில் வருத்தம் தொனித்தது. “நீ இதைக் கேட்டுப் பார்க்காமல் ஏன் ஒப்படைத்து விடவில்லை?”

“நான் ஒப்படைக்கத்தான் நினைத்தேன்,” க்ரிஸ்டியன் சொன்னான். “ஆனால் உமக்கு எப்படி தெரிந்தது?”

“ஏனென்றால், உன் இசையில் திடீரென்று ஃப்யூக் ஒலிகளே இல்லை.  முன்பு உன் பாடல்களில் பாஹின் இசைச் சாயலில் ஃப்யூக் ஒலி மட்டுமே இருந்ததா, அது இப்போது திடீரென்று மறைந்துவிட்டது.  தவிரவும், நீ இப்போதெல்லாம் புதுப்புது ஒலிகளை வைத்துச் சோதனைகள் எதுவும் செய்யவில்லை.  நீ எதை ஒதுக்க இப்படிப் பாடுபட்டாய்?”

“இதை,” சொன்ன க்ரிஸ்டியன், உட்கார்ந்து, முதல் முயற்சியிலேயே ஹாப்சிகார்டின் ஒலியை நகலெடுத்து விட்டான்.

“இருந்தும், நீ இதுவரை அதைச் செய்து பார்க்கவில்லை. அப்படித்தானே?”

“நீங்கள் கவனித்துவிடுவீர்கள் என்று நினைத்தேன்.”

“நீ ஃப்யூகையும், ஹாப்சிகார்டையுமே முதலில் கவனித்தாய். அதனால் அவற்றை உன் இசையில் சேர்க்கவில்லை. கடந்த சில வாரங்களாக உன் மற்ற பாடல்கள் எல்லாவற்றிலுமே பாஹின் வண்ணங்களும், சாயலும், தாக்கமும் தெரிகிறது.  என்ன இல்லை என்றால், அவற்றில் ஃப்யூகும், ஹாப்சிகார்டும் இல்லை.  நீ சட்டத்தை மீறிவிட்டாய்.  இங்கே உன்னைக் கொணரக் காரணம் நீ ஒரு மேதை. உன்னால் இயற்கையை மட்டுமே உந்துதலாகக் கொண்டு புது படைப்புகளை கொடுக்க முடியும் என்பதுதான். நீயோ  இப்போது நகலாகி விட்டாய். உன்னால் இனி உண்மையாகவே புதுப் படைப்பை உருவாக்க இயலாது.  இனி நீ கிளம்ப வேண்டும்.”

“எனக்குத் தெரிகிறது.”  க்ரிஸ்டியன் பயத்துடன் சொன்னான், ஆனால் இன்னும் அவனுக்கு இந்த வீட்டை விட்டு வெளியேறினால் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று ஏதும் தெரிந்திருக்கவில்லை.

“நீ செய்யக் கூடிய வேலைகளுக்கு நாங்கள் உனக்குப் பயிற்சி தருவோம். நீ பட்டினி கிடக்க மாட்டாய். சலிப்பால் சாகமாட்டாய். ஆனால் நீ சட்டத்தை மீறியதற்காக உனக்கு ஒரு தடை விதிக்கப்பட்டுள்ளது.”

“இசை.”

“எல்லா இசையும் இல்லை.  வேறு விதமான இசை இருக்கிறது, க்ரிஸ்டியன்.  அது, உரிம ரசிகர்கள் அல்லாத, சாதாரண மக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள இசை. வானொலியிலும், தொலைக்காட்சியிலும், இசைத் தட்டிலும் ஒலிக்கும் இசை. ஆனால் ஜீவனுள்ள இசையோ, புது இசையோ இருக்கிறதில்லையா- அவை உனக்குத் தடை செய்யப்பட்டவை.  நீ இனி பாடக்கூடாது. எந்த ஒரு இசைக்கருவியையும் தொடக்கூடாது. தாளம் கூட தட்டக்கூடாது.”

“ஏன் கூடாது?”

கண்காணிப்பாளன் தலையசைத்து மறுத்தான்.  “இந்த உலகம் சிறிதும் அப்பழுக்கற்று,  பரம அமைதியாக,  மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.  உன்னைப் போல சட்டத்தை மீறிய,  பொருந்தி வாழ்த் தெரியாதவர்கள் தங்கள் அதிருப்தியை இங்கே பரப்ப நாங்கள் அனுமதிக்க முடியாது. இந்தப் பாமரர்கள், ஒரு சாதாரணமான இசையை உருவாக்கியும், பாடியும், கேட்டும் வாழ்கிறார்கள்.  அதை விட சிறப்பான ஒன்று அவர்களுக்குத் தெரியாது,  ஏனெனில் அதைக் கற்க அவர்களுக்கு திறமை போதாது.  ஆனால் நீ. ஒருவேளை.. சரி அதை விடு.  இது தான் சட்டம்.  நீ இனி ஏதும் இசை உருவாக்கினால், கடுமையாகத் தண்டிக்கப்படுவாய்.  மிகக் கடுமையாக இருக்கும்.”

க்ரிஸ்டியன் ஒப்புதலுக்குத் தலையசைத்தான், கண்காணிப்பாளன் வரச் சொல்லிக் கூப்பிட்டவுடன் அவன் கூடப் போனான்.  அந்த வீடு, கானகம், இசைக் கருவி எல்லாவற்றையும் விட்டு விட்டுப் போனான்.  ஆரம்பத்தில் இதை எல்ல்ஆம் அமைதியாகவே ஏற்றான்.  தன் தவறுக்கு கிடைத்த தவிர்க்கவியலாத தண்டனை இது என்று எண்ணினான்; ஆனால் இந்த தண்டனையின் கருத்து அவனுக்குப் பிடிபடவில்லை,  தன் வாத்தியத்திடமிருந்து பிரிக்கப்பட்டதற்கு என்ன பொருள் என்பதும் அவனுக்கு அப்போது விளங்கியிருக்கவில்லை.

ஐந்து மணி நேரத்திற்குள் அவன் வீறிடத் தொடங்கிவிட்டான்.  அருகில் வரும் எவரையும் அடிக்கப் போனான். அவன் விரல்கள், வாத்தியத்தின் விசைகளையும், பட்டைகளையும், நெம்புகோல்களையும், கம்பிகளையும் தொடத் துடித்தன. ஆனால் அதுவோ அவனுக்கு இனி கிட்டவே கிட்டாது, அவனால் தாள முடியவில்லை. இதுவரை இப்படி ஒரு தனிமையைத் தான் உணரவில்லை என்று புரிந்துகொண்டான்.

அவன் சாதாரண வாழ்வுக்குத் தயாராக ஆறு மாதங்கள் பிடித்தன.  அவன் மறு பயிற்சி மையத்தை (அதிகம் உபயோகிக்கப்படாததால் அது சிறு கட்டிடமாக இருந்தது) விட்டு வெளியே வந்த போது, மிகவும் தளர்ந்தவனாக,  பல வருடங்கள் கூடியவன் போலக் காணப்பட்டான்.  யாரிடமும் சிரிக்கவில்லை.  அவன் டெலிவரி ட்ரக் ஒன்றை ஓட்டுபவனான், ஏனெனில் அந்த வேலைதான் அவனுக்குக் குறைவான துக்கத்தைக் கொடுக்கும் என்றும், அவன் இழப்பைச் சிறிதே நினைவூட்டும் என்றும் சோதனைகள் சுட்டின.  மேலும், அதுவே அவனிடம் இருக்கும் வெகு சில நாட்டங்களுக்கும், ஆர்வங்களுக்கும் பொருத்தமான வேலை என்றும் காட்டின.

பலசரக்குக் கடைகளுக்கு இனிப்பு வடைகளை விநியோகம் செய்தான்.

இரவில் மதுவின் மர்மங்களை ஆராயக் கற்றான்.  மது, இனிப்பு வடைகள், விநியோக வண்டி, கனவுகள்… அவனுக்கு இவையே போதுமாயிருந்ததன. அவன் இவற்றில் நிறைவுடன் இருந்தான். அவனிடம் கோபமில்லை. கசப்பேதுமில்லாமல், இப்படியே மீதி வாழ்க்கையை அவனால் வாழ்ந்துவிட முடிந்திருக்கும்.

அவன் புதிய இனிப்புகளைக் கொண்டு கொடுத்து, விற்காதிருந்த பழசுகளைத் திரும்ப எடுத்துப் போய்க் கொண்டிருந்தான்.

music_topbanner

இரண்டாம் அசைவு (அனுபல்லவி)

“ஜோ என்ற பெயரை வைத்துக் கொண்டிருப்பதால், நான் இந்த பார் மற்றும் க்ரில்லைத் திறக்க வேண்டியதாகிவிட்டது. அப்போதுதானே ‘ஜோவின் பார் அண்ட் க்ரில்’ என்று பெயர்ப்பலகை போட்டுக் கொள்ள முடியும்.”  சொல்லி விட்டு ஜோ சிரியோ சிரி என்று சிரிப்பான்.  ‘ஜோவின் பார் & க்ரில்’ என்பதுதான் இந்த நாளில் வேடிக்கையான பெயராகி விட்டதே?

ஆனால் ஜோ ஒரு நல்ல மதுக்கடைச் சிப்பந்தி. அந்தக் கண்காணிப்பாளன் ஜோவை ஒரு சரியான பணியில் அமர்த்தியிருக்கிறான். அது ஒரு பெரிய நகரமில்லை. சிறு கிராமமுமில்லை. நெடுஞ்சாலையை ஒட்டியபடி இருந்த ஒரு நடுத்தரமான ஊர். அங்கே லாரி, மற்றும் பிற வாகன ஓட்டிகள் வருவார்கள்.  ஒரு பெரிய நகரம் சிறிது தூரத்திலேயே  இருந்ததா, அதனால் அங்கே அக்கம்பக்கத்து சுவாரசியமான சங்கதிகள் அலசப் படும், அசை போடப்படும், அரற்றப்படும்,  விரும்பவும் படும்.

இதனால் எல்லாம், ஜோவின் பார் &  க்ரில் கூடிப் பேசுவதற்கு நல்ல இடமாக அமைந்தது. பலரும் அங்கே வந்தனர். வந்தவர்கள் மேல்தட்டு மக்களல்ல. குடிகாரர்களும் அல்ல.  தனிமையால் வருந்துவோரும், நட்புணர்வு கொண்டவர்களும், அங்கே வந்து பாந்தமான கலவையாகக் கூடி உறவாடினர்.  ஜோ அடிக்கடி சொல்லுவான்: “என் வாடிக்கையாளர்கள் எல்லாம் நல்ல மதுவைப் போல. கொஞ்சம் இதையும், கொஞ்சம் அதையும் சேர்த்து ஒரு புதுச் சுவையைக் கொணர்வது போல. வழக்கமாகச் சேர்க்கிறதைக் காட்டிலும் கூட ருசி.” ஆ! ஜோ ஒரு கவிஞனாச்சே! மது மீது பாடும் கவிஞன்.  இந்நாளில் எல்லோரும் சொல்வதைப் போல அவனும் சொல்வான், ” என் அப்பா ஒரு லாயர். அந்தக் காலமாக இருந்தால் நானும் ஒரு லாயர் ஆகியிருப்பேன். அப்படி ஆகியிருந்தால் நான் எதை இழந்தேன் என்று தெரியாமலே போயிருக்கும்.”

ஜோ சொன்னது சரிதான். அவன் ஒரு ஆகச் சிறந்த பார் சிப்பந்தி.  வேறு எங்காவது  இருக்க வேண்டும் என்று அவன் விரும்பவும் இல்லை. அதனால் அவன் மகிழ்ச்சியாகவே இருந்தான்.

ஓர் இரவு. ஒரு புது மனிதன் வந்தான்,  இனிப்புகள் (டோனட்டுகள்) விநியோகம் செய்யும் வாகனத்தை ஓட்டி வந்தவன். அவன் சீருடையில் ஒரு டோனட் நிறுவனப் பெயர் எழுதியிருந்தது. அவன் ஆடைக்கு மேல் நிசப்தம் ஒரு வாசனை போலப் படிந்திருந்தது, ஜோ கவனித்தான்- அவன் எங்கே சென்றாலும், மக்கள் அவனை உணர்ந்தார்கள். அவர்கள் அவனை பார்த்தது அரிது, ஆனால் குரலைத் தாழ்த்தினார்கள், அல்லது பேசுவதையே நிறுத்தினார்கள். சிலர் யோசிப்பவராகிச் சுவர்களை,  பாருக்குப் பின்னால் இருந்த கண்ணாடியை நோக்கினார்கள். டோனட் விநியோகிப்பவன் சப்பையான சரக்கு ஒன்றை வாங்கிக் கொண்டு, ஒரு மூலையில் சென்று அமர்ந்தான்.  அவன்,  நீண்ட நேரம் தங்க வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறான், மது காட்டமாக இருந்தால் சீக்கிரம் தலைக்கேறி அந்த பாரை விட்டு வெளியேற வேண்டி வருமே, அதைத் தவிர்க்கிறான்.
ஜோ பொதுவாக மனிதர்களை நன்கு நோட்டம் விடுப்வன். இந்த மனிதன்  ஒரு பியானோ இருக்கும் இருண்ட மூலையையே பார்ப்பதைக் கவனித்தான். அரதப்பழசான, சுருதி கெட்டுபோன ஒரு மிகப்பெரிய பூதம் அது (இந்த மதுக்கடைதான் வெகுகாலமாக நடக்கிறதே). இதன் மேல் இவனுக்கு என்ன அப்படி ஒரு ஈர்ப்பு என்று ஜோ வியந்தான்.  ஜோவின் வாடிக்கையாளர்களில் நிறைய பேர் அதால் ஈர்க்கப் படுகிறார்கள் என்பது உண்மைதான் – ஆனால் அவர்கள் எல்லாம் அதன் அருகே சென்று விசைகளை அடித்து அழுத்தி வாசித்து, ஏதாவது சுஸ்வரம் வருகிறதா என்று பார்ப்பார்கள். அந்த சுருதி கெட்ட சாதனத்தில் ஒன்றும் வராது.  முயற்சியைக் கைவிட்டுத் திரும்பிவிடுவார்கள். இவன் என்னவென்றால், பியானோவை கண்டு ஏதோ பயந்தவனைப் போல, பக்கத்தில் கூடப் போக மாட்டேன் என்கிறான்!

கதவடைக்கும் நேரம் ஆனது.  புது ஆள் இன்னும் அங்கேயே இருந்தான். அவனைக் கிளப்பாமல், ஏதோ க்ஷணப் பித்தத்தில், ஜோ கடையில் ஒலிபரப்பான இசையை நிறுத்தி,  விளக்குகளில் பலதையும் அணைத்தான். பியானோவின் அருகே சென்று, அதன் மூடியை திறந்து,  அதன் சாம்பல் நிற விசைகள் வெளியே தெரியும்படி ஆக்கினான்.

டோனட் மனிதன் பியானோவின் அருகே வந்தான். ‘க்ரிஸ்’ என்று அவன் பெயர்ச் சீட்டு சொன்னது. அவன் அமர்ந்து ஒரு விசையை அமுக்கினான். நாராசமாய் இருந்தது. பிறகு  எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக அழுத்தினான். பல வரிசைகளில் அவற்றைப் பொருத்தி அழுத்தினான்.  பூராவையும் ஜோ கவனித்தான்.   இந்த ஆளுக்கு இதில் ஏன் இத்தனை தீவிரம் என்று வியக்கவே செய்தான்.

“க்ரிஸ்,”  ஜோ அழைத்தான்.

க்ரிஸ் தலை உயர்த்திப் பார்த்தான்.

“உனக்கு ஏதாவது பாட்டுகள் தெரியுமா?”

க்ரிஸ்ஸின் முகம் விகாரமாயிற்று.

“நான் பழைய காலப் பாடல்களைச் சொன்னேன். இப்போது வானொலியில் குண்டியை ஆட்டுவதற்காகவென்று ஒலிபரப்புகிறார்களே, அந்த கத்தல்களைச் சொல்லவில்லை. பழைய பாட்டுகளைச் சொல்கிறேன்.  ”’சின்னதொரு ஸ்பானிய நகரிலே.’ என் அம்மா எனக்கு அதைப் பாடுவார்.” ஜோ பாடத் துவங்கினான். “சின்னதொரு ஸ்பானிய நகரிலே, இது போல மையிரவிலே,  கண் சிமிட்டும் நக்ஷத்ரங்களே,   இது போல மையிரவிலே.’
க்ரிஸ் வாசிக்கத் துவங்கினான். ஜோவும் தன் திராணியற்ற கட்டைக் குரலில் சுரஒழுங்கின்றிச் சேர்ந்து பாடினான்.  அது சேர்க்கையாகவே இல்லை. ஜோ அதை சேர்ந்திசையாக ஏற்றுக் கொண்டிருக்க மாட்டான்.  அவனுடைய சுரங்களுக்கு அது ஒரு எதிரியாக இருந்தது. பியானோவிலிருந்து வரும் சப்தங்கள் விசித்திரமாக இருந்தன, ஆனால் சுஸ்வரமாகவே இல்லை.  என்றாலும் கடவுளே! மிக அழகாகத்தான் இருந்தன. ஜோ பாடுவதை நிறுத்திவிட்டு கேட்கத் தொடங்கினான். இரண்டு மணி நேரம் கேட்டான். இசை முடிந்தவுடன், தணிந்த நிலையில், ஒரு கோப்பை மதுவை அந்த ஆளுக்கு ஊற்றினான். தனக்கும் ஊற்றிக்கொண்டான். இந்த உளுத்துப் போன பியானோவை வைத்துக் கொண்டு இசையைக் கொணர்ந்த அந்த டோனட் ஆசாமி க்ரிஸ்ஸோடு மதுக் குவளைகளை மெல்ல இடித்து  அவனைப் பாராட்டிக் குடித்தான்.

மூன்று இரவுகளுக்கு பிறகு க்ரிஸ் மீண்டும் வந்தான். ஏதோ விரட்டப் பட்டு வருபவன் போலிருந்தான், பயம் தெரிந்தது அவனிடம்.  இம்முறை ஜோவிற்கு நடக்கவிருப்பது (நடக்க வேண்டியது) என்னவென்று தெரிந்து இருந்தது. மூடும் நேரம் வரை காத்திராமல், பத்து நிமிடங்கள் முன்னரே கடையில் ஒலிபரப்பி வந்த இசையை அணைத்தான். க்ரிஸ் இறைஞ்சுவது போலப் பார்த்தான். ஜோ தவறாகப் புரிந்துகொண்டான். பியானோ அருகே சென்று அதை திறந்துவைத்து, புன்னகைத்தான். க்ரிஸ் விருப்பமில்லாமல், கொஞ்சம் விறைப்பாகவே நடந்து, முக்காலியில் போய் அமர்ந்தான்.

மிச்சம் இருந்த ஐந்து வாடிக்கையாளர்களில் ஒருத்தன் கத்தினான், “என்ன ஜோ! சீக்கிரம் மூடப்போறியா?”

ஜோ பதில் பேசவில்லை. க்ரிஸ் வாசிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது முன்னேற்பாடெல்லாம் இல்லை.  ஒலி அளவுகளைச் சரி பார்ப்பது, விசைகளை அழுத்திப் பார்ப்பது, ஏதுமில்லை. நேரடியாக மிகுந்த சக்தியோடு அந்தப் பியானோ வாசிக்கப் பட்டது.  மோசமான ஒலிகள், சுருதி கெட்ட ஸ்வரங்கள் எல்லாம் இசையோடு எப்படியோ பொருத்தப்பட்டு விட்டன,  எல்லாம் எப்படியோ பாந்தமாக்கப்பட்ட இசையாய் ஒலித்தது. பன்னிரண்டு தொனிகளில் உள்ள கட்டுப்பாடுகளைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் க்ரிஸ்ஸின் விரல்கள் இண்டு இடுக்குகளிலேயே சஞ்சாரம் செய்து  ஜாலம் செய்வதை பார்த்து ஜோ அயர்ந்தான்.

வாடிக்கையாளர் ஒருவரும் அங்கிருந்து நகரவில்லை, க்ரிஸ் முடிக்க ஒன்றரை மணி நேரம் ஆன போதிலும்.  அவர்கள் எல்லோரும் கடைசிக் கோப்பையைக் குடித்தார்கள்.  இந்த புது அனுபவத்தில் ஆடிப் போய் வீட்டுக்கு சென்றார்கள்.
மறுநாள் இரவு க்ரிஸ் மீண்டும் வந்தான். அதற்கு மறுநாளும். அதற்கு மறுநாளும். முதல் தின இரவில் வாசித்த பின் சில நாட்கள் அவனுள் இருந்த ஏதோ போராட்டத்தில், அது என்னவாக இருந்தாலும், அவன் ஜெயித்துவிட்டான். இல்லை, தோற்றுவிட்டான். அதில் மூக்கை நுழைக்க ஜோவுக்கு ஏதும் விருப்பமில்லை. அவனுக்கு அக்கறை  ஒன்றில் மட்டுமே.  இது வரை எந்த இசையும் தராத தாக்கத்தை, க்ரிஸ்ஸின் பியானோ வாசிப்பு அவனுக்குள் கொணர்ந்தது.  அது அவனுக்கு வேண்டி இருந்தது.

வாடிக்கையாளர்களும் அதை வேண்டினார்கள் போலிருந்தது. கடையைச் சாத்தும் சமயத்தில் க்ரிஸ்ஸின் இசையைக் கேட்பதற்காகவே மக்கள் வரத் தொடங்கினர். ஜோவும் இன்னும் இன்னும் முன்னதாகவே பியானோ இசையை ஆரம்பித்தான். இசை முடிந்தவுடன் இலவச பானங்கள் தருவதையும் நிறுத்திவிட்டான். பின், அத்தனை பெரிய ஜனக் கூட்டத்துக்கும் சும்மா கொடுத்துக் கொண்டிருந்தால் கட்டுப்படியாகுமா? அவன் கடையை மூடிவிட்டுப் போக வேண்டியதுதான்!

இப்படியே இரண்டு நீண்ட, விசித்திரமான மாதங்கள் ஓடின. விநியோக வாகனம் வாயிலில் வந்து நிறுத்தப்படும். க்ரிஸ் உள்ளே நுழைய மக்கள் வழிவிடுவார்கள். யாரும் அவனிடம் எதுவும் சொல்லவில்லை, எதுவுமே சொல்லவில்லை. எல்லோரும் அவன் வாசிப்பதற்காக காத்திருந்தார்கள். அவன் ஒன்றும் குடிக்கவில்லை. வாசிப்பு ம்ட்டும்தான். பாடல்களுக்கு இடையே ஜோவின் பார் & க்ரில்லில் நூற்றுக்கணக்கான மக்கள் சாப்பிட்டார்கள். குடித்தார்கள்.

ஆனால் முன்பிருந்த களியாட்டம் காணோம். சிரிப்பலைகளும், பேச்சொலிகளும், தோழமையும் தொலைந்து போயின. ஜோவிற்கும் இந்த இசை அலுத்துப்போனது. அவன் தன பாரை பழைய படி பார்க்க விரும்பினான். பியானோவை எங்கேயாவது தள்ளிவிடலாமா என்று யோசித்தான். ஆனால் வாடிக்கையாளர்கள் கோபப்பட்டு வறுத்து எடுத்துவிடுவார்கள். க்ரிஸ்ஸிடம் இனி  வராதே என்று சொல்லலாம். ஆனால் அந்த மௌனமே உருவான மனிதனிடம் எப்படி இதை சொல்லுவது என்று ஜோவுக்குத் தெரியவில்லை.

தொடக்கத்திலேயே என்ன செய்திருக்க வேண்டும் என அவனுக்குத் தெரிந்திருந்ததோ, அதை இறுதியில் செய்தே விட்டான். கண்காணிப்பாளர்களை அழைத்தான்.

கச்சேரியின் இடையே இருவர் வந்தனர். ஒருவன், நாயைப் பிடித்துகொண்டு வந்த பார்வையில்லாத கண்காணிப்பாளன். இன்னொருவன், காதில்லாத கண்காணிப்பாளன், நடக்க சிரமப்பட்டு ஆஙகாங்கே உள்ள பொருட்களைப் பிடித்துப் பிடித்து முன்னேறி வந்தான்.  பாட்டின் மத்தியில் வந்தனர். முடியும் வரை காத்திருக்கவில்லை. பியானோவிடம் சென்று அதை மெதுவாக மூடினர். க்ரிஸ் தன் விரல்களை விலக்கிக் கொண்டு மூடியைப் பார்த்தான்.

“ஒ! க்ரிஸ்டியன்” என்றான் வழிகாட்டி நாயோடு வந்த பார்வையில்லா கண்காணிப்பாளன்.

“நான் வருந்துகிறேன்.”க்ரிஸ்டியன் பதில் சொன்னான். “ நான் செய்யாமலிருக்க முயன்றேன்.”

“ஒ! க்ரிஸ்டியன். இப்போது செய்ய வேண்டியதை நான் எப்படித் தாங்கிக் கொள்வேன்?”

“செய்யும்.”க்ரிஸ்டியன் சொன்னான்.

காதுகள் இல்லாத கண்காணிப்பாளன் தன் மேல்சட்டைப் பையிலிருந்து ஒரு லேசர் கத்தியை உருவினான். க்ரிஸ்டியனின் விரல்களையும், கட்டை விரல்களையும், அவை உள்ளங்கையோடு சேரும் இடத்தில் சரியாக வெட்டினான். லேசர் வெட்டும் போதே காயத்தை மூடிச் சுத்திகரித்தது. இருந்தும் சில இரத்தத் துளிகள் க்ரிஸ்டியனின் சீருடையில் தெளித்தன.  அர்த்தமில்லாத உள்ளங்கையும், உபயோகமில்லாத முட்டிகளுமே இப்போது க்ரிஸ்டியனிடம் இருந்தன. க்ரிஸ்டியன் எழுந்து நின்றான், ஜோவின் பார் மற்றும் க்ரில்லை விட்டு வெளியே சென்றான்.  மறுபடியும் மக்கள் வழிவிட்டனர். பார்வையற்ற கண்காணிப்பாளன் பேச்சை மக்கள் உன்னிப்பாகக் கேட்டனர். “இவன் சட்டத்தை மீறியதால், ஒரு படைப்பாளியாக இருக்கத் தடை இருந்தது. இரண்டாவது முறையாக சட்டத்தை மீறியிருக்கிறான். உங்களையெல்லாம் சந்தோஷமாக வைத்திருக்கும் அமைப்பு சீர்குலைவதைத் தவிர்க்கவே இவனைத் தடுத்து நிறுத்த இந்த சட்டம் வலியுறுத்துகிறது.”
மக்களுக்கு அது புரிந்தது. அவர்கள் துயரப்பட்டார்கள். சில மணி நேரங்களுக்கு சங்கடப்பட்டார்கள். ஆனால், பின் எல்லோரும் தத்தம் பழுதே இல்லாத வீடுகளுக்குச் சென்று, அவரவருக்குக் கச்சிதமாகப் பொருந்தும் வேலைகளுக்குத் திரும்பிய பிறகு, அதில் உண்டான முழு நிம்மதி க்ரிஸ் மீதான கண நேரத்துப் பரிதாபத்தைத் தூக்கி சாப்பிட்டு விட்டது. என்ன இருந்தாலும் க்ரிஸ் சட்டத்தை மீறியிருக்கிறான்.  இந்த சட்டம்தானே இவர்களை  சந்தோஷமாக, பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

ஏன் ஜோவுமே அப்படித்தான். அவன் விரைவில் க்ரிஸ்ஸையும் மறந்தான். அவனுடைய இசையையும் மறந்தான். தான் செய்தது சரி என்று அவனுக்குத் தெரியுமே.  அவனுக்கு என்ன புரியவில்லை என்றால்,  க்ரிஸ்ஸைப் போன்ற ஒரு நபர் முதல் முறையே கூட ஏன் சட்டத்தை மீறி இருப்பான்?  அல்லது என்ன சட்டத்தை மீறி இருப்பான்? இவ்வுலகில் எந்த சட்டமும் மக்களை மகிழ்விப்பதற்காகத்தானெஎ இருக்கிறது?  அதே சமயம்,  எந்த ஒரு சட்டத்தையும் மீற ஜோவுக்குத் துளி ஆசை கூட இல்லை.

ஆனாலும். ஒருமுறை ஜோ பியானோவிடம் சென்று, அதை திறந்து, அதிலிருக்கும் ஒவ்வொரு விசையையும் அழுத்தினான். முடித்தவுடன் அதன் மீது தலையை கவிழ்த்து அழுதான். அவன் அறிவான். க்ரிஸ் பியானோவை மட்டும் இழக்கவில்லை. தன் விரல்களையும் இழந்துவிட்டான். இனி அவனால் ஒரு போதும் இசைக்க முடியாது. எத்தனை கொடியது அந்த வலி? ஜோ தன் பாரை இழப்பதற்கு சமம்! ஒருவேளை ஜோ தன் பாரை இழப்பானாயின், அவன் வாழ்வே சூன்யமாகி விடும் அல்லவோ.

க்ரிஸ்ஸுக்குப் பதிலாக வேறொரு ஆள் இப்போது அந்த டோனட்டு  வாகனத்தை ஓட்டிக் கொண்டு பாருக்கு வருகிறான். அந்தப் பகுதி மக்களில் யாருக்கும் கிரிஸ்ஸை நினைவில்லாமல் போயிற்று.

மூன்றாம் அசைவு (சரணம்)

“ஓ!  என்ன அழகு, இந்த காலைப் பொழுது” என்று சாலை அமைப்புத் தொழிலாளர்களின் குழுவில் இருந்த ஒருவன் பாடினான். அவன் ‘ஒக்லஹோமா!’ இசை நாடகத்தைத் தன் சொந்த ஊரில் நான்கு முறை பார்த்திருக்கிறான்.

“ஆபிரகாமின் அரவணைப்பிலென் ஆன்மா களிக்கும்” என்று மற்றொரு பணியாளன் பாடினான். கிதார்களுடன் தன் குடும்பம் கூடும் போதெல்லாம் அவன் பாடக் கற்றுக் கொண்டிருக்கிறான்.

“சூழும் இருட்டினிலே எமக்குப் பாதை வகுப்பாய் அன்பு ஒளியே!” என்று நம்பிக்கையுள்ள ஒரு மூன்றாம் ஆள் பாடினான்.

போக்குவரத்தை நிறுத்தவும், மெதுவாக செல்லும்படி பணிப்பதற்கும் சாலைச் சைகைகளை ஏந்தி நின்ற விரல்களில்லாத பணியாளன் ஒரு போதும் பாடவில்லை. கேட்க மட்டுமே செய்தான்.

“நீ ஏன் பாட்றதேயில்லெ?” ராஜர்ஸ் & ஹாமர்ஸ்டைய்ன் பாடல்களின் ரசிகன் ஒருவன் கேட்டான்; எல்லோரும் அவனிடம் இந்த கேள்வியை ஒரு முறையாவது கேட்டிருப்பார்கள்.

சர்க்கரை என்று எல்லாரும் அழைத்த அவன் பதிலுக்குச் சும்மா கை விரிப்பான்.  ஏதாவது சொன்னாலும்,  “எனக்குப் பாடணும் போல இல்லியெ,” என்று விலக்கி விடுவான்.

“இவனை ஏய்யா எல்லோரும் சக்கரைன்னுட்டு கூப்பிடுகிறாரங்க?”புதிதாகச் சேர்ந்தவன் ஒருமுறை கேட்டான்,  ”அப்டி ஏதும் இனிப்பா இல்லியெ இவன்.”

நம்பிக்கையாளன் சொன்னான், “அவன் பெயரின் முதலெழுத்துக்கள் ’சி’யும், ’எய்ச்’. அதான் சக்கரை, ஷுகர். சி & எய்ச்= ஷுகர், கேட்டதில்லியா நீ!”
[ பதிப்பாசிரியர் குறிப்பு: C &H Sugar என்பது ஒரு பெரும் அமெரிக்க சர்க்கரை உற்பத்தி நிறுவனம்.  தவிர சுக்ரோஸ் என்னும் ஷுகருக்கு ரசாயன ஃபார்முலா C12H22O11. இதிலும் சி&எய்ச்  முதலெழுத்துகள் என்பதைக் கவனிக்கலாம். ]
புதியவன் சிரித்தான். மடத்தனமான ஜோக் தான். ஆனால் இந்த வகை நகைச்சுவையே சாலை அமைக்கும் தொழிலாளரின் தினப்படி வாழ்க்கையை தாங்கக் கூடியதாக ஆக்கியது.

அதற்காக அவர்கள் வாழ்க்கை ஏதோ கஷ்டம் என்ற முடிவுக்கு வர வேண்டாம். அவர்களும் சோதிக்கப்பட்டுதான் இங்கு அமர்த்தப்ப்ட்டுள்ளார்கள்;  இந்த வேலைதான் அவர்களுக்கு மகிழ்வு தரும் என்று தெரிந்ததால் இதில் சேர்க்க்ப் பட்டிருக்கிறார்கள்.    வெயிலில் வறுபட்டு வதைபடுவதிலும், தசைகள் பிடித்துக்கொள்வதிலும், அவர்களுக்கு ஏதோ பெருமை இருந்தது.  உலகிலேயே மிக வனப்பானதொரு விஷயம் என்னவென்று அவர்களிடம் கேட்டால், தங்கள் முதுகுக்குப் பின் நீண்டு கொண்டே செல்லும் ஒல்லியான சாலை என்பார்கள். அவர்கள் அதை விட மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று தெரிந்து வைத்திருந்தார்கள். அதனால் தினமும் வேலையின் போது பாடினார்கள்.

சுகரைத் தவிர!

பிறகு கலெர்மோ வந்தான். வட்டார வழக்கை விட்டுக் கொடுக்காத உச்சரிப்புடன் உரையாடல் செய்த ஒரு குட்டை மெக்சிகன். “நான் சொனோராவிலிருந்து வந்திருக்கலாம். ஆனால் என் இதயம் மிலானோவையே சேர்ந்தது” என்று கேட்போரிடம் கூறுவான். ஏன் என்று கேட்டால் (கேட்காவிட்டாலும்!) காரணம் சொல்லுவான். “நான் மெக்சிகனின் உடலில் வாழும் ஒரு இத்தாலிய பாடகன்” என்பான். புச்சினி மற்றும் வெர்டி இயற்றிய பாடல்களைப் பாடிக்காட்டி சொன்னதை நிரூபிப்பான். “கருசொவெல்லாம் ஒன்றுமே இல்லை. இதை கேளுங்கள்” என்று பீற்றிக்கொள்வான்.

கலெர்மோ நிறைய இசைத்தட்டுகள் வைத்திருந்தான். அதன் கூடவே பாடுவான். பணியில் யாரேனும் பாடினால் சேர்ந்து கொண்டு ஒத்திசைப்பான். அவன் உச்சஸ்தாயியில் ஒரு கீதத்தை பாடினால், அது தலைக்கு மேல் இருக்கும் கூரையை பிய்த்துக் கொண்டு வானில் உலவும் மேகக்கூடத்துடன் நிரம்பிவிடும். “நான் பாடுவேன்” என்பான். அனைவரும் ஆமோதிப்பர். “ஆம் கலெர்மோ! பாடு. மறுபடி, மறுபடி பாடு!”
ஆனால் ஒரு இரவு, கலெர்மோ உத்தமனானான். உண்மையைச் சொன்னான். “நண்பர்களே! நான் பாடகன் இல்லை”.
“என்ன சொல்கிறாய்? நீ பாடகன்தான்” என்று ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்தார்கள்.

“பிதற்றல்!” என்று கத்தினான் கலேர்மோ. அவன் குரலில் ஒரு நாடகத்தனம் இருந்தது. “அப்படி நான் ஒரு பெரிய பாடகனாக இருந்தால் ஏன் இதுவரை ஒரு இசைத்தட்டில் கூட என் பாட்டு இல்லை. ஏன்? இதுவா ஒரு பெரிய பாடகனுக்கு அழகு? பிதற்றல்! பெரிய பாடகர்கள் எல்லாம் பெரிய பாடகர்களாவே இருப்பார்கள். பிரபலமாக இருப்பார்கள். நானோ பாட விரும்பும், ஆனால் திறமையில்லாத ஒரு சாதாரண மனிதன். உங்களைப் போன்றவர்களுடன் சேர்ந்து சாலை கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதை விரும்பும் ஒரு சாதாரண ஆள். ஏதோ வாய் கிழியப் பாடுகிறேன். அதற்காக என்னை ஒரு ஒபேராவில் பாடச் சொன்னால் பாட முடியுமா? சத்தியமாக முடியாது!”

அவன் இதை வருத்தத்துடன் கூறவில்லை. ஒரு வேகத்தோடு, நம்பிக்கையோடு சொன்னான்.”இதுதான் என் இடம்! சாசுவதமான என் இடம்! நான் பாடுவதை ரசிப்பவர்களுக்காக நான் பாடுகிறேன். என் மனது ஒத்துப்போகும் சமயங்களில் நான் உங்களுடன் ஒத்திசைக்கிறேன். இதனால் எல்லாம் கலேர்மோ பெரிய பாடகன் ஆகிவிட மாட்டான். ஏன் என்றால் அவன் ஒரு பெரிய பாடகன் இல்லை!”

அது நேர்மையின் மாலை ஆனது. அங்கிருந்த ஒவ்வொருவரும் தான் இந்த சாலைக் குழுவில் இருப்பது எத்தனை மகிழ்ச்சியை அளிக்கிறது, தான் வேறெங்கும் இருக்க ஏன் விரும்பவில்லை என்று விளக்கினார்கள். அங்கிருந்த ஒவ்வொருவரும்… சுகர் மட்டும்அமைதியாக!

“சொல்லு சுகர்! உனக்கு இங்கே இருப்பதில் சந்தோஷம் இல்லையா?”

சுகர் சிரித்தான். “சந்தோஷம் தான். எனக்கு இங்கே பிடித்திருக்கிறது. இந்த வேலை பிடித்திருக்கிறது. நீங்கள் பாடுவது பிடித்திருக்கிறது”.

“அப்புறம் ஏன் நீ எங்களுடன் பாடுவதில்லை?”

சுகர் தலை அசைத்தான். “நான் பாடகன் இல்லை”.

கலேர்மோ அவனை ஊடுருவிப் பார்த்தான். “பாடகன் இல்லையாம்… பாடகன்! பாட மறுக்கும் கையில்லாத இந்த மனிதன் ஒரு பாடகன் இல்லையாமா? என்ன இது…ஹ?”

“இதற்கு என்ன அர்த்தம்?” நாட்டுபுற இசையில் நாட்டம் கொண்டவன் கேட்டான்.

“அர்த்தம் என்னவென்றால், சுகர் என்று அழைக்கப்படும் இவன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. பாடகன் இல்லை! அவன் கைகளைப் பார். ஒரு விரலாவது இருக்கிறதா? யார் அதையெல்லாம் நறுக்கியிருப்பார்கள்?”

ஒருவராலும் யூகிக்க முடியவில்லை. ஒரு மனிதன் தன் விரல்களை இழக்கப் பல காரணங்கள் இருக்கக் கூடும். இதையெல்லாமா யூகிக்க முடியும்?

“இவன் சட்டத்தை மீறியதால் கண்காணிப்பாளர்கள் இவன் விரல்களை வெட்டிவிட்டார்கள். அப்படித்தான் இவன் விரல்களை இழந்திருக்கிறான். அவர்கள் வெட்டும் அளவிற்கு இவன் விரல்களை வைத்து என்ன செய்துக் கொண்டிருந்தான்? இவன் சட்டத்தை மீறினானா இல்லையா? இவனிடமே கேளுங்கள்!”

“நிறுத்து!” என்றான் சுகர்.
“நீங்கள் விரும்பினால்…” என்று நிறுத்தினான் கலேர்மோ. ஆனால் அங்கே யாரும் சுகரின் அந்தரங்கத்தை மதிக்கவில்லை.

“சொல்” என்றனர் எல்லோரும்.

சுகர் அறையை விட்டுச் சென்றான்.

“சொல்லேன்”. கலேர்மோ சொன்னான். இந்த சுகர் ஒரு படைப்பாளியாக இருந்திருக்க வேண்டும். அவன் சட்டத்தை உடைத்ததனால் மீண்டும் இசையமைக்க தடை செய்யப்பட்டிருக்கக் கூடும். ஒரு படைப்பாளி, அவன் சட்டத்தை மீறியிருந்தாலும், தங்களுடன் சேர்ந்து இங்கே சாலை கட்டுமான வேலை செய்கிறான் என்ற எண்ணமே அவர்களை அதிசியத்தில்ஆழ்த்தியது. படைப்பாளிகள் எல்லாம் அரிது. ரொம்பவும் போற்றி, கொண்டாடப்படுபவர்கள்.

“ஆனால் எதற்காக விரல்களை இப்படி…?”

“காரணம் இருக்கிறது. அவன் மீண்டும் சட்டத்தை மீற முயற்சித்திருப்பான். இரண்டாவது முறை சட்டத்தை மீற முயலுபவர்களிடமிருந்து, மூன்றாம் முறை மீறும் வலிமை பறிக்கப்படுகிறது”. கலேர்மோ ஆவேசமாக பேசினான். குழு மொத்தத்திற்கும், சுகரின் கதை ஒரு ஒபெராவைப் போல கம்பீரமாகவும், பயங்கரமாகவும் தெரிந்தது. அனைவரும் சுகரின் அறையில் கூடினர். அவன் சுவற்றைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“சுகர், இது உண்மையா?” – ராட்ஜர்ஸ் மற்றும் ஹாமர்ச்டீனை ரசிப்பவன் கேட்டான்.

“நீ ஒரு படைப்பாளியா?” – நம்பிக்கையாளன் கேட்டான்.

“ஆம்!”

“ஆனால் சுகர், ஒருவன் சட்டத்தை மீறியிருந்தாலும், அவன் இசையை நாட கடவுள் என்றும் தடுப்பதேயில்லை” என்றான் நம்பிக்கை உடையவன்.

சுகர் சிரித்தான். “யாரும் கடவுளைக் கருத்து கேட்கவில்லை”.

கலேர்மோ பேசினான். “சுகர். நாம் இந்த குழுவில் ஒன்பது பேர் இருக்கிறோம். ஒன்பது பெரும் மனித வாசனையை பல மைல்கள் கடந்து வசிக்கிறோம் என்று உனக்கே தெரியும். எங்களைப் பற்றியும் தெரியும். நாங்கள் எல்லோரும் எங்கள் தாயின் கல்லறை மீது சத்தியம் செய்கிறோம்… எல்லோரும்! யாரிடமும் சொல்லமாட்டோம். இது குறித்து மூச்சு விடமாட்டோம். ஏன் சொல்ல வேண்டும்? நீ எங்களுள் ஒருவன். பாடு! தயவு பண்ணி பாடு!”

“என்னால் முடியாது. உனக்கு புரியவில்லை” என்றான் சுகர்.
“அப்படி ஒன்றும் கடவுள் எழுதவில்லை” என்றான் நம்பிக்கை உடையவன். “நாம் எல்லோரும் நமக்குப் பிடித்ததை செய்கிறோம். நீயும் தான் இருக்கிறாய். இசை பிடிக்கிறது. ஆனால் ஒரு வார்த்தை பாட மாட்டேன் என்கிறாய். எங்களுக்காகப் பாடேன்! தயவு செய்து பாடு! உனக்கும், எங்களுக்கும், மற்றும் கடவுளுக்கும் மட்டுமே இது தெரியும்”.

அத்தனை பெரும் உறுதி அளித்தனர். கெஞ்சினர்.

மறுநாள்… ராட்ஜர்ஸ் மற்றும் ஹாமர்ச்டீனை ரசிப்பவன் பாடினான், “அன்பே! தொலைவில் பார்”. சுகர் முணுமுணுத்தான். நம்பிக்கையுடையவன் பாடினான், “எந்தையின் தெய்வமே!” சுகர் மெதுவாக சேர்ந்து கொண்டான்.நாட்டுப்புற இசையை விரும்புபவன் பாடினான், “மெல்ல அசைந்தாடும் சக்கரைத் தேரே!” சுகர் வினோதமான, குழலைப் போன்ற குரலோடு இணைந்து கொண்டான். அனைவரும் சிரித்தனர். சுகரின் குரலை உறசாகத்துடன் வரவேற்றனர்.

சுகரால் புனையத் தொடங்குவதை தடுக்க முடியவில்லை. தன் கற்பனையை அவிழ்த்துவிட்டான். தொடக்கத்தில் ஒத்திசைகள். வித்தியாசமான ஒத்திசைகள். கலேர்மோ முறைத்தான். பின், சுகரின் இசை புரிந்தவனாய் புன்னகைத்தான்.

ஒத்திசையை முடித்துக்கொண்டு, சுகர் தன் சொந்த இசையை, சொந்த வார்த்தைகளில் பாடத் துவங்கினான். திரும்பத் திரும்ப பாடினான். சரளமான வார்த்தைகள். செவிக்கு இனிமையான இசை. இருந்தும் தன் இசைக்கு எதிர்பாராத புது வடிவம் தந்தான். இதுவரை கேட்டிராத பாடல்களை செதுக்கினான். அவை தவறாகக் கேட்டாலும், முற்றிலும் சரியாகவே இருந்தன. விரைவில், ராட்ஜர்ஸ் மற்றும் ஹாமேர்ச்டீனை ரசிப்பவனும், நாட்டுபாடல்களைப் பாடுபவனும், நம்பிக்கையாளனும், சுகரின் இசையைக் கற்றனர். பாடினர். ஆனந்தமாக, அழுகையுடன், ஆவேசமாக, உல்லாசமாக…பணியின் இடையே பாடிக்கொண்டே இருந்தனர்!

கலேர்மொவும் கற்றுக்கொண்டான். அவன் கட்டைக்குரல் மெல்ல மிருதுவாகி, மெருகேறி, இனிய சாரீரமானது. ஒரு நாள் கலேர்மோ சொன்னான், “சுகர்! உன் பாட்டெல்லாம் தப்பு. ஆனால் என்ன தெரியுமா? அது என் மூக்கில் ஏற்படுத்தும் உணர்வை நான் விரும்புகிறேன். அதே போல அது என் வாயில் உருவாக்கும் உணர்வையும் நான் விரும்புகிறேன்”.

சிலது துதிப் பாடல்களாக இருந்தன: “பிரபுவே! என்னை பசியோடு வைத்திரு”என்று சுகர் பாட, மற்றவரும் பாடினர்.

சிலது காதல் பாடல்கள். “அடுத்தவர் பையில் உன் கையை வை” என்று சுகர் ரௌத்திரத்துடன் பாடுவான். “விடியலில் உன் வார்த்தையைக் கேட்டேன்” என்று மென்மையாகப் பாடுவான். “இன்னுமா கோடை வரவில்லை?” என்று ஒப்பாரி வைப்பான். கூடவே குழுவும் பாடும்.

மாதங்கள் நகர, நகர, குழுவும் மாறியது. பல இடங்களில் பலதரப்பட்ட திறன்களின் தேவை. ஒவ்வொரு புதனும் ஒருவன் போவான். வியாழன் இன்னொருவன் வருவான். புதியவன் வந்து இரகசியத்தை காப்பேன் என்று உறுதி தரும் வரை சுகர் மெளனமாக இருப்பான்.

சுகரின் பாடல்களை யாராலும் மறக்க முடியவில்லை. அதுவே அவனுக்கு வினையானது. விலகிச் செல்பவன் பாடல்களையும் தன்னோடு ஏற்றிச் செல்வான். புதுக் குழுவில் பாடித் தொலைப்பான். அவர்கள் கற்பார்கள். பிறருக்கு கற்பிப்பார்கள். பாரில் பாடுவார்கள். சாலையில் பாடுவார்கள். மக்களும் சட்டென பிடித்துக்கொள்வார்கள். பிடித்து வைத்திருப்பார்கள்.ஒரு நாள் ஒரு பார்வையற்ற கண்காணிப்பாளன் இந்த பாடல்களை கேட்டான். அடுத்த கணம் அதன் மூலத்தை தெரிந்து கொண்டான். கிறிஸ்டியன் ஹரால்ட்சன்! அவனுடைய இசையேதான்! எத்தனை தெளிவான இன்னிசை… வடக்குக் காட்டில் ஊதும் காற்று இதிலே வீசுகிறது. அங்கே கிளைகளிலிருந்து பிரியும் இலைகள் இங்கே ஸ்வரங்களுடன் சேருகிறது. கண்காணிப்பாளன் பெருமூச்சு விட்டான். தன் ஆயுதக் கிடங்கிலிருந்து ஒரு பிரத்தியேகமான கருவியை எடுத்துக் கொண்டான். சாலைப் பணியாளர்கள் குழு வேலை செய்த இடத்திற்கு அருகாமை நகரத்திற்கு விமானத்தில் பறந்தான்.கம்பனி காரை ஓட்டுனர் செலுத்த அந்த குருட்டுக் காவலன் சாலையின் முடிவுக்கு வந்தான். அங்கே சாலை இல்லை. பாதை இல்லை. கரடுமுரடான ஒரு தடம் மட்டுமே இருந்தது. பார்வையற்ற கண்காணிப்பாளன் வெளியே வந்தான். பாடல் ஒலித்தது. குழலையொத்த குரலிலிருந்து கசிந்த அப்பாடல் கண்ணிலாதவனையும் கண்ணீர் சிந்தவைக்கும்.
“கிறிஸ்டியன்!” – கண்காணிப்பாளன் கத்தினான். பாட்டு நின்றது.

“நீயா?”

“கிறிஸ்டியன்! உன் விரல்களை இழந்த பின்பு கூட நீ திருந்தவில்லையா?”

கூடியிருந்தவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கலேர்மொவுக்கு புரிந்தது.

“காவலனே! அவன் ஒரு தீங்கும் செய்யவில்லை” என்றான் கலேர்மோ.

கண்காணிப்பாளன் உதட்டை ஒரு பக்கமாக இழத்து எகத்தாளப் புன்னகை செய்தான். “அப்படி யார் சொன்னார்கள்? ஆனால் அவன் சட்டத்தை மீறிவிட்டான். கலேர்மோ, நீ ஒரு செல்வந்தர் வீட்டில் சேவகனாக இருக்க விரும்புகிறாயா? இல்லை, வங்கியில் பணம் பட்டுவாடா பண்ணத் தயாரா?”

“என்னை இங்கிருந்து கூடிக் கொண்டு செல்லாதே” என்றான் கலேர்மோ.

“மக்கள் மகிழ்ச்சியாக இருக்க சட்டம் வழி செய்கிறது. அதை இவன் மீறிவிட்டான். மக்கள் கேட்கக்கூடாத இசையை பாடிக்கொண்டு இவன் சுற்றுகிறான்”.

வாதம் துவங்குவதற்கு முன்பே தோற்றுவிட்டோம் என்பதை கலேர்மோ அறிந்தே இருந்தான். இருந்தும் அவனால் தடுக்க முடியவில்லை.”அவனைத் துன்புறுத்தாதே. நான் அவன் இசையைக் கேட்கவே விரும்பினேன். கடவுள் சத்தியமாக, அவன் இசை எனக்கு மகிழ்வூட்டியது”.

கண்காணிப்பாளன் கவலையுடன் தலையை ஆட்டினான். “உண்மையை சொல் கலேர்மோ! நீ நேர்மையானவன். இவன் இசை உன்னை துக்கப்படுத்தியதுதானே? உன் வாழ்வில் நீ ஆசைப்பட்டதெல்லாம் இருந்த போதிலும், இவன் பாடல் உன்னை சோகத்தில் ஆழ்த்தியது. எப்போதும் சோகம். அதானே?”

கலேர்மோ வாதாட எண்ணினான். ஆனால் அவன் நேர்மையானவன். தன் இதயத்தை திரும்பிப் பார்த்தான். ஆம், சுகரின் பாடல்கள் எல்லாம் சோகமானவையே! துள்ளலான ஆனந்தப் பாட்டும் ஏதோ ஒரு துயரத்தை சொல்லும்; ஆத்திரப் பாட்டு அழ வைக்கும்; காதல் பாடல்கள் கடைசியில் எல்லாம் மாயை, திருப்தி என்றும் நிலையானதல்ல என்று உத்திரவாதம் தரும். கலேர்மோ தன் இதயத்தைப் பார்த்தான். சுகரின் அத்தனை இசையும் மொத்தமாக வந்தன. அவன் அழுதான்.

“தயவு செய்து அவனைத் துன்புறுத்தாதே!” என்று அழுது கொண்டே முனகினான்.

“மாட்டேன்” என்றான் கண்காணிப்பாளன். சலனமற்று, காத்திருக்கும் கிறிஸ்டியன் அருகே சென்று தன் ஆயுதத்தை அவன் தொண்டையில் வைத்தான். கிறிஸ்டியன் திணறினான்.

“வேண்டாம்” – கிறிஸ்டியன் சொன்னான். இல்லை இல்லை… வார்த்தை உதட்டிலும், நாக்கிலும் மட்டுமே தோன்றியது. ஓசை வெளியே வரவில்லை. காற்று மட்டும் தான்….”வேண்டாம்”.

பணியாளர் குழு மெளனமாக பார்த்தது. கிறிஸ்டியனை தன்னோடு அழைத்துச் சென்றான் கண்காணிப்பாளன். பல நாட்களுக்கு அவர்கள் பாடவேயில்லை. ஒரு நாள் கலேர்மோ தன் துயரங்களைஎல்லாம் மறந்து ‘லா போஹிமே’விலிருக்கும் ஒரு பாட்டை பாடினான். அங்கிருந்து பாடல்கள் வளர்ந்தன. அவ்வவ்போது கிறிஸ்டியனின் பாடல்களும் பாடப்பட்டன. அவற்றை மறக்க முடியவில்லை!

நகரம். குருட்டுக் கண்காணிப்பாளன் கிரிஸ்டியனிடம் ஒரு தாளையும், பேனாவையும் தந்தான். உடனே தன் உள்ளங்கையால் எழுதுகோலை கவிக்கொண்ட கிறிஸ்டியன், எழுதினான்: “நான் இப்போது என்ன செய்ய?”

காரோட்டி உரக்கப் படித்தான். கண்காணிப்பாளன் பெரிதாக சிரித்தான். “எங்களிடம் உனக்கு வேலை இருக்கிறதா? கிறிஸ்டியன், எங்களிடம் உனக்கு வேலை இருக்கிறதா?” எஜமானனின் சிரிப்பை ஆமோதிக்க, நாயும் பெரிதாகக் குரைத்தது.

கரகோஷம்

உலகம் முழுவதும் மொத்தம் இருபத்திநான்கே கண்காணிப்பாளர்கள் இருந்தனர். இரகசியமான ஆட்களான இவர்கள், ஒரு அமைப்பை மேற்ப்பார்வையிட்டு வந்தனர். சொல்லப்போனால் அந்த அமைப்புக்கு மேற்பார்வை என்பதே தேவையில்லை. ஏனென்றால் அது எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தது. நல்ல அமைப்புதான். ஆனாலும், பிழையற்ற இயந்திரம் சில சமயங்களில் பழுதடைவதைப் போல, இங்குமங்குமாக சில குளறுபடிகள். அங்குமிங்கும் சிலர் கிறுக்குத்தனமாக எதையாவது செய்து, தங்களையும் பாதித்து, பிறருக்கும் தொந்தரவாய் இருந்தார்கள். அவர்களையும், மற்றவரையும் பாதுகாப்பதற்காக, கண்காணிப்பாளன் அவர்களின் பித்தத்தை அறிந்து குணமாக்கினான். அது அவன் கடமை ஆனது.

பல வருடங்கள், குரலில்லாத, விரல்கள் இல்லாத ஒரு மனிதனே சிறந்த கண்காணிப்பாளனாக இருந்தான். அமைதியாக வருவான். ‘அதிகாரி’ என்னும் பெயரிட்ட சீருடையை அணிந்திருப்பான். சுலபமான, மென்மையான, முழுமையான வழியின் மூலம் பிரச்சனையைத் தீர்ப்பான். பைத்தியத்தை குணப்படுத்துவான். அமைப்பை பாதுகாப்பான். முதன்முறையாக, இந்த உலகம் வாழ்வதற்கு ஒரு சிறப்பான இடமானது. எல்லோருக்கும்!

இருந்தபோதிலும் சிலர் இருந்தனர். ஆண்டுக்கு ஒன்றிரண்டு பேர். இந்த அமைப்போடு ஒட்டாமல், வளைந்தும் கொடுக்காமல், தங்களுக்குள்ளேயே ஏதாவதொரு திட்டத்தை தீட்டி, குடைச்சல் தந்தனர். அகப்பட்டால் அழிந்துபோவோம் என்று தெரிந்துமே சட்டத்தை மீறினார்கள்.

சிறு அளவிலான முடமோ, அங்க அபகரிப்போ அவர்களின் பித்தத்தை தெளிவிக்காத வேளையில், அவர்கள் மீண்டும் இந்த அமைப்புக்குள் அனுப்பப்பட்டார்கள். சீருடை வழங்கப் பட்டது. அவர்களும் சென்றார்கள்… கண்காணிக்க!

சட்டத்தை மீறியவர்களிடமே, அதை பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர்கள் துக்கப்பட்டார்களா?

“ஆம். நான் பட்டேன்.” கிறிஸ்டியன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

வருத்தத்துடன் தன் வேலையைச் செய்தான். வருத்தத்துடன் வயசாகிப் போனான். இறுதியில், இந்த ஊமை மனிதனை மத்தித்த சில கண்காணிப்பாளர்கள் (ஒரு காலத்தில் இவன் அற்புதமான இசையை இயற்றியிருக்கிறான் என்று அவர்கள் அறிவார்கள்), இவனுக்கு இனி விடுதலை என்றார்கள். கால்கள் இல்லாத கண்காணிப்பாளன் புன்னகைத்தபடி சொன்னான், “உன் பணிக்காலம் முடிந்து விட்டது”.

கிறிஸ்டியன் புருவத்தை உயர்த்திக் கேட்டான், “அப்புறம்?”

“அப்புறம் என்ன? நீ உன் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம்”.

கிறிஸ்டியன் அலைந்தான். திரிந்தான். அவனிடம் காசும் இல்லை. காலமும் இல்லை. புதிய கதவுகள் எதுவும் திறக்கவுமில்லை. தான் வாழ்ந்த காலங்களின் வழித்தடத்தில் பயணம் செய்தான். மலைகளுக்கு இடையே உள்ள அந்த சாலை. காப்பிக் கடை, மளிகைக் கடை, சாப்பாடு ஹோட்டல் என்று ஒன்று பாக்கியில்லாமல், எல்லாவற்றின் வழியையும் விரல் நுனியில் வைத்திருந்த அந்த நகரம். இறுதியாக, நாற்பது ஆண்டுகளாக உபயோகிக்கப் படாமல், வானிலை மாற்றங்களால் வதைக்கப்பட்டு, வடிவம் இழந்து கொண்டிருக்கும் காட்டிலுள்ள அந்த வீடு!

கிறிஸ்டியன் முதிர்ந்து விட்டான். இடி இடித்தது. மழை வரப்போகிறது என்று புரிந்து கொண்டான். எல்லா பழைய பாடல்கள்… எல்லா பழைய பாடல்களையும் தனக்குள்ளே முனகிக் கொண்டான். இந்த முனகல் அவன் வாழ்வின் சோகத்தினால் அல்ல. அவனுக்கு பாட்டெல்லாம் மறந்து விட்டது.

மழைக்கு ஒதுங்க, அருகில் இருக்கும் காப்பிக் கடைக்கு சென்று அமர்ந்தான். நான்கு விடலைப்பயல்கள் கிதாருடன் அசிங்கமாகப் பாடிக்கொண்டிருந்தர்கள். அது அவனக்குத் தெரிந்த பாடல். சுட்டெரிக்கும் ஒரு கோடை நாளில், கல் மண் கலவையை கொட்டிக்கொண்டே அவன் இயற்றிய பாடல். விடலைகள் இசைக்கலைஞர்கள் இல்லை. நிச்சயமாக படைப்பாளிகளும் இல்லை. ஆனால் தங்கள் இதயத்திலிருந்து பாடினார்கள். வரிகள் உற்சாகமாய் இருந்தாலும் அப்பாட்டு, கேட்பவரை எல்லாம் அழ வைத்தது.

தான் எப்போதும் வைத்திருக்கும் ஏட்டில் எழுதி, கிறிஸ்டியன் பையன்களிடம் கேட்டான்: “இது யாருடைய பாடல்?”

குழுவின் தலைவன் சொன்னான், “இது சுகரின் பாடல். சுகர் என்பவன் இயற்றிய பாடல்”.

கிறிஸ்டியன் புருவத்தை உயர்த்தியபடி, தோளைக் குலுக்கினான்.
“சுகர் என்பவன் சாலைப் பணிக் குழுவில் வேலைப் பார்த்தவன். பல பாடல்களை இயற்றியிருக்கிறான். ஆனால் இப்போது உயிருடன் இல்லை”.

“அவை அத்தனையும் உலகத்தின் மிகச் சிறந்த பாடல்கள்” என்றான் இன்னொருவன். மற்றவர்கள் தலையசைத்தனர்.

கிறிஸ்டியன் சிரித்தான். பின் எழுதினான் (இந்த பேச்சுவராத மனிதன் இங்கிருந்து கிளம்ப மாட்டானா என்று பொறுமையில்லாமல் நின்றனர்): “நீங்கள் மகிழ்ச்சியாகத் தானே இருக்கிறீர்கள்?எதற்காக சோகப் பாடல்களைப் பாட வேண்டும்?”

பிள்ளைகளிடம் பதில் இல்லை. தலைவன் பேசினான், “நிச்சயம் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு நல்ல வேலை இருக்கிறது. நான் விரும்பிய பெண் என்னுடன் இருக்கிறாள். இதைவிட வேறென்ன வேண்டும்? என்னிடம் கிதார் இருக்கிறது. பாடல்கள் இருக்கின்றன. நண்பர்கள் இருக்கிறார்கள்”.

“இவையெல்லாம் சோகப் பாடல்கள் இல்லை, ஐயா! இவை மக்களை அழவைப்பதென்னமோ உண்மைதான். ஆனால் சோகப் பாடல்கள் இல்லை” என்றான் இன்னொருவன்.
“ஆமாம்” என்றான் மூன்றாமவன். “இவை எல்லாம்  தெரிந்த ஒரு மனிதனால் எழுதப்பட்டவை”.

கிறிஸ்டியன் கிறுக்கினான்: “எதைத் தெரிந்த?”

“அவனுக்குத் தெரியும். அவ்வளவுதான். அவனுக்கு எல்லாம் தெரியும்”.

விடலைகள் திரும்பினார்கள். தங்களின் அழுக்குக் கிதாரையும், பயிலப்படாத குரலையும் கொண்டு பாடினார்கள். மழை நின்றுவிட்டது. கிறிஸ்டியன் வாசலுக்கு நடந்தான். தான் மேடையை விட்டு விலக வேண்டும் என்று தெரிந்து கொண்டான். பாடகர்களை நோக்கித் திரும்பி, தலை தாழ்த்தி வணங்கினான். அவர்கள் கவனிக்கவில்லை. ஆனால் அவர்களின் குரல் தான் அவன் கேட்ட கரகோஷம். பாராட்டுகளை உதறிவிட்டு வெளியே வந்தான். அங்கே நிறம் மாறிய இலைகள் இருந்தன. கூடிய விரைவில், கேட்காத சத்தத்துடன், அவை முறிந்து பூமியோடு சேர்ந்து விடும்.

ஒரு நொடி தானே பாடுவதைப் போல உணர்ந்தான். அவனில்லை அது. காற்றின் கடைசி மூச்சு, தெருவோரக் கம்பிகளில் சறுக்கிச் சென்றது. அது ஒரு கட்டுக்கடங்காத பாடல். கிறிஸ்டியன் தன் குரலைக் கண்டுகொண்டதாக எண்ணினான்.

_____________________________________________________________________

பின் குறிப்பு:

இந்தக் கதையைப் பொறுதத மட்டிலும், அது தன் எட்டு வயது அனுபவங்களில் இருந்து துவங்கியது என்று கார்ட் எழுதுகிறார்.  எப்படித் தான் ஒரு புத்தகப் புழுவாக இருந்தார்,  நூலகங்களில் எவ்வளவு முடியுமோ அத்தனை நேரம் செலவழித்தார், ஆனால் நூலகங்களில் சிறுவர்கள் எப்படி தொடர்ந்து பெரியவர்களால் கண்ணெடுக்காமல் கண்காணிக்கப் படுகிறார்கள் என்பதை உணர்ந்தார்,  சிறுவர்கள் தமக்கான பகுதியைத் தாண்டி பிற பகுதிகளுக்குப் போவதை எப்படி எல்லா வளர்ந்த மனிதருமே ஓரளவு எதிர்த்தனர், அல்லது முழுவதுமே எதிர்த்தனர் எனபதில் இக்கதை துவங்கியது என்கிறார்.  அந்த வருடம், 1959இல், அவர் ஒருவரும் கவனிக்காத போது வளர்ந்தவர்கள் பகுதிக்குப் போய், அறிவியல் நவீனத்தைக் கண்டு பிடித்த விவரத்தை ருசிகரமாக விவரிக்கிறார். அப்போது தனக்குப் புரியாத பல கதைகளுடன் முரண்டிய போது ஒரு கதை மனதில் தைத்தது, அதிலிருந்த வித்துகள் இந்தக் கதையை நடத்துகின்றன என்கிறார்.

அந்த வித்து- எல்லாருக்கும் தெரிந்த, பிடித்த பாதைகளிலேயே போய் முனைப்பும் ஓரளவு திறனும், உழைப்பும் இருந்தால் எவரும் பெருமனிதனாக முடியும்.  தனியாக நின்று தனக்குப் பிடித்த பாதையில் போய், யாரும் நடவாத வழிகளில் தாமே முதலில் நடந்து வழிகாட்டியாகிப் பெரும் புகழ் பெறுவது மிகக் கடினம். அப்படித்தான் வரலாற்றில் நாயகர்கள் உருவாகிறார் என்று அந்த வயதில் அக்கதை சொன்னது மனதில் தைத்ததே, அதுதான்.

பிற்பாடு தானே ஒரு பெயர் பெற்ற கதாசிரியரான பின்னும் அந்தக் கதை நினைவு வந்த வண்ணம் இருந்ததையும், இறுதியில் ஒரு பழைய புத்தகக் கடைக்காரரின் விசாலமான புத்தக அறிவின் வ்ழியே தான் சிறுவனாகப் படித்த கதையின் ஆசிரியரையும், கதையையும் கண்டு பிடித்ததையும் சொல்கிறர். அந்தக் கதை Tunesmith- by Lloyds Biggle, jr.  லாயிட்ஸ் பிக்கில் என்ற அந்த கதாசிரியர் புகழ் பெறவில்லை, ஏராளமான புத்தகங்கள் விற்கவில்லை, ஆனால் அவர் சொன்ன கதைகள் வெற்றி பெற்றனவா? அவர் சொன்ன கதைகள் சொல்லத் தேவையானவையா? என்றால் யார் அதைத் தீர்மானிக்க?  தன்னிடம் அவருடைய கதை இன்னும் உயிரோடு இருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்று கேட்கிறார். அக்கதை தன்னையும் தன் வாழ்வையும்  பாதை மாற்றித் தன்னையே மறு உருவாக்கியதே அதை எப்படி எடுத்துக் கொள்ள என்று யோசிக்கிறார்.

பிறகு வாசகர்களிடம் பேசுகையில் தனக்கு எப்படி இந்தக் கதை ஒரே ஓட்டத்தில், திருத்தங்கள், மறு வாசிப்பு, இரண்டாம் பிரதி என்றெல்லாம் இல்லாமல் எழுத முடிந்தது என்பதைப் பற்றிப் பேசியதை நினைவு கூர்கிறார்.  அவருக்குத் திடீரென ஒன்று புரிகிறது.  தான் எழுதிய சிறுகதைகளில் தனக்குப் பிடித்த ஒரு கதையான இது அடிப்படையில் தன்னை நெடுநாட்களாகப் பாதித்த ‘Tunesmith’ கதையின் மையக் கருவை வேறு பின்னணியில், சிறிதே வேறு விதமாக எழுதி அமைக்கப் பட்ட கதை என்று புரிந்து கொள்கிறார்.  ட்யூன்ஸ்மித் கதையின் ஆழத்தில் இருக்கும் ஒரு புராணக் கதைக் கருதான் தன்னை உந்தியது, அதுதான் ‘Unaccompanied Sonata’ என்கிற கதையாயிற்று என்றும் அறிகிறார்.

கார்ட் இலக்கிய எழுத்தாளர் அல்ல் என்பது என கருத்து.  ஓரளவு உணர்ச்சி மையக் கதைகளை எழுதினாலும்,  அனேகமாக கருத்துமையக் கதைகளைத் தான் எழுதுகிறார்.   இவருடைய மொத்த எழுத்து நடவடிக்கையிலும் நிறைய உள் மோதல்களை நான் காண்கிறேன்.  இவரது நம்பிக்கைகள் ஓரளவு முந்தைய காலத்தின் வழக்க்ங்களை ஒட்டி ஒழுகச் சொலகின்றன.  அது அவசியம் என்று இவர் தன் சொந்த வாழ்விலும், புனைகதைகளிலும்,  மற்றும் விமர்சனங்களிலும் தெரிவிக்கிறார்.  ஆனால் ஏதோ ஒரு கட்டுக்கு அடங்காத் தனம்,  தன்னியல்புக்கு, ஒரு இடம் மட்டுமல்ல, மதிப்பும், இய்க்க சுதந்திரமும் அவசியம் என்றும் இவர் விரும்புகிறார்.  ஒரு கோணத்தில் பார்த்தால் இது அமெரிக்க நாகரிகத்தின் மையத்தில் உள்ள் இழுபறிதான்.  இதையே இன்னொரு வகையில் மேற்கு யூரோப்பியரின் கிருஸ்தவப் பண்பாட்டின் மைய இழுபறி என்றும் நாம் இனம் காண முடியும்.  கார்ட் ஒரு கிருஸ்தவர், ஆனால் கிருஸ்தவ நம்பிக்கையை உலகின் மீது திணிக்க விரும்பும் வெறியாளர் அல்ல.  மாறாக அதன் புராணங்களில் எங்கும் முரண்களையும், பிளவுகளையும், நம்ப முடியாத் தன்மையையும், மனித அவலங்களையும் பார்ப்பதோடு அவற்றை மேற்கும், கிருஸ்தவமும், மனிதரும் அறிந்து,  உண்மையை ஏற்க வேண்டும்.  நாம் சுலபத்தில் பரிணமித்து விட முடியாது என்பதைக் காண வேண்டும் எனக் கருதுகிறார் என்பதை நான் ஊகிக்கிறேன்.

எந்த் எழுத்தாளரின் உள்ளீட்டையும் வாசகர்கள் அப்படி ஏதும் க்றாராக வரையறுக்க முடியாது.  எழுத்து வாசகரை மட்டும் மாற்றுவதில்லை.  எழுதுபவரும் எழுதுவதால் மாறுவார்.  அப்படி தன்னை மாற்றும் எழுத்தை எழுதாத ஒரு எழுத்தாளனின் எழுத்து என் கருத்தில் அத்தனை பயனுள்ளதோ, முக்கியமானதோ,  கருதப் பட வேண்டியதோ அல்ல.  தன் எல்லைகள் என்ன என்பது எழுத்தாள்ருக்கு,  தேடுவதற்கு ஒர் முக்கிய வழியாக எழுத்தைக் கருதும் எழுத்தாளருக்கு,  சாதாரணமாகத் தெரிவதில்லை.  அவற்றை அடிக்கடி தன் பல் முயற்சிகளில் எழுத்தாளர் தெரிந்து கொள்கிறார்.  அப்படி எல்லைகளின் மாற்றத்துக்கு ஒரு எழுத்தாளருக்கு  உதவாத எழுத்து ஒரு நுகர் பொருளாகிறது,  படைப்புப் பொருள் அல்ல.  பற்பசை கூட  புதுப்பித்தலுக்கு உதவும்,  புது அறிவைத் தராத எழுத்து பற்பசையின் முன் தோற்கும்.

கார்ட் ஜன ரஞ்சக எழுத்தை நம்புவதால் அதற்கான பல வகை விளையாட்டுகள், உத்திகள், த்ந்திரங்களை எல்லாம் நாணமற்று எங்கும் தன் எழுத்தில் பிரயோகிக்கிறார்.  ஆனால் அவற்றைத் தாண்டிய ஒரு உன்னிப்பு, கருத்து மைய சஞ்சாரம் இவரிடம் உள்ளதை இவர் எழுத்தை நீடித்து வாசிப்பவர் அறிய முடியும்.  இக்கதை அதன் பொருட்டே எனக்குப் பிடித்தது.   இது குறைகள் உள்ள கதைதான். ஆனால்  அதன் ஊடே வெளிப்படையாகாமல் நடக்கும் கருத்துச் சர்ச்சையால் முக்கியமானதாக எனக்குத் தோன்றுகிறது.

இதை அவர் எழுதிய காலத்துக்கு எத்தனையோ பத்தாண்டுகள் முன்பு இதன் கரு தன்னுள் நுழைந்தது என்கிறார். இடையே அவர் நிறைய எழுதிப் புகழ் பெற்றிருக்கிறார்.  ஆனாலும் இக்க்தை இவரை மாற்றி இருக்கிறது, எழுதிய வழியும், கரு தோன்றிய காலமும்,  எழுதிப் பிரசுரம் ஆகிப் பல வருடங்கள் கழித்து வாசகரிடம் இது பற்றிப் பேச நேர்கையிலும் தன்னிடமே புது மாற்றங்களைத் தொடர்ந்து காண்கிறார்.   அது இசையின் தாக்கமா,  இசை மனிதருக்கு என்ன செய்கிறது என்பது குறித்த கார்டின் விசாரங்களின் விளைவா?  அல்லது மனிதனுக்கும் நாகரீகத்துக்கும் இடையே தொடர்ந்து  காணப்படும்,  எங்கும்  எல்லா சமூகத்திலும் உள்ள துவந்த யுத்தத்தாலோ, பாசப் பிணைப்பாலோ வ்ருவதா? அல்லது தன் செயலின் வேர்களையும், அதன் பயண வழியையும் தொடர்ந்து கவனிக்கும் ஒரு உன்னிப்பு கொடுக்கும் புரிதலா?  இந்த இதழில் பல கட்டுரைகளில் பயண வ்ழி எப்படி அறிவைத் தீட்டுகிறது என்பதைக் கலைஞர்கள் கவனிக்கிறார்கள்.   அதே அனுபவம் கார்டிடமும் காண்கிறது.

அதெல்லாம் இருக்கட்டும்.  அதென்ன ‘புராணக் கதை’  இக்கதையின் மையத்தில்?

படித்துப் பார்த்து விட்டு அதைப் பற்றி உங்கள் அபிப்பிராயங்களை எங்களுக்கு எழுதுங்கள்.

-மைத்ரேயன்