குறைந்த வயது – முதிர்ந்த பாட்டு

வருடா வருடம் சங்கீத சீஸனில், விளைந்த பயிர்களை விட விளையும் பயிர்களைக் கேட்பதையே அதிகம் விரும்புவேன். அந்த வகையில் மூன்று வருடம் முன்னால் அம்ருதா வெங்கடேஷைக் கேட்டேன். கே.வி.நாராயணசாமி நினைவாக நடந்த அந்தக் கச்சேரியில் விரிவாக காபி ராகத்தைப் பாடி, “இந்த சௌக்ய” பாடினார். அன்றிலிருந்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேட்டு வருகிறேன். பாட்டில் வயதுக்கு மீறிய முதிர்ச்சி. நல்ல அழுத்தம். கனமான சாரீரம் இருந்தும், குரலின் ஆற்றல்களைக் காட்டுவதில் கவனம் செலுத்துவதை விட, பாவப் பூர்வமாய் பாடுவதில் கவனம் செலுத்துகிறார்.

இந்த சீசனில் 14 இடங்களில் கச்சேரி செய்யும் இவருக்கு வயது 21. பெங்களூர் வாழ் பாடகர். சொல்வனத்துக்காக இவரிடம் தொலை பேசினேன். முதலில் கொஞ்சம் பேசத் தயங்கினாலும்,  போகப் போக சரளமாகப் பேசினார். நேர்காணல் செய்யத்தான் நினைத்திருந்தேன். கடைசியில், அது உரையாடலாக முடிந்தது. உரையாடல் (எனக்கு) சுவாரஸ்யமாக அமைந்ததால், அப்படியே இங்கு அளிக்கிறேன்.

அம்ருதா, அற்புதமாய்ப் பாடி என் போன்ற ரசிகர்களை மகிழ்விப்பதற்கு முதலில் நன்றிகள் பல. உங்களுக்கு இசையில் எப்படி ஆர்வம் வந்தது?

ரொம்ப சின்ன வயதிலிருந்தே, அம்மாவுடன் சென்று, நிறைய கச்சேரிகள் கேட்டிருக்கிறேன். இரண்டரை வயதில் திருமதி.சாரதாவிடம் பாட்டு கற்க ஆரம்பித்தேன். நாலு வயதில், திரு.எம்.டி.செல்வநாராயணனிடம் கற்க ஆரம்பித்தேன்.

amrutha_venkatesh1_2340eபெங்களூரில் இருந்து திருவையாறு செல்லும் போது, அவருடன் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தக் கால வித்வான்கள் பற்றி எக்கெச்செக்க விஷயங்கள் சொன்னார். பல அரிய பாடல்களைப் பாடியும் காண்பித்தார். முதல் சந்திப்பென்ற போதும், “இவ்வளவு இசை ஆர்வம் உள்ள நீ, பாட்டு கற்றுக் கொள்ளாமல் இருகக்கக் கூடாது. என் வீட்டுக்கு வா. பணமெல்லாம் வேண்டாம், நான் சொல்லித் தருகிறேன்.”, என்றார். அப்படிப் பட்டவர் உங்களுக்கு குருவாக அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஆமாம். அவர் ஆர்.கே.ஸ்ரீகண்டனின் வழியில் வந்தவர். ஆல் இந்தியா ரேடியோவில் பணி செய்தவர். அவரிடம்தான் என் formal training தொடங்கியது.

சிட்சை என்று வரும் போது, வழக்கம் போல, சரளி வரிசை முதலியன, கீதங்கள், வர்ணங்கள் அதன் பிறகு கீர்த்தனங்கள், அதன் பிறகு மனோதர்மத்துக்குரிய விஷயங்கள் என்று படிப்படியாய் கற்றுக் கொடுத்தாரா?

அப்படி இல்லை. அவரிடம் கற்க ஆரம்பித்த புதிதிலேயே ராகம் பாடுதல், ஸ்வரம் பாடுதல் போன்ற விஷயங்களைக் கூட சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். நிறைய கேட்கச் சொல்வார். எனக்கு  எதைக் கற்க விருப்பமோ அதைக் கற்றுக் கொடுப்பார். பெரிய வித்வான்கள் பெங்களூரில் கச்சேரி செய்யும் போது, பல முறை அவர் தம்புரா போட்டுள்ளார். அதனால், எந்தெந்த பாடலை, யார் யார் எப்படியெப்படிப் பாடுவார்கள் என்று நுணுக்கமாய் விளக்குவார். ராம மந்திரம், fort high school, ஒடுக்கத்தூர் மடம் என்று பெங்களூரில் எங்கு கச்சேரிகள் நடந்தாலும் கேட்க என் அம்மா அழைத்துச் செல்வார். எல்லோரின் இசையில் உள்ள நல்ல விஷயங்களை எல்லாம் கிரகித்துக் கொள்ள வேண்டும் என்று என் குரு அடிக்கடி கூறுவார்.

கர்நாடக இசையுலகின் மையம் சென்னை என்ற நிலையில், பெங்களூரில் பிறந்து வளர்ந்ததால் ஏதேனும் disadvantage இருந்ததாக உங்களுக்குத் தோன்றுகிறதா?

நிச்சயம் இல்லை. புகழ் வாய்ந்த, சங்கீத ஆசார்யர்களான லால்குடி ஜெயராமன், டி.ஆர்.சுப்ரமணியம், டி.வி.கோபாலகிருஷ்ணன், டி.என்.சேஷகோபாலன் போன்றோரின் workshop-களில் பெங்களூரில் இருந்து கொண்டே கலந்து கொள்ளும் வாய்ப்புகள் நிறைய கிடைத்தன. என் குருவும் அப்படி நான் கலந்து கொள்வதை பெரிதும் உற்சாகப்படுத்தினார்.

உங்கள் முதல் கச்சேரி எப்போது நடந்தது?

ஆறு வயதில் என் முதல் கச்சேரி நடந்தது.

ஓ! அப்போதே ராகம் ஸவரம் எல்லாம் பாடுவீர்களா?

ஓரளவு பாட வந்தது. ஜி.எஸ்.ராஜகோபால் எனக்கு அன்று மிருதங்கம் வாசித்தார். அவரிடம் கோர்வை போன்ற லயம் சம்பந்தமான விஷயங்கள் கற்றுக் கொண்டு பாடினேன். தனி ஆவர்த்தனம் முடிக்கும் போது, சரியான இடத்தில் பாட்டை எடுக்க சமிக்ஞைகள் எல்லாம் பேசி வைத்துக் கொண்டதை, இப்போது நினைத்தால் சிரிப்பாக வருகிறது.

இள வயதில் கற்க ஆரம்பித்த போது, விளையாட்டுப் போக்காய் ஆரம்பித்திருப்பீர்கள்  என்று நினைக்கிறேன். எப்போது, இசையில்தான் உங்கள் career என்று முடிவு செய்தீர்கள்?

முதலில் இருந்தே எனக்கு சங்கீதம் விளையாட்டுப் போக்காய்த் தோன்றவில்லை.  தீவிரமான விஷயமாகத்தான் எடுத்துக் கொண்டேன். பள்ளிப் படிப்பு முடிக்கும் போது, மருத்துவம், பொறியியல் இரண்டு துறைகளிலுமே தேர்ச்சி பெற இடங்கள் கிடைத்தன. இசையில் என் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதனால், B.Sc-ல்  சேர்ந்தேன்.

(B.Sc-ல் பெங்களூர் பல்கலைக்கழகத்தின் முதல் மாணவராகவும் அம்ருதா தேர்வாகியுள்ளார்.)

உங்கள் குடும்பத்தில் யாரேனும் இசைத் துறையில் உள்ளனரா?

முழு நேர வித்வானாய் யாருமில்லை. வயலின் கலைஞர் பாம்பே ஆர். மாதவ், என் மாமா. அவர் ஒரு கெமிக்கல் இஞ்சினியர். பாம்பேயில் நடக்கும் கச்சேரிகளுக்கு நிறைய வாசிப்பார். அவரைப் போலவே எனக்கும் இசை, வேதியியல் இரண்டிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.

முதல் கச்சேரிக்குப் பின் நிறைய கச்சேரி செய்ய ஆரம்பித்து விட்டீர்களா?

இல்லை. என் இசையை நெறிப்படுத்திக் கொள்வதில்தான் அதிக கவனம் செலுத்தினேன். செல்வநாராயணன் அவர்களிடம் கற்பதைத் தவிர, திருமதி சாருமதி ராமசந்திரனிடமும் பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கற்று வருகிறேன். அவர் பெங்களூர் வரும் போதெலாம், தினமும் இரண்டு வேளையும் கிளாஸ் இருக்கும்.

ஆனால், உங்கள் பாட்டு அவர் வழியில் இருப்பதாகத் தெரியவில்லையே.

அவர் வழியில்தான் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தமாட்டார். எனக்குப் பொருந்துகிறாற்போல் சொல்லிக் கொடுப்பார்.

கே.வி.நாராயணசாமியின் பாதிப்பு அதிகம் உங்களுக்கு இருப்பதாய் எனக்குப் பட்டது.

நான் அதிகம் கேட்பவருள்  ஒருவர் கே.வி.என். மற்றவர் செம்மங்குடி. சமீபகாலமாய், மதுரை மணி மற்றும் எம்.டி.ஆர்-இன் கச்சேரிகள் நிறைய கேட்கிறேன்.

சென்னைக்கு எப்போது உங்கள் இசை அறிமுகம் செய்யப்பட்டது?

2001-ல் என் முதல் கச்சேரி நடந்தது. அது பெங்களூரில் டி.வி.ஜி ஒரு போட்டிக்கான பரிசு. போட்டியில் வென்றால் முதல் பரிசாக கச்சேரி செய்யும் வாய்ப்பு கொடுத்தார்கள்.

உங்களை, சென்னையில் ராக ஸுதா ஹாலில் நிறைய தடவை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு கச்சேரி முடிந்ததும், எஸ்.வி.கே பேசும் போது, அவர் முகத்திலே பெருமை பொங்கும். உங்களின் கச்சேரிகளும், மற்ற இடத்தில் அமைவதை விட, அங்கு நன்றாக அமைவதாக எனக்குத் தோன்றுகிறது.

அவர் வீட்டில் ஒரு முறை பாடினேன். அது அவருக்கு மிகவும் பிடித்துப் போய், எனக்கு நிறைய வாய்ப்பு அளித்து வந்தார். ஒரு வருடத்துக்கு பத்து  முறையாவது அங்கு பாடுவேன். அவர் மறைவுக்குப் பின்னரும் அங்கு எனக்கு ஆதரவு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

கச்சேரி இல்லாத நாட்களில் எவ்வளவு நேரம் சாதகம் செய்வீர்கள்?

குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம். சில நாட்கள் 11-12 மணி நேரம் கூட பாடிக் கொண்டிருப்பேன். வேறு வேலைகள் இல்லாத நேரமெல்லாம் பாட்டுதான்.

இந்த சீஸனில் 14 கச்சேரிகள் செய்கிறீர்கள். மற்றவர்கள் செய்யும் பல கச்சேரிகளிலும் உங்களை அடிக்கடி காண்கிறேன். இதைத் தவிர சாதகம் வேறு செய்ய வேண்டி இருக்கும். டிசம்பரில் இத்தனையும் செய்வது கடினமாக இல்லையா?

இதுவரை கஷ்டமாக இல்லை. எல்லாக் கச்சேரிகளிலும் வெவ்வேறு பாடல்கள் பாட வேண்டும் என்பதற்காகத்தான் நிறைய உழைக்க வேண்டி இருந்தது. என்னால் சமாளிக்க முடியவில்லை என்று தோன்றினால் கச்சேரிகளை குறைத்துக் கொள்வேன்.

உங்கள் பாடலில் நிறைய அரிய கிருதிகளைக் கேட்கிறேன். மோகனத்தில், புழக்கத்தில் இல்லாத “நரஸிம்ம கர்ஜ”  பாடினீர்கள். எப்படி இத்தகைய repertoire உருவாக்கிக் கொண்டீர்கள்?

அதற்கு முக்கிய காரணம், என் குரு இருவரும்தான். சில காலமாக நொடேஷனில் இருந்தும் பாடல்கள் கற்றுக் கொள்கிறேன். அப்படிச் செய்யும் போது, திருத்திக் கொள்ல என் குருவின் உதவியை நாடுவேன்.

விருத்தங்கள் பாடும் போது, அதன் பொருளை நன்றாக உணர்ந்துப் பாடுகிறீர்கள். சொல் உச்சரிப்பும் நன்றாக உங்களுக்கு அமைந்துள்ளது.

பாடலின் பொருளை அறிந்த பின்தான் பாடுகிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை படிக்கத் தெரியும். அது பாவபூர்வமாய் பாட உதவுகிறது.

‘கத்தன வாரிகி’ பாடலில் நீங்கள் வழக்கமான இடத்தில் நிரவல் ஸ்வரம் பாடாமல் ‘தத்தய சாலிவி’ என்ற இடத்தில் பாடினீர்கள், இது போன்ற புதுமைகளை செய்ய வேண்டும் என்று செய்கிறீர்களா?

அந்தப் பாடலிப் பொறுத்தமட்டில், ‘நித்துரா’-வில் ஸ்வரம் போட வேண்டாம் என்று நினைத்தேன். அந்த வரி மட்டும் முழுமையாக அர்த்தத்தைத் தரவில்லை. அடுத்த வரியையும் சேர்த்துப் பாடினால்தான் அர்த்தம் வருகிறது. அது தவிர, ‘தூக்கம்’ என்ற அர்த்தம் வரும் வார்த்தைக்கு ஸ்வரம் போட வேண்டாம் என்று நினைத்தேன். பாடலின் பாவத்தைப் பொருத்து நிரவல் ஸ்வரத்துக்கான இடங்களை முடிவு செய்வேன்.

சீஸனில் உங்கள் கச்சேரிகள் பெரும்பாலும் இரண்டு மணி நேரத்துக்கு குறைவானவையாகவே இருக்கின்றன. உங்கள் கச்சேரிகளைக் கேட்கும் போதெல்லாம் முழு திருப்தி ஏற்படுவதில்லை. திருப்தி இல்லை என்றால், நீங்கள் பாடியவற்றில் அல்ல. அரை மணி அரை மணியாய் இரண்டு மூன்று ராகம் பாடுவதை விட, ஒரு மணி நேரம் ஒரு ராகத்தை விஸ்தாரமாகப் பாடுகிறீர்கள். பாடிய ராகம் நிறைவானதாக இருந்தாலும், இன்னும் சில ராகங்கள் கேட்டிருக்கலாமே என்று தோன்றுகிறது.

எனக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில், பலவற்றை அரைகுறையாய் பாடுவதை விட, எடுத்துக் கொண்டதை முழுமையாகப் பாடுவதையே விரும்புகிறேன்.

நீங்கள் பாடுவது உங்களுக்கு திருப்தி அளிப்பது என்பது வெறு. கேட்பவருக்குத் திருப்தி அளிப்பதென்பது வேறு. இரண்டில் எதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்?

கச்சேரியின் போது, யாரேனும் தங்களுக்கு விரும்பியதைப் பாடும் படிக் கேட்டால், அது கச்சேரிக்குப் பொருந்துமெனில் நிச்சயம் பாடுவேன். ஆனால், பாடுவதை எனக்குத் திருப்தியளிக்கும் வகையில்தான் பாடுவேன்.

உங்களுடையதைப் போன்ற முறைகளை, ஆழமான இசையை விரும்புபவர்கள் விரும்பக்கூடும். ஆனால், ரசிகர்களில் குறைவானவர்கள்தான் அப்படியிருப்பார்கள். இது உங்கள் பாடும் முறையை பாதிக்கவில்லையா?

இப்போதே பலர், என் பாட்டு bore அடிக்க ஆரம்பித்துவிட்டது. நான் ரொம்ப மெதுவாகப் பாடுகிறேன் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர். என்னைப் பொறுத்த மட்டில் நான் இப்படிப் பாடுவதையே விரும்புகிறேன்.

மிகச் சரியான முடிவு. சீஸனுக்கு இடையில் இவ்வளவு நேரம் என்னிடம் பேசியத்ற்கு நன்றிகள். சீக்கிரமே ப்ரைம் ஸ்லாட் கிடைக்க வாழ்த்துகள்.

நன்றி.

அம்ருதா வெங்கடேஷ் பாடிய இரண்டு யூட்யூப் வீடியோக்கள்:

1) நாட்டைக்குறிஞ்சி ராகம்

2) ஆகிரி ராகம்

One Reply to “குறைந்த வயது – முதிர்ந்த பாட்டு”

Comments are closed.