சுசீலா ராமன்

agilanஇக்கட்டுரையாசிரியர் அகிலன் மலேசியாவில் Agimusic என்ற இசைத்தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தேர்ந்த இசை ரசிகரும், இலக்கிய ஆர்வலருமான இவர் தற்கால இசைப்போக்குகளைக் குறித்த ஆழமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

இவருடைய வலைப்பக்கத்தில் அக்கட்டுரைகளைப் படிக்கலாம்.

வலைமுகவரி: “http://meedpu.blogspot.com”

எங்களின் ‘கண்ட நாள்’ இசைத்தொகுப்புத் தயாரிக்க முடிவானதும், அதுபோல் எதாவது இசைத் தொகுப்பு இதற்கு முன்பு வெளியாகியிருக்கிறதா என்று அறிந்துக்கொள்ளும் பொருட்டு, இசை நிலையங்களை வலம் வந்தபோது, மலேசியாவில் ஜெ எஸ் ராகா என்ற இசை நிலையத்தில் வேலை செய்துவரும் தினேஷ் என்பவர் எனக்கு சுசீலா ராமனின் ஆல்பத்தை அறிமுகப்படுத்தினார்.

susheelaஎங்களது ‘கண்ட நாள்’ நியூ ஏஜ் கர்நாட்டிக் இசைப்பிரிவை சார்ந்தது. சுசீலா ராமனின் இசைத்தொகுப்புகள் அந்தப் பிரிவில் சேராதவை. ஆனால் அந்த இசையை தினேஷ் அவர்களது சிடி ப்லேயரில் இயக்கவிட்டதும், நான் வியப்பில் ஆழ்ந்துபோனேன். கர்நாடக இசை, ஃப்யூசன் (fusion) இசை முயற்சிகள் தவிர்த்து வேறு இசைப்பிரிவில் முன்முயற்சிகள் செய்யும் சாத்தியங்கள் அற்றது அல்லது கர்நாடக இசைக்கலைஞர்கள் சிந்தனையிலும் கர்நாடகமாக இருந்து மரபுக்குள் சிக்கி புதிய தளங்கள் நோக்கிப் பயணிக்காதவர்கள் என்று எண்ணியிருந்த எனது கருத்தை உடைத்தது அவரது இசைத்தொகுப்பு. எம்.நசிர் போல், என்யா போல், பாம்பாய் ஜெயஸ்ரீ போல், என்னை முதலில் அரவணைத்துக்கொண்டது சுசீலாவின் போதைக் கலந்தக் குரல்தான்.

கர்நாடகமும், ப்ளூஸ் (Blues) அல்லது ஜாஸ் (Jazz) கலந்து சிலப் பாடல்கள் வேர்ல்ட் மியூசிகில் (World Music) வகைப்படுத்தும் படியாக, இசைப்பிரிவுகளின் எல்லைகளைத்தாண்டி குரலின் அசாதாரண பிரியோகங்களில் பயணிக்கும் ஒரு போதை இசையாகத்தான் எனக்கு அது தோன்றியது. நான் முதலில் கேட்டது அவரது சால்த் ரெயின் (Salt Rain) என்ற இசை. அதில் முதல் பாடல் மஹா கணபதி. இந்தக் கர்நாடகப் பாடலின் பல ஃப்யூசன் முயற்சிகளை நான் கேட்டிருக்கிறேன். அதில் குறிப்பிடும் படியானது மோர்னிங் ராகா என்ற திரையிசை; அலாதியானது. அதன் பிறகு அதே பாடல் என்னை அடுத்தத் தளத்திற்குக் கொண்டு சென்றது என்றால், அது சுசீலாவின் சால்த் ரெயினில் வரும் மஹா கணபதிதான். கர்நாடகத்தில் கேட்கும் போது கூட இந்தப் பாடலின் உச்ச இன்பம் மஹா காவிய நாடகாதிப்பிரியன் என்று தொடங்கும் பல்லவிதான். இவரின் இசையில், குரலில், வித்தியாச வயலின் இசைப்பிரயோகத்தில் இந்த பல்லவி காற்றில் நம்மை மிதக்கவிடுவதுப்போல் உணரப்படும்.

சுசீலா ராமன், 35 வயதாகும் தமிழ்ப்பெண். சுசீலாவின் பெற்றோர்கள் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள். அவர்கள் 60களில் பிரிட்டனில் குடியேறி, பிறகு சுசீலாவிற்கு 4 வயதாகும் போது ஆஸ்திரிலியாவிற்குக் குடிபெயர்ந்தார்கள். அங்கு சுசீலா கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டார். அவருடைய பதின்ம பருவத்தில் அவர் ஆஸ்திரிலியாவில் தன்னுடைய இசைக்குழுவை நிறுவினார். பிறகு அவர் ப்ளூஸ், ஜாஸ் இசைக்கு மாறியபோது, அதற்கு ஒரு தனித்துவமான குரல் பிரயோகம் தேவை என்பதை உணர்ந்தார், அதை அடைய அவர் 1995 மீண்டும் கர்நாடக சங்கீதம் பயில ஆரம்பித்தார். இந்த முறை இந்தியாவில். பிறகு இந்துஸ்தானிய இசையும் பயின்றார்.

வேற்றுக் கலாசார பின்னனியுடன், தனது பண்பாட்டின் அடிப்படை இசையை உள்வாங்கிக்கொண்டு அவர் வெளியிட்ட அத்தனை தொகுப்புகளும் ப்ளூஸ், வேர்ல்ட் மியூசிக் மற்றும் கர்நாடக இசையின் இன்னொரு முகம் என்று சொல்வதைவிட புதியதோர் கலாச்சார உலகின் நுழைவாயில் என்றுதான் சொல்ல வேண்டும்.

2001 இல் இருந்து இதுவரை 4 இசைத் தொகுப்புகள் மட்டுமே வெளியீடு செய்திருக்கிறார். சால்த் ரெய்ன் (Salt Rain), லவ் டெரப் (Love Trap), மியூசிக் பொர் க்ரொக்டைல் (Music For Crocodile) மற்றும் 33 1/3. இதில் இறுதியாக வந்திருக்கும் 33 1/3 அவருடைய தைரியமான முயற்சி என்று பிபிசியின் இசை விமர்சனம் குறிப்பிட்டுள்ளது. காரணம், இந்த இசைத்தொகுப்பில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் புகழ்பெற்றிருந்த கலைஞர்கள்; பாடகர்கள்; இசையமைப்பாளர்களான லொவ் ரீட் (Lou Reed), போப் டைலன் (Bob Dylan), ஜோன் லெனென் (John Lennon), ஜிமி ஹெண்டீர்க்ஸ் (Jimi Hendrix), மற்றும் ஜோய் டிவிசனின் (Joy Division) ஆகியோரின் பாடல்களை சுசீலா வேறு தளத்தில் கையாண்டிருக்கிறார். மேலைக் கலைஞர்களான இவர்களது ரோக் இசையை இந்தத் தொகுப்பில் சுசீலா ஆப்பரிக்க ஆசிய இசை சங்கமங்களுடன், வேர்ல்ட் மியூசிக் வகையில் படைத்திருக்கிறார்.(இரண்டாவது பாடலில் கொஞ்சம் நமது நாட்டுப்புற இசையையும், ஒன்பதாவது மற்றும் பதினொன்றாவது பாடலில் வயலின் இசை வழியாக கொஞ்சம் கர்நாடகமும் கலந்திருக்கிறார்). இந்த தொகுப்பின் வழி அவர் தனது பழைய அடையாளமான கர்நாடகப் பாடகர் என்ற அடையாளத்தை தகர்த்திருக்கிறார். இது எனது அடுத்தக்கட்ட இசைப் பரிணாமம் என்று அவரே கூறியிருக்கிறார். இருந்தபோதும் இதை வெறும் வேர்ல்ட் மியூசிக் என்று வகைப்படுத்துவதில் எனக்கு தயக்கம் உண்டு காரணம் இசையும் சுசீலாவின் குரலும், அவர் பாடும் விதமும் நமக்குத் தரும் அனுபவங்கள் வெறும் வித்தியாசமான முயற்சி என்பதையும் தாண்டி ஒரு ஆத்மார்த்தமான வழிபாடகவே தோன்றுகிறது.

அவருடைய எல்லாப் பாடல்களும், ஆராதனைப்போல இருக்கும், அது கர்நாடகமாக இல்லாதிருந்தாலும். அதிலும் லவ் ட்ரெப்பில் உள்ள திருவெம்பாவையின்

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்
கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 167

பாடலை அவர் முழுதும் காட்சிப்படிமங்களாக உள்வாங்கிக்கொண்டு பாடியிருப்பது போலவே தோன்றும். அதிலும் அந்த இறுதி வரியை அவர் பாடியப்பிறகு நீண்டிருக்கும் இசையும் அதன் முடிவில் தாண்டவமாடும் தாளங்களும் இதை அவர் காட்சிகளாக உள்வாங்கிக் கொண்டார் என்பதை உறுதி செய்கின்றன.

வேறு கோணத்தில் இருந்துப் பார்க்கும் போது, இந்தப் பாடல் மானுட கலாச்சாரமற்ற வானோர்கள் இசையோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது. ஆனால் அவரின் உச்சரிப்புகளைக் கேட்கும் போது, அகிலன் இந்தப் பாடலை இப்படிச் சிலாகித்திருக்கத் தேவையில்லை என்று உங்களுக்கு தோன்றலாம். நான் எப்பொழுதுமே எந்த இசையையும் கேட்கும்போது சில சமரசங்கள் செய்துக்கொண்டு எதிர்பார்ப்புகளை தளர்த்திக்கொள்வதுமுண்டு. அதனால் இந்த இசையை நான் எழுதியபடி உங்களால் தரிசிக்க முடியாது போனால் அது தவறென்று நான் சொல்லப்போவதுமில்லை, நான் குறிப்பிடும் இசையெல்லாம் உலகின் சிறந்த இசைகள் என்றும் சொல்லப்போவதில்லை. எனது இசைத் தரிசணங்களை பகிர்ந்துக் கொள்கிறேன். அவ்வளவுதான்.

அதேபோல் சால்த் ரெயினில் வரும் காமாட்சி காமகோடி பீட வாசினி, இதுவரை நமக்கு பழக்கப்பட்ட அத்தனை பக்திப்பரவசங்களையும் தொலைத்திருப்பதுபோல் தோன்றினாலும் அதன் ஆன்மீக உணர்வை நம்மால் விழக்கமுடியாது என்று நினைக்கிறேன். அம்பிகையின் ஒவ்வொரு பெயரையும் அவர் பாடுவதும் அதன் பின்னனி இசையும், நமது உள்ளுரை பேரருளை எழுப்புவதாக இருக்கிறது. ஓ ராம மற்றும் நகுமோ என்றப் பாடல்கள் தியாகராஜரின் கீர்த்தனைகளை இப்படியும் பாடலாம், ராமனுக்கு நிச்சயம் திருப்தி அளிக்கும் என்று நம்ப வைப்பது. பக்தி விழகாத பரவசமாகத்தான் எனக்குப் படுகிறது.

சுசீலாவின் வித்தியாசமான இசை முயற்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவரது இசைத் தயாரிப்பாளரான சேம் மில்ஸ் (Sam Mills). சுசீலாவின் எல்லா இசைத்தொகுப்புகளையும் தயாரித்தவர் அவர்தான். சுசீலாவின் தி சேம் சோங் (The Same Song), மீரா நாயரின் The Namesake என்றத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு அவரது சால்த் ரெயின் இசை பிபிசி ரேடியோ 3யின் சிறந்தப் புதிய கலைஞர் என்ற விருதைப் பெற்று தந்தது. மெர்க்கூரி இசை விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தற்பொழுது அவரின் இசைப்பயணம் வேறு தளத்திற்கு பயணிப்பதாக அணுமானிக்கப்படுகிறது. காரணம் 33 1/3 இசைத் தொகுப்பிற்குப் பிறகு, 2007ல் அவர் தமிழ் நாட்டில் கோவை கமலாவிடம் இசைப்பயின்று வருவதாக தெரிகிறது.