‘குருவே சரணம்’ – கிளாரினெட் கலைஞர் ஏ. கே. சி. நடராஜன்

இந்த டிசம்பர் சீசனுக்கு வெளிவந்திரும் இசைப்புத்தகங்களில் ஒன்று ‘குருவே சரணம்’. இப்புத்தகத்தில் 19 முக்கியமான கர்நாடக இசைக்கலைஞர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றிருக்கின்றன. கர்நாடக சங்கீதம் தவிர இந்த நேர்காணல்களை இழைக்கும் மையக்கரு ‘குரு’ தத்துவம். ஒவ்வொரு இசைக்கலைஞரும் தான் இசைக்கலைஞராகப் பரிமளிக்கக் காரணமாகயிருந்த பெற்றோர்கள், குருமார்களைக் குறித்து விரிவாகப் பேசுகிறார்கள். “இந்த நூல் இசைத்துறை சார்ந்தது. எனவே சம்பவங்கள், தகவல்கள், பயணங்கள் இசைத்துறை சார்ந்த ஒரு கொத்துப் பூக்கள் போலக் காட்சி அளிக்கும். இசைப் பயண வழ்க்கை வரலாறுகளாவே இவை அமைந்திருக் கின்றன. இசை, அதன் நுணுக்கம் என்று ‘தியரி’ எனப்படும் விளக்கம் சார்பாக சிறிதும், குரு-சிஷ்ய உறவு, அதனதன் மேம்பட்ட நிலை, குருவே பெற்றோராக மாறும் மாயம், பெற்றோரே குருவாகும் நிலை என்று அவரவர் வாழ்வின் உணர்வு நிலைகளைச் சொல்வதே இந்நூல்.” என்று தன்னுடைய முன்னுரையில் சொல்கிறார், இந்நூல் உருவாக முக்கியமான காரணமாக இருந்த எழுத்தாளர் க்ருஷாங்கினி. நான்காண்டுகளாக முயற்சித்து இப்பேட்டிகளை நடத்திப் புத்தகத்தை உருவாக்கியிருப்பவர்கள் ‘தாம்பரம் இசைக்குழு’வைச் சேர்ந்த பாஷ்யம் தம்பதியினர்.

‘குருவே சரணம்’ வெற்றியடையவேண்டுமென்று சொல்வனம் வாழ்த்துகிறது. ‘சதுரம்’ பதிப்பகம் வெளியீடாக வரும் இந்நூலை பின்வரும் முகவரியில் அணுகிப் பெற்றுக் கொள்ளலாம்.

சதுரம் பதிப்பகம்,

#34,சிட்லபாக்கம் 2ஆம் பிரதான சாலை,

தாம்பரம் சானடோரியம், சென்னை-600 047.

Phone: 2223 1879

இந்நூலிலிருந்து திரு.ஏ.கே.சி.நடராஜன் அவர்களின் பேட்டியை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

கிளாரினெட் வித்வான் திரு.ஏ.கே.சி.நடராஜன் நேர்காணல்

பெற்றோரும் கலை ஆர்வமும்

என்னுடைய அப்பாவின் பெயர் செக்கு சின்னிகிருஷ்ண நாயுடு. அம்மாவின் பெயர் ருக்குமணி. எங்கள் குடும்பத்திற்கு படிப்பு அதிகம் கிடையாது. இசைதான் படிப்பு. இசை நிறைந்த குடும்பம். எனது குருநாதர் ஆலத்தூர் வெங்கடேச அய்யர். ஆலத்தூர் சகோதரர்களின் அப்பா. ஆறு வயதில் அவரிடம் வாய்ப்பாட்டு பயின்றேன். அதன் பிறகு திருப்பூர் நடேச பிள்ளை என்பவரிடம் பதினைந்து வயது வரை நாதஸ்வரம் பயின்றேன். நாதஸ்வரம் வாசிப்பதில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்த காலம் அது. திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை, செம்பனார்கோவில் தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்ற இசை வித்தகர்கள் நிறைந்திருந்த காலம் அது. நாதஸ்வரத்தில் அவர்களின் ஞானத்தையும், வாசிப்பையும் பார்க்கும்போது எனக்கு, பிரமிப்பாகவும், பயமாகவும் இருக்கும். பிரமிப்பு, அவர்களின் இசையைக் கேட்டு; பயம், அவர்களுக்கிடையில் நாமெல்லாம் நாதஸ்வரம் வாசித்து, முன்னுக்கு வரமுடியுமா என்பது. அப் பொழுதும் கோவில்களில் வாசித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால், என் மனதிற்குள் ஒரு ஆதங்கம், நம் வாழ்க்கையும் இசையும் கோவில்களில் பூஜைக்கு வாசித்தே கழிந்துவிடுமோ என்று. வேறு ஏதாவது இசையில் சாதனை செய்ய வேண்டும்; வித்யாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற தவிப்பு மட்டும் எப்போதும் மனதில் கனன்று கொண்டிருந்தது.

கிளாரினட், அன்று

அந்தக் காலத்தில் நாதஸ்வரத்துக்கு அடுத்து பிரபலமானது கிளாரினட். கிளாரினட்தான் சதிருக்கு, கிளாரினட்தான் பரதநாட்டியத்திற்கு. தேவாரத்திற்கும் கிளாரினட்தான். இசை அமைப்பாளர்களிடையேயும் கிளாரினட் இருந்தது, அகில இந்திய வானொலியிலும் ஒரு நிலையத்திற்கு இரண்டு கிளாரினட் வித்வான்கள் இருந்தனர். இந்த நிலையை அறிந்ததாலும், எனக்கு வாய்ப்பாட்டுடன் நாதஸ்வரமும் தெரிந்து இருந்ததாலும், மனதில் இருந்த பயம் காரணமாகவும் கிளாரினட்டை எனது வாத்யமாகக் கொண்டு வர எண்ணினேன். மிகுந்த சிரமப்பட்டு உழைத்து, இதைக் கற்றேன். பிறகு பிரசித்தியும் ஆனேன். என்னுடைய பதினாறாவது வயதில் துவங்கி, பதினெட்டாவது வயதில் முன்நிலைக்கு வந்து விட்டேன்.

ஒரு சோகம் – ஒரு திருப்பம்

1947ல் அகில இந்திய வானொலியில் வாசித்தேன். 1949 இல் கோழிக் கோடு அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்ற ஆரம்பித்தேன். ஆனால், எனது சகோதரி 1951 இல் மறைந்து விட்டாள். அதற்கு செல்ல விடு முறை தர நிலையத்து நிர்வாகம் மறுத்துவிட்டது. அதை, எனது நேரம் என்றும் சொல்லலாம், நான் வேலையை ராஜினாமா செய்து விட்டேன். ஆனால், அது எனக்கு வேறு ஒரு நல்ல வழியைத் திறந்துவிட்டது. 1951இல் திருச்சிக்கு வந்து விட்டேன். நிறையக் கச்சேரிகள் வரத் துவங்கின. யாருடைய வாசிப்பைக் கேட்டு, பார்த்து எல்லாம் நான் பயந்தேனோ அவர்களுக்கு சமமாக உட்கார்ந்து வாசிக்கும் வாய்ப்புக்கள் ஏற்பட்டன. N.S. கிருஷ்ணன் ஒரு விழா வைத்தார். அதில் திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை இவர்களுடன் நானும் வாசித்தேன். அதன் பிறகு அவர்கள் குடும்பங்களுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புகளும் உண்டாயின. 1953/54 இல் கல்லிடைக்குறிச்சி சங்கர அய்யர் வீட்டுத் திருமணத்தில் ராஜரத்தினம் பிள்ளையுடன் கலந்து வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் அவர் என் குருநாதர் ஆனார். அவருடன் நிறைய இடங்களில் வாசிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

குருவும் அரங்கமும்

1955 இல் சென்னை மியூசிக் அகாடமியிலிருந்து ஒரு கடிதம் என் குருநாதர் ராஜரத்தினம் பிள்ளைக்கு வந்தது. அக்காலத்தில் சபாக்காரர்கள் குருமார்களுக்கு கடிதம் எழுதிப்போட்டுத்தான், கச்சேரிக்கு வித்வான்கள் ஏற்பாடு செய்வார்கள். அதாவது, குரு தனது சிஷ்யர்களில் தகுதியானவர்களை அறிமுகப்படுத்தி வாசிக்கச் சொல்லலாம். இக்காலத்தில் வித்வான்களே கடிதம் எழுதி, தனக்கு சான்ஸ் தரும்படி கேட்கும் நிலைமை இருக்கிறது. யாசிக்கும் காலமாகி விட்டது. அந்தக் கடித்தத்தில் ‘மியூசிக் அகாடமியில் விழாக்காலத்தில் மதியம் 2 முதல் 3 1/2 மணி வரைக்கும் நேரம் ஒதுக்குகிறோம். அதில் உங்கள் சிஷ்யர்களை, தகுதியானவர்கள் என்று நீங்கள் கருதுபவர்களை அறிமுகப்படுத்துங்கள்’ என்று எழுதியிருந்தது. அப்போது நான் பாடத்திற்காக அவரிடம் சென்றிருந்தேன். அதைப் படித்துவிட்டு, “நீ போறயாடா?” என்று கேட்டார். நான் சொன்னேன், “கரும்பு தின்னக் கூலியா” என்று. நமக்கு யார் இது போன்று ஒரு வாய்ப்பு அளிப்பார்கள்? அதுவும் கிளாரினட்டுக்கு?

நான் வாசிக்க ஏற்பாடு ஆகியிருந்த நாளில் சாயங்கால நிகழ்ச்சியில், அதாவது டிசம்பர் 25ம் தேதி, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாள் அவர்கள் பாட்டு, இரவு 9.30 மணிக்கு ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நாதஸ்வரம். மறு தினம் டிசம்பர் 26ஆம் தேதி தமிழிசை சங்கத்தில் மாலை எம்.எஸ் அம்மாவும், அதன் பிறகு காரைக்குறிச்சி அருணாசலம் அவர்களின் நாத ஸ்வரமும் இருந்தன. அப்போதெல்லாம் இவை இரண்டும்தான் சென்னையில் பெரிய சபாக்கள். டிசம்பர் 12ஆம் தேதி ராஜரத்தினம் பிள்ளை காலமாகி விட்டார். அந்த வருடத்தின் இசை விழாவில் திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை போன்ற பெரிய பெரிய நாதஸ்வரக் கலைஞர்கள், வித்வான்கள் எல்லாம் வாசிக்கிறர்கள்.

அப்போது எனக்கு சுசீந்தரத்தில் வாசிக்க ஒரு வாய்ப்பு வந்திருந்தது. அங்கு நான் இருக்கும் போது ஒரு தந்தி வந்தது. அதில் டிசம்பர் 25ம் தேதி ராஜரத்தினம் பிள்ளையின் இடத்தில் அதாவது இரவு 9.30 மணிக் கச்சேரியில் மியூசிக் அகாடமியில் என்னை வாசிக்கச்சொல்லி. முக்கியமான நேரம், இரவுக் கச்சேரி, அதுவும் குருநாதர் வாசிக்கயிருந்த இடத்தில். என் மனதில் துயரமும் சந்தோஷமும் மாறி மாறி வந்தது. குரு இறந்துவிட்ட வருத்தம் ஒருபுறம் என்றால், அவரின் இடத்தில் என்னை வாசிக்கச் சொல்லும்போது கிடைக்கும் ஒரு பெருமை. அன்றிரவு அந்த நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் நேரடியாக ஒலிபரப்ப வேறு ஏற்பாடாகி இருந்தது. மனதில் பெரும்பயம். நானும் வாசித்தேன், என் குருநாதர் ஆசியின் துணையோடு. எனக்குக் கொடுத்ததோ மதியம் இரண்டு மணி, நான் வாசித்ததோ இரவு ஒன்பதரை மணி. அன்று ஒன்பதரை மணிக்குத் தொடங்கி இரவு ஒரு மணிவரை வாசித் தேன். நான் 25ஆம் தேதி மியூசிக் அகாடமியில் வாசிக்கிறேன், மறுநாள் தமிழிசை சங்கத்தில் காரைக்குறிச்சி அருணாசலம் வாசித்தார். ‘கல்கி’ போன்ற பத்திரிகைகளில், ‘திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை இன்று நம்மிடையே இல்லை. அது வருத்தம்தான், ஆனால் அவர் இரண்டு கலைஞர் களை உருவாக்கி இருக்கிறார்’ என்று, மிக அருமையாக எழுதியிருந்தனர். அது என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. உண்மையிலேயே அது மிகப்பெரிய விஷயம்தான். அவர் வாசிக்க வேண்டிய இடத்தில் நான். நடக்கிற காரியமா இது? அவருடைய ஆசி இல்லாவிட்டால் என்னால் அன்று வாசித்திருக்கவே முடியாது. அதுவும் இருபது வயதில். பெரிய ‘ஜாக்பாட்’ தான் அது.

அதன் பிறகு, அகில இந்திய அளவில் எல்லாக் கோவில்களிலும் வாசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பெரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனுபவங்கள் கிடைத்தன. அதிலிருந்து நான் உயர ஆரம்பித்தேன். என் குரு நாதர் அன்று இரண்டு மணிக் கச்சேரிக்கு என்னை அறிமுகப்படுத்த வில்லை யெனில் என்னை யாருக்குத் தெரிந்திருக்கும்? இதன் விளைவாகக் கிளாரினட்டுக்கு ஒரு தனி இடம் கிடைத்தது. நிறைய மாணவர்கள் என்னிடம் கிளாரினட்டும் வாய்ப்பாட்டும் கற்க வந்தனர்.

நான், உலகில் இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, இங்கிலாந்து, கனடா என்று பல நாடுகளுக்குச் சென்று வாசித்துள்ளேன். மொழிப் பிரச்சனை இல்லையா என்று பலரும் கேட்கின்றனர். என் மொழி சங்கீதம். அதை நான் வாசிக்கப் போகிறேன். அவர்கள் அதைக் கேட்கப் போகின்றனர். பேச்சுக்கு அங்கு ஏது இடம்? காதால் இசை கேட்க மொழி எதற்கு? எல்லாமே என் குரு நாதர் ஆசியால்தான் நடந்தது.

வாய்ப்பாட்டு குரு

எனது குருநாதர் ஆலத்தூர் வெங்கடேஸ்வர அய்யர் மிகவும் நல்லவர். அன்பானவர்தான். ஆனால், கலையில் மிகவும் கண்டிப்பானவர். கடின மானவர். ஒரு முறை சொல்லிக் கொடுப்பார். சரியாகப் பாடவில்லை என்றால் ஓங்கி ஒரு உதை கொடுப்பார். அந்த உதை இந்த உதை அல்ல. மிகக் கடின மான அடிகள்தான். ஆனால் வயிற்றுக்கு வஞ்சிக்க மாட்டார். அன்புக்கும் வஞ்சனை கிடையாது. கலை மட்டும் நேர்த்தியாக இருக்க வேண்டும். தவறு நேரக் கூடாது. அதனால்தான் நாங்கள் பண்பட்டு இருக்கிறோம். அவருடைய சிஷ்யர்களில் ஆலத்தூர் சகோதரர்கள், வெங்கடேஸ்வரைய்யா, தட்சிணா மூர்த்தி பிள்ளை, மலைக்கோட்டை கோவிந்தராஜ பிள்ளை போன்றோர் பெரும் புகழோடு விளங்கினார்கள். ஆலத்தூர் சகோதரர்கள் சங்கீதத்தில் எவ்வளவு ஞானமும், ஆழமும் கொண்டவர்கள்? எல்லாம் குரு நாதரின் அருள் தான். தியாகராஜ ஸ்வாமிகளின் நேர் சிஷ்ய பரம்பரை எங்கள் குரு, அப்படிப் பட்ட ஒரு கலைப் பொக்கிஷத்திடம்தான் நாங்கள் உருவானோம்.

என் குருநாதர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையுடனும் நான் வாசித்திருக்கிறேன். ஆனால் எனக்கே மிக அதிகமாகத் தனிக் கச்சேரிகள் வந்ததன் காரணமாக அதிகம் வாசித்ததில்லை.

மறக்க முடியாத சங்கீத அனுபவங்கள்

மறக்க முடியாத சங்கீத அனுபவங்கள் என்றால், 1954 இல் இந்தியா சிமெண்ட் சங்கர ஐயரின் வீட்டுத் திருமணத்தைச் சொல்லலாம். அதைத்தான் முதலில் சொல்ல வேண்டும். ஐந்து நாட்கள் கல்யாணம், அந்த நாள் முறைப் படி. ஐந்து நாட்களும் பல பெரிய வித்வான்கள் வந்து கலந்துகொண்டு இருந்தனர். M.S.அம்மாள் நலங்கு பாடினார்கள். ஐந்தாவது நாள் ஊர்வலம்.

N.S.கிருஷ்ணனும், லேனா செட்டியாரும் எனக்குத் தந்தி அடித்திருந்தனர். ஐந்தாவது நாள் நிகழ்ச்சிக்கு நான் அங்கு வரவேண்டும் என்று. அங்கு குரு ராஜரத்தினம் பிள்ளையும் இருந்தார். அவர்தான் ஊர்வலத்தில் வாசிக்கப் போகிறார். சங்கரய்யர் என்னிடம், “உன்னுடைய வேலை என்ன தெரியுமா? குரு ராஜரத்தினம் பிள்ளை ஆங்காங்கே அமைத்திருக்கும் மேடைகளில் ஊர் வலத்தின் இடையில் வாசிப்பார். அவரை ஒவ்வொரு மேடைக்கும் அழைத்துக் கொண்டு வருவது உன் வேலை” என்றார். “பரம சந்தோஷம்” என்றேன். ராஜரத்தினம் பிள்ளையை அழைத்துக் கொண்டு அவருடன் நடந்து வருவதே பெரிய பாக்யம்தானே? மூன்று மேடைகளில் அவர் வசித்தார்.

நான் ஒவ்வொரு மேடையாக உடன் சென்று அழைத்துக்கொண்டு போய் விட்டு விட்டு வந்து, கீழே உட்கார்ந்து கொண்டு கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தேன். வாசிப்பது முடிந்தவுடன் நான் எழுந்து அடுத்த மேடைக்கு அவரை அழைத்துக் கொண்டு செல்லத் தயாராகிறேன். திடீரென அவர், “எங்கு எழுந்துவிட்டாய்? நீ வாசி, நான் கேட்கிறேன்” என்கிறார். அவருடைய வாசிப்பைக் கேட்பதற்காகப் பெரும் கூட்டமாக மக்கள் திரண்டு இருக்கின்றனர். “என்னுடைய வேலை உங்களை மேடைக்கு அழைத்துச் செல்வதுதான்” என்றேன். ஆனால் அவரோ, “நான் கேட்கிறேன், நீ வாசிக்கப் போகிறாயா இல்லையா?” என்று கண்டிப்புடன் கூற, நான் மிகவும் அரண்டுபோய் விட்டேன். அவர் எனக்கு மேடையைக் காலி செய்து கொடுத்துவிட்டு, எதிர் திண்ணையில் அமர்ந்து தன் குழுவோடு தாம்பூலம் தரிக்க ஆரம்பித்துவிட்டார். அங்கு இருந்ததோ அவர் வாசிப்பைக் கேட்க திரண்ட மக்கள். ஆனல் அவரோ என் வாசிப்பைக் கேட்கிறார். எனக்கோ உதறல். ஆனாலும், நான் வாசித்தேன். வாசிப்பு முடிந்தவுடன், நன்றாக வாசித்ததாகப் புகழ்ந்தார். ராஜரத்தினம் பிள்ளையே பாராட்டுகிறார் என்றால், நிஜமாகவே நன்றாகத்தான் வாசிக்கிறேன் என்று அனைவரும் எனக்கு நல்ல பெயர் கொடுத்தனர். இப்போது எனக்கு உள்ள ஆழமும், ஞானமும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்குமா? என் வாசிப்பு என்ன என்று நானறிவேன். ஆனால் அந்தக் கச்சேரி மூலம் எனக்கு நெல்லை மாவட்டத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கிக் கொடுத்தார் குருநாதர். அந்த வாகனமே என்னை பெரிய நிலைக்குக் கொணர்ந்தது. இது ஒரு மறக்க முடியாத சம்பவம் அல்லவா? யார் வாசிப்பைக் கேட்டு நான் மிரண்டேனோ அவர் முன்னே எனக்கும் வாசிக்க ஒரு சந்தர்ப்பம்.

எனக்கு நண்பர்கள் அதிகம் உண்டு. எனக்கு எவ்வளவோ விருதுகள், பட்டங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனாலும் ராஜரத்தினம் பிள்ளையே எனக்கு 1952 இல் “எவெரெஸ்ட்” என்ற பட்டமளித்தார். அதுவே எனக்கு பெரிய கௌரவம் என்று நான் எண்ணுகிறேன். காஞ்சி காமகோடி மடத்தில் ஆஸ்தான வித்வானாகவும், திருவாவடுதுறையில், -ராஜரத்தினம் பிள்ளை பிறந்த ஊரில்- 20 வருடம் ஆஸ்தான ‘பூஜை மேள’மாக இருந்திருக்கிறேன்.

உற்சவங்களும் கச்சேரி விழாக்களும்

திருவையாற்றில் முசிறி சுப்ரமணிய அய்யர் செகரெட்டரியாக இருக்கும் போது 50 வது ஆண்டு தியாகராஜ ஆராதனை கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு நான் வாசிக்க ஆசைப்பட்டேன். திருவிடைமருதூர் வீருசாமி பிள்ளையும், நானும் ஒரேஅறையில் தங்கவைக்கப்பட்டு இருந்தோம். அவரிடம், எனக்கு வாசிக்க ஒரு வாய்ப்புக் கேட்டு பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்தேன். அவரும் சென்று செகரெட்டரியிடம் கேட்டார். ஆனாலும் எனக்கு வாய்ப்புத் தரப்படவில்லை. எனக்கு அதில் வருத்தம்தான். உற்சவத்தில் வாசித்துவிட்டு வந்து விட்டேன். அடுத்த ஆண்டு என் குருநாதர் ஆலத்தூர் வெங்கடேச ஐயர் செகரெட்டரியாக ஆக்கப்பட்டார். நான் கமிட்டி மெம்பராக ஆக்கப்பட்டேன்.

எனவே, தடையின்றி அவ்வாண்டு வாசித்தேன். அதிலிருந்து பத்தாண்டுகள் 1950 முதல் 60 வரை நானும், T.M.தியாகராஜனும் கன்வீனராகப் பொறுப்பு வகித்தோம். திருவையாறு உற்சவத்தை வாசித்துத் துவக்கி வைக்கும் வாய்ப்பும் எனக்கு மூன்று ஆண்டுகள் கிட்டியது. இசை விழாவில் இதைவிட அனுபவமும் அதிர்ஷ்டமும் பற்றி வேறு எதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும், வேறு என்ன வேண்டும் எனக்கு?

திருச்சியில் ரோட்டரி கிளப் கவர்னராக T.N.S.ராஜன் இருந்தார். சிந்தாமணி கல்லூரியில் ஒரு விழா. விழா முடிந்ததும் என்னையும், காரு குறிச்சி அருணாசலத்தையும் தனித் தனியாக வாசிக்க ஏற்பாடு செய்திருந்தனர். T.T.கிருஷ்ணமாச்சாரி, (T.M. கிருஷ்ணாவின் தாத்தா) எங்கள் இருவரையும் ஒன்றாகவே வாசிக்கும்படி கேட்டுக்கொண்டார். எனவே நாங்கள் இருவரும் இணைந்து வாசித்தோம்.

திருவாவடுதுறை ஆதீனத்தில் நான் ஆஸ்தான வித்வானாக இருந்த போது, குழிக்கரை பிச்சையப்பா அவர்களும் நானும் இணைந்து 20 வருடங்கள் வாசித்தோம். இதுபோல, பல நிகழ்ச்சிகள். இப்போது புல்லாங் குழல் ரமணியும் நானும் சேர்ந்து வாசித்துக்கொண்டு இருக்கிறோம். சேர்ந்து வாசித்தாலும், கௌரவமாகத்தான் இரண்டுபேரும் இருக்கிறோம். இப்பொழுது செய்யும் சின்னப் பிள்ளைகளுடன் இணைந்து கன்னாபின்னா என்று எல்லாம் செய்வது கிடையாது. அவருக்குப் புல்லாங்குழலில் ஒரு மரியாதை இருக்கிறது. அதனாலேயே சந்தோஷமாக இருக்கிறது. இந்த சந்தோஷங்களுடனே என் வாழ்நாள் முடிய வேண்டும்.

நாதஸ்வரமும், கிளாரினட்டும்

நாதஸ்வரம், கிளாரினட் இரண்டுமே இணைந்து நான் வாசித்தது போல் வாசித்தால்தான் நாதம் இதுபோல் வரும். நான் நாதஸ்வரம் கிளாரினட் இரண்டும் வாசித்தேன் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், நாதஸ் வரத்திற்கும் கிளாரினட்டுக்கும் கைவைத்து வாசிப்பது எதிர் முறையில். நாத ஸ்வரத்திற்கு ஏழு ஸ்வரங்கள். ப்ரம்மஸ்வரத்தை உதட்டிலும், கைகளிலும் கொண்டுவர வேண்டும். ஆனால் கிளாரினட்டுக்கு ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒரு’கீ’உண்டு.

அதாவது, சுத்த காந்தாரத்திற்கு ஒரு ‘கீ’, அந்தர காந்தாரத்திற்கு ஒரு ‘கீ’. சுத்த மத்தியமத்திற்கு ஒரு ‘கீ’, பிரதி மத்தியமத்திற்கு ஒரு ‘கீ’. அதைத் தொட்டு வாசித்தால், இது போன்று குழைவு, கமகம் வராது. அந்தந்த ஸ்வரத்திற்கான ‘கீ’யைத் தொட்டு வாசித்தால், ஹார் மோனியம் போல் இருக்கும். கிளாரினட்டை நான் கிளாரினட்டாக நினைக் காமல், நாதஸ்வரமாக எண்ணினேன். எனவே, அதில் இருந்த 5 அல்லது 6 ‘கீ’க்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை மூடிவிட்டேன். நாத ஸ்வரத்தை மனதில்இருத்தி, அதில் என்ன என்ன செய்தால் அழகா இருக்குமோ, அதையெல்லாம் இதில் கொண்டுவர மிகுந்த பாடுபட்டேன். கிளாரினட்டுக்கும் உதடும் கையும்தானே என எண்ணி சாதகமாக்கினேன். இரண்டாண்டுகள் 6 மணிநேரம், 8 மணிநேரம் என்று தொடர்ந்து வாசித்துப் பயிற்சி செய்ததால்தான் எனக்கு இது கைகூடியது. எனக்கு வாய்ப்பாட்டு, நாதஸ்வரம் இரண்டும் தெரிந்ததால்தான் அந்தக் குழைவு, நெளிவு, நாதம், நளினம் எல்லாம் கொண்டு வர முடிந்தது.

எப்போதும் மாணவன் நான்

அந்தக் காலத்தில், அதாவது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக, நான் கச்சேரிக்கு ரூ1000, 2000, 4000 என்று வாங்கி இருக்கிறேன். இன்றைய ஒரு லட்சத்திற்கு சமானம். அப்போது பவுன் ரூ.100-/ இப்போது பெருக்கிக் கொள்ளுங்கள். நான் அந்தக் காலத்திலேயே செம்மங்குடி சீநிவாச அய்யர், மதுரை மணி அய்யர், G.N.பாலசுப்ரமணியம் ஆகியோரிடம் சென்று பாடம் கற்று இருக்கிறேன். அன்போடு, “வா, நடராஜா” என்று அழைத்துக் கற்பித் திருக்கிறார்கள். இப்போது உள்ள இளைய தலைமுறையினரிடமும் புதிதாக, அழகாக ஏதாவது இருந்தால் அவர்களிடம் சென்று படிப்பேன். என்னிடம், “நீங்களா” என்று பயப்படுவார்கள். ஆனால் நல்லது யாரிடம் இருந்தாலும், ஏற்றுக்கொள்ளலாம். இதில் வெட்கப்பட ஏதும் இல்லை. இதுதான் என் சொத்து, பொக்கிஷம் எல்லாம். இடையில் வந்தது எல்லாமே எவ்வளவு நாட்களுக்கு நம்முடன் வரப்போகிறது?

காஞ்சி மடமும், இசையும்

பெரிய மடங்கள் அனைத்திலும் வாசித்து இருக்கிறேன். 30 வருடங்கள் பெரியவர் காஞ்சிமடத்தில் இருந்தபோது, வியாச பூஜைக்கு வாசித்திருக்கிறேன். டாலர், ருத்ராட்சம் எல்லாம் பரிசளித்திருக்கிறார் பெரியவர். அவருடைய ஜன்ம நட்சத்திரத்திற்கு காலை 9 மணிமுதல் மாலைவரை பூஜை செய்வார், அவ்வளவு நேரமும் தொடர்ந்து வாசித்திருக்கிறேன். ஒருமுறை ஒருவர், காஞ்சிப் பெரியவரைப் பார்க்க வந்திருந்தார். அவர் 10,000, 20,000 ரூபாய் பணக்கட்டுக்களைத் தட்டில் வைத்து அவரிடம் கொடுத்தார். ஆனால், அவர் அதை என்னிடம் கொடுக்கச் சொல்லிவிட்டார். நான், “எனக்கு வாசிப்பதற்கு மடத்தில் பணம் தருகிறார்கள், எனவே இது வேண்டாம்” என்று அந்தப் பணத்தை வாங்க மறுத்தேன். பெரியவரோ, ‘அது கணக்கு, இது சன்மானம்’ என்று கூறி கொடுத்தார்கள். நான் கணக்கு வைத்திருப்பவரிடம் சென்று எனக்கு பெரியவர் பணம் கொடுத்து விட்டார் என்றேன். ஆனால் அவரோ, திரும்பவும் அங்கும் எனக்குப் பணம் கொடுக்கச் செய்தார்.

பக்க வாத்யங்களின் பங்கு

என் மைத்துனர் சின்னி கிருஷ்ணன் என்னுடன் இணைந்து கிளாரினட் வாசித்துக்கொண்டு இருந்தார். அவர் மறைந்தபிறகு, உடன்வாசிக்க நாதஸ்வரம் வைத்துக்கொண்டே எல்லா நாதஸ்வரக் கலைஞர்களுடனும், வயலின் வித்வான்களுடனும், தவில் வித்வான்களுடனும் இணைந்து வாசித்திருக்கிறேன். நாச்சியார்கோவில் ராகவபிள்ளை வாசிக்கும்போது நான் சிறு பையன். அதனால் அவருடன் இணையவில்லை. ஏறக்குறைய எல்லோருடனும் வாசித்து இருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். எனக்கு வலையப்பட்டி சுப்ரமணியம் 14 வருடங்களும், பழனிவேல் 20 வருடங்களும் வாசித்தனர். அக்காலத்தில் கோவில்களிலும், கலியாணங்களிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு இருப்பார்கள். மேலும், ஒலிப்பெருக்கியும் இருக்காது. எனவே தவிலுடன் வாசித்து வந்தேன்.

ஆனால் இப்போது கச்சேரிகள் அரங்குகளில் ஒலிப்பெருக்கியுடன் நடைபெறுகின்றன. மேலும் தவிலுக்குக்கூட -தவில் ராஜ வாத்தியம்- ஒலிப் பெருக்கி என்னும் போது எனக்கு என்னுடைய சுருதி காதில் விழாமல் போகிறது. எனவே, நான் இப்போது மிருதங்கம் வைத்துக் கொள்கிறேன். மிருதங்கத்துடன் கிளாரினட் வாசிக்கும்போது நிம்மதியை உணர்கிறேன். என் ஒலி எனக்குக் கேட்கிறது. இப்போது வயலின் போன்று பக்க வாத்தியத் துடனோ இணைந்தோ ‘ஜுகல்பந்தி’ வாசிக்கும்போது சிறிது ஓய்வும் கிடைக்கிறது. இன்று கூட கேரளாவிலிருந்து போன் வந்தது. அங்கு இன்னும் பழைய பாணியில் நின்று கொண்டுதான் வாசிக்க வேண்டும்.

வாழ்க்கைக்கான கதை, அனைவருக்கும்

பணம் பெரிதல்ல, உழைப்புதான் பெரியது. உழைப்பு இருந்து நேரமும் நன்றக இருந்தால் மற்ற எல்லாம் தானே தேடிவரும். ஒரு சிறுகதை சொல்கிறேன். இது நான் என் சிஷ்யர்களுக்குச் சொல்லும் கதை.

நீங்கள் சரஸ்வதியைக் கும்பிடுங்கள். அவள்தான் கலையைத் தருபவள். அவள் உடனே விஷயத்தைத் தர மாட்டாள். உரைத்து, உரைத்துப் பார்த்து உனக்குத் தகுதி இருக்கிறதா என்று எடை போட்டுத்தான் வித்தையைத் தருவாள். கலை எல்லோருக்கும் வந்துவிடாது. கல்விக்கும் கலைக்கும் சோதனை தேவை. அவளை முழுமையாக வழிபட சிறிது சிறிதாக உனக்கு வித்தை கை கூடும். உழைப்பு முக்கியம். ஆனால் லட்சுமியோ கொடுப்பதாயிருந்தால் அப்படியே அள்ளி அள்ளிக் கொடுப்பாள். முட்டாள், அறிவாளி, திருடன், யோக்கியன் என்று வேறுபாடு அவளிடம் கிடையாது. ஆனால் கல்வியோ கலையோ அப்படி வராது. வித்தை கிடைத்து விட்டால் அதை உன்னிடமிருந்து யாராலும் பறிக்க இயலாது. அது அள்ள அள்ளக் குறையாது. அது குறையாதது, ஆனால் பணம் யாரிடமும் சென்றுவிடும். இறக்கும்வரை நம்முடன் வருவது வித்தைதான். அதாவது கல்வி மட்டுமே. அதற்காகத்தான் உழைக்க வேண்டும். இதைத்தான் நான் அடிக்கடி கூறுவேன்.

இக்கதையை, சென்ற ஆண்டு இசைக் கல்லூரியில் தலைமை தாங்கிப் பரிசளிக்கும் போது அங்கு மாணவர்களுக்கு சொன்னேன். இயல் இசை நாடக மன்றத் தலைவர் P.B.ஸ்ரீநிவாஸ் “நானும் இக்கதையை இனிமேல் எல்லோருக்கும் கூறப்போகிறேன்” என்றார்.

உதாரணமாக, எனக்கு கோடி கோடியாய் பணம் இருந்தது. சங்கீத வித்வான்கள் கட்ட முடியாத மாதிரி ஒரு சினிமா நடிகன் போல் அந்தக் காலத்திலேயே ஒரு மாளிகை கட்டினேன். ஆனால் இப்போது நான் கற்ற கலையைத் தவிர எதுவும் என்னிடம் இல்லை. என் வித்தையை யாரும் எடுத்துக் கொள்ளவோ பறித்துக் கொள்ளவோ முடியவில்லையே? நான் இன்னமும் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

கிளாரினட் – இன்றைய நிலை

படிப்படியாக, கிளாரினட்டுக்கு முக்கியத்துவம் குறைய ஆரம்பித்து விட்டது. சதிர் இல்லை என்றால் கிளாரினெட் இல்லை. கிளாரினெட் இல்லை என்றால் சதிர் இல்லை என்று இருந்த இடத்தில் தற்போது வீணை வந்து விட்டது, தேவாரத்தில் இப்போது வயலின் வந்துவிட்டது, அகில இந்திய வானொலி நிலையங்களில் இப்போது கிளாரினட் வித்வான்கள் எல்லோரையும் நீக்கிவிட்டனர். இப்போது சாச்ஸபோனுக்கும், மாண்டலினுக்கும் ‘கீ போர்டுக்கும்’ இடம் உண்டாகியிருக்கிறது. நல்லது தானே? எல்லாவற்றுக்கும் ஒரு காலம். ஏற்றமும் இறக்கமும் சகஜம்தானே? எனவே எல்லாமே மாறிக்கொண்டு உள்ளது. இப்போது மெட்ராஸில் எந்த சபா நாதஸ்வரத்திற்கு இடம் கொடுக்கிறது? இல்லையே? எனவே கிளாரினட்டைக் கற்கவரும் சிஷ்யர்களிடமும் இது பற்றிக் கூறிவிடுவேன். எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் குறையுமல்லவா?

இப்போது இசை எனக்காக மட்டும்

இந்தியாவில் உள்ள அனைத்து சாபாக்களிலும் வாசித்தாகிவிட்டது. புட்டபர்த்தி சாயிபாபாவுடன் கூட இருந்து சமிதி நடத்தியிருக்கிறேன். பின் அதைக் கலைத்து விட்டேன். இப்போது இசைக்கு எந்தத் தடையுமின்றி ஆத்ம திருப்திக்காக மட்டுமே வாசிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். இசை நமக்கு அனைத்தும் அளித்தது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று எண்ணுகிறேன்.

எங்கள் குருநாதருடைய கண்டிப்புடன் கூடிய கனிவு, அவரின் முழுமையான ஆசீர்வாதம், நம் கடின உழைப்பு எல்லாம் இருப்பதால்தான் என்ன நினைக்கிறோமோ அதை வாசிப்பில் கொண்டுவர இயல்கிறது. இதைத் தான் நான் அனைவருக்கும் சொல்வது.

One Reply to “‘குருவே சரணம்’ – கிளாரினெட் கலைஞர் ஏ. கே. சி. நடராஜன்”

Comments are closed.