“சயின்ஸ் எடுக்க வந்தவ சயின்ஸ் மட்டும் எடுக்க வேண்டியதுதானே. எதுக்கு தேவையில்லாத விஷயத்துலயெல்லாம் தலையிடுதா? நான் போயி அவ பாடத்துல புகுந்து பேசுதேனா? அவ அவ வேலையை அவ அவ பாக்கணும்”. நான்காம் வகுப்பு படிக்கும் போது பாட்டு டீச்சர் தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டு ஆர்மோனியத்தைத் திறந்தது இன்னும் நினைவில் உள்ளது. லோகநாயகி மிஸ்ஸுக்கு இது காதில் விழுந்திருக்கும்தான். ஆனால் பதிலேதும் சொல்லவில்லை. வீட்டுப்பாடம் செய்யாத, சுழிச்சேட்டை பண்ணுகிற பிள்ளைகளையே கடிந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாதவர்கள் இதற்கு ஏதாவது பதில் சொன்னால்தான் ஆச்சரியப்படவேண்டும்.
அன்று பாட்டு டீச்சர் வருவதற்கு சற்று தாமதமானது. எட்டே எட்டு பேர்தான் என்றாலும், நாங்கள் போட்ட கூப்பாட்டில் ஸ்டாஃப் ரூமிலிருந்து லோகநாயகி மிஸ் வந்து விட்டார்கள். என்னப்பா, சினிமாக் கதையா? எனக்கும் சொல்லுங்களேன் என்றபடியே மிஸ் உள்ளே வந்தார்கள். பேசுகிற முதல் வாக்கியத்திலேயே மற்றவர்களின் உள்ளம் கவர்கிற சிலரை பார்க்கும் போது இன்றும் எனக்கு லோகநாயகி மிஸ்தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள். பாட்டு டீச்சர் வருவதற்கு முன்பே ஆர்மோனியத்தை எடுத்துக் கொண்டு வைத்து விட்டு சென்றிருந்தாள் ஆயா அக்கா. முதலில் மிஸ் அதை எடுத்து தூசியைத் துடைக்கிறார்கள் என்றுதான் எல்லோரும் நினைத்தோம். மெல்ல மிஸ்ஸின் விரல்கள் ஆர்மோனியத்தின் கட்டைகளில் தவழ ஆரம்பித்தன. ஒரு பத்து நிமிடம் டீச்சர் தலை நிமிராமல் வாசித்தார்கள். மிஸ் அளுதாங்க என்றான் நண்பன் குஞ்சு. எனக்கு அது முக்கியமாகப் படவில்லை. இதை எங்கெயோ கேட்டிருக்கோமே. என் எண்ணம் முழுக்க அவர்கள் வாசித்த ஓசையைத் தொடர்ந்தே செல்கிறது. மிஸ் தலை நிமிரும் வரை பேசாமல் இருந்தோம். என்னைப் பார்த்தால் கேட்டு விடுவது எனும் முடிவோடு நான்.
என் மூஞ்சி ஒரு தினுசாக இருப்பதை கவனித்து விட்டு, என்னடே முளிக்கே? என்றார்கள்.
‘நீங்க வாசிச்ச மாதிரியே எங்க பெரியப்பா பாடி கேட்டிருக்கேன். ஆனா அது வேற மாதிரியிருக்கும்’ என்றேன்.
‘அப்படியா? அது என்னதுடே? பாடு பாப்போம்’ என்றார்கள். சத்தியமாக அப்போது எனக்கு ஒரு இழவும் தெரியாது. இதே மாதிரிதான் இருக்கும். ஆனா அது வேற என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன். மிஸ் சாதாரணமாக ஆர்மோனியத்தை வாசித்து, இதுதானே உங்க பெரியப்பா பாடுறது? என்றார்கள். ‘ஆமா மிஸ். இதேதான்’ என்றேன். ‘இது நான் வாசிச்சது இல்லியா!’. என் முழி அவர்களுக்கு சிரிப்பை வரவழைத்திருக்க வேண்டும். சிரித்தபடியே, “ரெண்டுமே பக்கத்துப் பக்கத்து ராகம். நான் வாசிச்சது லலிதா. உங்க பெரியப்பா பாடுனது மாயாமாளவகெளளையா இருக்கும் ” என்றார்கள். அப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும் என்று இப்போது எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் அந்த வயதில் எனக்கு ராகங்களைப் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது. இதற்குள் பாட்டு டீச்சர் வந்து விட மிஸ் அவசரமாக எழுந்து டீச்சரை வணங்கி வழி விட்டுச் சென்றார்கள். இதற்கு பின் தான் பாட்டு டீச்சர் முதலில் நான் குறிப்பிட்ட வரியைச் சொன்னார்கள்.
பாட்டு டீச்சரை பற்றி இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். இரண்டாண்டுகள் எங்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தார்கள். தீராத விளையாட்டுப் பிள்ளை, தாயின் மணிக்கொடி பாரீர் , இவை இரண்டைத் தவிர வேறு எந்த ஒரு புதிய பாடலையும் அவர்கள் எங்களுக்கு சொல்லித் தந்ததில்லை. அவர்கள் ஒன்றும் வைத்துக் கொண்டு வஞ்சனை பண்ணவில்லை என்கிற விவரம் ரொம்ப நாள் கழித்தே எனக்குத் தெரிய வந்தது.
இது நடந்து ரொம்ப வருடங்களுக்குப் பின், மேற்சொன்ன மாயாமாளவகெளளை – லலிதா வித்தியாச விவரம், இளையராஜா மூலமே எனக்குத் தெரிய வந்தது. உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் “இதழில் கதை எழுதும் நேரமிது” என்ற பாடலை அட்டகாசமாக லலிதா ராகத்தில் அமைத்திருந்தார் ராஜா. இப்போது நான் ஆர்மோனியம் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். மெல்ல பிடிபட்டது. மாயாமாளவகெளளையில் பஞ்சமம் இல்லையென்றால், அது லலிதா. அட . .இதுதானா! ஆச்சரியமும், சிறுவயதில் நடந்த சம்பவத்தின் நினைவுகளும், எல்லாவற்றுக்கும் மேல், அத்தனை வருடங்களுக்கு முன்பு லோகநாயகி மிஸ் வாசித்த அதே ராகத்தை இன்று நான் வாசிக்கிறேனே என்கிற சொல்ல முடியாத சந்தோஷமும் என்னை ஆட்கொண்டது. மாயாமாளவகௌளையையும், லலிதாவையும் சுமந்து கொண்டு எனது இசையாசிரியர் கிருஷ்ணன் ஸாரைப் பார்க்கப் போனேன்.
பொதுவாக எனது இசை வகுப்புகளில் கிருஷ்ணன் ஸார் எனக்கான பாடத்தை வயலினில் வாசிக்க, அதை அப்படியே வாங்கி ஹார்மோனியத்தில் வாசிப்பதோடு எனக்கான வகுப்பு முடிந்து விடும். அதன் பின் பொதுவாக ராகங்களைப் பற்றிய என்னுடைய சந்தேகங்களுக்கு கிருஷ்ணன் ஸார் விளக்கமளித்து தெளிவுபடுத்துவார். அவர் முன்னால் கொண்டு போய் மாயாமாளவகௌளை, லலிதா இரண்டையும் வைத்தேன். ‘ஏய் . . . இந்த லலிதா, மாயாமாளவகௌளைக்கு கூடப் பொறந்த தங்கச்சில்லா!’ என்றார். உடனே வயலினை எடுத்துக் கொண்டார். மிக எளிமையாக இந்த இரண்டு ராகங்களுக்குமான வித்தியாசத்தை வாசித்துக் காட்டினார். ‘இப்பொ வெளங்குதா?’ என்றவர் என் பதிலுக்குக் காத்திராமல், ‘ஒனக்குத்தான் இன்னொரு வாத்தியார் இருக்காம்லா! அவன்ட்டதான் ஒரு வண்டிக்கு இருக்குமே. போய் கேளு’ என்றார். அவர் சொன்ன அந்த இன்னொரு வாத்தியார் இளையராஜா.
இளையராஜாவின் திரையிசைப்பாடல்களைக் கேட்டே ராகங்கள் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டவன் நான். அந்த வகையில் லலிதாவிலிருந்து பஞ்சமத்தைத் தொட்டு மாயாமாளவகெளளையை வாசிக்கிறேன். “மாசறு பொன்னே வருக” , தேவர்மகன் பாடல் பேசுகிறது . “மஞ்சள் நிலாவுக்கு” , முதல் இரவு படப் பாடல் குதியாட்டம் போடுகிறது . “மதுர மரிக்கொழுந்து வாசம்” , எங்க ஊரு பாட்டுக்காரன் பாடுகிறான். (அதுவும் இந்த பாடலின் சரணத்தில் ராஜா விளையாடியிருக்கும் விளையாட்டு, அபாரமானது) . கர்நாடக சங்கீதத்தின் அடிப்படை “ஸரிகமபதநி” ஸ்வர வரிசைகளை சொல்லிக் கொடுக்கப்படும் இந்த ராகத்தில் ராஜா போட்டிருக்கும் பாடல்கள் எண்ணிக்கையிலடங்காதவை . ஒன்று வாசிக்க ஆரம்பித்தால் இன்னொன்று வந்து விழுந்த வண்ணம் இருக்க, மீண்டும் லலிதாவுக்கு திரும்புகிறேன். கண்களை மூடியபடி வாசிக்க ஆரம்பிக்கிறேன். லோகநாயகி மிஸ்ஸின் முகம் ஞாபகத்திற்கு வருகிறது. பாட்டு டீச்சரின் முகமும்தான்.
One Reply to “லோகநாயகி டீச்சரும், லலிதா ராகமும்”
Comments are closed.