வடூவூரார் படைப்புகள்

(இக்கட்டுரையின் முந்தைய பகுதிகள்: பகுதி1 | பகுதி 2)

வடூவூராரின் கதையில் மிகப் வெளிப்படையாக சமூக நிகழ்வுகளோ, சமுதாய அடுக்குகளோ, ஜாதி நிலவரங்களோ காணப் படாவிட்டாலும் கூட இலை மறை காய் மறையாக கதையின் போக்கிலேயே ஏராளமான சமூகத் தகவல்களைத் தந்து செல்கிறார். அவை திட்டமிட்டு அளிக்கப் பட்டிருக்காவிட்டாலும் கூட அவரை அறியாமலேயே வெளிப்படுபவையாகவேதான் இருக்க வேண்டும்.

tribal-casteபிராமணர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது அரசாங்க வேலைகளை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதற்காக அவர்களை எதிர்த்து முதலியார்கள் போன்ற செல்வாக்கு உள்ள ஆதிக்க ஜாதித் தலைவர்களால் ஆரம்பிக்கப் பட்டதே நீதிக் கட்சியாகும். நீதிக் கட்சியின் நோக்கங்கள் குறித்தோ அவர்களுக்குப் பிராமணர்கள் மீது ஏற்பட்டுள்ள பொறாமைகள், காழ்ப்புகள் குறித்தோ வடூவூரார் எதையும் எங்கும் சொல்லவில்லை. ஒரு புறம் பிராமணர்கள் மீது பொறாமையும், காழ்ப்பும் கொண்டு இயக்கம் தொடங்கி அவர்களைத் தாக்கிக் கொண்டே மறுபுறம் அவர்கள் இருந்த இடத்துக்குத் தாங்கள் செல்ல வேண்டும் என்று முதலியார் போன்ற வேளாள ஜாதியினரின் மனப்போக்கை வடூவூரார் ஒரு சில இடங்களில் மறைமுகமாகக் குறிப்பிட்டு விடுகிறார். வித்யாசாகர முதலியார் தீவீர ஜாதி வெறியர். தனக்குக் கீழேயுள்ள ஜாதியினரிடத்துத் தீண்டாமையைக் காட்டுபவர். ஆனால் அவருக்கோ பிராமண ஜாதிப் பெண்ணைக் கட்டிக் கொண்டு சமுதாய அடுக்கில் மேலே போக வேண்டும் என்ற ஆசை. அன்றைய காலக் கட்டத்திலேயே பிராமணர்களை விடவும் பிற செல்வாக்கான ஆதிக்க ஜாதியினர் தீண்டாமையைப் பாவித்திருக்கின்றார்கள் என்பதை இப்படி எழுதுகிறார், “அதற்கு முன் பிச்சைக்காரர்கள், கீழ்சாதியார் முதலியோருடன் பேசுவதே தம் கவுரவத்திற்கு இழிவென்று நினைத்திருந்த முதலியார்….”. அப்படி உயர்ஜாதி மனப்பான்மையுள்ள அதே முதலியார் தனக்குப் பிராமணப் பெண் வேண்டும் என்ற ஆசையில், பிராமணப் பெண்ணிற்கு மாப்பிள்ளை வேண்டும் என்று விளம்பரம் கொடுத்த ஏமாற்றுக் காரர்களுக்குக் கடிதம் எழுதும் பொழுது மட்டும் “நம் இந்தியாவில் ஜாதி பேதங்கள் ஒழிய வேண்டும் என்ற விருப்பத்தை நானும் கொண்டவன்” என்று எழுதுகிறார். அதாவது தனக்குக் கீழேயுள்ள ஜாதியினர் தீண்டத்தகாதவர் என்று எண்ணியவர்கள் தனக்கு மேலே உள்ள ஜாதியினர் தன்னை கீழாகப் பார்த்து விடக் கூடாது அங்கு மட்டும் ஜாதியம் நிலவக் கூடாது என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். சாதீய அடுக்குகளில் மேலே உள்ளவர்களை அகற்றி விட்டு அந்த இடத்திற்குத் தாங்கள் செல்ல வேண்டும் என்று அடுத்த கட்ட ஜாதியினருக்கு இருந்த ஆசையை வித்யாசாகர முதலியார் மூலமாக வடூவூரார் கோடு காட்டி விட்டுச் செல்கிறார்.

பிராமணர்கள் அந்தக் காலத்தில் பிற ஜாதியினரைத் தள்ளி வைத்தார்கள் என்றும், பிற ஜாதியினர் அனைவருமே அவர்களுக்கு அடி பணிந்து பய பக்தியுடன் வாழ்ந்திருந்தார்கள் என்றொரு கட்டுக்கதை தமிழ் நாட்டில் உருவாக்கப் பட்டு அவர்கள் மீதான வெறுப்பு வளர்க்கப் பட்டு வருகிறது. ஆனால் 1800களின் இறுதிக் காலத்தின் பொழுதும், 1900களின் ஆரம்ப காலத்தின் பொழுதும் வெளி வந்த ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம், வடூவூராரின் நாவல்கள் போன்றவற்றைப் படிக்கும் பொழுது பிராமணர்களிடம் ஜாதிய உணர்வு இருந்த பொழுதிலும், அவர்கள் செல்வாக்காகவோ அனைவரும் மதிக்கத்தக்க விதத்தில் மரியாதையுடன் வாழ்ந்ததாகவோ தெரிவதில்லை. மாறாக ஜமீந்தார்கள் போன்ற செல்வந்தர்களுக்கு மட்டுமே அத்தகைய மதிப்பும் மரியாதையும் நிலவியிருந்திருக்கிறது. ராஜம் ஐயர் தனது நாவலில் ஒரு விதவைப் பிராமணப் பெண்ணின் மொட்டைத் தலை மீது திருடன் பேயாண்டித் தேவன் தன் வாயில் குதப்பி மென்ற வெற்றிலை எச்சிலைத் துப்பியதை மிகவும் நகைச்சுவைக்குரிய விஷயமாக வர்ணித்திருப்பார். அந்த நிலையில்தான் அந்தக் காலத்துப் பிராமணர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை இவை போன்ற சம்பவங்கள் விவரிக்கின்றன.

வடூவூராரின் இந்த நாவலிலும் வடூவூரார் திருப்பத்தூரில் ஒரு தெருவில் குடியிருப்பவர்களை வைத்து ஒரு நகைச்சுவையை உருவாக்குகிறார். அதிலும் ஒரு மொட்டையடித்த விதவைப் பிராமணப் பெண் வருகிறார். வீட்டு வாசலில் தப்பான அளவில் பால் அளந்து கொடுக்கும் பால்கார கண்ணுச்சாமி பிள்ளையை அவமரியாதையாக விளித்து ”என்னடா கட்டையில போவாய், நுரையோடு பாலை அளக்கிறாய்” என்று ஏசுகிறார். பதிலுக்கு கண்ணுசாமி பிள்ளையும் சளைக்காமல் “போம்மா பலே பாலு வாங்கிப் புட்டே, நீ வாங்காமப் போனா நல்லதாச்சு, ஒன்னைப் போல எத்தனையோ மொட்டைப் பாப்பாத்தியைப் பார்த்தாயிப் போச்சு, நாக்கை உள்ளற வைச்சுப் பேசு அப்பால மரியாதை கெட்டுப் போகும்” என்று பதிலுக்குப் பதில் கொடுக்கிறார். இவை போன்ற சம்பவங்கள் அப்படி ஒன்றும் அவர்களுக்குச் சிறப்பு மரியாதை எதுவும் அளிக்கப் படவில்லை என்பதையும் சமுதாயத்தில் அவர்களும் எல்லோரையும் போலவே சண்டை சச்சரவுகளுடனும், வசவுகளுடனும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லுகிறது. மதிப்பு மரியாதை ஆதிக்கம் எல்லாம் செல்வமும், நிலபுலன்களும் உள்ளவர்களுக்கு மட்டுமே உரித்தானவையாய் இருந்திருக்கிறது.

அரசாங்க வேலைகளிலும் பல தரப் பட்ட ஜாதியினரும் இருந்திருக்கிறார்கள் என்பது இந்த நாவல் தெரிவிக்கும் மற்றொரு தகவலாகும். செல்வாக்கான பதவியான பப்ளிக் பிராசிக்யூட்டர் எனப்படும் அரசாங்க வக்கீல் பதவியான பிராச்சிக்யூட்டிங் இன்ஸ்பெக்டராக ஜபர்தஸ்து மரைக்காயர் என்றொரு முஸ்லீம் வருகிறார். அது போலவே அரண்மனை கணக்கர் போன்ற காசு புழங்கும் வேலையில் தோலிருக்கச் சுளை முழுங்கியா பிள்ளை பணிபுரிகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் போன்ற அதிகாரம் உள்ள வேலையில் குஞ்சுண்ணி நாயர் இருக்கிறார். அரசாங்க வேலைகளும் கூட பல விதமான ஆதிக்க ஜாதியினரிடத்தும் பரவியிருந்திருப்பது தெரிகிறது.

ஏமாற்றுச் சாமியார்களிடம் கூட்டம் கூட்டமாகப் போய் காணிக்கை அளித்து ஏமாறும் வழக்கமும் மக்களிடம் அந்தக் காலம் தொட்டே நிலவியிருந்திருப்பதும் இந்த நாவலின் வாயிலாகத் தெரிகிறது. ஒரு போலிச்சாமியாரை வைத்து அந்த ஊரில் ஏராளமானோர் பயன் பெற்று விடுகிறார்கள். “ஒருவன் செய்த தந்திரத்தால் நூற்றுக்கணக்கான மனிதருக்குப் பிழைக்கும் வழி ஏற்பட்டது” என்கிறார். ”ஏராளமான பெரிய மனிதரும் அவரது பத்தினிமார்களுமாகத் தோன்றி அஞ்சலியஸ்தராகத் நின்று சாமியாரின் கால்களைப் பாலால் அலம்பி, அந்தப் பாலை உள்ளங்கையில் வாங்கித் தலையில் தெளித்துக் கொண்டு உள்ளங்கையிலும் வணக்கமாக வாங்கி அருந்தினர்” என்றும் “பிள்ளைப் பயித்தியம், பஜனைப் பயித்தியம், புராணப் பைத்தியம், மந்திரப் பயித்தியம் போன்ற பலவித பயித்தியங்களும் வந்து நிறைந்தன” என்றும் , போலிச் சாமியார்களிடத்து பாமர மக்கள் முதல் படித்த பெரிய மனிதர்கள் வரை ஏமாறும் வழக்கத்தைக் கேலியும் கிண்டலுமாகப் பல இடங்களில் சொல்லுகிறார். போலிச் சாமியார் உருவெடுத்தவுடன் அவரைத் தங்களவராக மாற்றிக் கொண்டு அவரைத் தங்கள் வட்டத்துக்குள் கொண்டு வர நினைக்கும் பிராமணர்களின் பத்தாம் பசலித்தனத்தையும் வடூவூரார் கடுமையாகக் கேலி செய்கிறார். போலிச்சாமியாரின் பாதங்களைப் பாலால் அலம்பி அதைத் தலையில் தெளித்துக் கொண்டும், வாயில் விட்டுக் கொண்டும் சென்ற அதே நீதிபதியே போலிச்சாமியாரின் வேடம் கலைந்தவுடன் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்க வேண்டியதாகி விடுகிறது. தன்னையே ஏமாற்றி விட்டார்களே என்ற கோபத்தில் அவர்களுக்கு உடனே தண்டனையும் கொடுத்து விடுகிறார். போலிச்சாமியாருக்கு பால், கரும்புச் சாறு, இளநீர் ஆகியவற்றால் பாத பூஜை செய்து அந்தப் பாத தீர்த்தத்தைப் புரோஷித்துக் கொள்ளும் பாக்கியங்கள் பிராமணர்களுக்கு மட்டும் சித்திக்கிறது. “அந்தணர்களுக்கு வயிறு மாத்திரம் அல்லாமல் ஆன்மாவும் கிருதார்த்தம் அடைந்தது. எல்லோரும் வஞ்சனையின்றி விலாப்புடைக்க உண்டு சாமியாரை வாழ்த்திய வண்ணம் இரை விழுங்கிய பாம்பு போல மூலை முடுக்குகளில் எல்லாம் விழுந்து புரண்டு கிடந்தனர்”. போலிச்சாமியாரின் உண்மை சொரூபம் வெளிப்பட்டவுடன் அவர் கால் அலம்பிய பாலைக் குடித்த அந்தணர்கள் அனைவரும் வாய்க்குள் கையை விட்டு வாந்தி எடுத்தார்கள் என்று கிண்டலடிப்பதன் மூலம் கடவுள் சந்நிதானம் மட்டுமல்லாமல் சாமியார் சன்னிதானத்தின் நெருக்கமும் கூட தங்களிடம் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பிராமணர்களின் முட்டாள்த்தனமான பேராசையினை பரிகாசம் செய்கிறார் ஐயங்கார். ஆக சமுதாய அவலங்களின் காரணகர்த்தாவாக இருந்த பல்வேறு ஜாதியனரையும் தன் கூர்மையான அங்கதம் மூலமாக கதையின் போக்கின் நடு நடுவே நையாண்டி செய்து சாடுகிறார் வடூவூரார்.

வடூவூராரின் நாவல்கள் மட்டுமின்றி அந்தக் காலத்திலும் பின்னர் அறுபதுகள் வரையிலும் கூட தமிழ் நாட்டில் நிலவி வந்த தேவதாசி முறையும், தாசிகளும் எழுத்தாளர்களின் நினைவுகளையும் கதைகளையும் பெரும் அளவில் ஆக்ரமித்திருக்கிறது. அக் காலக் கட்டத்தில் தாசிகளின் நிலை குறித்தும், தாசிகளினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள், சமுதாயத்தில் அதனால் ஏற்படும் இழிவுகள், குடும்பங்களில் ஏற்படும் சீரழிவுகள் என்று தாசிகளைச் சுற்றியே நிறைய நாவல்களும் நாடகங்களும் புனையப் பட்டுள்ளன. மூவலூர் ராமாமிருதத்தம்மாளின் “மதி பெற்ற மைனர் அல்லது தாசிகளின் மோச வலை” என்ற நாவல் தாசிகளின் மோசடிகளை அவர்களது பசப்புகளைப் பற்றிப் பேசுகிறது என்கிறார் ஜெயமோகன். ’டம்பாச்சாரி விலாசம்’, ’பீமசேனனும் சந்திரிகாவும்’, ’ஆத்மநாதன்’ போன்று முப்பதுகளில் பிரபலமாக இருந்த நாடகங்களிலும் கூட தாசிகளினால் ஏற்படும் கேடுகளை விவரிக்கும் கருவே பிரதானமாக இருந்திருக்கிறது. ”தேவதாசி குலத்தில் பிறந்த ஒருத்தி உத்தமியாக இருக்கிறாள் என்ற கருத்தோடு மாங்குடி துரை ராஜய்யர் ‘மித்திர பாசம்’ என்ற நாடகத்தை உருவாக்கினார். சுத்தானந்த பாரதியார் எழுதிய நாடகத்தில் தேவதாசிப் பெண்ணுக்கும் பிராமண இளைஞனுக்கும் திருமணம் நடக்கிறது.” என்கிறார் கட்டுரையாளர் சுப்பு தனது “போகப் போகத் தெரியும்” என்ற கட்டுரைத் தொடரில். இந்த நாடகம் போலவே கொத்தமங்கலம் சுப்பு எழுதி பின்னாளில் பிரபலமான திரைப்படமாகவும் வந்த ’தில்லானா மோகனாம்பாள்’ நாவலும் கூட ஆசைநாயகியாகப் போக விரும்பாத ஒரு தாசியின் கதையே. தி.ஜானகிராமனின்  பல சிறுகதைகளும் தாசிகளின் பரிதாபமான நிலையைக் கண்டு எழுதப் பட்ட கதைகளே.

தாசிகளின் நிலைமை மீது பரிதாபம் கொண்டு அவர்களது இழிநிலை நீங்க வேண்டும் என்ற முற்போக்கு எண்ணமும், தாசிகளை வைத்துக் கதைகள் எழுதுவதன் மூலம் அந்தக் கதைகளுக்குத் தேவையான வில்லிகளும், கிளுகிளுப்பும் கிடைக்கும் என்ற காரணமும் தாசிகளை வைத்து வெளி வந்த படைப்புகளின் காரணமாயின. வடூவூராரின் கதைகளில் வரும் தாசிகள் தந்திரமானவர்களாகவும், பேரழகிகளாகவும், சொத்துக்களை அபகரிப்பவர்களாகவும், குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துபவர்களாகவும், சாகசக்காரிகளாகவும், பசப்பு வார்த்தை பேசி மதிமயக்குபவர்களாகவும் வருகிறார்கள். இந்த நாவலிலும் முக்கியமான வில்லி பாத்திரம் அப்படிப் பட்ட ஒரு தாசிக்கே அளிக்கப் பட்டிருக்கிறது. ஜமீந்தாரை தன் ஆடல், பாடல், சரசம், அழகு ஆகியவற்றால் மயக்கிடும் தாசி மோகாம்பாள் வருகிறாள். ஜமீந்தாரை மயக்கி தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதுடன் நின்று விடாது தனக்கு ஏற்கனவே உள்ள மகள் வடிவாம்பாளையும் ஜமீந்தாரின் மகனுடைய ஆசைநாயகியாக கல்யாணம் செய்து வைத்து தன் மகளின் எதிர்காலத்திற்கும் ஒரு வழி செய்து விடும் தந்திரக்காரத் தாசியாக மோகாம்பாளை சித்தரித்திருக்கிறார் வடூவூரார். அப்படி ஜமீந்தார் மகனுடன் தன் மகளைச் சேர்த்து வைத்து விடும் தாசி மோகாம்பாள் சமஸ்தான சொத்தில் ஆறில் ஒரு பங்கு தன் மகளுக்கும் கிடைக்கும் என்று கணக்குப் போடுகிறார். தன் சாகசத்தாலும் கவர்ச்சியினாலும், சங்கீதத்தினாலும், நடனத்தினாலும் ஜமீன்ந்தாரை மயக்கி ஜமீந்தாரின் மனைவியை மறந்து விடச் செய்து விடுகிறார் இந்தக் கதையில் வரும் தாசி. அதனால் ஜமீந்தாரின் மனைவி சொல்லொணா சோகத்தில் தனிமையில் வருந்துகிறார். தாசியிடம் மயங்கிக் கிடப்பதினால் தன் வேலைகளையும் குடும்பத்தையும் புறக்கணித்துச் சீரழிகிறார் முதலியார். தன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் மீண்டும் ஜமீந்தார் தன் மனைவி மகளிடம் சென்று விடக் கூடாது என்பதற்காகவும் சதித் திட்டங்களைப் போடுகிறார் அந்த தாசி. இப்படி தாசிகளினால் ஏற்படும் கேடுகளை விலாவாரியாக விவரிப்பதன் மூலம் தன் நாவலில் ஒரு விதமான விரசமற்ற கிளுகிளுப்பை வடூவூரார் கச்சிதமாக ஏற்றி விடுகிறார். இவரது கதைகள் குற்றங்களும், குற்றங்களைக் கண்டு பிடிப்பதும் தீர்ப்பதும், தாசிகளும் நிறைந்து மர்மக் கதைகளுக்குத் தேவையான பரபரப்பையும் கவர்ச்சியையும் அளிக்கின்றன. இந்த நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல.

தாசிகளினால் ஏற்படும் சமூகச் சீர்கேடுகளை விவரிக்கும் வடூவூரார் இறுதியில் அந்தக் கால நாவலக்ளுக்கே உரிய இலக்கணத்தின் படி கெட்டவளான தாசிக்கு பைத்தியம் பிடித்து விடும் தண்டனையை அளித்து விடுகிறார். ஆனால் அந்தக் காலத்துக் கதைகளில் கெட்டவர்கள் தண்டனை பெற்று மீளா நரகத் தீக்குச் சென்று விடுவதில்லை. அவர்கள் குற்றங்களை, பாவங்களை உணர்ந்து மனம் திருந்தி விடுவார்கள். அக் காலத்துப் பெரும்பாலான கதைகளிலும் சினிமாக்களிலும் வில்லன்கள் கொல்லப் படுவது கிடையாது. மனம் திருந்தி செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கோரிய பின்னரே சிறைத் தண்டனையோ மன்னிப்போ அடைவார்கள். பெரும்பாலான பீம்சிங் படங்களில் எம் ஆர் ராதா இறுதியில் மனம் திருந்தி விடுவார். அது போன்ற போக்குகளின் முன்னோடியாகவே இந்தக் கதை விளங்குகிறது. அனைத்துத் தீமைகளையும் புரியும் தாசிக்கு பைத்தியம் பிடித்தாலும் ஜமீந்தார் பரிதாபப் பட்டு அவளுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்து, தாசியும் தெளிந்து, மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டு விடுகிறார். பாவத்தில் சம பங்கு வகித்த முட்டாளான ஜமீந்தாருக்கு அது போன்ற பெரிய தண்டனைகள் எதுவும் கிடைப்பதில்லை. குடும்பத்தில் ஏற்படும் மனக் கவலைகளே அவருக்குப் போதுமான தண்டனை என்று விட்டு விடுகிறார் வடூவூரார். தாசிகளினால் ஏற்படும் சமூகக் கேடுகளை கதையின் கருவாக வைத்தாலும் கூட அவர்கள் ஏன் இந்த நிலைக்கு வந்தார்கள், அதற்கான சமுதாயப் பொறுப்பு என்ன என்பதையும் ஆராய்ந்து அவர்களை சமுதாயம் வைத்திருக்கும் கேவலமான நிலையையும் அந்தத் தாசியின் கடிதத்தின் வாயிலாகவேச் சொல்லிச் செல்கிறார் கதாசிரியர். “எங்களுடைய பிழைப்பும் ஒரு பிழைப்பா? கேவலம், இழிவானது, தருமப் படி புருஷன் என்று சொல்லிக் கொள்ள ஒரு மனிதனின்றி, அயலார் பொருளையெல்லாம் எங்களுடையதாக மதித்து, அயலார் வயிறெரிய, கடைசியில் பட்ட பாடெல்லாம் விழலுக்கிறைத்த நீராய் எங்கள் ஜாதித் தொழிலாக இருக்கிறதே” என்று புலம்புவதன் மூலம் தேவதாசிகளின் அவலமான சமூக நிலையையும் விவரித்து விடுகிறார் வடூவூரார். ஆனால் தன் கதைகளின் வில்லிகளாகவும், கவர்ச்சிக்காகவும் அதே தேவதாசிகளை இவரும் பயன் படுத்தத் தவறவில்லை என்பது ஒரு முரண்பாடே.

நாவலின் இறுதியில் எல்லாமே சுபமாக முடிகிறது. காதாகாலேட்சேபம் செய்யும் பாகவதர்கள் போல நாவலின் இறுதியில் வடூவூராரும் ஜமீந்தார் தன் மனைவியிடம் கேட்கும் கேள்விகள் மூலமாக ஒரு நீண்ட தத்துவ விளக்கத்தையும் சுவாரசியம் குன்றாமல் அளிக்கிறார். பாவம், புண்ணியம், ஈசுவரனின் லீலைகள், பூர்வ ஜென்ம பலன்களின் தொடர்ச்சி உலகில் எந்தவொரு சின்ன விஷயமும் கூட தற்செயலாக நடப்பதில்லை, எல்லாமே ஈஸ்வரனின் தீர்மானப்படியே நடக்கின்றன, ஒரு கொசு நகர்வதில் கூட ஒரு அர்த்தம், ஒரு மர்மம் இருக்கிறது என்று ஒரு பெரிய தத்துவ விளக்கத்தையும் அளித்து நாவலை நிறைவு செய்கிறார். ஆக நாவலில் முழுமையான கேளிக்கை வாசிப்பு அனுபவத்தை அளித்து வாசகர்களைக் கவர்ந்து விடுகிறார் வடூவூர் துரைசாமி ஐயங்கார்.

வடூவூராரின் நாவல்கள் நமக்கு அன்றைய சமூக, பொருளாதார, வரலாற்று, பூகோள நிலைகளைக் காட்டும் ஜன்னலாக திறந்து விடாவிட்டாலும் கூட, ஓரளவுக்கு நம்மால் சமூக நிலைகளை அறிந்து கொள்ள முடிகிறது. அவரது நோக்கம் லட்சியவாதமோ, யதார்த்தவாதமோ, தரமான இலக்கியம் அளிப்பதோ அன்று. அவரது கதைகள் முற்றிலும் வணிக நோக்கில், கேளிக்கை அளிக்கும் நோக்கில் எழுதப் பட்டவையே. தமிழ் நாவலின் வளர்ச்சியை அறிய விரும்புவர்களும் அந்தக் காலத்தின் உரை நடையை அறிய ஆர்வம் உள்ளவர்களும் வடூவூராரின் ஒரு சில கதைகளைப் படிக்கலாம். தமிழின் உரை நடை வடிவ இலக்கியத்தை மக்களிடம் வெகுஜன வாசிப்பு இயக்கமாகக் கொண்டு சென்றவர் என்ற வகையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறார் வடூவூர் துரைசாமி ஐயங்கார்.

கட்டுரையாளர் குறிப்பு : வடூவூராரின் நாவல்கள் அனைத்தும் அல்லையன்ஸ் பதிப்பகத்தார் மறு பதிப்பு செய்திருக்கிறார்கள்.