ராக்கெட் வண்டுகள்

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?”
(குறுந்தொகை -2)

இந்தப் பாடலுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாது; திருவிளையாடல் படத்தில் சிவாஜி ஏற்ற இறக்கத்துடன் நக்கீரனுக்குப் பாடிக் காண்பிப்பார். ஏதோ ஒரு தமிழ் பரிட்சையில் மனப்பாடம் செய்து, அப்படியே எழுதியதால் சுளையாக 10 மார்க் கிடைத்தது. சங்கத் தமிழ் பாடலையும், சிவாஜியின் நடிப்பையும் பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை. அவை எல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான்.

சிவாஜிக்கும் வண்டுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் என்று நினைக்கிறேன். கர்ணன் படத்தில் வரும் வண்டு, கர்ணனாக நடிக்கும் சிவாஜி தொடையில் துளை போடும். ரத்தம், வலி எல்லாம் வரும்; தூங்கிகொண்டிருக்கும் குருவை எழுப்ப கூடாது என்பதற்காகப் பொறுத்துக்கொள்வார். இந்தக் காட்சியில் சிவாஜி வழக்கம்போல் பயங்கரமாக நடித்திருப்பார். வண்டு அந்த நடிப்பைப் பார்த்திருந்தால், துளை போடுவதை நிறுத்தியிருக்கும். வண்டு தொடையைத் துளைபோடுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை, பெரிய மரத் தூணையே துளை போடுகிறது; தொடை எம்மாத்திரம்? ஆனால் எப்படி எல்லா நீலம் மாம்பழத்திலும் துளையே போடாமல் உள்ளே நுழைந்துவிடுகிறது என்பதுதான் பெரிய ஆச்சரியம்!.

இந்தக் கட்டுரையில் சொல்லப்போவது வண்டுகள், தேனீக்கள், தும்பிகளைப் பற்றி!

குழவி, அறுபதம், கரும்புசம், பிரமரம் என்று பல பெயர்கள் வண்டுக்கு உண்டு. உயர்ந்த சாதி வண்டுக்கு தும்பி என்று பெயர். சிறுவயதில் வண்டைத் துரத்தி விளையாடுபவர்கள், பெரியவர்கள் ஆனவுடன் பெண்களைத் துரத்த வண்டைத் தூதுவிடுவது தான் மரபு. குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகைப் புலவர்களும், பிரபந்தங்களில் ஆழ்வார்கள் என்று யாரும் இவைகளை விட்டு வைக்கவில்லை.

தேனீக்கள் சுமார் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததாகத் சொல்லுகிறார்கள். ஒன்பதாவது படிக்கும்போது தேன் பாட்டில் வாங்கிய போது, அதில் இருந்த ஒரு தேனீக்காக இன்றுவரை மருந்துக்குக் கூட நான் தேன் சாப்பிடுவதில்லை. “என்ன நீங்க குழந்தை மாதிரி..” என்ற கேலிக்கு இடையில் பீ மூவி(Bee Movie) என்கிற கார்டூன் படத்தை சமீபத்தில் விரும்பிப் பார்த்தேன். தேனீக்களின் வாழ்க்கை பற்றிய கார்டூன் படம், தேன் எடுக்கும்போது மடிந்து போகும் தேனீக்கள், தேனைத் திருடும் மனிதர்கள் என்று நகைச்சுவையாகச் சொல்லும் படம்.

சில நாள்கள் முன் எங்கள் வீட்டுக்குள் ஒரு தேனீ நுழைந்துவிட்டது. அதை விரட்ட முற்பட்ட போது குறுக்கும் நெடுக்குமாக ஓடியது. நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் நியூஸ் பேப்பர். கொஞ்ச நேரத்தில் நான் சோர்ந்து போகவே என் மீது இரக்கப்பட்டு அதுவாகவே ஜன்னல் கதவு வழியாக பறந்து சென்றது. “அப்பா அது எப்படி அதோட வீட்டுக்கு போகும், அதுக்கு வழி தெரியுமா?” என்றாள் என் மகள்.

பதில் தெரியவில்லை. எவ்வளவோ நூற்றாண்டு காலமாக வாழும் இந்தத் தேனீ எப்படி தன் கூட்டுக்குச் செல்கிறது என்பது பற்றி படிக்க ஆச்சரியமாக இருக்கிறது.

கிபி 16ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இங்கிலாந்தில் தேனீக்களை ஸ்வீட்டுக்காக இறக்குமதி செய்துள்ளார்கள். கிபி 17ஆம் நூற்றாண்டில் சர்க்கரை வந்துவிட்டாலும் விலை எக்கசக்கமாக இருந்த காரணத்தால் தேன் தேவைப்பட்டது. ஐஸ்கீரிம், குலோப் ஜாமுன், சாக்கலேட், பெப்ஸி இல்லாத வாழ்க்கையை யோசித்துப் பாருங்கள்.

இன்று உலகில் போலார் பிரதேசங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் தேனீக்கள் இருக்கின்றன. ஒரு வருடத்துக்கு 1000 மில்லியன் கிலோ தேன் உற்பத்தி செய்கிறார்கள். உலகில் 100 பேருக்கு ஒரு தேன் கூடு இருக்கிறதாம். என்ன தான் சக்கரை வந்தாலும் இன்றும் சர்க்கரைக்குப் பதில் ‘லையன் ஹனி’ சாப்பிடுங்கள் என்று டிவியில் இன்றும் விளம்பரம் வந்துகொண்டு தான் இருக்கிறது.

தேனீக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்பவை என்று நமக்குத் தெரியும். கூட்டத்துக்கு ராணி தேனீ தான் அரசி, சில ஆண் தேனீக்கள் இனப்பெருக்கதிற்காக, பல ஆயிரம் தேனீக்கள் பணி செய்ய என்று இதன் அமைப்பு. எப்போதும் “உய்ய்ய்ய்ய்ய்” என்று சத்தம் போடும் இவை பீரோமோன்ஸ்(Pheromones) என்ற இராசாயனப் பொருளைக் கொண்டு தகவல்பரிமாற்றம் செய்துகொள்கிறது. திரவமாகத் தயாரிக்கப்பட்டு அவை திரவமாகவோ அல்லது காற்றில் ஆவியாகவோ கலக்க அது மற்ற தேனீக்களுக்கு தகவலாகப் போய்ச்சேருகிறது. நாம் செண்ட் அடித்துக்கொண்டால் மற்றவர்களுக்கு தெரிவது போல என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

“ஏம்பா அங்கே நிறைய பூக்கள் இருக்கு வாங்க அங்கே போகலாம்” முதல் “இப்பத்தான் அவனை ஒரு கொட்டு கொட்டினேன், அங்கே போகாதீங்க” அல்லது “வாங்க வடிவேலு மாதிரி ஒருத்தர் இருக்கிறார் தர்ம அடி கொடுக்கலாம்” போன்ற அறிவிப்பு வரை எல்லாத் தகவல்களையும் வெவ்வேறு சேர்மம்(compound) கொண்டு பரிமாறிக்கொள்கின்றன. தேனீக்களின் முன் இருக்கும் கொடுக்கு ஆண்டனா போல அந்தத் தகவலை பெற்றுக்கொள்ள உபயோகமாக இருக்கிறது. இந்த ரசாயனப் பொருள்களில் சிக்கலான வேதிப்பொருள் சேர்மங்கள்(complex compounds) இருக்கின்றன. உதாரணத்துக்கு, ‘அபாயம்’ என்று தெரிவிக்கும் செய்தியில் நாற்பதுக்கும் மேற்பட்ட வேதிப்பொருள் சேர்மங்கள் இருக்கின்றதாம். அந்த லிஸ்டை கொடுத்தால் எனக்கு “அபாயம்” எச்சரிக்கையை வந்துவிடும்.

தேன்கூட்டை உற்றுப் பார்த்தால் அதில் பல தேனீக்கள் டான்ஸ் ஆடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த டான்ஸும் ஒரு வகை தகவல் பரிமாற்ற உத்தி. “என்ன நீ இன்னும் சாப்பிடலையா?” இன்னிக்கு காலைல குப்புசாமி வீட்டுக்குப் பக்கத்திலதான் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டேன்” என்று வீட்டுக்குத் திரும்பிவரும் தேனீக்களூக்கு வாகிள் டான்ஸ்(Waggle Dance) மூலம் எங்கே உணவு இருக்கிறது என்று சொல்லுகிறது. எளிமையாக சொல்ல முடிகிறதா என்று பார்க்கிறேன்.

தேனீ வட்ட வடிவில் டான்ஸ் ஆடினால் உணவு பக்கத்தில் சுமார் 200 அடிக்குள் என்று அர்த்தம். உணவு ரொம்ப தூரத்தில் இருந்தால், தேனீ, தான் சாப்பிட்ட தேனை கொஞ்சம் சாம்பிளுக்கு மற்ற தேனீக்களுக்குக் கொடுத்து இந்த மாதிரி தேன் எங்கே கிடைக்கிறது என்று டான்ஸ் ஆடிக் காண்பிக்கிறதாம். அதைப் புரிந்துகொண்ட தேனீக்கள் உணவு இருக்கும் இடத்தைத் தேடி செல்கிறது. டான்ஸில் எப்படி தகவல் சொல்ல முடியும்?

வாகிள் டான்ஸில் முதலில் தேனீ நேர்க்கோட்டில் போகிறது, பிறகு திரும்பி வந்த இடத்துக்கே ஒரு லூப் அடிக்கிறது. திரும்ப நேர்க்கோட்டில் சென்று பிறகு அதே மாதிரி போய் அடுத்தப் பக்கம் லூப் அடிக்கிறது. பார்க்க எட்டு மாதிரி இருக்கும். லைசன்ஸ் வாங்கும்போது எட்டு போடுவோமே அது மாதிரி போட்டுக் காண்பிக்கிறது.

தாங்கள் இருக்கும் கூடு, சூரியன் இருக்கும் திசை, மற்றும் டான்ஸ் மூலம் போட்ட நேர்க்கோடு இதை வைத்துக்கொண்டு எந்தக் கோணத்தில் உணவு இருக்கிறது என்பதை மற்ற தேனீகளுக்குக் காண்பிக்கிறது.(இந்த யூட்யூப் வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கே விளங்கும்) ஒரு எட்டு போட எவ்வளவு முறை அடிவயிற்றை ஆட்டுகிறது, எட்டு போட எவ்வளவு நேரம் ஆகிறது போன்ற தகவல்களைக் கொண்டு மற்ற தேனீக்கள் உணவு எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை கணக்கு செய்யுமாம். தேனீகளின் இந்த டான்ஸை கண்டுபிடித்ததற்காக கார்ல் வோன் ஃபிரிஸ்ச் (Karl von Frisch) என்பவர் 1973 ஆம் ஆண்டு நோபல்பரிசு வாங்கினார். இந்தக் கண்டுபிடிப்பில் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை.

அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து ஆராய்ச்சியாளர்கள் தேனீக்கள் டான்ஸ் ஆடுவதில் ஆர்வத்தைக் காட்டிவருகிறார்கள். வென்னர்(Wenner) என்பவர், “கார்ல் வோன் ஃபிரிஸ்ச் டான்ஸ் பற்றிச் சொல்லுவது சரி அல்ல. தேனீக்கள் டான்ஸ் ஆடுவது உண்மை, ஆனால் அவை திரும்பி வரும் போது காலப் பின்னடைவு ( time lag ) இருக்கிறது. அதனால் டான்ஸ் ஆடி உணவு இருக்கும் இடத்தைச் சொல்லுகிறது என்பது எல்லாம் கிடையாது, அவை வாசனையை வைத்துத்தான் உணவைக் கண்டுபிடிக்கிறது,” என்கிறார். தேனீக்கள் டான்ஸ் மற்றும் வாசனை இரண்டும் உபயோகப்படுத்துகிறது என்று தோன்றுகிறது.

ஒரு வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் தேனீக்கள் உணவுக்குச் செல்வதை ரேடர் மூலம் ஆராய்ந்திருக்கிறார்கள். அதில், ‘டான்ஸ் ஆடிவிட்டு அவை உடனே உணவு இருக்கும் இடத்துக்கு செல்கின்றன’ என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படிப் போகும்போது காற்றின் போக்கிற்கு ஏற்றவாறு தங்கள் போகும் திசையைச் சரிசெய்துகொள்கிறது. அது மட்டும் இல்லை, போகும்போது நிலத்தில் உள்ள அடையாளங்களையும், சூரியனையும் பார்த்து திசையை முடிவு செய்கிறது. உணவு இருக்கும் இடத்துக்குச் சென்றபின் ஐந்து அல்லது ஆறு மீட்டர் சுற்றளவில் உணவு எங்கே என்று தேட ஆரம்பிக்கிறது. இருபது முதல் முப்பது முறை வட்டமடித்து உணவைக் கண்டுபிடிக்கிறது. நாம் ஒரு தெருவிற்குச் சென்று சுற்றிச் சுற்றி அட்ரஸ் கண்டுபிடிப்பது இல்லையா, அதே போலத்தான்.

இந்த ஆராய்ச்சிக்கு மிக மிகச் சின்னதான டிரான்ஸ்பாண்டரை உருவாக்கி தேனீக்கள் அவைகளை எடுத்துச் செல்ல வைத்து ரேடார் மூலம் ஆராய்ச்சியாளர்கள் அவைகளைக் கண்காணித்துள்ளார்கள். என்னதான் கண்டுபிடித்தாலும், இருட்டில் டான்ஸ் ஆடினால் எப்படி மற்ற தேனீக்களுக்கு அது புரிகிறது என்பது ஒரு பெரிய ஆச்சரியம்தான்!
[http://www.pnas.org/content/102/8/3040/F1.medium.gif]

இந்த டான்ஸ் மட்டும் அல்லாமல் தேனீக்கள் தங்கள் கூட்டுக்கு வரும் பாதையை பல விதங்களில் நினைவு வைத்துக்கொள்கின்றன. போன ஜென்மத்தில் தேனீக்கள் எல்லாம் கணக்கு வாத்தியார்களாக இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அட ஜோக் இல்லை, உண்மை.

இதற்கும் ஆராய்ச்சி செய்துள்ளார்கள். தேனீக்கள் நிலத்தில் நான்கு அடையாளங்களை நினைவு வைத்துக்கொள்கின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள். சமீபத்தில் தேனீக்களுக்கு எண்ணக் கூட தெரிகிறது என்றும் கண்டுபிடித்துள்ளார்கள். ஒரு இடத்தில் Y வடிவில் மூன்று புள்ளி, மற்றொரு இடத்தில் அதே Y வடிவில் நான்கு புள்ளியை வைத்து ஏதாவது ஒரு Yக்குப் பின்னால் உணவு வைத்துள்ளார்கள். முதலில் எந்த Yக்குப் பின்னால் உணவு இருக்கிறது என்று தேனீக்கள் கண்டுபிடிக்கின்றன. உதாரணத்துக்கு மூன்று புள்ளி உள்ள Yக்குப் பின்னால் உணவு என்று வைத்துக்கொள்ளுங்கள். தேனீக்கள் அவைகளை நோக்கியே போகின்றன. புள்ளிகளைக் கூட்டி, குறைத்து, ஸ்டார் வடிவில் புள்ளிகளைப் போட்டு, கலரை வித்தியாசப்படுத்தி தேனீக்களை ஏமாற்றப் பார்த்திருக்கிறார்கள். முடியவில்லையாம்.

தங்கள் கூடு, சூரியன் இருக்கும் திசை, கோணம் ஆகியவற்றை வைத்து தாங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கின்றன என்று பார்த்தோம். அதனால் வெளியே சென்ற அரை மணி நேரத்தில் வீட்டுக்குத் திரும்ப வேண்டும், இல்லை சூரியன் இருக்கும் திசை மாறிவிடும்!. தேனீக்கள் காற்று அதிகமாக இல்லாத போது உயரப் பறந்து செல்கின்றன. எவ்வளவு உயரப் பறந்தாலும், கோணங்களை மறப்பதில்லை. தீடீரென்று மேக மூட்டம், அதே சமயம் காற்று அதிகமாக வந்தால் தாழ்வாகப் பறந்து நிலத்தில் சில அடையாளங்களைக் கொண்டு, வந்த வழியைக் கண்டுபிடிக்கிறது. நிலத்தில் உள்ள வடிவங்கள், நிறம், வாசனை, சத்தம் எல்லாவற்றையும் அவற்றால் கண்டுபிடிக்க முடியுமாம்.

இந்தத் தேனீக்களை தற்போது போர்களில் உபயோகப்படுத்த ஆராய்ச்சி செய்கிறார்களாம். விஞ்ஞான கதைகளில் தான் இந்த மாதிரி கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இன்னும் சில வருடங்களில் இது உண்மையாக நடக்கக்கூடும் சாத்தியக்கூறுகள் இருக்கிறது. அமெரிக்க இராணுவ ஆராய்ச்சியாளர்கள் லார்வா(larva) புழுக்களாக இருக்கும் போதே சின்ன சின்ன வயர்களை அதன் உள்ளே செலுத்துகிறார்களாம். பிறகு அந்த வயர்களுடன் வண்டோ அல்லது வேறு ஏதாவது பூச்சியோக வளர்கிறது. வளர்ந்த பின் அதனுடைய தசை, மூளை மற்ற பாகங்கள் எல்லாம் வயர்களுடன் கூடிய சர்க்கியூட்!.

வண்டுகள் மற்றும் பூச்சிகள் அனிச்சைச் செயல் (reflex) மூலம் தான் இயங்குகிறது. இது எல்லாம் பூச்சியியல் வல்லுநர்களுக்கு(entomologists) அத்துப்படி. இந்தப் பூச்சிகளை எப்படி இயக்கலாம் என்று அவர்களுக்கு தெரியும். உதாரணத்துக்கு கழுத்துப் பகுதியில் சின்னதாகத் தூண்டி விட்டால் வண்டு வலது பக்கமோ, இடது பக்கமோ ஒரு ரவுண்ட் அடிக்கும். சின்னதாக ஒரு ரேடியோ ரிசீவரை வண்டு பின்புறம் பதிய வைத்தால் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வண்டை வட்டமாகப் போகவைக்க முடியும்.

சில வண்டுகள் பறக்கும்முன் தங்களைத் தாங்களே சூடேற்றிக்கொள்ள சிறகுகளை ஐந்து நிமிடம் அடித்துக்கொள்ளுமாம். ஆராய்ச்சியாளர்கள் ஐந்து நிமிடம் காத்திருக்க முடியாமல், சின்ன ஹீட்டரை வண்டுக்குள் பதிய வைத்துள்ளார்கள். சீக்கிரம் டேக்காப் செய்ய!.

சரி வண்டுக்குள் இந்த மாதிரி எல்லாம் வைத்தால் வெயிட் அதிகமாகி அவை பறக்க முடியுமா என்று நினைப்பவர்களுக்கு– அவைகளைத் தூக்கி செல்ல ஹீலியம் பலூன்கள் வைத்துள்ளர்களாம். இன்னும் கொஞ்ச நாளில் சென்சர்கள் வைத்து பறக்கவிடத் திட்டமிட்டுள்ளார்களாம். இனிமேல் வீட்டுகுள் வண்டு வந்தால் டிரஸ் பண்ணிக்கொண்டு துரத்த வேண்டும். யாருக்கு தெரியும் அதன் மூக்கில் சின்ன கேமரா இருந்தாலும் இருக்கு.

தே மருவு பொழில் இடத்து மலர்ந்த போதைத்
தேன்-அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும்,
பூ மருவி இனிது அமர்ந்து, பொறியில் ஆர்ந்த
அறு கால் சிறு வண்டே! தொழுதேன் உன்னை,
ஆ மருவி நிரை மேய்த்த அமரர்-கோமான்
அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று,
நீ மருவி, அஞ்சாதே நின்று ஓர் மாது
நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே.

[திருநெடுந்தாண்டகம், 2077, 26 ]

மேலே உள்ளது பதம் பிரித்த பாடல். இரண்டு முறை படித்தால் அர்த்தம் புரியும்.

சோலை மலர்கள் நிறைந்த இடத்தில் தேனைப் உண்டு பெண் வண்டுடன் மலர்களில் இனிதாகப் புணர்ந்து மகரந்தத்துகள்கள் மிகுதியாகப் படியப் பெற்ற, ஆறு கால்களையுடைய சிறிய வண்டே, உன்னை வணங்குகிறேன். மாடுகளை விரும்பி மேய்த்தவன்; தேவர்களுக்கு தலைவன்; அழகிய திருவழுந்தூரில் நிற்பவனிடம் பயப்படாமல் சென்று “ஒரு பெண் உன்மேல் ஆசையாக இருக்கிறாள்” என்று சொல் என்று திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகத்தில் வண்டை பெருமாளிடம் தூது அனுப்புகிறார், நாம் அவைகளின் மீது ராக்கெட் வைத்து அனுப்புகிறோம்.

(ஓவியங்கள்: தேசிகன்)