யுவனின் பகடையாட்டம் – ஒரு பார்வை

குண்டூசி தேடாத யானை உலகமயமாகிறது

நடக்கிறதெல்லாம் தர்க்கம் மீறித்தான் நடக்கிறது. அதை அறிய குண்டூசி தேடாத யானைகளாக சில கதாபாத்திரங்கள், அதை மெய்ப்பிக்க, உயிர்ப்பிக்க அந்த தேடலின் வழியே மானுட வளர்ச்சி முழுவதும் அப்படித்தான் நடந்திருக்கிறது என்பதை சொல்ல, கதை சொல்லிக்கு உதவியாய் சில தளங்கள். வாழ்க்கையின், பிரபஞ்சத்தின் பகடையாட்டம் குறித்த வினாவை எழுப்பிவிட்டு போகிற யுவனின் பகடையாட்டம்.

பகடையாட்டம் – முந்தைய நாவலான குள்ளச்சித்தன் சரித்தரத்தின் இந்திய எல்லையை விட்டு அகன்று உலகமயமாகி அதே கேள்விகளோடு, தர்க்கங்களோடு எல்லை கோடுகளற்ற, தேசமற்ற மானுட எல்லைகளின் சிந்தனையால். விரிகிறது யுவனின் எழுத்தின் வானம்.

பெரும்பாலானவர்களின் வாழ்க்கை இத்தனை சுவாரசியமாக இல்லை, அதில் பெரும்பாலும் கொந்தளிப்புகள் இல்லை, தர்க்கங்கள் இல்லை, அதீத தவிப்புகள் இல்லை எல்லாமே ஒரளவு கணிப்புக்குள்பட்ட வாழ்க்கைதானே, என்றாலும் நாவலின் கதை சொல்லித்தனம், புனைவின் நயம் அத்தகைய கேள்விகளை அநாயாசமாய் ஓதுக்கித் தள்ளிவிடுகிறது.

மேற்கத்திய வாசம்

அகதிவாழ்க்கை கொண்ட வெய்ஸ் முல்லர். வன்மமும், தந்திரமும் கொண்ட ஜெர்மனிய மேஜர். –, ருஸ்யாவிலிருந்து தப்பிய ஓடி மறைக்கவேண்டிய கடந்த காலத்தோடு திரிகிற நபர். உலகைச் சுற்றியவன். இந்த நூற்றாண்டில் அதிதேவதை துப்பாக்கி குண்டுதானென்று என்று நம்பியவன்.

லூம்பா ஆப்பரிக்கக் கறுப்பர், வெகுளி, வாஞ்சை, திறந்த புத்தகமாய், இயற்கையை படிக்கிற, பறவைகளை காதலிக்கிற ஒரு நாடோடி. மேலே சொன்ன கதாபாத்திரத்தின் நேர் எதிர்.

வாழ்க்கையின் பகடையாட்டம் இருவரையும் அகதிகளாய் இணைக்கிறது. ஸோமிட்சியா என்கிற ஒரு மன்னராட்சி (கற்பனை) நிலத்திற்குள் செல்கிறார்கள். ஸோமிட்சியா மானுட வளர்ச்சியின் ஒரு குறுக்குவெட்டு தோற்றம். இப்படித்தான் மன்னராட்சியிலிருந்து, மானுடச் சந்தை வளர்ந்திருக்கலாம் என்று எளிதாய் எண்ண வைக்கும் எளிமையான சூத்திரங்கள்.

ஸோமாட்சு : (கிழக்கத்திய கிரந்த பூமி)

நாலுவயதுப் புதுமன்னரைத் தேடும் படலம், எந்த மடத்திற்கும் புதிய அதிபரைத் தேடும் படலத்திற்கு ஓப்பான அதிகற்பனைத் (fantasy) தன்மையோடு படைக்கப்பட்டிருக்கிறது.

அதைச் செய்யும் ஈனோஸ்- மதகுரு. மண்ணாசை, பெண்ணாசை கொண்ட ஒரு மதகுரு. நிழலாட்சி தொடர விரும்பும் சனாதனி, அவருக்கு விருப்பமான, மாற்றத்திற்குத் தலையசைக்கும், தலையிழக்கும் – ஒற்றர்கள் – இல்சுங், வாங்சுங்கி.

மேற்கத்தியப் படிப்பால், சிந்தனையால் மக்களாட்சி அல்லது அதன் பெயரில் பிரபுக்களாட்சி கொண்டு வர முயலும் சில அறிவு ஜீவிகள், அவர்களின் பகடையாட்ட முரண்கள், களமாய் ஸோமிட்சு, இப்படியாய் ஒரு மாற்றத்தின் நுனியின் தவிக்கும் நிலத்தையும், மாந்தர்களையும் தொடரும் கதை.

அங்கே வெமுவும். லூவும் ஏதோ பதவியெடுத்துக்கொள்கிறார்கள். லூ இறந்து போகிறான். எல்லோரும் சீன கம்யூனிசத்திற்குப் பயந்து இந்திய எல்லை தாண்டுகிறார்கள்.

கிழட்டுக் குரு, திபெத்திய துறவி சிறுவன், ராணுவ அதிகாரி – அகதித் தன்மை. வாழ்க்கையில் எல்லோருக்கும் எங்கோ ஒரு அகதித்தன்மை அமையத்தான் செய்கிறது. எதிலிருந்தாவது தப்பித்து ஓடிவிடவேண்டுமென்று.

போர், மன்னராட்சியிலிருந்து மக்களாட்சியில் நடக்கும் மாறுதல்கள், அதன் துளியாய் வரும் தனி மனித அனுபவங்கள் கொண்ட வரலாற்றுக் கதை போல தோற்றமளிக்கலாம்.

ஆசையை அறவே அழிக்கச் சொன்ன புத்தரின் வழித்தோன்றலாக தன்னை வரித்துக்கொண்ட துறவியை அரசியல் தலைமை தொடர்பான காரணங்கள் தேசம் விட்டு துரத்துவதில் இருந்த ஆழ்ந்த முரண் கதையின் ஒரு முக்கிய சரடு. ஒரு நிகழ்கால நிகழ்வை படைப்பிலக்கியம் மூலமாக தர்க்கப்படுத்திப் பார்க்கும் முயற்சி.

தத்துவமும், சொல்முறையும் கொஞ்சம் மாறினாலும் கிட்டத்தட்ட சாண்டில்யன் வாடையடிக்க கூடிய அபாயத்தோடு, கதை சொல்லியின் பகீரதப் பிரயத்தனத்தாலும், கிரந்த ஆசிர்வாதத்தாலும், தத்துவ ஈரத்தாலும் தலை தப்பி உண்மைகள் போலவே கதைகள், கதைகளைப் போலவே உண்மைகள் என்கிற மிக அருமையான தளத்தில் பயணிக்கிறது. சாதாரணமாய் நேர்கோட்டில் சொல்லப்பட்டிருக்கவேண்டிய கதை புனைவின்பாற்பாட்ட காதலால் அருவிபோல எழுந்து, அமிழ்ந்து காட்டும் மாயாஜாலத்திற்கு சிற்றிதழ் வட்டத்தில் ஏதாவது பெயரிருக்கலாம்.

ஆனாலும் ஒரு வாசகனை அது அதிகமாய் துன்புறுத்துவதில்லை என்பதே உண்மை.

இந்திய எல்லைக்குள்

மேஜர் கிருஷ்ணன் – இந்திய ராணுவ அதிகாரி, ஓடிவரும் அகதிகளோடு உறவாடுகிறார். அவர் பார்வையிலும் தத்துவங்கள் சொல்லப்படுகின்றன.

மேஜர் கிருஷ்ணனிடம் அவர் நண்பன் நானாவதி சொல்வது :

உன்னுடைய சகோதரிகளெல்லாம் தெற்கில் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள் கிருஷ். அதிர்ஷ்டக்காரர்கள் நீங்களெல்லாம். கிரேக்கர்கள், பாரசீகர்கள், மொகலாயர்கள் என்று யார் படையெடுத்து வந்தபோதும் முதல் களப்பலியானது வடக்கில் உள்ளவர்கள்தான் உச்சமாக , சகோதர சண்டைக்குப் பலியானதும் நாங்கள் தாம்.

நாவல் மீது எழுப்படும் கேள்விகள்

ரத்தமும், சதையுமான சமூக கதைகளுக்கு மட்டுமே இலக்கிய உலகத்தில் இடம் இருக்கவேண்டும், அறிவியலற்ற பிரபஞ்ச விதிகளை ஒரு அநுமானத்தில் கூட அணுகமுடியாது, நாஸாவிலிருந்து விடைகள் தெரிந்தபின்தான் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற அதீதப் பகுத்தறிவில் மூழ்கியிருந்தாலோ யுவனின் படைப்புலகத்தை நீங்கள் படிக்காமலே தவிர்க்க நேரலாம்.

ஏராளமான வினாக்கள் நம்மிடம் உண்டு. நாவலாசிரியரே, சில வினாக்களை எழுப்பி அதற்கான விடைகளையும் கொடுத்திருக்கிறார். அது அதற்கு அந்தாண்ட, இந்தாண்ட கேள்விகளை எழுப்புவதைத் தடுப்பதுமில்லாமல், இதற்குமேல் எதுவும் கேட்காதே என்று சொல்லும் தொனியையும் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.
(திறமையான வாசக வன்முறை)

கதை, அப்படின்னா ?

”இனிமேல் சொல்ல எந்த கதையிருக்கிறது, எல்லாம்தான் சொல்லியாகிவிட்டதே “ என்கிற வார்த்தை கவனமாக மிகப்பெரிய கதைகளை என்னிடம் எதிர்பார்க்காதே, இதில் கதை எங்கே என்று விமர்சன ஓலமிடாதே என்று சொல்லாமல் சொல்லும் வரி, கதைக் குப்பியின் மீது ஓட்டப்பட்ட அடிக்குறிப்பு சீட்டு.

நுண்ணிய அளவில் தனிமனிதர்களுக்கிடையிலும், மகத்தான அளவில் அமைப்புக்கும் தனிமனிதனுக்கும் இடையிலும் நிலவும் உறவு நிலைகளின் பின்புலமாக செயல்படும் உள அரசியல் – என்ற புள்ளிகளை இணைத்து வரையப்படும் கதைப்புலம். இவ்வாறாய் கதை நுண்ணியதாய், பூரணமாய்ப் பதிந்திருக்கிறது.

கதை மீதின்றி அது சொல்லப்படும் விதத்திற்குதான் அதீத முக்கியவத்துவம் நாவலில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ’ புனைகதையின் உயிர் அதன் சாரத்திலில்லை. உருவத்தில்தான் இருக்கிறது என்ற நம்பிக்கை. சொல்லும் முறையில் அதன் உயிர் இருக்கிறது ‘ என்ற பதில். இனிமேல் சொல்ல எந்த கதையிருக்கிறது, எல்லாம்தான் சொல்லியாகிவிட்டதே.. என்கிற தோனி.
(அப்படியா..) போன்றவற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

படிக்க கிடைத்த ஆங்கில புத்தகத்திலிருந்து தடுக்கி விழுந்து, மண் ஒற்றி எழுகின்றனவா இவரது கதைகள் என்கிற தோற்றத்தை ஆரம்பநிலை வாசகருக்கு அளிக்கலாம். அதில் தவறொன்றுமில்லை. நிறைய ஆங்கில புத்தகங்க்ள் படிக்க வாழ்த்துவதை விட வேறு என்ன சொல்ல.

நாஜிக்களின் மீதான எழுத்தாளர்களின் காதல் சமூக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது.

புனைவுலகின் உச்சமாய் கேள்விகள், காலமும் பிரபஞ்சம் :

புனைவுலகின் உச்சமாய் அமைகிறது ஸோமிட்ஸிய பூர்வ கிரந்தங்கள். கிட்டதட்ட வேதமொழிகள். காலத்தை, பிரபஞ்சத்தை, மானுடத்தை, தத்துவத்தை, தர்க்கத்தை, தற்காலத் தேவையை எழுத, சுருங்கிய கவிதையாய், மலர்ந்த மொட்டாய் மொழி மலர்கிறது. தத்துவ வாசனையோடு.

[’டேய், கேஆர்விஜயா சிவாஜி படத்தில அழுகை மாதிரி தத்துவம் கொட்டுதுடே.  இந்தபாரு தத்துவத் துளி ஏன் பேண்டு மேலேல்லாம் ‘ என்று கோபு மாமா கேலி செய்தாலும் எனக்குத் தத்துவங்கள், அநுமானங்கள், அதன் மீதான தர்க்கங்கள் பிடிக்கும். அதனாலே கிரந்தங்களை மிகவும் ரசித்தேன். அதெல்லாம் பிடிக்காத கோபுமாமா, அந்த அத்தியாயங்களைத் தாண்டி கொஞ்ச நாள் கழித்து சீரியல் பார்த்தாலும் புரியும் என்பதான மனநோக்கு கொண்டு பக்கங்களைத் தள்ளினார்.]

காலம்

காலத்தைப் பற்றி தத்துவவாதிகள், அறிவியல் அறிஞர்கள் இரண்டு பேர் பேசினாலுமே புரியாது. ஆனால் புரிவது போன்ற பாவனைகளை ஏற்படுத்தும் சில வரிகள் புனைவுலகின் உச்சம்.

இருப்பது மாத்திரமே. நகர்வது அல்ல.

இடவலமாகக் கால்சுற்று சுற்று. நீளமும் அகலமும் இரு வேறு அலகுகள் அல்ல என்று உணர்வாய். நீளமும், அகலமே. அகலமும் நீளமே. கிளையில் பூத்த மலர். முள்ளம்பன்றியின் பார்வைக்கு உயரத்திலிருக்கிறது. ஆகாய வீதியில் பறக்கும் கழுகின் பார்வைக்கு ஆழத்தில் இருக்கிறது. நத்தையின் பார்வையின் உயரமும் நீளமே.

இனிமேல் எனும் மூன்று கருக்களையும் தன்னுள் கொண்ட தற்சமயம் என்னும் விநோத முட்டைக்குள் பிரபஞ்ச உயிர்த்தாது ஜீவிக்கிறது.

துங் லோவின் நீர்ப்பரப்புக்கு வெகு உயரத்தில் பறக்கும் மீன்கொத்தியின் பார்வைக்கு. வெளிச்சத்தில் பளபள்க்கும் மீன் தற்போதில் இருக்கிறது. கொத்தித் தூக்கிச் செல்வதற்கு பல நூறு கஜத் தொலைவில் இனிமேலில் இருக்கிறது.

காலச்சக்கரம் பற்றிய படிம தாந்த்ரீகங்கள் திபெத்திய பெளத்த மரபின் முக்கியமான ஒன்று. மண் மீது வரையப்படும் காலச்சக்கரம் விஞ்ஞானம் சொல்லும் பிளாக் ஹோல் தியரி போன்றதல்ல. மனதிற்கு எளிமைப் படுத்தப்பட்ட ஓன்பது அடுக்குகள் கொண்ட ஒரு பெருவெளி. இந்திய யோக, தியான மரபும் சக்தி களம் என்று பொருள்பட அதை குறிப்பிடுகிறது.

பெளத்த துறவிகள் காலச்சக்கரத்தை விழிப்புக் கொடுத்தவுடன் கலைத்து அதன் மணலை உலக நதிகளில் கரைப்பார்கள். வாழ்க்கை அநித்தியமான ஒன்று என்ற படிமமாக இதைப் பார்க்கலாம். ஜென், புத்த பிக்குகளின் மடவாழ்க்கை, யதார்த்த வாழ்க்கையோடு மோதும் தத்துவ விசாரணைகள் மற்றும் காமத்துடனான அவர்களின் போராட்டங்கள் என இதுவரை பேசப்படாத துறவு நிலையை தெற்காசியப் படங்கள் காட்டுகின்றன.
இந்து மதத்தின் அறிவு முரணியக்கதால் விளைந்த பெளத்தம் ஏன் கலை இலக்கிய உலகில் பிரதானப்படுத்தவில்லை என்பது ஒரு நுட்பமான கேள்விதான்.

மிகப்பெரிய ஆன்மீகத்தின் விதைகள் இந்தியாவிலிருக்கிறது மற்றும் அதன் விளைநிலம் இமய மலை சார்ந்த திபெத்திய பூமி என்கிற பழைய பெருங்காய டப்பா பெருமையை மட்டுமே சொல்லிக்கொண்ட நமது கலைப்பரப்பில் தத்துவம் சார்ந்த படைப்புகளுக்கு பெரும் வறட்சியே நிலவி வந்திருக்கிறது – ஓரிரு படைப்புகள் தவிர்த்து. அத்தகைய விசயங்களை இலக்கிய பரப்பில் கையாளுதல் படைப்பாளிக்கு மிக சவாலான ஒன்றுதான்.

பிரபஞ்சம்

வார்த்தைகளால் சொல்லி சொல்லி மாய்ந்து போய்விட்ட ஒரு விடயத்தை சொல்ல முயன்று தோற்று போகிற துயரம் ஒரு எழுத்தாளனுக்குச் சுகமானதுதான். இயற்கையிடமும், பிரபஞ்சத்திடமும் கலை உணர முயன்று தோற்று போய்க்கொண்டேயிருக்க பிரபஞ்சம் வார்த்தைகளின்றி விரிந்து கொண்டேயிருக்கிறது. இவ்வளவுதான் சொல்லிவிட்டோம் என்று அவன் சாயும்போது அது விரிந்து அதன் புதுப்பகுதிகளை காட்டிக்கொண்டே நீள்கிறது.

எப்படிப் பிரபஞ்சம் வந்தது என்பதை அறிவியலுக்கு இணையாக மதங்களும் அறிய முனைகின்றன அநுமானங்கள், உள்ளூணர்வின் மூலம். திபெத்திய பெளத்த பின்னணி கொண்ட வாழ்க்கையின் தளங்கள் பற்றி விவரிக்கும் கீழ்க்கண்ட பகுதி உண்மையில் பிடித்துப் படிப்பவருக்கு மெய் சிலிர்க்கவைக்கும். ஏற்கனவே எல்லா தரிசனங்களிலிருக்கும் ஒன்பது நிலையின் ஒரு நீட்சியாக இது இருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது. பெளத்தம் பற்றிய லாமாவின் எழுத்துக்களின் சரியான சுருக்கமான கதையுடன் ஒன்றிய புனைவுலகுப்பதிவு.

’பூவுலகம் என்பதும் அதைச்சார்ந்த உயிர் வாழ்க்கையும் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்த ஒன்பது தளங்களைக் கொண்டது என்றும் ஏழாவது தளத்துக்கு அப்பால், இரவு பகல் என்னும் இரட்டைத் தன்மையற்ற நிரந்தர காலவெளி ஒன்று இருப்பதையும் கண்டு சொன்னவர் இரண்டாவது குருவே “

’இவற்றில் முதல் ஐந்து தளங்கள், எல்லாச் சாமான்ய உயிர்களுக்கும் உள்ளது. அபூத வெளி வாழ்வு, குழந்தைமை, வாலிபம், மூப்பு, மீண்டும் அபூதவெளி எனச் சக்கரமாக சுழல்பவை இந்த ஐந்து தளங்களும் முதலாவது ஐந்தாவது ஓன்று போலவே தோன்றினாலும் அவையிரண்டுக்குமிடையில் உள்ள வித்தியாசம் மகத்தானது. ’

’ஆறாவது தளத்தில், பார்வை ஊடுருவும் சக்தி கொண்டதாகிறது. காலத்தையும், இடத்தையும் முன்னும் பின்னும் நகர்த்திப் பார்வை கொள்ள இயலும் இந்தத் தளத்தை எட்டுபவர்களால், யாருமே இந்த தளத்தை அடைய முடியும். ‘

’ஏழாவது தளம், உடல் ஆயுளை சராசரி விளிம்புகளுக்கு அப்பால் உந்தி தள்ளுவது. ( இதற்காக உயிர்பலி தேவை) எட்டாவது தளம் ( அண்ட பேரண்டத்தை ஒரு நொடிப்பொழுதாக சுருக்கி தர வல்லது ) ஒன்பதாவது தளம் தேவ ரகசியம்.’

இத்தகைய தளம் ஒரு எழுத்தாளனுக்கு மிகப்பெரிய சவால். முழுக்க கற்பனை தோய்ந்த அதே நேரம் லாஜிக்கலாய் வளர வேண்டிய சிந்தனை அடுக்குகள், மிக நன்றாகவே வந்திருப்பதாகப் பட்டது. என்னால் ரசிக்க முடிந்தது. ஓவ்வொரு குருவினாலும் தேவைக்கு ஏற்ப எழுதப்பட்ட மத எழுத்துக்கள் ஒரு பொதுத்தன்மை கொண்ட சித்திரத்தை எழுப்புகிறது. எல்லா மதங்களின் உயரமும், வீழ்ச்சியும் இப்படித்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். உண்மைபோல் பொய்கள் சொல்லும் கிரந்த எழுத்து.

அடிக்கோடிட்டு நான் ரசித்த பகுதிகள்

பறிக்கப்படும்போதுதான், சுத்ந்திரம் என்பது வெறும் சொல் அல்ல, முழுமையான ஒரு அந்தரங்க உணர்வு என்பது தெரியவருகிறது.

துறவியின் உடல் தானாகத் திறந்து கொள்ளும் மனப்பிம்பம். அன்னை பிம்பம் தாண்டி இன்னொரு பிம்பம்.

சரீரம் பருவுலகத்துடன் கொள்ளும் இன்னொரு உடன்பாடுதான் மரணம் என்கிற அளவுக்குச் சுருங்கிவிடுகிறது. தனிமையின் கைக்குழிகளில் சிந்தனை நிரம்புகிறது.

தியான மெளனத்தில் சலனமுறும் சுவாசமே உயிர்ப்புலம் என்றறிக.

விசை கொண்டு விரைந்த காலம், சற்றே ஓய்ந்ததுபோல தோன்றிய தருணம் அது.

கதாபாத்திர முரண்கள் ( வெக்ஸ் முல்லரும், ஜீலியஸ் லூம்பாவும்)

நான் ரசித்த சில வரிகள், இடங்கள் வெக்ஸ் முல்லரையும், ஜீலியஸ் லூம்பாவையும் தெளிவாய் காட்டுகின்றன். அந்தக் கேள்விகள், வார்த்தைகள் போர்க்கான கேள்விகளைத் தொலைத்த எந்த சமுதாயத்திடமும் கேட்டுக்கொண்டிருக்கலாம். ஈரானோ, இலங்கையோ.. கேள்விகள் அதே தான், பெயர்கள் மட்டும்தான் வேறுபடும். தோட்டாக்களுக்கும், போர்களுக்கும் பெயர் ஒரு பொருட்டல்ல.

பாதர் கர்த்தர் ஏன் கறுப்பராக பிறக்கவில்லை ( ஜுலியஸ் லூம்பா) [ ஏன் விஷ்ணு எல்லா அவதாரங்களையும் பாரத பூமியிலே எடுத்திருக்க வேண்டும் என்பதற்கு இணையான கேள்வி)

சக மனிதர்களின், அதுவும் நுண்ணுணர்வு கொண்டவன் தன் சக மனிதன் என்றால் போதும் . புரதம் மிகுந்த சாப்பாடு அது. மற்ற தாவரம், ஜீவராசிகளுக்கு அது இல்லை. ( வெய்ஸ் முல்லர்)

அடேயப்பா, தப்பியோடி இவ்வளவு தூரம் வந்துமா பயம் தணியவில்லை. (லூ)

சுடாமல் நிதானித்து லூ யோசிக்கிறான்.’ தூக்கத்தில் ஒருவன் ஐரோப்பியனாகவோ, ஆப்பரிக்கணாகவோ இருப்பானா என்ன? ‘

ருஸ்யாவில் இருக்கும்போது பலதடவை எனக்குத் தோன்றும் அந்த தேசத்தின் அரசியல் பாதையைத் தீர்மானித்த சிந்தாந்தததை கருத்தரித்தவர் என் தந்தை நாட்டை சேர்ந்தவர். ஆனால் எங்கள் நாட்டின் அரசியலுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. எத்தனை அழகான முரண் ? (வெமு)

நிச்சயமின்மையும், தர்க்கமுறிவும்தான் வாழ்வின் செய்திகள் என்று தெரியவருகிறது. (வெமு)

ஏன் கற்பனையான நாட்டை எடுத்தீர்கள் ?

ஒரு இலங்கையோ, சங்கரமடமோ கொண்டு எழுத ஏன் முன்வருவதில்லை வாசகருக்கு பக்கதிலிருக்கும் கதை களமாக அமைந்திருக்குமே, இப்போதய மாற்றங்களை நோக்கிய படைப்பாளியின் சமூகக் கேள்வியாக அவை அமைந்திருக்குமே என்ற் கேள்விக்கு இடமில்லை. அதற்கு பின்னுரையில் கவனமாய் சமூகவியல் கேள்விகளைக் கொண்டு என்னை அகதியாக்காதீர்கள் என்கிற பதில், தப்பித்தல் மட்டுமல்ல என்று ஆழப்படிப்பில் புரியும்.

சமூகவியல் கேள்விகள் எழுத்தாளனின் சிலுவையா ?

புகழ்பெற்ற எழுத்தாளர். ஒரு மடமும் அது சொன்ன விழுமியங்களும் பிரச்சனையிலிருந்த போது எல்லா எழுத்தாளர்களும் தங்களது கருத்தை தெரிவித்தேயாக வேண்டும் என்பது மாதிரியான கருத்தை வெளியிட்டார். அப்படி வெளிப்படையாக தங்களது கருத்தைச் சொல்லாத பொதுஜன எழுத்தாளர்களின் மீதான சமூக அழுத்தத்தை அவர் அதிகரித்தார். சகமானுட கேள்விகளை எழுப்பிக்கொண்டே எழுந்துவரும் இலக்கியம் பற்றியதான சர்ச்சையாக அது மாறாமல் வேறு விதமாய்ப் போனது துரதிருஷ்டம்.

இப்போதைய ஈழப்பிரச்சனையிலும் எழுத்தாளரின் மீதான அதே கேள்விகள் தொடர்கின்றன. அவன் என்ன 24/7 செய்திச் சேனலா, அந்த நிகழ்வுகளை செரித்து உடனே துப்பும் பெருங்கூடமாக மாற அவனை எது நிர்ப்பந்திக்கிறது.

எழுத்தாளன் சம உலகத்தின் நிகழ்வுகளுக்கு தனது கருத்துக்களை தெரிவித்தேயாக வேண்டும். எல்லா சக கலைஞர்கள் போலவும் ஏன் கொஞ்சம் அதிகமாகவும் ஒரு எழுத்தாளனுக்கு சமூகவியல் அழுத்தங்கள் அதிகம். ஏன் இந்தப்பிரச்சனையை எழுதவில்லை, ஏன் இப்படி எழுதினாய். அவன் ஒரு அரசியல் அமைப்பின் அப்போதைய நிறுவனங்களுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ நிற்கக்கூடிய அகதியாகிறான்.

அவன் எழுத்துலகில் அதற்கு இடமில்லையென்றாலும், ஒரு அரசியல்வாதிபோல அவனிடம் அறிக்கையை எதிர்பார்க்கிறது சமூகம். இல்லையெனில் சமூக அக்கறையற்ற எழுத்தாளன், மக்களுக்கான கலைஞன் இல்லை என அவன் மீது கல்வீசப்படும். கண்ணாடி எழுத்தாளார்கள் நிறைய நொறுங்கிவிடுகிறார்கள். சிலர் மெளனம் காத்து தப்பித்துவிடுகிறார்கள். சிலர் வாய்ச்சேவை செய்து இழவுக்கணத்தை தாண்டிவிடுகிறார்கள்.

தற்போதைய சமூகத்திற்குத் தேவைப்படாத எதுவுமே தேவையற்றது, சமூகத்தின் பிரதிபலன்களை உறிஞ்சி வாழ்ந்து எந்த பயன்பாடும் திருப்பிக்கொடாது போகும் எல்லாமே தேவையற்றவை, அளவிடமுடியாத பயன்களை உற்பத்தி செய்யும் எந்த தத்துவமும், செயலும் அழிக்கப்பட தகுதியுள்ளவையே, என்கிற மிகப்பெரிய, அறிவுஜீவி-கருத்து வன்முறை இலக்கியத்தின், எழுத்தாளனின், கலைஞனின் மீது தொடுக்கிற ஒருபக்க போர்தான் அது.

அதன் விளைவாய், எழுத்தாளர்களே தங்களுக்கு தாங்களே சுகமாய் சுமக்கும் சிலுவைகளா அல்லது தத்துவ அரசியல் அவர்களுக்கு போட்டுவிட்ட முள்கீரிடமா ? ஒரு எழுத்தாளனே அவனது சூழலால் சமூகவியல் பற்றி பேசமுற்படுவதில் எந்த தப்புமில்லை. ஆனால் அவன் நிர்ப்பந்திக்கப் படும்போது
பயணப்படாத பாதைகளைக் கண்டறிய வேண்டியவன், தெருமுனைக் கழைக்கூத்தாடியாகிறான். நிர்ப்பந்தங்களற்ற, கட்டளைகற்ற, புதிதாய் தேடி விளையும் வெளி, அவனை ஓரளவு பாதுகாக்கும் சமூக அமைப்பு, கலைஞன் விளைவதற்கான நல்ல நிலம். அப்படியில்லாச் சூழல் கண்ணுக்குத் தெரியாத நிறைய சிலுவைகளை எழுத்தாளன் மீது சுமத்துகிறது. இல்லையெனின் அவனுக்கு தெரியாமல் அவனே சுமக்கிறான்.

அப்படிப்பட்ட சிலுவைகளற்று ஆயினும் பாதுகாப்பாய் புனைவுலகின் தற்காப்பு அரண்களோடு கருத்துக்களத்தில் யுவனின் யுத்தத்தை நுட்பமான வாசகர்கள் புரிந்துகொள்ளமுடியும். யுவனின் இரு நாவல்களிலும் குண்டூசி தேடாத, தேடத் தேவையற்ற, புறவுலகம் தாண்டிய உலகத்தை அக உலகத்திலிருந்து தேடவிளைகிற யானையாக எழுத்து எழுந்து நடக்கிறது. சிறு விசயங்களில் கால்பதித்து பெருவிசயங்களுக்கு எழுகிற கதை சொல்லி பார்வைக்கு எழுகிறான்.

*
எத்தனையோ களமும், கதையுமிருக்க நிறைய கால, பொருட் செலவு செய்து ஏன் ஒரு நாவலாசிரியன் ஒரு விதையை தேர்ந்தெடுத்து மரமாக்குகிறான் என்பது பிரபஞ்ச ரகசியத்திற்கு இணையான கேள்வி. இதற்கான பதிலை அவனே சொன்னாலும், அவன் சார்ந்த வாசக, விமர்சகர்கள் சொன்னாலும் அது யானையைத் தடவும் குருடர்களின் விளக்கம்தான். கதைசொல்லி சொல்வது போல அதுவும் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதுதான் போல.

ஆனால் அவரின் படைப்புலகத்திற்கு அடிநாதம் ஏற்கனவே ந.பிச்சமூர்த்தி மற்றும் மெளனியால் எழுதப்பட்ட ஒரு படைப்புலகத்தின் நீட்சியாகத்தானிருக்க வேண்டும் என்று நினைக்கிறது எனது சாதாரண வாசக மனம். அது பிரமையாகவோ, எதையும் எப்படியோ பழையதோடு இணைத்துப் பெருமூச்சுவிடும் வழக்கமாகக் கூட இருக்கலாம்.

யுவனின் புத்தகத்தையும் எனது விமர்சனத்தையும் கேட்ட கோபு மாமா, இப்போது மெளனியின் புத்தகங்களை கேலி செய்தபடி படித்துக்கொண்டிருக்கிறார்.

*