மௌல்மீன், பர்மாவின் தென்பகுதியில் உள்ள ஒரு ஊர். அந்த ஊரில் நான் வசித்த போது, அங்குள்ள பெரும்பான்மையான ஜனங்களின் வெறுப்புக்கு ஆளானேன். அத்தனை பேரின் காழ்ப்பும் என் மீது திரும்பும் அளவிற்கு நான் ஒரு முக்கிய நபராக இருந்தது என் வாழ்க்கையிலேயே அப்போது மட்டும்தான்! ஆதாரமற்ற, அர்த்தமே இல்லாத, ஒரு கசப்பான ஐரோப்பிய எதிர்ப்பு உணர்வு, அற்பத்தனமான முறையில் விரவிக்கிடந்த அந்த நகரத்தில், நான் துணை மண்டலக் காவல் அதிகாரியாக இருந்தேன். கசப்பான வெறுப்பென்றாலும், ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் அளவிற்கு யாருக்கும் அங்கே தைரியம் கிடையாது. ஒரு ஐரோப்பியப் பெண் தனியாகக் கடைத்தெருவில் செல்லும் போது அவள் ஆடையின் மீது குதப்பிய வெற்றிலை எச்சிலைத் துப்பும் அளவுதான் அவர்களின் வீரம்! ஒரு காவல் அதிகாரியான நான் எப்போதும் அவர்களின் முதல் குறி; எளிய குறி. அவர்களுக்குத் தோன்றும் போதெல்லாம் நான் அவர்களின் இரையாகியிருக்கிறேன். கால்பந்து மைதானத்தில் அதிகப்பிரசங்கியான ஒரு பர்மன் என் மீது தடுமாறி விழுந்த போது, நடுவர் (அவனும் பர்மன் தான்!) கழுத்தைத் திருப்பிக் கொண்டு நின்றான். அரங்கமே விழுந்து புரண்டு சிரித்தது. இது ஒன்றும் புதிதில்லை. பலமுறை இப்படி நடந்திருக்கிறது. எல்லாம் முடிந்த பின்னும் என்னைப் பரிகசிக்கும் இளைஞர்களின் மஞ்சள் முகங்களும், எத்தனை தூரம் சென்றாலும் என்னையே தொடரும் அந்த ஏளனக் கூக்குரல்களும், என்னை மிகவும் கொதிப்படையச் செய்தன; என் நரம்புகளை துடிக்கச் செய்தன. அதிலும் அந்த இளம் புத்தபிட்சு இருக்கிறானே…! ச்சே, எத்தனை பொல்லாதவன் அவன்! இந்த ஊரில் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் முச்சந்தில் நின்றுகொண்டு, ஐரோப்பியர்களை கேலி செய்வதைத் தவிர வேறு உருப்படியான வேலை ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.
இவையெல்லாம் எனக்கு மிகுந்த குழப்பத்தையும், மன வேதனையையும் தந்தன. இந்த ஏகாதிபத்தியத்தினால் வெறும் கேடு மட்டுமே மிஞ்சும் என்றும், எவ்வளவு விரைவாக என் வேலையை உதறிவிட்டுச் செல்கிறேனோ, அவ்வளவு நல்லது என்றும் என் மனம் ஒரு கட்டத்தில் முடிவு செய்தது. ஒரு இரகசியம் சொல்லட்டுமா? உண்மை என்னவென்றால், நான் எப்போதும் பர்மர்கள் பக்கம். அவர்களின் எதிரியான ஆங்கிலேயர்கள் எனக்கும் எதிரியே! அதிலும் நான் பார்த்த வேலை இருக்கிறதே, அது இன்னும் தீவிரமாக அவர்களை வெறுக்கச் செய்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது போன்ற ஒரு பணியில் பிரிட்டிஷ் பேரரசின் அத்தனை அசிங்கங்களையும் அருகிலிருந்து பார்க்கலாம். நாற்றம் எடுக்கும் சிறைக் கூண்டுகளில் குவிக்கப்பட்டிருக்கும் பாவப்பட்ட கைதிகள், கடுங்காவலில் இருக்கும் குற்றவாளிகள், அவர்களின் கரிய, பயந்தெளித்த முகங்கள், மூங்கில் குச்சிகளால் பதம் பார்க்கப்பட்ட அவர்களின் தழும்பேறிய பிட்டங்கள் – இவையெல்லாம் என்னை தாங்கமுடியாத ஒரு குற்ற உணர்ச்சியில் அழுத்தித் தள்ளின. அதே நேரத்தில் என்னால் எதையும் தெளிவாகச் சிந்தித்து ஒரு முடிவெடுக்க இயலவில்லை. அதற்கு எனக்கு பக்குவமில்லை; படிப்பும் அவ்வளவாக இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, கிழக்கே வசிக்கும் ஆங்கிலேயர்கள் அனைவருக்கும் விதிக்கப்பட்டிருக்கும் அந்தத் தனிமையிலும், அமைதியிலும் என் சிக்கல்களை யோசிப்பது என்பது முடியாத ஒன்றாகிவிட்டது. பிரிட்டிஷ் பேரரசின் வீழ்ச்சியும், அதன் இடத்தை நிரப்பப் பல சிறிய அரசுகள் கொண்டிருந்த துடிப்பும் எனக்குத் தெரியவே தெரியாது. நான் அறிந்ததெல்லாம் ஒன்றுதான் – நான் இரண்டு உணர்ச்சிப் போராட்டங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டிருக்கிறேன். ஒன்று நான் பணியாற்றும் என் அரசின் மீது நான் கொண்டிருந்த துவேசம். மற்றொன்று என் பணியைச் செய்யவிடாமல் தடுக்கும் அந்த குட்டிச் சாத்தான்களின் மீது எனக்கு இருந்த ஆத்திரம். பிரிட்டிஷ் பேரரசு யாராலும் அசைக்கமுடியாத ஒரு கொடுங்கோல் ஆட்சியென்று என் மூளையின் ஒரு பகுதி சொல்லியது. சாஷ்டாங்கமாக குப்புறப் படுத்துக் கொண்டிருக்கும் மக்களின் முதுகில் என்றென்றும் அசைக்க முடியாதபடி, ஆணித்தரமாக இறக்கப்பட்ட ஒரு செங்கோலைக் கொண்டு இயங்கும் ஒரு ஆட்சி என்று அது சொன்னது. மூளையின் மற்றொரு பகுதியோ இந்த உலகிலேயே உள்ள அதிகபட்ச மகிழ்ச்சி ஒரு புத்த பிட்சுவின் அடிவயிற்றில் ஈட்டியால் குத்துவதால் மட்டுமே கிடைக்கும் என்று சிந்திக்கச் செய்தது. இது போன்ற உணர்வுகள் எல்லாம் சகஜமே. ஏகாதிபத்தியத்தின் விளைவால் உருவாகும் எச்சப் பொருள்கள் இவை. பணியில் இல்லாத ஒரு ஆங்கிலோ-இந்திய அதிகாரியை பிடிக்க முடிந்தால் அவரிடம் கேளுங்கள். அவரும் இதைத்தான் சொல்லுவார்!
அன்று நடந்த அந்த சம்பவம் ஒரு வகையில் என் அறிவுக் கண்ணை திறந்தது என்றே சொல்லலாம். சின்ன விஷயம் தான் அது. ஆனால் ஏகாதிபத்தியத்தின் நிஜ முகத்தை தெள்ளத் தெளிவாக காட்டியது. இத்தனை நாளாய் எனக்குப் புலப்படாத இந்த கொடுங்கோல் ஆட்சியின் உண்மையான உள்நோக்கங்களைப் பிட்டு பிட்டு வைத்தது. அன்று காலையிலேயே நகரத்தின் மறுபுறத்தில் உள்ள காவல் நிலையத்தின் துணை கண்காணிப்பாளர் என்னைத் தொலைப்பேசியில் அழைத்தார். கடைத்தெருவிற்குள் ஒரு யானை புகுந்துகொண்டு அட்டகாசம் செய்கிறது; நான் வந்து எதாவது செய்ய முடியுமா என்று கேட்டார். என்னால் என்ன செய்துவிட முடியும் என்று தெரியவில்லை. ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்க ஆவல். குதிரையில் ஏறி புறப்பட்டேன். என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டேன். பழைய 0.44 வின்செஸ்டர் வகையறா. யானைக்கெல்லாம் அது தூசு. ஆனால் சத்தம் ஒரு பீதியைக் கிளப்பும் என்ற நம்பிக்கை. வழியில் பர்மர்கள் என்னை நிறுத்தி யானை செய்யும் அட்டகாசங்களைச் சொன்னார்கள்.அது காட்டு யானை இல்லை. பழக்கப்பட்டது தான். ஆனால் மதம் பிடித்துவிட்டது. மதம் கொண்ட யானையை வழக்கம் போல கட்டி வைத்து இருந்தார்களாம். முந்தைய இரவு அது சங்கிலிகளை உடைத்துக் கொண்டு தப்பித்துவிட்டது. அடக்கத் தெரிந்த பாகனோ, யானையைத் தேடி வேறு திசையில் சென்றுவிட்டான். திரும்பி வர பன்னிரண்டு மணிநேரங்கள் ஆகுமாம். இங்கே ஊருக்குள்ளே, யானை காலையிலிருந்து உலவி வருகிறது! இந்த பர்மர்களும் பாவம். ஆயுதம் எதுவுமின்றி நிர்கதியாக நிற்கின்றனர். அதற்குள் யானை ஒருவரின் மூங்கில் குடிசையை இடித்துவிட்டது. ஒரு பசுவைக் கொன்றுவிட்டது. சில பழக்கடைகளைத் தாக்கி அங்குள்ள பழங்களை நாசம் செய்துவிட்டது. நகராட்சியின் குப்பை வண்டியைக் கூட விட்டுவைக்கவில்லை. வாகனத்தைத் திருப்பிப் போட்டு, அதன் மீது தன் வன்முறையைக் காட்டியிருக்கிறது. நல்லவேளை, வண்டியை ஒட்டியவன் எகிறி குதித்து தப்பியோடிவிட்டான்.
பர்மீஸ் துணை கண்காணிப்பாளரும், இன்னும் சில இந்தியக் காவலாளிகளும், யானை வந்து சென்றதாகச் சொல்லப்பட்டப் பகுதியில் எனக்காகக் காத்திருந்தனர். அது மிகவும் அசிங்கமான, அழுக்கானதொரு குப்பம். பனையோலைகளால் வேயப்பட்ட மூங்கில் குடிசைகள் நிறைந்த பகுதி. அத்தனையும் அழுக்கான, துர்நாற்றம் வீசும் குடிசைகள். உள்ளே நுழைந்தால், ஆள் உள்ளேயே இருக்கவேண்டியது தான். அவ்வளவு சிறியது. அந்த குன்றின் செங்குத்தான விளிம்பில் இத்தகைய குடிசைகளே வரிசையாக வளைந்து நின்றன. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்று காலை வானம் மப்பும் மந்தாரமாக, மேகமூட்டத்துடன் இருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம். நாங்கள் யானையைப் பற்றி அங்கிருந்த மக்களிடம் விசாரிக்கத் தொடங்கினோம். வழக்கம் போல எந்தவொரு நிச்சயமான தகவலும் கிடைக்கவில்லை. கிழக்கில் எப்போதும் நடப்பதுதான். தொலைவிலிருந்து பார்க்கும் பொது கதை தெளிவாக தெரியும், புரியும். அருகே செல்லச் செல்ல காட்சிகளில் பூச்சி பறக்கத் தொடங்கும். சிலர் யானை சென்ற பாதை என்று வலக்கையை நீட்ட, சிலர் இடக்கையை நீட்டினார்கள். இன்னும் சிலரோ ‘எந்த யானை?’ என்று கேட்டார்கள்! இது அத்தனையும் கட்டுக்கதை என்று நான் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டேன். அப்போதுதான் அந்த அலறல் சத்தம் சற்று தொலைவிலிருந்து கேட்டது. “குழந்தாய்! ஓடிவிடு. இப்போதே ஓடிவிடு!” என்று இரைச்சலோடு, அதிர்ச்சியையும் ஏந்தி வந்தது அந்த குரல். பக்கத்திலிருந்த குடிசையின் ஒரு மூலையிலிருந்து ஒரு மூதாட்டி கையில் சவுக்கோடு வந்தாள். குடிசை முன் கூட்டமாய் நின்ற நிர்வாணக் குழந்தைகளை வேகமாக விரட்டியடித்தாள். அவளைத் தொடர்ந்து இன்னும் சில பெண்கள். எல்லோரும் கத்திக்கொண்டும், அதட்டிக்கொண்டும் வந்தார்கள். ஆக, குழந்தைகள் பார்க்கக் கூடாத ஏதோ ஒன்று அங்கிருக்கிறது. நான் அந்த குடிசைக்குச் சென்று பார்க்க… அங்கே ஒரு ஆணின் பிணம் கை கால் விரிந்த நிலையில் சேற்றில் கோணலாக கிடந்தது. அவன் ஒரு இந்தியன். திராவிட நிறத்திலிருந்த ஒரு கூலித்தொழிலாளி. உடம்பில் பாதிக்கு மேல் துணியில்லை. அவன் இறந்து போய் பல நிமிடங்கள் ஆகியிருக்கும். யானை திடீரென்று குடிசையின் ஒரு ஓரத்திலிருந்து வந்து, அவனைத் தன் தும்பிக்கையால் வளைத்தது என்றும், பின் அவனை தரையில் தள்ளி தன் பாதத்தால் அழுத்தி மிதித்தது என்றும் பார்த்தவர்கள் சொன்னார்கள். மழையில் ஊறிய சொதசொதப்பான மண்ணில், அவன் முகம் ஓரடி ஆழமும், சில கஜங்கள் நீளமும் இருக்கும் குழியைத் தோண்டி அதில் புதைந்து கிடந்தது. அவன் குப்புறப் படுத்திருந்தான். கைகள் விரிந்திருந்தன. தலை ஒரு பக்கமாக திரும்பியிருந்தது. சேற்றில் மூடிய முகம், அகண்டு விரிந்த கண்கள், தாங்கமுடியாத மரண வேதனையைச் சொல்லமுடியாமல் தவிக்கும் நாக்கை மூடியபடி இளித்துக்கொண்டிருக்கும் பல்வரிசை… (இனியும் யாராவது இறந்தவர்கள் எல்லாம் அமைதியாகத் தோன்றுவார்கள் என்று சொன்னால் நான் நம்பமாட்டேன். நான் கண்ட பல பிரேதங்கள் இப்படி கொடூரமாகவே இருந்திருக்கின்றன). மிருகத்தின் பாதம் உராய்ந்ததால், அவன் முதுகுத் தோல் முயல் தோலைப் போல மிக நேர்த்தியாக உரிக்கப்பட்டிருந்தது. இதையெல்லாம் பார்த்த பின், நான் ஒரு சிப்பந்தியிடம் என் நண்பன் வீட்டிற்கு சென்று அவனிடம் இருக்கும் யானையைச் சுடும் நீள் துப்பாக்கியை இரவல் வாங்கி வர உத்தரவிட்டேன். அதற்கு முன்பே என் குதிரையைத் திருப்பி அனுப்பிவிட்டேன். யானையைக் கண்டு பயந்து அதுவும் மதம் கொண்டால் பின் யார் சமாளிப்பது?
சிப்பந்தி சில நிமிடங்களில் துப்பாக்கியும், ஐந்து தோட்டாக்களுடனும் வந்தான். அதற்குள் சில பர்மர்கள் கீழே நூறு கஜம் தூரத்தில் இருக்கும் நெல் வயலில் யானையைப் பார்த்ததாக சொன்னார்கள். நான் நடக்கத் தொடங்கியதும் குன்றிலிருக்கும் மொத்த ஜனத்தொகையும் வீட்டிலிருந்து கிளம்பி என்னைப் பின் தொடர்ந்தது. அவர்கள் துப்பாக்கியைப் பார்த்துவிட்டார்கள். நான் யானையைச் சுடப்போவதாக ஆரவாரம் செய்தார்கள். யானை தங்கள் வீடுகளை நாசம் செய்த பொது அக்கறை கொள்ளாதவர்கள், இப்போது அது சாகப்போகிறது என்றதும் ஆர்ப்பரிக்கிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு இருப்பதைப் போல இவர்களுக்கும் இது ஒரு வேடிக்கை. தவிர, இவர்களுக்கு மாமிசமும் வேண்டும். இது என்னை என்னவோ செய்தது. எனக்கு யானையைக் கொல்லும் எண்ணம் எல்லாம் இல்லை. எதற்கும் ஒரு பாதுகாப்புக்கு இருக்கட்டும் என்றே துப்பாக்கியை வாங்கி வரச் சொன்னேன். இப்படி ஒரு கூட்டம் பின்னல் வருவது கொஞ்சம் மிரட்சியாகத்தான் இருக்கிறது. நான் அடிவாரத்தை நோக்கி நடந்தேன். ஒரு முட்டாளாகத் தெரிந்தேன், உணர்ந்தேன். என் தோளில் துப்பாக்கி தொங்கிக் கொண்டிருக்கிறது. என்னை நெருக்கித்தள்ளும் அளவிற்கு என் பின்னால் முடிவேயில்லாமல் வளர்ந்து வரும் மக்கள் கூட்டம். குடிசைகளுக்குக் கீழே, சமவெளியில் கற்சாலை இருந்தது. அதற்கு ஆயிரம் கஜங்களுக்கு அப்பால், சதுப்பு நிலத்தில் நெல் வயல்கள். வயல் இன்னும் உழப்படவில்லை. ஆனால் முதல் மழையால் பூமி ஈரமாக்கப் பட்டு, புற்களால் புள்ளிக் கோலம் போடப்பட்டிருந்தது. களிறு சாலைக்கு எட்டு கஜம் அப்பால் நின்றிருந்தது. அதன் இடப்பக்கம் எங்களை நோக்கி இருந்தது. கூட்டம் வருவதை சற்றும் சட்டை செய்யவில்லை. ‘தேமே’ என்று புற்களைக் கிழித்து, அவற்றைத் தன் முட்டியில் அடித்து சுத்தம் செய்து, பின் தன் வாயில் அடைத்து கொண்டது.
நான் சாலையிலேயே நின்று கொண்டேன். யானையைப் பார்த்த மாத்திரத்திலேயே அதை சுடக் கூடாதென்று முடிவு செய்தேன். ஒரு நடமாடும் யானையைச் சுடுவது ஒன்றும் விளையாட்டான விஷயம் அல்ல. அது ஒரு விலையுயர்ந்த பெரிய இயந்திரத்தை உடைப்பதற்குச் சமமாகும். அதனால் இயன்றவரையில் சுடாமல் இருப்பதே உசிதம். அங்கே வயலில் ஒரு பசுவைப் போல சாந்தமாக புல்லைத் தின்றுகொண்டிருக்கிறது. பார்த்தால் ஒன்றும் அபாயகரமாகத் தெரியவில்லை. அது கொண்டிருந்த மதம் குறைந்திருப்பதைப்போலத் தெரிந்தது. அப்படி இருக்குமாயின் அதனால் இனி தொல்லை ஒன்றுமில்லை. அதன் போக்கிலேயே உலவவிட்டு, பின் பாகன் வந்ததும் பிடித்துவிடலாம். மேலும், அதைச் சுட எனக்குத் துளியும் விருப்பமில்லை. இன்னும் கொஞ்ச நேரம் அதை கவனித்து, மீண்டும் அது வெறி கொள்ளவில்லை என்று உறுதி செய்துகொண்டு கிளம்பலாம் என்று முடிவு செய்தேன்.
அதே கணம் என் பின்னால் இருந்த கூட்டத்தைப் பார்த்தேன். பெரிய கூட்டம். இரண்டாயிரம் பேராவது இருப்பார்கள். இன்னமும் வந்து கொண்டிருந்தார்கள். சாலையை இருபுறமும் நெடுந்தூரத்துக்கு அடைத்துக் கொண்டு நின்றார்கள். கண்ணைப் பறிக்கும் வண்ண ஆடைகளின் மேலிருந்த மஞ்சள் முகங்களைப் பார்த்தேன். அத்தனை முகத்திலும் ஆனந்தம். ஒரு வேடிக்கையைக் காணும் உற்சாகம். யானை சுடப்படுவது உறுதி என்று எல்லோரும் எண்ணினார்கள். ஒரு மந்திரவாதி செய்யவிருக்கும் மாயாஜால வித்தையைப் பார்ப்பது போல என்னைப் பார்த்தார்கள். அவர்களுக்கு என்னைப் பிடிக்காதுதான். ஆனால் என் கையில் மந்திரக்கோலாய் இருந்த துப்பாக்கி அந்த நொடியில் என்னை நாயகன் ஆக்கியது. அவர்களை என் பால் இழுத்தது. இதையெல்லாம் பார்த்த பின், யானையை நான் சுடத்தான் வேண்டும் என்று திடீரென்று உணர்ந்து கொண்டேன். மக்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். நானும் அதைத்தான் செய்ய வேண்டும். இந்த இரண்டாயிரம் ஆசைகளும் என்னை அழுத்துவதை உணர்ந்தேன். என்னால் அதை எதிர்க்க முடியவில்லை. இந்த கணம்… என் கையில் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு நான் நிற்கும் இந்த கணம்… இப்போதுதான் கிழக்கில் வெள்ளைக்காரகள் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தின் பலகீனத்தையும், பயனின்மையையும் புரிந்து கொண்டேன். இங்கே நான் நிற்கிறேன். நிராயுதபாணியான உள்ளூர் வாசிகளுக்கு முன் நான் ஒரு வெள்ளைக்காரனாய், கையில் துப்பக்கியை வைத்துக் கொண்டு இங்கே நிற்கிறேன். பார்ப்பவர்க்கு நான் ஒரு கதாநாயகன். உண்மையில் நான் ஒரு முட்டாள் பொம்மை. என்னை ஆட்டுவிக்கும் கயிறு பின்னால் நிற்கும் மஞ்சள் முக பொம்மலாட்டக்கார்களிடம் உள்ளது! ஒரு வெள்ளைக்காரன் சர்வாதிகாரியாகும் போது அவன் பறிப்பது மற்றவர்களின் சுதந்திரத்தை அல்ல; தன் சுதந்திரத்தை என்று அப்போது அறிந்து கொண்டேன். அவன் அப்போது போலியாகிறான், பயனற்ற ஒரு பொம்மை ஆகிறான், ‘சாகிபு’ என்கிற ஒரு சம்பிரதாய உருவத்தை ஏற்றுக்கொள்கிறான். பின் தன் வாழ்நாள் முழுவதும் உள்ளூர் வாசிகளை திருப்திப்படுத்துவதிலேயும், கவருவதிலேயும் அவன் செலவிடுகிறான். எந்தவொரு நெருக்கடியிலும் அவன் உள்ளூர்க்காரர்கள் சொல்லுவதைச் செய்ய வேண்டும். அவன் ஒரு முகமூடி அணிந்துவிட்டான். அவன் முகமும் அதற்குப் பொருத்தமாக வளைந்து கொடுக்கிறது. நான் யானையை சுட்டே தீர வேண்டும்! துப்பாக்கியைக் கொண்டு வரச் சொன்ன போதே அதற்கு ஒத்துக் கொண்டுவிட்டேன். ஒரு சாகிபு, சாகிபுவாக இருக்க வேண்டும்! எப்போதும் அவன் திடமாக, உறுதியாக இருக்க வேண்டும். தன் மூளையை நன்கு அறிந்தவனாக, தீர்க்கமான செயல்களைச் செய்பவனாக இருக்க வேண்டும்.இத்தனை தூரம் வந்த பின், கையில் துப்பாக்கியை வைத்துகொண்டு, சுற்றி இரண்டாயிரம் பேர் வேடிக்கை பார்க்க, ஒன்றுமே செய்யாமல் பின் வாங்கித் திரும்பினால்… திரும்புவதா? அது முடியாத காரியம்! இந்த கூட்டம் சிரித்தே என்னைக் கொன்றுவிடும். என் வாழ்க்கை, ஏன் கிழக்கே வசிக்கும் எந்தவொரு வெள்ளைக்காரனின் வாழ்க்கையுமே, பல போராட்டங்களால் ஆனது. அதை யாரும் எள்ளி நகையாட அனுமதிக்கலாமா?
இருந்தபோதிலும் நான் யானையைச் சுட விரும்பவில்லை. எங்கேயோ பார்த்துக் கொண்டு அது புற்களைத் தன் முட்டியில் அடித்துத் துடைத்து, தின்று கொண்டிருந்ததை நான் கவனித்தேன். இதைச் சுட்டால் கொலை செய்வது போல ஆகும். அந்த வயதில் எனக்கு ஒன்றும் விலங்குகளைக் கொல்வதில் பயமோ, அருவறுப்போ இல்லை. ஆனால் அதுவரை நான் ஒரு யானையைச் சுட்டதில்லை, சுடவும் விரும்பியதில்லை. (எதற்காகவோ, ஒரு பெரிய மிருகத்தைக் கொல்வது மோசமாகப்பட்டது). அதைத்தவிர, யானையின் சொந்தக்காரனையும் பற்றி யோசிக்க வேண்டும் அல்லவா? உயிருடன் இருக்கும் இந்த யானை குறைந்தது நூறு பவுண்ட்களுக்காவது விலை போகும். இறந்த பின், எவர் சீண்டுவார்? தந்தங்கள் மட்டும் ஐந்து பவுண்ட்களுக்குப் போகலாம். அவ்வளவுதான்! ஆனால் நான் இப்போது உடனே எதையாவது செய்ய வேண்டும். அங்கே இருந்த அனுபவமிக்க பர்மர்களிடம் யானையைப் பற்றி விசாரித்தேன். அவர்கள் சொன்னதெல்லாம் இது தான்: நீங்கள் அதைத் தனியாக விட்டால் அது உங்களைச் சீண்டாது. அருகே சென்றாலோ தாக்கத் தொடங்கிவிடும்.
நான் என்னசெய்ய வேண்டும் என்று எனக்குத் தெள்ளென விளங்கியது. யானைக்கு அருகே செல்ல வேண்டும். சுமார் இருபத்தியைந்து கஜம் தூரத்திலிருந்து அதன் நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும். என்னைத் தாக்குமாயின், சுடவேண்டும். இல்லை, என்னைக் கண்டுகொள்ளாமல் இருக்குமாயின், அப்படியே அதை விட்டுவிட வேண்டியது. பாகன் வந்து பிடித்து கொள்வான். இப்படி யோசித்து வைத்திருந்த நேரத்தில் இப்படியெல்லாம் நான் செய்யப் போவதில்லை என்று தெரிந்தும் வைத்திருந்தேன். காரணம்? என் குறி மேல் எனக்கிருந்த நம்பிக்கை. நான் துப்பாக்கி சுடுவதில் ஒன்றும் வல்லவன் இல்லை. கூடவே, இந்த சேற்றில் காலெடுத்து வைத்தால், ஒவ்வொரு அடியிலும் கால் சிக்கிக்கொள்ளும். ஒருவேளை, யானை என்னைத் தாக்க வரும்போது என் குறி தப்பிவிட்டால், பிறகு என் நிலைமை ரோடு ரோலரின் அடியே சிக்கிய தேரையைப் போல ஆகிவிடும். அந்த நேரத்தில் நான் என்னுடைய பாதுகாப்பைப் பற்றி கவலை கொள்ளவில்லை. என் பின்னால் நிற்கும், என்னையே கூர்ந்து கவனிக்கும் அந்த மஞ்சள் முகக் கூட்டத்தைக் குறித்தே யோசித்தேன். மொத்த கும்பலும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த நொடியில், சாதரணமாக ஒரு தனியாளாக நான் இருக்கும் போது எனக்குள் இருக்கும் பயம் சிறிதும் இல்லை. ஒரு வெள்ளைக்காரன் “உள்ளூர் ஆசாமிகளுக்கு” முன் பயப்படக்கூடாது. பயப்படமாட்டான். அப்போது என் மனதில் ஓடிக்கொண்டிருந்த ஒரே எண்ணம்… இங்கே எதாவது தப்பாக நடந்துவிட்டால், கூடியிருக்கும் இரண்டாயிரம் பர்மர்களும் நான் யானையிடம் சிக்கி, சின்னாபின்னமாகி, குன்றின் மேல் செத்துக் கிடக்கும் இந்தியனைப் போல் ஒரு பிணமாக மாறும் வரை நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள். அப்படி நடக்கும் தருணத்தில் சிலர் சிரிக்கவும் செய்வார்கள். அது போல ஆகக்கூடாது.
இதற்கு ஒரே ஒரு மாற்று வழிதான் உண்டு. நான் தோட்டாக்களை துப்பாக்கியில் பொருத்தி விட்டு, குறி பார்ப்பதற்கு வசதியாக சாலையில் படுத்துக் கொண்டேன். கூட்டமே இப்போது அமைதியாகி, ஆழ்ந்த, மெதுவான மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் காத்திருப்பு வீணாகவில்லை. இதோ இப்போது மேடையின் திரை விலகிவிட்டது. இன்னும் சில வினாடிகளில் நாடகம் தொடங்கிவிடும். நாடகத்தைக் கண்டு ரசிக்கும் ஆவலுடன் அவர்கள் தன் தொண்டைகளை செருமிக்கொண்டு தயாரானார்கள். அவர்களுக்கு இது ஒரு வேடிக்கையான கூத்து. அதோடு சரி! குறி பார்ப்பதற்கு தோதாக, குறுக்குக் கம்பிகள் வரைந்த கண்ணாடி வில்லை பொருத்தப்பட்டு, அழகாக இருந்தது அந்த ஜெர்மன் துப்பாக்கி. யானையைச் சுடும்போது ஒருவன் அதன் ஒரு காதுத் துளையிலிருந்து மறு காதுத்துளைக்கு ஒரு கற்பனை கோடிட்டு, அதை நோக்கி குறி வைக்க வேண்டும் என்ற பால பாடம் அப்போது எனக்குத் தெரியாது. பக்கவாட்டில் இருக்கும் யானையின் செவித் துவாரத்திற்கு குறி வைத்திருக்க வேண்டிய நான், அப்படி செய்யாமல் அங்கிருந்து சில அங்குலங்கள் முன்னே, தோராயமாக அதன் மூளை இருக்கும் பிரதேசத்தை நோக்கி என் குறியை வைத்தேன்.
நான் விசையை இழுத்த பொழுது எந்தவொரு வெடி சத்தத்தையும் கேட்கவில்லை. சிலமுறை இப்படி நடப்பதுண்டு. ஆனால் அந்த நேரத்தில் கூட்டத்திலிருந்து எழும்பிய மகிழ்ச்சியின் ஓசை பேரிரைச்சலாய் என் காதுகளில் வந்து சேர்ந்தது. குண்டு சீறிப் பாய்ந்துக் கொண்டிருக்கும் அந்த குறுகிய கால அவகாசத்தில், யாருமே, யானையிடம் ஒரு மர்மமான, கொடூரமான மாற்றம் நிகழும் என்றே எண்ணியிருப்பர். யானையோ அசையவுமில்லை, கீழே விழவுமில்லை. இருந்த போதிலும், அதன் தேகத்திலிருந்த ஒவ்வொரு கோட்டிலும் ஒரு மாற்றம் தெரிந்தது. திடீரென்று அது ஸ்தம்பித்தது, சோர்ந்தது, சுருங்கியது. குண்டின் வேகமான தாக்குதலால் அது தள்ளப்படவில்லை; தளர்த்தப்பட்டிருக்கிறது. இப்படியே நேரம் நீடித்தது. இல்லை! அதிக நேரம் ஆனது போல எனக்குத் தோன்றினாலும், ஐந்து நொடிகள் தான் ஆகியிருக்கிறது. இப்போது அதன் கால்கள் வளையத் தொடங்கின. வாயில் எச்சில் வழியத் தொடங்கியது. ஒரு மாபெரும் தளர்ச்சி அதன் மீது ஏறிவிட்டதாக தெரிந்தது. அதற்கு ஆயிரம் வயது ஆனது போல இருந்தது. நான் மீண்டும் அதே இடத்தில் சுட்டேன். இப்போதும் அது விழவில்லை. ஆனால் பெரும் முயற்சியுடன் எழுந்து நிற்க முயற்சித்தது. கால்கள் இன்னமும் வளைத்திருந்தது. தலை கவிழ்ந்திருந்தது. மூன்றாவது முறையாக சுட்டேன். இந்த முறை மரண அடி. வலியின் வேதனையால் அதன் உடல் குலுங்க, கால்களில் மீதமிருந்த கடைசி திடத் துகள்களும் எட்டித் தள்ளப்பட்டன. யானை விழுந்தது. விழும் வேளையில், ஒரு கணம் எழுவது போலவே தெரிந்தது. பின்னங்கால்கள் தரையோடு தாழ்ந்திருக்க, உடம்பின் முன் பகுதி மேல் நோக்கி மலை போல நிமிர்ந்திருக்க, அதன் துதிக்கையோ மரம் போல வான்னோக்கி வளைந்திருந்தது. யானை பிளிறியது… முதலும், கடைசியுமாக! பின் அதன் தொப்பை என்னைப் பார்த்த படி, மெல்ல சரிந்தது. அது தரையைத் தொட்ட வேகத்தில் பூமியே அதிர்ந்தது. அதிர்வு நான் இருந்த இடம் வரை நீண்டது.
நான் எழுந்தேன். அதற்குள், பர்மர்கள் எல்லோரும் என்னைத் தாண்டி சேற்றில் ஓடிக் கொண்டிருந்தார்கள். யானை இனி மறுபடியும் எழாது என்பது தெரிந்துவிட்டது. ஆனால் அது இன்னமும் சாகவில்லை. நீண்ட இடைவெளியோடு யானை விட்டுக் கொண்டிருந்த பெருமூச்சு ஏதோ ஒரு தாளலயத்தை ஒட்டி இருந்தது. அதன் பருத்த உடல் வலியில் மேலும் கீழும் மெதுவாக ஏறி இறங்கியது. பிளந்திருந்த வாயின் வழியாக அதன் வெளிறிப்போன சிவந்த தொண்டை வரை தெரிந்தது. அது சாவதற்காக நான் நெடுநேரம் காத்திருந்தேன். ஆனால் அதன் சுவாசம் குன்றவில்லை. என்னிடம் மீதம் இருக்கும் இரண்டு தோட்டாக்களையும் அதன் இதயத்தை நோக்கி சுட்டேன். சிவந்த பட்டுத் துணியாக குருதி அதன் தேகத்திலிருந்து பீச்சியடித்தது. ஆனாலும் அது மடியவில்லை. அது செத்துக் கொண்டிருந்தது. நிதானமாக, மிக நிதானமாக… மிகுந்த வலியோடு அது செத்துக் கொண்டிருந்தது. இனி ஒரு தோட்டாவால் அதை காயப்படுத்த முடியாத ஒரு உலகுக்கு அது பயணப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த நாராசமான சத்தத்திற்கு ஒரு முடிவுகட்ட நான் எண்ணினேன். இப்படி ஒரு பூதாகாரமான மிருகம் என் கண் முன்னால் நகரவும் தெம்பில்லாமல், சாகவும் சுரத்திலாமல், சுருண்டு கிடப்பதைக் கண்டு மனம் நடுங்கியது. நான் என் கைத்துப்பாக்கியை வாங்கி, அதன் இதயத்திலும், தொண்டையிலும் பலமுறை மாறி மாறி சுட்டேன். ம்ஹூம்! எதுவும் கேட்கவில்லை. சித்திரவதைக்கும் அந்த பெருமூச்சின் சத்தம் கடிகார முள்ளைப் போல சீராகத் தொடர்ந்தது.
கடைசியில் பொறுக்கமுடியாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அது இறக்க அரை மணி நேரம் பிடித்தது என்று பிறகு கேள்விப்பட்டேன். நான் புறப்படுவதற்கு முன்னரே, பர்மர்கள் அண்டாவையும், குண்டானையும் எடுத்து வர ஆரம்பித்துவிட்டார்கள். மதியத்திற்குள், எலும்பு வரை மழித்துவிட்டார்களாம்.
பின்னர், எப்போதும் நடப்பது போன்று, இந்த யானை வேட்டையைக் குறித்து முடிவில்லாத சர்ச்சைகளும், வாதங்களும் எழுந்தன. யானையின் சொந்தக்காரன் ஆவேசமாக இருந்தான். ஆனால் பாவம்… அவன் ஒரு இந்தியன். அவனால் என்ன செய்துவிட முடியும்? தவிரவும், சட்டப்பூர்வமாக நான் செய்தது சரிதானே. எஜமானனாலேயே கட்டுப்படுத்த இயலாத ஒரு மதம் கொண்ட யானையை, ஒரு வெறி நாயையைச் சுடுவதைப் போல சுட்டுக் கொன்றிருக்கிறேன். அது எப்படி தவறாகும்? ஐரோப்பியர்களின் கருத்தோ இரண்டாகப் பிரிந்திருந்தது. அனுபவமிக்கவர்கள் எல்லோரும் என்னை சரி என்றார்கள். இளைஞர்கள் தவறு என்றார்கள். ஒரு கூலித் தொழிலாளியைக் கொன்றதற்காக ஒரு யானையை சுட்டது அசிங்கம் என்றார்கள். அந்த குறிஞ்சி நாட்டு கூலித் தொழிலாளியை விட இந்த யானை அதிகம் மதிப்புடையது என்றார்கள். அந்த கூலியாள் இறந்ததும் ஒருவிதத்தில் நல்லதுதான். இல்லையென்றால், பின்னர் நான் யானையை சுட்டதற்கு ஒரு நியாயமான காரணம் இருக்காதல்லவா? சரி, அது போகட்டும். நான் யானையைச் சுட்டது, நான் முட்டாள் ஆகிவிடக் கூடாது என்ற உண்மையான காரணத்திற்காகத் தான் என்பதை இங்கே யாராவது கண்டுபிடித்திருப்பார்களா?