மகரந்தம்

sun_wஒரு புதிய சூரியன்?

இரண்டாம் சூரியனைப் பூமியில் உருவாக்கிக் கட்டுக்குள் நிறுத்தினால் பூமியில் என்னென்ன மாறுதல்கள் நிகழும்? சோதனையில் இறங்கும் அறிவியலாளர்களுக்கு உண்மையில் என்ன விளைவு என்று தெரியுமா? கேள்விகள் வனமாக அடர்கின்றன. காட்டுக்குள் ரீங்கரிக்கும் சொல்லி முடியாத பூச்சிகள் போல நம் மனதிலும் சந்தேகப் பூச்சிகள், பயத் தேள்கள், அச்சங்களின் கொடுக்குகள். இத்தனை ரீங்காரத்தையும், கொட்டல்களையும், விஷ்த் தீண்டலையும் தாண்ட என்ன வழி? ஒரு துவக்க நிலை அறிவிப்பைப் படிப்போம். படித்தால் தெரிவது- அட, உலகெங்கும் ஒரு இருபது ஆண்டுகள் முன்பு பிச்சைப் பாத்திரத்தோடு உலவிய நாடுகளெல்லாம் உலகுக்கு விடுதலை தேடும் முயற்சியில் முன்னணி வீரர்களாக நிற்கிறார்களே? இந்தியாவும் இந்த அணியில்! இந்தியா ஒளிர்கிறது என்று சொல்ல்ப்பட்டதை விட்டு தள்ளுங்கள். நாளை இந்த சோதனை வென்றால் இந்தியா உண்மையிலேயே ஒளிருமா, இல்லை இதையும் அன்னியருக்குத் தாரை வார்த்து விட்டு கையைப் பிசைந்து நிற்கத்தான் போகிறதா இந்தியா? எதற்கும் இதை படித்து தான் பாருங்களேன்.

தலைமுடி குறித்த ஆவணப் படம்

degascombing-hairஇந்திய கலாச்சாரத்தில் தலைமுடிக்கு பெரும் இடமுண்டு. வர்ணனை முதல் வசை வரை. கார்குழல் மங்கையரைப் பாடும் பாடல்களில் இருந்து, பொடுகு இல்லாத முடியைப் பாடும் விளம்பரத்திற்கு வந்திருக்கிறோம். அன்று எண்ணைய்களும், வாசனைத் தைலங்களும் இலக்கியத்தை நிரப்பின, இன்றோ வெள்ளையரின் உலகத்துக்கே உகந்த வறண்ட தோலை நிவர்த்தியாகக் காட்டும் ஷாம்பூ விளம்பரங்கள் முடியை மட்டுமல்ல, நம் இளைஞரின் அறிவையும் சலவை செய்கின்றன, மக்களின் பணப் பையையும் காலி செய்கின்றன. சரி, வெள்ளையரிடம் ஏமாறுவது இன்றா நேற்றா, கிட்டத் தட்ட 300 ஆண்டுப் பழக்கமாயிற்றே, சுலபத்தில் போகுமா என்று நினைக்கலாம். அமெரிக்காவிலும், ஏன் உலகிலெங்கும் வாழும் ஆப்பிரிக்க இனத்து மக்களின் தலைமுடிப் பிரச்சினை நம்முடைய உளைச்சலை விடப் பல பத்து மடங்கு கூடுதலாம். கத்தி போன்ற நாக்குடைய ஆப்பிரிக்க (அமெரிக்க) வேடிக்கைப் பேச்சாளரும், சமூக விமர்சகரும், தொலைக்காடசித் தொடர் தயாரிப்பாளரும், ஹாலிவுட் பட நடிகருமான க்ரிஸ் ராக்(Chris Rock) ஒரு ஆவணப் படம் தயாரித்திருக்கிறார் இது பற்றி. இதில் இந்தியாவில் பல மில்லியன் மக்கள் வருடா வருடம் நேர்த்தி செய்து கொண்டு தெய்வங்களுக்குக் கொடுக்கும் மொட்டை, எப்படி தலைப் பின்னல் சவுரியாக ஆப்பிரிக்கருக்கும், பல வகை அமெரிக்கருக்கும் போய்ச் சேர்கிறது என்பதும் சொல்லப்பட்டிருக்கிறதாம். அந்தத் ஆவணப் பட விமர்சனம் இதோ.

21-ஆம் நூற்றாண்டின் அடிமை விற்பனை

வேறெங்கும் இல்லை, இந்தியாவில் தான். நாகரீகத்துக்கு முந்தைய நடைமுறை, இப்போதும் தொடர்வது வேதனையான விஷயம். ஆனால் இந்த அடிமைகள், இம்முறை, விலங்குகளால் பிணைக்கப்படாமல், அவர்களின் கடன் சுமைகளால் பிணைக்கப்பட்டுள்ளனர். இம்முறையால் இந்தியாவின் பல்வேறு மாநில மக்கள் பாதிக்கப்பட்டதை உரைக்கும் ஒரு புகைப்பட கட்டுரையை வெளியிட்டிருக்கிறது “Intelligent Life” எனும் பத்திரிக்கை. இது ”தி எகானமிஸ்ட”-இன்(The Economist) வாரத் துணை இதழ். இன்னும் ஒரு தகவல் : எகானமிஸ்ட் பத்திரிகை ”சந்தையே வாழ்வின் உய்வு” என்ற அரசியலை உலகெங்கும் பரப்பி வந்தது. இன்றும் அவர்கள் அந்நிலையில் இருந்து மாறி விடவில்லை. ஆனால் இடதுசாரிகளின் உலக இயக்கம் எப்படி இருக்கிறதென்றால், அவர்கள் ‘த எகானமிஸ்ட்’ பத்திரிகையிலும் ஊடாடுகின்றனர்.

நரமாமிசம் உண்ட ஐரோப்பிய சமூகம்!

பொதுவாக நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகள் குறித்த ஜோக்குகளில் அவர்கள் ஆப்பிரிக்கர்களாகவே காட்டப்படுவது காலனிய பிரச்சாரத்தின் எச்சமாக பொதுபுத்தியில் இன்றும் வாழ்கிறது. ஆனால் அண்மையில் தெற்கு ஜெர்மனியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டடைந்த விஷயம் 7000 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் பெரிய அளவில் மனித மாமிசத்தை சடங்கு ரீதியாக உண்டார்கள் என்பதே. பெருமளவு உறுதி செய்யப்பட்டுள்ள இந்த கண்டுபிடிப்பு விரைவில் முழுமையாக உறுதி செய்யப்பட்டு விடும். முக எலும்புகள் நொறுங்கும்படியாக பலியிடப்படுவோரின் முகங்களை அடித்து உடைத்து முதுகெலும்பையும் விலா எலும்புகளையும் தனித்தனியாக உடைத்தெடுத்து மனிதர்கள் பிற விலங்குகளைப் போலவே உணவாக உண்ணப்பட்டதை எப்படி அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தார்கள் என்பதை எதையும் தாங்கும் இதயங்கள் இங்கே படிக்கலாம்.

குறிப்பாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை கவனியுங்கள்: “சர்ச்சைக்குரிய நரமாமிச சாப்பிடுதல் குறித்த கண்டுபிடிப்பு….” இதுவே ஐரோப்பியரல்லாத பண்பாட்டில் கண்டெடுக்கப்பட்டிருந்தால் “சர்ச்சை” இருந்திருக்காது!

ஷாப்பிங் சிக்கலின் பரிணாம வேர்கள்

சில ஆய்வாளர்கள், வேலை மெனக்கெட்டு ஏதோ விசித்திரமான ஆய்வுகளைச் செய்வார்கள். சில சமயம் அவற்றைப் படித்தால் “இதென்னய்யா ஆய்வு, மடையனுக்குக் கூடத் தெரியுமே இதெல்லாம்” என்று தோன்றும். ஆனால், நாகரிகம் சிக்கலாக மாறி, உலகப் பண்பாடு என்பது எங்கும் பரவினால், எளிய விஷயங்கள்தான் மக்களுக்குப் பெரும் புதிராகத் தோன்றத் துவங்கும். சிறுவர் ஏன் மண்ணைத் தின்கிறார் என்று நம் ஊர்களில் அதிகம் படபடக்க மாட்டார்கள். ஆனால் டோக்யோவிலும், ஷாங்காயிலும், குல்னிலும், ஜெனிவாவிலும் மண்ணைத் தின்ன முற்படும் சிறுவர்கள் பெற்றோருக்கு மாரடைப்பு வரவழைப்பார்கள். எனவே அதைச் சில ஆய்வாளர்கள் எடுத்து ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். நம் ஊர் ராமனும், சோமனும் இதைப் பற்றிக் கவலைப் பட்டால் யாரும் அதை ஆய்வு செய்ய மாட்டார்கள். உலக மாநகர மாந்தர் தும்மல் போட்டால் கூட உடனே கவனிக்க ஆய்வாளர்கள் ரெடி, அதான் உலகப் பண்பாடு. பெருநகர மாந்தரின் நலனே மையம். அதே போல ஆண்கள் ஏன் கடைகளுக்குப் போய் நோட்டம் விடுவதில் நேரம் செலவழிக்க விரும்புவதில்லை, பெண்கள் ஏன் கடைகளுக்குப் போனால் நாள் முழுவதும் அங்கேயே இருக்க நேர்கிறது என்ற உலக மஹா பிரச்சினையைச் சில ஆய்வாளர்கள் எடுத்து ஆய்ந்திருக்கிறார்கள். இதுவும் உலகப் பெருநகரங்களில் ஆண்-பெண்களிடையே இருக்கும் உரசலான விஷயம் தானே? சரி என்னதான் கண்டு பிடித்தார்கள் என்று பாருங்கள், இங்கே.