புரிந்து கொள் – 4

(இக்கதையின் முந்தைய பகுதிகள்: பகுதி1 | பகுதி 2 | பகுதி 3 )

மாறுநிலை பருப்பொருள்(Critical Mass)

-o00o-

தரிசனம்.

என் சிந்தனையின் இயக்க முறைகளைப் புரிந்து கொள்கிறேன். நான் எப்படி அறிகிறேன் என்பதைக் கச்சிதமாக நான் அறிகிறேன். என் புரிதல் தனக்குள் குவிந்து மறுபடி மறுபடி நிகழ்ந்து தொடர் சங்கிலியாய்ப் போகிறது. நான் எல்லையில்லாத தொடர் நிகழ்வுகள் மூலம் கிட்டும் இந்த சுயப் புரிதலை ஒவ்வொரு அடியாக, முடிவில்லாது, எடுத்து வைத்துப் புரிந்து கொள்ளவில்லை. ஒரே எட்டில் இந்தத் தொடரின் இறுதிச் சாத்தியப் (the limit) புள்ளியைக் கைப்பற்றி விடுவதால் அறிகிறேன். தன்னுள் திரும்பும் தொடர் புரிதலின் இயல்பு எனக்குத் துல்லியமாகிறது. ‘சுயப் பிரக்ஞை’ என்ற பதத்துக்கே ஒரு புது அர்த்தம்.

அறிவு விளங்கட்டும்- என ஆணை பிறந்தாற்போல உள்ளது. முன்பு நான் கற்பனை கூட செய்திருக்காத விதங்களில் எல்லாம் மிக்க வெளிப்பாட்டுத் திறன் உள்ள ஒரு மொழியில் நான் என் புத்தியைப் புரிந்து கொள்கிறேன். ஒரு சொல்லால், ஆழியின் பெருங்குழப்பத்தில் இருந்து ஒழுங்கை உருவாக்கிய கடவுளைப் போல, என்னை நானே இந்த மொழியால் புதிதாய்ப் படைத்துக் கொள்கிறேன். அம்மொழி சுய விளக்கங்களுக்கும், சுயப் பதிப்புத் துணிப்புகளுக்கும ஆட்படாத மேநிலையில் இருப்பது, அதனால் சிந்தனையை மட்டுமல்ல, எல்லாத் தளங்களிலும் தன் இயக்கங்களையும் கூட விளக்கக் கூடியது, அதே நேரம் அவற்றை மாற்றி அமைக்கக் கூடியது. ஒரு அறிக்கையைத் திருத்துவது என்பது இந்த மொழியில் மொத்த இலக்கணத்தையே திருத்தி அமைப்பதாகிறதே, இந்த மொழியைக் காண கோடெல் (Gödel) என்ன கேட்டாலும் கொடுத்திருப்பார்.

இந்த மொழியால் என் புத்தி எப்படி வேலை செய்கிற்து என்பதை நான் பார்க்கிறேன். நான் என் மூளையின் நியூரான்கள் எப்படிப் பொறியாய்ப் பறக்கின்றன என்பதைப் பார்க்கிறேன் என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னதெல்லாம், 60களில், எல்.எஸ்.டி-யைப் பயன்படுத்திச் செய்த சுய பரிசோதனைகளை வைத்து ஜான் லிலி போன்றார்தான், நானில்லை. என்னால் செய்யக் கூடியதெல்லாம், புத்தியில் அமைப்புகள் உருவாவதையும், ஒன்றுடனொன்று உறவாடுவதையும் பார்த்து, அவற்றின் உள் உறையும் அர்த்தங்களை உடனே காண்பதும்தான். என்னால் நான் சிந்திப்பதை அறிய முடிகிறது. என் சிந்திப்பை விவரிக்கும் சமன்பாடுகளை உடனே பார்க்க முடிகிறது. அந்த சமன்பாடுகளை நான் புரிந்து கொள்வதையும் பார்க்க முடிகிறது. அந்த சமன்பாடுகள் எப்படி அவை புரிந்து கொள்ளப் படுவதையும் கூட விளக்குகின்றன என்பதையும் அறிய முடிகிறது.

அவை எல்லாமாக எப்படி என் சிந்தனைகளை உருவாக்குகின்றன என்பதை நான் அறிகிறேன்.

இந்த சிந்தனைகளையும்தான்.

இத்தனை உள்ளீடுகளினால் துவக்கத்தில் நான் திக்குமுக்காடுகிறேன். என் சுயப் பிரக்ஞை என்னை ஸ்தம்பிக்கச் செய்கிறது. என் சுயத்தை விவரிக்கும் தகவல் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த எனக்குப் பல மணி நேரம் ஆகிறது. (இப்போதும்) நான் அந்தப் பெருக்கை வடிகட்டவில்லை, அதைப் பின்னுக்கும் தள்ளி விடவில்லை. என் சிந்தனை வழிமுறைகளில் ஒரு பகுதியாக அதெல்லாம் ஆகிவிட்டது, என் சாதாரண நடவடிக்கைகளோடு அதுவும் நடக்கிறது. ஒரு நாட்டியக்காரர் தன் உடலியக்கத்தை அறிந்து அதைப் பயன்படுத்தும் லாகவத்தோடு, முயற்சியே இல்லாது, இயல்பாக, முழு வீச்சுடன் அந்தப் ‘பெருக்கைப்’ பயன்படுத்திக் கொள்ள எனக்கின்னும் நிறைய அவகாசம் தேவைப்படும்.

முன்னால் என் அறிவைப் பற்றி, புத்தியைப் பற்றி கோட்பாடுகளாக, கருத்து வடிவாக எனக்குத் தெரிந்ததை எல்லாம் இப்போது நான் வெளிப்படையாகப் பார்க்கிறேன். பாலுறவு விழைவும், வலுச் சண்டை நோக்கமும், சுயப் பாதுகாப்பு முனைப்பும் அடியோட்டமாக ஓடுகின்றனவே அவை என் பிள்ளைப் பிராயத்து வளர்ப்புக் கட்டுப்பாடுகளின் பாதிப்பால் எப்படி உருமாற்றப்படுகின்றன, அவை எப்படிப் பல நேரம் விளக்கமான சிந்தனையாகக் கருதப்படுவதோடு மோதுகின்றன அல்லது எப்படி விளக்கமான சிந்தனையாகவே முகமூடி அணிந்து வெளிப்படுகின்றன என்பதெல்லாம் எனக்குப் புரிகிறது. என் ஒவ்வொரு மன நிலையும், என் ஒவ்வொரு முடிவின் பின்னுள்ள உள்கிடக்கையும் எனக்கு வெள்ளிடை.

இந்த வகை அறிவை வைத்துக் கொண்டு எனக்குச் செய்ய முடியாதது என்ன இருக்கும்?

என் உடலை நான் புதிதாக அறிகிறேன், அது ஏதோ வெட்டப்பட்டு முடத் துண்டான கை ஒன்றுக்குப் பதிலாக கடிகாரம் செய்பவரின் கை ஒன்று கிட்டியது போல இருக்கிறது. இப்போது விருப்பப்படி இயங்கும் தசைகளைக் கட்டுப்படுத்துவது எனக்கு சல்லிசாக உள்ளது. எனக்கு அமானுஷ்யமான ஒத்திசைவுத் திறன் இருக்கிறது. ஆயிரக்கணக்கான தடவை பயின்றாலே படியும் திறமைகளெல்லாம், எனக்கு ஓரிரு முறை முயன்றாலே கைவருகின்றன. பியானோ வாசிப்பவர் ஒருவரின் கைகளைப் படமாக எடுத்த விடியோவைக் கண்டு எடுத்தேனா, திரும்பிப் பார்ப்பதற்குள் என்பது போல என்னெதிரில் பியானோவின் விசைப் பலகை ஏதும் இல்லாமலே கூட என்னால் அவருடைய கைவிரல் அசைவுகளை அப்படியே நகல் செய்ய முடிகிறது. என் தசைகளைத் தேர்ந்தெடுத்து இழுப்பதும், தளர விடுவதுமாகச் செய்வதால் என் வலுவும், உடலை வளைக்கும் திறனும் கூடுகின்றன. கவனித்தோ, தன்னிச்சையாகவோ எப்படியானாலும், என் தசைகள் ஒரு அசைவை நிகழ்த்த எடுக்கும் குறைந்தபட்ச நேரம் முப்பத்தைந்து மிலி செகண்டுகளே. கழைக் கூத்தாட்டமோ, ஆயுதமற்ற போர்க்கலையோ எதையும் கற்க மிகக் குறைவான நேரமே பிடிக்கும்.

சிறுநீரகம் இயங்குவது, உணவின் சத்து உடலில் சேர்வது, சுரப்பிகளின் கசிவுகள் எல்லாம் உடல்மய உணர்தல் வழியே எனக்குத் தெரிகிறது. நரம்புத் தொடர்பு ரசாயனங்கள் என் யோசனைகளில் என்ன பங்கெடுக்கின்றன என்பது கூட எனக்குத் தெரிகிறது. இப்படி ஒரு விழிப்புணர்வு நிலை, மிகச் சிக்கலான நேரத்தில் எஃபினெஃப்ரின் கொடுக்கும் தூக்கல் உணர்வால் எழும் மிகத் தீவிர மன ஓட்டத்தை விடவும் எழுச்சியுள்ள மனோவேகத்தை தேவையாக்குகிறது. என் புத்தியின் ஒரு பகுதி இயங்கும் நிலை ஒரு சராசரி அறிவையோ, உடலையோ சில நிமிடங்களில் கொன்றிருக்கும். என் அறிவின் செயல்திட்டத்தை நான் சரிப்படுத்திக் கொண்டிருக்கையிலேயே என் உணர்ச்சிகள் வழியே என் உடலில் எழும் விளைவுகளையும், அவற்றை என்னுள் எழுப்பும் பல வகைப் பொருட்களையும், நான் கவனிக்கிறேன். என் கவனத்தை அவை ஈர்க்கும் விதம், என் மனோநிலைகளை அவை பூடகமாக அசைத்து மாற்றும் விதம் எல்லாவற்றையும் நான் கவனிக்கிறேன்.

இதற்கு அப்பால் நான் வெளியே பார்க்கிறேன்.

கண்களை இருட்டடிக்கும், ஆனந்தம் பீறிட வைக்கும், பொறி கலங்கிடச் செய்யும் பேரொழுங்கு/ஒத்திசைவு என்னை எத்திசையிலும் சூழ்ந்திருக்கிறது. சூழ்ந்துள்ள அனைத்தும் அனந்த கோடி சீரமைப்புகளில் பொருந்திடவும், மொத்தப் பேரண்டமே ஒரு படமாகி விடும் நிலையில் தொக்கி நிற்கிறது. எல்லா அறிவையும் தன்னுள் பொருத்தியதும், அந்த அறிவை அதே நேரம் துலக்கமாக்குவதுமான ஒரு புலம், ஒரு மண்டலம், அண்டங்களின் இசை, கிரேக்கர்கள் அனுமானித்த பேரண்டத்து ஒழுங்கு: இவற்றிற்கு எல்லாம் உள் உறைந்த ஒரு உருவை நான் அணுகிக் கொண்டிருக்கிறேன்.

நான் பூரணத் தெளிவை நாடுகிறேன். ஆன்மீகத்தால் அல்ல, முழுதும் அறிவார்த்தமாக. ஆனால் இந்த தடவை அந்த இலக்கு, தொட முடியாது நழுவிய வண்ணம் இராது. என் புத்தியின் மொழியின் உதவியால், எனக்கும் பூரணத் தெளிவுக்கும் இடையே உள்ள தூரத்தைக் கச்சிதமாகக் கணக்கிட முடியும். என் இறுதி இலக்கு எனக்குத் தெரிந்து விட்டது.

இனி என் அடுத்த நடவடிக்கைகளை நான் திட்டமிட வேண்டும். ஆயுதமற்ற போர்க்கலையில் பயிற்சியில் துவங்கி, தற்காப்புக்கான எளிய வலுச் சேர்க்கும் முயற்சிகள். சில போர்க்கலைப் போட்டிகளைப் பார்ப்பேன், என்ன விதங்களில் தாக்குதல்கள் நடக்கும் என்று தெரிந்து கொள்ள; எத்தனை வேகமான தாக்கும் முறைகளாலும் தொடப்பட முடியாத அளவு மிகத் துரிதமாக பாய்ந்து நகர என்னால் முடியும். சாதாரண குற்றங்களில் ஈடுபடுவோர் என்னைத் தாக்க முற்பட்டால், அவர்களைச் செயலற்றவர்களாகச் செய்து, என்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தப் பயிற்சி உதவும். இதற்கிடையில், என் உடலியக்கத்தில் எத்தனையோ செயல்திறன் கூடி இருந்த போதிலும், என் மூளையின் போஷிப்புக்காக நான் ஏராளமான அளவு உணவு உண்ண வேண்டி இருக்கிறது. என் தலைமுடியை முழுதும் சவரம் செய்து விட வேண்டும், என் தலைக்குப் பாயும் ஏராளமான ரத்தத்தால் கூடும் சூடு வெளியேறி விட ஏதுவாக இருக்கும்.

முதல்கட்ட குறிக்கோள்: எங்கும் இருக்கும் அமைப்புருக்களை இனம் காண்பது. என் புத்தி இன்னும் மேம்பட செயற்கையான உயர்த்தல்தான் இனி ஒரே வழி. எனக்குத் தேவை கணினிக்கும்-புத்திக்கும் நேரடி இணைப்பு, புத்தியை நேரே தரவிறக்கிவிட வழி செய்ய. ஆனால் இதை முடிக்க நான் ஒரு புதுத் தொழில் நுட்பத்தையே வளர்த்தெடுக்க வேண்டும். டிஜிடல் கணக்கெடுப்பில் இயங்கும் எதுவும் போதுமானதாக இராது, எனக்குத் தேவைப்படுவது நரம்பு வலைத் தொடர்களின் அடிப்படையில் இயங்கும் நானோ-அளவில் உள்ள அமைப்புகள்.

அடிப்படைத் திட்ட உருவாக்கம் ஆனபிறகு, என் அறிவுக்கு ஒரு செயல் திட்டத்தை வகுக்கிறேன். புத்தியின் ஒரு பகுதியை வலைத் தொடர்களின் நடத்தையை விவரித்துக் கணிக்க உதவும் கணிதப் பிரிவை உருவாக்கச் செய்கிறேன். இன்னொன்றை, தன்னைத் தானே செப்பனிட்டுக் கொள்ளக் கூடிய உயிரிப்பீங்கான் ஊடகத்தால் சிற்றணுத் திரளளவில் ஒரு நரம்புப் பாதை உருவாகும் முறையைப் பதிலி செய்ய வழியைக் கண்டு பிடிக்க முனையச் செய்கிறேன். மூன்றாவதை, எனக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்ய ஒரு தனியார் நிறுவன தொழில் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் நுட்ப வளர்ச்சிக் கூடத்தை எப்படி வழிநடத்திச் சாதிப்பது என்று கண்டுபிடிக்க அனுப்புகிறேன். எனக்கு இனி நேரம் மிக அரும்பொருள், அதை வீணடிக்க இயலாது. என் புதுத் தொழில் துறை துவக்கத்திலேயே பெரும் வேகத்துடன் செயல்பட வகை செய்ய, கருத்துவடிவு மற்றும் தொழில் நுட்பங்களில அபாரமான மாறுதல்களைக் கொணரப் போகிறேன்.

சமூகத்தை மறுபடி கணித்துப் பார்க்க நான் வெளி உலகுக்குள் நுழைகிறேன். முன்பு இடுகுறிகளாலமைந்த மொழி மூலம் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டேன், இப்போது அதற்குப் பதிலாக ஒன்றுடனொன்று ஊடுபாவிய சமன்பாடுகளாலான கட்டமைப்புத் தளத்தைக் காண்கிறேன். மனிதர்கள், பொருட்கள், நிறுவனங்கள், கருத்துகள் ஆகியனவற்றிடையே சக்திகளின் கோடுகள் சுருண்டு, பின்னிப் பிணைந்து நீள்கின்ற்ன. தனி நபர்கள் எல்லாம் கயிற்றால் இயக்கப்படும் பொம்மைகள் போலத் தெரிகிறார்கள். அவரவரளவில் தனியாக உயிருடன் இருந்தாலும், யாரும் பார்க்க மறுக்கிற ஒரு வலை எல்லாரையும் பிணைக்கிறது. விரும்பினால் அவர்கள் எவரும் இந்தப் பிணைப்பை மறுத்து இயங்க முடியும், ஆனால் மிகச் சிலரே அப்படி எதிர்ப்பு காட்டுகிறார்கள்.

இந்த நேரம் நான் இருப்பது ஒரு மதுக்கடை. என் வலப் பக்கம் மூன்று இருக்கைகள் தாண்டி ஒரு இருக்கையில் ஒரு ஆண். இந்தக் கடையை நன்கு தெரிந்து வைத்திருப்பார் போலிருக்கிறது. இருந்தபடியே ஒரு வட்டம் நோட்டம் விடுகிறார், இருட்டிய மூலையில் அமர்ந்துள்ள ஒரு ஜோடியைப் பார்க்கிறார். புன்னகைத்து, அந்த பாரில் மது விற்பவரை விளிக்கிறார், அவரிடம் ரகசியமாக அந்த ஜோடியைப் பற்றி ஏதோ சொல்கிறார். அவர் என்ன சொல்கிறாரென்று கேட்கத் தேவையே இருக்கவில்லை எனக்கு.

விற்பனையாளரிடம் பொய் சொல்கிறார், சரளமாக, சிறிதும் தயக்கமோ, யோசனையோ இல்லாமல். எதற்கும் பொய் சொல்லும் மனிதர் இவர். தன் வாழ்வு இப்போதிருக்கும் நிலை பொறுக்காமல் அதில் பரபரப்பு கூட்டுவதற்காகக் கூடப் பொய் சொல்பவரில்லை, மற்றவர்களை ஏமாற்றுவதில் மகிழ்வடைவதற்காகப் பொய். மதுவிற்பவர் விட்டேற்றியாகத்தான் இருக்கிறார், ஏதோ தான் சொல்வதில் கவனம் செலுத்துவது போல நடிக்கிறார் – அது உண்மையே – என்பதெல்லாம் இந்த பொய்யருக்குத் தெரிகிறது, ஆனால் அந்த விற்பனையாளர் தான் சொல்வதால் ஏமாறவும் செய்கிறார் என்பது அவருக்குத் தெரிகிறது- அது உண்மையும் கூட.

பிறருடைய உடல்-மொழி பற்றிய என் தனிக் கவனம் ஒரேயடியாகப் பெருகி விட்டிருப்பதால் மேற்படி சம்பவங்களை நான் ஏதும் ஒலியோ, கிட்டக் காட்சியோ இல்லாமல் கவனிக்க முடிகிறது. மனிதர் உடலில் எழும் ஃபெரொமோன் வாசங்களே கூடப் போதும் எனக்கு நடப்பை அறிய. ஓரளவு என் தசைகளால் அந்த மனிதனின் தசைகளில் உள்ள இறுக்கத்தை, அவற்றின் மின்னலை வீச்சை வைத்து, ஊகித்துணரவும் முடிகிறது. இந்த அலைகள் வழியே கிட்டும் தகவல் மிகச் சரியாக இராது, ஆனால் எனக்குக் கிட்டும் பல உணர்தல்களின் கூட்டுத் தகவல்கள் தேவைக்கதிகமாகக் கூட உள்ளன. என்னால் அவற்றிலிருந்து சரியான முடிவுகளை உருவி எடுக்க முடிகிறது, அந்தத் தகவல்கள் மொத்த வலைக்கு இழைநயம் சேர்க்கின்றன.

சாதாரண மனிதர்கள் இந்த வகை வெளிப்பாடுகளை புலப்பாட்டுக்குக் கீழான விதத்தில் அறியக் கூடும். இந்த வகை வெளிப்பாடுகளோடு எனக்கு ஒரு இசைவு ஏற்பட்டால், ஒரு வேளை நான் இப்படி எதையும் வெளிப்படுத்துவதை கட்டுக்குள் கொணரப் போதுமான விழிப்புணர்வு எனக்கு வரலாம்.

அண்டப் புளுகை அவிழ்த்து விடும் விளம்பரங்கள் வழியே மனிதர் அறிவை முடக்குவதைப் போன்று, புத்தியைக் கட்டுப்படுத்தும் சக்திகளை நான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். முழுக்க உடல் வழியே மட்டும் வெளிப் போகும் அலைவீச்சுகளை நான் கட்டுப் படுத்தி இருப்பதால், பிறரிடம் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி கச்சிதமான மறுவினைகளை உசுப்பி எழுப்ப என்னால் இப்போது முடிகிறது. ஃபெரொமொன்களாலும் (வாசமுள்ள உடல் கசிவுகள்), தசை இறுக்கங்களாலும் என்னால் பிற மனிதரைக் கோபமூட்ட முடியும், பாலுறவுணர்வை அவரிடம் தூண்ட முடியும், பரிவுணர்வை அவரிடம் எழுப்ப முடியும். நண்பர்களாக்கவும், அவர்களை வசப்படுத்தவும் நிச்சயமாகவே முடியும்.

தூண்டியபிறகு அவர்களிடம் தானாகவே தொடரும் மறுவினைகளைக் கூடத் தூண்ட முடியும். ஒருவருக்குக் கிட்டும் ஒரு வித மகிழ்ச்சியை அவருடைய ஒருவித எதிர்வினையோடு தொடர்பு படுத்திக் காட்டி, நன்மை பயக்கும் சுழல் நிகழ்வொன்றை வலுப்படுத்த முடியும். இது உடலில் இருந்து கிட்டும் அறிகுறிகளை வைத்து, ஒருவருடைய உடல் தானாகவே தன் எதிர்வினையை வலுப்படுத்துவதை ஒத்தது. எனக்குத் தேவையான வகை தொழில்நிறுவனங்களை நிறுவ ஆதரவு கொடுக்குமாறு தொழிலதிபர்களைத் தூண்ட இந்த வகை உத்திகளையே நான் பயன்படுத்தவிருக்கிறேன்.

இப்போது எனக்குச் சாதாரண வகைக் கனவுகளைக் காண முடிவதில்லை. ஆழ்மனது என்று சொல்லப்படக் கூடிய எதுவும் எனக்கு இல்லை என்பதால், என் மூளை எதையெல்லாம் இயக்குகிறதோ அதை எல்லாம் நான் அறிந்து கட்டுக்குள் வைத்திருக்கிறேன். அதனால் சாதாரணமான துரிதக் கண்ணசைவு உறக்கம் (REM sleep) மூலம் மூளை செய்யும் வேலைகளுக்கு இப்போது அவசியமில்லை. எப்போதாவது என் மூளை மீது எனக்கிருக்கும் கட்டுப்பாடு சிறிது தளர்கிறது. ஆனால் அதை எல்லாம் உறக்கம் எனக் கொள்ள முடியாது. மருட்சிகளைத் தாண்டிய நிலையோ என்னவோ. ஆனால் அதீத வதை. சில நேரங்களில் நான் முற்றிலும் விலகிப் போன நிலையில் இருக்கிறேன். என் புத்தி எப்படி விசித்திரமான காட்சிகளை உருவாக்குகிறது என்பதை நான் அறிவேன். ஆனால் அப்போது என்னால் ஏதும் மறுவினை காட்ட முடிவதில்லை. ஸ்தம்பித்த நிலையில் இருக்கிறேன். என்ன பார்க்கிறேன் என்பதை என்னால் இனம் காண முடியவில்லை.

(தொடரும்)

One Reply to “புரிந்து கொள் – 4”

Comments are closed.