பரிணாமமும் பரோபகாரமும்!

அமரர் கல்கி காலத்தில் தமிழில் ‘பரோபகாரம்’ என்று ஒரு சொல் இருந்தது. ‘அடுத்தவர்களுக்கு உதவி செய்தல்’ என்ற கருத்தை சுருக்கமாகத் தெரிவிக்கும் இது போன்ற ஏராளமான வார்த்தைகளை, கடந்த ஐம்பது வருடத்தில் இழந்துவிட்டோம். அதற்கு பதிலாக மச்சி, ஃபிகர், சொதப்பல் போன்ற பல புதிய வார்த்தைகள் தமிழன்னைக்குக் கிடைத்திருந்தாலும், இவற்றில் பழைய மணிப்பிரவாளச் சொற்களின் ‘பஞ்ச்’ இருப்பதாகக் கூற முடியாது.

9780262013598-f30மனிதனின் ‘பரோபகார’ உணர்ச்சி எங்கிருந்து வருகிறது என்பதை விஞ்ஞானிகள் பொழுது போகாத நேரத்தில் ஆராய்ந்திருக்கிறார்கள். இது சமூகத் தேவைகளைக் கருதி அப்பா அம்மா கற்றுக் கொடுத்த பழக்கமா, அல்லது நம் கூந்தலுக்கு இயற்கையிலேயே உதவி செய்யும் மணம் உண்டா என்று கண்டு பிடிப்பதற்காக அவர்கள் செய்த ஆராய்ச்சிகள் பல. இவற்றை ஜெர்மானிய டாக்டர் மைக்கேல் டாம்செல்லோ ‘நாம் ஏன் ஒத்துழைக்கிறோம் ?‘ என்ற புதிய புத்தகத்தில் அலசுகிறார்.

இன்னும் சுயநலம், சூது வாது எல்லாம் கற்றுக்கொள்ளாத சிறு குழந்தைகளையும், சு.சூ.வா கற்பிக்க முடியாத சிம்பன்ஸி குட்டிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தார்கள். இரண்டு கை நிறைய ஷாப்பிங் பைகளை வைத்துக்கொண்டு திணறும் பெண்மணி ஒருவர் சாவியைக் கீழே போட்டுவிடுகிறார். பக்கத்திலிருக்கும் ஒன்றரை வயதுக் குழந்தை இதைக் கவனித்துவிட்டு சாவியை எடுத்துக் கொடுக்கிறது. ‘குட் பாய்’ என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இன்னும் சொல்லித்தரப் படாத வயது. ஆனால் நேரடியாகக் கற்பிக்காவிட்டாலும், மற்றவர்கள் இப்படிச் செய்வதைப் பார்த்துவிட்டுக் குழந்தை தானும் திருப்பிச் செய்கிறதா ?

உதவி செய்யும் குணம் என்பது பாராட்டுகளாலோ, பரிசுகளாலோ தூண்டப்படாமல் தானே வருகிறது என்கிறார் டாம்செல்லோ. உலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களிலும் இந்த நடத்தையைக் கவனிக்க முடிகிறது. இவர்களுடைய குழந்தை வளர்ப்பு முறைகள் வேறு; சமுதாய விதிகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பிப்பதும் வெவ்வேறு வயதுகளில். குரங்குக் குட்டிகளிடையே கூட, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பிறருக்கு உதவி செய்யும் ஆவலைப் பார்க்க முடிகிறது. ஜூவில் குரங்குகள், ஒன்றுக்கொன்று நிதானமாக முடியைப் பிரித்துப் பேன் பார்த்துக் கண்டெடுத்து வாயில் போட்டுக் கொள்வதைக் கவனித்திருக்கலாம். அவை அரசாங்கத்தின் சொற்ப பட்ஜெட்டுக்குள் உயிர் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் கற்றுக்கொண்ட பழக்கமாகவும் இருக்கலாம்.

சாவியை எடுத்துக் கொடுப்பது போன்ற நடைமுறை உதவிகள் மட்டுமின்றி, நாம் ஒருவருக்கு ஒருவர் தகவல் பரிமாற்றத்திலும் உதவி செய்து கொள்கிறோம். ஒரு வயதுக் குழந்தையின் எதிரில் நம் செருப்பைத் தொலைத்துவிட்டுத் தேடுவது போல் நடித்தால், ‘அதோ ஈக்கு!’ என்று சொல்லும்; அல்லது பேசத் தெரியாவிட்டால் சின்ன விரல்களால் சுட்டிக் காட்டும். இது போன்ற தகவல்-உதவிகள் மனிதக் குழந்தைகளுக்கு மட்டுமே சாத்தியமாகியிருக்கின்றன. மற்ற பிராணிகளிடையே இருப்பதாகத் தெரியவில்லை. வேர்க் கடலைப் பொட்டலம் இருக்கும் இடத்தை ஒரு குரங்கு மற்றொன்றுக்கு, செத்தாலும் சுட்டிக் காட்டாது!

science-kids

வீட்டில் தம்பி தங்கைகளுடன் சாக்லெட்டைப் பகிர்ந்து கொள்ள முன்வராத குழந்தைகள் கூட, பள்ளிக்கூடத்தில் சடையப்ப வள்ளல் மாதிரி நடந்து கொள்வதும் கவனிக்கப்பட்டிருக்கிறது. குழந்தை வளர வளர, அதுவும் நம்மைப் போல் மாற ஆரம்பிக்கிறது; உதவி செய்யும் மனப்பான்மை குறுகத் தொடங்குகிறது. மூன்று வயதாகும்போது, எதையும் தன் நண்பர்கள் வட்டத்துக்குள் மட்டுமே பகிர்ந்து கொள்வது, மற்ற குழந்தைகள் கைப்பற்ற முனைந்தால் பிறாண்டுவது என்று குழு மனப்பான்மை வெளிப்படுகிறது.

குழுவாக விளையாடும் விளையாட்டுகளில் ஒரு குழந்தை மட்டும் விதி முறைகளை மீறினால் சண்டை வந்துவிடும்! சமூக விதி முறைகள் என்பது இதுதான். அந்த விதிகள், குழுவின் பொதுவான நோக்கத்திலிருந்து ஏற்படுபவை.

பொதுவான நோக்கம் என்பதில்தான் குரங்குக்கும் நமக்கும் வித்தியாசமே இருக்கிறது. குரங்குக் குட்டிகள் ஒவ்வொன்றும் தத்தம் போக்கில் செயல்படுமே தவிர, மற்ற குரங்குகளின் மனதில் என்ன இருக்கிறது என்பது பற்றிக் கவலைப்படுவதில்லை. மனிதக் குழந்தைகள் பேச்சிலும் சைகைகளிலும் ஒத்துழைத்து, பொதுவான லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள வல்லவை. ஆயர்பாடிக் கண்ணன் நண்பர்கள் மேல் ஏறி நின்று வெண்ணை திருடின கதையே சாட்சி.

முன்னோர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என்றால் ஒன்று குறிப்பிடலாம் – ஆதி மனிதன் வேட்டையாடிப் பொறுக்கியாகவே (hunter gatherer) வாழ்ந்தான். வேட்டையாடவும் பழங்கள், கிழங்குகள் சேகரிக்கவும் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்க வேண்டியது அன்றைய பரிணாமத் தேவையாக இருந்தது. கல்லெடுத்துக்கொண்டு தனியே முயலைத் துரத்துவதைவிட, பலர் கூட்டு முயற்சியாக வேட்டையாடினால் யானையைக் கூட வீழ்த்திவிடலாம் என்பது புரிந்தபோது ஒத்துழைப்பு ஒரு சமுதாயக் கடமையாகியது. ஒத்துழைப்பிற்காக சைகைகள், முனகல்கள் கண்டுபிடிக்கப் பட்டன. பிறகு முனகல்கள் மொழிகள் ஆயின. (மொழிகள் மாநிலங்கள் ஆனதும், அவை குடி தண்ணீருக்குக் கூட ஒத்துழைக்க முடியாமல் போனதும் பிறகு நேர்ந்த ரிவர்ஸ் பரிணாமம்.)

வேட்டையாடிப் பொறுக்கி சேகரிக்கும் உணவுக் காலரிகளில் 68 சதவீதம் ஆண்கள் கொண்டு வந்தார்கள் என்று கணக்கிடப் பட்டிருக்கிறது. எனவே ‘நீ உணவு கொண்டு வா, நான் குழந்தைகளைக் கவனித்துக் கொள்கிறேன்’ என்று குகைக்கு குகை மற்றொரு வகை ஒத்துழைப்பு தேவைப் பட்டது. குழந்தைகள் உயிர் வாழும் திறமைகளைக் கற்றுக்கொள்ள பத்துப் பதினைந்து வயது வரை ஆகிவிடுவதால் அவர்களும் சமுதாயத்தைச் சார்ந்தே வாழ வேண்டிய தேவை இருந்தது.

ஒத்துழைப்பு தந்த வலிமையால் மற்ற எல்லாப் பிராணிகளையும் வென்று, உணவு ஆதாரங்கள் அத்தனையையும் கைப்பற்றி, புறம்போக்கு நிலத்தையெல்லாம் வளைத்து வேலி போட ஆரம்பித்தான் மனிதன்.

061108_chimphuman_hlg_2p_hlargeநம் கண்ணில் உள்ள ஸ்க்லெரா என்ற விழி வெண் படலத்தில் ஒரு பரிணாமச் செய்தி உள்ளது. இருக்கிற 200 வகைக் குரங்குகளுக்கும் கொட்டை கொட்டையாகக் கறுப்புக் கண்கள்தான். வெள்ளைப் பகுதி கிட்டத்தட்ட வெளியே தெரியவே தெரியாது. மனிதனுக்கு மட்டும் வெள்ளை விழி மிகப் பெரியது. இதன் பயன் என்னவென்றால், நம் கண் எங்கே பார்க்கிறது என்பதைக் கூட்டாளிகள் கவனித்துக் குறிப்பறிந்து செயல்பட முடியும். ஒரு குழந்தையின் எதிரில் நம் தலையை அசைக்காமல் கண்ணை மட்டும் ஓட்டினால், குழந்தையும் அதே திசையில் பார்க்கும். வேட்டையாடும்போது இந்த ஸ்க்லெரா ஒரு உபயோகமான தகவல் தொடர்பு சாதனம். எனவே ‘நீ ஒத்துழைக்கப் பிறந்தவன்’ என்பதுதான் பரிணாமம் நமக்குத் தரும் செய்தி. பஸ் ஸ்டாண்டில் கணவனின் வெள்ளை விழி செல்லும் திசையிலிருந்து பற்பல தகவல்களை அறிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பது, மனைவியருக்கு மட்டுமே நேர்ந்த சிறப்புப் பரிணாமம்.

இன்று நாம் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைப்பதற்காக மைக்ரோசாஃப்ட் ப்ராஜெக்ட் வரை எத்தனையோ கருவிகள் கண்டுபிடித்துவிட்டோம். இதெல்லாம் இல்லாவிட்டால் கூட, ஒத்துழைப்பதுதான் மனிதனின் அடிப்படை இயல்பு என்றே டாக்டர் டி வால் போன்றவர்களும் சொல்கிறார்கள். சண்டை போடுவதெல்லாம் நாம் பிறகு கற்றுக்கொண்ட கெட்ட பழக்கம்.

Empathy – கண்ணோட்டம் என்பது நம் உயிரியல் ஹார்ட்வேரிலேயே நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்கும் குணம். அது அரசியல், மதம், கலாச்சாரம் போன்றவைகளால் சொல்லிக் கொடுக்கப்பட்ட உணர்ச்சி அல்ல. மற்றவர்களின் நிலைமையைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் மன நோயாளிகள் மட்டும்தான்.

நம்முடைய ஒத்துழைப்புக்கும் நன்னடத்தைக்கும் அரசியல் பூசாரிகளையும் ஆன்மீகப் பூசாரிகளையும் நம்புவது வீண். நம் ஆதாரமான பயாலஜியிடம் நம்பிக்கை வைத்து அதனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுங்கள், போதும் என்கிறார் டாக்டர் வால். நம் அடிப்படையான மனித இயல்பு, ஒருவருக்கொருவர் உதவி செய்வது, ஒத்துழைப்பது. அதுதான் எப்போதும் நம்முடன் இருக்கப் போகிறது; நல்ல வழி காட்டக் கூடியது.

எனவே, மனிதன் இயற்கையிலேயே பரோபகாரியா, சுயநலப் பேயா என்பதற்கு விஞ்ஞானத்தின் விடை, ‘பரோபகாரிதான்’ என்பதே ஆகும்.

இந்த இடத்தில் ‘எங்கள் மானேஜர் தவிர’ என்று ப்ராக்கெட்டில் போடுமாறு நண்பர் சீனிவாசன் வலியுறுத்துகிறார். இந்த முறை அவருக்கு பொங்கல் அட்வான்ஸ் தரப்படவில்லை என்று தெரிகிறது.