சொற்களின் நடனம்

தங்கப்பாவின் “சோளக்கொல்லைப் பொம்மை”

தாலாட்டுப்பாடல்களும் ஒப்பாரிப்பாடல்களும் இயற்கையாக மக்கள் வழக்கில் உருவாகி காலத்தைக் கடந்து நிலைத்துவிட்டதைப்போல, குழந்தைப் பாடல்களும் இயற்கையாக உருவாகி நிலைத்துவிட்ட ஓர் ஆக்கம் என்றே கருதத்தோன்றுகிறது. குழந்தைகள் தமக்குரிய பாடல்களை தாமே கட்டிப் பாடி மகிழ்ந்திருக்க வேண்டும். நல்ல தாளக்கட்டும் சொற்கட்டும் சில பாடல்களில் தாமாகவே அமைந்திருக்கலாம். சில பாடல்களில் சற்றே கூடுதலாகவோ குறைவானதகவோ அமைந்திருக்கலாம். ஒரு மன எழுச்சியில் வந்து விழும் சொற்கள் அவை. இணைத்துப் பார்த்தால் பொருளற்றிருக்கலாம். ஆனால் இணைப்பில் காணப்படும் தாளலயம் மனத்தைச் சுண்டி இழுப்பதாக இருக்கும். சொல்லோசையின் தாளம் குழந்தைகள் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த குழந்தைகள் கண்டடைந்த ஊடகமே சொற்கள்.

பலநூறு ஆண்டுகள் பழமையான ஒரு மொழியையும் அதன் சொற்களையும் ஒரு குழந்தையின் மனம் அறிந்துகொள்ள காட்டுகிற வேகம் வியப்பு மிகுந்தது. மொழியின் முதல் சொல்லை அறிந்து, அதை மீண்டும்மீண்டும் சொல்லிப் பார்த்துக் களிக்கிற குழந்தையின் பரவசத்துக்கு ஈடுஇணையே இல்லை. பேச்சுக்கென்று தனிப்பட்ட உறுப்பு எதுவும் மனித உடலில் இல்லை. வெவ்வேறு வேலைகளைச் செய்கிற வெவ்வேறு உறுப்புகள் ஒரு கணத்தில் ஒன்றிணைந்து பேச்சைத் தோற்றுவிக்கிறது. ஓசையெழுப்புவதற்காக உள்ள குரல்வளை, மூச்சை உள்ளிழுத்து வெளியிடுவதற்காக உள்ள நுரையீரல், மூக்குத்துளைகள், நாக்கு, உதடுகள் என எல்லாம் இணைந்துதான் பேச்சை உருவாக்குகிறது. மூன்று மாதங்கள் நிறைவெய்திய குழந்தை பல வகையான ஓசைகளை புதுப்புது விதங்களில் எழுப்புகிறது. தன்னைக் கவனிக்கச் சொல்லி சுற்றியிருப்பவர்களை ஈர்ப்பதற்கு அந்த ஓசையைப் பயன்படுத்துகிறது குழந்தை. குழந்தை எழுப்புகிற ஓசையின்பத்தால் கவரப்பட்டவர்கள் சுற்றிச் சூழ்ந்துகொள்ளும்போது குழந்தை ஆனந்தமடைகிறது. தன் ஆனந்தத்தைப் பெருக்கிக்கொள்ளும் விழைவில் தன்னிச்சையாக ம்மா, ப்பா, த்தா என்று உதடுகள் குவித்து ஓசையை எழுப்புகிறது. புதிய சொல் ஒன்றை உச்சரித்து, அது புதிதாக பலரையும் ஈர்க்கிறது என்பதை உணர்ந்ததும் குழந்தையின் வேகம் இன்னும் கூடுதலாகிறது.மீண்டும் மீண்டும் அச்சொல்லைச் சொல்லிச்சொல்லி மனத்தில் பதியவைத்துக்கொள்கிறது. தத்தித்தத்தி நடந்து வீட்டைக் கடந்து புற உலகைக் கவனிக்கும் நேரத்தில் குழந்தை இன்னும் கூடுதலாக சொற்களை அறிந்துகொள்கிறது. வாசலில் நின்றிருக்கும் குழந்தை தற்செயலாக தெருவில் கரும்பைத் துண்டுதுண்டாக வெட்டி தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் கரும்பு கரும்பு என்று முழங்கியதைக் கேட்டதும் அந்தச் சொல்லை முதன்முதலாகக் கேட்கிற குழந்தை, சட்டென மனத்தில் பதியவைத்துக்கொள்கிறது.

கரும்புக்காரர் மறைந்தாலும், குழந்தையின் மனத்தைவிட்டு கரும்பு என்னும் சொல் மறைவதில்லை. கரும்பு, கரும்பு என்று பல மணிநேரங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லி நாக்கில் புரளவிட்டபடியே இருக்கிறது. பார்க்கிறவர்கள் எல்லாரிடமும் கரும்பு, கரும்பு என்று சொல்லித் திரிந்தபடியே இருக்கிறது. குழந்தையின் மனம் அறிந்துவைத்திருக்கும் சொற்களின் எண்ணிக்கை பெருகப்பெருக, இப்படி நாக்கில் வந்து ஒட்டிவிடும் சொல்லை மிக அழகாகப் பயன்படுத்தி, ஓசை நயத்தோடு கரும்பு சின்னக் கரும்பு, கரும்பைச் சுற்றி எறும்பு, எறும்புப் பக்கம் திரும்பு என்று மனம்போன போக்கில் சொற்களை இணைத்து இசையோடு பாடுகிறது. இயற்கையாக இப்படி உருவான குழந்தைப் பாடல்கள் கோடிக்கணக்கில் இருக்கலாம். தாமாகவே பாட்டுக்கட்டிப் பாடுகிற இயல்பூக்கம் கொண்ட குழந்தைகளின் ஆர்வமும் ஆற்றலும் வளரும்வகையில், அதே விதமான சொற்களோடும் அதே விதமான தாளக்கட்டோடும் பாடல்களைப் படைக்கிறார்கள் பாவலர்கள். குழந்தைகளுக்கான பாடல்களை எழுதிய பாவலர்கள் பலருண்டு. பாரதியார், பாரதிதாசன், அழ.வள்ளியப்பா என பல ஆளுமைகளை ஒவ்வொரு தலைமுறையிலும் முக்கியமானவர்களாகச் சொல்லலாம்.

தமிழ்ச்சிட்டு இதழில் துரை.மாணிக்கம் என்னும் பெயரில் குழந்தைப்பாடல்களைத் தொடர்ச்சியாக எழுதிய பெருஞ்சித்திரனாரும் சிறுகதையாசிரியராகவே அறியப்பட்டபோதும் ஓசைநயம் மிக்க குழந்தைப்பாடல்களை எழுதிய கிருஷ்ணன் நம்பியும் குழந்தைகள் கையாளக்கூடிய சொற்களைமட்டுமே தேர்ந்தெடுத்து சுவையாகப் பயன்படுத்தியவர்கள். இவ்வரிசையில் இடம்பெறத்தக்க இன்னொரு முக்கியமான ஆளுமை ம.இலெ.தங்கப்பா. கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலான அவருடைய
பாட்டியக்கத்தில் குழந்தைப் பாடல்களுக்குத் தனிப்பட்ட பங்குண்டு. தம் பேரப்பிள்ளைகளுக்காக அவர் எழுதிய 104 பாடல்கள் “சோளக்கொல்லைப் பொம்மை” என்கிற தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன. ஒவ்வொரு பாட்டையும் படிக்கும்போது, ஒரு குழந்தை கையைத் தட்டிக்கொண்டோ அல்லது இடுப்பையும் உடலையும் அசைத்தசைத்து ஆடிக்கொண்டோ மனத்தில் திரண்டெழுகிற தோற்றத்தைத் தவிர்க்கமுடியவில்லை. அந்த அளவுக்கு குழந்தையின் மொழியோடும்
உடலசைவுகளோடும் தங்கப்பாவின் பாடல்கள் இசைந்த நிலையில் உள்ளன.

வால், வால், குரங்கு வால்
மரத்தில் தொங்குது வவ்வால்
கால் எனக்கு இரண்டு கால்
கம்பைச் சேர்த்தால் மூன்று கால்

தற்செயலாக அறிந்துகொண்ட வால், கால் என்னும் இரண்டு சொற்களைமட்டுமே மாற்றிமாற்றி இணைத்து, தாளத்தை உருவாக்கி மனஎழுச்சியோடு பாடும் ஒரு குழந்தையை இப்பாடலின் வழியாகக் காணலாம். குழந்தை கடந்துவருகிற ஒவ்வொரு காலகட்டத்தையும் உற்றறிகிற படைப்பாளிக்கு, குழந்தையின் மொழி எளிதாக வசப்பட்டுவிடுகிறது. குழந்தை கட்டிய பாடலா அல்லது படைப்பாளி கட்டிய பாடலா என்று பிரித்திறிய முடியாதபடி பொருத்தமான சொற்கள் பிறந்து இணைந்துகொள்கின்றன.

thangappa1குழந்தைகளின் உலகத்தில் தண்ணீருக்கு எப்போதும் முக்கியமான இடமுண்டு. தண்ணீரில் ஆடவிரும்பாத குழந்தையே உலகத்தில் இல்லை. குழந்தை மனத்தைத் தொட்டசைக்கிற சக்தி தண்ணீருக்கு இருக்கிறது. தண்ணீரை அள்ளிஅள்ளி நாலாபுறங்களிலும் சிந்தமுடியும் என்பதே குழந்தைக்கு பேரானந்தமாக இருக்கிறது. தண்ணீரைத் தொடும்போது அதன் உடல் உணர்கிற பரவசத்தை மிகவும் புதுமையாக உணர்கிறது. தாயைத் தொடுவதைவிட, தந்தையைத் தொடுவதைவிட, தன்னுடைய விளையாட்டுப் பொருள்களைத் தொடுவதைவிட, தனக்கு அணிவிக்கப்படுகிற துணிமணிகளைத் தொடுவதைவிட, தண்ணீரைத் தொடுவது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கிறது. இந்தப் புதிய அனுபவம் அதன் மனத்தில் ஒரு புதிய எழுச்சியையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கிவிடுகிறது.

தன் உடல் உணர்ந்த பரவசம் முதல்முறை என்பதாலா அல்லது எப்போதுமே அந்தப் பரவசத்தை அடையமுடியுமா என்பதை மீண்டும்மீண்டும் அது பரிசோதித்து அறிய விழைகிறது. அதனாலேயே கண்முன்னால் தண்ணீரைப் பார்த்ததுமே அதன் முகம் பூரிக்கிறது. உடல் துள்ளுகிறது. விரல்கள் நீள்கின்றன. கண்கள் விரிகின்றன. கால்கள் பரபரக்கின்றன. குடத்திலிருந்தாலும் சரி, தொட்டியிலிருந்தாலும் சரி, வாசலில் தேங்கியிருப்பதானாலும் சரி, ஊரைக் கடந்து ஓடுகிற ஏரி,
வாய்காலானாலும் சரி, அதை உடனே தொட்டு தன் சோதனையை நடத்தி உண்மையை அறிய
விழைகிறது. நீர்நிலைகளைப் பார்த்துப் பரவசமடைகிற குழந்தை வளரவளர, நீர்நிலைகளை ஒட்டிப் பார்க்க நேர்கிற மீன், வாத்து, ஆடு, மாடு, மரம், செடி, கொடி என அனைத்தையுமே பார்த்து தன் ஆனந்தத்துக்குரிய உலகத்தை விரிவானதாக மாற்றிக்கொள்கிறது.

நீர்நிலைக்கு அருகே தற்செயலாக இரண்டு வாத்துகளைக் கண்டதும் ஒரு குழந்தை அடைகிற துள்ளலை தங்கப்பாவின் பாடலொன்று அப்படியே கச்சிதமான சித்திரமாக்கியுள்ளது.

வாய்க்காலிலே வெள்ளம்
வாத்திரண்டும் குள்ளம்
மூக்கிலே கருப்பு
முதுகு கொஞ்சம் பழுப்பு

ஒரு குழந்தைமட்டுமே சொல்லக்கூடிய வரிகளைக் கண்டறிந்து புனைவதற்கு, தன்னையும் ஒரு குழந்தையாகவே உணர்கிற ஒரு படைப்பாளியால் மட்டுமே சாத்தியம். தங்கப்பாவுக்கு அது சாத்தியப்பட்டிருக்கிறது. இன்னும் சற்றே வளர்ச்சியடைகிற குழந்தை சொற்களைப் பொருளறிந்து
பயன்படுத்தத் தொடங்குகிறது. குழந்தை பயன்படுத்துகிற சொற்களுக்கு ஒரு இலக்கு உருவாகிறது. தன் விளையாட்டுக்கும் கொண்டாட்டத்துக்கும் வேகத்துக்கும் இணையான சொற்களை அதன் மனம் தானாகவே கண்டடைகிறது. அந்த வேகத்தையும் வெற்றியையும் அடையாளப்படுத்துகிற பாடல்கள் தங்கப்பாவின் தொகுப்பில் பல உள்ளன. எடுத்துக்காட்டுக்காக ஒன்றே ஒன்று.

புளி, புளி கொடுக்காய்ப் புளி
தொரட்டிக் கொம்பை இறுகப் பிடி
காக்காய்களை விரட்டி அடி
கனிஞ்ச பழம் பார்த்துப் பறி

யாரோ ஒரு பெரியவருக்கும் ஒரு குழந்தைக்கும் இடையிலான உரையாடலாக இந்த வரிகளைப் பார்ப்பதைக்காட்டிலும், ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையிலான உரையாடலாக இப்பாடல் வரிகளைப் பார்க்கும்போதுதான் பாட்டின்பத்தை நம்மால் முழுஅளவில் உணரமுடியும்.
ஒரு குழந்தை தானறிந்த சொற்களை தான் கண்ணால் பார்க்கிற ஒவ்வொரு பொருளின்மீதும் போட்டுப்போட்டுப் பார்த்து, தன் சொற்களின் தாளத்தைத் தானே காதால் கேட்டு, துள்ளித்துள்ளி மகிழ்ச்சியில் திளைப்பது என்பது முதல்கட்டம். தன் கண்ணில் படுகிற ஒரு பொருளைச் சுற்றி இருக்கிற மற்ற பொருள்களையும் ஆழ்ந்து நோக்கி, ஒன்றை மற்றொன்றோடு இணைத்துப் பார்த்து, அதை கொண்டாட்டத்துக்குரிய ஒரு காட்சியாக மாற்றி மனத்தில் பதியவைத்துக்கொள்வது என்பது இரண்டாவது கட்டம். எதையும் தனிப்பட்ட அளவில் முக்கியமானதாகக் கருதாமல் கண்ணில் படும் எல்லாவற்றையும் ஒருசேரப் பார்த்துப் பரவசத்தில் திளைத்த நிலை சற்றே மாற்றமடைந்து, குறிப்பிட்ட
ஒன்றின்மீது கவனத்தைக் குவித்து, அதைப்பற்றி ஓயாமால் பேசியும் பாடியும் திளைப்பது என்பது மூன்றாவது கட்டம். இரண்டு வயதுமுதல் நான்கு வயதுவரையிலான குழந்தைகளின் உலகத்தை இப்படி மூன்று கட்டங்களாகப் பிரித்துக்கொள்ளலாம்.

எதைப் பார்த்தாலும் அல்லது எதைச் சொன்னாலும் ஒரு கதையாக மாற்றுவது என்பது அடுத்தநிலை.
தெருவில் யாரோ நடந்துபோகிறார்கள். நொண்டி நொண்டி நடக்கிறார் அவர். வயிறும் சற்றே சரிந்து தொப்பை விழுந்திருக்கிறது. இது சாதாரணமாக தெருவில் பார்க்கக்கூடிய ஒரு காட்சிதான். மற்றவர்களுக்கு இது ஓர் இயல்பான காட்சி. ஆனால் நான்கு வயது நிரம்பிய ஒரு குழந்தைக்குமட்டுமே அக்காட்சியைக் கண்டதுமே ஒரு கதையாக மாற்றிவிடும் சக்தி இருக்கிறது. அப்படி ஒரு கதையாக மாறிப்போகும் ஒரு காட்சியைப் பாடலாகத் தந்திருக்கிறார் தங்கப்பா.

குருவி மூக்குக் காரன்
குண்டுத் தொப்பைக் காரன்
நண்டு பிடிக்கப் போனான்
வண்டு காலில் கடிக்க
நொண்டி நடக்கலானான்

கேலியும் கிண்டலும் நிறைந்ததென்றாலும் ஒரு குழந்தையின் உச்சரிப்பில் அவை மேலெழுந்து தெரிவதில்லை. மாறாக, அது அடைகிற ஆனந்தமும் அதன் சிரிப்பும்மட்டுமே மேலெழுந்து தோற்றமளிக்கின்றன.

தாத்தா வீட்டுத் தோட்டத்திலே
தவிட்டுக் குருவிக் கூட்டத்திலே
ஆத்தா கல்லைத் தூக்கிப் போட
அங்கே ஒரு காடை ஓட
குருவி எல்லாம் காச்சுமூச்சு
குதிகுதி என்று ஓடிப்போச்சு
கோணல் தென்னை ஆடிப் போச்சு

ஒரு காட்சி மனத்தில் உருவாக்குகிற கிளர்ச்சியும் அதனால் உருவாகிற சொற்கட்டும் எத்தகையவை என்பதை அறிய இப்பாடல் சிறந்த எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

கண்டரக்கோட்டைப் பண்டாரம்
வண்டியில் ஏற வந்தாராம்
வண்டியில் கால் வைக்கையில்
வண்டு பறக்கக் கண்டராம்
துண்டை எடுத்துக்கொண்டாராம்
வண்டை விரட்டிச் சென்றாராம்
வண்டியில் வழுக்கி விழுந்தாராம்
மண்டை உடைஞ்சி போனாராம்

என்னும் சுவையான பாடலையும் அந்த வரிசையில் வைக்கலாம். இதற்கடுத்த நிலையில் உள்ள குழந்தையின் மனஓட்டம் சுவாரசியமானது. நாய்பொம்மை வேண்டுமென்று பெற்றோரை வற்புறுத்தி வாங்கிக்கொள்கிற குழந்தை, அதை சீராட்டி, கொஞ்சி, விளையாடுவதைக் கண்டால் அந்த மனஓட்டத்தைப் புரிந்துகொள்ள முடியும். தோற்றத்தின் அளவில்மட்டுமே அது நாய்ப்பொம்மை. மற்றபடி அதற்கும் தனக்கும் இடையே எந்த வித்தியாசத்தையும் அது பார்ப்பதில்லை. தனக்கு ஒரு தொப்பி வாங்கினால் அதற்கும் ஒரு தொப்பி வேண்டும். தன் கழுத்தில் ஒரு துண்டு இருந்தால் அதன் கழுத்துக்கும் ஒரு துண்டு வேண்டும். தனக்கு ஒரு மூக்குக்கண்ணாடி இருந்தால் அதற்கும் ஒரு
மூக்குக்கண்ணாடி வேண்டும். கட்டிலில் தானுறங்க ஒரு தலையணை வேண்டுமென்றால், நாயும் அருகில் படுத்துறங்க ஒரு தலையணை வேண்டும். காரண அறிவுக்கு இங்கே இடமேயில்லை. தனக்கு இருப்பதுபோலத்தானே எல்லாருக்கும் இருக்கவேண்டும் என்று எண்ணுகிற அதன் மனஓட்டம்தான் அதற்குக் காரணம். (அபூர்வமான இந்த மனநிலை குழந்தைகளிடம் தொடர்ந்து படிந்துவிடாமல்
வேகவேகமாக காரண அறிவைப் புகட்டி பெரியவர்களாகிய நாம் திசைதிருப்பிவிடுகிறோம் என்பது ஒரு சோகமான உண்மை) இதற்குப் பொருத்தமான பாடலும் தங்கப்பாவின் தொகுப்பில் உள்ளது.

குண்டு குண்டு மிளகாய்
குழம்பில் போடும் மிளகாய்
கொண்டைக் காம்பு வளைவாம்
குடையைப் போலும் அழகாம்
தங்கை அதை எடுத்தாள்
தலைக்கு மேலே பிடித்தாள்
எங்கள் மிளகாய்க் குடைதான்
எறும்புக்கென்று சிரித்தாள்

ஊர்ந்து செல்லும் எறும்புப்பட்டாளத்துக்கு வெயில் படாமல் இருப்பதற்கு குடை இருந்தால் நல்லது என்று எண்ணுகிறது குழந்தை. அந்தக் குடையாக ஒரு குண்டுமிளகாய் இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணுவது ஒரு அழகான கற்பனை. வெயிலுக்கோ அல்லது மழைக்கோ தான் குடை பிடித்துக்கொண்டு நடக்கும்போது, எறும்பும் அப்படி செல்வதுதானே அதன் உலகத்தில் நியாயமாக
இருக்கமுடியும். வண்ணத்துப்பூச்சிகளை கண்ணாமூச்சி ஆட அழைப்பதும் பனங்குருத்துத் தவிடு கொடுத்தால் தின்றுவிட்டு மயிலிறகு குட்டிபோடும் என்று நம்புவதும் இந்த வயதுக்கே உரிய செயல்கள்.
ஒன்றிரண்டு வயது இன்னும் கூடும்போது குழந்தைகள் சிறுவர்களாகவும் சிறுமிகளாகவும் வளர்ந்துவிடுகிறார்கள். அவர்களுடைய மனம் சொற்களின் கிடங்காக மாற்றமடைகிறது. ஏராளமான சொற்கள் அதில் இருக்கின்றன. ஒரு காட்சியை கற்பனைநயத்தோடும் எழில்மிக்கதாகவும் சொல்லும் ஆற்றல் தானாகவே படிந்துபோகிறது. அழகான சம்பவத்தை ஒரு கதைபோல விரித்துச் சொல்லும்
மனஎழுச்சியைக் குழந்தைகளிடத்தில் காணலாம். இரண்டு நண்பர்கள் சேர்ந்து காட்டுக்குள் போய்த் திரும்பிய கதை, பெற்றோருடன் விலங்குக்கண்காட்சிக்குச் சென்று திரும்பிய கதை என ஏராளமான சம்பவங்களை அழகான சொற்களால் தொகுத்து முன்வைக்கின்றன. இவ்வயதில்தான் ஒரு குழந்தை,
சொற்கள் வழியாக சம்பவத்தை ஒன்தையடுத்து ஒன்றென தர்க்கஅடிப்படையில் ஒருங்கிணைத்துத் தொகுத்துச் சொல்லும் ஆற்றலை வளர்த்துக்கொள்கிறது. சம்பவமாக விரிவடையும் கதைப்பாடல்களையும் தங்கப்பா எழுதியுள்ளார். ஒரு மாலை வழிநடை, பேர் வருகுது, எலிகள் என்ன ஆயின, வீட்டில் திருட்டு, திருடர் யார், புதர்மாளிகை என பல பாடல்களை எடுத்துக்காட்டுகளாகச்
சொல்லலாம்.

குழந்தை வளரவளர குழந்தையின் குறும்புகளும் வளர்ந்தபடி இருக்கின்றன. இட்டும் தொட்டும் கவ்வியும் துழாவியும் வளர்கிற குழந்தைகளின் குறும்புகள் மனத்தைக் கொள்ளைகொள்கின்றன. இந்தக் குறும்புகளையே குழந்தைப்பாடல்களுக்கான கருக்களாக மாற்றமடைகின்றன. அண்ணன் தம்பிக்காகவும்
அக்கா தங்கைக்காகவும் பெற்றவர்கள் பிள்ளைகளுக்காகவும் பாடிக்காட்டுகிற வகையில் அமைந்துள்ள இத்தகைய பாடல்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளுக்கு மிகவும் நெருக்கமானவை. குழந்தைகளின் பேச்சையும் செயலையும் ஆழ்ந்து கவனிக்கிற குணம்கொண்ட தங்கப்பாவிடமிருந்து இத்தகைய பல பாடல்கள் பிறந்துள்ளன. நாய்க்குட்டியுடன் உரையாடும் ஒரு குழந்தையின் நடவடிக்கையைப் பாடுகிற ஒரு பாடல் மிகவும் சுவையானது.

குட்டி நாயே குட்டி நாயே
குரைக்கத் தெரியுமா
எட்டு வீடு கேட்கும்படி
இடித்து முழக்குவேன்
குட்டி நாயே குட்டி நாயே
யாரைக் குரைப்பாய்?
பட்டி ஆடு, பன்றி, கோழி
பார்த்துக் குரைப்பேன்
குட்டி நாயே, கெட்டவனைக்
குரைக்கமாட்டாயா?
கெட்டவன் யார், காட்டிக்கொடு
குரைத்து விரட்டுவேன்

நிலாவைப் பிடிப்போம், பங்குனிப்பொங்கல், எங்கள் கருப்பன் என இன்னும் பாடல்களை இந்தப் பிரிவில் அடக்கலாம். குழந்தைகளுக்கு நற்கருத்துகளை உரைத்தல் என்பது குழந்தைப்பாடல்களின்
பட்டியலில் கடைசியாக இடம்பெறத்தக்கது. கருத்துகளை நேரிடையாகவோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்ச்சியைத் தொடர்புபடுத்தியோ ஒரு குழந்தை அறிந்துகொள்ளலாம். அக்கருத்துக்கு உடனே ஒரு விளைவை உருவாக்கவேண்டும் என்கிற தேவை இல்லை. மனத்துக்குகந்த கருத்துகள் எண்ணங்களின் ஆழத்தில் விலைமதிப்பில்லாத முத்துகள்போலவும் பவழங்கள்போலவும் படிந்துவிடுகின்றன.

எதிர்காலத்தில் குழந்தைகளின் ஆளுமைகள் வளர்வதற்கு ஏதேனும் ஒருவகையில் இக்கருத்துகள் உதவக்கூடும். தங்கப்பாவின் தொகுப்பில் இவ்வகையான பாடல்களும் உள்ளன. அணில்கள், பட்டிக்காட்டு வாழ்க்கை, எங்கள் ஊர் ஆகியவை சில முக்கியமான எடுத்துக்காட்டுகள். குழந்தையின் வளர்ச்சியை இப்படி வெவ்வேறு கட்டங்களாகப் பிரித்துப் பார்க்கும்போதுதான், அது மொழியை உள்வாங்கிக்கொள்ளும் முறையையும் பயன்படுத்தும் முறையையும் நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் மொழி மாறிக்கொண்டே வருகிறது. ஓசை மழலையாக மாறி, பிறகு அதுவும் மாறி சொல்லாகி, அதுவும் படிப்படியாக வளர்ந்து தூய ஒரு பேச்சுமொழி உருவாவது கிட்டத்தட்ட கல்லிலிருந்து ஒரு சிற்பம் உருவெடுப்பதுபோல என்று சொல்லலாம். அதை அருகிலிருந்து நொடிதோறும் சுவைத்து மகிழும் பெற்றோர்கள் நற்பேறுள்ளவர்கள். அதனாலேயே மக்கட்பேற்றை வள்ளுவர் அரிய செல்வமாக அடையாளப்படுத்துகிறார். அந்த நற்பேற்றை மீண்டும் சொல்லால் வடித்துக்காட்டும் பாவலர்கள் தம் பாட்டின் வழியாக மீண்டும்மீண்டும் குழந்தைகளை கண்முன்னால் உலவவிட்டபடி இருக்கிறார்கள்.

குழந்தைகளோடு மிக நெருக்கமாக இருப்பதன்மூலமாகவும் குழந்தைகளின் வளர்ச்சியை ஒவ்வொரு கட்டத்திலும் உற்றுக் கவனிப்பதன் மூலமாகவும் குழந்தைகளின் உலகத்தோடு ஒன்றிவிடும் இயல்புள்ளவராக இருப்பதன்மூலமாகவும் மட்டுமே குழந்தை உலகைப் புரிந்துகொள்ளமுடியும். குழந்தைகளின் உலகைப் புரிந்துகொள்ளும்போதுதான் குழந்தை மனத்தையும் குழந்தை மொழியையும்
அறிந்துகொள்வது எளிதாகும். குழந்தைப்பாடல்கள் என்னும் பெருங்களஞ்சியம் இந்த சிறுவயதுக்குட்பட்ட குழந்தைகளின் உலகத்திலிருந்தே உருவாகவேண்டும். அதுவே இயல்பானதாக இருக்கும். தங்கப்பாவின் குழந்தைப்பாடல்கள் மிகவும் இயல்பாக இருக்கின்றன. புத்தம்புதிய மலர்கள்போல பொலிவோடு உள்ளன. படிக்கப்படிக்க சுவையாக உள்ளன. ஒரு வரியைப் படிக்கும்போதே தானாகவே மனம் தாளமிடத் தொடங்குகிறது. ஒன்றிரண்டு வாசிப்பிலேயே பாடல்கள் மனத்தில்
ஆழமாகப் பதிந்துவிடுகின்றன.

(சோளக்கொல்லைப் பொம்மை- குழந்தைப் பாடல்கள். ம.இலெ.தங்கப்பா, வானகப் பதிப்பகம், 7, 11 ஆம் குறுக்குத் தெரு, அவ்வை நகர், புதுச்சேரி-8. விலை.ரூ100)